logo

கவிச்சுடர் விருது


தமிழுக்கான சிறப்பே வளமான வார்த்தைகள்தான். நாம் அப்படிபட்ட வார்த்தைகளுடன்தான் உறவாடுகிறோமா என்றால் தயக்கங்களுடன் சில ஆச்சரியக் குறிகள் நம்மை விழுங்கிவிடும்! கவிதையியல் என்பதே ஓர் அழகியல்தான்... அதில் செழிப்பான வார்த்தைகளையும் இணைத்து உறவாடும் போது கவிதையே ஓர் அழகான இடத்திற்கு நகர்ந்துவிடுகிறது...

இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருது பெறும் கவிதாயினி காயத்ரி ராஜசேகர் அவர்கள் இந்த வளமான வார்த்தைகளுடன் உறவாடுவதால் அவரது கவிதைகளும் செழுமையாகின்றன!

காயத்ரி ராஜசேகர் - ஒரு பார்வை:

"காயத்ரி ராஜசேகர் பிறந்தது தஞ்சை. தற்போது வசிப்பது சென்னையில். நவீன தமிழ்க் கவிஞர், குடும்பத் தலைவி. முதுநிலை நுண்ணுயிரியல் படித்துவிட்டு நுண்தமிழ்க் காதலால் கவிதைகளை எழுதத் தொடங்கியவர்...

2017 ல் இருந்தே படைப்பிலும் முகநூலிலும் எழுதிவருகிறார். 

நவம்பர் 2017 ல் படைப்பில் சிறந்த படைப்பாளியாக தேர்வு.

பிப்ரவரி 2018 இல் இரண்டு குறும்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர்.

செப்டம்பர் 2019 இல் படைப்பு பதிப்பகத்தின் வாயிலாக முதல் கவிதைத் தொகுப்பாக "யாவுமே உன் சாயல்" என்ற நூல் வெளியிட்டவர்.

படைப்பு குழுமத்தில் 'வேர்த்திரள்' தலைப்பில் அவர் எழுதியக் கவிதை கவிஞர் கல்யாண்ஜி அவர்களால் சிறப்பு பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. படைப்பு குழுமத்தின் இலக்கிய இதழான 'தகவு' இதழிலும் மூன்று முறை இவரது கவிதைகள் பிரசுரமாகி இருக்கிறது. மேலும், படைப்பு 'கல்வெட்டு' மின்னிதழில் தொடர்ந்து  கவிதைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் 'இனிய உதயம்' இதழிலும்,  கணையாழி இதழிலும் கவிதை வெளியாகின.

செவ்வியல் கவிதைகளோடு வழங்கு மொழியிலும் பல கவிதைகள் எழுதி வருகிறார்.... 'காயத்ரி கவிதைகள்' வலைப்பூவில் 1.4 K வாசகர்களுடனும் மேலும் சில கவிதைகள் காணொலி வடிவத்திலும் தொகுத்து வெளியாகியுள்ளது "

கவிச்சுடர் காயத்ரி ராஜசேகர் அவர்களுக்கு படைப்பு குழுமத்தின் நல் வாழ்த்துகள்!

இனி கவிச்சுடர் காயத்ரி ராஜசேகர் அவர்களின் படைப்புகள் பற்றிய பார்வை:
----------------------------------------------------

காதல் என்பது நேசபிரபஞ்சத்தின் வார்த்தையழகு! ஒன்பது துளைகளில் போகாத உயிர் எண் துளிகளில் கசிகிறதாம். அப்போது மிஞ்சியுள்ள அந்த ஒரு துளை என்பது இங்கு இதழாகிறது!  இதழோடு இதழ் ஊத , உயிரின் கசிவு எண்துளைகளில் வழிகிறதாம்! காணாத இறைவனையே கல்லில் இருப்பதாக நம்பும் மனசு அவனையே இறையாக தரிசிக்கிறது அவன் கணிவு சொற்களில்! ஆனாலும் அவன் சில நேரம் உதிர்க்கும் கடும் சொற்கள் இறைவனுக்கு நிகராகிவிட்ட சாத்தானின் சிங்கப் பற்கள் என்று சொல்லாடுகிறார்!
இதோ கவிதை:

*

நவ துளைகளில் சிக்கியும்
வெளியேரா உயிர்
எண் துளைகளில் கசியும் உன்னிதழூத

கல்லிலுறைவதாய் நம்பும் கண்காணா இறை
உன் வாஞ்சைச் சொல்லிலுறையும்

இருப்பின் கேள்வியிலரற்றும்
இறைநிகர் சாத்தான்
புறக்கணிப்பில் நீளுமுன் சிங்கப்பற்களில்

வரவேடந்தரித்த சாபம் நீ.

-----------------

காதலின் நேசம் என்பது விரட்ட விரட்ட வெளியேறாமல் திரும்பி வந்து அண்ணாந்து அப்பாவியாய் பார்க்கும்  நாயைப் போல் மதிகெட்டு திரிகிறதாம்!  

*

விரட்ட விரட்ட
வெட்கமற்றுத் திரும்பிவந்து
எல்லை தாண்டாது
அண்ணாந்து அப்பாவியாய்க் கண்ணுறும்
மதிகெட்டதிந்த
நேசம்.

-------------

அவன் காம போதையில் பிதற்றும் வார்த்தைகளும் பணிவும் ஈசனாய் வந்தவனிடம் இத்தனை இன்சொல் கேட்கவே தவம் கிடக்கிறேன் என்கிறவள் அவனுடன் இணைகிறாள்.. அவன் முரட்டுத்தனம் வலியை ஏற்படுத்தினாலும் அவளின் ரௌத்திரம் தன்னை நொந்து கொள்ள மட்டுமே செய்கிறது.. அவன் அவளிடம் ஈசனாகவே...

*

கண்டுகொண்டுவிட்டாள் கொற்றவை
கூந்தல் வண்டல் ஊடாடிய அருவியென்கிறான்
கண்களை அருகருகே ஈர்க் கருந்துளையென்கிறான்
முறுவலை முகையவிழும் பிச்சியென்றான்
சொடுக்கெடுக்கையில் நுனிவிரல்களை
மரமல்லியென்கிறான்
தன் சொல்லனைத்தும்
செவிமடுக்கிறான்
துடுக்குப் பேச்சை
மடக்கிக் களிக்கிறான்

ஈசனுருவில்
இத்தனை இன்சொல் கேட்கவென
யுகமாய் ஏங்கிக் கிடந்தவள்
தெரிந்தே தொடர்கிறாள்
வரையறை நகர்த்தியபடி
ஆண்திமிர் மேவ வளை நொறுங்க
கைப்பற்றியிழுக்கும் விசை
ஈசனை நினைவூட்ட
தன்னை நொந்தபடி
ரௌத்திரமாகிறாள்.

------------------------------
"நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு / எல்லோர்க்கும் பெய்யும் மழை" என்ற மூதுரையே இங்கு கவிதையாகிறது! வசதியானவர்கள் ஏழைகளை அண்டவே விடுவதில்லை.. நடுத்தர வர்கமோ ஒண்ட இடம் கொடுத்தாலும் அவர்களின் பசியை அறியாது... குடிசைகள் மட்டுமே ஒண்ட இடமும் உள்ள உணவும் கொடுக்குமாம்! இவர்கள் பொருட்டு பெய்யும் மழை எல்லோருக்கும் ஆகிவிடுகிறது...

*

ஈவிரக்கமின்றி
வெளி கேட்டைப் பூட்டிக்கொள்ளும்
எலைட் ரகக்காரர்கள்
பசித்திருத்தலின் ப்ரஞ்ஞையின்றி
ஒண்ட இடந்தந்த்தற்கேற்ப
தர்மம் தலையை மட்டும்
காத்தால் போதும்
தலைக்கவசம் போலவெனும் நினைப்பில் நடுத்தர வர்க்கங்கள்
சுற்றியொழுகும் குடையொத்த
குடிசையில் அண்டவும் கொடுத்து
பழையசோற்றை ஒரு கை அள்ளி
ஓரம் வைக்கும்
திக்கற்ற நல்லோர் பொருட்டு
யாவர்க்கும் பெய்யும் ஈனமழை.

________________

சொற்கள் எப்போதெல்லாம் தொலைந்து போகிறது பாருங்கள் கவிஞரின் சீரியப் பார்வையில்...

*

சொல்லமுடியாமல்
மொழி தேடியலையும்

அதே பரிதவிப்பு
பச்சிளஞ் சிசுவிற்கும்
தேர்ந்த கவிஞனுக்கும்

பால்வற்றிப்போன எரிச்சலினும்
வலி மேலோங்கிய வன்கலவி
சொற்கள் தொலைத்தது

பகிரங்க நிராகரிப்பினும்
சொற்தீர்ந்த வெற்றுரையாடல்
பாழும் மண்டபத்தின் எதிரொலி

நேசம் வறண்டபின்னான உடனுறைதலில்
பொன்குடமுடைத்த மருமகள்

மென்னியிறுக்கும் சொற்களும்
கண்களுறிந்துகொள்ளத் திணறும் நீர்மையும்
கொட்டித்தீர்க்க மடியேந்தும்
சூன்யக் கருந்துளை.

--------------------------

இதுவும்  இச்சையின் வெம்மை பற்றியதுதான்! அவன் விரல்கள் துழாவும் முன் நிகழ்த்தும் கிளறல்கள்!


வெம்மை கிளர்த்தும் தூறல்
தாகங்கூட்டும் வெந்நீர்
சிகை பிய்க்கும் பீடிகை
நாசி தீண்டி மொட்டவிழ்க்கும் வாசம்
ஆடியசைந்து அழைத்தபின்
சிலையாகும் மரம்
புன்னகைத்து பின் முகந்திருப்பும் உறவு
நெருங்கிய பின்
தொடுதிரை துழாவுமுன் விரல்கள்.

--------------------------
கொரானாவின் அச்சம் உறவை தள்ளி நின்று அழைக்கிறது! இழவு வீட்டின் மெல்லிய புன்னகையை அவன் வருகையில் ஒப்பிடுவது சிறந்த உணர்வு!

*

சூரியன் உதிப்பதும் மறைவதுமான மாயை
நீயின்றி நகருமென் பொழுதுகள்

நேர்ச்சை ஆடுகளின்
பலிக்கெனும் உத்தரவுகள்
நீ இப்போது வரவேண்டாமெனும்
என் கொரோனா அச்சங்கள்

அமர்த்தலான அதட்டலுக்கு
அடங்கும் குழந்தையின்
கணநேர அழுகை
என் சிற்றுறக்கங்கள்

நீண்டு நெடும் சாலையோடும் கானல்
உன் வரவிற்கான நிமித்தங்கள்

தொடுவானத்தின் தூரங்கள் மட்டுமே
நமக்கிடையில்

இழவு வீட்டில் சந்திக்கும் நமக்கானவர்க்கான
மெல்லிழைப் புன்னகை
உன் வருகை.

-------------------------
ஊடலின் விரகம் கவிதையின் வரிகளில்...

*

தேநீர் தயாரித்தபடி
தோலுக்கு நெருக்கமான
ஓர் நெக்குருகும் கனவின் அடுக்ககங்களுக்குள்ளேறி
மடலவிழ்த்து விளக்கியபடியிருக்கையில்

தொடுதிரையைத் தடவியபடியான
உன் "ம் " க்கு
அலைக்கப்பாற்பட்ட மணற்கோட்டையை
ஈரமருந்தி காய்த்துச் சாய்க்கும்
வறண்ட காற்றின் சாயல்.

------------------

பிரிவின் கணம் தாளாது சேரத்துடிக்கும் சங்கத்தமிழின் வரி 'அவர்வயின் விதும்பல்' கவிஞருக்கு கவிதையாகிறது... 

*

கடிவாளமிட்ட குதிரை
கிளி கழுத்திலுறை மாறன் கண்
குருடனின் செவி
நீரோவின் பிடில்
கவணேவும் சிறுகல்
சோதி தழுவியழியும் குருட்டு விட்டில்
மடையுடை வெள்ளம்
யாவற்றுக்கும் எனக்கும்
ஒரே வழி
ஒரே விழி.

#அவர்வயின் விதும்பல்

-------------------

தலைவியின் பசியறியாத தலைவனின் குறட்டைக்கு இத்தனை உவமைகளா?!

*

அடித்துக் களைத்து
கையெடுக்கையில் மௌனமாகும் அந்தக் காலக் கைபேசி
பரபரவெனப் படித்து
கடைசியிரு பக்கங்கள் கிழிந்த புதினம்
அடிமேலடி வைத்து
வெளியேற எத்தனிக்கையில் கண்விழித்து வீரிட்டழும்
சாமக் குழந்தை
அழுதோய்ந்த கண்களுடனென்

பசித்த இரவிலுன்
அசட்டைக் குறட்டை.

-------------------

கவிதையென்று அவளை அழைப்பதே சிறப்பு ! ஏன்? கவிதையொத்த எல்லா குண நலன்களுடனும் அவள் இருக்கிறாளாம்!

*

இதமாகவும் இன்பமாகவும்
கூர்ந்த பார்வையுடனும்
தேர்ந்த சொல்லுடனும்
மர்மம் போர்த்திப் புதிராகவும்
நைச்சியமான பகடியாகவும்
பெரும்பொழுதில் வினாவாகவும்
சிலபொழுதில் விடையாகவும்
நினைவை அகழ்ந்த படியும்
நித்தம் முகிழ்ந்தபடியும்
பரவசத்தில் ததும்பும் நீர்மையாகவும்
முயக்கந்தரும் தமிழாகவும்
உலவுமவளை
கவிதையென்றழைப்பதே மதி.

----------------------

இதம் தரும் எதற்குள்ளும் ஒரு வலியிருக்கும்! இந்த மயிலிறகிலும்...

*

நூல்களுக்கிடையில் பத்திரப்படுத்தப்பட்டு
விழிவருடும்
விசிறியாய்த் தொங்கி
நினைவுகள் கிளர்த்தும்
புறக்காயத்தில் மருந்திடவென
உடல் வருடும்
கண்ணனவன் சின்னமென
மனம்வருடும்
மயிலிறகு பலநேரங்களில்
மயிலிடமிருந்து வலிக்க வலிக்க

பிடுங்கப்பட்டிருக்கும்.

-------------------

விரகத்தின் மொழி இப்படியும் பேசலாம்!

*

தினமும் ஊதித் தள்ளுகிறான்
அசூயையுடனேயும்
ஆகச்சிறந்ததாய் சமைக்கிறேன்
உதடுகள் தீண்டித்தீண்டி
எச்சில் மரத்து விட்டது
கருந்துளைகளாலேயே
சிக்குண்டு கிடக்கிறேன்
களிறின் உதடுகளுக்கும் பற்களுக்கும்
ஏங்கித் தவமிருந்த
சாபம் தீரா மூங்கில் நான்.

---------------------

மேலும் கவிஞரின் ஒரு சில கவிதைகள்:

*

இப்பொழுதே வெள்ளெழுத்தென்கிறாய்
செவிப்பறை கூர்ந்திடவியலாமல் அவதானிக்கத் தொடங்கியிருக்கிறதுனக்கு
பெயர் தெரியா வதையாயெனக்கு
கைவிரல்கள் ஒத்துழைக்க மறுக்கின்றன
அலைபேசியில் தட்டச்சவும்கூட
உன் தொலையுறவான
என் ஆகப்பெரும் ஆற்றாமையெல்லாம்
நம் தொடர்பு எல்லையின் விஸ்தீரணம்
தூர்ந்துகொண்டேயிருக்கிறது
பாழும் கிராமங்களைப் போலவே.

--------------------


எங்கு வேண்டுமோ செல்
மாலை வரை
எவரிடமும் பேசு
சகோதர எல்லைக் கோட்டுடன்

என்னவெனிலும் பகிர்
மரியாதை மீறாமல்
நினைத்ததை எழுது
சமூகத்தை சீர்திருத்தும் விதமாக
பிணக்கைப் பேசித் தீர்ப்போம்
உடன்படு முடிவாக
சுத்தமாய் "சு"வை யிழந்த
சுதந்திரம்.
-----------------

பேரழுகையின்போதகப்படும் தோள்
மீப்பெரு பயத்திலொண்டும் மடி
கடும் வெறுப்பிலகலும் நிழல்
முயக்கத்திலிறுகப் பற்றும் விரல்கள்
எனக்கென யாவும் உனதாயிருக்க
அருகிருக்க தயை கூர்ந்திருக்கலாம்
எல்லாம் வல்ல ஏதிலியிறை.

-----------------------

அருவியாய் மூச்சணை
நதியைன மடியேந்து
ஆழியாய் இழுத்துத் துரத்தி இம்சை செய்
புவியெனப் பற்று
பறப்பினும் வீழச்செய்
வானென கூடவே வா
கதிர் நீட்டி ஒளியுமிழ் கண்காணி
வளியாய் உயிர் கொடு
கூதலால் வாதை செய்
நெருங்கியும் தொடாமல் இதமூட்டு
தீயென எனைப் புசி

என் பஞ்சம் தீர்க்கும் பூதம் நீ.

--------------------

பெத்த புள்ள தண்ணிக்கி தவிக்கிறப்போ கையாலாகாம வறண்டு போற
ஆத்தா தொண்டக்குழிதான்
திருவிழாவுல வருசஞ்சென்டு
நீ என்ன பாத்தப்ப
ஒஞ் சிரி்ப்பு.

-----------------------

என்னமோ செய்யக்கூடாத தப்ப
செஞ்சுட்ட மாரி
நெஞ்செல்லாங் கெடந்து அடிச்சுக்குது எப்பல்லான்னா...
கோயில்ல வெளிய வாரப்ப
கையேந்தும் மொடமான
கடவுளத் தாண்டி போறப்பவும்
சிக்னலுல சன்னலத் தட்டி பொம்ம
புக்கு விக்கிற சின்னப் புள்ளைக்கி
பொரணி காட்டுறப்பவும்
ரயிலுல கேக்காமலே
உச்சிய தொட்டு வாழ்த்த வரும்
கைதட்டும் ஆம்பள பொம்பளக்கி
தொட்டுடாம ஒதுங்குற
தீண்டாமத் தனத்தப்பவும்...
இதுக்கெல்லாம் மருந்து என்னாங்குறீங்க
அந்த பழுப்பேறிப்போன
பத்து ரூவாத் தாளுங்க தான்.

---------------------

ரொம்ப வருசங்கழிச்சு பொறந்தநாளைக்கி பேசுறப்ப
ஏந்தேதி மறந்துட்டதா
விட்டேத்தியா கேட்டுக்குற
சட்டுன்னு மழ வந்துட்டதா துணியெடுக்கணுமுன்னு
சாக்குச் சொல்லி ஃபோன வச்சதும்
வந்தது மழயில்ல கடலு.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • க.தங்கபாபு Avatar
    க.தங்கபாபு - 3 years ago
    இனிய வாழ்த்துகள்!

  • Deepa Ganesh Avatar
    Deepa Ganesh - 3 years ago
    இனிய வாழ்த்துக்கள் காயத்ரி..💐💐💐❣️❣️❣️❣️proud of u...

  • arajini1968@gmail.com Avatar
    arajini1968@gmail.com - 3 years ago
    கவிதாயினி சகோதரி காயத்ரி ராஜசேகர்அ வர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • arajini1968@gmail.com Avatar
    arajini1968@gmail.com - 3 years ago
    கவிதாயினி சகோதரி காயத்ரி ராஜசேகர்அ வர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • Rabindranath Stanley Avatar
    Rabindranath Stanley - 3 years ago
    இனிய வாழ்த்துகள் கவிதாயினி காயத்ரி ராஜசேகர் அவர்களுக்கு கவிதையெல்லாம் படித்தேன் சொல்மிடுக்கற்ற நேர்த்தியான வடிவம்.மீதக்கழிவற்ற வார்த்தைககள்.ஆழப்பொரூள்.வாழ்த்துகள்.வியப்பின் ஆழுமை மிக்க கவிஞரை அடையாளமிட் படைப்பு குழுமத்திற்கு வாழ்த்துகள்.

செ.வீரமணி


1   670   2  
February 2023

கனகா பாலன்


0   572   0  
December 2022

யாழ்ஜீவி


0   965   0  
April 2019