logo

கவிச்சுடர் விருது




'சீவி சிங்காரித்து
அலங்கரித்து அழகுசெய்து
அனைத்துக் குழந்தைகளையும்
அவைக்கு அனுப்பி வைத்தபின்
அவசரமாய் தயார் செய்த
அவள் குழந்தைக்கு
அனுமதி மறுக்கப்பட்டது
ஆயாவின் குழந்தைக்கு
இடமில்லையென்று'

இந்த ஆண்டு வெளியான 'சொல் எனும் வெண்புறா' என்ற நூலில் உள்ள ஒரு கவிதைதான் இது..
இதை எழுதியவர், நம் படைப்பு குழுமத்தில் நீண்ட காலமாக எழுதி வருகின்ற கவிதாயினி மதுரா(எ) தேன்மொழி ராஜகோபால் அவர்கள்... ஆம், அவர்தான் இந்த மாதத்திற்கான சிறப்பு விருதான 'கவிச்சுடர்' விருதைப் பெறுகிறார் என்று அறிவிப்பதில் நம் படைப்புக்குழுமம் பெருமிதம் கொள்கிறது...

ஆங்கில முதுகலை இலக்கியம் படித்துள்ள கவிதாயினி பிறந்தது மன்னார்குடி என்றாலும் தற்போது வசித்து வருவது தமிழ்க் களஞ்சியம் தஞ்சையில்தான். 

சிறு வயது முதலே வாசிப்பில் தன்னை நுழைத்துக் கொண்டவர் பல் வேறு இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கு பெற்று பல சிறப்புகளையும் பெற்றவரென்பது குறிப்பிடத்தக்கது.

கல்கி,மங்கை,மங்கையர் மலர்,தினமலர், கோகுலம் மற்றும் சிற்றிதழ்களிலும் இவரது கவிதைகள் அழகு சேர்த்திருக்கின்றன...நமது படைப்பு குழுமத்தின் மாதாந்திர படைப்பாளி விருதை 2017 ல் பெற்றிருக்கிறார். இவரது சில கவிதைகளும் ஆங்கில மொழியாக்கம் பெற்றுள்ளன..

சமீபத்தில் பைந்தமிழ் பாமணி விருதினை மரபுக் கவிதைகளுக்கா பெற்றுள்ளார்.. மேலும் 'கம்பனும் கட்டுத்தறிகளும்', 'சிதறும் முத்துகள்' என்ற இரண்டு மின்னூல்களையும் வெளியிட்டுள்ளார் 

தனது வாழ்நாளின் மிகப்பெரிய மகிழ்ச்சியாகக் கருதுவது நமது படைப்பு குழுமத்திலிருந்து வெளியான அவரது 'சொல் எனும் வெண்புறா' என்ற நூல் மிகப்பெரிய ஆளுமைகளால் வெளியிடப் பட்டதுதான் ...

இத்தனை சிறப்புகள் பெற்ற நம் கவிதாயினி மதுரா அவர்களுக்கு கவிச்சுடர் விருது அளிப்பதில் நம் படைப்பு குழுமம் பெருமிதம் கொள்கிறது....


இப்போது கவிதாயினியின் சில கவிதைகளை காண்போம்.. 
அளவீடுகளோடு  நகரும் வாழ்க்கையென்பது கணக்கியலுக்குள் சிக்கிக் கொண்ட விடையறியா வினாக்களாகவே மாறிவிடும்... வாழ்க்கையின் அளவீடுகள் சுயக் கட்டுபாட்டில் இருக்கலாம்... அவை பிறர் கட்டு பாட்டிற்குள் சென்று விட்டால் நாமும்  சிறைக் கைதிகள்தான் என்பதை உணர்த்தும் கவிதை இதோ படியுங்கள்...

@அளவீடுகள்

அளந்து பேசவும் சிரிக்கவும்
அளவைகள் உண்டோ?
விழும் இடத்து வடிவம் பெறும்
தண்ணீராகிறேன்..
குடுவையிலா கடலிலா
கொட்டிக் கவிழ்க்கையில்
பிரளயமாகவோ குடிநீராகவோ
குறிப்பிட்டுக் கொள்ளுங்கள்..
இடும் சாயத்தில்
நிறம் மாறித் தெரிவது
இயல்பல்ல..
இருப்பிற்கான அடையாளம்..
ஒப்பனைகளுக்குள்
ஒளிந்து கிடக்கும்
உண்மைகள் உலா வருகையில்
கண்ணாடியைக் கழட்டி விடுங்கள்.
மனம்....
மெய்யைத் தரிசிக்கட்டும்...

--------------------
புவிக்கோளம் கவிஞரின் பார்வையில் பிரிகிறது பல அங்கங்களாக....


@புவிக்கோளம்

கணிக்கத் தெரியாத காலமுள்
ககனவெளி தாண்டி
கடற்சுற்றும் கருமேகங்கள்
மெல்லத் தரிக்கும் மிதவெப்பம்
உறுத்தி உணர்த்தும் ஊவாமுள். ..
நிறமாறிய பசிய மலை.
ஊடறுக்கும் உணவுச்சங்கிலி
விருத்தி மறந்த உயிர்த்தாது
கருவறுக்கப்பட்ட கானகம்
சுழற்பின்னலுக்குள்
சுருண்டு கிடக்கும்
சூத்திரங்கள்..
சுயமிழந்த சுதந்திரங்களில்
சுருக்கிடும் முடிச்சுகள்.
உயிர்த்து மரிக்கும்
உணர்வுக் குமிழிகளில்
உறைந்து கிடக்கும்
புவிக்கோளம்..

------------------

ஆசைகளென்பது கதவுகளுக்குப் பின்னால் காத்திருக்கிறதாம்! அவை கவிதாயினின் பார்வையில் வண்ணத்துப் பூச்சியின் சிறகிலேறி வானத்தையளக்க ஆசைப் படுகிறது... கூடவே சில நியாயமான உணர்வுகளையும் முன் வைக்கிறது; இந்த கவிதையின் வழியாக....

@

மெல்லத் தட்டித்
திறக்கும்
கதவுகளின் பின்னே
காத்துக் கிடக்கின்றன
ஆசைகள்...

வண்ணத்துப் பூச்சியின்
சிறகுகளிலேறி
வானையளக்கவும்
விண்மீன்களை
விரல்களில் பிடித்து
விளையாடவும் அனுமதி வேண்டி
தயங்கி நிற்கின்றன..

முன்மொழிந்திட ஒரு துணை
முயற்சிக்க ஒரு இணை..

மூங்கில் வனத்துக்குள்
குழலூதவும்..
இசையின் நரம்பெடுத்து
யாழிசைக்கவும்
வண்ணங்களைக் குழைத்து
வானம் செய்யவும்
முயற்சிக்கட்டும்..

அபத்தங்களின் ஆரம்பங்களை
ஆராதிக்கச் சொல்லவில்லை
அப்படியே விட்டுவிடுங்கள்..

அதுவாகவும் அவளாகவும்
வாழ்ந்துவிட்டுப் போகட்டும்..

----------------------------
ஒரு கவிஞனிடம் கவிதைகள் எப்படி பிறக்கும்? இப்படியும் இருக்கலாம்... எனென்றால் அது அப்படித்தான்!...



@அது அப்படித்தான்

இரவு மரத்தின்
கனவுக் கிளைகளில்
இளைப்பாறிக் கொண்டிருக்கும்
அவனுக்கு
இருளின் நிசப்தம்
ஒரு பாடலை
இசைத்துக் கொண்டிருக்கிறது..

பகற்பொழுதுகளில்
மறந்து போன
வரிகளை
நினைவூட்ட புது ராகத்தை
ஒப்புகையிடுகிறது..

பசியோ பிணியோ
அற்ற பேருலகத்தின்
கதவுகளை ஒவ்வொன்றாய்த்
திறக்க முயல்கையில்
அவன் சிறகுகளில்
சுமந்து வைத்திருக்கிற
துயரங்களையும் வலிகளையும்
ஒவ்வொன்றாய்
உதிர்த்து விடுகிறது..

மறுநாள்
பொழுது புலர்கையில்
அவை கவிதைகள் எனக்
கொண்டாடப்படலாம்..

ஏனென்றால்...
அது அப்படித்தான்...

-----------------------
இருத்தலுக்கான விதியை நிர்ணயிக்க எடுக்கும் முயற்சிகளில் கவிதாயினி சில முன்னெடுப்புகளையும் கேள்விகளாக்கி நகர்கிறார்....

@
பறப்பதற்கான
நியதியை வகுத்த பின்னே
படைக்கப்பட்டிருக்குமோ
சிறகுகள்?

பூக்களின் புன்னகையில்
புதைந்து கிடக்கும்
கவி வரிகளை
இலை நரம்புகளில்
எழுதி வைத்தது யாரோ?

காற்றாக மாறி
கிசுகிசுக்கவோ
பறவையாய் மாறி
பருகிடவோ
அனுமதி கொடு..

உனக்கான
ஆயிரமாயிரம்
கவிதைகளில்
ஒன்றையேனும்
இதய உறைக்குள்
பத்திரப்படுத்த
பரிசளிக்கிறேன்..

பின்பு..
இருத்தலுக்கான
விதியை நானே
நிர்ணயிக்கிறேன்.

--------------------
யாமத்தின் மொழியறிய கவிதாயினி அந்த நிசப்த வெளிக்கு தன் ஆன்மாவை அனுப்பி விவரங்களை அள்ளிவருகிறது இந்தக் கவிதை.....

@யாமத்தின் மொழி

யாமத்தின் நிசப்த நிமிடங்களில்
ஆகாயம் தேடி  மலைமுகடு சுற்றிப்
பனிபெய்யும் 
அடர்வனமொன்றின்
பருத்த மரத்தின்
உச்சியில் ஒண்டிக்கொள்கிறது
ஆன்மா...
சூரிய ரேகைகள்
சுருக்கிட்டு மொட்டவிழ்க்கும்
வரை சிரமப் பரிகாரம் செய்ய
இலைகள் ஒவ்வொன்றாய்ப்
பேரெழுதிப் பிய்த்துப்
போடுகிறது....
சரசரப்பில் துயில்கலைந்த
மைனா ஒற்றைக்கண்ணைத்
திறந்து பார்த்துவிட்டு
மீண்டும் மூடிக்கொள்கிறது...
பச்சைத் தவளையொன்று
புல்வெளிக்குள் சிணுங்க
புதரோர பாம்பு அசையாமல்
தவமிருக்கிறது. ...
மெல்ல மரணித்துக் கொண்டிருக்கிறது
அன்றைய இரவு..

--------------------------
பெருமழைக்குள் நனைந்து காயும் கனல் துண்டுகள் ஊடாகி நுழைகிறது அகத்தின் தீயின் நாக்குகளாய்.. தாகத்தின் வேட்கை தீராத்தீ என்பதும் நியாயம்தானே....

@தீராத்_தீ

ஊழிக் காற்றின்
இரைச்சலில்
அதிர்ந்து கொண்டிருக்கிறது
பூமி...
வனமடைத்து
பெய்யும்
பெருமழைக்குள்
நனைந்து காய்கிறது
கனல் துண்டுகள்..
அகத்தினடியில்
எரிந்து கொண்டிருக்கும்
தீயின் நாக்குகளோ
தாகத்தின் வேட்கையில்.
யுகங்கடந்து
பெய்த பின்னும்
பெருநெருப்பு
அணைவதாயில்லை...
கனன்று கொண்டே
இருக்கிறது
பெண்ணுக்குள்
தீராத் தீ..

-----------------
ஒவ்வொரு ஊடலுக்கு பின்பும் சேரும் அந்த நாசாக்கு வார்த்தைகள் இப்போது நகராமல் நின்றவிடத்திலேயே நிற்கிறது... அதை அகந்தை என்றாலும் பரவாயில்லை.. நீயே இறங்கிவா!....

@
சட்டென உடைந்து
நொறுங்கிய நொடிக்குப்பின்
பேச நினைக்கையில்
மௌனக் கதவு
மூடியே கிடக்கிறது..
ஆற்றாமை
அடிமனத்தில்
ஆரவாரம் செய்தாலும்
அகந்தையோ அழுத்தமோ
ஏதொன்றையும்
நினைத்துக் கொள்..
முதலடி எடுத்துவைக்க
மனதில்லை...
ஒவ்வொரு முறையும்
வலிய வந்து விளக்கம்
தர விருப்புமில்லை...
தீவிர சிகிச்சைப் பிரிவில்
கிடக்கும் நட்பைப்
பிழைக்க வைப்பதும்
சாகடிப்பதும்
இம்முறை உன் கையில்...

-----------------
மெய்யிலிருந்து எதற்கு பொய்யை பிரித்தெடுக்க வேண்டும்? மெய்யின் கதவுகள் திறந்து கொள்ளத்தான். அதற்கும் ஒரு கடவுச் சொல் நம் வசம் இருக்கிறதே என்பவர் அச்சொல்லை நமக்கும் சொல்லிவிடுகிறார். அதுதான் காதல்....

@
பொய்களை 
மெய்யிலிருந்துப்
பிரித்தெடுக்க
இன்னும் பயிற்சி 
போதவில்லை
அது தேவையுமில்லை..
காதல் என்ற
ஒற்றைக் கடவுச்சொல்லில்
திறந்து கொள்கிறது
அத்தனைப் பூட்டுகளும்..

------------------
கவிதாயினியின் இன்னமும் சில கவிதைகள் :

@
பொங்கிப் பெருகும்
நேசப் பரிவர்த்தனை..
ஆராதிக்க
அறிந்தாளில்லை..
ஆனந்தப் பெருவெளிக்குள்
அன்பின் அலைகள்
தலை கால் புரிவதில்லை..
கொடுத்துச் சிவந்தபின்
பெற்றுக்கொள்ள
ஏதுமில்லை..
எல்லாமே
அவனும் அவனாகிய பின்
பாதங்களோ கைகளோ
தலை மீது
எதை வைத்தாலென்ன?
வழியும் குருதியை
நிறுத்தக் கண்ணப்பராகிறது
இதயம்..

@

உனக்குமான எனக்குமான
இடைவெளியை
எதைக் கொண்டு நிரப்புவது?
திகைத்து நிற்கிறது
காலம்....
நீண்ட மௌனத்தை
எந்த மொழியில்
மொழி பெயர்ப்பதென
தத்தளிக்கிறது ..
நேசம்....
ஒன்றாய்ப் பயணித்த
காலங்களை அசைபோட்டு
மறுகிக் கொண்டிருக்கிறது
உள்ளம்...
தெளிவில்லா புரிதல்களில்
தொலைதூரம் போய்
மனச் சிடுக்குகளில்
சிறைப்பட்ட சிநேகத்தை
மீட்க வழியின்றி
தவித்துக் கொண்டிருக்கிறது
நட்பு!!!!

@

பூட்டிக் கிடக்கும்
காராக்கிருகம்
திறக்க இயலாமல்
பாழடைந்து கிடக்கிறது
இற்றுப் போன
கதவிடுக்கின் வழியே
ஒளியைப் பாய்ச்சுகிறாய். . 
காட்டுச் செடிகள்
மண்டிக் கிடக்கும் புதரில்
மலருமில்லை தேனுமில்லை..
இருப்பினும்
வண்ணத்துப் பூச்சியாய்
நுழைந்து படபடக்கிறாய்
நீ உதிர்த்த
வண்ணத் திறவுகோலால்
வசந்தத்தின்
வாசல் திறக்கிறேன்..



@பிள்ளையாரும் நானும்

பள்ளி விட்டுத் திரும்பும்போது
ஒரு பொன்னந்தி மாலையில்
அறிமுகமானார் அந்த பிள்ளையார்....

முட்டுச்சந்தின் மூலையில்
நாயொன்றின் துரத்தலிலிருந்து
தப்பிக்க அடைக்கலம்
கொடுத்ததினால் அத்யந்த நண்பரானார்...

அன்றிலிருந்து
சிலேட்டு குச்சி முதல்
சர்க்கரை மிட்டாய் வரை
பகிரப்பட்டது ...

அவ்வப்போது சண்டை வந்து
முகம் திருப்பினால்
ஏதாவது ஒரு மாமிமூலம்
சுண்டல் கொடுத்து சமாதானப்படுத்தி விடுவார்...

கடைசி இருக்கை கோமளா கிள்ளியது
 தம்பி கேலி செய்தது வரை...
பள்ளிக்கதை வீட்டுக்கதை
எல்லாம் அவருக்கு அத்துபடி..

திடீரென ஒரு மழைநாளில்
நான் பெரிய மனுஷியாகி விட
பிள்ளையாரும் கடவுளாகி விட்டார்..

இப்போதெல்லாம் நானும்
பிள்ளையாரும் பேசிக்கொள்வதேயில்லை..


@இரவின்_இறக்கைகள்

இரவின் இறக்கைகளை
பிடித்திழுத்து
போர்த்திக் கொள்கிறேன்..
மேகப்புரவிகளில் விரைந்த
கனவுகளில்
எத்தனை அதிசயங்கள்...
நீலக்கடல் நுரை ததும்ப
திராட்சை ரசமாகிறது...
சூரியனோ மின்னி
உருண்டோடும் பந்தாகிறது..
நட்சத்திரங்கள் கண்சிமிட்டி
உண்ணும் உணவாகிறது..
நிலவோ தோழியாகி
வானமுழுதும்
கைப்பிடித்து அழைத்துப்
போகிறது...
வெளிச்சக் கதிர்கள்
கைநீட்டி எழுப்பிப் போகையில்
நேற்று உண்ட
விண்மீன்கள்
தொண்டைக்குழியில் சிக்கி
பேச்சற்று நிற்க வைக்கிறது
பூமியில்....



@பயண_சிநேகம்

வினாவுதலும் விசாரிப்பதுமாய்
உயிர்ப்பிக்க ஆரம்பிக்கிறது
ஒரு உரையாடல்..
முகமறியாதவர்களையும்
நலம் கேட்டு
நட்பாக்க விழைகிறது..

ஒரு கோட்டின் பயணத்தில்
ஏதோ ஒரு சொல்
திறக்கிறது
மனத்தின் கதவுகளை..

ஏதோ ஒரு சமிக்ஞை
இழுத்துத் தாளிட்டு
இறுக மூடுகிறது இதழ்களை..

ஒத்த அலைவரிசைக்குள்
ஊடுருவ
காத்துக் கிடக்கின்றன
சில சொற்கள்..

எப்படியோ
பயணங்கள் எப்போதும்
ஒரு சிநேகத்தை
இறங்கும் நிறுத்தத்தில்
விட்டுப் போகிறது .
சிலவற்றை
மறுத்தும் போகிறது..


@யானைத் தீ

தேடுதல்களிலேயே
தொலைந்து கொண்டிருக்கும்
திக்குத் தெரியாத
காடொன்றில்....
கிடைப்பதை
ருசிக்கத் தெரியாத நாவில்
எதைத் தின்றால்
பித்தம் தெளியும்?
அடங்காத் தீயாய்...
எதை உண்ணுவது
எதைக் கொண்டு
ஆற்றுவது?
எத்தனை முயன்றும்
ஏக்கங்களின்
இரைச்சலாய்...
காலந்தோறும்
காயசண்டிகைகள்
ஆபுத்திரனின்
அட்சயப் பாத்திரத்தை
எதிர்பார்த்தே
காத்திருக்கிறார்கள்.....

 - மதுரா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

கோ.பாரதிமோகன்


0   1066   0  
August 2020

மு.முபாரக்


0   966   0  
June 2022

சிவ. கருணாநிதி


0   1009   0  
July 2018

ஷப்ரா இல்முதீன்


0   761   0  
October 2021