logo

மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப்போட்டி - 2020


தமிழக காவல்துறை & படைப்பு குழுமம் இணைந்து நடத்தும்,மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப்போட்டி - 2020
~~~~~~~~~~~~

அன்புள்ளம் கொண்ட தமிழர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

மதுவைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு தரும் வகையில் "மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப்போட்டி" ஒன்றை தமிழக காவல் துறை மற்றும் படைப்பு குழுமம் இணைந்து இந்தாண்டு முதல் மக்கள் நலனுக்காக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி மதுவினால் சீரழியும் மக்களுக்கு எச்சரிக்கை மணியாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மதுவைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு தரும் வகையிலும் இருக்கட்டும்.

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

பரிசு விவரம்: மொத்த பரிசு :25000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்).
முதல் பரிசு : ஒரு நபர் - 10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்).
இரண்டாம் பரிசு : ஒரு நபர் - 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐந்தாயிரம் ரூபாய்).
மூன்றாம் பரிசு : ஒரு நபர் - 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் முவ்வாயிரம் ரூபாய்).
சிறப்பு பரிசு : ஏழு நபர்கள் - 7000 (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்)
ஆக மொத்தம், பரிசுத்தொகை 25000 ரூபாயிலிருந்து வெற்றி பெரும் 10 நபர்களுக்கு மேற்கண்டவாறு பணமாக பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்
பரிசளிப்பவர் விவரம்: தமிழக காவல்துறை

போட்டி விவரம்:
தலைப்பு : விஷம் நுரைக்கும் கோப்பைகள்
ஆரம்ப நாள் : 16-ஜனவரி-2020
கடைசி நாள் :18-ஜனவரி-2020
மொத்தமாக 72 மணி நேரம்
போட்டி நடுவர் : மக்கள் கவிஞர் மு.மேத்தா
முடிவு அறிவிப்பு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்

தலைப்பு விளக்கம்: இன்றைய அறிவியல் வளர்ச்சியால் நாம் அளவிட முடியாத சாதனை நிகழ்த்திக்கொண்டிருந்தாலும் மதுவினால் இச்சமூகம் அழிவின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் பயங்கரத்தை விவரித்து சொல்லும் இது. ஆதலால் இது முழுக்க முழுக்க மதுவும் மது சார்ந்த விழிப்புணர்வு சுமந்து வரும் வரிகளைக் கொண்டு எழுதப்படும் கவிதைப் போட்டியாகும். மேலும் இக்கவிதை போட்டிக்கு எழுதப்படும் கவிதைகள் அனைத்தும் இச்சமூகத்திற்கு நம் படைப்புகள் மூலம் நாம் செய்யும் விழிப்புணர்வு சமர்ப்பணமாகவே இது இருக்க போகிறது.

போட்டி விதிமுறைகள்:
1. ஒருவர் அதிகப் பட்சம் ஒரு கவிதை மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும். அதுவும் வரும் 16-ஜனவரி-2020 முதல் 18-ஜனவரி-2020 ( 72 மணி நேரத்துக்குள்) கவிதைகளை https://padaippu.com என்ற இணையதளத்தில் மட்டுமே போட்டி பகுதியில் நேரடியாக பதிவிடுதல் வேண்டும். "போட்டிக்கு சமர்ப்பிக்க" என்று பட்டன் இருக்கும் அதை க்ளிக் செய்து உங்கள் கவிதைகளை பதிந்து விடவேண்டும்.
2.இது கவிதை பரிசுப்போட்டி என்பதால் கவிதை மட்டுமே எழுத வேண்டும். கவிதை எந்த வகைமையில் (மரபு/புதுக்கவிதை/சந்தம்.. etc) வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் 24 வரிகளுக்கு மிகாமலும் ஒரு வரிக்கு அதிகப்பட்சம் 5 வார்த்தைகளும் இருத்தல் அவசியம்.
3. கவிதைகளை போட்டிக்கு அனுப்பும் முன் வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. இணையதளத்தில் போட்டி பகுதியில் பதியப் பெற்ற கவிதைகளே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும். போட்டி நடக்கும் 48 மணி நேரம் வரை யார் பதிந்த கவிதைகளும் யாராலும் பார்க்க இயலாது. பதிந்தவர்களின் பெயர் பட்டியல் மட்டுமே காட்டப்படும். பிறகு அடுத்த நாள்18-ஜனவரி-2020 அன்று சரியாக இரவு பனிரெண்டு மணிக்கு மேல் போட்டிக்கு அனுப்பிய தங்கள் கவிதைகள் எல்லோரும் பார்க்கும் வண்ணம் இணையத்தளத்திலேயே வெளியாகும். அங்கிருந்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் (முகநூல், வாட்சாப்,மின்னஞ்சல்,மெசேஜ், டிவிட்டர் etc.... ) இப்படி எந்த பக்கத்திற்கும் பகிரலாம். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.
4. போட்டிக்கான அனைத்து பரிசுகளும் நடுவர் கவிஞர் மு.மேத்தா தேர்வு செய்து அளிக்க இருக்கிறார்.
5. போட்டியில் பங்கு பெற விரும்பாதவர்கள் தங்கள் கவிதைக்கு கீழே போட்டிக்கல்ல என்று ஒரு ஆப்ஷன் பட்டன் இருக்கும் அதை டிக் செய்து சமர்ப்பித்தால் அவர்களது கவிதை நாம் வெளியிடும் மின்னிதழில் மற்றும் நூல் வெளியீட்டில் மட்டும் பிரசுரிக்கப்படும் ஆனால் பரிசு போட்டிக்கு எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் போட்டியில் பங்கு பெற விரும்பாதவர்களும் கவிதையை போட்டி முடியும் முன் வேறு எங்கும் பதிந்து விட கூடாது. அவர்களும் எல்லோரையும் போலவே நம் இணையத்தளத்திலேயே பதிய வேண்டும் அவர்களது கவிதை போட்டிக்கல்ல என்ற குறிப்புடன் பிரசுரமாகும்.
6. சிறந்த கவிதைகளாக தேர்ந்தெடுக்கப் படும் பட்சத்தில் ''விஷம் நுரைக்கும் கோப்பைகள்'' என்ற சிறப்பு மின்னிதழில் பிரசுரிக்கப் படும். அதுமட்டுமில்லாமல் போட்டிக்கு வந்த கவிதைகளில் சிறந்ததாக இருக்கும் நூறு கவிதைகள் ஆளுமை மிக்க கவிஞர் பலரால் அணிந்துரை எழுதப் பட்டும் காவல்துறை அதிகாரிகளின் வாழ்த்துரைகளுடனும் கவிதை நூலாக வெளியிடப்படும்.
7. சிறந்ததாக தேர்ந்தெடுக்கப் படும் முதல் 10 கவிதைகளுக்கு சிறந்த படைப்புக்கான சான்றிதழ் அதுவும் நடுவராக இருக்கும் கவிஞர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி கையொப்பமிட்டு வழங்கப் படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடிக்கும் தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அளிக்கப்படும்.
8. கவிதைகள் இணையதளத்தில் உறுப்பினர்கள் ஆனபிறகு மட்டுமே பதிய இயலும். இல்லையென்றால் உறுப்பினராகி விட்டு பிறகு பதிய வேண்டுகிறோம்.
9. கவிதைகள் அனைத்தும் குறிப்பிட்ட தினத்தில் பதிய வேண்டும். அதற்கு மேல் கவிதைகள் பதியும் பட்டன் நீக்கப்பட்டிருக்கும் அதனால் சரியாக 72 மணிநேரம் மட்டுமே சமர்ப்பிக்கும் பட்டன் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்க மேலும் 24 வரிகளுக்கு மேல் கவிதை இருந்தாலும் அது போட்டிக்கு தேர்வு செய்ய இயலாது.
10.கவிதைகள் மது பற்றிய விழிப்புணர்வு மற்றும் மதுவிலக்கு சார்ந்ததாக மட்டுமே இருத்தல் மிக அவசியம்.
11. வயது வரம்பு ஏதும் இல்லை. யார் வேண்டுமானாலும் எழுதலாம். இது நம் சமூகத்தில் நல்ல ஒரு மாற்றம் வளர வழிவகை செய்யட்டும். நல்ல விழிப்புணர்வு கொண்ட வரிகளை மதுவிலக்கு சுகாதார மையங்களில் எழுத்தாளர் பெயருடன் பொறிக்கப்பட்டு அங்கீகாரம் செய்யப்படும்.
12. கவிதைகள் படைப்பாளியின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
13. விதிமுறைக்கு உட்பட்டு எழுதப் படாத படைப்புகளை தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக் கொள்ள இயலாது. நடுவர் தீர்ப்புமே இறுதியானது.
14. தயவு செய்து போட்டி நடக்கும் முன் இந்த தலைப்பில் எங்கும் படைப்புகளை பதிய வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஒத்துழைப்பே இந்த போட்டி நடந்து முடிய முக்கிய காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.
15. இந்த தகவலை முடிந்தவரை பகிருங்கள். உலக தமிழர்கள் அனைவரும் பங்கேற்று விழிப்புணர்வு தர இது ஒரு வாய்ப்பாகுமே.

வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப் படும்.

போட்டியை வெற்றி பெற செய்வோம்.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

உங்கள் எழுத்து மாற்றட்டும் ஒருவரின் தலையெழுத்து...

தமிழக காவல்துறை & படைப்பு குழுமம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • Dr.B.Prathisha Avatar
    Dr.B.Prathisha - 4 years ago
    முடிவு அறிவிப்பு நாள் எப்போது?

  • V.Dhanalakshmi Avatar
    V.Dhanalakshmi - 4 years ago
    V.Dhanalakshmi Avatar V.Dhanalakshmi - 1 day ago விஷம் நுரைக்கும் கோப்பைகள் வாழ்வது ஒருமுறை தானே -அதை வாழ்ந்து பார்க்க வேண்டாமா? குறிக்கோளை மறக்கடிக்கும் குடும்பத்தை சீர்குலைக்கும் நொடிப்பொழுதை நரகமாக்கும் நட்புறவை ஒதுக்கித் தள்ளும் நாற்றம் பிடித்த மதுவை ஒழி ! நாள்தோறும் வருமே பழி. செல்வமும் புகழும் உடன் வராது சிதையில் நீ எரியும் போது செய்த புண்ணியமே உன்னோடு சொர்க்கம் தரும் விண்ணோடு. காமம், குரோதம் வீண்பழி கவலையே வேண்டாம் மதுவை ஒழி அழகை,இயற்கையை கண்கள் பருகவிடு ஆரோக்கிய தேகம்பெற நேரத்தைச் செலவிடு மதியை மயக்கும் மதுவை மறந்துவிடு மனையோடும் சுற்றத்தோடும் நாளும் மகிழ்ந்திரு குற்றங்களின் வேர்களே மதுபோதை -இதை உணர்ந்தோர் படவேண்டாம் வீண்வாதை! அறிவுப் போதை தரும் நூலகமே லாபம் அழிவுக்கு வழிகோலும் மதுவோ சாபம்! பாதை மாறிச் செல்லுபவர் வீடு திரும்புவதில்லை போதை பழகுவோர் உலகில் வாழத் தகுதியில்லை = தனலெட்சுமி, திருச்சி-21 (85269 99895)

  • Nagalakshmi N Avatar
    Nagalakshmi N - 4 years ago
    விஷம் நுரைக்கும் கோப்பைகள்: *** தெய்வம் உனக்களித்த பெரும் பேறு உன்னுடலும், உன்னுயிரும் அறியாயோ? மானிடா!! உடலமைப்பின் அதிசயமும், உடலியக்க விந்தையையும் தடுமாறச் செய்துவிடும் மதுப்பழக்கம் - சற்றே நீயோசி!! உனதெண்ணத்தை செயலாக மாற்றுவது மூளை!! மூச்சுக் காற்றிழுத்து வெளியேற்றும் நுரையீரல்!! உயிரோடு நீயிருக்க ஓயாமல் துடித்திருக்கும் இதயம்// எத்தனையோ பணிசெய்து காத்திருக்கும் கல்லீரல்!! எண்ணற்ற உறுப்புகள் உனைத்தாங்கி தவமிருக்க! அத்தனையும் அழித்துவிடும் மதுவென்ற அரக்கனை, // கோப்பையில் ஊற்றி நுரையாக்கிக் குடிப்பதேன்?! உடலுருக்கி உயிர்பறிக்கும் சுவை உனக்குத் தேவையா?// உழைப்பினை பணமாக்கி மதுக்கடையில் இழக.காதே!! போதையெனும் மாயையை மாய்த்துவிட்டு நீயோசி!! உன்மனைவி காத்திருக்க, சந்ததிகள் பசித்திருக்க; நடுத்தெருவில் உடைவிலக வீழ்ந்திருக்கும் அவலம் ஏன்?! குடிக்கான உன்செலவு குடும்பத்தின் பசியாற்றும்! உன்வாழ்வை மீட்டெடுக்க உனையன்றி யார் வருவார்?! நீகற்ற பழக்கங்கள் உனைமாய்க்க உன்மனது வலிக்கலையா?!! சாராயம் எரித்த கல்லீரல்கூட மீண்டும்தனை மீட்டெடுத்து உருவாக்கும் தன்மையுண்டு!// திருந்திவிடு மானிடா!! திருத்திவிடு உன்னடத்தை!! வாழ்க்கை என்னும் வசந்தத்தை வாழ்ந்து பார்!!

  • s.sarathi Avatar
    s.sarathi - 4 years ago
    விஷம் நுரைக்கும் கோப்பைகள் மது அருந்தும் இளைஞர்களே... சாதிக்கும் வயதில் சாராயக் கடையில் ! தள்ளாடும் நடை சீர்குலைந்த ஆடை ! தெளிவில்லாத பேச்சு உனக்கு என்னாச்சு ! படிக்கும் வயதில் படிப்பை மறந்தாய் உன் கடமைகள் அனைத்திலும் தவறினாய் ! பல நேரங்களை மதுக்கடையில் வீணாக்கினாய் உனக்கான தன்மானத்தை தொலைத்தாய்! அனைத்தையும் இழந்த நீ நோய்களை மட்டும் பெற்றுக்கொண்டாயே! உன் கையில் இருப்பது வெற்றிக் கோப்பைகள் அல்ல விஷம் நுரைக்கும் கோப்பைகள் ! உன் நுரையீரலை பாதிக்கும் வாகன விபத்தை ஏற்படுத்தும்! உன் கனவுகளை சிதைக்கும் உன் எதிர்காலத்தையே அழிக்கும் ! நாளை நீ இல்லையென்றால் தந்தையை இழந்த குழந்தையாக கணவனை இழந்த மனைவியாக பிள்ளையை இழந்த பெற்றோராக நல்ல நண்பனை இழந்ததற்காக அவர்கள் படும் துயரத்தை நினைத்து மனம் திருந்து மானிடா... கவலைகளை மறக்க குடித்து கடைசியில் கவலைக்கிடமாகிறாய் !

  • aga nambi Avatar
    aga nambi - 4 years ago
    கவிதை அனுப்பியுள்ளேன். ஐயா சரியாக வந்துள்ளதா தெரிந்து கொள்ளலாமா, நன்றி

  • V.Dhanalakshmi Avatar
    V.Dhanalakshmi - 4 years ago
    விஷம் நுரைக்கும் கோப்பைகள் வாழ்வது ஒருமுறை தானே -அதை வாழ்ந்து பார்க்க வேண்டாமா? குறிக்கோளை மறக்கடிக்கும் குடும்பத்தை சீர்குலைக்கும் நொடிப்பொழுதை நரகமாக்கும் நட்புறவை ஒதுக்கித் தள்ளும் நாற்றம் பிடித்த மதுவை ஒழி ! நாள்தோறும் வருமே பழி. செல்வமும் புகழும் உடன் வராது சிதையில் நீ எரியும் போது செய்த புண்ணியமே உன்னோடு சொர்க்கம் தரும் விண்ணோடு. காமம், குரோதம் வீண்பழி கவலையே வேண்டாம் மதுவை ஒழி அழகை,இயற்கையை கண்கள் பருகவிடு ஆரோக்கிய தேகம்பெற நேரத்தைச் செலவிடு மதியை மயக்கும் மதுவை மறந்துவிடு மனையோடும் சுற்றத்தோடும் நாளும் மகிழ்ந்திரு குற்றங்களின் வேர்களே மதுபோதை -இதை உணர்ந்தோர் படவேண்டாம் வீண்வாதை! அறிவுப் போதை தரும் நூலகமே லாபம் அழிவுக்கு வழிகோலும் மதுவோ சாபம்! பாதை மாறிச் செல்லுபவர் வீடு திரும்புவதில்லை போதை பழகுவோர் உலகில் வாழத் தகுதியில்லை = தனலெட்சுமி, திருச்சி-21 (85269 99895)

  • Pandiselvi Avatar
    Pandiselvi - 4 years ago
    விஷம் நுரைக்கும் கோப்பைகள் குடித்து, குடித்து குடியையும், குடலையும் கெடுக்கும், மனிதா..... படித்து, படித்துச் சொன்னாலும், இடித்துரைத்தாலும், உன் மனம் கேட்க மறுப்பதேனோ.... குடிப்பதனால் கெடுவது தேகம் மட்டுமல்ல, இந்த தேசமும்தான்! நல்லவனாக வலம் வந்தாய் நகருக்குள்ள...! வில்லனாக, வீணாபோனாய் விஸ்கியினாலே., பாடுபட்ட பணத்தில் பட்ட சரக்கு அடிச்சுபுட்டு பட்டினி போட்டு வதைக்கிற குடும்பத்தை, கஞ்சிக்காக கையேந்தவும் வைக்கிற., உன்னை நம்பியிருக்கும் ஜீவன்களை,..... சாராயம் அடிச்சா சந்தோஷம் எகிறும் சொற்பநாளைக்கு! ஆயூசு முடிஞ்சிரும் அற்ப நாளிலே சுதி ஏற்றி மதி இழந்து, சுற்றம் தொலைத்து, நடுவீதியில் வீழ்ந்து கிடப்பாய், ஆடையின்றி. பாடைக்கட்ட நாதியின்றி அனாதையாக போவாய்! நாற்றத்திலே.... அன்பு மனைவி, பாச குழந்தைகள் முச்சந்தியில் நிற்கும் நிற்கதியாய், எதிர்காலமற்று.......! வீணாப்போன குடியினாலே. விதவையான இளம் மனைவி வாழ்வு கேள்விக்குறியாய்? , கேலியாய் மாறும்! கணவன் இறந்ததாலே.. அப்பன் வழியில் மகனும் குடிப்பான்! போதையிலே, பாதைமறப்பான், பயணம் தொலைப்பான். மழலையின் முத்தத்தில் இச்சைத் தீர்ப்பான், பிழையென்றால், பிள்ளையையும் தீர்த்துக்கட்டுவான். பாழாப்போன குடியினாலே. . பச்சையாக பொய் சொல்லி, பெத்தவளிடம், காசை பறிப்பான், பிராந்தி வாங்க ... எட்டி உதைப்பான் தாயை தள்ளாட்டத்திலே., மனபிராந்தியிலே அலைவான் .... புத்தி பேதலித்ததனாலே! சந்தேகத்திற்குரியவனாய் மாறுவான். தண்ணியடிப்பதானலே, தீவிரவாதி பட்டியலில் முதலிடம்பெறுவான் இருபது வயசினிலே.... முப்பதுக்குள்ளே சந்ததி முடிந்துவிட்டால் சமூகத்தின் சுபிட்சம் என்னவாகும்? வாலிபனே.! தேசத்தின் இதயம் இளைஞன் நீயே உன் இதயமோ சல்லடையாகலாமோ கேடுகெட்ட குடியினாலே...! குடித்து, குடித்து குடியையும், குடலையும் கெடுக்கும், மனிதா..... படித்து, படித்துச் சொன்னாலும், இடித்துரைத்தாலும், உன் மனம் கேட்க மறுப்பதேனோ.... குடிப்பதனால் கெடுவது தேகம் மட்டுமல்ல, இந்த தேசமும்தான்! நல்லவனாக வலம் வந்தாய் நகருக்குள்ள...! வில்லனாக, வீணாபோனாய் விஸ்கியினாலே., பாடுபட்ட பணத்தில் பட்ட சரக்கு அடிச்சுபுட்டு பட்டினி போட்டு வதைக்கிற குடும்பத்தை, கஞ்சிக்காக கையேந்தவும் வைக்கிற., உன்னை நம்பியிருக்கும் ஜீவன்களை,..... சாராயம் அடிச்சா சந்தோஷம் எகிறும் சொற்பநாளைக்கு! ஆயூசு முடிஞ்சிரும் அற்ப நாளிலே சுதி ஏற்றி மதி இழந்து, சுற்றம் தொலைத்து, நடுவீதியில் வீழ்ந்து கிடப்பாய், ஆடையின்றி. பாடைக்கட்ட நாதியின்றி அனாதையாக போவாய்! நாற்றத்திலே.... அன்பு மனைவி, பாச குழந்தைகள் முச்சந்தியில் நிற்கும் நிற்கதியாய், எதிர்காலமற்று.......! வீணாப்போன குடியினாலே. விதவையான இளம் மனைவி வாழ்வு கேள்விக்குறியாய்? , கேலியாய் மாறும்! கணவன் இறந்ததாலே.. அப்பன் வழியில் மகனும் குடிப்பான்! போதையிலே, பாதைமறப்பான், பயணம் தொலைப்பான். மழலையின் முத்தத்தில் இச்சைத் தீர்ப்பான், பிழையென்றால், பிள்ளையையும் தீர்த்துக்கட்டுவான். பாழாப்போன குடியினாலே... பச்சையாக பொய் சொல்லி, பெத்தவளிடம், காசை பறிப்பான், பிராந்தி வாங்க ... எட்டி உதைப்பான் தாயை தள்ளாட்டத்திலே., மனபிராந்தியிலே அலைவான் .... புத்தி பேதலித்ததனாலே! சந்தேகத்திற்குரியவனாய் மாறுவான். தண்ணியடிப்பதானலே, தீவிரவாதி பட்டியலில் முதலிடம்பெறுவான் இருபது வயசினிலே.... முப்பதுக்குள்ளே சந்ததி முடிந்துவிட்டால் சமூகத்தின் சுபிட்சம் என்னவாகும்? வாலிபனே.! தேசத்தின் இதயம் இளைஞன் நீயே உன் இதயமோ சல்லடையாகலாமோ கேடுகெட்ட குடியினாலே...!