logo

கவிச்சுடர் விருது


கவிதையில் இருந்த பறவை
பறக்கத் துவங்கியதும்
சொற்கள் ஒவ்வொன்றாய்
மறையத் துவங்கியது.
மறையத் துவங்கிய சொற்களை
மனதுக்குள் சேகரிக்கத் துவங்கினேன்
கவிதையில் மீண்டும்
பறவை உட்கார்ந்து கொண்டது.

ஒரு கவிப்பாடியின் மனதை இதைவிடவும் அழகாக யாரும் சொல்லிவிடமுடியாது. அவன் தினமும் உறவுகளைவிடவும் சொற்களிடம்தான் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறான். கவிஞர்  ஏ. நஸ்புள்ளாஹ் அவர்களும் எப்போதும் சொற்களிடம் அதிகம் பேசிக் கொண்டிருப்பவர்... அவர் எழுத்துகளில் நவீனத்துவம் ஒட்டியிருக்கும் அதில் அதிகமாக சமூக அக்கறையே பயணம் செய்யும். 

ஏ. நஸ்புள்ளாஹ் கிழக்கிலங்கையில் கிண்ணியாவில் பிறந்தவர். உயர்தரம் வரை கல்வி கற்று தற்போது நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் மானி வாசிப்பாளராகவும் கடமையாற்றி வருகிறார். 

இதுவரை, துளியூண்டு புன்னகைத்து (கவிதை 2003), நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம் (கவிதை 2009),கனவுகளுக்கு மரணம் உண்டு (கவிதை 2011),காவி நரகம் (சிறுகதை 2013),ஆதாமின் ஆப்பிள் (கவிதை 2014),இங்கே சைத்தான் இல்லை (கவிதை 2015),ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர் (கவிதை 2016),மின்மினிகளின் நகரம் (கவிதை 2017),ஆகாய வீதி (கவிதை 2018),A.Nasbullah poems ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள் (மொழிபெயர்ப்புக் கவிதைகள் 2018) என 10 தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் கவிஞர் தனது 11வது தொகுப்பிற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

கவிஞர் ஏ. நஸ்புள்ளாஹ் கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது படைப்பு குழுமத்திலும் தனது கவிதைகளைப் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த கவியாளுமைக்கு இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருதினை அளிப்பதில் படைப்பு குழுமம் பெரு மகிழ்வு கொள்கிறது..

இனி கவிஞரின் கவிதைகள் சிலவற்றைக் காண்போம்:

  எனக்குள் ஒரு நதி சலசலக்கிறது என்று சொல்லும் கவிஞன் அந்த நதி எதுவாக இருக்கும் என்பதை வாசகனின் கணிப்பிற்கே விட்டு விடுகிறான்... இப்போது அந்த நதி வாசிப்பவர்களின் மனதிற்குள் இடம் மாறிவிடுகிறது... எதுவும் பேசினால்தான் தீரும் என்பதே வழக்கு... நதியோடு இன்று இரவு நிச்சயம் பேச்சு வார்த்தை நடக்கும்.. இரவுதான் அதற்கான உகந்த நேரம் என்பது கவிஞனின் தீர்க்கம். அமைதி அங்குதான் இருக்கும் .. அப்போதுதான் அந்த சலசலப்போடு பேசுவதற்கும் சரியாகவும் இருக்கும்... அப்போது ஏற்படும்  சலசலப்பைக் கேட்கும் தருணத்தில் அது கறுப்பு நிறத்தில் இரவாக மாறிவிடும். பின்னர் அவன் நிம்மதியாகத் தூங்குவதற்குச் சென்றுவிடலாம்... இதனால் ஒரு பிரளயம் தடைசெய்துவிட்ட திருப்தி கவிஞனுக்குள்ளும்  நிலவுகிறது...

எப்போதும் எனக்குள்
ஒரு நதி சலசலத்துக் கொண்டே இருக்கிறது
எனினும் நதியை நான் சந்தித்ததும் இல்லை
அதன் சலசலப்பை
மனசுக்குள் பூட்டி வைத்ததும் இல்லை
முதன் முறையாய்
இன்று இரவு நதியைச் சந்தித்துப் பேச இருக்கிறேன்
பேசும் தருணத்தில்
எனது வாசகனுக்காய்
நதியில் புதிதாய் ஒரு சலசலப்பை
தொடங்கி வைக்க இருக்கிறேன்
வாசகன் சலசலப்பை கேட்கும் தருணத்தில் அது கறுப்பு நிறத்தில் மாறிவிடும்
இனி வாசகன் தூங்கச் செல்லாம்.

@

இருப்பதற்கு ஓர் இடம் உண்டென்றாலும் போய் சேருமிடம் தாய் நிலம்தான் என்று சொல்கிறார் கவிஞர். ஆனாலும் அவாவுதல் என்பது இருக்குமிடத்தின் மீதே கவிழ்ந்து கிடக்கிறது என்பது கவிஞரின் சுய விமர்சனம்... ஆதாமின் பிறப்பிடமான வானகமே என் தாய் கூடு என்று சொல்லும் கவிஞர் அங்குச் செல்ல மனமில்லாமல் இறுதி நிலத்தின் தொன்மைகளை அள்ளி வாரிக்கொண்டு நிணம் தின்னும் பிசாசுகளுடன் வாழ்வது பிடித்துவிட்டதாகப் பகர்கிறார்...

எனது எல்லாவிதமான அவாவுதலும் 
முதல் நிலத்தின் மையப்புள்ளிக்குள் மாத்திரமே
மயக்கமுர்றுக் கிடக்கிறது.
எனக்கான நிலமொன்று 
வானக் கிளையில் அமர்ந்து
பறவை போல் காத்திருப்பதை
மறக்கவே எத்தனிக்கிறேன்...

எனக்கான பிரதியும்
அதன் நிசப்த வாசிப்பும்
அன் நிலத்தில் விளையும் ஆப்பிள் கனிகளும்
நான் விரும்பிய உயர்ந்த மதுக்குவளையும்
அங்குதான் இருக்கின்றன.

எனது முதல் நிலம் வெற்றுத்தாளில் பறக்கும்
வண்ணத்துப்பூச்சியை ஒத்ததும்
வண்ணமற்றதுமான நிறப்பிரிகை என்பதை
எனக்குள்ளிருக்கும் நான் அறிவதற்கு
மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்.

வீடு திரும்புதல் மிக அவசியமானது
ஆரம்பித்த இடத்தில் முடிப்பதே
பறவைகளின் கூடு திரும்புதலின் 
இன்னுமொரு யுக்தி
வனத்தில் வாழும் குரங்குகளும் அப்படித்தான்
எனினும் நான்
வீடு திரும்ப விரும்பாதவனாய் இருக்கவே விரும்புகிறேன்

எனது இறுதி நிலம் காத்துக் கிடக்கிறது
தொன்மங்களை அள்ளிக்கொண்டு
நான் முதல் நிலத்திலேயே தாவிக் கொண்டிருக்கிறேன்
நிணம் தின்னும் பிசாசுகளுடன் வாழ்வது
எனக்குப் பிடித்துப் போய்விட்டது

மன்னிக்க
நான் என்பது எழுத்துப் பிழை.

@

நிறங்களைப் படிமமாக்கி வாழ்தலை அற்புதமாகச் சொல்கிறார் கவிஞர். நிறமில்லாமல் வாழ்வதுதான் வாழ்க்கை.. நிறங்கள் நம்மை ஏமாற்றிவிடும் என்பதும் ஓர் எச்சரிக்கைதான்...

நிறங்களுக்கு நடுவே
வாழ நினைத்துக் கொண்டு இரண்டு
நிறங்களைத் தெரிவு செய்தேன்.
முன்பு மனசு 
இப்படி வேண்டியதில்லை
இப்போதெல்லாம்
குழந்தைகளைப் போல மனசு
எதையெதையோ தெரிவு செய்கிறது.

நிறங்கள் பச்சை மற்றும் நீல நிறங்களாக இருந்தன
சில நாட்கள் 
நிறங்களைப் பின் தொடர்ந்தேன்.
நிறங்களின் அணுகுமுறை சரியில்லை
எனவே 
நிறங்களுக்கு நடுவே வாழ்வதைத்
தவிர்த்துவிட்டேன்.

நிறங்கள் என்பது
தனிமையும் வெறுமையும் என
கற்பனை செய்து கொள்ளுங்கள்.

@

ஒரு சிறந்த கவிதையைப் படித்ததும் வாசகன் சிலாகிப்பான்.. கவிஞனின் மனமோ அப்படி இருப்பதில்லை.. அந்த கவிதையிலிருந்து புதுச் சொற்களை எடுத்துக் கொண்டு அது வேறொரு தளத்திற்குப் பறக்கத் தொடங்கிவிடும்.. இங்கும் அப்படித்தான் நிகழ்கிறது.. கவிஞர் ஏ.நஸ்புள்ளாஹ் கவிஞர் றியாஸ் குரானாவின் கவிதைகளின் தேர்ந்த ரசிகர் என்பது எல்லோருக்குமே தெரியும். அவரது கவிதையைப் படித்த தாக்கம் இந்தக் கவிதையில் வழிகிறது...

றியாஸ் குரானாவின் காடுகள்
காடுகளுக்குச் சிறகுகள் உண்டு. 
அசைத்துக்கொண்டே இருக்கின்றன. 
ஒரு நாள் பறந்துவிடும்.
என்கின்ற
றியாஸ் குரானாவின் பிரதியை
வாசித்துவிட்டு நித்திரைக்குச் சென்றேன்
காடுகள் சிறகுகள் உயர்த்திப் பறக்கத் தொடங்கின
பறக்கத் தொடங்கிய 
றியாஸின் காடுகள்
எனது பிரதியில் இருந்த 
பாலைவனத்தில் இறங்கின
பழைய கவிதை ஒன்றின்
மூன்றாம் வரியைப் போல
எனது பாலைவனம் சோலைவனமாய் மாறியது
நித்திரையிலிருந்து வெளியேறினேன்
றியாஸின் பிரதியில் தனிமையும்
எனது பிரதியில் நானும்
உட்கார்ந்து இருக்கிறோம்.

@

படிமங்களைச் சொல்லாட்சியாக்கி அதற்குள் கவிதையைக் கட்டமைப்பதுதான் சிறந்த கவிஞனின் மொழிதலாகிறது.. இந்தக் கவிதையில் பறவை ஒரு சஞ்சலத்தின் (அ) கவலையின் படிமமாக மாறிவிடுகிறது.. இருள் என்பது ஜென்னின் நிலையில் அமைதி என்றும் பொருளாகும்.. இனி இந்தக்கவிதையை நீங்களே படித்து ரசிக்கலாம்...

என்னைத் துரத்தும்
ஒரு பறவையை
இருள் வளைத்துப் பிடிப்பதை நான் காண்கிறேன்
பின் 
என்னை அழைத்த அவ்விருள்
விடிய விடிய
ஒரு நாவல் நீளத்தில் கதை சொன்னது.
எனக்குக் கதை பிடித்திருந்தது
அதனாலேயே 
கதை கேட்பதற்காய்
அதிக நேரத்தை ஒதுக்கியிருந்தேன்.
வெகுநாட்களாய் தேடித் திரிந்த கதையது
இப்போது
இருள் மெதுவாக என்னை விட்டு நகரத் தொடங்கியது
துரத்தி வந்த பறவை மீது 
கருப்பு நிற பூனை ஒன்று வாய்வதாய் 
அக்கதை முடிகிறது.

@

ஞாபகங்கள் சுயத்தன்மையுடன் இருக்கும்போதுதான் அது ஒழுங்கான சிந்தனைகளுடன் பேசித் திரிகிறது.... கற்பனையிலூறி மதுக்கோப்பையில் வழிந்த ஞாபகங்கள் கடலாக மாறினாலும் மலையாகத் தேர்ந்தாலும் தேடுவது கடிதாகிவிடுகிறது... நீயாக மட்டுமே பிரதிபலி எனக் கேட்டுக் கொள்கிறான் கவிஞன் தன் நினைவுகளை....

ஞாபகங்கள் உன்னைப் போல
பிரதிபலிக்க வேண்டும் என
முயற்ச்சி செய்கிறேன்
மதுகோப்பையில் நிறைந்த
ஞாபகங்கள் 
சில நேரம் கடலாகிறது
சில நேரம் மலையாகிறது
கடல் நடுவிலும்
உன்னை காணக் கிடைக்கவில்லை
மலை உச்சியிலும்
உன்னைக் காணக் கிடைக்கவில்லை
ஞாபகங்களின்
ஆயிரத்து நூறு பக்கம் திறக்கப்பட்டுவிட்டன
நீ இன்னொன்றைப் போல
பிரதிபலிக்க மாட்டாய் என்பதில்
உறுதியாய் இருக்கிறது எனது காதல்
ஞாபகங்களுள் ஒரேயொருமுறை
நீயாக மட்டும் பிரதிபலி
நம் சந்திப்பு 
இரண்டு பிரதிகளாக பிரிந்து செல்ல
தயாராக உள்ளது.

@

கவிஞனின் கவிதைகள் வாசகனோடு உரையாடும்போது மட்டுமே  முழுமையடைகிறது. கவிஞன் கடலை விரித்தால் வாசகன் அதில் மீன் பிடிக்கிறான்.. அதிலும் மிஞ்சிய சொற்கள் கவிஞனின் வனைவில் தேவதையாகிறது.. இப்போது வாசகனுக்குத் தேவதையும் தேவைப்படுகிறது...இனி அவனுக்கு என்ன தருவது எனக் கவிஞன் யோசனையில் ஆழ்கிறான்... கற்பனையையும் வாசகன் களவாடிவிட்டதாக...

கவிதைக்குள் கடலை விரித்து வைக்கின்றேன்
ஒரு வாசகன் வலை வீசுகிறான்
வலை முழுக்க சொற்கள்
துள்ளிக் குதிக்கின்றன
லாபகமாக விரும்பிய சொற்களை
தனக்கு எடுத்துக் கொள்ளும் வாசகன்
இன்னும் சில சொற்களை
அப்படியே விட்டுச் செல்ல முனைகிறான்
விட்டுச் செல்ல முனையும் சொற்ளை
ஒரு தேவதையாக மாற்றிக் கொண்டிருந்தேன்
கையோடு தேவதையையும்
எடுத்துச் செல்ல விரும்பிய வாசகன்
வழக்கத்தைமீறி
இப்போது  கற்பனையையும்
எடுத்துச் சென்றுவிட்டான் 
என ஒரு உரையாடலை தொடங்க வேண்டியிருக்கிறது.

@

தனிமை வெளிச்சத்தில் இரவு ஊர்கிறதாம் அதன் இரு மருகிலும் வயலின் இசை இழைகிறது...மதுக்குவளை வழிய, சிகரெட் புகையின் சுருள் டாவின்ஸி ஓவியத்தைப் பிரசவிக்க... தனிமை எல்லை மீறும்போது நான் தொலைந்து என்னை ஊற்றிக் குடிக்கிறேன்  என மிதமிஞ்சும் வரிகள் போதையாகிறது....

தனிமை நிரம்பிய வெளிச்சத்தில்
இரவு ஊர்ந்து கொண்டிருக்கிறது
அதன் வலப்புறமும் இடப்புறமும்
வயலின் கணத்திற்குக் கணம்
நடனமிடுகிறது.

பியர் வெகு அபூர்வமாக
குறைந்து கொண்டே செல்கிறது
இழுத்துத் தள்ளிய
சிகரெட் புகையின் நீள் வளையம்
சுவரில் டாவின்ஸின் ஓவியமாய்
கூடி பரவசிக்க.

முற்றிலும் இசையின் 
கண்ணாடித் துகள்கள்
சன்னல் வழியாக 
பின்னிரவை நிலவொளியில் இணைக்க
மின்மினி பூச்சிகளின் சங்கீதம் ஆரம்பித்திற்று.

எல்லை தாண்டும் தனிமை
விலங்கிடும் போதெல்லாம்
இயலாமையின பெயரால் இப்படிதான்
விலக்கப்பட்ட வாழ்க்கையுடன்
என்னை குவளையில் ஊற்றி குடித்துக் கொண்டிருக்கிறேன்

*****    ****     *****

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

ரிஸ்வான்


0   920   0  
November 2020

தங்கேஸ்வரன்


0   1356   0  
July 2019

இரா. மதிராஜ்


0   326   0  
May 2023

நறுமுகை


0   247   0  
March 2024