இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை கவிஞர் ச.ஆனந்த குமார் அவர்கள் பெறுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
கோவையை பிறப்பிடமாக கொண்ட கவிஞர் அவர்கள் வணிகவியல்
முதுகலை பட்டம்
பெற்றவர். தற்போது சென்னயில்
தனியார் நிறுவனம்
ஒன்றில்
மேலாளராக
பணி புரிந்து வருகிறார்.
இவரது கவிதைகள், கதைகள் பல்வேறு பிரபல இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் வெளிவந்துள்ளன.
கோவையில்
வசந்த வாசல் கவிமன்றத்தின் மூலமாக எண்ணற்ற கவியரங்கங்கள் மற்றும் பட்டி மன்றங்களில் கலந்து கொண்டுள்ள கவிஞர், கோவை
வானொலி நிலையத்தில் பகுதி நேர தொகுப்பாளராகவும், சங்கமம்
தொலைகாட்சியில்
(அமீரகம்) - பகுதி நேர தொகுப்பாளராகவும் பணி புரிந்து வருகிறார்.
இவரது முதல் கவிதை
தொகுப்பு படைப்பு பதிப்பகத்தின் வெளியீடாக –
முடிவிலியின் நினைவு சங்கிலி – என்ற கவிதை நூல் வெளியாகியுள்ளது.
நமது படைப்பின்
மாதந்திர சிறந்த படைப்பாளி விருதினை முன்பே பெற்றுள்ள கவிஞர் இப்போது நமது கவிச்சுடர் விருதினையும் பெறுவதில் படைப்பு குழுமம் பெருமிதம் கொள்கிறது.
**************************************
இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம்:
ஒரு பூச்செடி வளர்ப்பவனின் துள்ளலும் மகிழ்ச்சியையும் பற்றி பேசும் கவிதை ; அவன் அதனிடமிருந்து ஒரு பூவை பறித்தவுடன் அஃது அன்னியப்பட்டு விட்டதான முடிப்பில் கவிதை சிறக்கிறது. பூச்செடியையும், பூவையும் படிமங்களாய் மாற்றிக் கொண்டால் வாழ்க்கைக்கும் பொருந்தி போகும்.
தினம்
ஒரு முறையாவது
எல்லா
செடிகளிடமும்
பேசி
விடுவதுண்டு தண்ணீர் விடுகையில்..
வெய்யில்
காலங்களில் இரு முறை..
மெலிதாய்
பூக்கள் பூக்க
துவங்கும்போது
நான் சிறு பிள்ளையென
துள்ளி
குதிப்பதை பார்த்து
ஒருவேளை
எல்லோரும்
புன்னகைத்திருக்கலாம்..
என்றாலும்
ரோஜா
மலர்ந்தவுடன்
சட்டென
பிய்த்தெடுத்த என்
கருணையின்
அதிர்வுகளில்
இருந்து
அவைகளால்
இன்னும் வெளிவர முடியவில்லை..
பெண்
பிள்ளை என்றால் செல்லம் என்பது குடும்பங்களின் கொண்டாட்ட மன நிலை .. உண்மையில் அந்த பெண் குழந்தைகளுக்கும் அப்படித்தானா? இந்தக் கவிதையிலும் ஒரு பெண் பிள்ளை தன் மன நிலையை பதிவு செய்கிறாள்….
கம்மல்
வாங்குவதற்கு
கடையையே
புரட்டி போடுவேன்..
புடவை
தேர்வு செய்ய
நான்கைந்து
கடைகளாவது
ஏறி
இறங்குவது வழக்கம்..
பொருத்தமான
நகைகளுக்கு
அலைவது பிடித்தமான
பொழுதுபோக்கு..
படிப்பும்
என் முடிவுப்படி..
சம்பந்தம்
மட்டும் பேசி முடிவு செய்து
புகைப்படம்
காட்டி
மாப்பிள்ளை
என்றார்கள்..
இப்போதும்..
திருமண
துணிகள்
தேர்வு
செய்ய எனக்கு முழு
சுதந்திரம் உண்டென்கிறார் அப்பா..
காணும் காட்சியெங்கும் மிஞ்சி நிற்கும் வலிகள் வரிசை கட்டி நிற்க; அதனிடத்தில் நின்று யோசிக்கத்தான் யாருக்கும் நேரம் வாய்ப்பதில்லை. இங்கு கவிஞருக்கும் அப்படி பட்ட நிலைதான்… பேரூந்துக்கான காத்திருப்பே பெரும் கவலை…
மின்கம்பிக்கு
இடைஞ்சல்
என
வெட்டப்பட்ட
மரத்தைச்
சுற்றி
சத்தமிட்டு
வட்டமிடுகிறது
பறவைகள்..
தேநீர்
தந்த சிறுவனிடம்
சர்க்கரை
குறைவென
தலையில்
குட்டி கூட்டம்
பலமாய்ச்சிரிக்க
வெளிவரும்
கண்ணீரை
பல்கடித்து மறைக்கும் சிறுவன்..
விடாமல்
சுற்றி அலுக்காமல்
வாடிக்கையாய்
பிச்சை கேட்கும்
கூட்டம்
என
எதுவும்
பாதிக்கவில்லை..
என்
கவலையெல்லாம்..
எப்போதும்
சரியாக வருகிற
ஆறு
மணி பேருந்து
இன்னும்
வரவில்லை..
என்பதுதான்..
காத்திருப்பு என்பது சுகமானதுதானா?
சில நேரங்களில் சில கவனிப்புகள் வழியாக, செயல்கள் வழியாக சுகமானதாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதுதான் யதார்த்தம் என பகிர்கிறது இக் கவிதை….
புதிதாக
நந்தியாவட்டை பூத்திருக்கிறது.
வரிசையாய்
எறும்புகள்புற்றுக்குள் செல்கின்றன..
போன
வருடம் வைத்த செடிகள்
மரங்களாகியிருத்தன.
கால்சட்டையணிந்து
ஓடுபவர்களும்
நாற்பது
வயதை கடந்தவர்கள்
நடந்தும்
எனை கடந்து கொண்டிருந்தார்கள்..
வெகுநேரமாய்
அமர்ந்திருப்பதால்
அடுத்தமுறை
பார்த்தால் புன்னகைக்க வாய்ப்பிருக்கிறது..
பந்து
பொறுக்கி விளையாடும்
குழந்தைகளுக்கு
போடும் வேலையையும்
இடையிடையே
செய்து கொண்டிருக்கிறேன்..
வழக்கம்
போல் தாமதமாகும்..
என
குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறாய்..
வெறென்ன
செய்துவிட முடியும்..
நொடிக்காய்
யுகங்கள் தவமிருப்பதாய்
அன்பின்
இருத்தல் பொருட்டு
சலிப்பின்
பிசுக்குகள் மறைத்து
பொறுமையாய் காத்திருப்பதை தவிர..
தேவைக்கேற்ப பிரார்த்தனைகளும் கூட மாறிக் கொள்கிறது. ஒரு விவசாயி மழைக்கு வேண்டி பிரார்த்திக்கும்
போது ஒரு பிரயாணி மழையற்ற வானைக் கேட்பான். கடவுள் என்னதான் செய்வார்? கவிதை யதார்த்த நிலையை பேசுகிறது….
விடாமல்
குதிக்கிற
தூறல்கள்
பற்றி ஊடகங்கள்
ஏற்கெனவே
அறிவித்து விட்டன..
வீதியில்
கால் வைத்தால்
ஒரு
வேளை சேற்றில் மாட்டி
செருப்பு
பிய்ந்து விட வாய்ப்பிருக்கிறது
வழக்கமாய்
அமர்ந்திருக்கும்
பூக்கார
பெண்மணி இருக்கப்போவதில்லை..
இன்று
பூங்காவில்
நடைப்பயிற்சி
கிடையாது..
வாடகைக்கு
வாகனங்கள்
செயலிகளில்
கிடைக்காது..
வெளியூர்
செல்பவர்கள்
எச்சரிக்கையுடன்
இருப்பது நல்லது...
எப்போது
வேண்டுமானாலும்
மின்சாரம்
கைவிடலாம்..
பள்ளிகளுக்கும்
விடுமுறையில்லை..
இணையத்தில்
நடக்கும் வகுப்புகள்..
இரண்டாவது
நாளிலேயே சலித்து கொண்டோம்..
வெயிலுக்காய்
காத்திருப்பதென..
இப்படித்தான்
கோடை
கத்தரி
வெயிலின் மத்தியில்
மழைக்கு
பிரார்த்தனை
செய்த ஞாபகம்..
பெண்களை பூவெனவும் நிலவெனவும் சிலாகிப்பது ஏமாற்று வேலைதானோ! ஒரு பெண் தன் மனக் குமுறலை வெளியாக்கும் இக் கவிதை அருமை
முல்லை
கொடியென படர்ந்தே
இருக்கட்டுமா
என்றதும்
மகிழ்ச்சியுடன்
ஒப்புக்கொள்கிறாய்..
போன்சாயாக
வீட்டில்
வசிக்கட்டுமா..என்றதும்
எதிர்பார்த்திருந்தைப்போல்
சரியென
சொல்லி விட்டாய்..
மூங்கிலென
நான்
வளர்வதை
மட்டும்
உன்னால்
கடைசிவரை
சகித்து
கொள்ளவே
முடிவதில்லை..
மேடையில் இராஜா என்றாலும் கூத்து கட்டுகிறவன்
பொழப்பு பிச்சைக்காரன்தான் … கடவுள் வேசம் போட்டவன் கையேந்தும் போது கடவுளும் கூட கண்மூடிதான் தூங்குகிறார்.
பார்க்காமலேயே
இருந்திருக்கலாம்..
ராட்சச
ராவணணாய் சிரிக்கையில்
ஊரே
பயத்தில் அலறும்..
பீமன்
வேடம் தரிக்கையில்
சுமந்திருக்கும்
கதை கூட
கம்பீரமாய்
நடிக்கும்.
புறவழி
நெடுஞ்சாலை
உணவகத்தில்..
ஆறடி
உடல் குறுக்கி
பரிமாற
தெரியவில்லையென
வடுக்கள்
சுமந்து
ஆற்றாமை
அணிந்திருந்த காட்சி
என்
கண்ணில் படாமல்
காலம்
ஒருவேளை
தவிர்த்திருக்கலாம்
இனி கவிஞரின் சில கவிதைகள்:
அப்பா
கொள்கைக்காய்
தீக்குளித்தார்..
அவருக்கு
தெரியாது
கொள்கைகள்
மாறிக்கொண்டே
இருக்கும்
என்று..
நான்
மீம்ஸ் போடுகிறேன்..
எனக்கும்
தெரியாது
எதிரெதிர்
நின்றவர்கள் எல்லாம்
கூட்டணியென்ற
பெயரில்
ஒரே
வரிசையில் அமர்வார்கள் என்று..
தலைமுறைகளாய்
தொண்டராக
வாழும்
ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பத்தில்
மகனுக்கு
என்ன
வேலை
கொடுக்கலாம்..
என
யோசித்து கொண்டிருக்கிறேன்
-----------------------------------------------------
வெயில்
விழுங்கி நிழல்
பிரசவிக்கும்
தாவரம் போல்
ஸ்கலித
ரசவாதத்தில் திரவத்தை
அடைகாத்து
உயிராய் சுமக்கிற
இறைவி!
உமிழ்நீர்
சுரப்பிகளில்
சில
சிட்டிகைகள் இனிப்பு கலந்து
பரிமாறுகையில்
கொதி
நிலையில் காமம்
பிற
நிலையில் பாசம் எனவும்
கூடு
பாய்கிறது முத்தம்..
சமையலறை
தொடங்கி
வீட்டின்
முடுக்குகளில் நீக்கமற
பிரார்த்தனையென
நிறைந்திருக்கும்
வேலைக்கென
பிறந்திருக்கும்
வியர்வை
இயந்திரங்கள்..
சொட்டு
சொட்டாக வலி
உடலுக்குள்
உடும்பென
உருக்கும்
ரத்தப்போக்கிலும்
புன்னகை
வீசும் பூக்களின்
மனித
உருவம்.
நிபந்தனைகளற்ற
அன்பின்
வாசம்
அணிந்தவளை
திமிர்
ஆயுதம் கொண்டு
வார்த்தை
கங்குகளில் எரியூட்டி
கண்ணீர்
கசிய உள்ளீடென
உரமாறாமல்
இருந்து விடுங்கள்
மற்றவர்களுக்கென
உருகி
சுவாசிக்கும்
அவள்
ஒரு நீரதிகாரம்!
----------------------------------------------------------------------
சலனமற்றது
நாற்காலிகள்..
பெருந்துரோகத்தின்
அடையாளம்..
குருதி
கொப்பளிக்கும்
பகைகளின்
தடயம்..
முதுகில்
பொத்தலிடும் துப்பாக்கி ரவைகள்..
வன்மத்தில்
உச்சத்தில் பிரியங்கள்
வெட்டப்பட்ட
சதுரங்கம்..
நிற்காமல்
அலறுகிற ஒப்பாரி..
தருக்கில்
வெடித்தெழும் அகம்பாவம்
வென்றதாய்
சிலுப்பும் மதுகோப்பைகள்
கொன்று
குவித்த கொள்கைகள்..
அடையாளபடுத்தியும்
அழிந்தும்
போன
மதங்கள்..
இடைவிடாத
சம்பவ தொகுப்புகளில்..
காலம்
நாற்காலிகளை மையமிட்டே
நகர்கின்றன..
எல்லோரையும்
கபளீகரம் செய்து
சலனமற்றிருக்கிறது
நாற்காலிகள்..
-------------------------------------------------------------
இலைகள்
மறைத்து பெரிய
குழிகள்
வெட்டி வலைகள் விரிந்து
யுக்திகள்
வகுத்து காட்டுக்குள்
கம்பீரமாய்
திரிந்த
விலங்குகளை
கூண்டுக்குள்
அடைத்து
பார்க்கும்போது பெருமையின்
உச்சியில்
கர்வத்தோடு இருந்தவன்
கால்
உடைந்து சக்கர நாற்காலியில்
அமர்ந்தபோது
புரிந்தது
அடைத்தல்
என்பதன் அர்த்த அடர்த்தி
-----------------------------------------------------
சொல்வதற்கு
ஏதேனும்
ஒரு
விஷயம்
இருந்து
கொண்டே இருக்கிறது..
'ம்'
கொட்டி மிக
ஆர்வமாக
கேட்க வேண்டும்
என
எதிர்பார்ப்பதில்லை..
ஓட்டத்தை
தடை செய்யாமல்
பொறுமையாய்
இருந்தால் போதுமானது..
அனுபவம்
பகிர உணர்வுகள் கடத்த..
அறிவுரையும்
குறுக்கீடுமற்ற
எவரேனும்
தேவைப்படுகிறார்கள்
அப்படித்தான்
தெருவோர
அரசமரப்
பிள்ளையார்
அறிமுகமானார்
எங்கோ
மலை பிளந்த
சாலையில்..தாயன்பின்
அடர்த்தியாய்.
படர்ந்திருக்கும்
பனிமூட்டத்திற்குள்..
குளிருக்காய்
தேனீர் அருந்தி
கொண்டிருக்கலாம்..
காற்றில் அலைகிற சருகாய்..
கொஞ்சமாய்
தொப்பை வளர்த்து
வேலையென்கிற
பெயரில்
தொலைந்து
கொண்டிருக்கலாம்..
இல்லையென்றால்
இன்னும் கூட
பிரமீளின்
பசுவய்யாவின்
கவிதைகளுக்குள்..
அரும்ப
துடிக்கிற மொட்டின் வாச
ஆக்கிரமிப்பாய்
கிறங்கி கிடக்கலாம்..
விஷச்செடிகளை
நகலெடுத்த
அயல்நாட்டு
எல்லை பீரங்கிகள்
எல்லை
தாண்டி இடம் பெயராமல் காத்திருக்கிற
காவலாளியாய்
இருக்கலாம்..
வயிறுக்கும்
மனதிற்கும்
யுத்தம்
நடத்துகிற எட்டு மணி
நேர
இயந்திரமாய் சுயம்
தொலைத்து
உருமாறி
குடும்பத்தில்
அமிழ்ந்து
போயிருக்கலாம்..
இயக்குனராகி
சாதிப்பதாய்
எவனுக்கேனும்
எடுபிடி வேலை
செய்து
கொண்டிருக்கலாம்..
இப்போதும்
கூட
ஒவ்வொரு
முறையும் அனிச்சையாய்
நாக்கு
கடிக்கையில்..
நீதான்
என்னை நினைத்து கொள்கிறாய்
எனும்
நம்பிக்கையோடு..
காற்றில்
மிதக்கிற புகையாய்
கரைந்து
கொண்டிருக்கிறேன்..
--------------------------------------------------------------
பின்னிரவில்
திடுக்கென
விழிக்கும்
நொடியில்
சாளரத்தின்
ஊடே
பனிக்காற்றாய்
நுழைகிறது உன் அணைப்பில்
ஆட்கொள்ளும்
கதகதப்பு!
மரங்களில்
நிறைந்திருக்கும்
பூக்கள்
உன் அனிச்சப்புன்னகையை
நினைவுபடுத்துகிறது
பனிநிரப்பிய
அரவமற்ற சாலையில் நடந்து வீடடையும் வரை
சலிக்காமல்
இடைவெளியற்ற உன்
பேச்சுக்கள்
துணை...
எப்போதாவது
அடிக்கும் இள வெயில்
உன்
செல்லக்கோபங்கள்..
பனிச்சில்லு
மழைகள்
இனிப்பு
தடவிய உன் அழுத்தமான
முத்தங்கள்..
கையை
சுட்டுக்கொண்டு
தேநீர்
கலக்குகையில் உன்
பரிதவிப்பும்..
குடிக்கையில்
இடைஇடையே
நமக்கான
பகிர்தலும்..
எவன்
சொன்னது..
வேறு
கண்டம் இடம் பெயர்ந்த
நான்
தனிமையில் இருக்கிறேன்
என்று..
--------------------------------------------------------------------------
இலக்கு
தவறாமல் குறி
வைத்து..
மிக
சரியாக கற்கள் வீசி
புறாக்களின்
கால்களை
பழுதாக்கி...
படபடவென
கூட்டமாய் பயந்து
பறப்பதை
மொட்டை மாடியில்
கைதட்டலோடு
குதித்து
ரசிக்கிற
சிறுவர்களுக்கு
ஒரே
ஒரு முறை தானியங்கள்
வைக்க
கற்று கொடுத்தேன்..
இப்போதெல்லாம்
புறாக்கள்
பயத்தில்
படபடக்கும்
சத்தம்
கேட்பதேயில்லை...
---------------------------------------------------------------------------
ஏறக்குறைய
மாலையிலிருந்து
அலைகளை
துரத்தி
அம்முக்குட்டியும்
அவளை
விடாமல் துரத்தி
அலைகளும்
விளையாடிக்கொண்டிருந்தன..
ஒவ்வொருமுறை
வென்றுவிட்டதாய்
துள்ளி
கைதட்டி சிரித்தாள்..
விட்டுக்கொடுத்த
கடல் வேடிக்கை
பார்த்தது..
அவள்
போய் வெகுநேரம் கழித்தும்...
சலிக்காமல்
அலைகள்
தேடிக்கொண்டே
இருக்கின்றன.
கட்டிய
மணல் வீட்டின் பக்கத்தில்
----------------------------------------------------------------
கடைசி
நிமிடத்தில்
ஆள்
குறைகிறதென..
தேவதைகள்
நடனத்திற்கு
நிறம்
காட்டி ஒதுக்கிய அம்முக்குட்டியை
ஆசிரியர்
ஆண்டுவிழாவிற்கு
மேடை
ஏற்ற வேண்டி வந்தது.
அம்முக்குட்டியின்
ஆட்டம் பார்த்து
அரங்கம்
அதிர ஆசிரியைக்கு
புரிந்தது
திறமைக்கு
நிறம்
தடையில்லையென..
ஆ..வென
ஓடிச்சென்று
ஆசிரியருக்கு
முத்தங்கள்
பொழிந்ததில்
புரிந்தது..
எல்லா
நிற தேவதைகளும்
அன்பு
பொதுமறையென்று..
----------------------------------------------------
நகர்கிற
ரயிலின் அதிர்வுகள்
பல்வேறு
இசைக்குறிப்புக்கள்
வாசிக்கின்றன..
எட்டு
மாதக்குழந்தையின்
நடுநிசி
வீறிடலில்..
சலிப்பின்
இருப்புகளற்று
குளிர்கிறது
குழந்தைக்கு என
காற்றாடியை
அணைக்கிறாள்
கீழ்ப்படுக்கை
பெண்ணொருத்தி
தயக்கம்
அணிந்த முதியவர்
கேட்காமலே
தன்
கீழ்படுக்கை
கொடுத்து
மேல்
நகர்கிறான் பேரன்
வயது
இளைஞன்
அமர்கிற
இருக்கையில்
நெளிந்தும்
சுருண்டும் படுத்தாலும்
பரஸ்பரம்கால்படவில்லையென
உறதி
செய்து கொண்டது
சக
மனித மரியாதை..
விடிந்ததும்
கனம் நிரம்பிய
பைகள்
இறக்குவதற்கு
சங்கிலியாகின
வெவ்வேறு கைகள்..
முகம்
மறந்து அவரவர்கள் நகர்ந்து
விட்டனர்
நின்று விட்டது ரயில்..
இப்போதும்
நிற்காமல்
இசைக்குறிப்புக்கள்
மட்டும்
கேட்டு
கொண்டே இருக்கின்றன
---------------------------------------------------