கவிச்சுடர் குமரேசன் கிருஷ்ணன் ஒரு அறிமுகம்
*****************************************************************************
படைப்பு குழுமத்தால் இம்முறை கவிச்சுடர் விருது பெறும் படைப்பாளி குமரேசன் கிருஷ்ணன் அவர்களின்
இயற்பெயர் குமரேசன். தன் அப்பாவின் பெயரான "கிருஷ்ணன்" என்பதை இணைத்துக்கொண்டு குமரேசன் கிருஷ்ணன் என்ற பெயரில் எழுதி வருகிறார். சங்கரன் கோயிலை பிறப்பிடமாக கொண்ட இவர் தமிழக மின்வாரிய துறையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
எட்டாவது பயிலும் காலத்தில் "மாயமோதிரம்" என்னும் கதை எழுதியதில் தொடங்கிய இவரது எழுத்துப் பயணம் முதல் கவி என முழுமையாக எழுதியது 1993ல் தந்தை மறைவிற்கு பின்பே.
வெளியிட்ட நூல்: நிசப்தங்களின் நாட்குறிப்பு(ஹைக்கூ கவிதைகள்)
பெற்ற விருதுகள்:
ஈரோடு தமிழன்பன் விருது
இவரது நூலுக்கான அங்கீகாரம்:
புதுச்சேரி மூவடி,மின்மினி இதழ்கள் நடத்திய போட்டியில் ஊக்கப் பரிசு.
கும்பகோணம், ஹைக்கூ நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பு பரிசு
இரண்டாம் தொகுப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதுவரை புதுக்கவிதை, நவீனம், மரபு கவிதை சார்ந்த படைப்பாளிகள் கவிச்சுடர் பெற்ற நிலையில் முதல் முறையாக ஒரு ஹைக்கூ வகைமை எழுதும் படைப்பாளி இவ்விருது பெறுவது பெருமைக்குரியது.
கவிச்சுடர் குமரேசன் கிருஷ்ணன் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
**********************************************************************************************
சொல்ல வந்த கருத்தினை எளிதாக சொல்லத் தெரிந்த படைப்பாளிகளில் இவரும் ஒருவர். எத்தனையோ ஹைக்கூ படைப்பாளிகள் இன்றைய கால கட்டத்தில் இருந்தாலும் தனது புதுமையான பார்வையில் தவழும் ஹைக்கூவால் பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பியவர் என்றால் அது மிகையல்ல.
எப்போதும் நீள் கவிதையே எழுதிக் கொண்டிருந்த இவர் ஹைக்கூ எழுத வந்ததே ஒரு எதேச்சையான நிகழ்வு மூலமே இருப்பினும் அதில் ஏற்பட்ட ஆர்வ மிகுதியால் பின்பு ஒரு ஹைக்கூ நூலையே வெளியிடும் அளவுக்கு வளர்ந்து விட்டார்.
ஹைக்கூ கவிதைகளில் கூட படிமம், குறியீடுகள் மற்றும் தொன்மங்களை வைத்து எழுதும் ஒருசிலரில் முதன்மையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.
ஹைக்கூ கவிதைகளின் ஈற்றடி பயன் உணர்ந்த கவிஞராகவே இவரை நாம் பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு
//
பொட்டல்வெளி
மரம் தேடுகிறது
குச்சியுடன் பறவை.
//
//
வாழவேண்டும்
சாவைத் தேடுகிறான்
சங்கூதுபவன்.
//
//
பரண்மேல் புத்தகம்
வாசிக்க எடுக்கையில் கலைகிறது
சிலந்திவலை.
//
//
இரவு மழை
தூக்கத்தில் கேட்கிறது
தவளைச் சப்தம்.
//
சமூகம் சார்ந்து மட்டுமல்லாம் இயற்கை, தலைமுறை இடைவெளி, வாழ்வியல் அவலங்களை இவரது கவிதைகள் பேசத் தயங்குவதேயில்லை
இவரது ஹைக்கூ கவிதைகள் சில....
1)
பல்லியின் பிடி
தப்பித்துவிடும்
தும்பியின் இறகு .
2)
கரையும் காகத்திடம்
யார் உரைப்பர்
வீடு மாறியதை.
3)
நகரும் இரயில்
சன்னலோரம் அமர்கிறது
பட்டாம்பூச்சி.
4)
இரயில் பயணம்
அழகாயிருக்கிறது
மலை உச்சிக் கோயில்.
5)
மழைச்சாரல்
வாவென அழைக்கிறது
பறவையின் குரல்.
6)
அழகாயிருக்கிறது
அச்சத்தை எழுப்புகிறது
மின்கம்பியில் பறவை.
7)
நதி
தத்தளிக்கும் எறும்பு
இலையுதிர்க்கும் மரம்.
8)
தகரத் தட்டு
யாசிக்கும் மனிதர்
தங்கத்தில் கோபுரம்.
9)
சலசலக்கும் நதி
மெளனமாய் நகரும்
கூழாங்கல்.
10)
தூளியில் குழந்தை
உறக்கத்தில் தாய்
தாலாட்டும் ரயில்.
இவரது மற்ற வகைமை கவிதைகளைப் பற்றி பார்ப்போம் இப்போது....
ஆசை ஆசையாக வாங்கி வந்த பிரியாணி பொட்டலத்தை வெயிலில் நின்று இந்திய வரைப்பட புத்தகங்களை விற்கும் பெண்ணிடம் கொடுக்கும் போது அதை வாங்க மறுத்தவளின் தன்மானத் திமிரை இந்தக் கவிதையில் அழகாகச் சொல்லுகிறார்...
நகரின் பிரதானக் கடையின்
நீண்ட வரிசையில் நின்று
பிரியாணி பொட்டலத்துடன்
வெளிப்படுகிறேன்.
என் நாவில்
அனிச்சையாய் எச்சிலை
சுரந்தபடியிருக்கிறது
உணவின் மணம்.
சேலையைத் தூளியாக்கி
முதுகில் தொங்கும் மழலையுடன்
இந்தியவரைபடத்தை
உள்ளங்கையில் வைத்துக்கொண்டு
கூவிக்கூவி விற்கிறாள்
பிரதானக் கடைவாசலில்
தமிழ்பெண்னொருத்தி.
பசியில் கசியும்
மழலையின் விழிவீச்சினை
சந்திக்க இயலாமல்
பொட்டலத்தை
அப்பெண்ணிடம் நீட்டுகிறேன்.
வேண்டாண்ணா
புக் வாங்கிக்கோங்கவெனும்
அவள் தன்மானத் திமிர்
பிடித்திருக்கிறது.
வறுமையை வீழ்த்தும்
அவள் உழைப்பின்
நம்பிக்கைக்குக் கரம் கொடுக்க
இந்தியாவை வாங்கிப் பிரிக்கிறேன்
வறுமையை விரட்டுவதாய்
வாக்களித்து
உலக வல்லரசாக்க விழையும்
மனிதத் தலைகள்
தோன்றி மறைகின்றன
எந்தச் சலனமுமின்றி
வரைபடத்துள்.
***
சின்ன வயதில் சாதாரணமாக பல் விழுவதை ஒரு கலாச்சர புதையலுக்குள் ஆழமாக வைத்துவிட்டு அதை நாம் தொலைத்து விட்டதை எவ்வளவு நேர்த்தியாக சொல்லுகிறார் பாருங்கள்...
ஆடுகின்ற...
அந்த ஒற்றைப் பல்லை
நாவினால் தெத்தித் தெத்தி
அழிச்சாட்டியம் செய்தும்
அடம்பிடித்து விழமறுக்க..
அப்பல் குறித்த
புலம்பல்களின் ஊடே
கண்ணயர்ந்த ஓர்இரவில்
திடீரெனயெழுந்த
யெவன பீதியில்
அனிச்சையாய்
நகர்ந்த கையோடு
ஒட்டிவந்தது அப்பல்..
ஒற்றைப் பல்லோடு
ஓலமிட்டபடி
ஓரிரவு நீள..
முந்திவரும் ஞாயிறுவின்
முனகல்களின் கீற்றுக்குமுன்
தலையணைக்குள் புதைத்த
தன்கையோடு பல்எடுத்து
சாணத்தில் திணித்து
கோழிகளுக்கு இரையாகாதவாறு
ஓட்டுமேல் எறிந்த அப்பருவத்து
கனாகாலத்து நினைவுகளை...!
ஆடும் தன் பல்காட்டி
என் செய்யவென்ற
உன்னிடம்
எப்படியுரைப்பேன்
என்மகனே...!
***
வாழ்க்கை படிப்பினையை பற்றி சொல்லும் வரிகள்...
உரலுக்குள் சிக்கிய
தலையை
உடைபடாமல் நகர்த்தும்
சாமர்த்தியத்தை
கற்றுத்தருகிறது வாழ்வு
என்று சொல்லும் நேர்த்தி வியப்பானது.
திறந்த புத்தகமாயிருந்தேன்
தினம் வாசித்து
வீசியெறிந்தனர்
பலர்...
என்னுள் கொஞ்சம்
மூடிக்கொண்டேன்
நிறைய வாசிக்க
வேண்டியதிருந்தது
என்னை...?
தேடலை பற்றி இவரின் பார்வை இப்படி விரிகிறது.
வீடுகளை பற்றிய கனவு ஒவ்வொரு மனிதனுக்குமான தவிர்க்க முடியாத ஆசையென்றே சொல்லலாம். அப்படிதான் இவரது தந்தைக்குமான ஆசையை சொல்லி வருபவர் கடைசியாக முடிக்கும் போது
சாலையோர...
நடைமேடையில் உறங்கும்
வீடற்ற சக மனித உலுக்கல்
பொய்யென உரைக்கிறது
எல்லாக் கனவுகளையும்.
என்று முடித்து அதை கனவாகவே முடித்து விடுகிறார். மனம் கனத்து போகிறது.
ஊர்த்திருவிழா
---------------------------
மேனியெங்கும்
சில்லறை சிதறிக்கிடந்த
தெரு ஓவியத்தில்
இதயம் கிழித்து
இறைவனின் முகம்
காட்டியிருந்தான் ஓவியன்.
கரித்துண்டுகளும்
சுண்ணக்கட்டிகளும்
சாகாவரம்பெற்று
சாலைகளைக் கோயிலாக்க
உயிர்ப்பின்றி
உயிர்வாழும் போராட்டத்தில்
ஓவியத்தை வெறித்தபடி
வயிறு கிழித்து வறுமை
காண்பிக்கவியலா
விரக்தியில்...
தன் குடும்பத்தோடு
தெருவிலமர்ந்தபடி
கடந்து செல்பவர்களின்
கண்களை ஊடுறுவும்
கலைஞனைத் தரிசித்தபின்
வழிப்போக்கனாய்
எதை ரசிக்க
ஊர்த்திருவிழாவில்
--- இப்படி வாழ்வியலை வரிகளில் கண்முன் கொண்டுவந்து வாசிப்பவரை அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு மனதுக்குள் அசைபோட வைத்து விடுவதென்பது ஒருவகை கலையே கவிதையில் அதை சரிவர செய்திருக்கிறார் இக்கவியில்.
--------
படைப்பாளி குமரேசன் கிருஷ்ணன் அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.
வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.
#கவிச்சுடர்_விருது