logo

கவிச்சுடர் விருது


'சிறகை தூக்கி திரிகிறேனென 
கழுகும்
கழுகை தூக்கி திரிகிறேனென 
சிறகும்....
மாறி மாறி நொட்டனை பேசும் நொடியொன்றில் தான்
சிட்டுக்குருவியொன்று....
வானத்தை நோகி கடந்து விடுகிறது.....'

- எவ்வளவு யதார்த்தமான மொழியில், இந்தக் கவிதை நம்மிடம் பேசிவிட்டு கடந்துவிடுகிறது! வாழ்வியலின் சித்தாந்தங்களை அழகாக பேசும் இந்தக் கவிதையை எழுதியவர், 'பொள்ளாச்சி முருகானந்தம்' அவர்கள்... கொங்கு மண்டலத்தின் பிரதான நகரமாக விளங்கும் பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஊரையும் பெயரோடு சேர்த்து வைத்துக் கொண்டார்.

கவிஞர் அவர்கள் இளங்கலை கணிதம் முடித்த பட்டதாரி. தொண்ணூறுகளின் தொடர்ச்சியில் கவிக்கோ ஐயா...மு.மேத்தா. அண்ணன் அறிவுமதி. ...ஆகியோரின் படைப்புகளின் வழியே எழுதத் தொடங்கி எழுதிக்கொண்டிருக்கிறார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்

படைப்பு குழுமத்தில் சிறந்த படைப்பாளிக்கான மாதாந்திர பரிசு...மற்றும் தொடர் கவிதைப்போட்டியில் அய்யா விக்கிரமாதித்தியன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்றாம் பரிசு எனவும் பெற்றவர். இது தவிர இனிய உதயம் உள்ளிட்ட பல்வேறு  இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளி வந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் மின்னிதழ்.கல்வெட்டு. தகவு என தொடர்ந்தும் இவரது படைப்புகள்  வலம் வந்து கொண்டிருக்கின்றன..

தொடர்ந்து இவரது பக்கத்தில் "ஒரு சொட்டு தீ " என்றத் தலைப்பில் சமூக கவிதைகளையும் பதிவிட்டு வருகிறார்..

கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் அவர்கள்தான் இந்த மாதத்திற்கான, நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினையும் பெறுகிறார் என்பதை, மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது நமது படைப்பு குழுமம்.

அவரது சில கவிதைகளை ஆய்வில் எடுத்துக் கொள்வோம்...

* காலத்தோடு ஒன்றுவதாக சொல்லிவிட்டு, நம் ஆட்கள் அடிக்கின்ற கூத்தே வேறு ரகம். நாம் கண்கூடாகக் காண்பவைதான். ஆங்கிலப்பள்ளியில் சேர்த்தவுடன் அப்பா டாடியாகவும் அம்மா மம்மியாகவும் மாறிவிடுகிறார்கள்... ஆங்கில வாசனைக் குறைவென்றாலும் தமிழை தங்கிலீஷில் பேசி பம்பம் காட்டுவார்கள். உடைகள் கூட நாகரீகம் என்றுச் சொல்லி நழுவிப் போய்விடும். நம் ஊர்க்காரர் சும்மா இருப்பாரா? கவிட்யையில் வம்பிழுக்கிறார்... இதோ அந்தக்கவிதை!

'இந்த தலைமுறை விசித்திரமானது
தமிழை ஆங்கிலம் போல் பேசும்
ஆங்கிலத்தை தமிழ்போல் பேசும்.....
சுண்ட கஞ்சி ஊறுகா.....
கருவாடு ஊறப்போட்ட மிளகா
அத்தனையும் பிடிக்கும்.....
ஆனா டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல
அப்படியே வண்டி தள்ளிட்டுப் போய்
வாங்கினால்தான் ஒரு திருப்தி.......
வாவ்....பேப்லஸ்...
ஆஹான்.....என்னா ட்ராயிங்......ப்பாவென
மோர் சூப்பர் மார்க்கெட்ல
காலையில எவனாச்சும் ஒருத்தன்
பொன்னாங்கண்ணி கீரை கட்டைப் பார்த்து
சொல்லி விடுகிறான்..............இப்படி.
ஒரு தமிழ் வாத்தியார் மகள்
தம்புள்ளைக்கு
ஸ்லீவ் லெஸ் ட்ரெஸ்ஸ போட்டு
தரதரனு இழுத்துட்டு வருது-
பாவம் புள்ள கூசிக் கெடக்கு..............
தொப்புளுக்கு மேல 
சேலை கட்டுவதோ............
வியாழக்கிழமை தவறாம
வேட்டி கட்டி சாய்பாபா கோவிலுக்கு போவதோ.........
நாகரீகமல்ல...........
மண்சார்ந்து வாழோனும்...........'

---------------

* சாதரண வீடுகளில்தான் எலிகளின் நேசம் அதிகமாக இருக்கும்... அதை பிடித்துவிடுவதும் பெரும் போராட்டம்! அதற்காக அவர்களின் மெனக்கெடலை நகைச்சுவை குறையாமால் சொல்ல இந்தக் கவிஞனால் மட்டுமே ஆகும்!

'கர்த்தரே....
இன்று இரவு நீர் கண் விழித்து 
சூதானமாய் ரட்சியும்.....
என் மனைவி
மொய் மீன் கருவாடு வாங்கியிருக்கிறாள்....
புளியும் கல்லுப்பும் பிசைந்து -
தகர கூண்டை
கழுவியிருக்கிறாள்.......
பழக்க தோசத்தில்
அந்த குட்டி எலி
பால் பாக்கெட்டை கடிக்க வரலாம்....
பக்கத்தில்
குட்டி வீட்டிற்குள்
காய்ந்த மீனொன்று
தூக்கு மாட்டி தொங்கும்.....
பேசாமல் மூக்கை பொத்திக்கொண்டு போக-
சூதானமாய் ரட்சியுங்கள்..'

-------------------
* களவு போன செம்பருதிப்பூ அதன் வரலாற்றை எழுதி விடுகிறது! இழப்பு  என்பது இழப்பு மட்டுமல்ல.. ஓர் நினைவு மீட்டலும் கூட.. இதோ அந்தக்கவிதை...

'அத்தனை எளிதல்ல
இழப்பு......
பூத்திருந்த மூன்று
செம்பருத்தி பூக்களில்
யாரோ ஒன்றை
களவாடி விட்டார்கள்............
செப்டிங் டேங்
சுத்தம் செய்து கொடுத்த
பழனிச்சாமியண்ணன்
வெட்டிக்கொடுத்த
குண்டு செம்பருத்தி குச்சியது..........
நல்ல நாள் பாத்து 
கொட்டாச்சியில்  மண்தோண்டி
பதியம்போட்டு
கண்ணுக்குள் வைத்து
நுனியில் சாணி பூசி
பார்த்து பார்த்து
வளர்த்த செடியில்
யாரோ ஒன்றை திருடியிருக்கிறார்கள்.........
இழப்பு ஒன்றும் அவ்வளவு எளிதல்ல......'

--------------

* மருத்துவ மனையில் பிணக்கூராய்விற்கு, மருத்துவர்களுக்கு உதவியாக உடனிருந்து அறுத்துத் தரும் ஆராய்களை வைத்து ஒருக்கவிதையை கவிஞர் புனைந்திருக்கிறார்.. நடை முறை சம்பவங்களை சொல்வதாக அமைந்தாலும் சாதியை உயர்த்திப் பிடிப்பவர்களை கன்னத்தில் அறைகிறது இந்தக்கவிதை!

யூரின் ட்யூப் பராமரிக்கிற
கையுரைகளற்ற
ஆராயிகளை கவனித்திருக்கிறீர்களா..
அவர்கள் பெரும்பாலும்
பிணக் கூராய்வு செய்யும்-
குப்பானோ நல்லானோ
அவர்களின் 
பக்கத்து வழியோ
தூரத்து வழியோ
சாதி சனமாய்த்தான் இருக்கும்........
அவன் சவமறுக்கும் போது-
என்ன சாதியென கேட்டதாய் நினைவில்லை......
அவள் பிறப்புறுப்பில்-
விரல் நுழைத்து ட்யூப் மாற்றுகையில்
என்ன சாதியென கேட்டதாய் நினைவில்லை.........
ஆனால்
அவர்களுக்குத் தெரியும்
இவர்கள் என்ன சாதியென்று.........!

-------------------

* மழைக்கு ஒதுங்கும் வானம் எப்படியிருக்கும்? கிராமத்து வாசனையோடு இந்தக் கவிதையுடன் உறவாடும் மழையைப்போல் இருக்கலாம்....

'நாலு பக்கம் சீமக்கருவலு
எட்டுத்தெசையும் கருத்த மண்ணு
நடுவால எங்கய்யாவோட அய்யா நட்ட 
பனை வெட்டி
கை மண்ண கொழச்சு கட்டுன மச்சு வீடு.......
ஒத்த மழத்துளிக்கு ஊர் பூரா நனைஞ்சாலும்
ஒரு துளி உள்ள வராது 
எங்க மச்சுவீட்டு திண்ணையில..
கம்மா ஒடைஞ்சு காதவழி தண்ணி வர
ஆடுமாடு முங்கி அதப்புடிச்ச மனுச மக்க முங்கி.....
தொழுநோய் வந்த முனியனொரு மூலை
கடைசி காருக்கு காத்திருந்த 
பூவீசும் பொழப்புக்காரி இருளாயி ஒரு மூலை
பொம்பள சீக்கு புடிச்ச கோட்டச்சாமி மயன் ஒரு மூலை
ஊருக்கெல்லாந் தாயத்து கட்டும் 
ஒமரு வாப்பா ஒரு மூலை
தோத்திரமய்யானு ஒவ்வொரு மண்டையா உலுக்குற 
சோசப்பு பாதரு ஒரு மூலை
நாஞ்செத்தாலும் பரவாயில்ல ஊருக்குள்ள எழவு 
விழுந்துரக்கூடாது எஞ்சாமினு பொழம்புற 
தோப்படைப்பட்டி வெட்டியானொரு மூலை
காத வழி கொட்டுற மழையோட
நானும் மச்சுத்திண்ணையில ஓசிக்கேன்.....
எல்லா சாதிக்கும் வலி  ஒன்னுதாய்யா......
மழைக்கு ஒதுங்குன வானமுய்யா 
எம் மச்சு திண்ணை........'

------------------------

* நகர நாகரீகம் கிராமங்களை விழுங்கி விடுகின்றன. பிழைப்பிற்காக  பட்டினம் போகிறவன் கிராமத்தை கை கழுவிவிட்டுச் சென்றுவிடுகிறான். அப்படித்தான் ஒருவன் வீட்டை விற்க எத்தனிக்க அதைத்தடுக்கும் ஆத்தாவின் குமுறல் மண் வாசனையுடன்...

'ஏலே ..அய்யனாரு....
சேறு கொழச்சு
ஓடை கல்லு பொறுக்கி
ஊரு சிறுக்கிக வாயில விழுந்து
இருந்த காக்குறுக்க பூமியில.......
சீமக்கருவ வெட்ட
முள்ளு குடிச்ச ரத்தம் போக
மீதி ரத்தம் பாலா தந்து
நானும் எம்மட ராசாவும்
பொத்தி பொத்தி வளத்த ஒத்த மயன்டா நீ.......

ஏஞ்சிங்கம் செத்து
வாற அமாவாசையோட
கணக்குக்கு பதினாறு வருசமாச்சுல.....

அய்யா....
உங்கப்ப வயக்காடு போயி வந்த
இரத்த வாசம்
இன்னுஞ் செவரெல்லாம் வீசுதுய்யா.....

நா அந்த குச்சுலுக்குள்ள
குத்த வெச்சு
ஈமாந்தண்ணி குடுச்சா
புழுதண்ணீல கூட
எம்புருசன் வாசம் வீசுதுய்யா...

அய்யா...
எத வேணா எடுத்துக்க
எங்குச்சுல வித்துராதய்யா
நா கண்ணு மூட வரைக்கும்.....'

------------------

*கவிஞரின் மற்றும் சில கவிதைகள்:

'உன்னை முத்தமிட
அவ்வளவு பிடிக்கும்.....
நீ தூங்கும் போது-
உன் கண்களின் வழியே
கனவை முத்தமிட வேண்டும்......
கிளம்பும் போது
கொஞ்ச தூரம் விட்டு
மறுபடி அழைத்து முத்தமிட வேண்டும்....
உன் கோபத்தை
கண்ணாடியில் முத்தமிட வேண்டும்......
நீ கொஞ்ச வரும் போது-
என் மகளுக்கு முத்தமிட வேண்டும்.....
இப்படியான முத்தங்களுக்குப் பின்னாலும் கூட
நான் கவிஞனாயிருந்திருக்கிறேன்.............!'

--------------------

'கடவுளற்றவனின்
இறுதி யாத்திரையில் தான்
அத்தனை வேண்டுதல்களையும்
கொட்டித் தீர்த்திருப்பாள்
பொஞ்சாதி....

தூசியென்றவனின்
நெற்றி முழுக்க திருநீறு......
பூவென்றவனின்
கழுத்து முழுக்க மாலைகள்........
நாற்றமென்றவனின்
உடல் முழுக்க பண்ணீர்......

இப்போது
சாமியானான்........'

-------------------

அப்போது
ஒரு முப்பத்தொன்பது வயதிருக்கலாம்...
சில பதினாறு முடிகள்
நரைக்கத் தொடங்கிய பருவம்......
அவள் மிக ஊடுருவிக் கிடந்தாள்
உணர்வதைக்கூகூட
மெலிதாய் காட்ட வேண்டிய பருவமாம் அது......
ஆனால் வெட்கமேயில்லாமல்
கொஞ்சிக் கொண்டுதான் இருந்திருக்கிறோம்........
மூச்சு முட்ட மூச்சு முட்ட
எல்லாமும் தான் ஆகிக் கிடந்திருக்கிறது........
ஒரு தேநீர் ஒரு தோசை ஒரு மிஸ்டு கால்-
ஒரு அழகான கவிதை
ஒரு மழை ஒரு சாறல் 
கொஞ்சம் தலைவலி இன்னும் கொஞ்சம் விரதம்
தூங்கப் போவதற்கான குட்நைட்
இப்படி நிறைய மொழிபெயர்ப்புகள்
வாழ்ந்திருக்கிறது............
அவளும் நானும் 
இவைகள் எல்லாவற்றையுமே
மிக ரகசியமாய் பரிமாறியிருக்கிறோம் என்றே
எழுத வேண்டும்...........
எனக்கு அப்போது -
ஒரு முப்பத்தொன்பது வயதிருக்கலாம்.........
இப்போதும்தான்..........!
----------------
கீழே விழும் போது
அறிவியலையோ 
புவியீர்ப்பு விசையையோ
பேசுவதை விட
சுண்டு விரலை நீட்டினாலே போதும்......
-------------------

எங்கள் 
ஹீமோகுளோபினுக்கு
ஒரு போதும்-
உங்களால் சாயம் பூச முடியாது.....

நீங்கள்
பற்ற வைப்பது
மெழுகுவர்த்தி -
மீண்டும் கட்டியாகி எரிவோம்.....

எங்கள்
தீப்பந்தங்களில்
இன்டியன் ஆயிலை
தெளிக்காதீர்கள்.....
நாங்கள்
அமைதிக்கான ஜோதி
கொண்டுசெல்கிறோம்....

போகிற போக்கில்
உங்கள்
காலி மதுக்குப்பிகளில்
தீ நிரப்பி வீசுகிறீர்கள்....
உங்கள்
புத்திசாலித்தனத்தில்
தீ வைக்க....

எங்கள்
இறைவர்களுக்கு
மனிதர்களைத்தான் தெரியும்-
உங்களைத் தெரியாது.......

எங்களுக்காக மெனக்கெடாதீர்கள்.......
நன்றி......
----------------
சொர்க்க ரதமென்று எழுதி
அதில் பிணம் போகிறது...........
-----------

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

தி பழனிவேல்


0   1115   0  
August 2018

நீ சு பெருமாள்


0   1359   0  
June 2020

கோ லீலா


0   1981   0  
September 2021

ரிஷி பாரதி


0   733   0  
December 2021

சஸ்னா லாபிர்


0   400   0  
September 2023