கவிச்சுடர் வளவன் கரிகாலன் ஒரு அறிமுகம்
*************************************************************
பாளையங்கோட்டையைச் சேர்ந்த கவிஞரின் இயற்பெயர். அ.திருமாவளவன். சுய தொழில் முனைவராக இருக்கும் கவிஞர் கவிதைகளின் மீது கொண்ட ஈர்ப்பால் நமது படைப்பு குழுமத்தில் இணைந்து பன்முக கவிதைகளைத் தனது படைப்பாற்றலால் வெளிப்படுத்தி வருகிறார்.
மலையாள இதழின் மறு அங்கமாக வந்த மங்களம் தமிழ் வார இதழிலும் இவரது கவிதையும் சிறுகதையும் வெளிவந்துள்ளது. மற்றும் ஜனகணமன கையெழுத்துப் பிரதி மற்றும் நெல்லையிலிருந்து வெளிவரும் பரணி மற்றும் காணி நிலம் சிற்றிதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது.
2015 லிருந்து முக நூலில் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் 2016ல் கவிஞர் ஈரோடு தமிழன்பன் விருதும், நமது படைப்பு குழுமத்தின் மாதாந்திர சிறந்த படைப்பாளி விருதும் பெற்றவர் .
கவிச்சுடர் வளவன் கரிகாலன் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
**********************************************************************************************
இவரது கவிதைகள் எல்லா மக்களாலும் எளிதாக புரிந்து கொள்ளும்படி இருப்பது தனிச்சிறப்பு. காட்சியமைப்பை கவிதைக்குள் கொண்டுவந்து ஒரு படைப்பாக மாற்றும் வித்தையை அழகாக கையாளத் தெரிந்திருக்கிறார். இவருக்கு நமது படைப்பு குழுமம் கவிச்சுடர் விருது அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எவ்வளவு எளிமையாக எழுதும் வல்லமையை பெற்றுள்ள படைப்பாளி இவர் என்பது நீங்கள் வாசிக்கும் இவரது படைப்புகளிலிருந்தே தெரிந்து கொள்வீர்கள்.
தான் சொல்லவரும் கருத்துகளை படிப்பவரின் மனதுக்குள் சென்று ஆழ பதிய வைக்கும் வித்தையை இவரது படைப்புகள் மூலம் படிக்க தருவது இவரது தனிச் சிறப்பு.
காதலின் மௌனம் கட்டுப்பாடற்ற வெளியில் பயணிக்கும் போதும் அந்த மௌனத்தையே நேசிப்பதும் காதலாகிப் போகிறது. அது இட்டுச் செல்லும் பாதை சுவர்க்கமென்றாலும் அன்றி சோக நாடகமென்றாலும் சம்மதம் என்கிறார் கவிஞர்.
சுவர்க்க வசந்தத்தின்
வாசலுக்கோ
சோக நாடகத்தின்
துவக்கத்திற்கோ
இந்த
நெடும் பயணம்
எங்கு
இட்டுச் சென்றாலும்
சம்மதமே
எனக்கு!
இடைவிடாத
இந்த மௌனகீதம்
எனக்கெனவே நீ
இசைப்பதல்லவா!
----
கவிஞர், உலகத்தைத் தனது பார்வையில் அடர்ந்த வெளியாகவே பார்க்கிறார். எங்கும் வெற்றிடங்கள் கிடையாது என்று உறுதியாகச் சொல்கிறார். பல நிரவல்களால் நிறைந்திருப்பதாக உறுதியாகச் சொல்கிறார்..
இத்தொன்றும்
வெற்றுவெளி அல்ல!
இந்த வெளியெங்கும்
அடர்ந்து கிடக்கின்றன
வெறித்தனங்கள்
விசும்பல்கள்
நிராகரித்தல்கள்
நம்பிக்கைத் துரோகங்கள்
உரிமைக் கோஷங்கள்!
தொடர்ந்துவரும்
தோட்டாச் சத்தங்கள்!
அலறல்கள்!
அவற்றை நியாயப்படுத்தும்
நீசர்களின் உறுமல்கள்!
எனுமிவற்றின்
நெரிசலில்
சிக்கித் தவித்தும்
நீந்திப் பிழைத்தும்தான்
கடந்துகொண்டிருக்கின்றன
நமக்கான நேரங்கள்!
-----
வாழ்க்கையில் வலுவிழந்து போன நம்பிக்கைகளை அருகிப்போன சிட்டுக்குருவிகளோடு ஒப்பிடும் கவிஞரின் இந்தக்கவிதை சிறப்பானதுதான்
அழகாய்
ஒலித்திருந்து
அருகிக் குறைந்து
அப்புறம்
நம் காதுகளுக்கு
அந்நியமாகவே
ஆகிப்போன
சிட்டுக்குருவிகளின்
கெச்சட்டம் போலவே
ஏகமாய் இருந்து
எப்படியோ குறைந்து
பின்
இல்லாமலே
போய்விட்டன
வாழ்க்கையின் மீதிருந்த
வலுவான
நம்பிக்கைகள்!
-----
பேரானந்தத்தின் பெரு நிலையைப் பற்றி பேசும் கவிஞர் சன்னல் வழி தான் கண்ட காட்சியை மிக அழகாக தன் கவிதையில் புனைகிறார். ஆடிக்காற்றில் அலக்கழியும் ஒரு முருங்கை மரம். அதன் உச்சியை எட்டும் செம்போத்து பறவை அங்கு நிகழும் பெரும் போராட்டம் காட்சி வடிவமாகிறது. சன்னலைவிட்டு அவரது மனமும் அவற்றோடு சேர்ந்து கொள்கிறது.. முருங்கை மரம் உறுதியற்றது என்பதற்காகவே கவிதையில் இணைத்திருப்பார் போலும். நிலையற்ற வாழ்வில் செப்போத்தின் உறுதி ஒவ்வொரு மனதிற்கும் வேண்டுமென்பதே காட்சி படிமத்தின் வெற்றி. இது சிறந்த கவிதை என்றே சொல்லலாம்...
விடைபெற்றுப்
போகிறது
இரவு!
மெல்ல
விடியல் தொடங்கி
வெளிச்சம்
பரவுகிறது!
ஜன்னல் வழிப்
புகுந்த காற்றின்
குளிர்ச்சியைச்
சுகித்துக்கொண்டே
வெளியில் தெரிந்த
காட்சியொன்றில்
லயித்துப் போகிறது
மனது!
அடித்து வீசும்
ஆடிக்காற்றில்
அந்த முருங்கை மரத்தின்
அத்தனை
அவயங்களும்
அலைக்களிகின்றன!
அத்தனையும்
சமாளித்து
அந்த மரத்தின்
உச்சிக்கிளையை நோக்கித்
தத்தித் தத்தி
நகர்ந்தும்
கூர் நகம் கொண்ட
விரல்களால்
ஆடும் கிளைதனை
இறுகப் பற்றியும்
கருமையும்
செம்மையுமான
தன்
சிறகுகளைக்
கலைத்துப்போடும்
காற்றைச்
சந்தோஷமாய்
அனுபவித்தும்
முன்னேறியபடி
ஒரு
செம்போத்துப் பறவை!
எப்போது சென்றேனோ
அங்கே
நானும்
என்னை
இங்கே விட்டுவிட்டு!
உச்சிக்கிளையின்
முடிவை அடைந்தும்
அடர்ந்த இலைகளையும்
வெண்ணிறப் பூக்களையும்
தாங்கி இன்னும் சற்று
உயர நீண்டும்
உரத்து வீசும் காற்றைத்
தாங்காமல்
அனைத்துத்
திசைகளின்புறமும்
ஆடியபடியும் இருந்த
மெல்லிய கொம்பை நோக்கி
அதன்
பூக்களுக்கும்
தளிரிலைகளுக்கும்கூட
சேதமெதுவும்
ஏற்பட்டுவிடாதவாறு
தன் கூர்நக
விரல்களைப்
பதித்தும்
பதியாமலும்
சென்றடைந்து
இதற்குமேல்
உயரமில்லை
எனும்
பெருமிதம் தோன்றத்
தன் விழிகளை
உருட்டியபடி இப்படியும்
அப்படியுமாய்ப்
பார்த்த பறவையோடு
நானும்!
பதிந்தும்
பதியாமலுமிருக்கிற
பாதங்கள்!
சலசலத்துச்
சங்கீதமிசைக்கும்
இலைகள்!
உயர்ந்தும்
பக்கங்களிலுமாய்த்
தாலாட்டும்
கிளைகள்!
சிறகுகளைக்
கோதிவிட்டு
நலம் விசாரித்து நகரும்
காற்று!
என
அனைத்தோடும்
விரவிக் கலந்து
பேரானந்தப்
பெருநிலையில்
பறவையும்
நானும்!
திடீரென…
சிறகடிப்புச்
சப்தமெழவும்
அந்த
ஆனந்த லயிப்பினின்றும்
மிதந்து
மேலே வருமென்னைத்
திரும்பியும் பாராது
பறந்தெங்கோ போனது
பறவை!
பறத்தலறியாப்
பாமரன் நான்
உருண்டு
விழுகிறேன்
உச்சிமரக்
கிளை நழுவி
தூரப் பறந்த
பறவையைத்
துரத்திப் போகிற
மனதுடன்
-----
இரயில் நிலையத்தை போதிமடமாக உணரும் கவிஞரின் பார்வை சற்று வித்தியாசமானதுதான். பலதரப்பட்ட நிகழ்வுகளைக் கண்டும் எந்தச் சலனத்தையும் தன் மீது ஏற்றிக்கொள்ளாமல் ஞானியைப் போல் இருப்பதாகச் சொல்கிறார்.
வரவேற்க வந்தோரின்
வாழ்த்துகளில்
குளித்தும்
வழியனுப்ப வந்தோரின்
கண்ணீரில்
தகித்தும்
எந்த மாற்றமும்
இல்லாமலும்
எதையும்
காட்டிக்கொள்ளாமலும்
வரவேற்பதையும்
வழியனுப்புவதையும்
காலகாலமாய்ச்
செய்துவிட்டு
ஒரு ஞாநியைப்போல
உட்கார்ந்திருக்கின்றன
இரயில் நிலையங்கள்
----
பட்டுப்போன விவசாயத்தைக் குருவிகளின் பச்சாதாபத்தில் வெளிப் படுத்தும் ஒரு கவிதை
கதிர் முற்றிக்
கனிந்திருக்கும்
வானம் பார்த்த
வயல்களில்
பெருங்கூட்டமாய்த்
தாழப் பறந்தமர்ந்து
தம் சிற்றலகுகளால்
தானியமணிகளைக்
கொத்திக்
கொள்ளையிட்டுப்போகும்
படைகுருவிகளெல்லாம்
என்னதான் செய்யுமோ
இப்போது!
------
வண்ணத்துப் பூச்சிகளின் இரசனை நம் பார்வையில்தான் இருக்கிறது என்பதை இந்த குறும் கவிதையில் சிறப்பாக சொல்கிறார்
பறத்தல்
வண்ணத்துப்பூச்சியின்
இயல்பாக
இருக்கலாம்!
ஆனால்
பார்த்தலில்
இருக்கிறது
அதன்
அற்புதங்கள்!
------
படைப்பாளி வளவன் கரிகாலன் அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.
வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.
#கவிச்சுடர்_விருது