logo

கவிச்சுடர் விருது


இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருதினை நமது படைப்பு குழுமத்தில் தனது தனித்துவமான கவிதைகள் மூலமாக படைப்பாற்றலை வெளிப்படுத்தி வரும் கவிஞர் ஜே.ஜே.அனிட்டா அவர்களுக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.

சமூக நலன் சார்ந்த பணியாளராக பணியாற்றிய கவிஞர், தற்போது நல்லதொரு இல்லத்தரசியாக தனது குடும்பத்துடன் திருச்சியில் வசித்து வரும் கவிஞர், தனது கவிதை பயணத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதை அவரே சொல்ல தெரிந்து கொள்வோம்.

   
"சரியான துவக்கமென்றால் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்த போது அதிக நேரங்களையும் நாட்களையும் தமிழ்த்துறையிலும் நூலகத்திலும் கழித்த போது ஏற்பட்ட மொழியின் மீதான பெருங்காதல் தான்.திருச்சியில் பிறந்து வளர்ந்து பள்ளி,கல்லூரி படிப்பெல்லாம் முடித்து பேராசிரியைப் பணியை தொடர்ந்த வரை எனதெழுத்துக்களோடு மனமொத்து பயணித்தேன்.சமூகப் பணி படித்து சமூகப் பணி செய்தவைகளை முடித்து குடும்பப் பணி துவங்கிய திருமண வாழ்விற்குப் பிறகு சிறிது இடைவெளி.
கவிதையும் குரலும் பெற்றுத் தந்த பரிசுகளின் முகம்தடவிப் பார்க்கும் போதெல்லாம் பேனாவையும் தேடத் துவங்கி விட்டேன்.
முகநூலில் இணைந்து எழுதத் துவங்கி எட்டு வருடங்கள் கழித்து தான் எனது அடையாளத்தை மிகச் சரியான தளத்தில் மிகச் சரியான ஆயுதத்தோடு  நிறுவிக் கொள்ள முடிந்தது.படைப்பு கல்வெட்டு,படைப்பு தகவு,நக்கீரன்,மெல்லினம்,மேலும் சில மாத இதழ்கள்,மின்னிதழ்களில் கவிதைகள் களம் காண இன்னும் இனியும் தொடர்கிறேன்.

பெண்களுக்கேயுரிய அத்தனை சமூக இடர்பாடுகளையும் குடும்ப பொறுப்புகளையும் எதிர்மறை விமர்சனங்களையும் கடந்து துணிந்து எழும்போதெல்லாம்..எழுதும் போதெல்லாம்...
நிச்சயமாக கண்ணீர் இனிக்கிறது.

என்னிடம் எழுதுவதற்கான கொள்கை கோட்பாடுகள் எதுவுமில்லை.நான் காண்கிறவையோ என்னைக் காண்கிறவையோ என்னவெல்லாம் பிரம்மாண்டங்கள் நிகழ்த்துகிறதோ எவையெல்லாம் எனது மனம் கீறி அகழ்ந்து ஆராய்கிறதோ அதை கவிதையாகக் கொடுக்க முடிகிறது.
நிறைய சப்தங்களுக்கு இடையே தான் அதிகபட்சக் கவிதைகளை மௌனமாகப் பிரசவித்திருக்கிறேன் ஜே.ஜே.அனிட்டா என்னும் நான்."

இனி கவிஞரின் கவிதைகளில் சிலவற்றை கவனிப்போம் வாருங்கள்:

கவிதையின் அளவுகோல் என்னவாக இருக்கும்? மொழியும், வரிகளும் கொண்ட நயம் மட்டும்தானா? இல்லை இலக்கணம் என்ற கண்ணியத்திற்குள் வாழும் தொட்டி மீன்களாகவா? இல்லவேயில்லை ... கவிதையின் அளவுகோல் வேறானது என்று பட்டியலிடுகிறார் கவிஞர். யாரும் மறுக்கவியலா ஆழம். இதோ கவிதை:


நான்கடி அல்லது
ஒரு அங்குலம்

சில மீட்டர் தூரம்
ஒரு கடலின் பரப்பளவு
அல்லது 
இப்பிரபஞ்சத்தின் உயரம்

பிறகு..
மட்காத சாயம்..
வெளிர் நிறம் எடுப்பானது.

பதப்படுத்தப்பட்ட திடம்
அல்லது குளிரூட்டப்பட்ட
மென்மை..

கொஞ்சமாய் பிரியம்
லேசான கீறல்..
அங்கங்கே சத்தம்..
வெளிப்படையான தோற்றம்
பிறகு
வெளியற்ற உடல்

ஒரு பிடி கோபம்
சிறிதளவு வெட்கம்
எப்போதாவது  கண்ணீர்

ஆறடிக்கொரு முறை மரணம்
அரையடிக்கும் குறைவாய் அன்பு

போதவில்லையெனில் கடன்
போக வழியில்லையெனில்
திருட்டு..

மறைக்கப்பட்ட பிழை
பெரிதளவில் ஞானம்

அளந்தால்  பொருள் குறைவு
பிளந்தால் பூமியின் விலை

சின்னச் சின்ன கேள்விகள்
பெருந்துளிகளாலான சுடர்

உடைத்தாலும்
உடையெனத் தரித்தாலும்
ஒரே அளவு  கனவு

விற்கலாம்
வாங்கலாம்
மட்கியும் போகலாம்..

சொற்களால் ஆன பிறகு 
இன்னும் சிரமம்..

ஒரு கவிதை இவ்வளவு தான்.

விலை என்ன சொல்லுங்கள்.

-------------------------

கோபத்தின் வெளிதான், பிரபஞ்சத்தின் அமைதி என்றால் பொய்யில்லை. ஒவ்வொன்றின் சாதாரண நிகழ்வுகளும் ஒரு சீற்றத்தை, ஆற்றாமையை, அன்பை கொண்டதாகத்தான் இருக்கும். இந்த கவிதைக்குள்ளும் ஒரு கரு முட்டையின் சீற்றம் மறைமுகமாக இருப்பதை தெளிய முடிகிறது. இதோ கவிதை:

சினமுற்ற சினைமுட்டையின்
வெறிமுட்டிய பகை தான்
கருமுட்டை உதறி..
புறவுலகை வந்தடைவது.

இலையொற்றிய நீரின்
கரம்பற்றாத கிளைகளுடனான
மனமொத்த பிரிவு தான்..
மரம் விட்டு மண் பாய்வது.

வனம் பற்றிய கூட்டில்
அமையொத்து நிகழாத
இசை கொத்திப் பறவையின்
பிரிவுற்ற நிலையொப்ப நிகழ்வது தான்..
சுரம் தப்பி மொழியுறைவது.

அகம் பற்றி உன்னலகின்
பெருங்கோபக் கூர்முனையில்
செவி விட்டுத் தொலையாது
மனமொத்த ஊடற்கொண்டு

சிறுகோபம் துய்க்க
மனப்பித்துக் கொண்டவளாய்
உருப் பற்றொழிந்து
தடம் மாறித் திரிகின்றேன்..

எனையொத்து நிகழும்
பெருங்கோபம் கொள் நண்ப..

இருளொத்த ஒளியொன்று
கனம் பற்றிப் படரட்டும் என்மேல்...!

-----------------------------

நேசத்தின் உருவொன்று ஆழ்மனதில் உழல்கிறது. அது எல்லாமுமாகவும் விரிகிறது. அந்த நேசத்தின் உரு யாராகவும் இருக்கலாம். கடவுளாக, தாயாக, இணையராக, பிள்ளைகளாக,ஏன் ஆசையாகவும் இருக்கலாம் அதது அவரவர் மனவோட்டங்களே.... கவிதை:

ஆதிப் பெருந்தாகம் நீ..
ஆளும் துயர் மருளும்
நீள்வானக்  கீழ் வானம் நீ..
பேரண்டத்தின் முதற்புள்ளி துவங்கி
அசைவுற்று நெகிழ்ந்தாடும்
பேரன்புக்குரிய இப் பிண்டத்தின்
தோற்றக் காரணம் நீ..
ஜீவப் பெருந்தாகமணையா
ஆன்மக் கொடுஞ்சாபம்
தீயணைத்து வேகும் பூந்திவலைகளின்
நேர்மறைக் கோட்பாடு நீ..
என் பாவப் பெருங்கோபந்தணிய
ஏகுஞ்சிறுகாட்டுப் பேடைக் குரல் கரைய
ராகம் தாளம் பொருந்தியழ
கேட்கும் செவியளந்து மீட்கும்
இசையின்  விசையும் நீ..
நாளை வரையுழன்று
நேற்றின் மறையுகந்து
ஞானத் தீஞ்சுவைகள் நேரும் பின்
தேறுமெனக் காத்திருந்து
ஆழப் புதைகிற நேரஞ் சொல்லியே
ஆழ்மனக் கிடப்பை
ஆட்கொண்டலையும் ஆல் வடிவானவன் நீ..
நீருக்கெதிரான பசியும் நீ..
நேர்மைக்கெதிரான தகவும் நீ..
பேசித் தீராத ஆசை முகம் 
மறத்தலென்ன..
பூமிக்கெதிரான போர் புரியும்
பூமத்திய சித்தங்களில்
யாருக்கும் புலப்படாது

எனதகப் பிழைப்பின்
ஒற்றைத் துளி உயிர் திசுவில்
ஒட்டிக் கொண்டலையும்
பற்றறவே இல்லாத
ஒற்றையுலகம் நீ..!

-------------------------
ஏகாந்த பெருவெளியாய் பெண்!  அரிதாரமிட்ட செழுமைத்துயரம் இவள்!  அடர் மௌனத்தை கிழுத்தெறிகிறது ஒவ்வொரு வரிகளுமே!
கவிதை:

கோப்பைகள் நிறைய பருகத் தந்த
மரகதத் துளிகளை
செவ்விதற் குடுவைக்குள் சேகரித்து
மகரந்தம் துளிர்க்கிறாள்..
கண்களின் கதவுகள் திறக்கிற
ஏகாந்தப் பெருவெளிக்குள்
காந்தச் செருக்குடன்
ஆடவர் பலரும்
ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்..
ஒப்பனைகளை மெருகேற்றும்
ஒளிக் கீற்றுகளின் மென்பாய்தலில்
அவளங்கத்தின் அசைவுகள்
துல்லிய பூகம்பக் கொடுங்கோள் புரிகிறது..
தன் மீது படரும் விரல்களின்
மயக்கத் தூரிகையில்
அவள்..
மேனியின் நிறங்களை வடிவமைக்கிறாள்..

நாளொன்றுக்கு ஒரே இரவு
அரிதாரமிட்ட செழுமைத் துயருடன் 
ஆதித் தோற்றமளித்து
ஆசைகளைப் பிறப்பிக்கும்
அற்பத் தொழில் தான் என்றாலும்...

பெண்மையின் தோற்றப் பிழையால்
பகலென்பது கூட
கூனிக் குறுகிப் போகும்
கனத்த இரவென
உறைந்து கிடக்கிறது.

இவர்களின் மெய் பித்தத்தில்

ஆடைகளென்ற பொய்யால்
நிறமியிட்டுக் கொள்ள வேண்டிய
பெண் என்பவளே மெய்..!

-----------------------------

மெய்பிம்பத்தின் கட்டமைப்பாக மிளிரும் கவிதை, தன் சுயத்தையும் விலக்கி கவிதையின் வழியாகப் பார்க்கிறது!
இதோ கவிதை:

கனவுகளற்றவர்களின் 
கூட்டத்திலிருந்து வந்திருக்கிறேன்..
எனதுறக்கங்களில்
இரவு அழுவதை கவனிப்பீர்களானால்
எனது பிறழ்வுகளில்
பழுப்பின் நிறத்தை சுவைப்பீர்களானால்
நான் இரக்கமற்ற கனவுகளைத்
துய்ப்பவளல்ல..
பகலின் நிறங்களில் நான்
பொய்முலாம் பூசுதலின் பொருட்டு
மெய்ப்படாத நிர்மூலங்களை சுமந்தவாறு
சிறு சிறு உறக்கங்கள் கழிகிறேன்..
எனில்..
நான் கனவுகளின் முதுகில்
சுமைகள் பிதுங்க நடக்கவியலாது.

என்னை
கனவுகளின் கூடாரங்களினின்று
வெளியேற்றத் துணிகிறேன்.

எந்தக் கனவிலும்
உறக்கம் அழுவதாய்
நினைவிலேயில்லை.

-------------------
பெண்ணெனப்படுபவள், எங்கெங்கு எந்தெந்த நிலைகளில் சுயம் இழக்கிறாள்! ஆண் சமுகத்தின் கட்டமைப்பு  கூடாரமாகிப் போகிறாள்!  உருப்புகளால் அலங்கரிக்கப்பட்ட போதையென சிங்காரித்தல் கட்டமைப்பின் பாசாங்கு! அவளின் மனம் படிக்காத பசியின் வெறி! அதுவும் விலைமகளென்றால், அவள் காசிற்கு வாங்கிய போதை! வெறுப்பின் உச்சமாய் வந்து விழுகிறது வார்த்தைகள்!
கவிதை:

அம்மா மருத்துவச்சியே..!
அவ்வுறுப்பைத் தகர்த்தெறிய வந்திருக்கிறேன்..
வலியறுக்கும் மரத்த ஊசியின்றியே
அறுத்தெறியலாம் நீ..
பாவப் புண்கள் குழுமிய எச்சிலின்
காய்ந்த அழுக்கொழிய
மழித்து உயிர்த்தெழ வை .
பணத்தின் பெருத்த கனம்
வயிற்றைக் கழுவத்தானே தவிர..
ஒருத்தனின் சிரத்தையிலும்
இரக்கமில்லையென்பதை
பழுத்த தடத்தைப் பார்த்தால்
புரிந்து கொள்வாய்.
சிறுத்த நீரையே தடுத்து நிறுத்துமளவு
வலிக்கிற கொடுஞ்சாபம்
சுமந்தவள் நான்..
அடுத்து எடுத்து வைக்க
மரணமன்றி வேறில்லையெனும் போது
கொடுத்த சுகங்களின் பதிலாய்
உறுப்பையிழந்தவளென்று
வழக்கில் வந்தாலும் பரவாயில்லை.
வழித்து எடு.

பெண்ணெனக் கொள்ள
அங்க அடையாளம் இல்லாத
வஞ்சப் பித்துக் கொண்டலைந்தாலும்

நஞ்சென உறுத்தும்
அவ்வுறுப்பு மட்டும்
கொன்று புதைத்து விடு..!

இந்தப் பிறவியின் 
இன்னும் மீதமுள்ள அற்ப வாழ்வுக்கு
கொஞ்சம் பொருளிருக்கிறது.

பெண்ணெனப்படுபவள்....

-------------------------

பேரன்பின் தேவதைகள் சிறகுகளுடன் தேவ லோகத்திலிருந்து இறங்க வேண்டும் என்பதில்லை! இங்கேயே இருக்கிறார்கள் என பட்டியலிடுகிறது இந்த கவிதை!


யாரிடம் பேசினால்..

பட்டாம்பூச்சியின் சிறகில்
நிறங்கள் முளைக்கிறதோ..

யாரிடம் மன்றாடினால்..

நெட்டுரு செய்த சொற்கள்
நெக்குருகிப் போகிறதோ..

யாரிடம் அழுதால்..

மழையின் கனவில்
மௌனம் துளிர்க்கிறதோ..

யாரிடம் சேர்ந்தால்
அணுக்களின் தாபத்தில்
அனுதாபம் மேலோங்குகிறதோ...

யாரை நேசித்தால்..

பிரபஞ்சமே உடைந்து
விழித்திரையில் சிறைபட்டுக் கொள்கிறதோ...

யாரின் குரல் கேட்டால்...

காற்று மெலிந்து
இசையின் துளையில்
வேர் விட்டெழுகிறதோ...

யாரை நினைத்தால்..

பூஞ்சிறகொன்று உயிர் துழாவி
வாஞ்சையுடன் 
பூமி தொடாது வானமும் துறக்கிறதோ...

யாரை மறந்தால்...

மரணத்தின் சிலுவைகளுக்கு
மனம் மண்டியிடுகிறதோ...

அவர்கள்...

பேரன்பின் தேவதைகளாகப்பட்டவர்கள்..!

---------------------------------
வயதுக்கு வருதல் என்பது ஒரு பெண்ணிற்கு ஏற்படும் பருவ மாற்றம் மட்டுமல்ல. சுற்றம் சூழ, மகிழ்வின் சடங்குகளுடன் வாழ்வின் மறக்கா தருணமாகவும் அமைவது அதன் சிறப்பு! எளிய தாயின் மகளுக்கு இவையெல்லாம் சாத்தியமா! இந்தக்கவிதை வலியின் வலிதான்!

எனது பாவாடையில் தீட்டுக் கறையைப்
பார்த்து விட்ட அம்மாவுக்கு..
செய்வதறியாத பேரின்ப நிலை
ஆனாலும்..
உறவுகள் புடைசூழ 
ஊருக்கே விருந்து வைக்க
பேராசைப்படும் அவளின் கைகளில்
மிச்ச சொச்சங்களைக் கொண்டு
ஒரு முழம் பூவும்...
ஒரு டசன் பழமும் மட்டுமே வாங்கவியலும்..
சடங்கானவளை ஒதுக்கி வைக்க
இடமில்லாத குடிசைக்கு
கதவே இன்னும் விதிக்கப்படவில்லை...
தானே எல்லாமுமாகி
தலைக்கு எண்ணெய் வைத்து
நீராட்டு  விழாவைக் கூட்டுக்குள்ளேயே
நிகழ்த்தி..
பூப்பெய்திய சம்பவத்தை
கண்ணீரில் துடைத்துக் கரையேற்றுகிறாள்..

இன்னும் சற்று சூதானமாய்
இருந்திருந்தால்
அம்மாவுக்குத் தெரியாமல்
மறைத்திருக்கலாம்...

இப்போதெப்படி சொல்வது
இது ஆறாம் மாதத் தீட்டு என்று...

---------------
புதிய நடையில் சந்தம் குறையாமல் வார்த்தைகளில் வீரியம் கோர்த்தெழுதும் கவிஞர் ஜே.ஜே.அனிட்டா மேலும் சிறந்த படைப்புகளை வழங்க  நமது குழுமம் மன நிறைவுடன் வாழ்த்துகிறது! கவிஞரின் சிறப்பான கவிதைகளில் இன்னமும் சில கீழே...

எளந்தாரிப் பய மக்கா
சுடுகாட்டுச் சுள்ளியால
அப்பன் பொணத்து மேல
சிந்திய செங்குருதி...

கடுங்காட்டுப் புங்கமரக் கெளையில
சுருங்கிய கழுத்தும்
எரிஞ்ச உடலுமா
தொங்கிய வெசக் கயிறு..

பாவாட நாடா அவுந்த பாவத்துக்கு
வயசுக்கே வாராம உதிரஞ் செலவழிய
மேக்காலப் பயக
நெருஞ்சிய முறிச்ச கத...

கெழக்கால வெதச்சது
ஈனச்சாதிப் பய எச்சமிட்ட வெளக்குன்னு
மேற்கால சாதி மக்க
சாமிய மறைச்ச குத்தம்..

வவுத்தாலப் போய் விட
வைத்தியரப் பாக்க
வெரசா வண்டி கட்டி கடந்த தார் ரோடு
வெவகாரம் புடிச்சவுக
செஞ்சுவச்ச பாதையின்னு
அடிச்சே வெரட்டி விட
அஞ்சாறு பொணமள்ளி
மாடு மட்டும் வீடு சேர...

எதுக்கோ படைச்சாரு
எதையோ வெதச்சாரு
கடவுளுக்கும் ரெண்டு சாதி..

நாங்கவொன்னு
அவுகவொன்னு..

பொணமா போன பின்ன
பொறுக்கும் எலும்புத் துண்டில்
பொறக்குமாய்யா புது சாதி..

மறக்காதிருக்கும்படி
மனசுல ஏத்திக்கங்க....

மேற்கால மறஞ்சாலும்
கெழக்கு எங்க வெத...!

-----------------------
 

இப்போதெல்லாம் அப்படியில்லை

நீயும் நானும்
ஆளுக்கொரு திசையில் பறக்கப் பழகியிருக்கிறோம்..

உனது நேரங்களை நான்
கொத்தித் தின்பதேயில்லை..
நீயும் எனக்கான கிளையிலேயே
பிறழ்ந்து கிடப்பதில்லை..

நமக்கான வானத்தை 
யாரோ தான் நெசவு செய்கிறார்கள்
இல்லையெனில்...

எந்த அலங்காரமுமில்லாத
நமது பேரன்புக்கு
இத்தனைப் பெரிய
சிறகிழப்பு தேவையாய் இருந்திருக்காது.


--------------------------

நானொரு எழுத்தாளனாகி விட்டேன்.
இனி கவிதைகள் ஒருபுறமும்
நானொரு புறமும் கிடக்கலாம்.
தலைக்கு மேல் அழுத்தும் கர்வத்தை
வியர்வை துடைத்தெடுத்துக் கொள்ளும்.
பிறகு...
பொருள் தேடுவேன்..
கவிதைக்கும் சேர்த்து.

எனது பேனா பிரபஞ்சத்தின் 
புண்களைக்  கீறி  பழுது பார்க்கும்.
ஆனால் ஆற்றுப்படுத்தாது
எனது மை.

எங்கும் எப்போதும்
தோன்றித் தொலையும்
சொற் சழக்குகளால் 
சிந்தனை கைதாகும்.

பேசும் போது எழுத வராது.
எழுதும் போது..
பேசவும் தெரியாது.

புகழ் மாலைகள் கழுத்தை நெரிக்கும்.
எழுத்து நிமிர நிமிர
பூ மாலையின் அளவு பெரிதாகும்.

சபைகளில் முதலிடம் தான்.
கால் மேல் காலிட்டு அமரத்
தடையில்லை.

பெயரை மாற்றுவேன்.
எனக்கே மறந்து விடும்.
யாரோ நினைவுபடுத்துவார்கள்
எழுத்தையும் தான்.

விருதுகள் சேமிக்க
வீடு கட்டியாக வேண்டும்.
வீட்டிற்கு வந்து கௌரவித்தல்
கூடுதல் பெருமையெனக்கு.

எது எழுத்து என
அகராதி சொல்வேன்.
அகராதி பிடித்தவர்கள்
எனதகராதியிலேயே இல்லை.

அடிபணியத் தோன்றாது.
எது நடந்தாலும்
நான்கெழுத்தில் நன்றியோ
மூன்றே வரிகளில்
அனுதாபக் குரலோ 
அறிவித்தால் போதும்.

புத்தகங்கள் என்னை எழுதும்.
புத்தகங்களை நான் எழுதிய பின்.

உலகமே சுற்றி
என்னை தோற்றுவிப்பேன்.
பிறகு அலுத்துப் போவேன்.
லேசாக சொற்கள் அந்நியமாகும்.
பேசாத சொற்கள் புண்ணியமாகும்.

நரைத்த எழுத்துக்கள்
பரண் மேல் ஏறும்.
எல்லோரும் மறக்கத் துவங்குவார்கள்.
எனது கழுத்தைப் பிடித்து
மாலையை அகற்றுவார்கள்.

பொருள் குறைந்த எழுத்தும்
வாழ்வுமாய்..
இருள் நோக்கி நகர்வேன்.


அப்போது...

எழுதுவேன்.

எழுதத் துவங்குவேன்.

எழுதிக் கோண்டேயிருப்பேன்.

அரிதாரங்கள் அம்பலமாகும்.
நிறமியகற்றி வெண்மை போர்த்துவேன்.
அலங்காரச் சொற்கள் அறவேயின்றி
அனுமானத் தேவை நிறைவு பெறும்.

உலகம் புரியும்.
உயிர் மரணத்தை வெல்லும்.

நானொரு எழுத்தாளனாய்
மரித்துப் போவேன்.

அப்போது எல்லோரும்  கூறுவார்கள்.

இப்போது தான்
அவனொரு ஆகச் சிறந்த எழுத்தாளனென்று.

-----------------------------


அது ஒரு பசி..
ஆற்றாமையின் அரூபம்
நிச்சலனப் பெருவெளி
தாகமுறையாத கடுங்காடு
தடித்த சுமையுணர்வு
கார்கால மழை பெறாத
பேறுகால வலி
இம்மையின் சாபத் துறவு
மறுமையின் வேரறுந்த பிணக்கு
ஆழ்நிலை கூப்பாடு
அருவருப்பின் எச்சம்
மானத்தின் துச்ச சன்மானம்
ஞானத்தின் பேருண்மை
உடலும் உடல் அல்லாத பொருளும்
உலகும் உலகல்லாத உயிரும்
ஆன்மத் துஞ்சலும்
மிகுதியான மரணமும்..
ஏற்றமுறா தாபமும்
வீழ்ச்சியுறா வெறுமையும்
மொழியறுந்த மௌனமும்
விழியிழந்த காட்சிப் பிழையும்...
யாருமல்லாத யாவரும்
யாதுமாகித் தொலைந்த யாக்கையும்

சிலநேரம் 
கடவுள் புசித்த மிருகம்

சிலசமயம்
மனிதம் புசித்த கடவுள்..

அதுவொரு தீராப் பசி.

அன்பெனப்படுவது யாதெனில்....

------------------------------


ஒரு பறவையின் சிறகு போர்த்த
தனதகத்தின் கதகதப்பை
பலியெனத் தரும் 
விருட்ச வேர்கள் 
அவளுடையது.

அவளின்  கனவுகளுக்கென்று
இரவு தன்னை புதுப்பிப்பதில்லை.
அவள் தன் இமைச் சிறகில்
இரவு பூட்டி..
கனவுகள் மெய்ப்பித்துக் கொள்கிறாள்.

அவளின் பிரயத்தனங்களில்
நூற்கோர்வைப் படையாலான
மந்தச் சரீரம் இருப்பதில்லை.
அது வெற்றுத் தோல்களை
தனதுடைக்கு நிறமிட்டு
கையகப்படுத்தும்..

ஆனால் அவள்..

வானம் படராத நிலத் துவாரங்களில்
நிழற் கச்சை நெய்து
அதனொளிப் படர்தலில்
பகல் நெய்பவள்.

அனிச்சப் பார்வை மலராத
வீதிகளின் தனித்த துயர்பொழுதில்
அவள் கனத்த சொற்களுக்கு
ஆகிருதி அன்பளித்து
வெய்யளாய்  உயர்ந்து நிற்பவள்.

சொல்லும் சொல் சார்ந்த நிலமும்
அவள் மெய்யழுந்த உழுத கவிதை.
அதன் மீதழும் பெயலின் துளிகள்
அன்பினாலானவை.

ஏனெனில்..

கண்ணம்மா

கவிதையினாலானவள்.

---------------------


உனது வீட்டின் மேற்கூரை..?
பகலில் வானமும் இரவில் வீதி விளக்கும்.

பசித்தால்..?
பறவையின் அலகில் பொருத்திய நெல்மணி.

ரசிக்க...?
எப்போதாவது மழை.

வெறுப்பது...?
எப்போதும் பசி .

பயமெனில்..
நாளைக்கும் பசிக்குமே.

கோபமெனில்...
கடவுள் வரட்டும். சொல்கிறேன்.

மிருகங்கள்.?
நேசிப்புக்குரியவை.

மனிதர்கள்..?
எனது உலகத்தில் இல்லை.

அடுத்த பிறவியிலாவது..?
இப்படியே தான்.ஆனால் கிழிந்த ஆடை மறைக்கப்பட்டு.

வயதுக்கு வந்துவிட்டாயா...?
நான்கைந்து அண்ணன்கள் சொன்னார்கள்.

உறவுகளென சொல்லிக் கொள்ள...?
இந்த திருவோடும்..அதில் பெற்றவர் இட்ட முதல் சில்லறையும்.

கனவுகள்..?
அதையும் உறங்க வைத்து விடுவேன்.

சேமிப்பு..?
நாளையாவது கிடைக்குமென்கிற பாதுகாப்பு.

பரிசு..?
அவரவர் விரும்பி அழைக்கும் எனது பெயர்கள்.

மரணம் பற்றி..?
பைக்குள் வைத்திருக்கிறேன்.

உடலென்பது..?
என்னிடம் இல்லாதது.

அன்பென்பது..?
உங்களிடம் இல்லாதது.

கண்ணீர்..?
தாகமெடுப்பதேயில்லை.

வாழ்க்கையென்பது..?
இந்நிமிடம் நீங்களும் நானும்.

நாளையைப் பற்றி..?
இந்தக் கேள்வியை மட்டும்
நான் கேட்கிறேனே...



-----------------------

நீயும் நானும் அப்போதெல்லாம்
மழைக்குருவியின் கீச்சொலி உரச
மழைக்கான ஆயத்தங்களோடு
உடன்படிக்கை செய்திருந்தோம்.

நிலத்தை கடலெனவும்
கடலினத்தை அடவியெனவும்
மனத்தோல் போர்த்தாத ஆன்மத்தை
நிழலெனவும் கொண்டு..

உயிர் வாழக் கற்றுக் கொண்டிருந்தோம்.

உலகம் சுருங்கி கைக்குட்டையான போது
விழிப் பிடியினின்று நழுவிய
பேரன்புத் துளிகளை
அத்தனைப் பிரியமாய்
பத்திரப்படுத்தியிருந்தோம்.

உனது சொல்லின் திரட்சியில்
நான் மட்காத எழுத்துக்களை
புலரச் செய்து கொண்டிருந்தேன்.

நுதலினின்று நழுவிய
உவலொன்றில் பெயரெழுதி
கடறு வரைந்தோம்.

அது..

கனத்த உருவமாய்
நறுந்துளிகளை மெய் போர்த்தியது.

இப்போது...

சிறகுலர்த்துகிறோம்.

வனம்..
கடல்..
நிலம்...
பறவை..

இவை தவிர்த்து
நீயும் நானும் மரணம் தழுவிய
யாவற்றிலும்

அச் சிறகுகள்
தன்னுயிர் வளர்த்துப் பறப்பதை
உனைப் போலவே நானும் காண்கிறேன்.

---------------------------------

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • a.muthuvijayan a.muthuvijayan Avatar
    a.muthuvijayan a.muthuvijayan - 4 years ago
    ஜெ ஜெ அனிட்டா சரியான தேர்வு அவருக்கும் ஜின்னா அஸ்மிக்கும் வாழ்த்துகள்......

  •  ஜே.ஜே.அனிட்டா அனிட்டா Avatar
    ஜே.ஜே.அனிட்டா அனிட்டா - 4 years ago
    பெருமகிழ்வடைகிறேன்.எனதெழுத்துக்களின் மீதான நம்பிக்கையோடு அதே உற்சாகத்தோடு தொடர படைப்பு குழுமம் அற்புத வாய்ப்பளித்திருக்கிறது. படைப்பில் கிடைக்கப் பெறும் அங்கீகாரம் என்பது விருது என்பது ஆகச்சிறந்த அடையாளமும் மேலும் முன்னோக்கி அடியெடுத்து வைப்பதற்கான உத்வேகத் தளமும் ஆகும். படைப்புக் குழுமத்தின் நிறுவனர் சகோ.ஜின்னா அஸ்மி அவர்களுக்கும் அவரோடு இணைந்து படைப்பாளிகளை ஊக்கப்படுத்தி திறமைகளை நெறிப்படுத்தும் குழுவினர் அனைவருக்கும் எனது மகிழ்வான நன்றியும்.

மா.மனோகரன்


0   456   0  
June 2023

வேதா நாயக்


0   1256   0  
April 2017

வினிதா மோகன்


0   161   0  
July 2024

நித்யா சபரி


0   843   0  
October 2021