logo

கவிச்சுடர் விருது


ந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை கவிஞர்  கருவை ந.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.

 

கரூர் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர்   கல்விப்புலம் சார்ந்து தமிழ்மீதான தன் ஆர்வத்தைச் செறிவு படுத்திக் கொள்வதற்காக, இளங்கலைத் தமிழ் இலக்கியம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களை கரூர் அரசு கலைக்கல்லூரியிலும், முதுநிலைத் தமிழ் இலக்கியத்தை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர்.

 

கவிதைப் புலத்தில் நவீனக் கவிதைகளின்மீது கொண்ட ஆர்வத்தினால் தற்போது கரூர் அரசு கலைக்கல்லூரியில் ‘நவீனக் கவிதை இலக்கியத்தில் வாழ்வியல் கூறுகள்’ என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வையும்  மேற்கொண்டு வருகிறார்

 

நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில் அளவிலான கவிதைப்போட்டிகளில் பங்கேற்று மாவட்ட, மாநில அளவில் பல பரிசுகளைப் பெற்றுள்ள கவிஞர் தொடர்ச்சியாக, பல்வேறு கவியரங்குகளில் பாடி பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தனிநபர் சொற்பொழிவு, பட்டிமன்றப் பேச்சு, கவியரங்க நடுவர் பொறுப்பு, அகில இந்திய வானொலி நிலையத்தில் கவிதை குறித்த உரையாடல்கள் எனப் பல்வேறு களங்களிலும்  தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது கவிஞரின் சிறப்பு.

 

தனது கவிதைக் கருத்தியலின் முதல் முயற்சியாக ‘பெருந்துணைத் தேறல்’ என்ற பெயரில் நவீனக் கவிதை நூல் ஒன்றை தான் செயல்படுத்திவரும் ஆதன் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் நக்கீரன் இதழ் தேசிய அளவில் நடத்திய மாணவக் கவிஞர் போட்டியில் தலைசிறந்த முதன்மைப் பத்து நபர்களில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு நட்சத்திரக் கவிஞர் என்ற விருதையும் அவரது கரங்களால் பெற்றுள்ளார்.

 

நச்செள்ளை தமிழ்ப்பேராயம் என்ற ஓர் அமைப்பை நிறுவி, அதன் மையப் பொறுப்பாளராக இருந்து கொண்டு  அதன் வழியாக இதுவரை யாரும் முன்னெடுக்காத எந்நாளும் இன்றியமையாத பல தமிழ்ச் செயல்பாடுகளைக் களப்பணியாக ஆற்றி வரும் கவிஞர் பல விருதுகளையும் பெற்றவர் என்பது தமிழுக்கு மரியாதை.

 

கவிஞர் கருவை .ஸ்டாலின் அவர்களுக்கு இவ்விருது மேலும் பல சிறப்புகளையும் உயர்வுகளையும் அவரிடம் கொண்டு சேர்க்கும் என்பது உறுதி.

 

இனி கவிஞரின் சில கவிதைகளைக் காண்போம்.

 

 

நால்வழி சாலையின் தோற்றம் ஒரு சிலுவையின் குறியீடு என்பதில் தொடங்கும் இக் கவிதை அதற்குள் அபகரிக்கப் பட்ட நிலங்களின் கதறலும், வெட்டப்பட்ட மரங்களின் உதிரமும் சொல்லாமல் சொல்லப்படும் பொருளின்  நுட்பத்தை தாங்கிக் கொள்கிறது..  விழுந்து கிடப்பது  மரம் என்றாலும் அடர் கிளைகளுடன் பறவைகளின் இசையைக் கேட்டு அது வளர்ந்திருக்கும்.  அம் மரம் ஊர்வன, சார்வனவுடனும்  விளையாடி மகிழ்ந்திருக்கும்…  அதனால்தான் அது விழுந்து கிடக்கும் அக்காட்சியை கரம் விரித்த சடலத்தின் நிலை என்கிறார் கவிஞர்

 

 

குறியீடல்ல சிலுவைகள்*

 

இந்தத் தெருவின் சாலை

வடிவமும்

ஒத்துப்போகும்,

 

உருவாவதற்கு முன்பு

குறுக்கும் நெடுக்குமாக

பின்னிப் பிணைந்திருந்தது

அம்மரத்தின் கிளைகள்,

 

இடது பக்கமாக குருதி

ஒழுகவொழுகக் கிடக்கும்

சடலத்தின்

கரம் விரிந்த நிலை,

 

நேர்கோட்டில் தவழும்

நதிகளின் இடையில்

கல்லெறியும்

சிறுவனின் வீச்சு,

 

எல்லா நிலைகளிலும்

வாங்கிய பாவங்களை

ஏற்கனவே

சுமந்து கொண்டு இருக்கும்

சிலுவைக்கு

எதற்கு இன்னொரு சுமை,

 

இறக்கி வையுங்கள்

அவரை,

கொஞ்சம் சிலுவையின்

பாவத்தையும்

சேர்த்தே மன்னித்து...

 

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது விவாத பொருளாகவே இருந்து விட்டு போகட்டும். ஒருவேளை கடவுள் என்பவர்  இருந்தால் அவர் மன நிலை இப்போது எப்படி இருக்கும்என்பதுதான் இக்கவிதையின் மாயத் தோற்றம்.

 

 

தியானத்தில் அமர்ந்தேன்

தலையை வெட்டி

இடம் மாறச் செய்து

விகார விந்தையாக்கினீர்

 

கிறக்கத்தில் கிடந்தேன்

பாம்பை தலையில் சுற்றிவிட்டு

பாற்கடலில் புதைத்துவிட்டீர்

 

யாரோ

செய்த லீலைகளுக்கெல்லாம்

செயப்படு பொருளாக்கினீர்

 

சமாதியில் பூத்த எருக்களைக்கு

ஞானப்பூவென்று

பெயர் சூட்டினீர்

 

இப்போதாவது....?

இல்லை

எப்போதும் இல்லை

 

என்னால் வாழும் உங்களை

எப்படி வெறுக்க முடியும்

உங்களால் மடிந்த

என்னால்...

 

 

காதலின் பிரிவை முகாரி, அம்சவர்த்தினி இராகங்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிறது கவிதைஒரு சொல் உடைத்திருக்கலாம் இதயத்தைபெரும் மழை என்பது துயரத்தின் குறியீடாகிறது. கடல் என்பது மனம். இன்று அது பொங்கியெழலாம்நாளை தூவானம் தூறி சில்லிட்டுக் காதலை ஆனந்த பைரவியால் அலையாட்டலாம்

 

நீயும் நானும்

பிரிந்த தக்க தருணத்தில்

சொல்லிக்கொள்ளாமல் வந்த பெருமழையொன்று

கடற்கரையில்

எழுதிவைத்த பெயர்களை

தின்றதோ விழுங்கியதோ

சாட்சியங்களை

சரித்துவிட்டதாய் பரிகசித்த வான்

அழுகிறதா நகைக்கிறதா

என்பதறியாமல்

முகாரியையும் அமிர்தவர்சினியையும்

உளரும் கடலலை

வானுக்கும் மண்ணுக்கும்

இடையில் தான்

நிற்கிறது

காதல்.

 

உனக்கும் எனக்கும் என்பது இக்கவிதையின் பொருள்பாட்டில் எனக்கும் எனக்கும் என்பதேயாம். குழம்புவது மனம்குழப்புவது செயல்மௌனத்தின் உரையாடல் இங்கு அவசியமாகிறது. தெளிதல் பிறக்கும் வரை தேவை பெருங்கதையாடலின்  த்யான உச்சம்தெளிதல் யாரும் நினைப்பது போல் அத்துணை எளிதல்ல….

 

உனக்கும்

எனக்குமிடையே

என்ன இருக்கிறது

 

இப்படி கதைக்கிறோம்

இப்படி பிதற்றுகிறோம்

இப்படி உளறுகிறோம்

 

சிரிப்பதை குறைத்து - கொஞ்சம் மௌனித்து

இரு

 

இங்குதான்

தொடங்கப்பட்டது

உனக்கும்

எனக்குமான மெல்லுரையாடல்

 

ஆத்மாவின் 

பரிசுத்தமான வேலையென்பது

 

பேரன்பித்துத் திரிவது

பேசச் செய்வது

புட்டியொன்றினை

கையில் கொடுத்து

குமட்ட குமட்ட உள்ளிறங்க வைப்பது

 

தெளிதல்

யாவர்க்கும்

எளியதொன்றில்லை

 

தெளிந்து தெளிந்து

குழப்பும்

இவ்வீணையின் நரம்பிழையில்

ஒன்றினை

பலவந்தமாய் பிடுங்கி

சொருகிக்கொள்

உனது

செவியில்...!

 

இன்னுமிருக்கிறது

ஏதோ மிச்சம்,

 

வா !

பெருங்கதையாடுவோம்...

 

தெளிதல்

யாவர்க்கும்

எளியதொன்றில்லை...!

 

சுத்தமானவர்கள் கல்லெறியுங்கள் என்பது போல்தான் இக் கவிதை. புனித நூலொன்றைப்  புரட்டிப் பார்ப்பது அழுக்குக் கரங்கள் என்பதோடு நிறுத்திக் கொள்ளும் கவிதைபார்க்கும் விழிகள் பரவசம் வாங்கி அகவழுக்கைக் கழுவிக் கொண்டால் புனித நூல் அன்றுதான்  புனிதம் ஆகலாம்  என்பதையும் மறை பொருளாக கோடு போட்டு காட்டுகிறது.

 

 

புனித நூலென

நீங்கள் மதிக்கும்

ஒவ்வொரு பக்கத்தையும்

புரட்டிப்பார்க்கிறது

அழுக்குப்படிந்த கரங்கள்...!

 

கவிஞரின் மற்றும் சில கவிதைகள்:

 

 

பிரேத மனிதனிடம்

கொஞ்சம்

கதைக்கலாம் என்று இருக்கிறேன்

 

கைகால்கள் சுருக்கப்பட்டு

குருதியுறைந்து

வெள்ளுடை தரித்தவனிடம்

சொல்வதை கேட்கும்

திறனிருக்குமா ?

 

கேட்டுவிட்டு

பதிலுரைப்பானா ?

 

தெரியாது

தெரியவே தெரியாது

 

கையில் அவனுக்கு பிடித்த

தேநீர் இருக்கிறது

குடித்துமுடிப்பதற்குள்

கடந்துவிடவேண்டும்

இவ்வறையை விட்டு.....!

 

********                     

 

ஓய்வெடுத்துக்கொள்கிறது

இப்பிரபஞ்சம்

கொடுப்பதிலும் பெறுவதிலும்

நிறைத்துக்கொள்ளும் பேரன்பில்

சிற்சில வலிகளையும்

பரந்துபட்ட மனங்களில்

பாவப்பட்ட சுவடுகளையும்

வித்தியாசமான நேரங்களின்

விசித்திரமான நாட்களிலும் 

இவளிருக்கிறாள்

என்கிற ஒற்றைப்புரிதலோடு...!

 

*********         

 

பொய்க்கால் ஆட்டம்

உண்மையாகவே ஆடுகிறது

பசி.

 

 

*******

 

தொடுதிரைக்குப்  பின்னிருந்து

காலாட்சேபம் செய்யும்

நகலெடுத்துவைத்த

கோப்புகள்

எப்படியும் எப்படியாகவும் அழவைத்துவிடுகிறது

குளோனிங் முறையில் தரம்பிரிக்கப்பட்ட

போதனைக்கட்டிகளை

உண்ணும் பட்சிகளே

அசலையும் கொஞ்சம் இரட்சியும்.....!

 

 **********                            

 

தின்று ஏப்பமிட்டு

தூக்கியெறியப்பட்ட

விதையின் நிழலில்

சிறிது ஓய்வெடுக்கவும் நேரிடலாம்

எந்நாளிலோ ஒருகணம்...!

 

*********   

 

*குப்பனின் குடல்...*

 

தெருக்களில் உள்ள

அந்த நூறு வீட்டின் கழிவுகளும்

இங்கேதான் குடியிருக்கின்றன

சாஷ்டாங்கமாக மஞ்சத்தில்

படுத்துறங்கிக்கொண்டிருக்கும் கழிவுகளோடு

அவ்வப்போது புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்துகொண்டேயிருக்கிறது

தனக்கே உரித்தான நாற்றத்தை

அள்ளிவீசி

டெங்குவையும் மலேரியாவையும் சிவப்புக்கம்பளமிட்டு வரவேற்கத் தயாராயிருந்தது

பரந்துபட்ட குப்பைகள்

பட்டவனுக்கு படையல்

போட்ட எச்சில் இலையை மோப்பமிட்டமடி திரியும் பெட்டை நாயும் அதன் பெருந்துணையும்,

நெகிழியின் ஊர்த்துவதாண்டவத்தை ஒரு இடுக்கியின் மூலம் மூட்டை கட்டுகிறான் துப்புரவு தொழிலாளன்.

இப்படியாக

குன்றென நிமிர்ந்து நிற்கும்

குப்பைகளை களையெடுத்துக்கொண்டிருக்கிறான்

குப்பன்

தனக்கான ஒரு கவளம் எங்கேனும் தட்டுப்படுமா என்று...!

 

*********

  

இப்பேற்பட்ட

இந்தவகையான 

இனிப்பை

இப்படித்தான் சுவைக்கவேண்டும்

உயர்தர பேக்கரிக்குள்

உருண்டுகொண்டிருந்தது

பண்டங்கள்

இது கடிக்க இது நக்கிட

இது மென்றிட

பட்டியல் நீண்டுகொண்டிருந்த கொள்கலனில்

மிச்சத்தை கையிலெடுத்த

கரமொன்று

தட்டுக்கும் வாயுக்குமான குறுவெளியில்

இது பசிக்கு புசிக்க

தடாலென உமிழ்நீருக்குள்

மூழ்கி

இன்னுயிர் நீத்தது

அடுத்த மரணத்திற்கு

நேரம் குறித்துக்கொண்டிருந்தான்  கடைவாயிலில்

பசியோடு ஒருவன்...!

 

**********

 

எதிர்வரும் காலம் கணித்து

ஒவ்வொரு முறையும்

நல்லதொரு

பக்கங்களை

கிழித்தெறிகிறீர்கள்

பிறகு

ஒவ்வொரு கிழிந்த தாளையும்

சிற்சில பிசின் சேர்த்து

ஒட்டவைக்க முயல்கிறீர்கள்

எத்தனை வண்ணங்கள்

எத்தனை சத்தங்கள்

கிழிந்து கலந்திருக்கக்கூடும்

அக்கணம்

இறந்தவை

அப்படியே சென்று தொலையட்டும்

கையில் மீண்டுமொரு

புத்தகம் இருக்கிறது

படிப்பதிலும் கிழிப்பதிலும்

 இருக்கிறது

உங்களின் சுயவிசாரணை.

 

*********                     

 

பக்குவமாய் பதப்படுத்தப்பட்ட

சடலங்களை

ருசிபார்த்துக்கொண்டிருக்கிறேன் 

பொரித்தெடுக்கப்பட்ட வானலியில்

ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கும்

துணுக்குகளில்

பொறாமை சற்று தூக்கலாகவும்,

அரைவேக்காட்டில்

ஆணவம் கொஞ்சம் காரசாரத்துடன் மிஞ்சியேயிருக்கின்றன

உதிரியுதிரியாயிருக்கும் அப்பண்டங்களில்

உப்புசப்பற்றுக்கிடக்கும் ஆசைகள்

கொதிக்கும் சினக்குளத்தில் மூழ்கி

எழுகின்றன,

தீர்க்கப்படாத தருக்கத்தில்

தீக்குளிக்கப்பட்ட வல்லமை

தீயாத வண்ணம்

விரிக்கப்பட்ட வாழ்க்கையிலையில்

அடுக்கிவைக்கப்பட்ட யாவையுமே

ருசிபார்த்துக்கொண்டிருக்கிறேன்

கௌரவத்தினால் வெட்டுண்ட மென்நாவினால்...

 

*********

 

அங்கே கேட்பது

மியாவ் மியாவ் சத்தம் தானே

உங்களுக்கு அது நாயின் குரைத்தலாகவும்

மரண விளிம்பிலுள்ள ஆட்டின்

மேவாகவும் கூட இருக்கலாம்

 

எனக்கு அது

என்னைத் தொலைத்துவிட்டு போன

பூனைக்குட்டியின் மியாவ் மியாவ் சத்தம் தான்

 

கொஞ்சம் பொறுமையாக இருங்கள்

தொலைந்து போன நினைவுகளின் சத்தமாக

என் மனதில் வருடியது போக  என்னமோ தெரியவில்லை இப்போது காதிலும் வருடத் தொடங்கியிருக்கிறது

அந்த மியாவ் மியாவ் சத்தம்

 

என்னை களவாண்டு சென்றவரை நான் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்

 

என்னை சந்திக்க வரும் யாரேனும்

வரும் வழியில் கண்டுபிடித்தால் சொல்லுங்கள்

 

பார்ப்பதற்கு பூனை போல் இருக்கும் பூனை தான் அது

 

நான்கு கால்களும்

ஒரு மூக்கில் இரு துவாரமும்

கொஞ்சம் தடித்த வாலும்

தொலைத்து விட்டுப் போன காதல் குழைக்கப்பட்ட கண்களும் தான் அது தனித்த அடையாளம்

 

மீண்டும் நீள்மௌனம்

 

மெல்லியதாக கேட்கிறது

அதே மியாவ் மியாவ் சத்தம்...

 

*********

 

குளித்து முடித்து

தலை துவட்டுகையில்

நித்தியமாய் ஒட்டிக் கொண்டிருந்தது

அம்மாவின் கைமணம்.

 

 

******

 

 

கூற்றுவனின் பாசக்கயிறு

சுழன்றபடியே சுற்றும் பிரபஞ்சம்

சந்துபொந்துகளோ

சாக்கடை எச்சங்களோ

மிச்சங்களை கழுவியூத்தவும் ஏதுமில்லை.

கஞ்சிப்பொங்கிடாத இவ்வீட்டில்,

இருந்து கரைந்ததும்

கொடுத்தது தொலைந்ததும் சொற்பநாளிலே !

சொச்சத்தில் மீண்டது ஏதோ சொச்சம்

மாற்றுமுறை மய்யம் கொண்டதில்

வரவாய் சில காய்ந்த கோதுமைவுடல்கள்,

கணக்கதிகாரம் வகுத்த சூந்திரம் பங்கிடாய் விழுந்தது

உடல்சூம்பிக்கிடக்கும் தெருநாய்களுக்கும்

சில ரொட்டிகள்.

 

********

 

தொடர்ச்சியாக

அடுக்கப்பட்ட நிலைப்பாடுகள்

பலவும்

தொடர்புடையவனிடம்

போகிற போக்கிலாவது

சென்றெட்டுமா எனும்

கவலையில்லை

மனதோடு சிலாகித்திடும் இவர்களுக்கு....

 

********

 

மிருதிகளை அப்படியே

நகலெடுக்கத் தெரிந்த தேகியே யாக்கையின்

எந்திரக்கோளாறின் கக்குதலில்

மவுனம்

சில நேரம் சில பொழுது வெள்ளையையும் கருப்புகளையும் உமிழ்ந்துவிடுகிறது துடைத்தெறியப்பட்ட துகில்

ஓட்டியிருந்த கரி

அப்படியெனில்

தேகி!

நான் என் முகம்

கதம்பம்..

 

********

 

இவ்வளவு இறுக்கமாக

பிடித்துக்கொள்ள வேண்டிய

எந்தக் கட்டாயமுமில்லை

விட்டெறியுங்கள்

அல்லது விட்டொழியுங்கள்

அது உங்களுக்கு பாரமாகவுமிருக்கலாம்

கூடவே

எனக்கு அது தேவையாகவும்.

 

*கருவை ந.ஸ்டாலின்*

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

தமிழ்மணவாளன்


0   1588   0  
January 2019

ஜபீர்


0   1505   0  
November 2018

யூசுப் ஜாகிர்


0   1166   0  
May 2021

மு. இளையா


0   1115   0  
December 2018