பாபு கனிமகன்
சிறுகதை வரிசை எண்
# 285
விலா
“என்னத்தா சாதிக்கு, ஒங்க மாமா சொன்னாருன்னு தான் இந்த வேலய ஒனக்குக் கொடுத்தது. ஆனா வேல சுத்தமில்லயேத்தா! இந்த வேலக்கி நீ சரிவரமாட்டன்னு தெரிஞ்சும் சேத்துக்கிட்டது தப்புன்னு அனுபவப் பாடம் நடத்திட்ட. இன்னயோட நின்னுக்கப்பா. நாளக்கிக் காலைல ஒங்கணக்க முடிச்சு அனுப்பிட்றேன்”
நான் வேலைக்கு சேர்ந்து அப்போது ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. கணக்கில் ஏற்பட்ட குளறுபடியால் கிடைத்த வேலையையும் இழக்க வேண்டிய நிலை அப்போது.
அப்படிப் படபடவென்று மொதலாளி பேசுவதற்கு, கொடோனில் இரும்புக் கம்பிகள் அடுக்கி வைக்கப்படும் சத்தம் பின்னனி இசையாக ஒலித்தது. நான் என்ன சொன்னாலும் இப்போது எடுபடாது என்று தெரிந்தும் ஓடும் வெள்ளத்தில் மிதக்கும் எறும்பு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, கால்களை ஆட்டி அசைப்பது போல மனம் அனிச்சையாக நாவை அசைத்தது.
“இல்ல மொதலாளி. ஏதோ தப்பு நடந்திருக்கு. ஏதுக்கும் இன்னொரு தடவ இருக்குற சரக்க எல்லாத்தயும் சரி பாக்குறேன் மொதலாளி. மாசக் கணக்கு மட்டும் தான் பாத்துருக்கேன். எல்லாத்தயும் சரி பாத்துட்டா சரியா டேலியாயிடும் மொதலாளி. ஒரு சான்ஸ் கொடுங்க.”
“எல்லா ஸ்டாக்கயும் கணக்கெடுத்து எப்ப முடிக்கிறது? ரவ்வும் பவலும் இங்கே கெடந்து வேல பாத்தக்கூட மூணு நாளாகுமேத்தா!”
“அது எம்பாடு மொதலாளி. நான் எப்படியாவது பாத்துட்றேன். நீங்க ஒத்துக்கிட்டாப் போதும்”
கொஞ்ச நேரம் யோசித்தவர், “ம்…. ஒங்க மாமன் எஞ்சிநேகிதனாப் போய்ட்டான். ஒன்னயும் பாக்க பாவமாத்தான் இருக்கு. சரிப்பா சாதிக்கு. மூணு நாள் எடுத்துக்க. எப்புடியாவது கணக்கு டாலியாவனும். அதே சமயம், தெனசரி வேலயில சொனக்கம் எதுவும் இருக்கக் கூடாது. இன்னக்கி திங்களாவுது. வெள்ளிக்கெளமக் காலைல எல்லாத்தயும் சரி செஞ்சு தந்திடனும், பாத்துக்க” என்று கராராக சொல்லி விட்டுக் கிளம்பினார்.
மொதலாளிக்கு தொழில் சேலத்துலன்னாலும் சொந்த ஊர் எங்க ஊர்ப்பக்கம்தான். மதுர.
ஆனா யாராயிருந்தாலும் தயவுதாட்சண்யமெல்லாம் பாக்க மாட்டார். சரிவரலன்னா வேலய விட்டு நிப்பாட்டிட்டுத் தான் மறுவேல.
மூன்று நாள். குடோனில் மொத்தம் பதினெட்டு கம்பார்ட்மெண்ட். எல்லாத்தயும் சரிபாக்கனும். இரும்புக் கம்பி தான் மெயின் சரக்கு. ஒவ்வொரு ரூம்லயும் டன் கணக்கில் இரும்புக் கம்பிகள் இருக்கும். அத எல்லாத்தயும் சரிபாத்தாகனும். கிட்டத்தட்ட முப்பது டன் டேலி ஆகல. அது என்னாச்சுன்னு கண்டு பிடிக்கனும். ஒவ்வொரு நாளும் வந்து எறங்குன சரக்கு எவ்வளவு? வெளிய போனது எவ்வளவு? இருப்பு எவ்வளளவுன்னு பாத்து ரெக்கார்ட இருக்க மாரி பில்லுலயும் வவுச்சர்லயும் சரியா இருக்கான்னு பாக்கனும். அதுவும் இதுக்கு முன்னாடி இருந்தவர் எப்புடி எழுதி வச்சுருக்கார்னு தெரியல. அத வேற தெரிஞ்சிக்கனும்? அன்னக்கி நா இருந்த நெலமய நெனச்சாலே இப்பவும் அடிவயிறு கலங்குது. ஆனா என்ன பண்ண?
படிச்சது பி எஸ் சி கம்யூட்டர் சயின்ஸ். ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணேன். சரியான வேல தான் கெடக்கல. வேற வழியில்லாம சேலத்துல ஸ்டோர் கீப்பரா இருந்தேன். பதினைந்தாயிரம் தான் சம்பளம். ஒரு வேளச்சாப்பாடு. கொறச்சதான். ஆனா அன்னக்கி இருந்த சூழல்ல அந்தப் பணம் எங்குடும்பத்துக்கு தேவையா இருந்துச்சு.
சின்ன வயசுலே கல்யாணம். இருபத்தோரு வயசுல. ஒரு கொழந்தயா வேற போச்சு. பொம்பளப்புள்ள. ஆயிஷான்னு பேர் வச்சேன்.
எம்பொண்டாட்டியும் படிச்சவ தான். பி எஸ் சி மேத்ஸ். கடைசி செமஸ்டர் எழுதயில ஆயிஷா வயித்துல இருந்தா. அவளுக்கும் என்னோட வயசுதான். ஆறுமாசம் முன்னப்பின்ன. இருபத்தோரு வயசுன்னுதான் பேரு. ஆனா அதுக்குடய பக்குவம்? அது சுத்தமா இல்ல. காலேஜ்ல இருக்க மாரியே குடும்பத்தயும் நெனச்சிக்கிட்டா. நா மட்டும் என்ன ஞானியா? நானும் அப்படித்தான்.
எப்புடியோ கிட்டத்தட்ட மூணு வருஷம் ஓடீருச்சு. ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தோம். ஒரு வீட்ல இருந்தோம். ஒரு அறைல இருந்தோம். ஒரு புள்ள பெத்திருந்தோம். ஆனா ஏதாவது கொஞ்சம் புரிதல், அனுசரிப்பு, பொறுமை. இதுல எதுவுமே இருந்ததில்ல . காமத்துக்குப் பசியெடுக்கும் போது கட்டில்ல விழுந்து எந்திரிச்சோம். அவ்வளவுதான்.
சேலத்துல செஞ்ச வேலய ஊர்லயே செஞ்சிருக்கலாம். என்ன எட்டாயிரம் தான் கெடக்யும். அது என் பொண்டாட்டியோட பவுசுக்கே பத்தாது. காஸ்மெட்டிக், ஷாப்பிங், அவுடிங், தியேட்டர், மால் ன்னு செலவு வெப்பா. அதுக்கப்புறம் கொழந்தக்கி எதாவது செலவு வந்துக்கிட்டே இருக்கும். அம்மா, அத்தாவ விட்டு எப்பவோ தனியா வந்திட்டோம். அத்தா மவுத்தாகந் தட்டியும் அவங்க அத்தாகூடத்தான் இருந்தாங்க. அத்தா மௌத்துக்கு அப்புறம் என் வீட்ல வந்திருந்தாங்க. நெதமும் ஏதாவது ஒரு சண்ட. அம்மா அந்தக்காலம். டிவி பாக்க மாட்டா. போட்டோ எடுத்துக்க மாட்டா. குர் ஆனக் கைல வச்சு ஓதிக்கெட்டே இருப்பா. ஒடுக்கத்துப் புதன் கொண்டாடுவா. பொண்டாட்டி தனுஷ் ரசிகை. அனிரூத் பாட்டுத்தான் கேப்பா. காதுல எப்போதும் ஒரு இயர் போன். கைல மொபைல். அதனால ஒருகாலத்துலயும் எம்பொண்டாட்டிக்கும் அம்மாவுக்கும் ஒத்துவந்ததில்ல. வீட்டுக்கு வீடு வாசப்படிதான்னு நானும் பெரிசா எடுத்துக்குற மாட்டேன். ரெண்டு பேரும் நா சொன்னாலும் கேக்கப்போறதில்ல. இந்த அனுபவமெல்லாம் சேந்து என்ன ஒரு மாரியா மாத்திபோட்ருச்சு.
அந்தன்னக்கி இரவு பன்னண்டத் தாண்டுன பெறவும் குடோனில் விளக்கு எரிஞ்சது. நான் தான் கணக்கெடுத்துக்கிட்டு இருந்தேன். கடுமையான மன இறுக்கம். உச்சகட்ட மன அழுத்தம். இரண்டும் சேர்ந்து என்னை நையப்புடைத்தன. அப்போது தான் அந்த போன் வந்தது.
டி டி ட்யூன்னு டிடி யூன்னு டிடியூன்னூனு
“ஹலோ”
வெளிறிப்போனது என் முகம்.
“அம்மா….” என்று கத்திக்கொண்டே குடோனை விட்டு ஓடினேன். யாரிடமும் சொல்லாமல் உடனே கிளம்பி விட்டேன். மொதலாளிட்ட கூட சொல்லனும்னு தோணல. சில துணிமணிகளை மட்டும் மடித்து வைத்துக் கொண்டேன்.
குடோனின் சாவியை வாட்ச்மேனிடம் கொடுத்து, “இத மேனேஜர்ட்ட கொடுத்திடுங்க பாய்”ன்னு சொல்லிட்டு பேருந்து நிலையத்திற்கு ஓடினேன்.
“என்னன்னு கேட்டா என்ன சொல்ல”
“அம்மாவுக்கு முடியலன்னு சொல்லிடுங்க பாய்” ன்னு திரும்பிப்பாக்காம சொல்லிட்டு ஓடியாந்தேன்.
ஹுமைரா?!? எப்படி இப்படி இரக்கமில்லாமல் நடந்து கொண்டாள். மாமியார் என்று வேண்டாம், கட்டினவனின் தாயென்று வேண்டாம், வயதான ஒரு பெண் என்ற நினைப்பு வேண்டாமா? இரக்கமே இல்லாதவளா?
கடைசி வரை அம்மாவ அரவணக்கலியே!!
இடையிடையே இப்றாகிம் மாமாவிற்கு போன் போட்டுக் கேட்டுக்கொண்டேன். ஐந்து மணி நேரம் டிராவல். பஸ் மாறிமாறி வரவேண்டியதாயிடுச்சு. ஊர் வந்து சேர்ந்தவன் நேரா ஆஸ்பத்திரிக்குப் போனேன். அம்மா அவசர சிகிச்சைப் பிரிவில். மாமா தான் இருந்து எல்லாத்தயும் பாத்துக்கிட்டாரு. ஹுமைராவின் அம்மாவும் அத்தாவும் வந்திருந்தாங்க. அவ ஒரு மூலையில் உக்காந்திருந்தா. முகத்தை சீலையால மூடியிருந்தாள். என் முகத்தில் முழிக்க அவளுக்கு அச்சமாக இருந்திருக்கும். முதன் முறையாக ஒரு குற்ற உணர்வு அவளைத் தாக்கி இருக்கும். நான் ஏறிட்டும் பார்க்கவில்லை.
இபுறாகிம் மாமா தான் எல்லா விபரத்தையும் சொன்னாரு. “சாயா ஊத்திக் குடிக்க கிச்சனுக்குப் போனவ எண்ணயில கால வச்சுட்டா. வழுக்கி விழுந்ததுல தலைல பலமான அடி. கோமாக்குப் போய்ட்டா. ரெண்டு நாள் தான் டாக்டர் கெடு கொடுத்திருக்கான். அதுக்குளாட்டியும் எதாவது நல்லபடியா நடந்தா தான் உண்டு. அல்லாட்டப் பொறுப்பச் சாட்டிட்டு து ஆ செய்” என்று சொன்னவுடன் வந்த கோபத்தையெல்லாம் மென்று விழுங்கினேன்.
அம்மா விழுந்த நேரத்துல எம்பொண்டாட்டி அங்க இல்லயாம். ஊருக்குள்ள புதுசா மால் தொறந்து சீல துணிமணி ஆஃபர்ல போட்டிருக்கான்னு அங்க போயிருந்திருக்கான்னு பொம்பளைங்க சொன்னாங்க. போனயும் சைலண்ட்ல போட்டு வச்சுருந்திருப்பா போல. ஏன்னா யாரும் போன் பண்ணி தொந்தரவு பண்ணிரக் கூடாதுல. எனக்கு அப்டியே பத்திக்கிட்டு வந்துச்சு.
வேல? சொல்லவே வேணாம். அது இனிமே அவ்வளவுதான். கடன் வேற கடல் மாரி இருந்துச்சு.
மாமா டீ வாங்கிட்டு வந்தார். நல்லபசி . டீய வாய்ல வக்யதான் போனேன், நர்சு வந்து பதட்டமே இல்லாமல் சொன்னாங்க, “யாராவது ஒரு ஆள் மட்டும் சீக்கிரம் உள்ள வாங்க”ன்னு. டீய வச்சுட்டு ஓடுனேன். போறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிபோச்சு.
சும்மாக்கெடந்த வீடு திடுதிப்புன்னு மௌத்து வீடாப்போச்சு. எதுவும் பேச வக்ய நேரமில்ல. எம்புள்ளயக்கூட பாக்கல. ஒரே அவதிபவதி. மௌத்த அடக்கிட்டு உடனே அம்மாவுக்கு மூணாம் கத்தம் ஓதுனோம். அப்பதான் எம்மகளப்பாத்தேன். தூக்கி வச்சிருந்தேன். நிம்மதி, ராகத்து, சந்தோசம் எல்லாம் ஆயிஷா தான் எனக்கு. பாத்தியா ஓதி முடிச்சு வாழப்பழம் தான் பவுந்துக்கிட்டு இருந்தாங்க அங்க கூகுண்டாம் கூக்கர கொள்ள வெரி நாடாப்போச்சு. என்ன நடந்ததுன்னே தெரியல.
பதறியடிச்சு உள்ள போனேன். எங்க கெடந்து இவ்வளவு சொந்தங்க வந்தாங்கன்னே தெரியல. அவளக் கேளாத கேள்வி கேட்டானுக. கேட்டாளுக. என்னட்ட வந்து மொகத்துக்கு நேரா சொன்னானுக. “சாதிக்கு, இனிமேலும் இவளோட வாழ்ந்தீன்னாக்கா, அம்மா கபூரு குளுராதுடா. அவ நெஞ்சாவி கொண்டு போயித்தான் துனியாவுல இருந்தா. இந்தக் கொடுமக்காரியோட வாழ்ந்தன்னா…. கபூருலயும் சரி ஆயிரத்துலயும் சரி… அம்மாடி அதெல்லாம் நான் சொல்லக்கூடாதுடா”.
இப்படிச் சொன்னவன் என்னோட அம்மாவோட சின்னம்மா மகன். மாமா மொற. இதுவரைக்கும் இந்தப்பக்கம் கூட வந்திருக்க மட்டான். இவன் மட்டும் இல்ல; அப்பப் பேசுனவங்க எல்லாம் அம்மா முடியாம இருந்தப்பக் கூட வந்து ஒரு எட்டுப் பாத்துட்டுப் போனதில்ல. அத்தா முடியாம இருந்தப்ப ஒதவிஓத்தாசக்கி வந்து நின்னதில்ல. ஒதவி ஒத்தாச வேணாம்; கொசலம் விசாரிக்கக் கூட வந்ததில்ல. கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க்ய. நல்லா சாப்பிட்டுப்போனாங்க்ய. அவ்வளவுதான்.
ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டங்குற மாரி கொழப்பமா இருந்த நெலமய சரி பண்ணாம எரியிற நெருப்புல எண்ணெய ஊத்திட்டுப் போய்ட்டாங்க்ய. அந்த சூழ்நிலைல நான் எதுவும் பேசல. பேச முடியல. மௌத்து வூட்டுக்குள்ள மேலும் கரச்சல் வேணாம்னு பேசாம இருந்துட்டேன்.
அன்னக்கிநெலமக்கி ஆயிஷாதான் என் நெனப்பெல்லாம் இருந்தா. அவளோட எதிர்காலம் மட்டும் தான் எங்கண்ணுக்குத் தெரிஞ்சது. பல்லு மொளச்சு அம்மா, அத்தான்னு அப்பதான் சொல்ல ஆரம்பிச்சா. நூலறுந்த பட்டம் போயி ஒரு பூச்செடில விழுந்து கெடக்கு. அது அழகான பூச்செடி. எம்மகதான் அந்த பூச்செடி. நான், நூலறுந்த பட்டம். “இங்க வாடி செல்லம். நன்னாட்ட வாடி” என் தோளில் தலை சாய்ந்திருந்த இருந்த ஆயிஷாவை இபுறாகிம் மாமா வாங்கிக் கொண்டிருக்கையில் வீட்டுக்குள் இருந்து மறுபடியும் ஒரே ஓலம். ஆயிஷாவை மாமாட்ட கொடுத்துட்டு வீட்டுக்குள்ள போனேன். அங்கே ஹுமைராவின் தலையில் ஒரே இரத்தம். ஹுமைரா அழுதுவடிஞ்சா. ஹுமைரா அம்மா விழுந்து கெடந்தா. பக்கத்தில் என்னோட அம்மாவோட சொந்தக்காரின்னு சொல்லிக்கிட்டு ஒருத்தி நின்னுக்கிட்டு இருந்தா. அவ யாருன்னே தெரியல. எங்கோ கமுதி பக்கத்துல இருந்து வந்திருந்தா. பாத்தப்போ அவ கைல ஒரு சட்டி இருந்தது. ரத்தக்கறையோட.
என்ன நடந்ததுன்னு ஊகிக்கிறதுக்குள்ள ஹுமைராவின் அத்தா அந்தப் பொம்புளய அடிக்க கைய ஓங்க, பின்னால புள்ளயோட வந்து நின்ன மாமா தடுக்கப்போக அடி தவறுதலா மாமா மேல விழ கொதிச்சுப்போயிருந்த நா என்ன செய்றோம்னு தெரியாம எம்மாமனார அடிச்சுட்டேன்.
“இனி ஒரு நிமிஷங்கூட இங்க இருக்கக்கூடாது. எந்திரிடி. போனாப் போகுதுன்னு பொறுத்துப் போனா என்ன எல்லாரும் சேர்ந்து ஒரேதிரியா ஆட்டமா போடுறிய. வாடி. இந்தக்கொடுமைலாந் தாங்க ஒனக்கென்ன விதியா வந்து கெடக்கு? ஹுமைராவின் அம்மா, என் மாமியா, கொந்தளித்தாள். கூட்டிக்கிட்டுப் போய்ட்டா. ஆயிஷாவ விட்டுட்டுத்தான் போனாங்க. ஆனா கொஞ்ச நேரத்துல திரும்ப வந்து வாங்கிட்டுப் போய்ட்டாங்க. நானும் கொடுத்துட்டேன். புள்ள ஏங்கிப்போயிடுவான்னு பயம்.
அடுத்த நாள் வீட்டு வாசல்ல போலீஸ். பெண் போலீசுங்க ரெண்டு பேரு. எம்மேலயும் என்னோட மாமா அப்புறம் என்னோட சின்னம்மா மகங்கெ மேலயும் அந்தப் பொம்புள மேலயும் புகார் கொடுத்திருக்கா. என்னென்னவோ விசாரிச்சாங்க. இபுறாகிம் மாமாதான் பேசி சாய்ந்தரம் போலீஸ் ஸ்டேசன் வர்ரோம்னு சொல்லி அனுப்பிச்சு வச்சார். மதுரை ஹை கோர்ட் லாயர் அம்ஜத்கானோட பேசி முன்ஜாமீன் எடுக்க முயற்சி பண்ணோம். கெடக்யல.
ஸ்டேசன்ல கூப்டு மெரட்டுனாங்க. நான் ஹுமைரா வீட்ல போயி இருக்கனுமாம். கண்டிசனுக்கு ஒத்துக்கிட்டா எந்த கேசும் ஃபைல் பண்ண மாட்டோம்னு சொன்னாங்க. இல்லன்னா வரதட்சனை கேஸ் போட்ருவோம்னு மிரட்டுனாங்க. எங்க வக்கீல் டைம் கேட்டார். ஆனா நான் உறுதியா சொல்லிட்டேன். அவங்க சொல்ற கண்டிசனுக்கெல்லாம் ஒத்துக்க முடியாதுன்னு உறுதியா சொல்லிட்டேன். நெலம கைமீறிப்போய்ட்டு இருக்குன்னு நல்லாத்தெரிஞ்சி போச்சு. யார்யாரோ பண்ணதெல்லாம் என் வாழ்க்கைல நின்னு வெளயாடிக்கிட்டு இருந்துச்சு.
அடுத்த நாள் காலங்காத்தால இன்னொரு அதிர்ச்சி. பக்கத்து வீட்டுப்பையன் “அண்ணா, உங்க பேரு, அக்கா பேரெல்லாம் பேப்பர்ல வந்திருக்குன்னா”ன்னு சொன்னான். நான் சலூன் கடைல போய் பேப்பரப்பாத்தேன். ‘வரதட்சனைக் கொடுமை: கணவனிடம் நீதி கேட்கும் அபலை’ என்று கொட்டை எழுத்துகளில் மாவட்டச் செய்திப் பக்கத்தில் வந்திருந்தது. விலாவாரியாகப் படித்த போது என்னையும் எனது குடும்பத்தையும் பற்றி அடுக்கடுக்காய் அவதூறுகள். மாமா இபுறாகிம் மண்ணெண்ணை ஊற்றி ஹுமைராவைக் கொல்லப் பார்த்ததாக அபாண்டம். அடுத்த அரை மணி நேரத்திற்குள் என்னையும் சம்மந்தப்பட்டவர்களையும் கைதுசெய்தது போலீஸ். ஒரு வாரத்திற்குப் பின் கடுமையான போராட்டத்திற்குப்பின் ஜாமீனில் வெளி வந்தோம். வக்கீல் ஃபீஸ், ஜாமீன் செலவு, அலைச்சல் என்று கிட்டத்தட்ட செலவு அள்ளிக்கிட்டுப்போச்சு. இரண்டு மாதத்திற்கு பைத்தியக்காரனாகவே ஆகிவிட்டேன். ஒரு கண்ணுக்குத் தூக்கம் இல்ல. எல்லாத்துக்கும் மேல குடும்ப மானம் கப்பல்ல...
வேறு வழியே இல்லை. ஆயிஷாவின் முகத்திற்காக, எனது மகளின் நலத்திற்காக எந்த முடிவை இவ்வளவு நாளாக தள்ளிப்போட்டேனோ அதே மகளின் நலனுக்காக அந்த முடிவை எடுத்து விட்டேன். மூன்று தலாக் அடுத்தடுத்த நாளில் கொடுத்து விட்டேன். மனம் குத்தவில்லை. கடும்கோபம் மட்டும் இருந்தது. குற்றஉணர்ச்சி இல்லை. ஒரு பொம்புளக்கி என்ன அவ்வளவு ஏத்தம்? என்ற நினைப்பு இருந்தது. மகளைப்பிரிந்து இருக்க வேண்டும் என்ற கவலை இருந்தது.
அதன் பிறகு ஜாமீனை ரத்து செய்ய ஒரு வழக்கு, வரதட்சனை வழக்கு, ஜீவனாம்சம் கேட்டு ஒரு வழக்கு, முத்தலாக் செல்லாது; சேர்ந்து வாழ வேண்டும் என்று ஒரு வழக்கு என வழக்குக்கு மேல் வழக்கு. அத்தனையும் சந்தித்தோம். இருந்த சொத்துகளை வித்தேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கிரிமினல் கேஸ் முடிவிற்கு வந்தது. சரியான சாட்சியம் இல்லாததால் அனைவரும் விடுதலை செய்யப்பட்டோம். மம்மதுபாத்து என்ற அந்தக் கமுதிக்காரப் ‘புண்ணியவதி’ மட்டும் குற்றம் நிருப்பிக்கப்பட்டதால் தண்டனை வழங்கப்பட்டாள். ஆனால் அப்பெண் தீர்ப்பு வருவதற்கு ஒரு மாதம் முன்பு மௌத்தாகிவிட்டாள். இறுதியில் அனைத்து வழக்குகளும் முடிந்தன. ஷரீஅத்தின்படி தலாக் செல்லும் என்றாகி விட்டது. ஜீவனாம்சம் மாதம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வந்தேன். பிறகு பைசல் பேசி மூன்று லட்சம் ரொக்கமாய்க் கொடுத்து வழக்கை முடித்தோம்.
பேசி முடித்த அன்று தான் கடைசியாக அவளைப்பார்த்தேன். மெலிந்து தட்டக்குச்சியாய்ப் போயிருந்தாள். எனது மகள் நன்றாக வளர்ந்திருந்தாள். ஆனால் முகத்தில் செழிப்பில்லை. பேச முயன்றேன். உதறி விட்டு அம்மாவிடம் போய் நின்று கொண்டாள். எங்கைகாலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு. அதுக்கப்புறம் அவளப் பாக்கல.
வருடங்கள் ஆகி விட்டது. நரை விழுந்து முப்பத்து ஐந்தும் ஆகிவிட்டது. அவளும் இருக்கிறாள். நானும் இருக்கிறேன். அப்போது இபுறாகிம் மாமா என்னுடைய அரவணைப்பில் தான் இருந்தார். ஒரு நாள் நண்பர்களுடன் கொஞ்சம் அரட்டையடித்துவிட்டு வீட்டிற்கு திரும்ப நேரமாகிவிட்டது. வீட்டிற்கு வந்து பார்த்தேன். “மாமா” என்று இரண்டு மூன்று முறைக் கூப்பிட்டும் அவருடைய அறையில் இருந்து அரவம் இல்லாததைக் கண்டு கதவைத் திறந்து பார்த்தேன். கட்டிலில் இருந்து எழ முயன்று கீழே விழுந்து குப்புறக்கிடந்தார். காலம் திரும்புகிறது. புத்திமதி புகட்டுகிறது. வேதனையைக் கூட்டுகிறது. உடைந்து விட்ட மண்பானையை ஒட்டச்சொல்லுகிறது. மணலில் கயிறுதிரிக்கச் சொல்லுகிறது. எதுவும் முடியாதென்று தெரிந்தும் மனம் கிடந்து தவிக்கிறது.
அப்போது ஒரு பெரியஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்ந்திருந்தேன். ஜோக்கர் வேலை. கடைக்கு வரும் குழந்தைகளை குதூகலப்படுத்த வேண்டும். அவர்களோடு விளையாட வேண்டும். எனது முகம் முகமூடியால் மூடப்பட்டிருக்கும். அந்த முகமூடியில் ஒரு சிரித்த முகம் வரையப்பட்டிருக்கும். முகமெல்லாம் வெள்ளை. சிரிக்கும் உதடுகள் நல்ல சிகப்பு நிறத்தில். காது வரைசிரிக்கும் உதடுகளுக்கு இடையே இடைவிழுந்த பற்கள். கண்களைசுற்றிக் கருப்புப் பூச்சு. எதற்கு இந்த முகமூடி? இந்த ஜோக்கரை விட இன்னும் அதிகமாக சிரிப்பை வரவழைக்கும் நிஜங்கள் இருக்கும் போது எதற்கு ஒப்பனைகள்? என்று அடிக்கடி என்னை நானே கேட்டுக் கொள்வதுண்டு.
இன்னொரு நாள், இன்னொரு கிழமை, இன்னொரு தேதியில் கடைக்கு வந்த பிள்ளைகளிடம் விளையாடிக் கொண்டிருந்தேன். சரியான வெயில். அந்த உடுப்பும் முகமூடியும் நரகமாக இருந்தது. இருந்த போதினும் கடமையே கண்ணாக இருந்து எல்லாக் குழந்தைகளுக்கும் கைகொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் அந்தக்குரல் கேட்டது. அதே குரல். தென்றலைப்போல வருடிய அந்தக்குரல்; உயிருடன் கலந்திருக்கும் அந்தக்குரல் வந்த திசையைப்பார்த்தேன். அவள்தான். ஹுமைரா. ஃபர்தா அணிந்து வந்திருந்தாள். கூட்டத்தைக் கண்டவுடன் முகத்தை மறைத்துக் கொண்டாள். “ஆயிஷா இரு வர்ரேன். எங்க போற” என்று சொல்லிக் கொண்டே எனதருகில் வந்தாள். எனக்குக் கைகொடுத்துக் கொண்டிருந்த ஒரு குழந்தையைப் பார்த்தாள். “கை கொடுத்தாச்சா?”
“அம்மா ஒரே ஒரு செல்ஃபி மா!”
“சரி சீக்கிரம் எடு” என்று சொல்லி எடுத்துக் கொண்டாள்.
செல்ஃபி எடுத்தவுடன் இருவரும் என்னைப்பார்த்து சிரித்துக் கொண்டே சென்றுவிட்டனர். நான் உறைந்து நின்றேன். நிற்கிறேன். ஒண்ணுமே தோணல. என் மகளா கைகொடுத்தாள்? மொகத்தக்கூடப் பாக்கலயே. கைகளை முகமூடியின் ஓட்டைகளில் இருந்து பார்த்தேன்.
“ஆயிஷா! ஆயிஷா!” என்று என் மனம் கிடந்து கூச்சலிடுகிறது. ஹுமைரா என்று சொல்ல உதடு துடிக்கிறது. எனது முகமூடி சிரிக்கிறது. எதிரில் இருந்த கண்ணாடியில் எனது பிம்பம் தெரிய, பின்னால் எனது மகளும் ஹுமைராவும் தெரிகிறார்கள் பிம்பங்களாக… சிறிதாக… இன்னும் சிறிதாக… இன்னும் சிறிதாக…
திரும்பிப்பார்க்கிறேன். ஆயிஷாவையும் ஹுமைராவையும் தேடுகிறேன்.
அன்னக்கி கோர்ட்ல நடந்தது மனக்கண்ணில் திரையாடியது.
அவதான் பேசுனா
“மாமி மௌத்தான பெறகு நீங்க என்னட்ட ஒரு வார்த்த பேசினீங்களா? என்னயத் தேடி வந்தீங்களா? என்ன ஏதுன்னு கேக்காம இப்படி என் வாழ்க்கய நாசம் பண்ணிட்டீங்களே”. இதச் சொல்லும் போது அவள் கண்ணின் ஓரம் சிந்திய கண்ணீர் என் உள்ளத்தில் விழுந்தது. “அன்னக்கி நான் ஷாப்பிங் போகல. பாப்பாக்கு முடியலன்னு மருந்து வாங்கப் போயிருந்தேன். அந்த நேரத்துல மாமி விழுந்துட்டாங்க. என் மேல தப்பே இல்லன்னு சொல்லல. நானும் சின்னப்புள்ளத்தனமாதான் நடந்துக்கிட்டேன். மாமியயும் உங்களையும் கஷ்டப்படுத்தி இருக்கேன்னு நல்லா உணர்ரேன். அதுக்காக உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். சொன்னா நீங்க நம்புவீங்களான்னு தெரியல. இந்தக் கேசுக்கும் எனக்கும் துளியும் சம்மந்தம் கெடயாது. அத்தா, அம்மா, அப்புறம் அம்மாவோட சொந்தக்காரர் ஒருத்தர் வக்கீலா இருக்கார். ஒங்களுக்கும் தெரியும். எல்லாரும் சேர்ந்து தான் இதெல்லாம். அவங்க எல்லாரும் சேர்ந்து என்ன கொழப்பீட்டாங்க. நான் வேணான்னு தான் சொன்னேன். அப்பன்னா வீட்ட விட்டு வெளிய போன்னு சொல்லீட்டாங்க. நான் என்ன செய்ய? போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு பேசி முடிக்கனும்னுதான் வக்கீல் சொன்னார். அத நம்புனது தான் தப்பு. நான் சரியா நடந்துக்கிட்டேன்னு சொல்ல வரல. இதுல கொடும என்னன்னா நீங்க அடுத்தடுத்த நாள்ல அனுப்புன தலாக் கடிதம் மொத்தமா தான் கைல கெடச்சது. இதெல்லாம் இப்ப பேசி என்ன பண்ண எல்லாம் முடிஞ்சு போச்சு. எனக்கு நீங்க நேரமே கொடுக்கல. அதான் உண்மை. அப்புறம் ஒண்ணேஒண்ணு. உங்கள்ட்ட பிச்சயா கேட்டுக்குறேன். தயவுசெய்து எம்மகள எங்கிட்ட இருந்து பிரிச்சுறாதீங்க. அவதான் எனக்கு. நான் தான் அவளு..” சொல்லி கண்ணீர் விட்டு அழுத போது தன்னந்தனியான ஒரு சாரங்கியின் இசை சோகத்தை எனக்குள் உருகிஉருகி வாசித்து ஊற்றியது. அவளுடைய பேச்சில் முதிர்ச்சியும் கண்ணில் உண்மையும் இருந்தது. எல்லாமும் மறந்து போனது. அவள் செய்தவை யாவும்; நடந்தவை யாவும். கோபமும் விரக்தியும் வெறுப்பும் வேதனையும் அயற்சியும் அழுத்தமும் காயங்களும் ஆதங்கமும் அனைத்தும் நொடியில் மாறின. நீதி மன்ற வளாகத்தில் நின்ற அந்த வாவரசிமர அடியில் கண்ணீர்த்துளிகளுக்கு இடையேயான வழக்குக்கு நீதிபதி இல்லாமல் அக்கண்ணீர்த்துளிகள் தங்களைத் தாங்களே விடுவித்துக்கொண்டு தண்டனையும் வழங்கிக்கொண்டன.
இப்போது நான் உறைந்து நிற்கிறேன். ஒரு குழந்தை என் கண்ணத்தில் அறைகிறது செல்லமாக. எனது சிரித்த முகமூடிக்குள் வடிந்த கண்ணீர்த்துளிகள் எழுதிச் சென்றன. எனக்கு நானே கொடுத்துக்கொண்ட முந்நூறு தலாக்குகளை... தலாக்.. தலாக்... தலாக்....தலாக்... தலாக்...
இக்கதை என்னுடைய சொந்தக் கற்பனை. கதாப்பாத்திரங்கள் பெயர்களோ இயல்போ யாரையும் குறிப்பிடுவன அல்ல. அவ்வாறு இருப்பின் அது முற்றிலும் எதேச்சையானதே.
பாபுகனிமகன்
இளையான்குடி
contact:6382450930
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்