இனியவன் காளிதாஸ்
சிறுகதை வரிசை எண்
# 172
*லெட்சுமியக் காணோம்*
- இனியவன் காளிதாஸ்.
லெட்சுமி காணாமல் போய் இன்னையோட மூணு நாளாச்சு...
நல்லசிவம் இடிந்துபோய் உக்கார்ந்திருந்தார்.எரவாளத்தில சொருகி வச்ச வக்கப்புல்லுக் கட்டு மூணு நாளா அப்படியே கெடக்கு. பக்கத்துவிட்டு பரமு தான் சொன்னார்.
"ஏப்பா நல்லு நீ இப்படியே சாப்டாமக் கொள்ளாம இருந்தா என்னசெய்ய ?
வாய்யா...இத்தினி நீச்சத் தண்ணியாவது குடிக்கலாமில்ல"
நேத்தாக்கின பழைய சோத்துல கொஞ்சம் பச்சத்தண்ணியூத்தி கொஞ்சம் மோர்விட்டு நாலு உரிச்ச பச்ச சின்னவெங்காயம் ,இல்லண்ணா ரெண்டு பச்சமிளகா கடிச்சுட்டு கரைச்சுக் குடிச்சா அட...அட...அந்த ருசியே தனிதான்.
பெரும்பாலும் நல்லசிவம் காலையில காட்டுக்குப் போறதுக்கு முன்னாடி தினமும் கரைகஞ்சியத்தான் குடிப்பார்.இல்லைண்ணா இருக்கவே இருக்கு நீச்சத்தண்ணி அதக்குடிச்சுட்டு காட்டுக்குப் போவார்.
ரெண்டரை ஏக்கர் நிலம்தான் நல்லசிவத்தோட சொத்து.ஆசைக்கு ஒண்ணு ஆஸ்த்திக்கு ஒண்ணு ணு சொல்லுவாங்களே அந்த மாதிரி நல்லசிவத்துக்கு ஒரு பொண்ணு ,ஒரு பையன் நல்லசிவத்தின் மனைவி சரஸ்வதிதான் சொல்லுவா...
"எப்போதும் நமக்கு ணு இருக்கிற நம்ம புள்ளைங்க கைவிடமாட்டாங்க நாம அப்படி வளர்த்திருக்கோம்" ணு.
பெரியவ சிவகாமசுந்தரி ய பக்கத்துல இருக்கிற கொமரகவலை
யத்துக்குத்தான் கொடுத்துச்சு.
நல்ல சீர்வரிசையோட கொடுத்ததுல அமோகமா வாழ்ந்துட்டுருக்கா...
சின்னவன் ராமச்சந்திரன்
பல்கலைக்கழக அளவுல ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்து கேம்ப்பஸ் இன்ட்டர்வியூல செலக்ட் ஆகி பாரின் போனவன் அங்கயே ஏழெட்டு வருசம் இருந்தவன் கடைசியா ஒருநாள் ஃபோன் பண்ணி இங்கயே ஒரு பொண்ணுப் புடிச்சுருக்கு.நம்ம தமிழ்நாடுதான் காஞ்சிபுரத்துக்குப் பக்கத்தில ஏதோ நாயுடு பேமிலியாம் எனக்கும் ரொம்பப் புடிச்சிருக்கு என்றவன் சொல்லாமக் கொள்ளாம கல்யாணம் பண்ணிக்கிட்டான்.
ஒருநாளைக்காவது ஊருக்கு வந்துட்டுப் போப்பா ன்னு நல்லசிவம் சொல்கையில், நான் வரும்போது வரேன் பா என்னக் கம்ப்பெல் பண்ணாதீங்க என்றவன்...
கடைசியாக வந்தது சரஸ்வதியின் காரியத்துக்கு மட்டும்தான்...
நல்லா இருந்தவ திடீர்ணு ஒரு நாள் என்னவோ தலைசுத்தற மாதிரி இருக்குங்கெனலறபடி, வீட்டுத் திண்ணைல இருந்த கூச்சத்தில சாஞ்சவ கொஞ்ச நேரத்தில மூச்சுப் பேச்சு இல்லாம்ப் போயிட்டா...பக்கத்துல இருந்த கவர்மெண்ட் ஆஸ்பத்திரக்கு அடிச்சுப் புடிச்சு மாட்டுவண்டில கூட்டிட்டுப் போன
அங்க இருந்த வெள்ளைக் கோட் போட்ட உசரமான டாக்டர் ஸாரி சார் அவுங்க போய் பத்துநிமிசமாச்சு என்றார்.நல்லசிவத்தின் உலகமே இருண்டு போனதாகவே நினைத்தார்.
சரியாக இருப்த்தாறு வருசமாக் கூடவே இருந்தவள சட்டுணு நெருப்புக்குத் தூக்கிக் குடுக்க யாருக்குத் தான் மனசு வரும்.
பாரின்ல இருந்த பையன் வரும் வரைக்கும் பொறுத்திருந்து எல்லாம் முடிச்சு நாளே நாள்ல பையன் பெண்ணும் கிளம்பிப் போய்ட்டாங்க...
பலநூறு நிலவுகள்
ஜொலித்த வானத்தில் சட்டென அமாவாசை வந்தால் எப்படியிருக்கும் அப்படி இருந்தது நல்லசிவத்துக்கு.
அவளுக்கென்ன
சுமங்கலியாப் போயிட்டா இப்ப நான்தான் அல்லாடுறேன்னு எல்லார்கிட்டயும் சொன்னவரோட ஒரே ஒரு ஆறுதல் லெட்சுமி மட்டும்தான்...
சரஸ்வதி உசுரோட இருந்தப்ப பக்கத்தூர் சந்தைக்கு போயிட்டுத் திரும்பும்போதுதான் லெட்சுமிய முதன்முதலாப் பார்த்தாங்க...
இத வளர்த்தவருக்கு
என்ன பிரச்னையோ லெட்சுமிய சந்தைக்குக் கூட்டிட்டு வந்திருந்தார்.
லெட்சுமி பாக்க அவ்ளோ அழகா இருந்தா.
சரஸ்வதி கையில் வாங்கி வச்சுருந்த அகத்திக் கீரையை மெல்லத் தொடங்கியவள் என்ன நினைத்தாளோ சரசுவின் முந்தானையோரம் தன் தலையைத் தேய்க்கத் தொடங்கினாள்.
கல்யாணமாகி இதுவரைக்கும் எதுவும் கேக்காத சரசு நல்லசிவத்திடம் ஏங்க எனக்கு இந்தக் கன்னுக்குட்டி வேணுங்க என்றாள்.
அன்று வீட்டுக்கு வந்த லெட்சுமியை சரசுதான் அவளிருக்கும் வரை மிகுந்த கவனித்துக் கொண்டாள்...
சரசு போனதுக்குப்புறம் இந்த ரெண்டு வருசத்துல நல்லசிவம் லட்சுமியை ஒரு பசு என்று நினைத்தேயில்லை தன் மனதில் தோன்றிய எல்லா உணர்வுகளையும் லட்சுமியிடம் பேசுவார். லட்சுமியும் ஏதோ புரிந்தது போலவே தலையசைக்கும் உண்மையிலேயே நல்லசிவம் லட்சுமியிடம் பேசுவதை தனக்கு விருப்பமான யாரோ ஒருவரிடம் தன் மனதை கொட்டித் இருப்பதாகவே நினைத்துக் கொள்வார். அப்படிப்பட்ட லட்சுமிதான் மூணுநாளாக் நாளா காணல.
நல்லசிவம் உள்ளூர் மாரியாத்தா கோவிலுக்கு அப்பப்ப போறதுண்டு்.
அன்னைக்கு வெள்ளிக்கிழமை இராத்திரி கோவிலுக்குப் போய்ட்டு வரும்போதுதான் லெட்சுமி காணாமப் போயிருந்தாள்.
பக்கத்துல இருக்கிற எல்லாச் சாளைகளிலும் பார்த்தாயிற்று. பாக்குற எல்லார்கிட்டயும் கேட்டா என்று யாருக்குமே லட்சுமி எங்க போனான்னு தெரியவே இல்ல.
கட்டாந்தரையில் ஓஞ்சி போய் உட்கார்ந்து இருந்த நல்ல சிவத்திடம் பரமுதான் சரி வா நல்லு பக்கத்துல புரவியூரில் ஒரு சாமியார் இருக்காராமா தொலைந்து போன எல்லாத்தையும் கண்டுபிடித்து விடுவாராம்
அவர் சொன்னா சரியா இருக்குமாமாம் வெத்தலையில் மை போட்டு கரெக்டா சொல்லி விடுவாராமா...
வா நல்லு போய்க் கேட்டுட்டு வர்லாம் ணு கூப்ட்டார்.
பரமு க்கு எதத்தின்னா பித்தம் தெளியும் ன்ற மாதிரி இருந்துச்சு. நேத்துதான் போலீஸ் ஸ்டேசன் ல கேஸ் குடுக்க போனப்போ அந்த எஸ்.ஐ. சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
ஏய்யா அவனவன் மனுசன் காணாமப் போனாவே தேடிக் கண்டுபுடிக்க நாளாகுது , இதுல மாட்டக் காணோம் ணா எப்படி சீக்கிரமாக் கண்டுபுடிக்கிறது னு ஒரு எகத்தாளமாக் கேட்டார்.
வெளியே வந்த துக்குப் பின்னாடி தான் எதித்தாப்ல டீக்கடைக்காரர் சொன்னார்.
அவர் கையில ஏதாவது குடுத்துட்டுச் சொன்னாதானா கேப்பார் அப்படியில்லாம ணு இழுத்தார்.
அதுக்காகவே
இரண்டாயிரத்த எடுத்து வேட்டில முடிஞ்சு வச்சுருக்கார்.
நாளைக்குக் காத்தால மறுபடியும் ஸ்டேசன் போகணும் அதுக்குள்ள இப்ப பரமு கோயிலுக்குக் கூப்படறார். எடுக்கும் போயிட்டா வந்துறலாம் ணு துண்டு எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினார்.
மாரியாத்தா கோவில் பூசாரி அருள்வாக்கு சொல்வதல்ல கைதேர்ந்தவர் னு எல்லாரும் சொன்னாங்க... அவர் சொன்னா நிச்சயம் அப்படியே பலிக்கும் அப்படின்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க நல்லுவும், பரமுவும் கோயிலுக்குள்ள போகும்போது பூசாரி ரொம்ப வேகமா யாருக்கோ குறி சொல்லிட்டு இருந்தாரு சில மணி நேர காத்திருப்புக்கு பின் ஏதோ பொருளை காணாம இருக்காங்க யாரது என் முன்னாடி வந்து நின்னு என்றபடி அருள் வந்து ஆடினார் பூசாரி.
பரமு சொன்னான் உன்னதான் கூப்பிடுறாரு போ பயபக்தியோடு பூசாரியின் முன்னால நல்லசாமியை வெறிச்சுப் பார்த்த பூசாரி ஒரு நிமிசம் மௌனமாயிரந்தார்.
அப்புறம் திடீர்ணு சத்தமா
ஒன்னும் கவலைப்படாத ரெண்டு நாளைக்குள்ள பொருளு ஊடு வந்து சேரும் என்றபடி நாக்கைத் துருத்தி கையில வச்சுருந்த எலுமிச்சம்பழத்தை
இதக் கொண்டு போய் உன் வூட்டு பூசைரூம்ல வைச்சுரு...
என்றபடி நெற்றியில் திருநீறால் பொட்டு வைத்தார் பூசாரி.
அடுத்த நாள் காலை நல்லசாமி மிகவும் தளர்ந்து போயிருந்தார் மூணு நாளா பச்சத்தண்ணி மட்டும் குடிச்சா பின்ன என்ன ஆகும் ?
எழுந்ததுமே ஸ்டேசன் ல போய்க் கேட்டுட்டு வரணும் ...
இன்னைக்கி எப்படியாவது லெட்சுமியக் கண்டுபுடிச்சாகணும் னு விட்டு விட் டு வெளியே வந்தார்.
தூரத்தில யாரோ ஒருத்தர் ஒரு மாட்டப் புடிச்சுட்டு வந்து கொண்டிருந்தார்.
லட்சுமி இருந்தா நாமளும் இப்படித்தான் நடந்துகிட்டிருப்போம்ணு நினைச்சவருக்கு கண்ணீர் வந்தது.
சரி துணைக்கு யாரயாவது கூப்டுக்கலாமா னு நினைச்சப்ப தான்
தூரமா நடந்து வந்துட்டிருந்தவர் நல்லசாமியை நோக்கி வருவது தெரிந்தது.
பக்கத்தில் வர்றது...
பக்கத்தில வர்றது நம்ம லெட்சுமி மாதிரியே இருக்கே
...
நல்லசாமி கண்களைத் துடைத்துக் கொண்டே பார்த்தார்.
ஆ...உண்மையாகவே என் லட்சுமி தானா என உடல் சிலிர்த்துக் கொண்டே இருக்கையில் தான் அது நடந்தது.
கயித்தை உதறியபடியே
ஓடிவந்து நல்ல சாமியின் அருகில் வந்தது லட்சுமி...
அதைப்பார்க்கையில் தாயை இழந்த பிள்ளை எப்படி தழுவிக்கொள்ளும் அப்படி நல்லசிவத்தைத் தழுவிக்கொண்டது லட்சுமி.
தம்பி யார் நீங்க எப்படி எங்க லெட்சுமி உங்ககிட்ட வந்துச்சு..
சற்று நேர மௌனத்திற்குப் பின் இளைஞன் பேசத் தொடங்கினான்...
ஐயா முதல்ல என்ன மன்னிச்சுருங்க...
மூணு
நாளைக்கு முன்னாடி நா இங்க வந்தேன்.பொதுவா நா ஆடுதான் புடிக்க வந்தேன்.
புடிச்சுட்டுப் போய் சந்தைல குடுத்தா ஏதோ சாப்பிடக் கிடைக்கும் ணுதான் நா வந்தேன் ...ஆனா நா உங்க மாட்டப் புடிச்சுட்டுப் போனதிலிருந்து ஏதோ மனசே சரியில்லங்க...
உங்க மாடு இந்த மூணுநாளா புல்லுகூட சாப்டல ங்க...
இந்த நேரத்தில் அங்கே கூட்டம் கூடத் தொடங்கியிருந்த து.,
ஆனாலும் அந்த இளைஞன் பேசுவதை நிறுத்தவேயில்லை...
உண்மையிலேயே உங்க மாடு என்ன என்னவோ செஞ்சுது ங்க...
அவன் பேசப்பேச நல்லசிவத்தின் கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.
சட்டென உள்நுழைந்த பரமு...
ஏண்டா திருட்டுப்பயலே என்றபடி அடிக்கத் தொடங்கினார்...
அச்சோ வேணாம்...வேணாம் என்ற நல்லசிவம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை பாக்கெட்டிலிருந்த பணத்தை எடுத்து அப்படியே அவன் கையில் கொடித்தார் தம்பி என் குலதெய்வத்த என்கிட்ட கொடுத்துட்டீங்க...
இத வச்சுக்கோங்க என்றபடி லெட்சுமியை அழைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார்.
பின்னாலேயே ஓடி வந்த இளைஞன் ஐயா...
இத உங்க லெட்சுமிக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்க நா வர்ரேன் என்றபடி கடந்து போனான்.
இப்போது லெட்சுமியின் தலையில் வாஞ்சையோடு தடவிக் கொடுத்தார் நல்லசிவம்...
அது உண்மையில்
ஒரு மாட்டுக்கும் ,மனிதனுக்குமான உறவாகப் படவேயில்லை...
அட அன்பு என்பது மனிதனுக்கு மட்டுமான தனிச் சொத்து இல்லை தானே.
- இனியவன் காளிதாஸ்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்