logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் ரிஸ்கா முக்தார் – ஒரு அறிமுகம்
*************************************************** 
வர்ணங்களற்ற தேசத்தில்..
கனவுகள்
விற்பவளிடம் 
சில ஓவியங்கள் இருக்கின்றன..

வரிகள் எங்கிருந்து தொடங்குகின்றன என்பது விடயமில்லை. அது தொடங்குமிடம் ஒரு தீ பந்தத்தையாவது எரியவிட்டு நகரவேண்டும். நமது  கவிஞர் ரிஸ்கா முக்தாரின் எழுத்துகளில் அதனை நாம் காணமுடிகிறது.

கவிஞர் ரிஸ்கா முக்தார் இலங்கைத்தீவின் புத்தளம் எனும் ஊரைச்சேர்ந்தவர். சமூகவியல் பட்டதாரியான படைப்பாளி தற்போது ஆசிரியையாகவும் பணி புரிந்து வருகிறார். படைப்பாளி ரிஸ்கா முக்தார் அவர்களின் தமிழ் ஆர்வத்தைப் பாராட்டும் வகையில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான கவிச்சுடர் விருதை, நமது படைப்புக்குழுமம் வழங்குவதில் நாம் பெருமை கொள்கிறோம்.

வாசிப்பின் மீதும் ஈடுபாடு கொண்ட கவிஞரின் படைப்புகள் வெளி இதழ்களிலும் பிரசுரம் கண்டிருக்கிறது. மேலும் இவர் நமது படைப்பு குழுமத்தில் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிச்சுடர் ரிஸ்கா முக்தார் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
***********************************************************************************
நேசத்தின் பெயரால் தண்ணீர் கேட்டு அருந்திவிட்டு சற்றே இளைப்பாறலாம் என்று வருபவர்களிடம் நீ உன் வீட்டு சாவியையே கொடுத்துவிடுகிறாய்..ஏன் இத்தனை அவசரம் உனக்கு? அப்படி வந்தவர்கள் உன்னிடம் சொல்லாமல் செல்லும் போது நீ தனிமையில் அமர்ந்து அதற்காக வருந்துகிறாய்! என தன் தோழி கடிந்து கொள்வதுபோல் ஒரு கவிதை.. சங்க இலக்கியத்தை மீட்டெடுத்து கொடுக்கிறது...

நேசத்தின் பெயரால் 
உன் வாழ்வில் ஒருவர் உள்நுழைகிறார்..

அவர் உன்னிடம்
அன்பின் சிறு தண்ணீர்க் கோப்பையைதான் 
வேண்டி நிற்கிறார்;
நீயோ அவருக்கு
பேரன்பின் ஒரு நீர்த்தேக்கத்தையே கொடுத்து விடுகிறாய்..

ஒரு துளி கருணைக்காகத்தான் 
வாசற்படியில் அவ்வளவு தயங்கி நிற்கிறார்;
நீயோ அவர்மேல்
கருணையை 
பெரும் மழையென கொட்டித்தீர்த்து விடுகிறாய்..

நேசத்தின் பெயரால்
உள்நுழைபவர்கள் எவரும்
ஒரு விருந்தினராக
சற்றுநேரம் உன் வரவேற்பறையில் 
அமர்ந்து செல்லவே வருகிறார்கள்;
நீதான் 
அத்தனை ஆனந்தத்துடன்
உன் வீட்டுச்சாவியையே 
அவர்களிடத்தே ஒப்படைத்து விடுகிறாய்..

சகி..
நேசத்தின் பெயரால் 
உன் வாழ்வில் ஒருவர் உள்நுழையும் போது..
நீ ஏன் இத்தனை அவசரப்படுகிறாய்..?
நீ ஏன் இத்தனை அமைதியிழக்கிறாய்..?

நேசத்தின் பெயரால் உள்நுழைந்தவர்கள்
ஒருநாள்
ஏதும் சொல்லாமல் திடீரென  உன்னிலிருந்து தொலைவாகிப்போய் விடுகிறார்கள்..

அப்போது உனை பற்றிக்கொள்கிறது;
நீங்கவே நீங்காத ஒரு வருத்தம்..
அப்போது உனை சூழ்ந்துக்கொள்கிறது;
விலகவே விலகாத  ஒரு இருட்டு..

இன்னும்
நேசத்தின் பெயரால்
உள்நுழைபவர்கள் எவரும்
வந்த வழியே திரும்பிச்செல்வதே இல்லை..

அவர்கள்
வெளியேறுகிறார்கள்;
உன் கண்ணீரின் வழியே..
உன் உடைந்த நம்பிக்கைகளின் வழியே..
உன் சிதைந்த கனவுகளின் வழியே..!!!
 
*
மரணமென்பது முகம் பார்க்கும் கண்ணாடி அது எப்போது உடையுமென்று யாருக்கும் தெரியாது... தெரியாது என்பதால்தான் தாமதங்கள் இங்கே முளைத்துவிடுகின்றன... மரணம் வந்து, தன் முன் நிற்பதாக கற்பனை கொள்ளும் கவிஞர்... அதனிடமே நீ ஏன் இத்துணை அவசரப்படுகிறாய்? எனக்கான இறுதி வேலைகள் நிறையவே இருக்கின்றன என பட்டியலிட்டு தாமதிக்க வைக்க விரும்பும் கவிஞரின் வரிகள் இதோ:

அப்படியென்ன அவசரம் இந்த மரணத்திற்கு..?!

இறப்பதற்கு நான் 
சிறிதும் ஆயத்தமாகாவொரு நொடியில் 
முன் வந்து நிற்கிறதே.!!

இங்கே நான் செய்து முடிக்க எத்தனையோ மிச்சமிருக்கிறது..

கேட்காமல் விட்டு விட்ட மன்னிப்பொன்றை கேட்டுவிட வேண்டும்..
அன்பிற்கினியவர்களிடம் விடைப்பெற்றுக் கொள்ள வேண்டும்..
என் தவறுகளின் சாட்சியை இவ்வுலகிலிருந்து மொத்தமாய் அழித்திட வேண்டும்..
என் நினைவுகளை மிக அழகாய் செதுக்கிட வேண்டும்..
இத்தனை நாளும் உடனிருந்தவர்களுக்கு நன்றியேனும் சொல்லிடத்தான் வேண்டும்..

இப்படியாய்..
இன்னும் இன்னும் எத்தனையோ இருக்க..

கலைந்திருக்கும்
ஆடையினைக்கூட ஒழுங்குப் படுத்திக் கொள்ள
அவகாசம் தராமல் 
சட்டென முன்வந்து நிற்கிறதிந்த மரணம்..

என் அன்பிற்கினிய மரணமே!!
சற்றே பொறுத்துக்கொள்..

என் இறுதி உணவை முடித்துக் கொள்கிறேன்..
என் இறுதி வார்த்தையை பேசிக் கொள்கிறேன்..
என் இறுதி கவிதையை எழுதி விடுகிறேன்..
என் இறுதி ஆடையை அணிந்து கொள்கிறேன்..
என் இறுதி கண்ணீரை சிந்திக் கொள்கிறேன்..

அப்படியென்ன அவசரம் இந்த மரணத்திற்கு..?!

நான் ஆயத்தமாகும் வரையேனும்
கொஞ்சம் தாமதித்திட கூடாதா..?!!

*

காதலென்பது சந்திப்புகளில்தான் முழுமையடைகிறது. அப்படி சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதனை தவிர்ப்பதும் ஒரு காதலின் தயக்கம்தான். அல்லது ஊராரின் மொழிக்கண்களில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள தனக்குத்தானே வைத்துக்கொள்ளும் சிறை. அப்படியிருந்தும் சந்திப்போமா? என்று காதலின் வினாவிற்குள் விழுந்தவள் அமைதியிழந்து கவிதைகளில் நுழைந்து கொள்கிறாள்...

அன்பே..
இந்நகரத்தில்
நாம் சந்தித்துக்கொள்ள
எந்தத்தடையும் இல்லை
என்றபோதும்
நாம் ஒரு நாளும்
அதற்காய் முன் வந்ததே 
இல்லை..

நமக்கான தூரமென்பது
சில மைல் தொலைவுகள்தான்
என்றபோதும்
நாம் ஒரு நாளும்
அதை கடந்துவர
நினைத்ததே
இல்லை..

நாம் இணைந்திருக்க வேண்டிய 
ஒரு தேநீர் மாலையை 
நீண்ட காலமாய்
புறக்கணித்துக் கொண்டிருக்கிறோம்..

இன்னும்
நாம்
சந்திக்கலாமென தேர்ந்தெடுக்கும் நாளொன்றில்..
நமக்கேதும் 
ஒரு அவசர வேலை வந்து விடுகின்றது..
அல்லது
பாதி வழியில் 
நமது  பாதைகள் முடிந்து விடுகின்றன..

எப்போதும் இப்படித்தான்!
நம் சந்திப்புக்கள்
அத்தனை தந்திரமாய் தவிர்க்கப்படுகின்றன..
அத்தனை மறைமுகமாய் மறுக்கப்படுகின்றன..

அன்பே..
நாம் 
ஒருவருக்கொருவர்
எவ்வளவோ
அர்த்தமற்றுப்போன 
பின்னாளில்..

ஒருமுறை நாம் சந்தித்துக்கொள்ளலாமா..? என நீ கேட்கிறாய்..

அது அத்தனை எளிய கோரிக்கைதான்
என்றபோதும்
அது என்னை சற்றே அமைதியிழக்கச் செய்து விடுகிறது!!!

மன்னிப்பு என்பது மனிதத்தின் மகத்தான மொழி... அது மொழியும் நேரம் காலம் கடந்துவிட்டது என்றால் அதனாலென்ன பயன் இருக்கமுடியும்? மன்னிப்பை பற்றி ஒரு சிறப்பான கவிதையாகவே இதை நாம் காண முடியும்...



மன்னித்து விடு என்பது அத்தனை எளிய வார்த்தை தான்..

நீங்கள் இதை கேட்கும் போது..
அவர்களின் வாழ்வில் பாதி முடிந்து போயிருக்கும்
அவர்களின் கண்களில் நீர் வற்றிப்போயிருக்கும்
அவர்களின் ஒளி தீபங்களோ எண்ணெய் தீர்ந்து அணைந்து போயிருக்கும்
அவர்களின் சிதையோ  முற்றிலுமாய் எரிந்து சாம்பலாகியிருக்கும்..

மன்னித்து விடு என அத்தனை எளிதாய் கேட்டு விடுகிறீர்கள்

மன்னிப்பென்பது ஒரு வார்த்தையில் தொக்கி நிற்பதா??
அது ஒரு வாழ்க்கையையே பற்றிக்கொள்வது அல்லவா..?!

அத்தனைக்கும் பின்பு
நீங்கள் கேட்கும் மன்னிப்பென்பது..

அவர்களுக்காக உங்களிடம் நீங்களே 
நீதி கேட்டு கொள்வது
அவர்களுக்காக உங்களை நீங்களே
தண்டித்துக் கொள்வது
அவர்களுக்காக உங்களுக்கு நீங்களே 
சவுக்கடிகளை கொடுத்துக் கொள்வது
அவர்களுக்காக உங்களை நீங்களே 
ஒப்புக் கொடுப்பது..

மன்னித்து விடு என அத்தனை எளிதாய் கேட்டு விடுகிறீர்கள் 

நீங்கள் பாதிவழியில் கைவிட்டு வந்த கரங்களை யாரோ ஒருவர் பற்றிக்கொள்ளும் வரை
நீங்கள் சுக்கு நூறாய் உடைத்திட்ட மனதின் துண்டுகளை
யாரோ ஒருவர் மீளிணைக்கும்  வரை..
நீங்கள் வளர்த்து வந்த விஷச்செடிகளை
யாரோ ஒருவர் வேரோடு பிடிங்கி எரியும் வரை
உங்களுக்கான மன்னிப்பென்பது சாத்தியமேயில்லை..

மன்னிப்பென்பது ஒரு வார்த்தையில் முடிந்து போவதா..?
அது ஒரு வாழ்க்கையாய் வாழ்ந்து தீர்ப்பதல்லவா..?!

இப்படித்தான் 
எப்போதோ தவறுதலாய் உதிர்த்த ஒரு வார்த்தைக்காக
ஜென்ம ஜென்மமாய்
நான் 
உதிர்ந்து கொண்டிருக்கிறேன்..

இன்னும் 
என் தேசத்தில் மன்னிப்பின் மேகங்கள் 
சூழவேயில்லை!!!

*
எழுதிக் கொண்டிருப்பவர்கள் பைத்தியக்காரர்கள்... அவர்கள் இந்த சமூகத்தை திருத்திவிடலாம் என்று கனவு காண்கிறார்கள்... அப்படியெல்லாம் இல்லை அவர்கள் பைத்தியம் ஆகாமல் இருப்பதற்காக எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்... வித்தியாசமான பார்வைதான்...

எழுதிக்கொண்டிருப்பவர்கள்
பைத்தியக்காரர்கள்!!

அவர்கள் தங்கள் அன்பின் விஷத்தை 
மீண்டும் மீண்டும் பருகிக்கொண்டிருக்கிறார்கள்..
அவர்கள் தங்கள் ஆறாக்காயத்தை 
மீண்டும் மீண்டும் திறந்துப்பார்க்கிறார்கள்..
அவர்கள் தங்கள் மீளாத்துயரை 
மீண்டும் மீண்டும் தேடிச்செல்கிறார்கள்..

எழுதிக்கொண்டிருப்பவர்கள்
பைத்தியக்காரர்கள்!!

அவர்கள்
துளி அன்பிற்காய்
மூடிய கதவுகளை ஓயாமல் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்..
ஒரு மன்னிப்பிற்காய் கண்ணீரோடு மண்டியிடுகிறார்கள்..
சிறு ஆறுதலுக்காய் காலங்காலமாய் காத்துக்கிடக்கிறார்கள்..

எழுதிக்கொண்டிருப்பவர்கள் 
பைத்தியக்காரர்கள்!!

இவ்வெழுத்துக்களால்
இறந்துக்கொண்டிருக்கும் ஒரு நம்பிக்கையை உயிர்ப்பிக்க முடியுமென..
எல்லா அவமானங்களிலிருந்தும் வெகுதூரம் சென்றுவிட முடியுமென..
இன்னும்
இவ்வெழுத்துக்களால் 
ஒருவரை மனம் சிதறச்செய்து 
தன்னிடத்தே திரும்பி வரவழைக்க முடியுமென
அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்..

ஆம்..
எழுதிக்கொண்டிருப்பவர்கள்
பைத்தியக்காரர்கள்!!

அவர்கள்
பைத்தியமென்பதால்
எழுதுகிறார்கள்..
இன்னும்
பைத்தியம் ஆகிவிடக்கூடாதென்பதற்காகவே
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்!!!

*
மேலும் கவிஞரின் சில கவிதைகள்

அமைதியாய் ஒரு நேசத்தை அரவணைக்கத் தெரியவில்லை..
ஆர்ப்பாட்டமின்றி பிரிவொன்றை ஏற்கத் தெரியவில்லை..

உறுதியாய் யாரையும் நிராகரிக்கத் தெரியவில்லை..
தயக்கமின்றி எதையும் பேசத் தெரியவில்லை..

இதுதான் வேண்டுமென அடம்பிடிக்கத் தெரியவில்லை..
சுயத்தோடு வெறுப்பை வெளிப்படுத்தத் தெரியவில்லை..

நிதானமாய் ஒரு முடிவை எடுக்கத் தெரியவில்லை..
கண்ணீரின்றி நினைவுகளை கடக்கத் தெரியவில்லை..

முழுமையாய் யாரையும் வெறுக்கத்தெரியவில்லை..
எதிர்ப்பார்ப்பின்றி ஒரு நாளையேனும் எதிர்க்கொள்ளத் தெரியவில்லை..

இருந்தும்
அன்பே..

இந்த 
காலத்தையும்
காதலையும்
என்னைவிட அறிந்தவர் யாரென்ற
வெற்று கர்வத்திற்கு 
மட்டும்
குறைவேதுமில்லை!!!

*
இன்றைய நாளில் 
நீ சந்திக்கும் நபர்களில் 
நான் இரண்டாவது நபர்

இன்றைய நாளில்
நீ அணியும் ஆடைகளில்
நான் இரண்டாவது ஆடை

இன்றைய நாளில்
நீ விரும்பிக்கேட்கும் பாடல்களில்
நான் இரண்டாவது பாடல்

இன்றைய நாளில் 
நீ சுவைப்பவற்றில்
நான் இரண்டாவது தேநீர்க்கோப்பை

இன்றைய நாளில்
நீ சிந்தும் கண்ணீரில்
நான் இரண்டாவது துளி

சகி
இரண்டாம் தேர்வுகள் 
உன்னில் எதையும் உருவாக்கும் 
திறனற்றவை
எனினும்
அவை மாற்றுகின்றன
கொஞ்சமாய் 
உன் ரசனையை..

இன்னும்
இரண்டாம் தேர்வுகளென்பது
நீ இளைப்பாற தேர்ந்தெடுக்கும் 
ஒரு சிறு நிழல்
அவ்வளவே!!

எனினும்
எவருக்கும்
எவருடைய வாழ்விலும்
ஒரு இரண்டாந்தேர்வாக மட்டுமே
இருந்து விடும் 
துயரம்
வாய்க்காமலிருக்கட்டும்!!!

**

வர்ணங்களற்ற தேசத்தில்..
கனவுகள்
விற்பவளிடம் 
சில ஓவியங்கள் இருக்கின்றன..

அதிலொரு ஓவியம் 
தனிமையில் மூச்சடைத்து இறந்து போனது..
அதிலொரு ஓவியம் 
கண்ணீரில் ஆரம்பித்தது..
அதிலொரு ஓவியம் 
மீட்பாளரை தேடியலைந்தது..

அவளோ கனவுகளை விற்பவள்;
விற்க விற்க தீர்ந்து போகா கனவுகள் தான் அவளுடையன!!

இன்னும்..
வரையப்படா ஓவியமொன்றில்
அவளின் மகிழ்ச்சி ஒளிந்திருக்கக்கூடும்..
வரையப்படா ஓவியமொன்றில்
அவளின் நேசம் மறைந்திருக்கக்கூடும்..
வரையப்படா ஓவியமொன்றில்
அவளின் இதயம்
சிறை வைக்கப்பட்டிருக்கவும் கூடும்..

முன்னெப்போதோ ஒரு பொழுதில்..
வர்ணங்கள் கொடுத்து
அவள் கனவுகளை வாங்கி வந்ததாயொரு ஞாபகம்..

என் வர்ணங்களைப் பெற்று அவளொரு ஓவியம் தீட்ட துவங்கினாள்..

வர்ணங்களற்ற தேசத்தில்..
ஓவியம் வரைபவளின்
இதயத்திலும்
துளி வெளிச்சம் எஞ்சியிருக்கக்கூடும்..
இருள் பற்றிய பயமேதுமின்றி!!

**
இது காதலில்லை!!
அதனாலென்ன??

பிடித்த நிறத்தில் உடையணியச்சொல்லி
கேட்டுக்கொள்ளலாம்..
உரிமையாய் விருப்பு வெறுப்புக்களை
பகிர்ந்து கொள்ளலாம்..
விளையாட்டாய் இருவரின் பாஸ்வேர்ட்களையும்
மாற்றிக்கொள்ளலாம்..

இது காதலில்லை!!
அதனாலென்ன???

யாரின் செல்ஃபிக்கோ ஹார்ட்டின் விட்டதற்காய்
கடுப்பாகி ஓஃப் லைன் போகலாம்..
நீண்ட காத்திருப்புக்குப்பின் பதிலளிக்கப்படும் குறுஞ்செய்திக்காய்
கோபப்படலாம்..
நள்ளிரவில் அழைப்பெடுத்து பேசச்சொல்லி
இம்சை செய்யலாம்..

இருந்தும்..
நிச்சயமாய் 
இது காதலில்லை!!
அதனாலென்ன??
**

ஒவ்வொரு தொலைபேசியிலும் இருக்கக்கூடும்..
அழிக்க முடியா
அழைக்கவும் முடியா 
சில எண்கள்...

இறந்து போனதோர் உறவோ..
விலகிச் சென்றதோர் நேசமோ..
மறந்து போனதோர் தோழமையோ..
என யாரோவொருவரின் ஞாபகத்தை தேக்கி வைத்திருக்குமிந்த எண்களை கடந்து போதலென்பது அத்தனை எளிதல்லவே..

ஒரு அழைப்பென்பது வெறும் எண் மட்டும் தானா..?
 
அது..
யாரோவொருவரின் உயிரை..
யாரோவொருவரின் நேசத்தை..
யாரோவொருவரின் நினைவை..
யாரோவொருவரின் வாழ்வையல்லவா சுமந்தலைகிறது..

அறியாமல்..
எத்தனை எண்களை..
எத்தனை அழைப்புக்களை..
எத்தனை எத்தனை குறுஞ்செய்திகளை..
அலட்சியமாய் நிராகரித்திருப்போம்..

உறவுகளை தொலைத்து விட்டு இப்போதிந்த எண்களை கட்டிக் கொண்டு அழுவதால் ஏதும் மாறிடக் கூடுமா..?

இல்லை..
தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விட்டவர்கள்
இனி ஒருபோதும் நம்மை அழைக்கப் போவதில்லை...
அவ்வளவே!!!

**

இப்போதெல்லாம்..
வாழ்தல் அத்தனை சுவாரஸ்யப்படவில்லை..

அந்திநேர மழை..
பயணத்துணையாய் வந்த நிலா..
கையோடு ஒட்டிக்கொண்டதொரு பட்டாம்பூச்சியின் வண்ணங்களென எதுவும் ரசிக்கும் படியாய் இல்லை..

எதிர்ப்பார்த்திருந்ததொரு சந்திப்பு..
மெல்லியதாய் ஒரு தலைகோதல்..
உயிர்த்தொடுமொரு குழந்தையின் முத்தமென எதுவொன்றும் என்னை சலனப்படுத்துவதேயில்லை..

தோழா..
வாழ்தலென்பதொரு கலை;
அது எல்லாருக்கும் வசப்படுவதில்லை..

ஆம்..
நான் இருக்கிறேன்..
வாழ்தலின் கணங்களில் நின்று 
மரணத்தின் வாசனையை நுகர்ந்தபடி
இருந்தும் இல்லாமலும் இருந்துக் கொண்டிருக்கிறேன்...!!!

**

எல்லோருடனும் எவரேனும் இருந்துக் கொண்டிருக்கிறார்கள்..

ஒரு புன்னகையில் உயிர் வளர்க்க..
ஒரு தலைகோதலில் சோகம் ஆற்ற..
ஒரு குறுஞ்செய்தியில் நலம் கேட்க..
ஒரு பின் தொடரலில் நேசம் உணர்த்தவென..

எல்லோருடனும் எவரேனும் இருந்துக் கொண்டிருக்கிறார்கள்..

ஒவ்வொரு துன்பத்திலும் யாரோவொருவர் துணை நிற்கிறார்..
ஒவ்வொரு பயணத்திலும் யாரோவொருவர் அறிமுகமாகிறார்..
ஒவ்வொரு தொலைபேசியிலும் யாரோவொருவர் இணைப்பிலிருக்கிறார்..

ஆம் எல்லோருடனும் எவரேனும் இருந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்..

எல்லா கவிதைகளும் யாரோ ஒருவரால் படிக்கப்படுகின்றன..
எல்லா கரங்களும் யாரோவொருவரால் பற்றப்படுகின்றன..
எல்லா நினைவுகளும் யாரோவொருவரால் சேகரிக்கப் படுகின்றன..

இந்த பிரபஞ்சத்தின் எந்த மூலையிலும் யாருமில்லாதவரென எவருமே இல்லை..

இங்கே எப்போதும் எல்லோருடனும் எவரேனுமொருவர் இருந்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்...!!!


.........

இது நேசம் தானென ஒப்புக்கொள்!!

நீ தொலைத்த புன்னகைதனை 
நான் தேடித்தருகிறேன்..
நீ மறக்கத்துடிக்கும் பெருஞ்சோகமொன்றை 
நான் மறக்கச் செய்கிறேன்..
நீ பாதிவழியே விட்டு வந்த கனவொன்றை 
நான் மீட்டுத் தருகிறேன்..

இது நேசம் தானென ஒப்புக்கொள்!!

உன் துன்பம் தோய்ந்த பக்கங்களை
நான் எரித்து விடுகிறேன்..
உன் சாலைதனில் உதிரா விண்மீன்களை
நான் பூக்கச்செய்கிறேன்..
இன்னும் புறக்கணித்தவர்களையும் புன்னகைத்துக் கடக்க 
நான் கற்றுத்தருகிறேன்..

தவிர
இந்த இரவுகள் வெறுமையிலானவை..
இந்த விடியல்கள் சாபம் சுமந்தலைவன..
இந்த உலகமோ வெறும் பொய்களாலானது!!

இது நேசம் தானென ஒப்புக்கொள்!!

உன் இரவுகளை கனவுகளால் நிரப்பித் தருகிறேன்..
உன் விடியல்களை புன்னகையால் உயிர்ப்பித்து நகர்கிறேன்..
மேலும் உன் உலகத்தை 
மெல்லிசைக் கொண்டு மலர வைக்கிறேன்..

நேசமென்பதொரு கலை
நேசமென்பதொரு கனவு
நேசமென்பதொரு மெல்லிசை..

எனினும் 
உண்மையில்..
உன் நேசமற்ற பொழுதுகள் 
நரகத்தை அணுகுபவை..

அதற்காகவேனும் ஒப்புக்கொள்..
இது தான் நேசமென!!!

**

கவிச்சுடர் ரிஸ்கா முக்தார் அவர்கள் மேலும் சிறந்த படைப்புகளை வழங்க பெருமையுடன் வாழ்த்துகிறது  நம் படைப்பு குழுமம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

சிவயட்சி


0   1318   0  
December 2018

யாழ்ராகவன்


0   539   0  
December 2022

நீர்ப்பறவை


0   544   0  
June 2022

இப்னு பக்கர்


0   32   0  
November 2024

மணிவண்ணன் மா


1   916   0  
June 2021