logo

கவிச்சுடர் விருது


"அதிகாரம் என்பது
கோடரிதான்
அது எக்காலத்திலும்
நிலம் உழப்போவதில்லை" - க.ராஜகுமாரன்.

தஞ்சை மாவட்டம் வேதாரண்யம் மருதூரில் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஆசிரியர் பணியில் இயங்கிவரும் கவிஞர் க. ராஜகுமாரன் அவர்கள்தான் இந்த மாதத்தின் படைப்பு குழுமத்தின் "கவிச்சுடர்" விருதுக்கான சிறந்த கவிஞராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதை பெருமையுடன் அறிவிப்பு செய்கிறோம்.

இவரது தந்தையார் சித.கருணாநிதியும் சிந்து பாடல்கள் எழுதுவதில் புகழ் பெற்றவர்.. இவரது கவிதைகளும் ஈழக்கவிஞர் காசி ஆனந்தனின் கவிதைகளுமே தன்னை கவிதைகளின் பக்கம் ஈர்த்ததாக பெருமையுடன் நம்மிடம் பகிர்கிறார். 

நமது படைப்பு குழுமத்தின் சிறந்த படைப்பாளிக்கான விருதினை ஏற்கனவே பெற்றிருக்கும் கவிஞர் 'உயிர்திசை' கவிதை போட்டியிலும் சிறப்பு பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமில்லாமல் 2019ல் ஜப்பானில் சர்வதேச அளவில் நடைபெற்ற பாஷோ விருதுக்கான ஹைக்கூ போட்டியில் சிறப்பு பரிசும், 2020 ல் நடைபெற்ற 74வது பாஷோ நினைவு ஹைக்கூ போட்டியில் பங்கேற்று சிறப்பு பரிசும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி கவிஞரின் சில கவிதைகளை ஆய்வுப் படுத்துவோம்: 


* காதல் பிரிவுகளின் நேசத்தில் கவிதையாவதும் ஓர் அழகு! அது ஆறாத காயங்களாக இருந்தாலும் அதன் கோப்பையை அவை வற்றவிடுவதில்லை... நிராகரிப்பு என்பது நெருக்கத்தின் பரிபாசை! இங்கு உளறல்களும் காதல்தான்.. உங்களுக்காக இதோ அந்தக் கவிதை:
@

சிறகுகளை வரமளித்து
வானத்தை யாசகம் பெற்றுப்போனது
இந்த வாழ்வு

ஆறாத காயங்கள்
வற்றாமல் வைத்திருக்கிறது
கோப்பைகளை

நீ விட்டுப்போன
நிராகரிப்பின் அண்மையில்தான்
இருக்கிறேன் இன்னமும்

பிரிவின் பள்ளதாக்கில்
நிற்காமல் பாய்கிறது
காதல்

நீங்கள் பார்த்தபடி 
இருக்கும் நிலா 
அவள் விட்டு சென்ற காதல்

இதயத்தில் சிக்கிக்கொண்ட
அந்த புன்னகைதான்
நீங்கள் தவணைமுறையில் 
வாசித்துக்கொண்டிருக்கும் 
இந்த கவிதை
--------------------

* கடினம் என்பது வாழ்வின் அங்கமாகிப்போன ஒன்று! ஒரு வார்த்தை உருவாக வேண்டுமென்றாலும் முதலெழுத்து வந்துவிழுவதும் கடினமே.. பின் அதன் பயணம் சிறப்பாக அமைந்துவிடும் கடினத்தை கவிஞர் எப்படி கையாள்கிறார் பார்ப்போம்:

@
எப்பொழுதும் 
முதலெழுத்தில் இருக்கிறது கடினம்

எளிது என்பது 
கடினத்தின் உடலில் எப்பொழுதாவது முளைக்கும் இறகு

கடிவாளமிடப்பட்ட கடினம் 
எப்பொழுதும் ஒரே பாதையில்
சென்றபடி இருக்கிறது

கடினத்தின் வயிறு செரிப்பதுமில்லை
நிரம்புவதுமில்லை

கடினமானதாகிவிட்டது காலம்
எளிது 
வாய்மூடி வாழ்கிறது

-----------------------
* தனிமை என்பது வரமா? சாபமா? சில நேரங்களில் தனிமை வரம் என்றாலும் அச்சத்தின் முடக்கத்தில் ஒளிந்து கொள்ளும் தனிமை மிகவும் மோசமானது! இங்கும் ஒருவன் தனிமை வாட்டத்தில் தன் அங்க அவயங்களையே சுமையென்று விற்கிறான்.. அவனுக்கு தெரியாது அவை இந்த உலகத்தில் விலையே யில்லாத பொக்கிசங்கள் என்று...

@

ஆகப்பெரும் சுமையென்று 
முடிவு செய்த பிறகு 
முதலில் 
என் கைகளை ஏலம் விட்டேன்..

நடப்பதற்கு 
விரும்பாத கால்களை
பிறகொரு நாள் 
நல்ல விலைக்கு கைமாற்றிவிட்டேன்..

இமைகள் மூடி 
உறக்கத்திலிருக்கும் கண்கள்தான் ஆகப்பெரும் 
பேரத்தில் முடிந்தது...

எல்லாம் விதி என்று 
நொந்துகொண்ட தருணத்தில்தான் 
மிச்சமிருந்த தலை 
ஞாபகம் வந்தது

இனிவரும் பொழுதுகளில் 
தனிமையில் வாழும் மீதத்திற்கு 
ஏதாவது பெயர் 
சூட்டிவிட்டுப்போங்கள்...?

---------------------

* பகல் உழைப்பின் பரந்தவெளி ! அதையே முடக்கினால் என்னவெல்லாம் ஆகும்!

@
ஒரு பகலை
இப்படியே விட முடியவில்லை

கைப்பிடிக்குள் 
நால்திசையும் தலையெட்டிப்பார்க்கும் குருவியாய்..

திசைகள் யாவும் 
சிறைபட்டிருக்க மிரண்ட விழிகளில் 
வானம்

ஒடுங்கிய இறகுடன்
பறத்தலின் கனவு
சதுரங்களாக வெட்டப்பட்ட பகலின் 
குருதியில் நனைகிறது...

இந்த நாளின் 
மூடப்படுவதற்கு என்று 
கடைசி கதவையும் வைத்திருக்கிறது
அந்தி...
-----------------
* காரணங்கள் ஏதுவாக இருந்தாலும் பேச்சுரிமை முடக்கப்பட்டால் ஊனமாகிவிடுகிறது சுதந்திரத்தின் தெளிவு! எளியவனின் பேச்சுரிமைகளை முடக்குவதே அதிகார வர்கத்தின் ஆளுமையாவது மிகவும் ஆபத்தானது! 

@
இப்பொழுது
சன்னல் கதவு தாண்டாமல்
நிபந்தனைக்கு உட்பட்ட
பேச்சுரிமைக்கு 
வாய்மூட சலுகை எனும் மூன்றாவது கை வரமளிக்கப்பட்டிருக்கிறது..!

சாயுங்காலங்களில்
ஆமாம், சரிக்கு நேர்ந்துவிடப்பட்ட 
பேச்சுரிமைகள் எப்பொழுதும் 
தள்ளாடியபடி நடக்கிறது..

தண்ணீர் குழாயில்
வழிந்தபடி தெருவில் செல்லும்
பேச்சுரிமை 
பசுமையின் வேர் 
அறிய விரும்புவதில்லை

அமர்ந்திருக்கும் உயரம் பொறுத்து
மாறுபடுகிறது 
பேச்சுரிமையின் நிறம்..

எளியவனின் பேச்சுரிமை
எப்பொழுதும் 
அதிகாரம் மிதித்து செல்ல ஏதுவாய் 
அவன் காலடி தூரம்தான்..!
------------------
* நம்பிக்கைத்தான் வாழ்க்கையின் ஒழுங்கு! அதையே பாடலாக்கிவிடும் கவிஞர் ஆங்காங்கே அவை சந்திக்கும் முடக்கங்களையும் பட்டியலிடுகிறார்! கடைசியாக அவர் அதனை முடக்காமல் இருக்க எதனைப் பாட சொல்லியிருப்பார்! பார்க்கலாம் வாங்க...

@

நீண்ட காலமாய் இருக்கிறது 
என் இனிய பாடலொன்று..

அது வீதியில் 
செல்லும்போதெல்லாம் காது பொத்திச்செல்கிறீர்கள்..

யாரும் பார்க்காத 
நேரத்தில் கத்தி வீசுகிறீர்கள்..

ஓர் நாள் பாடலை 
பறவையாக்கிவிட்டேன்
அது அமரும் 
மரங்கள் முழுவதையும் 
வெட்டத்தொடங்கிவிட்டீர்கள்..

கார் காலம் ஒன்றைப் 
பாடியபடி
அழகாய் சிறகு விரித்து 
பறக்கத்தொடங்கிவிட்டது

இனி வானத்தை 
என்ன செய்யபோகிறீர்கள்?
-----------------

* வாழ்வியலின் தேவை மனிதம் மட்டுமே! அதை சீர் குலைத்துவிடுகிறது மதங்களால் பின்னப்பட்ட கயிறு! வெளிச்சத்தைக் காட்டாத மதம் இருட்டை நமது அறைக்குள் கடத்திச் சிறைவைப்பது மிகவும் கொடுமை! 

@

ஒரு புன்னகையின் சத்தியம்
பாதுகாப்பான 
நகரமதில் ஒளிந்தபடி வாழ்கிறது

மதம் பிடித்த 
மனிதர்களின் குரல் நெய்தளித்த 
கயிறுகள்
பாத்திமாக்களின் கனவுகளை
சூடிக்கொண்டன.

நான் நம்பியபடி இருந்த 
பாதுகாப்பான நகரம்
இருட்டையே 
சன்னலாகவும் கதவாகவும் 
வைத்திருக்கிறது..

சகமனிதனை 
தனிமைபடுத்த நீங்கள் 
பயன்படுத்தும் ஆயுதம்
உங்கள் கடவுளை சாத்தானாக்குகிறது.
-----------------
* கடந்து செல்பவர்களை அவ்வளவு எளிதாக நாம் கடந்து சென்று விடுவதில்லை! ஒன்று அவர்கள் நம்மிடம் எதையாவது விட்டுச் செல்கிறார்கள்! அல்லது அவர்களிடம் நாம் எதையாவது விட்டுக்கொடுத்துச் செல்கிறோம்!

@
கடந்து செல்பவர்கள்
எவற்றையாவது நம்மிடம்
விட்டுச்செல்கிறார்கள்..

அவ்வளவு எளிதில்
நம்மை விட்டு வெகுதூரம் சென்றுவிடுவதில்லை
கடந்து செல்பவர்கள்

சில பொழுதுகளின்
எல்லா பக்கங்களும்
பயணத்தபடியே இருக்கிறது
கடந்து செல்பவர்களோடு

வந்ததும் போனதும் தெரியாமல்
தொலைவாகிபோன ஞாபகம்
கடந்து செல்பவர்கள்.

கடந்து செல்பவர்கள்
சிலர் பள்ளத்திலும் பலர்
உயரத்தில் இருக்கிறார்கள்.

கடந்து செல்பவர்கள்
பல பொழுதுகளின்
ஆசிர்வதிக்கப்பட்ட கட்டளை

நிற்கச்சொல்லியபடியே
கடந்து செல்பவர்கள்
நடுவே ஒரு நாள் கடவுளையும் பார்த்தேன்.
-------------------
* கவிஞரின் மற்றும் சில கவிதைகள்:

@
கூடவே வரும் துயரத்தை
எப்படி வழி மாற்றி போகச்சொல்வது
அது எனக்கான துயரம்
-----------
@
வழி தொலைந்த காடு
சந்தோஷம்தான்
சுற்றிலும் பச்சை

------------

@
புத்தன் அரசனானான்
ஆசைகள் 
வரி வரியாய் துளிர்விட்டது

கூட்டாளிகளின் 
உடல் முழுதும் இறக்கை 
முளைக்க வரம் தந்தான்

நிஜங்களை 
ஏமாற்றுவதற்கென்றே 
கனவுகளுக்கு வார்த்தைகளால் 
வண்ணம் தீட்டினான்..

இப்பொழுது 
போதிமரம் வெட்டி 
விமானம் செய்தபிறகு ஆசைகளை 
பறக்கவிட்டபடியே இருக்கிறான்..
---------------
@
தேவாலய உச்சியில்
அமரும் கழுகின்
காலிடுக்கில் எலி
---------
@
இரண்டு ம..ர..ங்..களிடையேயான 
இடையேயான இடைவெளி
அதிகமாகிவிட்டது..!

தனித்தனியே 
கூடு கட்ட தொடங்கிவிட்டது ப..ற..வைகள்..!

நான்கு ம..னி..தர்கள் 
தனித்தனியே 
பேசிக்  கொண்டிருக்கிறார்கள் 
அலைபேசிகளில்..!

நகர வீதிகளில்
மற்றொன்றுக்கு தெரியாமல்
இரை தேடப்புறப்பட்டு விட்டன 
ஒவ்வொரு மா..டுகளும்...!

தூரத்தில் வாழ்கிறார்கள் 
ம..னி..தர்கள்
காம்பவுண்ட் சுவர்களுக்கிடையான 
இடைவெளி மட்டும் குறைந்துவிட்டது...!

------------
@
கிழியாத பழைய சட்டையால் 
வண்டி துடைக்கும் தருணம் கடந்துபோகும் 
பிச்சைக்காரனின் பார்வை
நிர்வாணப்படுத்திப்போனது 
என் இருப்பை
-------------
@
எல்லா மரங்களும் அவைகளின் 
இடங்களில் 
சிலுவையாகத்தொடங்கியது
சூனியக்காரியின் 
சுருக்குப்பையில் அடங்கியது நதி.
சகுனியின் கட்டத்திற்குள் 
அடங்கி போனார்கள் 
பாண்டவர்கள்
முள்கிரீடங்களின் வழியே 
ரத்தத்தின் கடைசி நீரும் 
ஆவியாகியது..
இவையாவும் ரசித்துக்கொண்டே 
ஆகாயவிமானத்தில் 
வேறோரு நாட்டிற்கு வறட்சி நிவாரணம் கொடுக்கச்செல்கிறார் 
என் கடவுள்...
-----------
@
மரம் மட்டும்தான் தேவை
நிழல் கொடுக்க 
எந்த பஞ்சமும் வைத்ததில்லை வெயில்..
----------
@


தூக்கு கயிற்றின் தாகத்திற்கு
என் காதல் எத்தனையாவது மிடறு
வசீகரத்தையும் 
வாசத்தையும் வைத்து மரம்
என்ன சமரசம் செய்ய முடியும்?
கோடரியிடம்
தனிமையின் உடல்
பிரிவின் அருகிலேயே வாழ்கிறது
துயரின்
இதயத்திற்கு நூறு அறைகள்
ஒரே காதல் முகம்
.....

@
ஆச்சர்யத்திற்கான வெளியில் 
பூ பூப்பதற்காக 
காத்திருக்கிறது காலம்..

காத்திருத்தலின் கடைசிவரை 
நீட்டிக்கப்பட்டிருக்கிறது
அற்புதத்திற்கான கணம்..

எதை நோக்கியோ ஓடிக்கொண்டிருக்கும் பயணங்களுக்குள்தான்
குழந்தையின்
புன்னகையை போலிருக்கிறது
பூரணங்கள்..

ஆவலின் தாகம் 
குறையாமல் வைத்துக்கொண்டிருக்கிற 
தேடலில் 
ஒரு பேரமைதி இருக்கிறது 
அந்த நிழலில்தான் 
அமர்ந்திருக்கிறேன் இன்னமும்...!
----------------

@
முகமூடிகள் 
முகங்கள் ஆகிவிடுகின்றன.
முகங்கள்தான் எப்போழுதும்
முகங்களாகவே 
இருக்கமுடிவதில்லை.
-------------------

@
தொலைய விரும்புகிறவன்
தேடியபடி இருக்கிறான்
ஐந்தாவது திசையை

செல்ல செல்ல 
ஆழத்திலிருக்கிறது நம்பிக்கை

வெளிச்சத்தை 
ஒளித்திடப்பார்த்து
இடறி இடறி விழுகிறது இருட்டு

சமரசம் செய்யாத இடம்
கண்ணீருக்கானது

நிழலுக்கு
நிஜம் தேவை

இல்லை என்பது 
இன்னும் அதே இடத்தில் இருக்கிறது

சத்தியம் தடுமாறும் இடம் 
முழுதும்
பிழைகளின் சாலை

காலம் என்பது அதேதான்
நாம் தான் வேறு வேறு

----------------------

@
வேலி தாண்டி வளரும்
கருவைமுள் பச்சைக்கு
தினம் ஒன்றாய்
முளைக்கத்தொடங்குகிறது
சிங்கத்தின் பற்கள்..

-----------------
@

சுயப்படம்
எடுத்துக்கொள்ளாத மேகம்
எவர் வயலிலும் 
மழையாகக்கூடும்.

தண்ணீர் 
தன்னை எழுதிக்கொள்ள
தானே மொழியாகி
காகிதங்களை 
தேர்ந்தெடுத்துக்கொள்கின்றன

புறம் பேசத்தெரியாத
தண்ணீர் எப்பொழுதும்
வேரடியில் சரணடையும்..

இப்பொழுதெல்லாம்
தண்ணீர் தாகங்களை
குற்றவாளியாக்கிவிடுகிறது

நிலமே சாமி என்று 
ஒப்புக்கொண்டவர்களிடம்
மந்திரங்கள் 
கடவுளை சிபாரிசு செய்கின்றன..

-----------------

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.