logo

கவிச்சுடர் விருது


2022 பிப்ரவரி மாதத்திற்கான கவிச்சுடர் விருதை வீரசோழன். க.சோ.திருமாவளவன் அவர்களுக்கு வழங்குவதில் படைப்புக் குழுமம் பெருமிதம் கொள்கிறது.

 

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், அருகன்குளம் எனும் கிராமத்தை சேர்ந்த கவிஞர் , மதுரை அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டமும் , சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டம் (Master of Law) பயின்றவர்

 

மொரீசியஸ் துணைக் குடியரசுத் தலைவர் வையாபுரி பரமசிவம் பிள்ளையிடம் கவிதைக்காக முதல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆனந்த விகடன், கணையாழி, இனிய உதயம்,பேசும் புதிய சக்தி, மகாகவி இதழ், தகவு, வாசகசாலை, காற்று வெளி, தமிழ் நெஞ்சம், போன்ற இதழ்களில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வரும் கவிஞரின்  பேச்சியம்மாளின் சோளக் காட்டுப் பொம்மை எனும் கவிதை நூல் நமது படைப்பு குழுமத்தின் வழியாக வெளிவந்துள்ளது.

 

இனி கவிஞரின் சில கவிதைகளைக் காண்போம்.

மேய்ப்பனின் கருணை என்பது அறுப்பிற்குதான் என்பது எவ்வளவு  நிதர்சனமோ அப்படித்தான் ஆட்சியாளர்களின் கருணையும் நேசமும் என்பதை நாசூக்காக சொல்லும்  இக் கவிதை கவிஞரின் சொல்லாடலுக்கு சிறப்பு சேர்க்கிறது.

 

 

மேய்ப்பனின்

மடியில் தவழும்

மரிக்கு

கருணை நீட்டப்படலாம்

அறுப்பு நிச்சயம்.

 

இயேசுவின் கைகளில்

தவழும் மரி

இன்னமும் கருணையால்

காலம் நீட்டிக்கப்பட்டிருக்கலாம்

சாகாவரம் மரிகளும் பெற்றிருக்கிறது.

 

மேய்ப்பனின் பாதையை

ஒரு போதும் மாற்றியதில்லை

மரி.

மரியை கசாப்புக்கு

அனுப்பும் முகவரியை

எப்போதும் மாற்றியதில்லை

மேய்ப்பன்.

 

கருணைக்கும்

காலத்திற்கும்

கடுகளவே

மனம் பெற்றிருந்தாலும்

கசாப்காரனின்

முகவரி கருணையில்

நிலைபெற்றிருப்பதில்லை.

 

🌷

மரம் ஆகாயத்தைப் நோக்க்கவும், பூமியை பார்க்கவும் தன் கைகளை அகலமாக விரித்திருப்பது ஒரு மாயவித்தை நடத்தும் தந்திரக்காரனைப் போல் தெரிகிறது. அந்த தந்திரக்காரன்தான்  எத்தனை வித்தைகளை செய்கிறான்

 

மரமெனும் மாய வித்தை

பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது.

ஆகாயத்தை நோக்கவும்

பூமியைப் பார்க்கவும்

அகன்ற கிளைகள் விரிந்து

கொண்டிருக்கின்றன.

 

மனித இதயம் துடிக்கவும்

ஓசையின் தனிமை பூக்கவும்

விடியல் செய்து கொண்டே

இருக்கிறது

விதையின் விருட்சங்களை.

 

பூமி கருணை சுரக்கும்

தாயாய் அன்பைப் பூக்கிறது

மரத்தின் ஈரங்களில் தாய்மை

சுரக்கிறது.

மண்ணிலும் கல்லிலும்

ஒற்றைக் கல் சிற்பமாய்

கால் வழி பால் சிந்தும்

அமுதம்.

 

மனிதப் பூக்களை

இதய நார் இசைக்கும்

மரத்தின் ஒசைகளில்

வழியும் நீராய்

இதயத்தின் ரீங்காரம்

இன்னிசைக்கும்

தனிமையில் மரமும் இதயமும்.

 

பாடங்களை புத்தகங்களில்

படிப்பதிலும்

அறிவின் புன்னகையை

அன்ரூல்டில் எழுதுவதிலும்

அதிகமாய் பக்கங்களை

நீட்டுகிறது....

மரம்!

 

 

🌷

இங்கு மேய்ப்பர்கள் யார்?  அவன் தொரட்டி பசியாற்றுகிறதா? அல்லது  கொலை செய்கிறதா?  ஆழம் நகர்த்துகிறது இக் கவிதை

 

மேய்ப்பர்களின் பயணம்

-------------------------------------------

இலக்குகள் இல்லா பாதையிலும்

இன்னிசைக் காலால் நடக்கும்

மேய்ப்பன் காலடியே

கிழக்கு திசை.

 

நூறோ, இருநூறோ, முந்நூறோ

எண்ணிக்கை நிர்ணயம்

செய்யப்படுவதில்லை.

 

மேய்ப்பன் குரல் வழி

காதுகள் தீட்டி காலில்

கண்கள் வைத்து எட்டு வைக்கும்.

 

தொரட்டிகளின் நீளங்களில்

இரையை வைத்தாலும்

காலில் எட்டியே கவனமாய்

கவ்வும்.

 

இரை தேடும் பகலில்

இரவெல்லாம் அசைத்தே

பகலை அசைக்கும்.

 

ஒய்யார கொப்புகளும் கிளைகளும்

மேய்ப்பன் தொரட்டியில்

தூக்கு மாட்டும்.

 

திருவிழாக்களில் பதம் பார்க்கும்

அரிவாள்களின் கண்கள்

இரக்கம் பார்ப்பதில்லை.

 

 

 

🌷

ஓய்வெடுக்கும்

மரங்களிடையே

ஊர்ந்து செல்கிறது

பேருந்து

 

 

 

🌷

புத்திதான் புத்தனாகிறான். அறிவுதான் போதியாகிறது.  உரக்க பேசும் மூளையின் குரல் நியாயமாகவும் இருக்கும். இக் கவிதையும் புத்தனாகி போதியாகிறது

 

மண்டைச் சுரப்பின் ஆழம்

சுவாராஸ்யமானது

அறிவைப் பெருக்கியவனின்

மூளை சேமிப்பு பாத்திரம்

அடர் வன புத்த போதி நிலையானது.

 

படைப்பின் பெரும் சப்தம்

மூளையின் குரல் உரக்கப்பேசும்

உண்மையில் ஔிந்திருக்கலாம்.

 

கடந்து செல்லும் காட்சிகள்

வானவில் வண்ணமாய் மறையும்

வண்ணங்கள் சிதறிப்போவதில்லை

காட்சி பிரமிப்பானது

 

வான் தன் சுயமியை

வானவில்லிலிருந்து பெற்றிருக்கலாம்

வானவில்லின் அழகு

பிரபஞ்சத்தையே பேரின்பமாக்குகிறது.

 

புத்தரும் சிரிக்கிறார்

ஓவியப் புன்னகையாய்

சித்தார்த்தன் உடை களைந்து!

 

 

🌷

கவிஞரின் மற்றும் சில கவிதைகள்;

 

அந்தத் கட்டங்களுக்கு

மெளசு அதிகம்

குதிரை தாவும் கட்டங்கள்

சுவாரஸ்யமானவை.

 

ராணி வைத்து ஆடும்

கட்டங்கள் ராசாவின்

கம்பீரத்தை நிலைப்படுத்தும்.

 

விரல்களில் நகரும் குதிரை

தாஜ்மஹாலில் ஒடிய சுல்தான்களின்

குதிரைக்குளம்பை ஞாபகம் செய்யும்.

 

ராணி தன் கம்பீரத்தால்

சிப்பாய்களை வீழ்த்துவது

வேலுநாச்சியார் உடைவாள்

வரலாற்றைச் சொல்லும்.

 

குதிரையும் ராணியும்

மன்னராட்சிக்கு மட்டுமல்ல

சதுரங்க ஆட்சிக்கும்

சட்டம் தனை உருவாக்கும்.

 

குதிரையும் ராணியுமில்லாத

ஆட்டம் தனை

சதுரங்க கட்டம் கருப்பு வெள்ளையில்

நிழற்படத்தை வரலாறாய் பதிவு செய்யும்.

 

எதிரெதிர் கட்டங்கள்

தாவித் தாவி சிப்பாய்களை வீழ்த்தும்

போரின் வேகத்தை

உலக சாம்பியன் நிர்ணயம் செய்வார்

நிமிடங்களில்.

 

பல நாள் களப்போராட்டம்

நிமிடங்களில் நிறைவு பெறுகிறது

ராணியும் குதிரையும்

நாடுகளை ஆள்கிறார்கள்.

 

ஒவியமாய் வாழ்ந்தாலும்

நெஞ்சக்களத்தில்

குதிரைக்குளம்பு சப்தத்தில்

ராணி வருகிறார் கம்பீரமாக

சிப்பாய்களை விரல்களால் வீழ்த்தி!

 

 

 

🌷

சுவர்ச் சட்டங்களில்

அறையப்படும் ஆணிகள்

நினைவுகளைத் தாங்கும்.

 

பாட்டன் பூட்டன் தாத்தா

நமக்குத் தெரியா காலங்களில்

வாழ்ந்த வரலாறு பேசும்.

 

ஆச்சி பாட்டி பூட்டியின்

தோடுகளும் காது வளர்த்த

கதைகளும் நிழற்படம் நிரப்பியே

இருக்கும்.

 

அம்மா ஆச்சியின் கதையை

சொல்கையிலும்

ஆச்சி பூட்டியின் கதையை

சொல்கையிலும்

சீதனமாய் வந்த உரைகல்லும்

அம்மிக்கல்லும் அதன் காலங்களை

கணக்கெடுக்கும்.

 

ஆணிகள் எப்போது

அடிக்கப்படடதெனத் தெரியாது

நிழற்படத்தில் குறிக்கப்பட்ட

எண்களால் வருடத்தை நினைவு

செய்யலாம்.

ஆணிகள் காலத்தையே தாங்கும்

வரம் பெற்றவை.

 

சுவர்களில் நிழற்படங்களோடு

மான் கொம்புகளும்

நரிப்பல்லும் கூட

அழகு செய்யும்.

 

சுதந்திரத்திற்காக

காந்தியோடிருந்த பூட்டன்

என்னிடம் பேசுகிறார்

ஐஎன்ஏவில் இருந்த தாத்தா

கேப்டனாகவே இருந்ததை

நிழற்படம் பேசுகிறது.

 

ஆவணங்கள் பேசுவதை

ஆணிகள் தாங்குகிறது...

 

ஆணிகள்சுவரில்

காலத்தைப் பதியம் செய்கிறது

காலத்தை அழித்து விட்டு

ஆணியை அப்புறப்படுத்த முடியாது.

 

 

 

🌷

சோளக் காட்டுக்குள்

காக்கை குருவிகளுக்காக

ஆச்சி பேச்சியம்மாள்

ஊன்றி வைத்தாள் நிலப்பொம்மை!

 

முதலில் வைக்கோல்

தயார் செய்தாள்

தன் அண்ணன் கருப்பையா

சட்டையை தயார் செய்தாள்

உருவமானது சோளக்காட்டு பொம்மை!

 

காக்கைளும் குருவிகளும்

ஆள் நிற்பதாய் கண்டு

சோளம் கொறிக்க வருவதில்லை.

 

பின்னொரு மழைநாளில்

அடித்த காற்றில்

அத்துணையும் பறக்க

கூடு மட்டும் குடிலாயிருந்தது.

 

வனாந்திரப் பறவைகள்

காக்கையோடு குருவியும்

தங்கி விட்டுச் செல்கின்றன

 

சோளங்கள் பூக்கிறது

மாற்று நிலத்திலும்!

 

 

 

🌷

யாசகங்கள் தீரா

வெம்மைகிலும்

பூக்கிறது

திருவோடு.

 

காடுகள் மேடுகளிலும்

யாருக்காகவோ

இழைப்பாறுகிறது

நிழல்.

 

கூடுகளின் கிளைகளில்

மூத்திருக்கும் வளையங்கள்

சொல்லியே செல்கிறது

ஆண்டுகளை.

 

யார் கண்டறிந்திருப்பார்

இளைப்பாறுதலில்

பெரும் நிம்மதி

ஒரு திருவோடென!

 

 

 

🌷

குளம் நிறைந்தது...

ஓடை வழி

ஓடி வந்தது

நிலா!

 

 

 

🌷

கடலலைகள் முத்தமிடத் துடிக்கும் கரையெங்கும் வெயில் வாசம்

 

ஒரு ரூபாயிலும் இரண்டு ரூபாயிலும்

கரையும் நிமிடங்கள்

 நாணயங்கள் சேகரிக்கும்.

 

தோள்களில் ஆடும் பஞ்சு மிட்டாய்கள் சாளரங்கள் கேட்பதில்லை

பெரும் சுமையென வருபவனிடம்

காற்று பேரம் பேசுவதில்லை.

 

குழந்தைகளின் நா அறிந்தவனோடு

தூண்டில் பஞ்சு மிட்டாய்கள்

இரையாய் பேசுவதில்லை

இரைப்பையாய் பேசும்.

 

பீலிபெய் சாக்காடும்

வாழ்வை சுமப்பதில்லை

வறுமையை சுமக்கிறது

அரை சாண் வயிறு

 

தூக்கிச்செல்வது

குழந்தைகள் பூரிப்பை

சில்லறைகள் சிணுங்கினாலும்

குழந்தைகள் சிணுங்குவதில்லை.

 

குழந்தைகள் கண்ணீரை

ஒட்டியெடுக்கிறான்

பஞ்சுகளில் இவன்

கண்ணீர் தெரிவதில்லை.

 

 

🌷

 

நான் கோமாளிதான்

என் செய்கைகள் சிரிப்பு வரக்கூடியதாகவே இருக்கும்

சிரிப்பு மருந்து கொடுக்கும்

மருத்துவன் நான்.

 

முகபாவனைகள் மாறியிருக்கும்

பார்த்தாலே கோபம் குறையும்

வெடிகளை இதயத்தில் சுமந்தாலும்

சிரிப்பை முகத்தில் சுமப்பவன்.

 

ஆடைகளை வனையத் தெரியாதவன்

அன்பின் கூடுகளை பொருத்தத் தெரிந்தவன்

கூடைகளில் பூக்கள் பூப்பதில்லை

செடிகளில் வாசம் வராமலிருப்பதில்லை

அழவந்தாலும் சிரிக்க கற்றுக் கொண்டவன்.

 

ஆறடி உசர சட்டைப் பாக்கெட்டில்

பணத்திற்கு பதில் சிரிப்பு சில்லறையாக

நிறைந்திருக்கும்.

 

ஐய்...

கோமாளி போறான்

ஐய்...

கேமாளி உக்காந்திருக்கான்

சொல்லும் மழலைகள் வார்த்தை வாசங்களில்....

 

நான் கண்ணீர் சிந்துவதில்லை!

 

 

🌷

என் பாக்கெட் சாளரங்களுக்கு

பஞ்சமில்லை

துரோகங்களுக்கு பதில் மலர்கள் நிரம்பியிருக்கும்

 

காற்றின் நீச்சல்களில்

என் மணம் உங்களை அடையலாம்

வருவேன் மலர்களாக

முட்களுக்கு பதில் மலரை கிரீடமாய் தருவேன்!

 

அன்பின் வாசம்

அலைகளிலிருப்பதில்லை

என் மலர்களில் பூத்திருக்கலாம்...

 

மலர்களால் அன்பினை செய்பவன்

அன்பின் கூடுகளில் துரோகங்கள் முளைப்பதில்லை.

 

 

 

🌷

இலையொன்று விழுந்தது

காற்றின் தாக்கம்

மழையின் பேரியக்கம்

என எதுவாகவும் இருக்கலாம்

ஆனால் இலையின் மேல் துளிகள்

 

மரணமொன்று நிகழலாம்

பிறப்பின் சாசனச் செய்தியே

இறப்புக்கான தேதி எழுதுவதுதான்

அப்போது மழை பெய்யலாம்

இல்லையேல் வெயிலாவது அடிக்கலாம்

 

இலை விழுந்ததால் மரம் வீழ்வதில்லை

தாகங்கொண்ட பறவையைப்போல

தேடலைவிரித்துக் கொண்டேயிருக்கும்

நேர்ப்புவியிலும் எதிர்ப்புவியிலும்

 

மரணம் நிகழ்வின் மண்மாளிகையில்

அழுகையின் நீர்த்துளிகள் அரணாகி

ஆண்டொன்றில் நினைவுகளாகிவிடும்

மாண்டார்கள் மீள்வதில்லையென

மாற்று பயணம் செய்கிறது வாழ்க்கை

 

வெயிலும் மழையும்

எப்போதும் வரும்

மானுடர்கள் இளைப்பாறுவார்கள்

இலை விழுந்த மரத்தினடியில்...!

 

வீரசோழன் க.சோ.திருமாவளவன்

 

🌷

நதி "எழுதிக்கொண்டே" செல்கிறது

காதலின் சின்னத்தை...

விதியாக முடிந்து போன வாழ்வை

வரலாறாய் மாற்றியவளை

பளிங்குகளால் பதம் செய்து

உலகம் கொண்டாடுகிறது அதிசயமாய்

 

வான் தன்னை மறக்க

பால்நிலா சோறூட்ட

காலாற கடுதாசி செய்திட

நூற்றாண்டு கடந்தும் வாழும் காதலியவளை நதிதன்

முகத்துவாரத்தில் வரைந்திருக்கிறது

 

மரணத்தை விழாவெடுத்தது

நினைவுச்சின்னமாயிருக்கலாம்

ஆயிரமாயிரம் மரணத்தை

மும்தாஜின் காதல்

முந்தானை செய்திருக்கிறது....

 

ஆறுகளின் வரலாறை

குறிப்பெடுத்தவர்கள்

"யமுனை"யை இதயத்தில்

எழுதி வைத்தார்கள்.....

 

காதலெனும்

கம்பீர வரலாற்றை

யமுனை தினமும்

பேசிக்கொண்டிருக்கிறது....

 

தனது கண்ணீரால்!!!

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.