logo

கவிச்சுடர் விருது


'காற்றிற்கு
வியர்க்கும்போதெல்லாம்
பறவை
தன் சிறகால்
விசிறி விட்டுச்
செல்கிறது....'

- கவிஞர் தோழன் பிரபா

இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருது பெறும் கவிஞர் தோழன் பிரபா அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்!

தாராபுரம் அருகிலுள்ள கள்ளிவலசுவை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞரின் இயற்பெயர் ம.ஜெகதீஸ்பிரபு என்பதாகும். பிபிஏ படித்துள்ள கவிஞர் கூடுதல் தகுதியாக எம்.ஏ.ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேசன் படித்திருக்கிறார். அரசு ஊழியராக பணிபுரியும் கவிஞர் மறைந்த எழுத்தாளர் க.சீ.சிவக்குமார் அவர்களின் நட்பின் ஊக்கத்தால் கவிதைகளை எழுதத் தொடங்கியுள்ளார்.

விகடன்,குங்குமம் இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. இது மட்டுமில்லாமல் படைப்பு குழுமத்தின் மாதாந்திர சிறந்த படப்பாளி விருதையும், 2018ல் அம்மையார் ஹைனூன் பீவி நினைவு கவிதைப் போட்டி, 2017ல் கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி, 2018 கவிக்கோ பிறந்த நாள் பரிசுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி கவிஞரின் சில கவிதைகளையும் காண்போம்:

வாழ்க்கையே  பலவித குறியீடுகளால் நிரம்பியதுதான்! அதனளவை, 'தன் உயரத்தை நூறால் பெருகி எழுப்பப்பட்ட சுவர்' என்பது உச்சம்! சிலந்தி வலையில் சிக்கியும் சிலந்தி விட்டு வைத்திருப்பதாக கவலையை அல்லது குடும்பத்தை சொல்வதிலும், பாசிகளின் உள் பக்க குளிர்ச்சியை வார்த்தைப்படுத்துவதிலும் கவிதை மேன்மை அடைந்துவிடுகிறது!

கவிதை:

என் உயரத்தை நூறால்
பெருக்கி எழப்பப்பட்ட சுவர் 
அந்த சுவற்றின் வெடிப்புகளின் வழியே
என் வாழ்க்கை வழிந்து கொண்டிருந்தது......

சிலந்தி வலையில் வலிந்து சிக்கிய
என்னை சிலந்தி இந்த நிமிடம் வரை விட்டு வைத்திருக்கிறது.......

சுவற்றின்துளையில் தழைத்த 
பெயரறியா செடியின்  
வேர்கள் நாளைக்குள் என் 
தொப்புளுக்குள் நீளலாம்.......

எண்ணி முடித்த மண் துகள்கள்
என் பாத ஸ்பரிசத்தால் கலவி
கண்டு பெருகின.. 
அவற்றுக்கு
பெயரிட்டுக்கொண்டிருக்கிறேன்......

 படிந்திருக்கும்  பாசிகளின் உள் பக்க
உலர்ந்த பகுதிகள் 
என் மூச்சுக்காற்றால்
குளிர்கின்றன.....

பூமியின் அடி ஆழத்திலிருக்கும் தூய்மையான நீரில் பிரதிபலிக்கும் 
என் அகம் மகிழ்கிறது

இதற்காகத்தான்
ஒரு முறையாவதுதப்பிக்க வேண்டும்....
என்னை தினம் பல முகமூடி
பொருத்தி வேட்டையாடும்
இந்த பூமியிலிருந்து
ஒருமுறையாவது
தப்பிக்க வேண்டும்...

+++

தொலைந்த பணம் உருமாறும் வரலாறும் கவிதையாகும் அதிசயம்!

கவிதை:

யாரோ ஒருவர்
தவற விட்ட
பத்து ரூபாய்
பசித்திருப்பவனின்
கையில்
தேநீரும் வடையுமாக
மாறுகிறது....
குடிப்பவனுக்கு
ஊறுகாயாகிறது....
மீனவனுக்கு
ரெண்டு கொக்கிகள்
கிடைக்கிறது....
பேருந்து நடத்துனரிடம்
பயணச்சீட்டாக
மாறுகிறது...
ஆனால்
தொலைத்தவனுக்கு
பத்து ரூபாயாகவே
இருக்கிறது.

+++

பேருந்து காட்சிகள் கவிதையாவது சுவாரசியம்! பயணிகளே படிமங்களாவது அதைவிட சுவாரசியம்! இங்கும் இந்தக் கவிதை அப்படித்தான் மேலோங்குகிறது...

கவிதை:

பேருந்தின்  
சன்னலில்
வழியும் மழை நீர்
தெளித்து விளையாடுகிறாள்
பார்வையற்ற 
யுவதி....
நிறுத்தமில்லா
இடத்தில் 
வயோதிகனுக்காக
திட்டியபடியே
நிற்கிறது பேருந்து
உடனே ஒரு புகைப்பானை
பற்ற வைத்துக்கொள்கிறார்
ஓட்டுநர்.....
சாலையோரத்தில் 
புணர்ந்து கொண்டிருந்த  நாய்களைக்
கடக்கிறது பேருந்தின்
கடைசி இருக்கை.
அந்த 
கடைசி இருக்கையில்
வீறிட்டு அழுகிற 
செவத்தகுழந்தைக்கு
சம்பந்தமேயில்லாத கருத்த தாய்
ஜெலுஸில் மாத்திரையை
இரண்டாய் உடைத்து ஒரு பகுதியை
குழந்தைக்கு ஊட்டுகிறாள்...
மீதத்தை
அவளுக்கும்
உங்களுக்கும்
எனக்கும் தருகிறாள்...
ஜீரணமாவதற்குள் 
வந்து விடுகிறது 
அவரவர்க்கான
நிறுத்தம்.

+++

சிக்னலில் கையேந்தி நிற்கும் குழந்தையொன்று சிகப்பு விளக்கையும் ரோஜா மலராகவே மாற்றிவிடுகிறாள்! கவிஞனின் இதயம் அவளிடம் பாசத்தில் வளைந்து போகிறது! நாளையும் அந்த சிக்னலுக்காக காத்திருக்கும் பூங்கொத்துதான் இந்தக் கவிதை! 

கவிதை:

நேற்றைய 
நெடுஞ்சாலை
சிக்னலில் கையேந்திய
குழந்தையிடம் பூஜ்ய ஸ்தானத்தில் 
நின்று
மெல்லிய சிரிப்பை 
கையில் திணித்த போது♪
குழந்தை பதிலுக்கு 
என்னை அதன்
புன்னகையால்
ஆசீர்வதித்த நொடியை♪
இன்னும் என்
நேரக்காட்டியில்
நிறுத்தி வைத்திருக்கிறேன்♪
நாளைய        
சிக்னலையும்
சிக்னலுக்கான    
சிவப்பையும்
சிவப்பிற்கான      
குழந்தையையும்..
குழந்தைக்கான     
சிரிப்பையும்..
இன்றே 
சேமித்துக்கொண்டிருக்கிறேன்♪
கடவுளுக்கு
வேண்டுதல் நிறைவேற்ற
காத்திருக்கும்
பக்தனைப்போல..
கடவுளின் தரிசனங்களும்
புன்னகையும்
சில நேரம் சிவப்பு
விளக்காலும் 
தீர்மானிக்கப்படுகிறது.

+++

எல்லையில் பயணிக்கும் இராணுவ வீரனுக்கு, அவன் துப்பாக்கிதான் பேச்சு துணை! அதுவே அவன் உணர்வுகளின் வடிவமும் கூட! வலியை மறக்கும் அழகான கவிதை!

கவிதை:

கரையொதுங்கும்
நுரைகளின் இசையை...
பழுத்த இலையின் மேல்
நகரும் காற்றின்
ஸ்பரிசத்தை.....
மொட்டு விரியா
பூவின் மென்மையை..
நிற்கும் குளத்தின்
மௌனத்தை...
யாருமில்லா
இரவின் ஆரவாரத்தை...
நீர் பனிக்கட்டியாகும்
குளுமையை...
நதியோடும் தடத்தில்
மின்னும் கூழாங்கற்களின்
வழுவழுப்பை...
மழை நீர் சொட்டும்
செம்பருத்தியின்
ருசியை....
தூக்கத்தில்
சிரிக்கும் குழந்தையின்
சிரிப்பை...
மலையில் பட்டு
எதிரொலிக்கும்
மலையின்மௌனத்தை...
அவள் தரும்
என் உயிர் தாங்கிய
முத்தத்தை...என அனைத்தையும்
உணர்ந்து கொண்டேயிருக்கின்றேன்
எல்லையில்
என்னுடன் பயணிக்கும்
என் துப்பாக்கியிடம்.

+++

கவிஞரின் சின்ன சின்னக் கவிதைகள் கூட ஆழம் நிறைந்ததாகவே இருக்கின்றன! முதியவனிடம் சொல்லும் வாழ்த்தில் கிடைக்கும் உணர்வு, பறவை பறத்தலை நிறுத்திய பின்பும் நினைவில் தொடரும் பறத்தல், வனத்தை கடைசியாக அசைத்து செல்லும் காற்று இப்படியென எண்ணற்ற சிந்தனைகளில் தன் தனித்துவத்தை நிலை நிறுத்துகிறார் கவிஞர்!

இதோ கவிதைகள்:

யாசகம்
கேட்கும்
குழந்தை....
இன்று  பேருந்து
ஜன்னலோர
சாபமெனக்கு

***

கூழாங்கற்களின்
வடிவத்தையெல்லாம்
ஓடும் 
நதி நீர்தான்தான்
தீர்மானிக்கின்றன

***

யானை
பாதக்குழியில்
தேங்கிய நீர்
யாருக்கான 
நீர்த்தேக்கத்தொட்டி

***

தினமும்
கடந்து செல்லும் 
வழியில் தனிமையில்
இருந்த
அந்தச்செடியிடம்
ஓரிரு வார்த்தை அவசரமாக
பேசி விட்டுச்சென்றேன்
மாலையில் திரும்பி
வரும்போது எனக்காக
அந்தச்செடியே
பூத்திருந்தது.
ஏதேனும் ஒரு பெயருக்குள்ளும்
ஏதேனும் சில வண்ணங்களுக்குள்ளும்
சிறைபடாமல்.

***

வாழ்வை
தன்
போக்கில்
சுகித்து முடித்து
படுக்கையில்
கிடப்பவனின்
கண்களைப் பார்த்து
"வாழ்த்துகள் "
என்றபோது
கைகளை இறுகப்பற்றிக்கொண்டான்.
மொத்த உடலையும்
ஆரத்தழுவியதுபோல்
என் முதுகு 
பின் வாங்கியது.

***

நிறுத்தமில்லா
பறத்தலில்
கடல் கடந்த
பறவை  பறப்பதை நிறுத்திய பின்னும்
பறப்பது போல்
நினைத்துக்கொள்ளுமாம்....
அது போல்    கடக்கிறது....
நீ
நீங்கிய
ஒவ்வொரு பகலும்.
நான் கடல்
நீ பறவை.

***

அணைத்தவுடன் 
விளக்கினுள்
ஔிந்து கொள்ளும்
வெளிச்சத்தைப்போல்
என்னில்
ஔிந்து கொள்கிறாய்....
நான்
ஔிர்கிறேன்.

***

சாலையில்
கிடந்த கல்லில்
காலை மோதி விட்டு
"கல்லு மோதிருச்சு"
என்று கல்லுக்கு
உயிர் கொடுத்துச்செல்லும்
பாமரனிடம்
வரம் கேட்டுத்தான்
நிற்கிறார்
கல்லுக்குள் இருக்கும்
கடவுள்...

***

திருவிழா 
முடிந்து தனித்த தேர் போல நிற்கும்
அவ்வனத்தின் நிழலை
கடைசியாக
அசைத்து விட்டுச்செல்கிறது காற்று......
விடைபெற்றுச்செல்லும்
நிழல்களும்
மாரிலடித்தழுவது போல்
வேரிலடித்துக்கொண்டழும்
ஒப்பாரிகளும்
நிலத்தின் படிமங்களாகும்
பொழுதில் 
இருட்டத் தொடங்கி விடும்
நிரந்தரமாக....
அது வரை
அடர்வனத்தை வெட்டி வாகனத்தில்
அடைத்து செல்லும் போதும்
மரங்கள் தந்த
பாவமன்னிப்பு மட்டும்
அலைந்து கொண்டேயிருக்கிறது
மரமாக
மழையாக
மா வனமாக.

***

முன்பொரு 
பெரு மழைக்கால பின்னிரவில்
கோவில் வேப்ப மரத்தடியில்
நின்றிருந்த அந்த உருவம்
மெல்ல நகர்ந்து இருளில் மறைய....
சாமி தானென முடிவாகி
ஊருக்குள் இன்னும் நடமாடிக்கொண்டிருக்கிறது..
அன்று மழைநீரில்
கொதித்த உலையிலிருந்து
கிளம்பிய மண் வாசனைக்கு
கிறங்கித்தான் கிடந்தது வயிறு..
கோவில் வேப்ப மரத்தடியே கிடந்த
தொரட்டியை வைத்து அம்மா
மூட்டிய அடுப்பு கொஞ்சம் வைராக்கியமாகத்தான் எரிந்தது..
தண்ணீர் 
நிறத்திலொரு    நாளை
பெய்து விட்டுப்போயிருந்தது
மழை..

***

ஆற்று மணலில்
தூங்கிக்கொண்டிருந்த
என்னை
ஆற்றுக்குள் தூக்கி
வீசிச்சென்ற கனவுக்குள்
கண் விழித்தேன்.
கால்களை கடித்துக் கொண்டிருந்த
மீன்களைப்பிடித்து 
செதில்களை பிய்த்தெரியத்
தொடங்கிய எனக்கு
மீன் வாசனையில் ஒரு
வாசனைத்திரவக்குடுவையைக்
கையில் திணித்து விட்டு
ஓடி மறைந்தன மீன்கள்..
காலையில்
கண் விழித்து பார்த்தபோது
சொறி சொறியாய் இருந்த கால்களைச்சுற்றிலும்
செதில் செதிலாக
பிய்க்கப்பட்டு
ரத்தம் வடிந்திருந்தது.
தலைக்கு மேலே
பறந்து கொண்டிருந்த
மீன் கொத்தி
வேறு திசை நோக்கி பறக்கத்தொடங்கியது....

***

பயணத்தின் இடையே
பயணத்திற்காக குறுக்கிடுகிறது
ஒரு யுவதியின் கைகள்....
வேகமாக கடந்து செல்லும்
ஏதேனும் ஒரு வாகனத்தில் இருக்கிறது அந்தக்கைகளுக்கான பயணம்....
பயணங்களின் முடிவுகள்
ரகசியமானவை...
கொதி நீரின் உச்ச வெப்பத்தில்
மேலெழும்பும்  குமிழ்களின்
இசையைப்போல அல்லது
குமிழ்களின் கதறலைப்போல 
ஏதேனுமொன்றில் மறைந்திருக்கும்.
இந்தப்பயணத்தின் முடிவில்
யுவதியின் வீடு கடந்து 
சென்றவர்களின் உருவமற்ற
பாதங்களால் நிறைகிறது .
அங்கே தவறவிட்ட பேருந்தில் காத்திருக்கிறது
யுவதிக்கான பயணம்.

***
மேகங்களின்
பெயரெல்லாம்
தண்ணீரில் தான்
எழுதப்படுகின்றன...

***

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

அ. உமர் பாருக்


0   119   0  
December 2023

கா வெங்கடேஸ்வரன்


0   616   0  
February 2022

பரமேஸ்வரி


0   674   0  
February 2022

சிவயட்சி


0   1184   0  
December 2018