கவிச்சுடர் கோ.ஸ்ரீதரன் ஒரு அறிமுகம்
********************************************************
பெயர் : கோ.ஸ்ரீதரன்
பிறப்பிடம்: சென்னை
வசிப்பிடம் : சென்னை
வேலை: சுய தொழில் - கட்டுமான நிறுவனம்.
இதுவரை வாங்கிய விருதுகள் & பரிசுகள்: கடந்த ஜனவரி மாதம் 2017 ஆண்டு இவர் படைப்பில் மாதாந்திர சிறந்த படைப்பாளியாக தேர்வு.
வண்ணதாசன்
புத்தகமொன்றில்
பரகாய பிரவேசம்
செய்திருந்தேன்
தொடர்ந்தழைத்த
அழைப்புமணியால்
வேறு வழியின்றி
என்னை விடுத்து
வாசல் நோக்கி சென்றது
என் ஆறடி கூடு ......
படைப்பாளி கோ.ஸ்ரீதரன் எழுதியிருக்கும் ஒரு குறுங்கவிதை மேலே நீங்கள் வாசித்தது. வண்ணதாசனின் கோடிக்கணக்கான வாசகர்களில் ஒருவராக அறிமுகப் படுத்திகொள்ளும் இந்த வாழ்வியல் கவிஞரை படைப்பு குழுமத்தை ஆதரித்து வரும் படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்ய அவசியமில்லை. நாவல் மரத்தில் ஏறிநிற்கும் ஒரு சிறுவன் மரத்தின் கிளைகளைக் குலுக்கி நாவல் கனிகளை கீழே உதிர்த்துகின்ற லாவகத்தில் இவரின் கவிதைகள் படைப்புக் குழுமத்தில் பதிவிடப் படுகின்றன. நாவல் கனிகளை ஆவலுடன் பொறுக்க ஓடிவரும் சிறுவர்களைப் போல வாசகர்கள் இவரது கவிதை பதிந்த உடனேயே வந்து தங்களின் கருத்தையோ விருப்பக் குறியீடுகளையோ இடுவது படைப்பில் கண்கூடு. என்றாலும் நாள்தோறும் இந்த குடும்பத்தில் இணைந்து வந்துகொண்டிருக்கின்ற புதிய படைப்பாளிகளின் கவனத்துக்காக படைப்புக் குழுமத்தால் கவிச்சுடர் விருது அளிக்கப்படும் படைப்பாளி திரு கோ.ஸ்ரீதரனைப் பற்றிய ஒரு அறிமுகக்கட்டுரை அவசியமாகிறது.
திரு கோ.ஸ்ரீதரன் அவர்கள் சென்னைவாழ் ஒரு நடுத்தர குடும்பத்து தலைவர். ஒரு கட்டுமானத்துறை பொறியாளர். எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரியும் 42 வயதான இந்த அம்பத்தூர் கவிஞர் பிறந்து வளர்ந்ததே சென்னைப் பெருநகரம்தான். சிறுவயது முதலே வாசிப்பில் ஆர்வமுள்ள இவரது இல்லத்தில் ஒரு சிறு நூலகத்தின் அளவுக்கு புத்தகங்களை சேர்த்து வைத்திருக்கிறார். முகநூல் வழி எழுத்துப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள இவரது சில கவிதைகள் பிரபல தமிழ் இதழ்களில் வந்துள்ளன. நமது படைப்பு குழுமம் மாதந்தோறும் அறிவிக்கும் நல்ல படைப்பாளிகளின் வரிசையில் இவரும் ஒருவர். படைப்பின் மின்னிதழ்களில் இவரது கவிதைகள் இடம் பெறுவதை நம் படைப்பாளி நண்பர்கள் அறிவார்கள். படைப்பாளி கோ.ஸ்ரீதரன் படைத்து சமர்ப்பித்த அனைத்து கவிதைகளையும் இங்கு குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் அது மிக மிக நீண்ட கட்டுரையாக முடியும். எனவே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற முறையில் சில கவிதைகளை மட்டும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
சென்னை மாநகரத்தில் பிறந்து வளர்ந்த படைப்பாளி கோ.ஸ்ரீதரன் படைக்கும் கவிதைகளை வாசிக்கும்போது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் சுற்றி வந்த ஒரு முதுபெரும் அனுபவக் கவிஞரின் எழுத்துக்களோ என ஆச்சரியப் பட்டுப் போகிறோம். காலங்கள் கடந்த ஒரு தமிழ் கிராமத்தில் இற்றுக் கொண்டிருக்கும் மண்ணின் மணத்தை கீழே காணும் ஒரு கவிதையில் அனுபவியுங்கள்-
அரிசி, பருப்பு உலர்த்தியிருந்த
முன் முற்றத்தில்;
மேயவரும் மயில்களை,
தொங்கும் காதின் தங்க பாம்படத்தை
கழட்டி வீசி விரட்டியபடி
கால்நீட்டி கிடக்கிறாள்
செட்டிநாட்டு கிழட்டு ஆச்சி;
மானுடம் வந்து புழங்க ஏங்கும்,
வௌவால்கள் வாசம்பண்ணும்
அந்த நாட்டு கோட்டையின்
முன் முற்றத்து ஒற்றை குண்டு பல்பின்
சன்னமான வெளிச்சத்தில்தான்
நானும் , பெரியாச்சியும், சில மயில்களும்
பத்தொன்பதாம் நூற்றாண்டில்
கொஞ்ச நேரம் கூடி வாழ்ந்திருந்தோம்....
கோ.ஸ்ரீதரன் அவர்களது எழுத்துக்கள் மிக எளிதான வார்த்தைகளால் புனையப் பட்டவை. ஆனால் மிக ஆழ்ந்த கருத்துச் செறிவு கொண்ட கனமான கவிதைகளை அவர் வடிக்கும் அழகே தனி. மகாத்மா காந்தி கனவு கண்ட கிராமத்து இந்தியாவின் இப்போதைய நிலைமையை அவர் எடுத்துரைக்கும் கவிதைப் பாருங்கள்:-
மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில்
மந்தை,மந்தையாய் ஜனங்களினூடே,
இந்தியதாயவளை இனங்கண்டுகொண்டேன்;
இளம்பிள்ளைவாதம் வந்த கால்களுடன்,
ஊனமுற்றோரின் கைப்பெடல் மிதிவண்டியில்,
முட்டும் மூத்திரத்தை அடக்கிகொண்டு,
எதிரிலுள்ள கழிவறைக்குள்
வண்டியுடன் தன்னையும் தள்ளிவிட,
கண்டுகொள்ளமால் கடந்துபோகும்
தன் பிள்ளைகள் ஒவ்வொன்றிடமும்
கெஞ்சியபடி கிடக்கிறாள்...
பெண்மையை என்றும் மதிக்கும்மென்ற நம் பண்பாட்டு வாதத்தை இன்றைய நம் பெண்மக்கள் நாள்தோறும் அனுபவிக்கும் அவல நிமிடங்கள் தவிடு பொடியாக்கும் இந்தக்கவிதை நம் சமுதாயத்துக்கு ஒரு சவுக்கடி:-
முதலில் மஞ்சுளா
அப்புறம் அகல்யா
கடைசியாய் கரோலின்
எவளுமே துணைக்கு வர தயங்க;
மைதானத்தில் கபடியாடும்,
தாழ்வாரத்தில் திரியும் அத்தனை
சக மாணவன்களையும்
சத்தமின்றி சபித்தபடி;
அந்த நூற்று சொச்சம்
ஜோடி ஆண் கண்களையும் கடந்து;
கறுப்பு நெகிழி பையொன்றுடன்
மாணவிகள் கழிவறைக்குள் தன்னை
அவசரமாய் அடைத்து கொண்டாள்;
பெருமூச்சுடன் வெளிவந்த பின்
அந்த இருநூற்று சொச்ச கண்கள்
அவள் பின்புறத்தை மட்டுமே மேய்வதாய்
தானே கருதி கொண்டாலும்,
பைக்குள் மறைத்திருந்த
பிரத்யேக மானமதை தன்னில்
மறைத்து விட்டதில்,
அல்ப ஆறுதல் அவளுக்கு ......
வாழ்வியல் கவிதைகள் வடிப்பதில் வல்லவர் படைப்பாளி கோ.ஸ்ரீதரன். முதுமையின் யதார்த்தத்தை இதைவிட எப்படி கூறிவிட முடியும் ?
முப்பது சொச்சம் முதியவர்கள்
ஒண்டியிருக்கும் அந்த அனாதைகள்
இல்லத்தில்;
நெஞ்சு சளியடைத்து
நேற்று இறந்திருந்தார்
முதியவர் முனுசாமி;
பிணத்தை சுற்றி
மௌனமாய்
அமர்ந்திருந்த
மிச்ச முதியவர்கள்
சலனமற்ற
அப்பிணத்தின் முகத்தில்
தன் முகத்தை
பொருத்தி பார்த்து கொள்வது
தன்னிச்சை செயலாயிருந்தது ....
சகமனிதனின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனிதன் மட்டுமே மனிதத்தையும் நேசிப்பான். வாழ்க்கை எனும் பயணத்தில் நம்மோடு பயணிக்கும் சக பயணியை கண்டும் காணாமலிருப்பது இந்த நடைமுறை வாழ்வியலின் சிக்கலோ என எண்ணத் தோன்றுகிறது. ஒரு சிறு பயண அனுபவம் சிறு கவிதையாய் உங்கள் முன்:-
நீண்டதொரு பேருந்து பயணத்தில்
தன் காச நோய் மனைவியின் லயமான
இருமலையும்;
ஓடிபோய் வாழாவெட்டியாகிவிட்ட
தன் மூத்த மகள் மஞ்சுவையும்;
இளம்பிள்ளை வாதம் வந்தும்
சோடா கம்பனி ஒன்றில்
சொற்பமாய் சம்பாதிக்கும்
தன் இளைய மகனையும்;
சில எம்.ஜி.ஆர் பாடல்களையும்;
கூடவே கொஞ்சம் மல்லாக்கொட்டை
ஓடுகளையும்,
என் வசம் கொட்டிவிட்டு
விழுப்புரத்திலயே இறங்கி
சென்றுவிட்டார் அந்த சக பயணி;
இத்தனைக்கும் தூங்குவதாய் பாசாங்கு
வேறு பண்ணியிருந்தேன்;
திருச்சி வந்தும் இறக்க முடியலயே...
மானுட உறவுகளை மையமாக வைத்து பல்வேறு கவிஞர்களால் பல்வேறு விதமாக வடிக்கப் படும் கவிதைகள் உலவும் இவ்வேளையில் படைப்பாளி கோ.ஸ்ரீதரன் பாணிக் கவிதைகளின் வீச்சில் மனித உறவுகளின் வலிமை பலவீனம் கோபதாபங்கள் என்று பல்வேறு சாரங்களை காணலாம். முதலில் ஒரு சிறு குழந்தையில் தெய்வத்தைக் காணும் ஒரு சிறு கவிதை;-
தூக்கத்தில் கடவுள் வந்து
விளையாடியதாய்
வெள்ளந்தி அறிக்கை
விடுகிறது குழந்தை;
மறுப்பேதும் சொல்லாமல்
சிரித்தபடி அமைதியாய்
ஆமோதிக்கிறோம் நாம்;
பராகிரமங்கள் கண்டபின்னும்
கோமாளியாகிறார் கடவுள்
கடவுளிடம்....
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் இல்லத்தரசி பற்றிய இந்த கவிதை நம் அனைவரின் இல்லத்தின் சமையல்கட்டுக்குள் எட்டிப்பார்க்கலாம்:--
மாத கடைசி மளிகை பாக்கி;
மாமியாரின் ஆஞ்சியோ;
மகனின் ஐஐடி கோச்சிங்;
மகளின் அதிக உதிரம்;
வேளை கெட்ட வேளையில்
புருஷனின் சல்லாபம்;
மெனோபாஸ் அறிகுறி;
சமீபத்தில் மூழ்கிபோன மூக்குத்தி;
அத்தனை வெறுப்பு சலிப்புகளை
அடித்து , அறைந்து
துவைத்து
நைலான் கொடியில் காயபோட்ட
இந்த துணிகளின் மீதே
காட்டியிருந்தாள்;
குடும்ப கவலைகளை
கர்ம சிரத்தையாய்
கடித்து பிடித்திருக்கின்றன
துணி கிளிப்கள் ....
அடுத்து குடும்பத் தலைவன் என்றழைக்கப் படும் தந்தைக் கவிதைகள் இரண்டு. ஒன்று பணி ஓய்வு எனும் முதல் கட்ட வாழ்வின் நுழைவாயிலில் நிற்கும் ஒரு பிதா. இரண்டாவது கவிதையில் தனது அப்பாவிடம் கற்றுக் கொண்ட பாடங்களை கற்றுக் கொண்டு முதிர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கும் அப்பா:
டாம்பீகமும் ,கம்பீரமும்
அதிகப்படி ஆண்மையும்
கொண்ட தகப்பன்;
அழ வைப்பதை
வாடிக்கையாய்
வைத்திருந்தான்;
வழக்கம் போல மூக்கை
சிந்தி சுவற்றில் வீசி
கடந்து போயினர்
எம் வீட்டு பெண்டுகள்;
தினம் நூறு கையெழுத்தை
பதறாமல் போட்ட கை;
பணி முடிந்த இறுதி நாளில்,
தன் கடைசி தஸ்தாவேஜூகளை
ஒப்படைக்கும் சம்பிரதாய
கையெழுத்தை அந்த தடி
கோடு போட்ட நோட்டில்
நடுங்கியபடி , கலக்கமாய்
கிறுக்கியே வரைந்திருந்தன;
தன் பெயரில் வரும் பிரதாண
கொம்பை போட மறந்திருந்தான்;
ஆம் ,
அவன் கொம்புதான்
இன்றோடு உடைந்ததே ......
(2)
கணக்குகளே பார்த்ததில்லை
ஆனால் ஊதுபத்தியை கூட
விலைபார்த்தே எடுக்கிறேன்
யமகாவில் நூற்று சொச்சம்
ஓட்டி மகிழ்ந்தவன்தான்;
மகனின் பல்சர் பின்னிருக்கையில்
பதட்டுத்துடனே பயணிக்கிறேன்;
இரவாட்டம் பார்ப்பது என் வாடிக்கைதான்
தாமதமாய் வரும் மகனை வாயிற்படியிலே
நிற்க வைக்கிறேன்;
கசங்கிபோன ,காலர் வெளுத்த பனியனில்
என் மானமொன்றும் போவதில்லை;
மூன்று நாள் நரைத்த முட்தாடியில்
எந்த அசூயையுமில்லை ;
ஜக்கிவாசுதேவ் சுகமாய் பேசுகிறார்;
சிறிய துரதிர்ஷடமும் குலதெய்வத்துக்கு
கொண்டு செல்கிறது ;
தூக்கி கொஞ்சிய மகளிடம் பாசமிருந்தும்
ஏனோ இடைவெளி ;
இளசுகள் பேச்சில் செறிவு புலப்படவில்லை;
சமீபத்திய ஹிட்பாடல் காதில் நெருப்பாய்;
இளையராஜாவைத் தவிர எவனையும் விலக்கிவிடுகிறேன்;
பாசமலர் பார்த்து கொஞ்சமாய் கசிகிறேன்;
என்ன சொல்ல ,
நான் என் அப்பாவாகி கொண்டிருக்கிறேன்...
காதல் திருமணங்கள் அனைத்தும் மங்களமாக முடிவதில்லை. அதிலும் ஜாதி எனும் கொடும் தீயில் யாகம் வளர்த்த திருமணங்களின் கதி இப்படித்தான் நம் நாட்டில் இருக்குமோ? ஒரு எளிய கவிதையில் கோபத்தின் கனல் :-
திருமணங்கள் சுவர்க்கத்தில்
நிச்சயிக்கபடுகின்றன என்பது
சர்வ நிச்சயமாய் தெளிவானபின்;
எனக்கான சுவர்க்கத்தை
என் ஊர் காவல் ஆணையர்
அலுவலகத்தில் நானே
படைத்திருந்தேன்;
காக்கி உடுப்பில் பூ தூவி
வாழ்த்தினர் தேவர்கள்;
வெள்ளை டாடா சுமோவில்
வீச்சரிவாளோடு
எதிர்பார்த்து கிடக்கின்றனர்
அசுரர்கள் .....
விவசாய நிலங்கள் எல்லாம் நகரமயமாகும் அவசர வேளைலில் எங்கே தேடுவோம் நம் இயற்கை நமக்களித்த செல்வங்களை ? வாசியுங்கள் அந்த அவலங்களை இரு கவிதைகள் வடிவத்தில் :-
(1)
நானும் அந்த வெள்ளை கொக்கும்
இதே ஏரியில்தான்
மீன்பிடித்து தின்றிருந்தோம்;
வரிசையையாய் பச்சைநிற கொடிகள்
நடப்பட்டிருந்த கிழக்கு பக்கம் நான் நிற்க,
கடைகோடி சிவப்பு கொடிகளாடும்
மேற்கு முனையில்
அது வானில் வட்டமடித்து கொண்டிருக்கிறது;
இடையிலிலுள்ள எல்லைகல் நடபட்ட
செவ்வக நிலங்களில்தான்
மீன்கள் இருந்தது ....
(2)
தானிருந்த காட்டை
துதிக்கை வழி
துழாவி தேடியபடியிருக்கிறது ;
துதிக்கை துளை
அடைத்து கொண்டிருக்கும்
இரண்டு நாணய பில்லைகள்
அகன்ற கானகமதை
அப்பட்டமாய்
மறைத்து போட்டது .....
படைப்பாளி கோ.ஸ்ரீதரன் அவர்களது வாழ்வியல் கவிதைகளை வாசிக்கும்போதே நாம் அந்த வரிகளுக்கிடையே உலாவரத் துவங்கி விடுவோம். ஒவ்வொரு சொற்களும் நம்மோடு நம் சொந்தங்களைப் போல நம் முன்னே உட்கார்ந்து உறவாடத் துவங்கி விடுகின்றன. ஊடலும் கூடலும் இவரின் கவிதைகள் வடிவில் உங்கள் இல்லங்களின் உணவு மேசைகளின் மேல் பரிமாறத் தயாராக இருக்கலாம். உங்கள் சொந்தங்களையும் நட்புக்களையும் சந்திக்கும்போது அவர்கள் நெற்றியிலும் கோ.ஸ்ரீதரனின் கவிதை வரிகள் தெரிந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை . எனவே உங்கள் வாசிப்புக்காக சில கவிதைகளை கீழே கொடுக்கிறோம்
பிரில்கிரீம்
வாசமாய் அப்பா;
விரலி மஞ்சள்
மணமாய் அம்மா;
சித்தனாதன் விபூதியாய்
பாட்டன்;
குட்டிகூரா பவுடராய்
பாட்டி;
கோல்டு பிளேக்
வீச்சமாய் மாமா;
வேப்பெண்ணையாய்
பால்ய தோழி;
ஜான்சன் சோப்
வாசனையாய் மகள்;
மெலிதான பழவாடை
திரவியமாய் மனைவி ;
கெரோசின் நாற்றமாய்
மெக்கானிக் மணி;
துவைக்காத காலுறையாய்
சக பணியாளனொருவன்;
நாசிக்குள் வாசங்களாய்
வசித்து கொண்டிருக்கின்றன
நான் ஊடாடும்
உறவுகள் சில;
சுய வாசம்
சூட்சுமமாய்
சுணங்கியே உள்ளது .....
*********************************************
அப்போதெல்லாம்
இப்போது போல்
என் எண்ணங்களில்
சொற்கள் சங்கீதமாயிருந்ததில்லை;
அப்படியே இருந்தாலும்
அழகு நேர்த்தியுடன்
அதை கவிதையாய் எழுத
திறனுமிருந்ததில்லை;
நண்பன் ஒருவனுக்கு
இரங்கற்பா
படைத்திருக்கிறேன் இன்று,
ஆம் அவ்வளவு
அழகாய் வந்திருக்கிறது;
அவனிருந்திருந்தால்
கண்டிப்பாய்
அவன் பாணியில் பாராட்டியிருப்பான்;
நிச்சயமாய் என் கோப்பையில்
உயர் ரக சீமைமதுவை
நிரப்பியவண்ணமிருந்திருப்பான்
அவனுக்கிருந்த ஆயிரம் கடனில்
மற்றுமொன்று ஏற்றி.....
***************************************************************
பத்துதலை பூதமொன்று திண்ணையில்
காத்திருப்பதாய் கதைவிட்டு
ஒரு வட்டில் சோற்றை ஊட்டியிருந்தாள் பாட்டி;
பாதியிடித்த கொட்டை பாக்கு,
காற்றில் பக்கம் பறக்கும் திறந்த கல்கி ,
கிணற்றின் மேல் ஈரம்பிழியாமல் கொசுவிவைத்த ஒன்பது கெஜ சீலை
மற்றும் பல்செட் கழற்ற மறந்து
ரேழி படிகட்டில்
தலைக்கடியில் உள்ளங்கை வைத்து
அவள் அசந்து தூங்கிபோனபின்னர்;
தெருவில் சோன்பப்படி காரன் பத்துமுறை
மணியடித்தும் என்னை
படிதாண்ட விடலயே
அந்த பத்து தலை பூதம்...
*******************************************************
எல்லா கல்யாண வைபவங்களிலும்
அதுவரை சீந்துவாரில்லாமலும்
அன்றைக்கு மட்டும்
புத்தாடைகளுடனும்
எழுந்து நடக்க முடியாத
முதியவரொருவர்
முன் வரிசையில்
அமர்ந்திருக்கிறார்....
சங்கத் தமிழ் மணம் கமழும் இலக்கிய வீதிகளில் மாறி வரும் காலங்களின் வண்ண அணிந்து உலாவரும் படைப்பாளிகளின் நடுவே அதோ ஒய்யாரமாக நடைபோடும் கோ.ஸ்ரீதரன் என்கிற அந்த இளம் படைப்பாளியின் ஆற்றலை இனம்கண்டு கொண்டு அவருக்கு கவிச்சுடர் என்கிற விருதினை அளித்து பெருமைப் படுத்துவதில் உவகையடைகிறது படைப்புக் குழுமம். அவரது எழுத்துப் பணிகள் மென்மேலும் சிறக்கவும், அந்தக் கவிபொறியாளனின் கவிதை கட்டுமானப் பணிகள் சிகரம் தொட்டு சிறப்பு காணவும் படைப்புக் குழுமம் வாழ்த்துகிறது.
வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.
#கவிச்சுடர்_விருது