விஜயகுமார் ஜெயராமன்
சிறுகதை வரிசை எண்
# 101
***சிறுகதை - நகருக்கு மிக அருகில்...
***ஆசிரியர் - விஜயகுமார் ஜெயராமன்
'காப்பாத்துங்க...காப்பாத்துங்க...' என்ற அலறல் சத்தம் கேட்டவுடன் அலறி அடித்துக்கொண்டு எழுந்தாள் மகாலட்சுமி.
தூக்கம் கலையாமலே கையை காலை ஆட்டி கத்திக்கொண்டிருந்த கணவன் கண்ணனின் தோளை உலுக்கி எழுப்பியபடியே,
'டெய்லி நைட் உங்களுக்கு இதே வேலையா போச்சு. என்னோட தூக்கத்தை வேற கெடுக்கறீங்க. காலையில எனக்கு எவ்ளோ வேலை இருக்கு தெரியுமா. நைட் முழுசும் கனவு கண்டு அலறி என்னோட தூக்கத்தை கெடுத்துட்டு நீங்க மட்டும் காலையில கும்பகர்ணன் மாதிரி குறட்டை விட்டு தூங்குவீங்க'
என்று சொல்லிக்கொண்டே இருக்கையில், கண்ணன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து அலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தான்.
அவனை கோபமாக பார்த்த மகாலட்சுமி,
'சாருக்கு இன்னைக்கு புது கனவா? இல்ல அதே கனவு தானா?' என்று கேட்டதும்,
'அதே கனவு தான் மகா' என்று பரிதாபமாக சொன்னான் கண்ணன்
'ஊர்ல உலகத்துல இல்லாத அதிசயமா உங்களுக்கு மட்டும் தான் விதவிதமா கனவு வருது. தூங்கறதுக்கு முன்னாடி கண்ட கண்ட இங்கிலிஷ் படத்தை ஓடிடி ல பாக்காதீங்கன்னா கேக்கறீங்களா?'
'இல்ல மகா. இன்னைக்கு நைட் நான் இங்கிலிஷ் படம் எதுவும் பார்க்கல. ஆனாலும் அதே கனவு திரும்ப திரும்ப வருது. எனக்கு பயமா இருக்கு. ஒருவேளை பேய் ஏதாவது இருக்குமோ இங்க?'
'ஆமா, இவருக்கு மட்டும் தனியா பேய் வருது. பேய் படத்துல கூட ஒரு ஆலமரமோ அரசமரமோ தான் வீட்டை பொளந்துக்கிட்டு வந்து ஆளை அப்படியே முழுங்கற மாதிரி காட்டுவான். உங்களுக்கு மட்டும் ஒரு தம்மாத்தூண்டு கடலை செடிக்குள்ள பேய் ஒளிஞ்சிகிட்டு வருது' என்று சற்று நக்கலாக சொல்லியவுடன்,
'கிண்டல் பண்ணாத மகா. உண்மையா தான் சொல்றேன். டெய்லி நைட் அச்சு அசலா அதே கனவு வருது. ஒரு வேளை இந்த வீடு ராசியான வீடு இல்லையோ?' என்று கேட்டவனை கோபமாக பார்த்தபடியே,
'ஏதாவது உளறாதீங்க. இந்த வீட்டை கட்டி குடிவந்தப்புறம் தான் நெறய நல்ல விஷயங்கள் எல்லாம் நடந்திருக்கு'
அது நகரை ஒட்டி புதிதாக வளர்ச்சியடைந்த புறநகர் பகுதி. புதிய நிறுவனங்கள் வரவால் நகர் பெரிதாகி கொண்டிருந்தது. பல விளைநிலங்களும் வீட்டு மனைகளாக மாறிக்கொண்டிருந்தன. மனை விலையும், வீட்டு விலையும் தாறுமாறாக ஏறிக்கொண்டிருந்தது. கண்ணன் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிசெய்து கொண்டிருக்கிறான். ஒரு தனியார் வங்கியில் வீட்டுக்கடன் பெற்று அந்த மனைப்பிரிவில் ஒரு மனை வாங்கி அதில் வீடு கட்டி குடியேறி இன்றோடு ஒரு வருடம் ஆகிறது.
சில நாட்கள் முன்பு வரை எந்த பிரச்னையும் இல்லை. கடந்த நான்கு நாட்களாக தான் இரவு தூக்கத்தில் ஒரு விநோதமான கனவு வந்து அவனை எழுப்பிக்கொண்டிருந்தது.
அந்த கனவில், மண்ணில் இருந்து கொஞ்சமாக தலையை வெளியே நீட்டிக்கொண்டிருந்த ஒரு நிலக்கடலை செடி கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக வளர்ந்து அவனுடைய வீட்டை அடியில் இருந்து அப்படியே பெயர்த்துக்கொண்டு மேலே வந்து அவனை அப்படியே விழுங்குகிறது.
முதல் நாள் இரவு அந்த கனவு வந்தபோது அவன் பயந்தாலும் அதை எப்போதாவது வரும் ஒரு கெட்டகனவாகவே எடுத்துக்கொண்டான். ஆனால், அடுத்தடுத்த நாட்களிலும் அதே கனவு வந்தபோது தான் அவனுக்கு பயம் அதிகமானது.
கூகுளில் கூட அது போன்ற கனவுக்கு ஏதாவது விளக்கம் உள்ளதா என்றெல்லாம் தேடிப்பார்த்தான் அப்படி எதுவும் கூகுளாண்டவர் கொடுக்கவில்லை. ஏதாவது ஒரு ஜோசியரிடம் சென்று ஆலோசனை கேட்கலாம் என்று யோசித்தான். மகாவுக்கு தெரிந்தால் திட்டுவாள்.
நான்கு நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் ஒருவித குழப்ப மனநிலையுடன் அலுவலகம் சென்றுவந்து கொண்டிருந்தான்.
'ஆனா, திரும்ப திரும்ப அதே கனவு வருதே மகா. என்ன பண்றது' என்று கண்ணன் ஒருவித பயத்துடனே சொல்வதை கேட்டதும் அவனை பார்த்து பரிதாபமாக இருந்தது அவளுக்கு,
அவனின் அருகில் உட்கார்ந்து கைகளை பிடித்து கொண்டு,
'ஏதோ ஒரு கெட்டகனவு. அதுவே நின்னுடும். பயப்படாம தூங்குங்க.' என்று சொல்லிவிட்டு பூஜை அறைக்கு சென்று திருநீறு கொஞ்சம் எடுத்துவந்து அவன் நெற்றியில் வைத்துவிட்டாள்.
அலுவலகத்தில் ஒழுங்காக வேலை செய்யமுடியவில்லை. தூக்கம் கண்களை சுழற்றிக்கொண்டு வந்தது. கனவை பற்றி நண்பர்களிடம் ஆலோசனை கேட்டால் மதித்து சொல்வார்களா இல்லை கிண்டல் செய்வார்களா என்று தெரியவில்லை.
புது வீட்டுக்கு வந்து ஒரு வருடம் ஆகிறதே? இதுவரை வராத கனவு இப்போது ஏன் வரவேண்டும். இந்த ஒரு வாரத்தில் என்ன வேறுபாடு? என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு ஒரு நிகழ்வு திடீரென்று புலப்பட்டது.
ஆஹா....நிச்சயம் அதுவாகத்தான் இருக்க வேண்டும்.
கடந்த ஒரு வாரமாக தான் அவன் மாலை நேரங்களில் வேலையில் இருந்து சற்று இளைப்பாறுவதற்காக வெளியே செல்லும்போது சாலை ஓரமாக வறுத்த கடலை விற்றுக்கொண்டிருந்த ஒரு முதியவரிடம் பத்து ரூபாய்க்கு வறுத்த நிலக்கடலை வாங்கி கொறித்துக்கொண்டு அப்படியே சாலையை வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தான்.
ஆமாம். அந்த கடலை சாப்பிட்டதற்கு பின்பு தான் இந்த கனவு பிரச்னை ஆரம்பித்திருக்கிறது என்று யோசித்தவனுக்கு, உடனே ஒரு கேள்வியும் எழுந்தது.
'அதெப்படி கடலை சாப்பிட்டால் உடனே கடலை செடி கனவில் வந்து பயமுறுத்துமா? அந்த முதியவரிடம் எத்தனையோ பேர் வறுத்த கடலை வாங்கி சாப்பிடுகிறார்கள். அவ்வளவு பேருக்குமா இந்த கனவு வரும்?'
இருந்தாலும், அந்த கடலைக்கும் கனவுக்கும் ஏதோ ஒரு தொடர்பு நிச்சயமாக இருக்கிறது என்று எண்ணிக்கொண்டவன், இன்று மாலை அந்த முதியவரிடம் பேச்சு கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
மாலை 4 மணி. அலுவலகத்தில் பலர் கேன்டீனுக்கு தேநீர் அருந்த சென்றுவிட்டார்கள்.
கண்ணனும் எழுந்து வெளியே சென்றான். சாலை ஓரத்தில் அதே இடத்தில் அந்த முதியவர் தன்னுடைய தள்ளுவண்டியை வைத்துக்கொண்டு வறுத்த கடலை விற்றுக்கொண்டிருந்தார்.
அன்று தான் அவரை ஒழுங்காக கவனித்தான் கண்ணன். எப்படியும் 75 வயதுக்கு மேலிருக்கும். கறுத்த மெலிந்த தேகம். எலும்பும் தோலுமாக இருந்தாலும் வலுவானவராகவே தோன்றினார். நெடுநாள் உழைத்த தேகம் என்று பார்க்கும்போதே புரிந்தது.
தள்ளுவண்டியில் வைத்து விற்றுக்கொண்டிருக்கும் சாமானியர்களை யார் கவனிக்கிறார்கள் இந்த காலத்தில்., யார் நாலு வார்த்தை முகம் கொடுத்து பேசப்போகிறார்கள். பலரை பொறுத்தவரை அவர் ஒரு வியாபாரி. பணத்தை கொடுத்தால் பொருளை கொடுப்பார். அவ்வளவு தான்.
அதனால் தானோ என்னவோ, கண்ணன் அவரிடம் வறுத்த கடலையை வாங்கிக்கொண்டு நகராமல், வேறு பேச்சு பேசுகையில் அந்த மனிதருக்கு ஆச்சர்யமாக இருந்தது.
வறுத்த கடலை பொட்டலத்தை பிரித்துக்கொண்டே, கண்ணன் கேட்டான்.
'அய்யா, நீங்க எந்த ஊரு?'
'பூர்வீகம் குமணம்பாக்கம் சார். இப்போ இருக்கறது கரனை'
குமணம்பாக்கம் என்ற பேரை எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருந்தது.
'குடும்பம் எல்லாம் அங்கே தான் இருக்காங்களா'
'நாலு பொண்ணு சார். எல்லாரையும் கட்டிக்கொடுத்துட்டேன். வீட்டுக்காரம்மா செத்துப்போய் அஞ்சு வருஷமாச்சு. இப்போ தம்பி வீட்டுல தான் இருக்கேன். அவன் குடும்பமும் கஷ்ட ஜீவனம் தான் சார். கால் காணி குத்தகைக்கு எடுத்து மல்லாட்டை விவசாயம் பண்றான் அவன். அவனுக்கு ஒத்தாசையா இருக்கட்டுமேன்னு நான் இங்க டவுனுக்கு வந்து இந்த வியாபாரம் பண்றேன்'
நிலக்கடலையை தான் அவர் மல்லாட்டை என்று அவர்கள் பகுதி தமிழில் சொல்கிறார்.
'நீங்க எதுவும் விவசாயம் பண்ணலயா?'
'பண்ணவன் தான் சார். இப்போ உடம்பு முடியல. அதோட, விவசாயம் பண்றது கைக்கும் வாய்க்கும் சரியா போயிடுது இப்போ. ஒன்னும் வருமானம் இல்லே சார்' என்று சற்று சோகத்துடன் சொன்னவர் கொஞ்சம் இடைவெளி விட்டார்.
மனதிற்குள் கடந்த காலத்தை அசை போடுகிறார் என்று தோன்றியது.
'சொந்தமா நாலு காணி நிலம் வச்சிக்கிட்டு ஒரு காணியில நெல்லும் மூணு காணியில மல்லாட்டை விவசாயமும் பண்ணவன் சார் நானு. அப்போ என் தம்பியும் ஒத்தாசையா இருப்பான். அந்த மூணு காணி நிலத்துல விளையுற கடலை எல்லாம் பூ போல அவ்வளவு சுவையா இருக்கும். ஆனாலும், லாபம் பெருசா இல்ல. லாபத்தை விடுங்க, சில நேரத்துல விளைவிச்ச செலவு கூட திரும்ப கிடைக்காது.'
நாலு காணி நிலம் வைத்து விவசாயம் பார்த்தவர் எப்படி இன்று தள்ளுவண்டி வியாபாரியாக மாறிப்போயிருப்பார் என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான் கண்ணன்.
'நாலு பொண்ணு கல்யாணம், வரதட்சணை, சீர் அப்படி இப்படின்னு வரிசையா செலவா வந்து அதுக்காக கடன் மேல கடனா வாங்கிட்டேன் சார். கடன்காரன் நெருக்க ஆரம்பிச்சுட்டான். அந்த நேரத்துல இந்த டவுனும் பெருத்துக்கிட்டு இருந்துச்சு. அப்போ ஒரு ரியல் எஸ்டேட் காரர் வந்து என்னோட நிலத்தை விலைக்கு கேட்டார். விவசாய நெலத்த மனை போடுறதுக்கு கொடுக்க மனசில்லை. இருந்தாலும் கடன் தொல்லை ரொம்ப அதிகமானதால் அவர் கேக்கற வெலைக்கு 4 காணி நெலத்தையும் கொடுத்துட்டேன். வந்த காசு கடனை அடைக்கவே சரியா இருந்தது. மிச்ச இருந்த கொஞ்சம் காசை தம்பிகிட்டே கொடுத்துட்டு அவன் வீட்லையே தங்கிகிட்டேன். அவன் அந்த காசுல கால் காணி நெலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணிட்டு இருக்கான்' என்று சொல்லி பெருமூச்சொன்றை உதிர்த்தவர், கண்ணனை பார்த்து,
'வறுத்த கடலை சாப்பிட ஆசையா வந்தவர்கிட்டே என்னோட சோகக்கதையை சொல்லி கஷ்டப்படுத்திட்டேன். இப்போ யார் சார் உங்கள மாதிரி பெரிய மனுஷங்க எங்களை மாதிரி உழைப்பாளிங்க கிட்டே வந்து பேசுறாங்க. அதனால தான், நீங்க ஒரு வார்த்தை கேட்டதும் அப்படியே எல்லாத்தையும் கொட்டிட்டேன். மன்னிச்சிக்கிருங்க சார். '
அவர் சொல்வது உண்மைதான். அந்த வார்த்தைகளை கேட்பதற்கு மனதிற்கு வருத்தமாக இருந்தது.
'அய்யா, நீங்க 4 காணி நிலம் வித்தது எந்த பகுதி?' என்று கண்ணன் கேட்டதும்,
'இந்த டவுனுக்கு வெளியே தான் சார் என் நெலம் இருந்தது. என்னோட சேர்ந்து ஒரு பத்து பேருக்கு மேல விவசாய நிலத்தை அந்த ரியல் எஸ்டேட் காரர்கிட்டே வித்துட்டோம். அந்த மனை பகுதி பேரு கூட கற்பகம் நகர்ன்னு நினைக்கிறேன். '
அந்த பேரை கேட்டதும் கண்ணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவன் புது வீடு கட்டி தற்போது குடியிருக்கும் நகரின் பெயர் தான் கற்பகம் நகர்.
கனவுக்கான காரணம் புலப்படத்தொடங்கியது அவனுக்கு.
ஏதோ யோசித்த அந்த முதியவர்,
'இப்போ நீங்க சாப்பிடுற வறுத்த கடலை கூட அந்த நிலத்தோட தான்னு சொன்னா நம்புவீங்களா' என்று கேட்கவும், கண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.
'ஆமாம் சார். விக்கறதுக்கு முன்னாடி அந்த நிலத்துல இருந்து ரெண்டு வருஷம் முன்னாடி எடுத்து வச்ச விதைக்கடலையை தம்பிகிட்டே பத்திரப்படுத்த சொல்லி இருந்தேன். அந்த விதைக்கடலையை வச்சி தான் தம்பி இப்போ விவசாயம் பண்ணிட்டு இருக்கான். அந்த கடலை தான் நீங்க சாப்பிடுறது' என்று அவர் சொல்லிமுடிக்கவும் கண்ணனுக்கு தன்னுடைய கனவில் வந்த கடலை செடி ஞாபகத்திற்கு வந்தது.
ஒருவேளை கடலை செடிக்கும் நினைவும் நன்றியும் கொஞ்சம் கோபமும் இருக்குமோ. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொல்லிய வள்ளலார் வாழ்ந்த மண் இது தானே என்று நினைத்துக்கொண்டான்.
தன்னுடைய தற்காலிக கனவின் வலியை விட அந்த முதியவரின் வலி தற்போது பெரிதாக தெரிந்தது அவனுக்கு. கனவு அதுபாட்டுக்கு வந்துவிட்டு போகிறது. தினமும் வந்தால் கூட என்ன, சில நிமிடங்கள் தூக்கம் கெடும். கெட்டுவிட்டு போகட்டும், பரவாயில்லை என்று அவன் மனது நினைக்க ஆரம்பித்திருந்தது.
அவரை ஒரு வேளை நன்றாக சாப்பிட வைத்து பார்க்கவேண்டும் போல தோன்றியது அவனுக்கு.
'அய்யா, ஒவ்வொரு வருஷமும் எங்க அப்பாவோட திவசத்துக்கு யாராவது ஒரு பெரியவரை வீட்டுக்கு அழைச்சு சாப்பாடு போடுறது வழக்கம். நாளைக்கு எங்கப்பா திவசம். நீங்க என்னோட வீட்டுக்கு வந்து சாப்பிடணும்' என்று இல்லாத திவசத்தை காரணம் காட்டி கேட்டதும்,
'அதுக்கென்ன சார். கண்டிப்பா வந்து சாப்பிடுறேன்.' என்று ஒருவித நெகிழ்ச்சியுடன் பதில் சொன்னார்.
'நீங்க நாளைக்கு மத்தியானம் இங்கேயே இருங்க. நான் வந்து வண்டிலேயே அழைச்சுக்கிட்டு போறேன்' என்று சொல்லிவிட்டு ஒருவித நிம்மதியுடன் அலுவலகத்தில் நுழைந்தான்.
இரவே மகாவிடம் சொல்லி அடுத்த நாள் வடை பாயசத்துடன் விருந்து தயாரிக்க சொல்லி விட்டான்.
அலுவலகம் எதிரே அவர் நின்றுகொண்டிருந்தார். கார் அவரை ஏற்றிக்கொண்டு கற்பகம் நகர் நோக்கி பறந்தது. முதல் முறை கார் பயணம் என்பது அவர் அமர்ந்து கொண்டிருந்த தோரணையிலேயே தெரிந்தது. ஏதோ ஒரு மகிழ்ச்சியை மனதினில் உணர்ந்தான் கண்ணன்.
கற்பகம் நகர் என்ற பெரிய வளைவு வாயில் அவர்களை வரவேற்ற போது பெரிதாக எந்த சலனமும் இல்லை அவரிடம். பரம்பரையாக அவர் குடும்பம் விவசாயம் பார்த்த இடத்தில் தான் தற்போது இருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறாரா என்பதை அவரின் முகத்தை பார்த்து கண்டுபிடிக்கமுடியவில்லை கண்ணனால்.
அருமையான விருந்தை தயார் செய்திருந்தாள் மகா. நிதானமாக ரசித்து ருசித்து, சாப்பிடும் உணவுக்கு மரியாதை கொடுப்பது போன்று சாப்பிட்டார் அவர். பார்த்துக்கொண்டிருந்த கண்ணனுக்கு நிம்மதியாக இருந்தது. விவசாயம் செய்து மற்றவர்களுக்கு உணவிட்டவரை ஒருவேளை சாப்பிடவைத்து பார்ப்பதில் கிடைக்கும் சந்தோஷம் பெரிதுதான் என்று நினைத்துக்கொண்டான்.
அதன்பின் அவனுக்கு அந்த கனவு வரவில்லை.
***முற்றும்***
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்