logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் சியாமளா ராஜசேகர் ஒரு அறிமுகம்
*****************************************************************
பெயர்: சியாமளா ராஜசேகர்
ஊர்: சென்னை

புதுக்கவிதைகள், நவீனத்துவக் கவிதைகள், பின் நவீனத்துவ கவிதைகள் என்று நம் தமிழ் மொழி இலக்கியத்தின் புதுப்புது பரிமாணங்களில் படைப்புக்களை படைத்துக் கொண்டிருக்கும் நம் குழுமத்தின் படைப்பாளிகளின் நடுவே ஒரு மாபெரும் மரபுக் கவிஞராக உலா வரும் ஒரு படைப்பாளிதான் இந்த மாதம் நம் குழுமத்தால் கவிச்சுடர் விருது பெறுகிறார். படைப்பாளி சியாமளா ராஜசேகர் அவர்கள் பற்றி படைப்பு குழுமத்தை ஆதரித்து வரும் படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்ய அவசியமில்லை என்றாலும் நாள்தோறும் இந்த குடும்பத்தில் இணைந்து வந்துகொண்டிருக்கின்ற புதிய படைப்பாளிகளின் கவனத்துக்காக ஒரு அறிமுகக்கட்டுரை அவசியமாகிறது.

படைப்பாளி சியாமளா ராஜசேகர் அவர்கள் சென்னைவாழ் இல்லத்தரசி. கவிதைகள் மட்டுமல்லாது சிறுகதைகள் எழுதுவதிலும் கைதேர்ந்த படைப்பாளி. வானொலி , தொலைக்காட்சி, பத்திரிக்கைகள், சமுகவலைத்தளங்கள் என்று பற்பல ஊடகங்களிலிருந்தும் நிறைய பரிசுகள் பெற்றிருக்கும் இவரது மரபுக் கவிதைகள் மிகப் பிரபலமானவை.

நமது படைப்பு குழுமம் நடத்திய பரிசு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மரபு கவிதைகளில் விருப்பம் மிகுந்த இவர் பைந்தமிழ்ச்சோலையில் பாவலர் மா. வரதராசன் அவர்களிடம் பயிற்சி பெற்று பாவலர் பட்டத் தேர்வு எழுதி "பைந்தமிழ்ச் செம்மல் " என்ற பட்டமும் பெற்றவர்.  சமீபத்தில் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 90 -ம் பிறந்தநாளை முன்னிட்டு இணைய தளத்தில் நடந்த நிலைத்தகவல் போட்டியில் முதல் பரிசை இசைஞானி இளையராஜா அவர்களின் திருக்கரங்களால் பெற்றவர். இக்கவிதாயினியின் படைப்புக்கள் கல்கி, இலக்கியச்சோலை போன்ற தமிழ் இதழ்களில் மட்டுமல்ல மகளிர் இதழ்களான மங்கையர் மலர் , அவள் விகடன் , சிநேகிதி, பாவையர் மலர் , வாரமலர் , பிரியமான தோழி போன்ற இதழ்களிலும் தொடர்ந்து அச்சாகி வருகின்றன.
 
படைப்பாளி சியாமளா ராஜசேகர் அவர்கள் நம் படைப்புக் குழுமம் துவங்கிய நாளிலிருந்து பல்வேறு மரபு இலக்கணங்கள் பொருந்த படைத்து சமர்ப்பித்த அனைத்து கவிதைகளையும் இங்கு குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் அது மிக மிக நீண்ட கட்டுரையாக முடியும். எனவே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற முறையில் சில மரபுக் கவிதைகளை மட்டும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
இவர் படைத்த வெண்பாக்கள் அனைத்துமே குழுமத்தில் நண்பர்களின் வெகுவான பாராட்டுக்களை பெற்றவையாகும். இதில் நேரிசை வெண்பா நான்கு அடிகளுடன் ஈற்றடி முச்சீராய் , ஏனைய அடிகள் நாற்சீராய் ,அடிதோறும் பொழிப்பு மோனை , ஈரடிக்கோர் எதுகையோ , நான்கடிக்கோர் எதுகையோ கொண்டு , தனிச்சொல் முன்னடிகளின் எதுகை பெற்று , வெண்டளையான் அமைந்து , ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள் , மலர் , காசு , பிறப்பு என்னும் வாய்ப்பாட்டுல் ஒன்றினைக் கொண்டு முடியும் . இன்றைய வாழ்வியலை மரபுக் கவிதையிலும் கொணர்ந்து புகை பிடித்தல் என்கிற கொடிய பழக்கத்தை விடச்சொல்லும் ஒரு நேரிசை வெண்பாவை கீழே கொடுக்கிறோம் ;-

இருவிரலி டுக்கில் எழும்பிப் புகைந்தே
உருக்குலைத்(து) ஆளை ஒழிக்கும் - வருந்துயர்
எண்ணித் தவிர்த்திடு, என்றும் நலங்கெடுக்கும்
வெண்சுருட்டே வேண்டாம் விடு.

இதழகல் வெண்பா எனப்படும் உதடுகள் குவியாமலும் , ஒட்டாமலும் பாடும் வெண்பாவில் வரக்கூடா எழுத்துகள் ப , ம , வ ...வர்க்க எழுத்துகள் . உகர , ஊகார , ஒகர ,ஓகார , ஔகார எழுத்துகளும் வரக்கூடா . இத்தனை இலக்கணக் கட்டுக்குள் நம் கவிச்சுடர் சியாமளா ராஜசேகர் அவர்கள் படைத்த அழகான இதழகல் வெண்பா ஒன்றை காண்போம்

கண்ணேநின் கட்டழகைக் கண்டதிலே ஏங்கிநின்றேன்
எண்ணத்தில் தித்தித்தாய் ஏந்திழையே!- தண்நிலா
காய்கிறதே! தாரகையும் கண்ணடித்தே செல்கிறதே!
தேய்ந்தேனென் ஏக்கத்தைத் தீர்.

எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எனும் அரையடிக்கு நான்கு சீர்கள் , ஓரடிக்கு எட்டுசீர்கள் , முதல் மற்றும் ஐந்தாம் சீர் மோனையால் இணைந்து அடிதோறும் எதுகையைப் பெற்று , அரையடிக்கு காய் காய் மா தேமா என்ற சீர் வரையறையைக் கொண்டு நான்கடிகளைப் பெற்று வரும் . ஏ , ஆ ,ஆல் , ஓ , வாழி என்பனவற்றுள் ஒன்றைக் கொண்டு முடியும் மரபுமுறையில் இவரின் படைப்பு ஒன்று:-

கண்டதுமே கடலலைகள் கவரு முள்ளம்
***காற்றுவந்து வருடிவிட்டுக் காதல் சொல்லும் !
மண்குவித்து வீடுகட்டும் மழலைச் செல்வம்
***மழைவந்து கலைத்துவிட்டால் வருமோ தூக்கம் ?
வெண்ணிலவு வரும்நேரம் வெள்ளி பூக்கும்
***வெள்ளளையும் துள்ளிவந்தே எட்டிப் பார்க்கும் !
வெண்முகிலும் வானத்தில் விரைந்தே ஓடும்
***விளையாடத் துணைதேடும் விரட்டிச் சென்றே !

காதலன் காதலியை வர்ணித்துப் பாடும் ஒரு அழகான காவடிசிந்து. எளிமையான கவி மொழியில் அந்தக் காதலன் பாடும் போது வாசிப்பவர் தனை மறந்து தம் காதல் அனுபவங்களை அசைபோட துவங்கிவிடும் வல்லமை கொண்டுட அந்த காவடிச்சிந்து இதோ கீழே காண்க:-

தென்றலும் பூவுடன் கூடுதே - உனைத்
தேடிக்கண் கள்நிதம் வாடுதே - என்
தேவதை யுன்நிழ லாடுதே - உன்
சின்னஞ்சிறு கண்கொஞ்சிட
தென்னங்கிளி கொஞ்சும்மொழி
தேனூற என்மன மாடுதே - தக
தித்தோமெ னத்தாளம் போடுதே !


நாட்டுப்புற இலக்கியமாக தொன்றுதொட்டே உலவிவரும் கும்மிசிந்துப் பாட்டுக்கள் நம் தமிழில் பெருமையையும் தமிழர் வாழ்வின் பண்பாட்டையும் வெளிபடுத்துகின்றவை. படைப்பாளி சியாமளா ராஜசேகர் அவர்களின் கீழே காணும் கும்மிசிந்து மரபுக் கவிதையொன்றை வாசிக்கும்போது நமக்கு கும்மியடிக்கும் ஆவல் தோன்றினால் ஆச்சரியப்படுவதற்கில்லை;-

முத்துப் பல்லக்கினில் ஏறி வந்தாள் - மாரி
>>>>முன்னைவினை தீர்க்கத் தேடி வந்தாள்
தித்திக்கும் செந்தமிழ்ப் பாடலினைக் - கேட்டு
>>>>சிந்தைக் குளிர்ந்தவள் ஓடி வந்தாள் !!

பம்பை உடுக்கையின் சத்தத்திலே - தேவி
>>>>பாங்குடன் வீதியில் ஆடி வந்தாள்
கும்மிக் கொட்டிப் பெண்கள் பாடிச்செல்ல - அன்னை
>>>>கொஞ்சும் சிரிப்புடன் கூட வந்தாள் !!

இப்படி ஆயிரக்கணக்கான மரபு கவிதைகளை இந்த காலத்திலும் இலக்கணம் மாறாமல் எழுதும் வெகுசிலரில் மிக குறிப்பிட்டு கூறும்படி இவரது எழுத்து பிரமிக்க வைக்கிறது...
இவர் எழுதிய இன்னும் சில கவிதைகளை உங்கள் பார்வைக்காக படையல் வைக்கிறோம். மேலும் ஒவ்வொரு கவிதைக்கு கீழேயும் அதற்கான பொது இலக்கணத்தையும் கொடுத்துள்ளோம் காரணம் மரபு கவிதைகள் மேல் காதல் கொண்டவர்கள் இன்னும் பலவகையான நுணுக்கங்களையும் அதன் இலக்கணத்தையும் அறிந்து கொண்டு பயனுள்ள வகையில் எழுதி பழகலாமே...

இப்போது கவிச்சுடர் சியாமளா ராஜசேகர் அவர்கள் எழுதிய மேலும் பல மரபு மாணிக்கங்களை பார்ப்போம்...

1. நேரிசை ஆசிரியப்பா
 ``````````````````````````````````
விண்ணி லுலவும் மேகங் கண்டு
வண்ணப் பாவால் வனைந்திட நினைத்துப்
பண்ணிய முயற்சியில் பலமுறை தோற்க
எண்ணம் பலித்திட இறைவனை இறைஞ்சித்
திண்ணிய நெஞ்சுடன் திரும்பவும் முயலப்
பெண்ணென் எழுத்தில் பிழைக ளகன்று
வெண்முகில் மனத்தில் விரியக்
கண்குளிர் காட்சியாய்க் கவிதை பிறந்ததே!

பொது இலக்கணம்
``````````````````````````````
 அடிக்கு நான்கு சீர்களுடன், ஈற்றயலடி முச்சீராய் மாச்சீர் , விளச்சீர்களைப் பெற்றுவரும்.
இரண்டடிகளுக்கு ஓரெதுகையும், அடிதோறும் பொழிப்பு மோனையும் பெற்றுவரும் .மூன்றடி முதல் 
வரையறையின்றி வரும் . ஏ, ஓ , ஆ . ஆல் , ஆன் என்ற ஈற்றுச்சீருடன் முடியும் .( ஏகாரம் பெரும்பான்மை )


2. வெளி விருத்தம்
------------------------------
உறக்கம் தவிர்த்தாய் ஊணும் மறந்தாய் - பிள்ளைக்காக
சிறப்பாய் வளர்க்க தெய்வம் தொழுதாய் - பிள்ளைக்காக
அறப்பா லூட்டி அன்பை விதைத்தாய் - பிள்ளைக்காக
இறக்கும் வரையில் இமைபோல் வாழ்ந்தாய் - பிள்ளைக்காக !

பொது இலக்கணம்
``````````````````````````````
நான்கடிகள் , அடிக்கு நான்கு சீர்கள் . நான்கடிக்கும் ஓரெதுகை , அடிகளின் ஈற்றில் தனிச்சொல் ஒன்று
நான்கடிகளிலும் வரவேண்டும். ஒழுங்கமைந்த சீரமைப்புடன் வரவேண்டும் .( வெண்டளை கட்டாயமில்லை )


3. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ( விளம் மா விளம் மா விளம் காய் )
 `````````````````````````````````````````````````````````````````
சென்றதை யெண்ணிச் சிலிர்த்திடும் நெஞ்சம்
***தேன்மழைச் சாரலிலே !
தென்றலும் தழுவ தேகமும் குளிர்ந்து
***செவ்விதழ் துடித்திடுதே !
முன்பனிக் காலம் முகிலினம் கூட
***முகத்திரை போட்டிடுதே !
பொன்னிற வானம் புதுவடி வோடு
***பூத்திடும் பொலிவுடனே !

பொது இலக்கணம்
``````````````````````````````
ஆறு சீர்கள் பெற்று , முதல் சீரும் , ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து , அடிதோறும் எதுகையைப் பெற்று வரும் .
நான்கு சீர்களை அரையடியாகவும் , அடுத்த இரண்டு சீர்களை அரையடியாகவும் மடக்கி எழுதலாம் . தொடர்ச்சியாகவும்
எழுதலாம் . ஏகாரத்தில் ஈற்றுச்சீர் முடிதல் சிறப்பு .


4. .அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ( காய் காய் காய் காய் மா தேமா )
  ````````````````````````````````````````````````````````````````````
தன்தேவை தனைச்சுருக்கித் தன்பிள்ளை நலம்பேணும்
****தந்தை வுள்ளம் !
துன்பங்க ளண்டாமல் முப்போதும் இமைபோலத்
****துணையாய்க் காக்கும் !
அன்பாக அரவணைத்துப் பல்கலைகள் பயிற்றுவித்தே
****ஆன்றோ னாக்கும் !
பொன்னாட்டில் தந்தையரின் பாசத்திற் கீடுண்டோ
****புகல்வாய் நெஞ்சே !


பொது இலக்கணம்
`````````````````````````````
ஆறு சீர்கள் பெற்று , முதல் சீரும் , ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து , அடிதோறும் எதுகையைப் பெற்று வரும் .
நான்கு சீர்களை அரையடியாகவும் , அடுத்த இரண்டு சீர்களை அரையடியாகவும் மடக்கி எழுதலாம் . தொடர்ச்சியாகவும்
எழுதலாம் . ஓரடிக்கு காய் காய் காய் காய் மா தேமா என்ற சீர் வரைமுறையில் வரும் .ஏகாரத்தில் ஈற்றுச்சீர் முடிதல் சிறப்பு .
.ஆ , ஆல் , ஓ , வாழி இவற்றுள் ஒன்றைக் கொண்டும் முடியலாம் .


5. எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ( விளம் மா விளம் மா விளம் விளம் மா )
  ````````````````````````````````````````````````````````````````
காதலில் திளைக்கும் காளையர் உள்ளம்
***கன்னியின் பார்வையை விரும்பும் !
காதலைச் சொல்ல வார்த்தைக ளின்றிக்
***கண்களால் காவியம் பேசும் !
காதலே சுவாசக் காற்றெனக் கொண்டு
***காலமும் வாழ்ந்திடத் துடிக்கும் !
காதலின் நேசம் கலங்கரை விளக்காய்க்
***காட்டிடும் வழியினை நன்றே !!!

பொது இலக்கணம்
``````````````````````````````
விளம் மா விளம் மா விளம் விளம் மா என்ற ஏழு சீர்கள் பெற்று முதல் மற்றும் ஐந்தாம் சீர் மோனையால்
இணைந்து , அடிதோறும் எதுகையைப் பெற்று நான்கடிகளில் வரும் . ஏகாரத்தில் முடிதல் சிறப்பு .
நான்கு சீர்களை அரையடியாகவும், அடுத்த மூன்று சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதப்பெறும்.

6. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 ``````````````````````````````````````````````````````````````````
சிரம்மேலே கரங்கூப்பிச் சேவித்து நின்றேன்
***செவ்வேளே! வேலென்று சிரித்தபடி வந்தாய்
அரவணைப்பில் விழிகசிய அகங்குளிர்ந்து நின்றேன்
*** அலையுமுளம் அடங்கிடவே அருளாசி தந்தாய்
இரவுபகல் மறவாமல் இசைந்துருகிப் பாட
***இனியேனும் திருப்புகழை எந்நாவில் தாராய்
பரமசிவ மைந்தனுன்றன் பதமலரைப் பற்றப்
***பரமபத வாழ்வுதனைப் பரிவுடனே அருளே !

பொது இலக்கணம்
``````````````````````````````
அரையடிக்கு நான்கு சீர்கள் , ஓரடிக்கு எட்டுசீர்கள் , முதல் மற்றும் ஐந்தாம் சீர் மோனையால் இணைந்து
அடிதோறும் எதுகையைப் பெற்று , அரையடிக்கு காய் காய் காய் தேமா என்ற சீர் வரையறையைக் கொண்டு
நான்கடிகளைப் பெற்று வரும் . ஏ , ஆ ,ஆல் , ஓ , வாழி என்பனவற்றுள் ஒன்றைக் கொண்டு முடியும் .( ஈக்காரத்தில் முடிதல் சிறப்பு )

7. கட்டளை கலித்துறை
  ``````````````````````````````````
முயற்சி யுடனே முனைந்தால் எதையும் முடித்திடலாம்
அயரா உழைப்பே அரிய பலனை அளித்திடுமாம்
சுயமாய் உழைத்தால் துயரும் தொலைந்து சுமைகுறையும்
வியக்கும் படியாய் விடியல் மலர்ந்து விரிந்திடுமே !

பொது இலக்கணம்
`````````````````````````````````
நான்கடிகள், ஓரடிக்கு ஐந்து சீர்கள் . 1,3, 5 -ம் சீர்கள் மோனையால் இணைந்து, அடிதோறும் ஒரே எதுகையைப் பெற்று வரும் .ஐந்து சீர்களும் வெண்டளையால் இணையப் பெறும். ( அடியின் ஈற்றுச் சீருக்கும் , அடுத்த அடியின் முதற்சீருக்கும் வெண்டளைப் பார்க்க வேண்டியதில்லை .ஐந்தாம் சீர் விளங்காய்ச்சீர் பெறும் .
பாடல் நேரசையில் தொடங்கினால் ஒற்றெழுத்துகளை நீக்கி 16 எழுத்துக்களையும் , நிரையசையில் தொடங்கினால் 17 எழுத்துகளையும் பெறும் . ஈற்றுச்சீர் ஏகாரம் மட்டுமே பெற்று வருவது .கட்டளை கலித்துறை ஆகும் .

8. இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா
  `````````````````````````````````````````````````````````````
பட்டுடலை மூடிப் பருவமங்கை போலொளிரும்
வட்டநிலா வானில் வளையவரும் போதினிலே
தொட்டுவிடத் தான்துடிக்கும் சுற்றிவரும் மேகங்கள்
கட்டுக் குலைந்தவையும் காணாமற் போனதெங்கே
சுட்டனவோ விண்மீன்கள் சுண்டி யிழுத்தனவோ ?
சொட்டுந் துளிகள் சுகமாய் நனைத்தனவோ ?
வெட்டிய மின்னலால் வெட்கத்தில் ஓடினவோ ?
முட்டிமோதிப் பேரிடியாய் முத்தமிட்டுக் கொண்டனவே !

பொது இலக்கணம்
````````````````````````````````
எட்டடிகள் கொண்டதாய்,( இரண்டு தரவுகள்) ஓரடிக்கு நான்கு சீர்கள் பெற்று
முதல் மற்றும் மூன்றாம் சீர் மோனையால் இணைந்து, எட்டடிகளும் ஒரே எதுகையைப் பெற்றும்,
அடிதோறும் வெண்டளை (கட்டாயம்) பயின்றும் , ஈற்றுச்சீர் ஏகாரம் பெற்றும், பெறாமலும்,
வருவது "இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா" !


9 . இன்னிசை வெண்பா !
   ````````````````````````````````
கண்ணன் குழலோசை காற்றில் மிதந்துவரப்
பண்ணினைக் கேட்டுப் பரவசத்தால் நெக்குருகி
வண்ணமலர் சூடிய வஞ்சியவள் வாய்திறந்து
கண்ணா வெனவழைப்பாள் காண் .

பொது இலக்கணம்
`````````````````````````````
நான்கு அடிகளுடன் ஈற்றடி முச்சீராய் , ஏனைய அடிகள் நாற்சீராய் ,அடிதோறும் பொழிப்பு மோனை , ஈரடிக்கோர் எதுகையோ , நான்கடிக்கோர் எதுகையோ கொண்டு , தனிச்சொல் இன்றி , வெண்டளையான் அமைந்து , ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள் , மலர் , காசு , பிறப்பு என்னும் வாய்ப்பாட்டுள் ஒன்றினைக் கொண்டு முடியும் .


10. ஒற்றிலா வெண்பா
   -------------------------------
மயிலினி லேறி மருத மலையி
லொயிலா யருளு மொளியே! - கயிலாய
வாசனா மீசனுமை மாதவ பாலகனே
நேசமுட னாளவா நீ.

பொது இலக்கணம்
```````````````````````````````
ஒற்று எழுத்துகளே இல்லாமல் அதாவது, புணர்ச்சியில் ஒற்றை மறைத்து, வல்லினம் மிகுமிடங்களில் ஒற்று வருவதைக் கருத்தில் கொண்டு முழுவதுமாய் ஒற்றில்லாமல், வெண்பா விதிகளுக்குட்பட்டு எழுத வேண்டும். இதுவே
‪ஒற்றிலாவெண்பா‬ ஆகும்.


11. சிலேடை வெண்பா
------------------------------------
எண்ண இனித்திடும் யாவும் மறந்திடும்
வண்ணம் பலவாய் வளையவரும் ! -கண்பட்டால்
வேதனைதான், என்றும் விரும்பும் பணத்துக்குக்
காதலும் ஒப்பாகும் காண் .


12. வெண்கலிப்பா !
   ````````````````````````
வேர்ப்பலா அருகிருக்க வேப்பமரத் தின்கனியை
யார்விரும்பிச் சுவைத்திடுவர் ? எவருமிலர் என்பதுண்மை!
இன்சொற்கள் அகத்திருக்க இன்னாச்சொல் பேசுவதால்
என்னபயன் சிந்திப்பீர் ஏற்று .

பொது இலக்கணம்
````````````````````````````````
நான்கு அடிகள் முதல் பல அடிகள் கொண்டது. நான்கு சீர்கள் , முதல் மற்றும் மூன்றாம் சீர்கள் மோனையால் இணைந்து
இரண்டு அடிகளுக்கு ஒரு எதுகையைப் பெற்று , ஈற்றடி முச்சீராய் நாள் , மலர் , காசு , பிறப்பு இவற்றில் ஒன்றைக் கொண்டு வரும் . கலித்தளையானும் , கலித்தளையுடன் வெண்டளை விரவியும் வரும் .

13. காப்பியக் கலித்துறை
  ``````````````````````````````````
அல்லும் பகலும் அமுதாயினிக் கின்ற தேவே
கல்லும் கசிய கனிவாயுனைப் பாடு வேனே
தில்லை சிவனுன் திருத்தாளினைப் பற்றி நின்றேன்
செல்லும் வழிக்குத் தெளிவாயெனைச் சுட்டு வாயே ! .

பொது இலக்கணம்
``````````````````````````````
ஓரடிக்கு ஐந்து சீர்கள் . முதல் மற்றும் மூன்றாம் சீர் மோனையால் இணைந்து ஓரடிக்கு
தேமா புளிமா புளிமாங்கனி தேம தேமா என்ற சீர்வரையறையைப் பெற்றும் , அடிதோறும் ஒரே எதுகையைப் பெற்றும் வரும் .
ஈற்றுச்சீர் ஏகாரம் இருப்பின் நன்று .

14. கட்டளைக் கலிப்பா
------------------------------------
கன்னிப் பெண்மனம் கன்னலோ நாவலோ
***கண்டு கொண்டதும் காதலைப் பூட்டிடு !
சின்ன வாயினில் செவ்விதழ் பூத்திட
***செல்ல சண்டையைச் செவ்வியே போட்டிடு !
பின்னிப் போட்டதும் பின்னலில் வெண்ணிறப்
***பிச்சிப் பூவினைப் பெட்புடன் சூட்டிடு !
மின்னல் கீற்றென வெட்டிடும் பார்வையில்
***வீழ்ந்த உள்ளமும் மெல்லவே பூக்குமே !!

பொது இலக்கணம்
``````````````````````````````
எண்சீர்கள் கொண்டது.நான்கு அடிகள் கொண்டது. நான்கு சீர்களை அரையடியாகவும் , அடுத்த நான்கு சீர்களை
அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதலாம். முதல் மற்றும் ஐந்தாம் சீர் மோனையால் இணைந்து நான்கடிகளுக்கும்
ஒரே எதுகை பெற்றும் வரும் . அறையடிக்கு நேரசைyil தொடங்க 11 எழுத்துகளும் , நிரையசையில் தொடங்க 12 எழுத்துகளும் ( ஒற்று நீங்கலாக ) வரும் . ஈற்றுச்சீர் ஏகாரம் பெறும்.


15. வஞ்சி விருத்தம்
-------------------------------
காடு கரையை அழித்துவிட்டு
வீடு கட்ட விழையாமல்
பாடு பட்டுப் பயிரிட்டால்
கேடு நீங்கிப் பிழைத்திடலாம் !!

பொது இலக்கணம்
`````````````````````````````
அளவொத்த மூன்று சீர்களுடன் , நான்கு அடிகள் பெற்று நான்கு அடிகளும் ஒரே எதுகை பெற்று வருவது
வஞ்சி விருத்தம். முதற்சீர் தேமா , இரண்டாம் சீர் தேமா அல்லது புளிமா , மூன்றாம் சீர் காய்ச்சீர் ஒன்றுமாக
அமைதல் வேண்டும்,

16 .வஞ்சித் தாழிசை
.  `````````````````````````
விரைவுட னலைகளும்
கரைதொட வருகையில்
நுரைத்திடு மெழிலுடன்
இரைந்திடுந் தரங்கமே !

உதித்திடும் பொழுதினில்
கதிர்க்குளித் தெழும்பிடப்
புதிரென விளங்கிடும்
அதிசயம் தரங்கமே !

நிலவத னொளிதனில்
சலதரம் மிளிர்ந்திடப்
புலவரும் புகழ்ந்திட
இலங்கிடும் தரங்கமே !


பொது இலக்கணம்
-------------------------------
இருசீர்கள் கொண்டதாய், நான்கு அடிகள் கொண்டு, நான்டிகளும் ஒரே எதுகையைப் பெற்றும்,
ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வருவது,(கட்டாயம்) வஞ்சித் தாழிசை ஆகும்.



17. ஒயிற்கும்மி !
  ````````````````````
சின்னச்சின் னப்பதம் மெல்லவைத் துக்கண்ணன்
சிங்கார மாய்நடை போட்டுவந் தான்
சிரமீதினில் மயில்பீலியும் திருமேனியில் மணியாரமும்
செவ்வாயில் வெண்ணையும் உண்டுவந் தான்!

புல்லாங்கு ழல்கையில் வைத்திருந் தான்மாயப்
பூங்காற்றை ஊதியே கட்டிப்போட் டான்
புகழாரமும் மலர்மாலையும் தினம்சூடிட வருவானுளம்
பூரிப்பில் கொஞ்சிம கிழ்ந்திடு வான் !

பின்னல்ச டைதனைப் பற்றியி ழுத்திட்டுப்
பெண்டிர்ம னந்தனைக் கொய்துவிட் டான்
பிருந்தாவனந் தனில்கோபியர் இவன்லீலையில் அலைபாய்ந்திடப்
பெற்றது பேறென எண்ணவைத் தான் !

கள்ளச்சி ரிப்புடன் செய்யுங்கு றும்புகள்
கண்கள்ர சித்திட ஆனந்த மே
கனிவாய்நிதம் புகழ்பாடிட மதுராபுரி களித்தாடிடக்
கற்கண்டாய் நெஞ்சமும் தித்திக்கு மே !

18. இலாவணி
```````````````````````````
ஆகாய ஓடையிலே ஆனந்தமாய் நீந்துகின்ற
   அற்புதக்கார் மேகங்களே வாங்க வாங்க !
சாகாமல் காத்திடவே சாரல்மழை கொட்டச்செய்துத்
   தாகத்தைத் தீர்த்துவிட்டுப் போங்க போங்க !!

ஏரிகுளம் வற்றிப்போச்சு ஏருழவன் வாழ்வும்போச்சு
   இந்நிலையை மாற்றிடவே வாராய் வாராய் !
மாரிமனம் வச்சிடம்மா மண்ணுயிர்கள் காத்திடம்மா
   மண்குளிர இக்கணமே தாராய் தாராய் !!

19. வளையற் சிந்து
  ``````````````````````````````
கண்ணன்முகம் கண்டவுடன்
களிப்பினிலே பூப்பாள் - அவள்
காதலுடன் பார்ப்பாள் - பல
கதைகளையும் கேட்பாள் - பின்
கவினிதழில் சிரிப்புதிர்த்துக்
கன்னத்தினைச் சாய்ப்பாள் !

வெண்ணிலவு வதனத்திலே
விற்புருவம் ஆடும் - கீழ்
விழியிரண்டும் தேடும் - வாய்
மெல்லிசையும் பாடும் - அவள்
வெண்டைவிரல் அபிநயத்தில்
விளங்குமெழில் கூடும்!

வண்ணவண்ண கனவுவந்து
மனம்மயங்கச் செய்யும் - அடை
மழைநினைவில் பெய்யும் - பெரு
மகிழ்விலுளம் கொய்யும் - அவன்
வடிவழகில் தனைமறந்து
வட்டமிடும் மெய்யும்!

பண்ணிசைத்தே அவன்பாடிட
பளிங்குமுகம் பூக்கும் - அதில்
பனித்துளியாய் வேர்க்கும் - அவள்
பட்டுடலும் ஆர்க்கும் - நிதம்
பகலிரவும் உணர்வலைகள்
பரவசத்தில் ஈர்க்கும்!

இப்படி பல்லாயிரக்கணக்கான மரபு கவிதைகளை எழுதி இந்த காலத்தில் இவருக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு நவீன இலக்கிய உலகிலும் தனக்கென ஒரு மரபு இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு உலகத்தரம் வாய்ந்த எழுத்தாளர் இவர் என்பது இவரின் எழுத்துக்களே சொல்லும்...

இந்த மரபு மரகதங்கள் மின்னும் எழுத்துக்களின் முன் பிரம்மித்து நிற்கும் படைப்புக் குழுமம் சியாமளா ராஜசேகர் அவர்களை வாழ்த்தி, வருங்கால இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்று அவரது எழுத்துக்கள் உலகெங்கும் பவனி வரவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறது !!

வாழ்த்துக்கள் கவிச்சுடர் சியாமளா ராஜசேகர்.

இதுநாள்வரை இந்த கவிச்சுடர் விருது புதுக்கவிதைகளை எழுதிய கவிஞர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது. முதல்முறையாக மரபிற்கு கொடுக்கப்படுவதில் பெருமை அடைகிறது படைப்பு குழுமம். இந்த விருது மரபின் மேல் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு உந்துதலையும் உற்சாகத்தையும் வரவைக்கும் என்று நம்புகிறோம். மேலும் நாம் மரபிற்கு எதிரானவர்கள் அல்ல அதையும் ஆதரிக்கும் வளர்க்கும் எண்ணம் கொண்டவர்களே என்பதும் இப்போது எல்லோருக்கும் புரியும். மரபையும் முறைப்படி எழுதினால் அதை ஆதரிக்க படைப்பு முன்னிற்கும் என்பது இக்கட்டுரையை சாட்சி..

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

மு. சுகுமாரன்


0   1490   0  
August 2019

கலிபூ


0   407   0  
May 2023

சத்திய பானு


0   422   1  
August 2023

குமரன்


0   1108   0  
April 2018