logo

நினைவும் நிகழ்வும்


வந்துவிழும் அணுகுண்டை
-----------வெடித்தென்னை சிதைக்கச்சொல்
இந்தியத்தாய் உன்மடியில்
-----------இறந்துவிடத் துடிக்கின்றேன் !


ஏவுகனை எனைவீழ்த்த
-----------எதிர்நோக்கி வந்தாலும்
சாவுக்கு அஞ்சாமல்
-----------சிரிப்பதற்கு முயற்சிப்பேன் !


என்மீது தீவிழுந்து
-----------எனைஉருக்கி எரித்தாலும்
என்பூமிதாய்மண்ணை
-----------இழந்து விட மாட்டேன் நான் !


சரஞ்சரமாய் குண்டுகளென்
-----------சதைக்குள்ளே புகுந்தாலும்
சரணடைய என்நாட்டைச்
-----------சத்தியமாய் விடமாட்டேன் !


கட்டில்சுகம் உள்ளதென
-----------காதோரம் சொன்னாலும்
நட்டநடு இரவிலும் நான்
-----------நாடுகாக்கச் சென்றிடுவேன் !


ஒருநாள் வாழ்ந்தாலும்
-----------உயிர்கொடுத்த மண்ணே உன்
திருமுகம் பார்த்துக்கொண்டே
-----------செத்தொழிந்தும் போவேன் நான் !


நரம்புகளால் இமயத்தை
-----------நான்போர்த்திக் காப்பதற்கு
மரணத்தைக் கம்பளியாய்
-----------மாற்றிடவும் சம்மதமே !


என்வீட்டைப் பிரிந்துவந்த
-----------ஏக்கங்கள் இருந்தாலும்
என் நாட்டைக் காப்பதற்கு
-----------எதையும்நான் இழந்திடுவேன் !


கொட்டுமழைச் சாரலிலும்
-----------குடைபிடிக்க எண்ணாமல்
சட்டென்று வரும்போரைச்
-----------சந்திக்கச் செல்வேன் நான் !


எதிரிகளால் சுடப்பட்டு
-----------எனது உடல் சரிந்தாலும்
உதிரத்தால் முத்தமிட்டு
-----------உயிர்கொடுப்பேன் மண்ணிற்கு !


துப்பாக்கி சுமக்கும்என்
-----------தோள்களினால் முடியுமெனில்
எப்போதும் தாய்நாட்டை
-----------ஏந்திக்கொண்டு நின்றிருப்பேன் !


படையோடு செல்லும்நான்
-----------பாதியிலே இறந்தாலும்
கடைசியிலே விட்டமூச்சும்
-----------காஷ்மீருக்குச் செல்என்பேன் !


- ஜின்னா அஸ்மி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.