நமது படைப்பு குழுமத்தின் இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருதினை கவிஞர் ரத்னா வெங்கட் அவர்கள் பெறுகிறார் என்பதில் பெருமை அடைகிறோம்.
முதுகலை வணிகவியல், இளங்கலை கல்வியியல் படித்துள்ள கவிஞர் அவர்கள் புதுக்கோட்டையை பிறப்பிடமாகக் கொண்டவர். அமைதியான குணமும், தனிமை விரும்பியுமான கவிஞர் புத்தகங்களின் மீது அளவற்ற காதல் கொண்டவர்.
கவிதைகளே தனது முகவரி என்று பெருமையுடன் சொல்லும் கவிஞரின் சங்க இலக்கியக் காதலின் வெளிப்பாடாக முல்லை முறுவல் என்ற முல்லைப்பாடல்களின் தொகுப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது.
பலரின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்ற கவிஞரின் "காலாதீதத்தின் சுழல்" கவிதை தொகுப்பு படைப்பு குழுமத்தின் வெளியீடாக வெளியானது. அவரது இரண்டாவது கவிதை தொகுதி "மீச்சிறு வரமென" என்ற கவிதை தொகுப்பு பரிதி பதிப்பக வெளியீடாகவும் வந்துள்ளது. மூன்றாவது தொகுப்பிற்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக இருக்கும் நூல்களின் தோழி கவிஞர் ரத்னா வெங்கட் அவர்களின் கவிதைகள் ஒவ்வொன்றுமே அன்பின் சூழலைப் பேசக்கூடியதாக இருப்பதே சிறப்பு! இனி கவிஞரின் சில கவிதைகளை காண்போம்.:
கணவன் மனைவி உறவென்பது அன்பினால் பின்னப்படுகிறது. அவை அப்படியே காலம் முழுக்க நகர்ந்துவிடுகிறதா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இசையின் ஆரோகணம் அவரோகணம் போன்று ஏற்ற இறக்கங்களில் இசைக் குறிப்புகள் எழுதுகிறது. அப்படியானவொரு இசைக்குறிப்பாக நகர்கிறது இந்தக் கவிதையும். எழுத்துகளையும் வார்த்தைகளையும் மனைவி ஆயுதங்களாய் எடுத்து பிரயோகித்தாலும் கணவன் சாகசமாய் அதனை எதிர் கொள்கிறான். ஒரு கட்டத்தில் உக்கிரத் தாண்டவம் முயலும் அவளின் கோபத்தை அவனின் சமாளிப்பும் , பசபசப்பு வார்த்தைகளும் அமைதியாக்கி சரணடைய வைக்கிறது. இது ஒரு பாசாங்கில்லாத கவிதை.
பின்னெப்போதைக்குமான
சந்தர்ப்பங்களை
தகர்த்தெறிய
நம் பாதங்கள் நடந்த
இணைப்புப் பாலத்தை
கொளுத்தவென
ஆவேசங்கள் முட்டி மோத
எழுத்தைக் கையிலெடுக்கிறேன்
நாண் விடுத்த அம்பாய்
இலக்கின்றி இறைபடும்
வார்த்தைகளை
சாகசமாய்த்தான்
எதிர் கொள்கிறாய்
அத்தனைக்கும்
அழுத்த இராக்கதனாய்
பதிலளிக்க மறுக்கும்
உன் திடத்தை
கிழித்துக் கோர்த்து
மாலையாகத் தோளில் சூடுகிற
வெறி உந்தித் தள்ள
கூர் தீட்டிய நகங்களை
பொருத்திக் கொள்கிறேன்
விரித்த கூந்தலும்
பிதுங்கிய நாவுமாக
கோரத் தாண்டவமே
இதற்கான முடிவென
அடியெடுக்கையில்
பிம்பத்தின் உக்கிரம்
தாளாது
துகள் துகளாகிறது கோபம்
அனர்த்தமே அனர்த்தமே
அன்புதானடி உன் ஆயுதமென
பசப்புகிற பச்சாதாபத்தை
மென்று துப்புகிற இயலாமை
உபாயமென கைக்கொள்கிறது
உதவாத தன்னிரக்கத்தை
மடை உடைய வீழ்வதை
எதுவுமே நடவாத
தோரணையில் புறக்கணித்து
குப்பியில் அளந்து தரும்
மருந்தாய் உனதிருப்பு
உயிர் காக்க மட்டுமென
உயர்வு நவிற்சியாய்ப்
பகடி பேசுகிறாய்
உமிழத் துடிப்பதை
அடக்கி குமுறுகிற எரிமலை
உறுமிப் பார்க்கிறது மனதில்
கக்கி விட்டால்...?
அத்தனை கற்களையும்
அத்தனை சாம்பலையும்
பாதுகாத்து என்ன செய்வாய்?
அனல் விழுங்கிப் புதைத்து
காதலெனப் பெயர் சூட்டி அவிந்து
செயலற்ற ஒன்றென நிற்பதெல்லாம்
இம்மையிலும் மறுமையிலும்
வெம்மையில் உன்னை
உருகவிடாதிருக்கும்
பொருட்டிலேயே....
**********
பெண் என்பவள் எப்போதும் இளகிய மனம் கொண்டவள். அவளின் மனக்கதவுகள் காற்றிலடித்துக் கொண்டேயிருக்கும். ஆனாலும் பத்திரமாக பூட்டியிருப்பதான பாவனை முகம் அபிநயிக்கும். அன்பை மொத்தமாக குழைத்து வைத்திருப்பாள். அதில் கொஞ்சம் இடம் மாறும் போது இயலாமை இழுத்து வைத்து வாதம் செய்யும். இங்கு தான் இறந்துவிட்டதாகவே கதறியழுகிறாள் ... யாரும் சட்டை செய்யவேயில்லை! மகன் இடம் பெயர்கிறான். மகள் இடம் பெயர்ந்துவிட்டாள். தாய்மை அழுகிறது . அது அவர்கள் யாருக்கும் புரியவேயில்லை.இறந்தவளிடம்தான் கணவன் இஞ்சி டீ கேட்கிறான்... ஒரு உயிர் துடிப்பான கவிதை...
ஒரு விபரீத விநாடியில்
நான் மரித்துப் போனேன்
புதைப்பதா எரிப்பதா
என்ன செய்ய
அனர்த்தமாக யோசிக்கையில்
துளிகள் உடைந்து தெறிக்க
அம்மா ஏன் அழுகிறாய்
எனத் திகைத்த மகனிடம்
நீ வேறிடம் போகிறாய் அல்லவா
என்னை விட்டு என்றேன்
புரியாது விலகினான்
அம்மா என்ன பிரச்சினை
உனக்கு இப்போது
பெண்ணுடைய அலைபேசி
அதிர்ந்து அழைத்தது கேள்வியாக
நீ அருகில் இல்லையில்லையா
தங்கம்...
அதனால் இருக்கலாம்
அக்கறையும் எரிச்சலும்
கலந்த படபடப்பு சிறிது நேரம்
பிறகு 'டொக்'
புளித்துப்போன அமைதி
நான் இறந்ததை
யாருக்கெல்லாம் அறிவிக்க...?
அவசரமாக தொடர்பு எண்களைத்
தேடி அழைக்கப் போன
அபத்தத்தின் நடுவே
எனக்கு டீ தரலையா
கணவரின் குரல்
இஞ்சி சேர்த்தா...? எழுந்தேன்
தேநீர் கொதிக்கையில்
உடன் குமிழிட்டது நினைவு
யாருக்காக மரித்தேனோ
அந்தப் பெயர் நினைவில்
வரவேயில்லை
எங்கே அந்த நினைவு
சூட்டுக்கோலிட்டு இழுத்தால்
இழுத்துப் பார்த்தேனே....
எரியத்தான் எரிகிறது?
பின்...
எப்படி இறந்தேன்?
எதற்காக இறந்தேன்?
எவருக்காக இறந்தேன்?
நிலைக் கண்ணாடியில்
பார்த்தால் தெரியுமில்லையா?
சதைப் பிண்டம்
கோளமாகத் தெரிய
நரம்பதிர்ந்த துடிப்பில்
வெடித்துச் சிதறியது
அடைத்துப் போன இதயம்
ஏன் இப்படி அழுகிறாய்?
எல்லோரும் கேட்கையில்
சைகையில் கதறுகிறேன்
நான் இறந்தது தெரியலையா?
யாருக்காக எதற்காக இறந்தாய்?
பதிலிறுக்க இயலாத கேள்வியால் துளைக்கிறார்கள்
நினைவில்லையே....
யாருக்காக இறந்தாலென்ன
நான் இறந்தது உங்களுக்கு முக்கியமில்லையா?
தோள் குலுக்கி உதடு பிதுங்க
அனைவரும் உச்சுக் கொட்டி நகர்ந்த நொடியில்
நான் உண்மையாகவே
மரித்துப் போனேன்.
**************
தடுமாற்றம் என்பது இடறலின் ஒரு வகை. அது எங்கும் எப்போதும் எவ்விடத்தும் நிகழலாம். அதை யாரும் எளிதில் கடந்துவிடலாம்... ஆனாலும் காலத்தின் நமுட்டு சீண்டல் எள்ளலின் சாமர்த்தியாகும் போது உடைந்து போகிறது மனசு.. சாதாரண நிகழ்வுதான் என்றாலும்...
ஒரு தடுமாற்றம் என்பது
கை கொட்டிச் சிரித்துப்
பார்க்க விழையும்
காலத்தின் நமுட்டு சீண்டல்தான்
சுழற்சியின் தந்திரம்தான்
கால் தடுக்கி விழ வைக்கும்
எள்ளலின் சாமர்த்தியம்தான்
உதறி நடக்க
சரித்திர நிகழ்வாக
சாத்தியம் உண்டுதான்
உருகி வீழ்ந்து
சாக்காடு சேரும் வரையில்
விடேன் என இடறும்
விஷ முள்ளாக்காத வரையில்
ஒரு தடுமாற்றம் என்பது
சாதாரண நிகழ்வுதான்
#ரத்னாவெங்கட்
[25/05, 13:14] JINNA PADAIPU: கரணம் மாறியதில்
கைமாற்றிச் சுழற்றி
மடியேந்திக் கொள்கிறது
வட்டச் சுழல்கள்
அபரிமிதமான வாஞ்சையுடன்
தள்ளிச் சென்ற சுயநலம்
ஒருமுறை...ஒரேயொரு முறை
திரும்பிப் பார்த்திருந்தால்...
சொல்ல நினைத்ததை
நின்று கேட்டிருந்தால்...?
தத்தளித்தலைக் கைவிட்டு
சஞ்சலங்கள் அற்று முழுமையாய்
ஓடும் நீரில் ஒப்புவித்திருக்கலாம்..
சேருமிடத்தில் சேர்த்துக்கொள் என
***************
தள்ளிச்சென்ற சுயநலம் ஒரு முறை திரும்பிப் பார்த்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும்! ஒப்புவித்தலின் முழுமையை உணராத சுயநலம் கைவிட்டதால் வட்டச்சுழல்கள் கைமாற்றி மடியேந்திக் கொள்வது காலத்தின் கடமையென்பதை அறியுமா? சிறப்பான பொருள் வடிவம்:
கரணம் மாறியதில்
கைமாற்றிச் சுழற்றி
மடியேந்திக் கொள்கிறது
வட்டச் சுழல்கள்
அபரிமிதமான வாஞ்சையுடன்
தள்ளிச் சென்ற சுயநலம்
ஒருமுறை...ஒரேயொரு முறை
திரும்பிப் பார்த்திருந்தால்...
சொல்ல நினைத்ததை
நின்று கேட்டிருந்தால்...?
தத்தளித்தலைக் கைவிட்டு
சஞ்சலங்கள் அற்று முழுமையாய்
ஓடும் நீரில் ஒப்புவித்திருக்கலாம்..
சேருமிடத்தில் சேர்த்துக்கொள் என
***********
இரந்து பெறுதல் காதலென்பேன், இரந்து மருகுவேன், இரந்து இழிபடவும், இறக்கவும் செய்வேன். நீயே இவ்வுலகென்று இதயம் வரிந்து கட்டிய பிறகு நீதானே வாசலாகவும் இருப்பாய்! ஒப்பு கொடுக்கும் காதலுக்கு வடிவம் கிடையாது. பண் இசைக்கும் அழகான பாணத்தியின் விரல்கள் இதோ:
அரூபத்தின் முழு வடிவாக
ஆதியற்ற அந்தமாக
இருதயத்தின் மொழியுடன்
இணையாத இசையாக
பிளவின் கசிவாக
பிரியத்தின் வலியாக
உறங்கா அடிமனதில்
ஓலமிடும் நிசப்தமாக
உதிரக் கடைசலில்
ஒதுங்கிய மூன்றாம் துளியாக
கன்னமிட்டுப் பதுக்கி
ஒறுத்திடும் உணர்வாக
கனவுகள் நீட்டித்த
காலப் ப்ரமாணமாக
கள்வெறியின் பித்தாக
காமம் உடைத்த காதலாக
எதை நினைந்து
வேண்டுகிறேனோ
அது நீயாக
எதை மறக்கத்
துடிக்கிறேனோ
அந்த வதையாக
உயிர்த்திருக்கிறாய்
எது எனதல்லாததோ
அதுவாக இருந்து
என்னை
இரந்து பெறவும்
இரந்து மருகவும்
இரந்து இழிபடவும்
இரந்து இறக்கவும்
பணிக்கிறாய்...பேரன்பே
நீயின்றியும் அமைவதில்லை இவ்வுலகு