செ.பிரேமதாஸ்
சிறுகதை வரிசை எண்
# 24
குற்ற உணர்ச்சி
இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி.என் அப்பாவின் கருப்பு நிறத்திற்கு ஏற்ப நீலக் கலரில் ஓட்டோ பிராண்ட் அரைக்கை சட்டை ஒன்றும் என் அம்மாவின் கருப்பு நிறத்திற்கு ஏற்ப ரோஸ் கலரில் க்ரேப் சில்கில் சேலை ஒன்றும் எடுத்திருந்தோம். என் மனைவியின் தாத்தா பாட்டி தான் அவளை கைக்குழந்தையிலிருந்து வளர்த்து வந்ததால் அவர்களுக்குத்தான் ஒவ்வொரு பண்டிகைக்கும் புதுத்துணி எடுத்துத்தருவோம். அப்படியே இந்த தீபாவளிக்கும் எடுத்து இருந்தோம். அவளின் பாட்டிக்கு வயசானவர்கள் கட்டும் காட்டன் சேலை ஒன்றும் அவளின் தாத்தாவிற்கு லங்கோடு தைக்க நீலக் கலரில் ஒரு மீட்டரும் பச்சைக்கலரில் ஒரு மீட்டரும் ஒரு துண்டும் ஆறுமுகப்பெருமாள் டெக்ஸ்டைலில் நேற்றுதான் எடுத்து முடித்தோம்.அதற்கு முன்பே எங்களுக்கு எடுத்து முடித்து இருந்தோம். நேற்று தான் கடைசி பர்ச்சேஸ்.
நாளைக்கு என்ன சேலையை உடுத்த என இரவே பீரோவைக் கிளறிக் கொண்டிருந்தாள் என் மனைவி. கடைசியாகத் தேடிக் கண்டுபிடித்து குங்குமப் பொட்டுக் கலரும் இல்லாத ரோஸ் கலரும் இல்லாத கத்தரிப்புக் கலரும் இல்லாத இவற்றிற்கு இடைப்பட்ட ஒரு சேலையை எடுத்து வைத்தாள். இரவு முழுக்க நாளை நடைபெற உள்ள வெல்கம் பார்ட்டி பற்றியே ஓடிவிட்டது.
எனது மனைவி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியொன்றில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார்.அவர் அஞ்சல் வழிக் கல்வியில் இளங்கலை கல்வியியல் அதாவது பிஎட் படிப்பை மதுரையில் உள்ள ஒரு சென்டரில் படித்துக் கொண்டிருக்கிறார்.நாளை அவர்கள் சென்டரில் வெல்கம் பார்ட்டி.வெகு நாட்களுக்கு ஏன் ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் கல்லூரி நிகழ்ச்சி என்பதால் அவரது ஆர்வமும் அதிகமாக இருந்தது.
இன்று காலை முதலே பரபரப்பாய் காணப்பட்டாள். மாநில நல்லாசிரியர் விருது பெற்ற மாலதி டீச்சரும் இவளும் தான் அருப்புக்கோட்டையில் இருந்து செல்பவர்கள். பெரும்பாலும் இவர்கள் இருவரும் சேர்ந்து தான் போவார்கள். மாலதி டீச்சருக்கு என் மனைவியின் நோட்சை ஜெராக்ஸ் எடுத்துக் கொடுப்பதற்காக நானும் என் மனைவியுடன் சென்று நின்றிருந்தேன்.
“ஹலோ டீச்சர், நான் நோட்சை ஜெராக்ஸ் போட்டுட்டேன். நீங்க எப்ப வாரீங்க?”
“சாரி டீச்சர் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. ஒரு பத்து நிமிஷத்துல வந்திர்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க”
“சரிங்க டீச்சர் பரவாயில்லை. நான் வெயிட் பண்றேன்”
சிறிது நேரத்தில் மாலதி டீச்சர் வந்து சேர்ந்தார்கள். இருவரையும் காலை 8 மணிக்கெல்லாம் பஸ் ஏற்றிவிட்டு வீட்டிற்கு வந்தேன். வந்த கொஞ்ச நேரத்தில் செல்போன் வியாதி என்னைத் தொற்றிக் கொண்டது. வாட்ஸ் அப், பேஸ்புக், யூடியூப் என அவ்வியாதி நீண்டு கொண்டு சென்றது. பசி எடுக்க ஆரம்பித்தவுடன் அவ்வியாதி குறைய ஆரம்பித்தது. ஃப்ரிட்ஜில் வைத்திருந்த சட்னியையும் மாவையும் எடுத்து வந்து தோசை ஊற்றினேன். இரண்டாவது தோசை ஊற்றிக் கொண்டிருக்கும் போது என் மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது. எப்பொழுதும் அங்கு போன பின்பு நான் வந்து விட்டேன் என தகவல் தெரிவிப்பாள். அதற்கான அழைப்பாகத்தான் இருக்குமென்று போனை எடுத்தேன். எதிர்முனையில் கேட்ட குரலோ வேறு.
“சார் நான் மாலதி டீச்சர் பேசுறேன். உங்க ஒய்ப் கீழே விழுந்துட்டாங்க சார். கால்ல ஃபிராக்சர் ஆயிடுச்சின்னு நெனக்கிறேன். நீங்க உடனே வாங்க சார்”
“என்ன சொல்றீங்க டீச்சர். இப்பதான பஸ் ஏத்தி விட்டு வந்தேன். பிராக்சரா சுளுக்கா டீச்சர்?”
“பிராக்சர் தான் சார்”
“லேசாவா பெலமாவா டீச்சர்?”
“கொஞ்சம் பலமாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன் சார். நாங்க விக்ரம் ஹாஸ்பிடலுக்கு ஃபர்ஸ்ட் எய்டுக்காக கூட்டிட்டு போறோம் சார்.சீக்கிரம் வந்துடுங்க.”
“வேற பெரிய ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டு போங்களேன் டீச்சர்”
“இல்ல சார், அவங்க ரெம்ப ஒரு மாதிரி இருக்காங்க. பக்கத்தில இந்த ஹாஸ்பிடல் தான் இருக்கு.நாங்க போய் ஃபர்ஸ்ட் எய்டு கொடுக்கிறோம். நீங்க வந்து வேணும்னா வேற ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டுப் போய்க்கோங்க.”
“சரிங்க டீச்சர், நான் வர்ற வரைக்கும் கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க டீச்சர்”
“சரிங்க சார், நீங்க பயப்படாம வாங்க. நீங்க வர்ற வரைக்கும் நான் அவங்க கூட இருக்கேன்”
எனக்கு என்ன செய்வதன்றே தெரியவில்லை. எனது நண்பரான முத்துக்குமரனுக்கு போன் செய்து செய்தியைச் சொல்லி துணைக்கு வரச் சொன்னேன்.அவர் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் என் வீட்டுக்கு வந்து விட்டார்.என் மனைவியின் இந்தியன் பேங்க் அக்கவுண்டில் ஐம்பதாயிரம் ரூபாய் இருந்தது.எனது ஸ்டேட் பேங்க் அக்கவுண்டில் இருபதாயிரமும் இந்தியன் பேங்க் அக்கவுண்டில் ஆயிரம் ரூபாயும் இருந்தது.என் மனைவியின் ஏடிஎம் கார்டையும் எனது எஸ்பிஐ ஏடிஎம் கார்டையும் எடுத்து வைத்திருந்தேன். அதன் அருகில் அவசரத்துக்கு உதவுமென்று எனது இந்தியன் வங்கி ஏடிஎம் கார்டையும் வைத்திருந்தேன். எனது நண்பர் வந்தவுடன் ஏடிஎம் கார்டுகளை எடுத்துக் கொண்டு எனது பைக்கிலேயே கிளம்பினோம். நான் பதட்டத்தில் இருந்ததால் எனது நண்பரே பைக்கை ஓட்டினார்.அருப்புக்கோட்டையிலேயே எனது அக்கவுண்டில் இருந்த இருபதாயிரம் ரூபாயையும் எடுத்துவிட்டேன். இதில் ஐந்நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு விட்டு மதுரைக்குச் சென்றோம்.
மணி பத்தரையைக் கடந்து இருந்தது. எனது மனைவியை ஐசியுவில் வைத்திருந்தார்கள். என்னை மட்டும் உள்ளே அனுமதித்தார்கள்.அவளின் முகத்தில் அப்படியொரு தவிப்பு. நான் எனது அழுகையை அடக்கிக் கொண்டு தைரியமாகப் பேசினேன். வீட்டிலேயே நான் அழுது கொட்டிவிட்டிருந்தேன்.பத்தாக்குறைக்கு மதுரை வரும் வரைக்கும் அழுது தீர்த்திருந்ததால் அவளின் முன் என்னால் அழுகையை அடக்க முடிந்திருந்தது.அவளிடம் பேசிவிட்டு மருத்துவரிடம் சென்றேன்.
“சார் உங்ககிட்ட ஹெல்த் கார்டு இருக்கா?”
“இருக்கு சார்”
“அது போக நீங்க ஐம்பதாயிரம் ரூபாய் கட்டணும் சார். இப்பவே கட்டிட்டீங்கண்ணா நாங்க ஆர்த்தோ டாக்டருக்கு சொல்லிருவோம். ரெண்டு மணிக்கு ஆபரேசன் பண்ணிரலாம்.இல்ல வேற ஹாஸ்பிடல் போகணும்னு நெனச்சீங்கன்னாலும் போகலாம். சீக்கிரம் முடிவெடுங்க,இப்பவே ரொம்ப நேரமாயிடுச்சு”
“சரிங்க சார்”
அதற்குள் என் மற்றொரு நண்பரான செல்வத்திடமிருந்து போன் வந்தது.
“தங்கச்சி எப்படி இருக்காங்க?”
“பரவால்ல சார் “
“எந்த ஹாஸ்பிடல்ல இருக்கீங்க?”
“விக்ரம் ஹாஸ்பிடல் சார்”
“மியாட்டுக்கு கூப்ட்டு போங்க. அங்கதான் எலும்பு முறிவுக்கு நல்லா ட்ரீட்மென்ட் பண்ணுவாங்க”
“என் மனைவியை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு சார். அவளை இனிமேல் கீழே இறக்கி ஆம்புலன்ஸில ஏத்தி போகணும்னா ரொம்ப வேதனைப்படுவா சார்.”
“கொஞ்ச நேரத்துக்காகப் பார்க்காதீங்க பிரேம்.அங்க கொண்டு போனா சீக்கிரம் சரியாயிடும் “
“சரிங்க சார்.நான் பாக்குறேன் “
“என்ன முத்துக்குமார்? செல்வம் சார் இப்படி சொல்றாரு, அங்க போனா அவங்க எவ்வளவு பணம் கேக்குறாங்களோ? இப்பவே ஃபிராக்சராகி ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு.என்ன செய்ய?”
“ நீங்க என்ன நினைக்கிறீங்க பிரேம்?”
“ இதுவும் பெரிய ஆஸ்பத்திரி தான முத்துக்குமார்.இங்கேயே பாத்திரலாம்னு நெனைக்கிறேன்.”
“ நானும் அதைத்தான் நெனைக்கிறேன் பிரேம். இனி அங்க போனா எவ்ளோ நேரம் ஆகுமோ தெரியாது. பேசாம இங்கேயே பண்ணிருவோம்”
சரி பணத்த போய் கட்டிட்டு வரலாம் என்று பணம் கட்டச் சென்றோம்.ஃபர்ஸ்ட் எய்டு ஃபீஸ் ஐயாயிரம் வந்ததை மாலதி டீச்சர் கட்டியிருந்தார்கள் அவர்களுக்கு கொடுத்தது போக பதினைந்தாயிரம் தான் இருந்தது.
“ கார்டு போட்டுக்கலாமா மேடம்”
“இல்ல சார், கூகுள் பே வேணும்னா பண்ணுங்க.கார்டு அக்செப்ட் பண்ணமாட்டோம்.”
எனது போனில் கூகுள் பே இல்லை. சரி பக்கத்துல ஏடிஎம்க்கு போவோம்னு பைக்கை எடுத்து தேடிப் பார்த்தோம். அரை கிலோமீட்டர் தொலைவில் ஒரு ஏடிஎம் இருந்தது. எனக்கு முன் ஐந்தாறு பேர் இருந்தார்கள்.என் ஏடிஎம் கார்டுகளை எடுத்தேன்.எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எனது மனைவியின் ஏடிஎம் கார்டை வீட்டில் வைத்து விட்டு ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்த என்னுடைய ஏடிஎம் கார்டை எடுத்து வந்திருக்கிறேன்.என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனது மற்றொரு நண்பரான கவாஸ்கருக்கு போன் பண்ணினேன்.
“தங்கச்சி எப்படியா இருக்கு?”
“பரவாயில்லனே, அண்ணே,ஒரு நாற்பதாயிரம் பணம் இருக்குமாண்ணே, ஏடிஎம் கார்டை மாத்தி எடுத்துவந்திட்டேன்.”
“அவ்ளோ பணம் இல்லயா, முப்பதாயிரம் இருக்கு”
“சரிங்கன்னே, அத என் இந்தியன் பேங்க் அக்கெளண்டுக்கு அனுப்புங்கண்ணே,”
“சரியா, அனுப்பிர்றேன்”
சிறிது நேரத்தில் பணம் ஏறி விட்டது. ஏடிஎம்மில் எனக்கு முன் இருந்தவர்களிடம் ஆபரேசனுக்கு பணம் வேணும். எடுத்துக்கட்டா என்றேன்.அவர்கள் வழிவிட்டு எடுத்துக்க சொன்னார்கள்.அவர்களுக்கு என் மனதில் நன்றியை சொல்லிவிட்டு பணத்தை எடுத்து வந்தோம். பாக்கி பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்ய? செல்வம் சாரின் நினைவு வந்தது.
“சார் ஒரு பத்தாயிரம் ரூபாய் நான் சொல்ற நம்பருக்கு கூகுள் பே பண்ணமுடியுமா?”
“டிரைவிங் ல இருக்கேன் பிரேம். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு போடட்டா?”
“இல்ல சார். அர்ஜண்ட்”
“சரி நம்பர சொல்லுங்க”
சிறிது நேரத்தில்,
“போட்டாச்சு பிரேம்”
“ரெம்ப தேங்ஸ் சார்”
“பரவாயில்ல, பாப்பாவ பத்திரமா பாத்துக்கோங்க”
“சரிங்க சார்”
ஒருவழியாக பணத்தை கட்டிவிட்டோம். இரண்டு மணிக்கு ஆர்த்தோ டாக்டர் வந்தார். ஆபரேசன் ரூமுக்கு லிப்டில் செல்லும்போது என் மனைவி என் கையைப் பிடித்துக்கொண்டு,
“யையா, ரெம்ப வலிக்குதுய்யா”என்று சொல்லி கண்ணீர்விட்டாள்.
“பயப்படாதயா, கொஞ்ச நேரம் சரியாயிரும்”
அதற்குள் அவளை ஆபரேசன் ரூமிற்குள் கொண்டு சென்றுவிட்டார்கள்.அவளை உள்ளே அனுப்பிய மறுநொடியே எனக்கு அழுகை கொப்பளித்தது.
“அழாதீங்க பிரேம், சரியாயிடும்”
“இல்ல முத்துக்குமார், அவ பாவம். ரெம்ப நல்லவ.அவளுக்குப் போயா இப்படி நடக்கணும்?”
“என்ன செய்ய பிரேம்.எல்லாம் நேரம்னு போக வேண்டியது தான்”
அதற்குள் என் அம்மாவும் அப்பாவும் ஊரிலிருந்து வந்துவிட்டார்கள். ஒரு வழியாக ஆபரேசன் முடிந்து வெளியே கொண்டு வந்தார்கள்.என்னை மட்டும் கூப்பிட்டுக் கொண்டு லிப்டில் கீழிறங்கினார்கள்.
“ ரெண்டு மணி நேரம் ஐசியுவில் வச்சிருப்போம் சார், அதுக்கப்புறம் நார்மல் வார்டுக்கு மாத்திருவோம். நீங்க வெய்ட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு ஐசியுவிற்குள் கொண்டு சென்றார்கள்.
அதற்குள் அவள் சென்டரில் படிக்கும் அனைவரும் அவர்கள் பேராசிரியரோடு வந்து விட்டார்கள்.
“ வாங்க சார், இப்பதான் ஆபரேசன் முடிஞ்சது. ஐசியு ல வச்சிருக்காங்க”
“அப்படியா சார், பரவாயில்ல. பாக்கனும்னு நெனச்சு வந்தோம்.முடியல. இவங்கல்லாம் தூரம் தொலவட்டு போகணும். மேடத்த நல்லா பாத்துக்கோங்க. சரியான பின்னாடி கிளாசுக்கு வாங்க. ஒன்றும் பிரச்சனை இல்லை.நான் பாத்துக்கறேன்”
“ரெம்ப நன்றி சார்”
பேராசிரியர் சொல்லிவிட்டு சென்றார்.மாலதி டீச்சர் அந்த ஃபர்ஸ்ட் எய்டு பணத்தை திரும்ப கொடுத்தார்கள்.
“ ஏன் டீச்சர் வச்சுக்கோங்க”
“இல்ல சார், நாங்க எல்லாரும் சேர்ந்து அந்த பணத்தை போட்டுட்டோம். இது எங்களால முடிஞ்ச உதவி. நீங்க இத வச்சுக்கோங்க”
“சரிங்க டீச்சர், ரெம்ப தேங்ஸ் டீச்சர், எல்லோருக்கும் ரெம்ப நன்றி சார்.”
சென்றவர்கள் முகத்தில் வெல்கம் பார்ட்டிக்கான கொண்டாட்டமே தெரியவில்லை.
ஒரு வருடம் ஓடி விட்டது. கட்டிலிலேயே தூங்கியவள் தரையில் உறங்க ஆரம்பித்தாள். ஹாலில் நைட் லேம்ப் ஃபீஸ் போய்விட்டது.இருட்டில் அவள் காலை மிதித்து விடுவேனோ என்ற பயத்தில் நைட் லேம்ப் வாங்க எனது பைக்கை எடுத்துச்சென்றேன். வாங்கிவிட்டு வீட்டினருகே வரும் வழியில் ஒரு தெருநாய் தனது இரண்டு குட்டிகளோடு விளையாடிக்கொண்டிருந்தது. அவைகளைப் பார்த்ததும் நான் வேகத்தைக் குறைத்துக்கொண்டேன். இருப்பினும் ஒரு குட்டி வண்டியினுள்ளே வந்துவிட்டது. நானும் எவ்வளவோ விலகிச்சென்றும் அது வந்து உள்ளே விழுந்து விட்டது.இருட்டில் சரியாகத் தெரியவில்லை. நான் அதன்மேல் வண்டியை ஏற்றவில்லை என நினைத்த நேரத்தில் அது”வீல்..! வீல் ...! என கத்திக்கொண்டு காலை நொண்டியபடி துடித்தது. அதன் தாயும் சகோதரனும் ஓடி வந்து பார்த்தார்கள்.அவர்கள் அதனைப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்து குலைக்காமல், கடிக்காமல் ஒரு பார்வை பார்த்தார்கள்.உயரதிகாரி கிறுக்குத்தனமாக கேள்வி கேட்டு நம்மைத் திட்டும்போது செய்வதறியாது திகைத்து நிற்பது போல அப்பார்வைக்கு என்னால் பதில் சொல்ல முடியாமல் தவித்தேன்.ஒரு நிமிடம் என் மனைவி பட்ட வேதனை என் கண்முன்னே வந்து சென்றது.
“வளர்ப்பு நாயின் மேல் வண்டியை ஏற்றியிருந்தால் அதன் உரிமையாளர் உன்னைத் திட்டிவிட்டு அதற்கு மருத்துவம் பார்த்திருப்பார். நாங்கள் நிர்க்கதியற்ற தெருநாய்கள் என்று நினைத்துத்தானே எங்கள் மேல் வண்டியை ஏற்றி விட்டாய். கதியற்று நிற்கும் எங்கள் நிலையைப் பார்” என்று அந்தப் பார்வை என் இதயத்தைத் துளைத்துக்கொண்டு குற்ற உணர்ச்சியால் என்னைக் கொன்று கொண்டிருந்தது.
செ.பிரேமதாஸ்,
அருப்புக்கோட்டை.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்