logo

கவிச்சுடர் விருது


இந்த மாதத்தின் நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை பெறுபவர் நமது படைப்பு குழுமத்தில் தனது சிறந்த கவிதைகளை தொடர்ந்து படைத்துவரும் இயன்முறை மருத்துவரும் கவிஞருமான க.பிரபு சங்கர்  அவர்கள் என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம்.

அவரது அறிமுகத்தை அவரின் வழியாகவே அறிவோம்...

"தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்த என் தந்தை அவர்களின் ஊக்கமே சிறுவயதிலிருந்து தமிழ் மீது எனக்கு வந்த ஆர்வத்திற்கு முழு முதற்காரணமாக இருந்தது.

 நான்காவது ஐந்தாவது படிக்கும் போது என்னை வலுக்கட்டாயமாக நூலகத்திற்கு அழைத்துச் சென்று புத்தகங்களைப் படிக்குமாறு அவர் தூண்டியதே மொழி மீதான பற்று எனக்கு ஏற்பட காரணமானது எனலாம்.

படிக்க மட்டுமே செய்து கொண்டு இருந்த நான் திடீரென ஒருநாள் என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை சாதாரணமாக அனைவருக்கும் புரியும் வகையில் எழுதத் தொடங்கினேன். எழுதத் தொடங்கியபோது அது கவிதையா ??என்றெல்லாம் எனக்கே தெரியாத கணத்தில் சுற்றி இருந்த நண்பர்களும் படைப்பு குழுமம் போன்ற ஒரு மிகப்பெரும் அமைப்பைச் சார்ந்தவர்களும் கவிதைதான் எனப் பாராட்டி ஊக்குவித்தது தொடர்ந்து எழுதுவதற்கு என்னை தயார் படுத்தியது என்று சொல்லலாம்.

வைரமுத்து முதல் நா முத்துக்குமார் வரை
அப்துல் ரகுமான் முதல் பாரதி வரை என்னைக் கவர்ந்த அனைத்து கவிஞர் பெருமக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

விளையாட்டாக எழுத ஆரம்பித்த இந்த பழக்கம் ஒரு நாள் எங்கள் இயன்முறை மருத்துவத்திற்கு அடையாள பாடல் ( Anthem) ஒன்றை எழுதும் அளவிற்கு உயரம் கிடைக்கும் அதுவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கைகளால் வெளியிடப்பட்டு உலக சாதனையில் இடம்பெறும் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை ஆனால் அதுவும் நடந்தது.

இதுவரை மௌனங்களின் மொழிபெயர்ப்பு, கமர் கட்டு என்ற இரு தொகுப்புகள் இபுக் வடிவில் அமேசானில் வெளியிடப்பட்டு இருக்கிறது. படைப்பு குழுமத்தின் சீரிய முயற்சியால் தேநீர் கடைக்காரரின் திரவ ஓவியம் என்ற கவிதைத் தொகுப்பு அச்சு புத்தக வடிவில் கடந்த ஆண்டு சென்னையிலும் வெளியிடப்பட்டது. அந்த நூலுக்குக் கிடைத்த அங்கீகாரம் முழுக்க முழுக்க படைப்பு குடும்பத்திற்கு சேரும். 

 முதன் முதலில் எனக்கான கவிஞர் அங்கிகாரம் அளித்த படைப்பு குழுமம் மற்றும் ஆனந்த விகடனுக்கு முதல் நன்றிகள்.

 நான் கவிதைகளின்  நல்ல ரசிகன்.
ஆர்வக் கவிஞன். எப்படி ஒரு நல்ல ரசிகனால் ரசிப்பு தன்மை மாறாமல் ஒரு படைப்பை உருவாக்க முடியும் என்ற சிந்தனையின் வடிவாகவே என் கவிதைகளை செதுக்குகிறேன்...

சமர்ப்பணம்

கரு தந்த தாய்க்கும்
உரு தந்த தந்தைக்கும்

இனி கவிஞரின் சில கவிதைகளை ரசிப்போம் வாருங்கள்....

-------
காதலுக்கும் ஊடலுக்கும் இடையில் ஒரு சிறு நூலிழை மௌனமே நுழைகிறது... காதலின் இயல்பை மாற்றி சிறு அனல் காற்றை நுழைக்கிறது... மௌனம் தின்று போட்ட மிச்சமாய் இருவருமே துடிக்கும் போது அதைத் தணிக்கும் மென் தென்றலாய் நுழையும் ஒரு வார்த்தை எதுவாக இருந்தாலும்... காதலையே அது மிக அழகாக்கி விடும்... இதோ..கவிஞரின் ஊடல் காதலி...
1)
ஒரு சிறு சண்டைக்கு
பிறகான கட்டாய 
இருச்சக்கர பயணம்....

இருபக்கம் கால்கள் 
போட்டமரும் வழக்கம் மாறி
ஒரு பக்கமாய் அமர்கிறாய்....

வழக்கமான தோள் பிடியின்றி
கம்பிகளை கெட்டியாய்
பிடித்துக் கொள்கிறாய்....

இருவருக்குமிடையேயான 
இருக்கையின் இடைவெளியில் 
ஒரு சிட்டுக்குருவி பறந்து போகிறது...

பக்கவாட்டு கண்ணாடியை உன்
முகம் பார்க்க திருப்பினால்
அதைப்பார்த்து நீ திரும்பி
கொள்கிறாய்...

வாகன இரைச்சல்கள் மத்தியில்
உன் மெளனங்களை உற்று
கேட்டுக்கொண்டிருக்கிறது 
என் காதுகள்....

திடீரென குறுக்கே ஓடிவரும்
நாயை கண்டு அனிச்சையாய்
"பார்த்துங்க" என்ற உன் ஒற்றைச்சொல்
உடைத்தெறிந்து விடுகிறது
மொத்த ஊடலையும்....

மெல்ல மீண்டெழுகிறது
மொத்த நேசங்களும்....
------------------
கணவன் மனைவி என்பது மகோன்னதமான உறவு.. ஒருவரை ஒருவர்  பகிர்ந்துகொள்ளும் அற்புதமான ஆன்மபந்தம்! சில இடங்களில், சில நேரங்களில் புரிதல் குறைந்து தனக்கான உயர்ச்சி மேலோங்கும் போது மெல்லிய உறவு சிக்கல் தொடங்கி விடுவா.. இங்கேயும் கணவன் ஒருவன் தன் மனைவியை கடுஞ் சொற்களாலும் சில உதாசீனங்களாலும் காயப்படுத்தி விடுகிறான்.. அதையவள் எப்படி தன் மனதிலிருந்து களைகிறாள் கவனியுங்கள்....

2)
ஒவ்வொரு முறையும்
உன் ஆடைகளை 
துவைக்கும்போதும்
வேறோரு உலகத்திற்கு
சென்று விடுகிறேன் நான்....

யாருமற்ற அப்பொழுதுகளில்
உன்னாடைகளில் உள்ள
வியர்வை நெடியும்
சிகரெட் துகள்களும்
மது வாசனையும்
போதுமானதாக இருக்கிறது
உன் இருப்பை காட்டிக்கொள்ள....

நீ வைத்த சூடுகள்
நீ பேசிய கடுஞ்சொற்கள்
நீ செய்த உதாசீனங்கள்
நீ பார்த்த ஏளனப்பார்வைகள்
நீ அடித்த அடிகள்
என ஒவ்வொன்றும் 
ஒவ்வொரு ஆடையாக 
உருமாறுகிறது....

உன்னை நீரில் பிழிந்து 
அமிலக்கட்டியில் கரைத்து
கல்லில் அடித்து
துவைத்தெடுப்பதாய்
கற்பனை செய்து
உன்னாடைகளை துவைக்கிறேன்
அகம் நிறைந்த சந்தோஷத்தில்....

துவைத்து முடித்து
கொடியில் காய வைக்கும்போது
லேசாகி வெளுத்துவிடுகிறது
உன் ஆடைகளும்
என் மனதும்.....
----------------------
நெற்றியில் விபூதி வைப்பதைப் பற்றி கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலில் ஒரு வாசகம் வரைந்திருப்பார்... விபூதி என்பது மரணத்தின் சாம்பலென்றும் ஒருவன் கண்ணாடி முன் நின்று அதையவன் தன் நெற்றியில் வைத்துக் கொள்ளும் போது இன்றைய தன் மரணத்தை அவன் நினைவில் கொண்டால் தவறிழைக்க துணிய மாட்டான் என்று... இதையே தனக்கான நடையில் கவிதை வழியாகப் பேசுகிறார் கவிஞர்.....


3)
எங்கிருந்தோ வந்து
என் நாசியில் கலக்கிறது
அந்த சாம்பலின் வாசம்....

வாசம் வந்த திசைநோக்கி
திரும்பிப் பார்க்கையில்
கொழுந்து விட்டெரிந்துக் கொண்டிருக்கிறது
கொழுப்பேறிய மானுட உடல்
முன்னையிட்ட தீயில்....

எரியும் பிம்பத்தில் 
அழிந்துக் கொண்டிருக்கிறது
அவன் இதுவரை
சேர்த்து வைத்த ஆணவச்செருக்கும்
அகங்கார மிடுக்கும்....

அழிவதை உணர்ந்த அவ்வுடல்
திமிறி எழுகையில்
கீழ்சாதி வெட்டியானின்
ஆவேச தடியடியில்
அமுங்கி போகிறது
அவன் சாதிவெறியும்....

எரிந்து முடிந்த
அந்தச் சாம்பல் குவியல்
சொன்ன சேதிகள்
இது வரை
யாரும் சொல்லாத நீதிகள்....
-------------------
ஒரு விவசாயின் குமுறல் ஒரு சிறு கவிதையின் வழியாக...

4)
வார சந்தையில்
குவித்து வைத்திருக்கும்
பழைய 
இரும்புக் கடையின்
ஓரத்திலிருக்கும்
ஏர் கலப்பைகளை
தன் கிழிந்த துண்டால்
துடைத்துக் கொண்டிருந்த
அந்த பெரியவரின்
கண்ணீர் துளிகளில்
மிச்சம் இருக்கிறது
தோற்ற விவசாயம்.....
-----------------------
கணினிப் பொறியாளன் என்பவன் ஆடம்பர வசதிகளுக்கும்.. அதிக செல்வத்திற்கும் உரியவன் என்ற கட்டமைப்பு பரவலாகவே இருக்கும் சூழலில் அவனின் பணிச்சுமையென்பது நேரங்களை விழுங்கியே வாழ்கிறது! இங்கேயும் அப்படிப்பட்ட வசதியான பொறியாளனின் மனைவி அகலிகையாய் மாறி விடும் சாபத்தை ரசிப்போம்....

5)
அகலிகையின் சாபம்
----------------------------------
பத்து மணியை கடந்தும் 
இரவென தெரிந்தும்
இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறான்
உனக்கு படியளக்கும் வெளிநாட்டு முதலாளி
உன் அலைபேசியில்
தாய்மொழியை மறக்கும் அளவுக்கு
அவன் மொழியை பழக்கிய
உன் நாக்கு  இப்போதெல்லாம்
சுவை நரம்புகளுக்கு 
வேலையே தருவதில்லை
அடுத்த மாத வேலைக்கான
முன் ஒத்திகைகள்
கணினியில் தொகுத்து வைக்க வேண்டிய
குறிப்புகளென ஒன்று விடாமல்
கேட்டு துளைத்து கொண்டிருப்பவன்
அவன் வேலைகளிலே குறியாக கிடக்க
அரை உறக்கத்திலும்
காத்து கிடக்கும் காமத்திலும்
சாபம் விடுகிறேன்
அவன் நாட்டில் இரவென்ற
ஒன்று இல்லாமல் போக
நவீன அகலிகையாய்.....
---------------------
மனைவி என்பவளுக்கு கணவனிடம் இருக்கும் சிறு சிறு எதிர்பார்ப்புகள் என்பது மிகப்பெரிய விலை மதிப்பானதாக இல்லை என்றாலும் அதுதான் அவளுக்கான விலை மதிப்பான அன்பாக வைத்து ரசிப்பாள்... இங்கும் ஒருத்தி தன் கவலையை கவிஞரின் வாயிலாக வெளிப்படுத்துகிறாள்....

6)
விரல்களை கோர்த்தபடி
பொதுவெளியில் நடந்ததில்லை

சிறு மழையை என்னோடு
அமர்ந்து ரசித்ததில்லை

எனக்கே எனக்காய்
ஒரு தேநீர் கூட 
போட்டு தந்ததில்லை

பிறந்தநாள்
திருமணநாள் 
எந்த வாழ்த்தும் சொன்னதில்லை

வருகை பதிவேட்டு ஆசிரியராய்
முழுப்பெயரை தவிர
எந்த செல்ல பெயரிலும்
இதுவரை அழைத்ததில்லை

ஒரு புடவையை கூட
எனக்காக நீ
தேர்ந்தெடுத்து தந்ததில்லை

நடைமுறை இப்படியிருக்க
எழுதி கொட்டுகிறாய்
அடுக்கடுக்காய்
ஆயிரத்தெட்டு காதல் கவிதைகளை

யார் மெச்சிக்கொள்ள????
------------------------------------
இரயில் சந்திப்புகள் போன்று மழைக்கு ஒதுங்கும் போதும் ஒருவனை சந்திக்கும் கவிஞர் ... அவனை நினைவில் நிறுத்த ஒரு பெயரை அவரே சூட்டுவது அழகு.....

7)
ஒரு மழைக்கால இரவில் 
நனையாமலிருக்க
ஒதுங்கிய
அந்த பூட்டிய கடை வாசலில்
அவனை முதல்முறையாக சந்தித்தேன்
கையில் சிகரெட்
அனாவசிய உடல் மொழி
சட்டைப்பையில் 
சொருகப்பட்ட 
கழுத்திலிருந்து தொங்கும்
அடையாள அட்டை 
குறுந்தாடியென
நினைவில் நிற்கும் முகம்
பார்த்தவுடன் "பாஸ்!
தம்மடிக்கிறீங்களா!" என
தொடங்கி மழைக்கு போட்டியாக
தன் ஸ்தல புராணத்தை
சொல்லி கொண்டே இருந்தான்
மழை நின்றபின்
எங்கள் பெயர்களை 
ஒருவருக்கொருவர் சொல்லி கொள்ளாமலே
விடைபெற்ற பிறகு
அவனின் பெயர் என்னவாக இருக்குமென
யோசித்து பார்க்கையில்
"மழைக்காரனென” பெயர் சூட்டி
பதிந்து வைக்கிறது என் மனம்
என் பெயரை அவன் மனம்
என்னவென பதிவு செய்திருக்கிறதோ????

#சந்திப்புகள்
----------------------
நீ காற்று நான் மரம் என்ற ஒரு திரையிசைப் பாடலை நினைவு செய்தாலும்...இந்தக் கவிதை யதார்த்த வெளியில் பயணிப்பதால் மாறுபட்டு மிளிர்கிறது....

8)
நீ மழை 
நான் வறண்ட பூமி
உன் துளி முத்தங்கள் 
எப்போதும் கிடைப்பதில்லை

நீ வானம் 
நான் கடல்
ஒரே மாதிரி இருந்தாலும்
தொட மட்டும் முடிவதில்லை

நீ அருவி 
நான் மலையுச்சி
மேலிருந்து ரசிக்க முடியுமே தவிர
முழுதாக நனைய முடியாது

நீ இசை 
நான் மெளனம்
நீ இல்லாதபோது நானிருப்பேன்
நானில்லாதபோது நீயிருப்பாய்

நீ நதி 
நான் கூழாங்கல்
என்னை நனைத்து போனாலும்
கடலோடு மட்டுமே முழுதாய் சேருகிறாய்

நீ கோபுரம்
நான் உள்ளிருக்கும் சிலை
யாருக்கு தரிசனம் தந்தாலும்
எனக்கு மட்டும் அது வாய்ப்பதில்லை

நீ நிலவு
நான் பகல்
நான் மறையும் நேரம் நீ தோன்றுவாய்
நீ மறையும் நேரம் நான் தோன்றுவேன்

நீ ஊடல்
நான் காதல்
ஒன்றோடொன்று கலந்தே இருப்பதால்
இது மட்டுமே விதிவிலக்கு.....
-----------------------------
புதிய பொருளாதாரம், உலகளாவிய பொருளாதாரம் என்பவையெல்லாம் இப்போது நாம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கும் காலர் சொற்கள்! அது மட்டுமில்லாமல் பன்னாட்டு வர்த்தகம் என்ற பெயரில் மக்களை மூளைச் சலவை செய்துக் கொண்டிருக்கிறது புது வர்த்தகக் கொள்கை.. இவையெல்லாம் மக்களுக்கானவையா என்றால் அதுதான் இல்லை! இது மேல் தட்டு வர்கத்தின் சுரண்டல் மொழி... எட்டு வழிச்சாலை , சாலை விரிவாக்கம் இவை எல்லாமே விவசாயத்தை அழித்து அதன் முதுகில் பயணிக்கும் சாத்தானிசம்.. இதையே ஒரு கனவின் வ இ பயணப்பட்டு சொல்ல முயல்கிறார் கவிஞர்...
9)
அரூப கனவொன்றின்
நடுவில் திடுக்கிட்டு விழிக்கிறேன்
வேர்த்துக் கொட்டிய
வியர்வை முத்துக்களை துடைத்தபடி
துண்டான அக்கனவின் நினைவுகளை
ஒன்றாக்க முயற்சி செய்கிறேன்
முடிந்தவரை....

சோடியம் வேப்பர் விளக்குகளின்
அதீத ஒளியில் கண்கள் கூச...

இரவின் நிசப்தத்தில் உறுமும்
வாகன இரைச்சல்களின் சத்தத்திற்கு மத்தியில்...

வயல்வெளியென நினைத்து
நெடுஞ்சாலையின் நடுவே
சலனமின்றி நடந்து போய்
கொண்டிருக்கிறேன்....

ஒரு சிற்றுந்து இடிக்கிறது
விழுந்து எழுந்து 
முன்னிலும் வேகமாக
மீண்டும் நடக்கிறேன்...

ஒரு கனரக வாகனத்தில்
அடிபட்டு உடலின் அனைத்து துளைகளிலும்
குருதி வழிய மீண்டும்
நடக்கிறேன் ஆக்ரோஷம்
குறையாமல்....

இதற்குமேல் எவ்வளவு முயன்றும்
நினைவு படுத்த முடியவில்லை..‌..

ஆசுவாசப்படுத்திய படி
தொலைக்காட்சியை பார்க்கிறேன்
"புதிதாக அமைந்த பதினாறு
வழி சாலையின் சுங்க வசூல்
வரலாறு காணாத உச்சத்தை
தொட்டிருக்கிறது - அண்மை செய்தி"

எங்கோ ஓர் மூலையில்
விரக்தி சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தன
அழிக்கப்பட்ட
வயல்களும் மரங்களும்.....
---------------------------------

கவிஞரின் மற்றும் சில கவிதைகள்:

10

ஆயிரம் வண்டிச்சத்தம் கேட்டாலும்
அதிலிருந்து தன் அப்பாவின்
வண்டிச்சத்தத்தை பிரித்தெடுக்கும்
வித்தை பெற்றவர்கள்....

அப்பாவின் பணக்கஷ்டத்தை
அம்மா உணரும் முன் தானுணர்ந்து
அம்மாவையே அடக்குபவர்கள்....

அப்பாவின் முகவாட்டத்தை
முத்தங்களால் விரட்டி
நேசங்களால் நிரப்பி
புத்துணர்வு தருபவர்கள்....

அப்பா வெளியூர் சென்ற நாட்களில்
அலைபேசியில் செல்லக்கோபங்கள் காட்டி
அவர் வரும்போது 
அனைத்தையும் மறந்து
வாசல்வரை ஓடிவந்து
கட்டி அணைப்பவர்கள்...

ஆயிரம் உருண்டைகள் அம்மா
ஊட்டினாலும் அப்பா வந்து
ஊட்டும் ஒற்றை உருண்டைக்காக
தூக்கம் மறந்து
காத்துக் கிடப்பவர்கள்....

திருமணத்தின்போது  தன் பிரிவை
தந்தை எப்படி தாங்குவாரென
நினைத்து தன் பாரத்தை 
மனதிற்குள் வைத்துப் பூட்டி
புன்னகையுடன் 
கை அசைத்தவர்கள்....

கணவன் வந்து பல ஆண்டுகளாயினும்
இந்த உலகிலேயே நான்
மிகவும் நேசிக்கும் ஆண்
எனது தந்தைதான் என
தைரியமாய் சொல்பவர்கள்....

தாயான தேவதைகள்
மகள்கள்....................

11)
ஒரு கிலோ முப்பது ரூபாய்க்கு
விற்ற ரவையை
அரை கிலோ முப்பது ரூபாயென
விற்கிறார் மளிகை கடைக்காரர்  
ஆயிரம் ரூபாயை
தாண்டி போய்க்கொண்டிருக்கிறது
ஆட்டுக்கறியின் விலை
அதிகம் விலை வைத்து 
விற்க கூடாதென அரசாங்கம்
எச்சரித்த முகக்கவசம்
நாற்பது ரூபாய்க்கும்
சாதாரண கைக்குட்டைகள்
முப்பது ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன  
அந்த வேப்பமரத்தடியில்
பல வருடங்களாக 
காய்கறி விற்கும் பாட்டி மட்டும்
முந்தானையால் பாதி முகத்தை 
மூடிக்கொண்டு 
குவித்து வைத்த காய்கறிகளோடு
இன்னமும் கொசுறாய்
தந்து கொண்டிருக்கிறாள்
கொஞ்சம் கொத்தமல்லியையும் 
நிறைய மனிதத்தையும்.....


12)
எனக்கும் என் தம்பிக்கும் சேர்த்து 
மொத்தம் நான்கு அரை டவுசர்கள்
சறுக்கு மரம் ஏறி விளையாடும் பழக்கம் கொண்ட எனக்கு சீக்கிரமாகவே கிழிந்து விடும் 
"போஸ்ட் ஆபீஸ் போஸ்ட் ஆஃபீஸ்" என்று  
கேலி செய்யும் நண்பர்களிடையே
புட்டம் தெரியும் அவைகளை 
அணிந்து செல்வதற்கு கூச்சப்பட்டு 
என் தம்பியின் டவுசர்களை 
எடுத்து மாட்டிக் கொள்வேன்
அதைக் கண்டுபிடித்து முதலில் என்னை திட்டினாலும் பின்பு அம்மாவிடம் சென்று 
ஒட்டு துணிகளைத் தைக்க சொல்லி 
என் டவுசர்களை அவன் போட்டு செல்வான்
இன்று வருடங்களை விழுங்கிய
காலத்தின் விந்தையில்
அதே தம்பியின் மகிழுந்தை ஒரே ஒரு நாள்
அவசரத்திற்கு தயங்கி தயங்கி கேட்க
"இப்பத்தான் பஸ்ஸெல்லாம் விட்டுட்டாங்களாமே
கூட்டமும் இல்லையாம். அதிலே போயிரு"
பேசி முடிக்கும் முன்பே தொடர்பற்று போகிறது
அவனின் அலைபேசி.......


13)
இதோடு சேர்த்து
இருபதாவது பீடி
இன்று காலை முதல்
இரவு வரை
அப்படியென்ன இருக்கு
இந்த புகையில்??
மெதுவாய் கேட்டேன்....

நாசியில் வழியும்
புகை கசிய
ஒரு பெரும் புன்னகை
வெளிப்பட்டது
அந்த பெரியவரிடம்....

"சின்ன வயசுல
என்னைய மாதிரி
பீடி குடிச்சவனும் இல்லை
சரோஜாவை கட்டின பிறகு
அவகிட்ட பண்ண
சத்தியத்துக்காக 
நாப்பது வருஷமா
பீடியே குடிக்காம இருந்தேன்
அவ சாகும்போது
என் ஞாபகம் 
வரும்போது மட்டும்
பீடி குடிச்சுக்க மாமான்னு
போய் சேர்ந்துட்டா
இதோ இரண்டு வருஷமா 
சரோஜா நினைப்பை
இந்த பீடி தான்
தீர்த்து வைக்குது
குடிக்கவா??
நிறுத்தவா??"

பதிலேதும் சொல்லாமல்
இன்னொரு
புலி மான் பீடி கட்டு
வாங்கி தந்து விட்டு 
நான் நகர...

புகை ரூபத்தில்
சிரித்து கொண்டிருக்கிறாள்
அவரின் சரோஜா.....

14)

பெட்டி நிறைய
முகமூடிகளை 
எடுத்துக்கொண்டு
பூலோகத்தில் 
அடியெடுத்து வைக்கிறான் கடவுள்
மனிதனாகும் ஆசையில்......

இறங்கியவுடன் பிச்சை கேட்கும்
யாசகனிடம் கோப முகமூடி
அணிந்து கொண்டு
விரட்டியடிக்கிறான்....

பின்பு காதல் முகமூடி
போட்டுக்கொண்டு
தன் காதலியிடம்
பேசிக்கொண்டு இருக்கையில்
எதிர்ப்படும் அதே யாசகனை
அழைத்து இரக்க முகமூடி அணிந்து
சில்லறை இடுகிறான்....

"என்ன நைனா??
 கொஞ்ச நேரம் முன்னாடி
 அப்படி திட்டிட்டு
 இப்ப ஃபிகர் முன்னாடி 
 சீன் போடறியா??" என
அந்த யாசகன் கேள்விகளை
அனாயசமாக வீச.....

அணிந்த அனைத்து முகமூடிகளும்
கிழிந்து தொங்க
மனிதனாக முடியாமல்
ஏமாந்து போகிறான் கடவுள்.....

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

யாழினி


0   484   0  
November 2022

மெகராஜ் பேகம்


0   378   0  
September 2022

ஷீபா ராணி


0   644   0  
August 2021

ஜோதி சரண்


0   765   0  
August 2020