கவிச்சுடர் விருது - வாருங்கள் வாழ்த்துவோம்
==================================
படைப்பாளி கோபி சேகுவேரா அவர்கள் இதுவரை இந்த குழுமத்தில் எழுதிய படைப்புகளை ஆய்வு செய்து அவரின் கவித் திறனை போற்றும் வகையில் அவருக்கு இந்த மாதத்துக்கான "கவிச்சுடர்" விருதை அளித்து படைப்பு குழுமம் பெருமை கொள்கிறது.
அவர் இன்னும் பல விருதுகளும் பாராட்டுகளும் இலக்கிய உலகத்தில் பெறவும் மேலும் பல படைப்புகளை இந்த சமூகத்திற்கு தந்து தமிழ் வளர்க்கவும் வாழ்த்துகிறது படைப்பு குழுமம்...
இப்படி விருது பெறுவோர் அனைவரும் நாம் ஒவ்வொரு ஆண்டும் சந்திக்கும் விழாவில் மேடையில் வைத்து சிறப்பிக்கப் படுவதுடன் ஒரு ஆளுமை மிக்க படைப்பாளியின் கையிலிருந்து விருதும் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...
நல்ல படைப்புகளை படைப்போம்...
நம் சமூகத்தை நாமே தமிழால் இணைப்போம்...
வாழ்த்துக்கள் கவிச்சுடர் கோபி சேகுவேரா
ஒரு மகிழ்ச்சியான செய்தி....
இனி இந்த கவிச்சுடர் விருது பெரும் படைப்பாளிகளை பற்றிய குறிப்பும் நாம் ஆய்வு செய்த முறையையும் இணைத்து இதனுடன் ஒரு கட்டுரை வடிவில் இணைக்கப்படும்.
இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாகவும் மற்ற படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கும். ஒரு படைப்பாளி தனக்கான ஒரு அங்கீகாரம் பெறுவதற்கு எவ்வளவு தூரம் எப்படி எல்லாம் கடந்து வருகிறார் என்பதை மற்றவர்களும் தெரிந்து கொள்தல் அவசியமாகிறது.
கவிச்சுடர் கோபி சேகுவேரா – ஒரு அறிமுகம்
***********************************
பெயர்: கோபி சேகுவேரா
வசிப்பிடம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே புனல்வாசல்
பணி: கட்டட பொறியாளர்
படித்தது: B.E ( civil),
படித்துக் கொண்டிருப்பது:
**********************
சம கால இலக்கியம், அரசியல்
இலக்கு/முயற்சி/கனவு:
**********************
பள்ளிப் பருவத்திலிருந்தே சாதி சாபங்களுக்கு பதில் தேடித் திரிந்த நான்... புத்தக வாசிப்பினால் பகுத்தறிந்து... கேள்வி கேட்க தொடங்கினேன். கடவுள் மறுப்பாளனாய் தொடங்கிய என் பதின்பருவம்... வாசிப்பை தன்வசப்படுத்தி அதன்மூலம் எழுத தொடங்கினேன். எழுத்தின் மூலம் யாரும் சொல்லப்படாத எழுதப்படாத பொதுபுத்தியின் மனசாட்சியை நொறுக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.
இயல்பு:
**********
எழுத்துக்களில்.... அரசியல்.... அநியாயம் கண்டு எதிர்க்கும் ரௌத்திரம்... எல்லாவற்றுக்கும் அடிப்படையான காதல்.
எழுதத் தொடங்கியது: பள்ளி நாட்களில் இருந்து
பெருமிதம்:
****************
'கார்முகி' எனும் என் முதல் கவிதை தொகுப்பு படைப்பு வெளியீடாக 2020 ல் வெளி வந்தது.
அவரது படைப்புகள்:
******************
# கார்முகி
கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் வெளி வந்த இதழ்கள் மற்றும் இணைய தளங்கள்:
கவிதைகள்:
***********
ஆனந்த விகடன்.... கணையாழி.... மற்றும் கொலுசு, காற்றுவெளி, படைப்பு கல்வெட்டு என இலக்கிய மின்னிதழ்கள்
கவிச்சுடர் கோபி சேகுவேரா அவர்களின் கவிதைகள் பற்றிய ஆய்வு:
****************************************************
கோபி சேகுவேரா இளம் கவிஞர்களில் கவனிக்கப்பட வேண்டியவர். ஒவ்வொரு கவிதையிலும் மாற்றத்தை முன்னெடுப்பவர்.
சமகால அரசியல் குளறுபடிகளை பகடி செய்யும் பக்குவம் வரிகளில் இருக்கிறது. பதபதைக்கும் தனிமனித ஒழுக்கத்தை அடிக்கோடிட்டுக் கொண்டே செல்வது கோபியின் தனித்துவம். கோபியின் எழுத்துக்களில்.... அரசியல் அதிகம். அநியாயம் கண்டு எதிர்க்கும் ரௌத்திரம் அதிகம். எல்லாவற்றுக்கும் அடிப்படையான காதலும் அதிகம். "என் தேசம் எங்க போகுது.....என் தேசம் எங்க போகுது"ங்கிற பரிதவிப்பு இவர் எழுத்துக்களில் ஏராளம். சாதிக்கு எதிரான ஒவ்வொரு கவிதையிலும் நிதர்சனத்தை கொட்டும் கோபி சேகுவேரா கடந்த 5 ஆண்டுகளாக எழுதி எழுதி தன் கருத்துக்களை பட்டை தீட்டிக் கொண்ட பிறகு தான்... தன் முதல் நூலான "கார்முகி" வெளி வந்திருக்கிறது.
சிறு வயது முதலே எதிர்ப்பு குணம் கொழுந்து விட்டெரிய... சாதிய வன்மத்துக்கு எதிராக எழுதுகோலை ஆயுதமாக்கி கொண்டார். உரிமைகளை மீட்டெடுக்க இவர் எடுத்துக் கொண்ட வழி கவிதை. இந்த சமூகத்தின் மீதான பார்வையை கவிதை எனும் பேராயுதம் கொண்டு அலசி ஆராய்வதோடு மட்டுமல்லாமல்... தனது எல்லா கேள்விகளுக்கும் கவிதைகள் மூலமாகவே பதிலும் தேடும் படைப்பூக்க மனநிலை எப்போதும் புது ரத்தத்தோடு இருப்பது தான் இவரின் பலம்.
தைரியத்தின் வழியே வெளிப்படையாக பேசும் உண்மையின் குரல் இவருடையது. அநீதிக்கு எதிராக எரியும் நெருப்பு எப்போதும் கனன்று கொண்டே இருக்கும் எண்ணங்களுக்கு சொந்தக்காரர். கடைசி மனிதனுக்கான கைத்தாங்கல் இவருடைய கவிதை. ஜனநாயகத்தின் வழியே நல் அரசியல் பேசும் தீர்க்கம் உடையவர். தெளிவான தொலை நோக்கு பார்வை கொண்டவர். தொடர் வாசிப்பாளர். நவீனத்துவத்தின் வழியே சொற்கள் கண்டெடுத்து புது மொழியை மீட்டுவதில் வல்லவர். எள்ளல் தொனி நக்கல் நையாண்டி என்று பகடியில் போட்டு தாக்கும் இவரின் கவிதைகள் உரிமை மறுப்புக்கு எதிரான முழக்கம்.
இன்னும் இன்னும் புது புது முயற்சிகளில் தொடர வேண்டும் படைப்பாளி கோபி சேகுவேரா அவர்களின் படைப்பின் பயணம்.
இவரது இந்த கவிதை பயணம் மேலும் தொடரவும்.. சிறப்பான படைப்புகளை தொடர்ந்து தமிழுக்கு அளிக்கவும்... படைப்பு குழுமம் அவரை மனதார வாழ்த்துகிறது. மேலும் "கவிச்சுடர்" என்னும் விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.
இத்தகைய ஆக்கப்பூர்வமான ஒரு படைப்பாளி பெறும் படைப்பின் சுடர் விருதுகள் இங்கு எழுதும் அனைவரின் கரங்களையும் தழுவ வேண்டும் என்பதே படைப்பு குழுமத்தின் அவா. அதற்கேற்ப படைப்பாளிகள் தங்கள் சிந்தனை வளத்தையும் உருவாக்கல் திறனையும் மேம்படுத்திக் கொண்டு சமூகத்திற்கான படைப்புகளைப் படைத்து மனிதம் செழிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டு அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறது படைப்பு குழுமம்.
படைப்பில் வெளியான அவருடைய சில கவிதைகள் - இதோ உங்களுக்காக.
நேற்று மாலை டீ கடைக்கு சென்றபோது
ஆர்கானிக் முட்டை போண்டாவை பற்றி கேட்டறிந்தேன்
ஒரு தத்துவத்தை ஃபேண்ட் பாக்கெட்டிலிருந்து
தவறவிட்ட இடைவேளையில்
நாட்டுச்சக்கரையின் கிருபையால்
மீண்டும் ஆர்கானிக் என்கிற வார்த்தை
என் வாழ்வின் பிளாஸ்டிக் பைகளோடு சிக்கிக்கொண்டிருந்தன
பேப்பர் கப்பின் உள்ளிருந்து எழுந்த வந்த குரலுக்கு
ஆர்கானிக் பாலுக்கென்று
பிரத்யேக வடிவம் ஏதும் தெரியவில்லை
அனேக இரவுகளில்
ஆர்கானிக் பற்றி நிறைய மனப்பாடம் செய்துகொண்டேன்
மெய்மறந்து மதுவருந்திய மாலைகளில்
ஆர்கானிக் பூண்டு மிக்சரை தேடி அலைந்திருக்கிறேன்
ஒரு தனித்த மழை நாளில்
கேரிபேக்கில் வாங்கி வந்த ஜிலேபியில்
ஏதேனும் ஆர்கானிக் இருக்கிறதா என்று
சுயபரிசோதனை செய்துகொண்டேன்
சௌகர்யமாக இருந்தவனுக்கு
உடலின் ஊழி எழுந்திட
தலைமேல் இன்று பொசுக்கென்று ஏறிக்கொண்டது
கொம்பூதிய ராஜகிரீடமாய்
ஆர்கானிக் காதல்
****
வியாழக்கிழமை தோறும்
வாட்ஸ்அப்-ல் வலம்வரும் சாய்பாபாவை
வாரம் முழுவதும் ஒளித்துவைக்க
உங்களுக்கு எப்படித்தான் மனம் வந்தது
பின்னணியில்
அனிருத்தை அலறவிட்டபடி
பட்டர் பிஸ்கட்டின் ரம்மியம் பூக்க
அவரிடம்
ஒரு தேனீர் அருந்தலாமா என்றேன்
மொபைலை கீழே வைத்துவிட்டு
பட்டர் பிஸ்கட்டை எடுத்துக்கொண்டவர்
ப்ளக் பாயிண்ட் எங்கு இருக்கிறது என்று கேட்டார்
அவர் இன்னும்
ஒரு வாரக் காலம் ஓய்ந்தமர வேண்டுமல்லவா?
***
எப்போதும் யூ-டியூபில்
இரவோடு இரவாக உருச்சிதைந்து போகும் எனக்கு
அடியோடு பெயர்த்துக் கொண்டுபோய்விடுகிற
கட்டாயமாக கால்களை பிடித்து மல்லாத்திவிடுகிற
கண்களை மூடிக்கொண்டு ஊஞ்சலாட்டிவிடுகிற
வாழ்வு இனித்துச் சொட்டுகிற
சில நிமிடங்கள் அடிக்கடி நிகழ்ந்துவிடுவதில்லை
சொல்லப்போனால்
தரதரவென இழுத்துவரப்பட்டு
தாளத்தோடு இசைந்துகொண்டிருக்கிறேன்
கமறும் குரலோடு
மணிக்கணக்கில் குடித்துக்கொண்டிருக்கிறேன்
கடைசி பாக்கெட்டின் கடைசி சிகரெட்டின்
ஆசுவாசத்திற்கிடையே
ரகசியம் சொல்வதைப்போல
கரகரத்த குரலில் பாடிக்கொண்டிருக்கிறேன்
'வெண்ணிலவின் ஒளி கனலாய் கொதிக்குதடி
எண்ணம் நிலை இல்லாமல் தவிக்குதடி'
எப்போது வேண்டுமானாலும் இசைஞானி
இப்படி சொக்கும்படி ஏதாவது செய்துகொண்டிருப்பார்
'இன்னும் என்னை வெகு.....தூ.......ர......ம் கூட்டிச் செல்லடி'
திகைத்து முழித்து பார்க்கிறேன்
அவர் கூட்டிச் செல்ல
யூ-டியூபில் சடைத்துவிட்டதொரு பெருவெளி
****
வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.
#சுடர்_விருது