logo

கவிச்சுடர் விருது


இந்த மாதத்தின் நமது படைப்பு குழும  கவிச்சுடர் விருதினை கள்ளக்குறிச்சி மாவட்டம் தண்டலை கிராமத்தில் பிறந்த  சரண்யா சத்தியநாராயணன் அவர்கள் பெறுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பு செய்கிறோம்.  Msc (it) படித்துள்ள கவிஞர்   தற்சமயம் கணவர் இரண்டு மகள்களுடன் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வசித்து வருகிறார். இவர் கவிதை எழுத வந்ததே வியப்பான ஒன்று.  சிறு வயதிலிருந்து  கவிதையின் மீது எந்தவிதமான ஆர்வமும் இல்லாமல் வளர்ந்தவர் .. தனக்கு நூல் வாசிப்பு பழக்கம் கொஞ்சமும் இல்லாமல் இருந்ததாக சொல்லும்  கவிஞர் தன் கல்லூரி   பள்ளி நாட்களில் கூட  புத்தங்களை வாசிக்க மிகவும் சிரமப்பட்ட சுமாரான மாணவி தான் என்றும் கூறுகிறார் . திருமணமாகி இரண்டாவது மகள் பிறக்கும் வரை கூட ஒரு சராசரி குடும்ப தலைவிக்கான கடமைகளை மட்டுமே செய்து வந்த கவிஞர்  முகநூலின் அறிமுகமே தன்னை வாசிக்க வைத்து படிக்கும் ஆர்வத்தையும் தூண்டியது என்றும் அதன் பிறகுதான்  கவிதைகள் எழுத வேண்டும் என்ற எண்ணமே தனக்குள்  தொடர்ந்ததாகவும் கூறுகிறார்…. முகநூலில் கவிதைகளை  பகிர்ந்து கொண்டபோது  அது நண்பர்கள் மத்தியில் பாராட்டை பெற்று தரவே தொடர்ந்து வாசிப்பின் மூலம் தன்னைப் பதப்படுத்திக் கொண்ட சரண்யா சத்ய நாராயணன் இன்று ஒரு முழுமையான கவிஞராகவே  மிளிர்கிறார்.  சில வார இதழ்களிலும் , பெண்கள் மலர்,  படைப்பு, கொலுசு போன்ற மின்னிதழ்களிலும், ஆனந்த விகடனிலும் இவரது  கவிதைகள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கின்றன.

படைப்பு குழுமத்தால் சிறந்த படைப்பாளி என்ற விருதும். கவிக்கோ பரிசு போட்டியில் சிறந்த கவிதைக்கான சிறப்பு பரிசும் கூட கவிஞருக்கு  கிடைத்தது. இப்பொழுது படைப்பு குழுமத்திடமிருந்து உயரிய  விருதான  கவிச்சுடர் விருதையும்  பெறுகிறார்….

 

இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம்:

 

நிவாரணம் என்பது நிவாரணம் மட்டுமேஇதனால்தான், இதனைக் கொண்டுதான் என்பதெல்லாம் சில விதிகளுக்கு உட்பட்டு அமைந்து விடுகிறதுஅப்படியும் நிர்ணயித்த விதிகளைப் பின் பற்றினாலும் கிடைக்காத நிவாரணம்.. எதிர் பாராத விபத்தாய் கிடைத்துவிடும்!.. அதற்காக நிவாரணம் வேண்டி விபத்தை அங்கீகரித்துக் கொள்ள முடியுமா? இதோ கவிதை….

 

உப்பு தண்ணீரை நேரடியாக

அடி தொண்டைக்கு செலுத்தி அலசியாகிவிட்டது..

இரு உருளை வடிவ மாத்திரைகளை

தொண்டை குழியில்

விடாப்பிடியாக உள்ளங்கையினால்

உந்தி தள்ளி

வயிற்றின் மேற்பகுதியை

செல்லபிராணியின் முதுகினை போல் தடவியாகிவிட்டது..

நெற்றி பழக்கப்படாத

நாமக்கட்டியினை

குழைத்து குழைத்து

தொண்டையில்

அப்பியதில் ஈரம் காய்ந்து

வெளிர ஆரம்பித்துவிட்டது..

வெதுவெதுப்பான நீர்

மஞ்சள் மிளகு கலக்கிய பாலென

அனைத்தையும் பிடிவாதமாய்

அருந்தியாகிவிட்டது...

வலி குறைந்தபாடில்லை..

கடைசியில்

நடைபயிற்சியின் போது

கட்டை விரலின் நகம் மேலெழும்பும் அளவிற்கு பதம்பார்த்த

சிறு கல்லே அதற்கு நிவாரணமானது.

 

மூன்றாம் பாலினம் முகவரி தேடுகிறது…. அழகுக்கு இதுதான் வரையறை என்று எதை சொல்வது? அழகை தரிசிக்க காதல் கண் வேண்டும்மைத் தீட்டா விழியழகில் விலை மகளும் அழகாக தெரிவாள்இரசிப்பவன் பார்வையால்! இவளும் அழகுதான்உங்களுக்கு ரசனையான மனது வேண்டும்….

 

இதுவரையில் கைத்தட்டி

தலையில் கை வைத்து

காசு கேட்ட முகங்களில்

இவளை போல அழகியில்லை..

அழுகுயென்றால்

முகப்பூச்சு இல்லாமல்

உதட்டு சாயம் பளிரிடாமல்

பின் முதுகு இறக்கம் வைத்த ரவிக்கை அணியாமல்

ஆபரணங்கள் அலங்கரிக்காமல்

கை கால் நகத்தில் வண்ணம் வரையாத

ஓர் அழகு.

சவரம் செய்து

கழுவிய முகத்தில் ஒரு பொட்டு

ஆண்கள் அணியும் பனியன்

கீழ் சுழன்றால் குடை விரிக்கும் அளவிலான ஓர் பாவாடை

ஏதோ கடை விளம்பரம் வரைந்த

ஒரு கைப்பை

கம்பீர நளின நடை

முகம் பார்த்தால் கண்கள் குனிந்து

புன்னகைக்கும் வெட்கம்.

ஆசையாய் பெயர் கேட்டேன்

உடைய காத்திருக்கும் ஆண் குழந்தையின்

குரலுடன் சொன்னாள்

"அழகி".

 

குழந்தைப் பருவம் வியக்கும் குவியல்களில் நிழலும் ஒன்றுநிழலோடு விளையாடாத மழலைகள் யாரும் இருக்கவே முடியாது! அப்படியான ரசனையை ரசிக்கவும் ஒரு மனம் வேண்டும்….

 

சிறுவன்

தன் நிழலை விரட்டுகின்றான்...

நிழல் தொடர முடியாதபடி செய்ய

வேகமாக ஓடுகின்றான்..

கை  கால்களை

அசைத்து நிழலுடன் ஆடுகின்றான்...

வெளிச்சத்தின் அருகில் பெருக்கும்

தன் நிழலை பார்த்து நகைக்கின்றான்...

வியக்கின்றான்...

தன்னுடனே குதித்து

அசதியாகி தன்னுடனே

அமரும் நிழலுக்கு 

வாஞ்சையாய் கிள்ளி ஒரு முத்தம் வைக்கின்றான்..

எந்த குறையுமின்றி

நிழலும் அவனுக்கு ஒரு முத்தம்

வைத்தது.

 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை இருப்பது போன்றே பூக்களுக்கும் இருக்கிறதுஅதன் சுயத்தை பறித்து சாணியில் நட்டு கோலத்தை அழகு செய்தேன் என்பது என்ன நியாயம்?

 

 

பூ

பூச்சிகளுக்கு தேனை

தருவதும்..

காயாகி கனியாவதும்..

ஏன்

காய்ந்து சருகாகவதும் கூட

அதன் விருப்பம்..

நாம் அதனை கொய்து

அழகென்று 

கோலத்திற்கு மத்தியில்

சாணத்துடன் நட்டு வைப்பது

வன்மம்.

 

காதல் பரஸ்பரம் என்பது  ஒன்றையொன்று தழுவியே இருக்கும்இரண்டில் ஒன்றி ஒன்றென மாறி ஒன்றிக் காதலென வாழ்வது தவம். அந்த ஒன்றில் ஒன்றாத போதும் ஒன்றியதாய் ஒன்றுதல் காதலே என்கிறார் கவிஞர்

 

உன்னை எப்பொழுது

முதன் முதலாய் பார்த்தேன்

எந்த ஆண்டு

நாள் கிழமை

பேசியதுயென்ன

எதுவும் என் நினைவில்லை..

 

நீயோ

நிமிட நொடியை கூட

நினைவில் வைத்துக்கொண்டு

என்னிடம் கூறுகின்றாய்..

 

உன் பிறந்தநாளை

மறந்து

சமாளிப்பு வார்த்தைகளை

மட்டுமே ஒவ்வொரு முறையும்

உனக்கு பரிசாக அளிக்கின்றேன்..

 

நீயோ

வான வேடிக்கைகளையும்

வண்ண பலூன்களையும்

பறக்கவிட்டு

வாயடைக்க வைக்கின்றாய்..

 

நீ வலியவந்து கூறிய

உனக்கு பிடித்த பொருள்களெல்லாம்

என் கண் முன்னே

பேருந்து பயணத்தில் கடக்கும்

மரங்களை போலாகின்றது..

 

நீயோ என் பேச்சுக்கு

இடையில் நான் உதிர்த்த

என் விருப்பங்களையெல்லாம்

தேடி தேடி

பரிசளிக்கின்றாய்..

 

மறப்பதெல்லாம் இயல்பு தானென்று

நீ எனக்கு கொடுக்கும்

சுதந்திரம் இருக்கின்றதே

போதும் தேவி..

காதை கூட திருகிவிடு

காதலால் அடிக்காதே.

 

கவிஞரின் மற்றும் சில கவிதைகள்:

 

கிளையின்

கைவிடுதலே

ஓர் இலை உதிர்வு..

காரணங்களெல்லாம்

வெறும் சமாதானங்களே..!

 

 

 

பரணியன்று

நான் ஏற்றிய பத்து அகலில்

ஒரு அகலின் தீபம் மட்டும் அணைந்தது..

ஏற்றினேன்

மறுபடியும் அணைந்தது

மீண்டும் ஏற்றினேன்

மறுபடியும் அணைந்தது

தொடர்ந்து

இப்படியே ஐந்து முறை மேல்

அணைந்த அந்த அகலின் தீபத்தை விடாமல் ஏற்றி முடித்தேன்..

அணையாமல் எரிந்த

மற்ற ஒன்பது அகல்களை

பற்றியெல்லாம் எதுவும் தெரியாது..

ஆனால்

இந்த ஒரு அகலுக்கு

முகப்பு கொஞ்சம் பெரிது

உட்புறம் மூன்று விரிசல் கோடுகள்

அடிகுந்து கொஞ்சம் கோணல்

செந்நிற அகலுக்கு நடுநடுவே

சில கரும் புள்ளிகளும் இருந்தன.

 

 

 

உன் பிரிவென்பது

பிடித்த பாடலை கேட்டுக்கொண்டிருக்கையில்

ஏற்படும் மின்தடை..

பேசிக்கொண்டிருக்கையிலேயே

தொடர்பு எல்லைக்கு வெளியே சென்ற

அழைப்பு எண்..

தவறவிட்ட பேருந்து சென்ற திசையையே

நோக்கும்  விழிகள்..

நழுவி பறக்கும்

பலூனை பார்த்து கைஉதறியபடியே

அழும் சிறுவனின் நிலை..

விடுதியில் பெட்டியை திறந்தவுடன்

குடும்ப புகைப்படம் காணும் கனம்..

சுவைக்க நினைத்த உணவு

இல்லையென்பதை கேட்டவுடன்

ஏற்படும் பசியின்மை..

கல்லூரி இறுதி நாள்

கண்ணீரை துடைத்து கை அசைத்து

மறையும் நண்பனின் முகம்..

பறிக்க தடைவிதித்த செடியில்

நேசிக்கும் மலரை தடவியபடியே

நகரும் கையறுநிலை..

மேலும்

உன் பிரிவென்பது

நேற்று பேசி சிரித்த நபர்

இன்று இறந்ததாய் கேட்ட இரங்கல் செய்தி.

 

 

 

 

இன்று மாலை

சில நிமிடம்

என் முன் அமர்ந்த அந்த பறவை

அதிகம் பட்சமாக

கீச்சிட்டது

இரண்டே முறை தான்

அதனாலென்ன..

நேற்று...

இதே நேரம்..

இதே இடம்..

என் முன் வெறும் வெற்று கிளையே..!

 

 

 

இன்னும்

பத்திரமாக தான்

இருக்கின்றது நனைந்த

என் ஆடையில்

நேற்றைய மழை..

ஒரு உதறு உதறி

பாருங்களேன்

சிதறும்

வானமிட்ட சில நீர் முட்டைகள்.

 

 

 

குடிலை விட்டு பறந்து..

குஞ்சுகளுக்கு

கொரித்து திண்ண

தானியங்களை சேகரித்து...

சேகரித்த அலுப்பையே

காட்டிக் கொள்ளாமல்

குஞ்சுகளுக்கு கொஞ்சிக்

கொண்டே ஊட்டுமே...

அது பறவையாக இருக்க

வேண்டுமென்ற அவசியமில்லை...

தந்தையாகவும் இருக்கலாம்.

 

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.