மியாவ்! மியாவ்!
--------------------------
வெளிர் மஞ்சள் நிறத்தில் இரண்டு பூனைக்குட்டிகள்... வெண்மை நிறத்தில் இரண்டு பூனைக்குட்டிகளுமாக, பார்க்கும்போதே தூக்கிக் கொஞ்சத் தூண்டும்படி அவ்வளவு அழகாயிருந்தன குட்டிகள். பிறந்து சில நாட்களே இருக்கலாம்.
சுற்றிச்சுற்றி அபார்ட்மென்ட் வீடுகளாயிருந்த அப்பகுதியில், தரைத்தளத்திலிருந்த ஆனந்தின் அபார்ட்மென்ட் பின்புறமுள்ள அபார்ட்மென்டின் தரைத்தள வீட்டின் வெளிப்புறச் சுவரிலிருந்த ஏசி பெட்டியின் மீது தான் இந்த பூனைக்குட்டிகள் ஒன்றின்மீது ஒன்றாக நெளித்தபடி படுத்திருந்தன. ஆனந்தின் வீட்டுக்கும் அந்த பூனைக்குட்டிகளின் மியாவ் சத்தம் இவர்களுக்கு கேட்கும் தூரத்தில்தான் அவை இருந்தன. அந்த குட்டிகள் கீழே விழ வாய்ப்பில்லாதபடி அந்த ஏசி பெட்டிக்கு பாதுகாப்பாக இரும்புக் கம்பிகளாலான கூண்டு போல் ஏசி பெட்டியைச் சுற்றி மாட்டியிருந்தார்கள். அதில் ஒரு மூலையிலிருந்த சிறிய இடைவெளி வழியாகத்தான் இந்த குட்டிகளை தாய்ப்பூனை கவ்விச் சென்று வைத்திருக்க வேண்டும். அந்த ஏசி பெட்டியருகே வளர்ந்திருந்த புங்கை மரத்தின் நிழல் படர்ந்திருந்ததால், குட்டிகளுக்கு பாதுகாப்பென நினைத்து அந்த பெட்டியைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடும்.
நான்கு நாட்களுக்கு முன்னர் தான் தாய்ப்பூனையையும் இந்த குட்டிகளையும் பார்த்துவிட்டு, "டாடீ... இங்க வாங்களேன்! ஒரு சர்ப்ரைஸ்!" என ஆனந்தை ஸ்வேதா அழைக்க, வருண் முந்திக்கொண்டு, "ஆமா டாடி... க்யூட் புஸ்ஸி கேட் குட்டிங்க டாடீ!" என்று சர்ப்ரைஸை அடுத்த நொடியிலேயே உடைத்துவிட்டு ஆனந்தின் கையைப் பிடித்து இழுத்தான். குழந்தைகள் சர்ப்ரைஸின் அழகியலே இதுதான்! இருவரின் அழைப்பிலுமிருந்த அன்பு, லேப்டாப்பிலிருந்து அவனை பிரித்தெடுத்து, பெட்ரூம் ஜன்னலருகே இழுத்துச்சென்றது. ஜன்னல் வழியே பார்த்தபோது அந்த ஏசிப்பெட்டியின் மேலே நான்கு பூனைக்குட்டிகளும், ஒரு தாய்ப்பூனையும் கண்ணில்பட்டன. இரண்டு குட்டிகள் பாலருந்த, இரண்டு குட்டிகள் ஒன்றையொன்று சீண்டி விளையாடின. அனைத்தும் அந்த ஏசி பெட்டி மைதான அளவுக்குள் தான்.
முதலில் பார்த்ததுமே எப்படி அந்த பூனைக் குடும்பம் அந்த ஏசி பெட்டியின் கூண்டுக்குள் நுழைந்திருக்கும் என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதற்கான இடைவெளி இருப்பதைப் பார்த்தபின், ஹேமாவை அழைத்துக்காட்டி, அந்த தாய்ப்பூனையின் புத்திக்கூர்மையைப் பாராட்டினான். "அம்மாமார்கள் எப்பவுமே சமத்து தான்... புத்திசாலிங்க தான்!" என்று தனக்கும் சேர்த்துப் பாராட்டிக்கொண்டாள் ஹேமா. அன்றிலிருந்து அதை வேடிக்கை பார்ப்பது தான் ஆண்டு விடுமுறையில் ஸ்வேதாவுக்கும் வருணுக்குமான பொழுதுபோக்கே! அந்த நான்கு குட்டிகளுக்கும் இங்கிருந்தபடியே சின்சான், ஐசான், டோரிமான், ஹிமாவாரி என்று பெயர் வைத்து ரசிக்கத் தொடங்கினார்கள்.
எங்கேயாவது சுற்றித்திரிந்து உணவு சாப்பிட்டுவிட்டு குட்டிப் பூனைகளிடம் வந்து, குட்டிகளுக்கு பாலூட்டி வந்த தாய்ப்பூனை, கடந்த இரு நாட்களாகக் கண்ணில் படவில்லை. முதல் நாளில் அந்த வித்தியாசம் இவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் குட்டிகளின் 'மியாவ் மியாவ்' சத்தம் இரவிலும்கூட அடங்காமல் கேட்டுக்கொண்டேயிருந்ததால், தாய்ப்பூனை காணாமல்போனது இவர்களின் கவனத்துக்கு வந்தது. "தாய்ப்பூனையை நீ பார்த்தியா? நீ பார்த்தியா?" என்று இவர்களுக்குள் கேட்டுக்கொண்டபோது தான், தாய்ப்பூனை இரு நாட்களாகவே இங்கே வராதது தெரியவந்தது. நான்கு பூனைக்குட்டிகளும் விடாமல் பாலுக்காக "மியாவ்... மியாவ்" எனக் கத்திக்கொண்டேயிருந்தன. இரவெல்லாம் பூனைக்குட்டிகளின் குரல்கள் இவர்களைத் தூங்க விடவில்லை. மறுநாளிலும் தாய்ப்பூனை வரவேயில்லை.
"அதுங்களுக்கு நாமளாவது பால் எதாவது வைக்க முடியுமாப்பா?" ஹேமா மனச்சங்கடத்தோடு ஆனந்திடம் கேட்டாள்.
"அது கஷ்டம் ஹேமா. அந்த ஏசி பெட்டி ஹைட்டுக்கு ஏறி, பாலை அந்த இரும்பு கூண்டுக்குள்ள கை நுழைச்சு கொண்டு போக முடியாது. என்னோட கையே அதுக்குள்ள நுழையாது. அதும்போக, அதுங்களுக்கு பாலை வச்சாலும் குடிக்கத் தெரியாது. அதுக்கெல்லாம் இப்போதைக்கு ஸ்பூனை வச்சுத்தான் குடுக்கணும். அதுக்கு அதுங்களை கீழ இறக்கணும். அப்டியே இறக்கினாலும் அந்தக் குட்டிங்கள நம்மளால பாதுகாப்பா வளர்க்கவும் முடியாது. தெரு நாய்ங்க கடிச்சு சாகடிச்சுடுங்க" சும்மாவே ஆனந்த் சோம்பேறி! எந்த வேலையைச் சொன்னாலும் ஒருமுறைக்கு நான்கு முறை சொன்னால் தான் செய்வான். இப்போது பூனைக்குட்டிகளுக்காக ஏதேதோ கம்பி கட்டினான்!
"அந்த ஏசிப்பெட்டி வீட்டுக்காரங்க எங்க போயிருக்காங்கன்னு கேக்கச் சொன்னேனே, கேட்டீங்களாப்பா?"
"அப்டி விசாரிச்சா நம்மள எதும் சந்தேகப்படுவாங்களோன்னு பயந்துக்கிட்டே தான் அபார்ட்மென்ட் செக்யூரிட்டிகிட்ட விஷயத்த சொல்லி விசாரிச்சேன் ஹேமா. அவங்க நார்த் இந்தியன் ஃபேமிலியாம். எதோ ஃபங்சன்னு கொல்கொத்தா போயிருக்காங்களாம்... வர ஒன் வீக் ஆகலாம்னு சொன்னாரு"
"தாய்ப்பூனை இருந்தவரைக்கும் பிரச்சனையில்ல... இப்ப ரெண்டு நாளா அதையும் காணல. அதுக்கு என்னாச்சுன்னும் தெரியல. கண்ணு முன்னால இந்த குட்டிங்க பசியில கத்துறதப் பார்த்துட்டு என்னால நிம்மதியா சாப்பிடக்கூட முடியலப்பா. பாவம்பா... எதாவது பண்ணியாகணும்... என்ன பண்ணலாம்?"
"எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலையே. அதுங்க குட்டியா இருக்குதுங்க. அதுங்கள குச்சிய வச்சு கீழ தள்ளிவிட்டா பாவம், அடிபட்டு செத்துகித்து போயிடுங்க. பூனைப்பாவம் பொல்லாததும்பாங்க. அந்தப் பாவம் நமக்கு எதுக்கு?"
"அதுங்க இப்டியே பாலக் குடிக்காம செத்துக்கித்துப் போனாலும் அந்த பாவம் நமக்குத் தாம்ப்பா."
"எனக்கு எதும் ஐடியா வரல ஹேமா" என்றவன், சிறிது நேரம் யோசித்தபின், "எதுக்கும் நான் எங்க ஆபீஸ் ஸ்டாஃப் ரகு கிட்ட கேட்டுப் பார்க்கறேன். அவரு வீட்டுல பெட்ஸ் வளர்க்குறாரு. அவரு எதாவது ஐடியா சொன்னாலும் சொல்வாரு"
"அப்டின்னா அவர நேர்லயே போயி கூட்டிட்டு வரலாம்ல?"
"நேர்லயே கூட்டிட்டு வரவா? அவரு இருக்குறது திருவொற்றியூர். எங்க ஆபீஸ்லயே அவரு தான் ரொம்ப தூரத்துலருந்து வர்றவரு. அவரு நம்ம வீட்டுக்கு அவ்ளோ தூரம்லாம் வர முடியாது. வரவும் தேவையில்ல. யோசன சொன்னாலே போதும்."
"சரி, இப்பவே போன் போட்டு யோசனை கேளுங்கப்பா"
அதேபோல் போனைப் போட்டு விவரம் சொல்லவும், "சென்னை சிட்டி லிமிட்டுக்குள்ள தான் உங்க வீடு இருக்குதா?" என ஆனந்திடம் விசாரித்தவர், உடனே கார்ப்பரேஷனுக்கு தகவல் சொல்லச் சொன்னார். அவங்க வந்து பூனைக்குட்டிங்களை காப்பாத்துவாங்க என்று அவர் சொன்ன யோசனை சரியெனப்பட, உடனே இணையத்தை நோண்டி, கார்ப்பரேஷன் எண்ணை எடுத்தான். அதற்கு கால் செய்தால் எங்கேஜ்டாக இருந்தது. திரும்பத் திரும்ப முயன்றும் கிடைக்கவில்லை.
"என்னப்பா... போன் கிடைக்கலையா?"
"ஆமா ஹேமா. எங்கேஜ்டா இருக்கு. அடுத்து என்ன பண்ணன்னு தெரியல."
"வெயிட் பண்ணுங்க. கொஞ்ச நேரம் கழிச்சு போன் போட்டுப் பாருங்க"
இவர்கள் போன் போட்டு முயற்சிக்கும்போது, ஸ்வேதா ஜன்னல் வழியாக அந்த பூனைக்குட்டிகளிடம், "சின்சான்... ஐசான்... உங்களையெல்லாம் சீக்கிரமே காப்பாத்திடுவோம். எங்க டாடி வந்து உங்களை காப்பாத்துவாங்க. அழாதீங்க!" என்று ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்தாள்.
அடுத்த அரை மணி நேரம் கழித்து மீண்டும் கார்ப்பரேஷனுக்கு போன் போட்டான் ஆனந்த். அப்போதும் எங்கேஜ்டாக இருக்கவே, சட்டென யோசனை வந்து, கார்ப்பரேஷன் மெயில் ஐடியை தேடிக் கண்டுபிடித்தான்.
பூனைக்குட்டிகள் சிக்கிக்கொண்டு உணவின்றி தவிப்பதாகவும், உடனே கார்ப்பரேஷனிலிருந்து வந்து அவற்றை மீட்க வேண்டுமென்றும் கூறி வீட்டு எண் விவரங்களைக் கொடுத்து, பூனைக்குட்டிகளை இங்கிருந்தே ஜூம் செய்து எடுத்த ஒளிப்படங்களையும் இணைத்து மெயிலை தட்டிவிட்டான். திரும்ப கார்ப்பரேஷன் எண்ணுக்கு போன் போட, இப்போது மறுமுனையில் ஓர் முரட்டு ஆணின் குரலில் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. வீட்டு விலாசத்தைக் கூறிவிட்டு, பூனைக்குட்டிகளின் நிலையை எடுத்துச் சொன்னான்.
"சார், பூனைக்குட்டிங்க உயிரோட இருக்குறப்ப நாங்க என்ன சார் செய்றது? அதுங்க செத்துச்சுன்னா தான் சார் நாங்க ரிமூவ் பண்ணுவோம். உயிரோட இருக்குறத நீங்க தான் சார் பார்த்துக்கணும்." என்று அறிவுரை கூறினார்.
இப்படியொரு பதிலை அவன் எதிர்பார்க்கவேயில்லை. என்னவொரு மனிதாபிமானம்... இல்ல, உயிர்நேயமில்லாத பதில். யாராவது சாகக் கிடக்குறவங்களுக்கு மருத்துவ உதவி கேட்டால், செத்த பிறகு சொல்லியனுப்புங்கன்னு சொல்வாங்களா? எவ்வளவு அலட்சியமான பதில்! கோபம் சுர்ரென்று ஏற,
"ஏன் சார், உயிரோட இருக்குற பூனைய எங்களால காப்பாத்த முடியாம தான உதவி கேக்குறோம். இப்டி பொறுப்பில்லாம பதில் சொன்னா எப்டி சார்?"
"பூனை எங்கயாவது எசகுபிசகான இடத்துல குட்டி போட்டால் அதுக்கு கார்ப்பரேஷன் என்ன சார் செய்யும்? பூனைய வளர்க்குறவங்க தான சார் அத கவனிச்சுக்கணும்? நாயோ, மாடோ, பூனையோ செத்துக்கிடந்தால் அதுங்கள ரிமூவ் பண்றது தான் சார் எங்க வேலை. அதை காப்பாத்தணும்னா ஃபயர் ஆபீசுக்கு போன் போடுங்க சார். லீவ் நாளும் அதுவுமா போனை அட்டென்ட் பண்ணதுக்கு..." என்றபடி போன் துண்டிக்கப்பட்டது.
கார்ப்பரேஷனிலிருந்து எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் இல்லையென்றபோதும் அவர் இறுதியாக ஒரு வழி காட்டியிருந்தார். உடனே ஃபயர் ஆபீஸ்க்கு போன் போடுவதற்கு, 'சென்னை ஃபயர் சர்வீஸ் நம்பர்' என்று ஆங்கிலத்தில் கூகுள் செய்ததும் சென்னையிலுள்ள பல பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு நிலையங்களின் எண்கள் கிடைத்தன. அவனது பகுதி தீயணைப்பு நிலைய போன் நம்பருக்கு உடனே கால் செய்தான். அதில் விவரம் கேட்டவரிடம் திரும்பவும் முழு விவரத்தையும் சொன்னான். உடனே மறுமுனையில் இழுவையாக இருந்தது. "சார்... பூனைக்குட்டிக்கா... அதுக்கு நாங்களா?..."
"ஏன் சார், நீங்க வந்து அதுங்கள காப்பாத்த மாட்டீங்களா?"
"அதில்லைங்க சார்... எதாவது பாம்பு வந்துடுச்சுன்னா வந்து புடிப்போம் சார். தீப்பிடிச்சா அணைக்கக் கூப்பிடலாம் சார்... பூனைக்குட்டிக்காகல்லாம்... இப்ப எங்க வண்டி வேற வேலையா போயிருக்கு சார்."
"அப்போ வண்டி வந்ததும் வருவீங்களா சார்?"
"ஏன் சார்... நீங்களே யாரையாவது வச்சு அதுங்கள ரெஸ்க்யூ பண்ணுங்களேன் சார்... நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க சார்... இதையெல்லாம் நாங்க கவர்மென்ட் கிட்ட கணக்கு காட்டுனா எதோ பொய்க்கணக்கு காட்டுறதா நினைப்பாங்க சார்" என்றவரிடம்,
"சார்... அதுக்காக நான் என் வீட்டுக்கு தீயா சார் வச்சுக்க முடியும்? இப்டி பொறுப்பில்லாம சொல்றீங்களே சார்... வைங்க சார்!" இந்த முறை கோபத்தில் ஆனந்த் தான் போனை கட் செய்தான்.
ஆனந்தின் கோபமான பேச்சைக் கேட்டபோதே மறுமுனையில் என்ன சொல்லியிருப்பார்கள் என்பதை ஹேமா யூகித்தாள்.
"ஏம்ப்பா, வேணும்னா ப்ளூ கிராஸ்க்கு கால் பண்ணலாமா? அவங்கள சொன்னா நிச்சயம் வந்து குட்டிங்கள தூக்கிட்டு போயி காப்பாத்துவாங்க"
"ப்ளூ கிராஸ்க்கா?" என்று அலுப்பாக அவன் இழுக்க,
"விடுங்க, நானே போன் பண்றேன். அவங்க நம்பர நானே எடுத்துட்டேன்" என்றவள், ப்ளூ கிராஸ்க்கு போன் செய்ய, எடுத்த பெண்ணிடம் விவரத்தை கூறினாள் ஹேமா.
"சாரி மேடம், நாங்க வந்தெல்லாம் தூக்கிட்டு வர முடியாது. நீங்களா கொண்டு வந்து தான் விடணும். அதும், இப்போ எங்களுக்கே இட நெருக்கடியா இருக்குது. குட்டிங்கள வளர்க்கறதுன்னா ரிஸ்க்"
"என்ன மேடம், விலங்குகளை பராமரிக்கிறது தான உங்க வேலையே?"
"மேடம், அது வேலையில்ல... சேவை. ஆனால் ஒரு வீட்டுல பராமரிக்க முடியாத விலங்குகளைத்தான் நாங்க கேரிங் எடுத்துப்போம். அதுவும் அவங்களே கொண்டுவந்து விட்டால் தான். அதும் கூட எங்களுக்கு பராமரிக்க வசதி இருந்தால் தான். குட்டிப்பூனைங்கள நாங்க வந்தெல்லாம் காப்பாத்தி எடுத்துட்டு வர முடியாது மேடம்"
ஒவ்வொரு இடத்திலும் போலீஸ்காரர்கள் அவரவர் லிமிட்டை சொல்வதுபோல அவரவர்க்கான பணி விவரத்தைக் கூறி, கையை விரித்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் திரும்ப தனது அலுவலக நண்பருக்கே போன் போட்டு, அத்தனை தோல்விகளையும் வரிசையாக எடுத்துக்கூறினான்.
"ஆனந்த் சார்... இவ்ளோ தூரம் மெனக்கெட்டு முயற்சி பண்றீங்களே... உண்மையில் உங்களுக்கு இருக்குற அக்கறைக்கு நீங்களே அதுங்களை மீட்க முயற்சி பண்ணலாம் சார்."
"இல்லைங்க... அதுங்களை நான் தூக்குறதே கஷ்டம். அதும்போக, அதுகள இங்க கீழ வச்சு பராமரிக்கிறதும் கஷ்டம். தெரு நாய்ங்க அதுங்கள கடிச்சிடும் சார்."
"அதெல்லாம் ஒண்ணும் யோசிக்காதீங்க சார். மொதல்ல அதுங்கள எப்படி வெளில எடுக்கறதுன்னு யோசிங்க சார். கார்ப்பரேஷன்காரங்களோ, ப்ளூ கிராஸோ வந்தாலும் எப்படியோ எடுப்பாங்க தான...அதே போல நீங்களே அதுங்கள வெளில எடுக்கப் பாருங்க சார். கொஞ்சம் ட்ரை பண்ணினா எடுத்துடலாம் சார்."
இந்த அளவுக்கு ஆனந்தை பூஸ்ட் அப் செய்யவும், செயலில் இறங்கினான். வீட்டிலிருப்பதிலேயே உயரமான ஸ்டூலை எடுத்துக்கொண்டு அந்த அபார்ட்மென்ட் செக்யூரிட்டியிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு, சாட்சிக்கு அவரையும் அழைத்துக்கொண்டு அபார்ட்மென்ட்டின் பின்புறத்துக்கு சென்றவன், ஸ்டூலை ஹேமாவை பிடிக்கச் சொல்லிவிட்டு, அதன்மேல் ஏறினான். அந்த அபார்ட்மென்ட் செக்யூரிட்டியும் "பாத்து சார்... பாத்து சார்" என்று ஆதரவளித்தார். எக்கி நின்றபோதும் ஆனந்தின் கை அந்த இரும்புக் கூண்டுக்குள் நுழையவில்லை. அப்போது அந்த கூண்டுக்கும், சுவற்றுக்கும் இடையே இன்னொரு இடைவெளி கை நுழைவதற்கேற்ப இருந்தது. அதன் வழியே சுவரில் கை உரச உள் நுழைத்தான். அவனது கை நுழைய, நுழைய குட்டிகள் சற்றே தள்ளிச்செல்ல, ஹேமா ஒரு குச்சி மூலம் குட்டிகளை அவனது கைப்பக்கமாகத் தள்ளினாள். அந்த மாலை நேரத்திலும் வியர்த்துக்கொண்ட, ஒரு பூனைக்குட்டியை பாதுகாப்பாக வெளியே எடுக்கவும், அவனுக்கு நம்பிக்கை பிறந்தது. அதன்பின் ஒவ்வொன்றாக வெளியே எடுக்க எடுக்க, ஹேமாவுக்கும் செக்யூரிட்டிக்கும் உற்சாகம். மொத்தமாக நான்கையும் வெளியே எடுக்கவும் பெரிய சாதனை போல் தோன்றியது! செக்யூரிட்டியும், "சூப்பர் சார்... பாவம், இந்த குட்டிங்களக் காப்பாத்தணும்னு உங்களுக்கு மனசு வந்ததே சார்!" என்று கைகொடுத்தார். ஆனந்த மனதுக்குள் அலுவலக நண்பருக்கு நன்றி சொன்னான்.
உற்சாகமாக நான்கு குட்டிகளையும் வீட்டுக்கு எடுத்துச் செல்லவும், உடனே வருணும் ஸ்வேதாவும் ஒரு காலி அட்டைப்பெட்டியை எடுத்துவந்தார்கள். அதற்குள் அந்த பூனைக்குட்டிகளை விட்டுவிட்டு பால் ஊற்றி வைத்தார்கள். அவற்றால் பாலை குடிக்க முடியவில்லை. ஹேமா, ஒரு ஸ்பூனை எடுத்துவந்து ஒரு பூனைக்குட்டிக்கு மெல்ல மெல்ல பாலை அருந்தக்கொடுக்க, மற்ற பூனைகளுக்கு அடம்பிடித்து ஸ்வேதாவும் வருணும் பாலைப் புகட்டினார்கள். பாலை நான்கு குட்டிகளும் குடித்து முடிக்கவும் பெரிய நிம்மதி. அன்றிரவு குட்டிகளும் இவர்கள் வீட்டிலேயே நிம்மதியாக உறங்கின.
மறுநாள் காலையிலேயே "மியாவ்" என்ற சத்தம் இவர்களை எழுப்பியது. இந்த "மியாவ்" பெரிய பூனையின்... தாய்ப்பூனையின் மியாவ்! எங்கோ விழுந்தெழுந்து வந்தது போல் உடம்பெல்லாம் அழுக்கோடு அபார்ட்மென்ட்டின் முன்புறமாக குட்டிகளைத் தேடியலைந்தது. அதைக் கண்டதும் குட்டிகளைவிட இவர்களுக்கு பெரிய உற்சாகம். மெல்ல குட்டிகளைத் தூக்கி அதற்கு காட்டியவர்கள், அந்த பூனைக்கும் பாலை வைக்க, வேகமாக வந்து பாலைக் குடித்துவிட்டு, குட்டிகளுக்கு பால் கொடுக்கத் தொடங்கியது. அப்போது ஆனந்திற்கு மெயில் அலர்ட் வர, கார்ப்பரேஷனிலிருந்து தான் மெயில். முந்தின நாள் அனுப்பிய மெயிலுக்கு, "உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது!" என்ற செய்தி அதில் வந்திருந்தது!
- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்