logo

இலக்கியச்சுடர் விருது


இலக்கியச்சுடர் விருது - வாருங்கள் வாழ்த்துவோம்
==================================
படைப்பாளி கவிஜி அவர்கள் இதுவரை இந்த குழுமத்தில் எழுதிய படைப்புகளை ஆய்வு செய்து அவரின் இலக்கியத் திறனை போற்றும் வகையில் அவர்களுக்கு இலக்கியச்சுடர் எனும் உயரிய விருதை அளித்து படைப்பு குழுமம் பெருமை கொள்கிறது.

அவர் இன்னும் பல விருதுகளும் பாராட்டுகளும் இலக்கிய உலகத்தில் பெறவும் மேலும் பல படைப்புகளை இந்த சமூகத்திற்கு தந்து தமிழ் வளர்க்கவும் வாழ்த்துகிறது படைப்பு குழுமம்...

இப்படி விருது பெறுவோர் அனைவரும் நாம் ஒவ்வொரு ஆண்டும் சந்திக்கும் விழாவில் மேடையில் வைத்து சிறப்பிக்கப் படுவதுடன் ஒரு ஆளுமைமிக்க படைப்பாளியின் கையிலிருந்து விருதும் நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...

இனி இந்த விருதை வாங்கப் போகும் எழுத்தாளர் யார் யார் என்பதை உங்களின் படைப்புகளே தீர்மானிக்கும்..ஆகவே இந்த குழுவில் பதியப்படும் படைப்புகள் யாவும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப் படுகிறது. அதை ஒரு குழு தனியாக இருந்து அலசி ஆராய்ந்து தேர்வு செய்கிறது என்பதை எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நல்ல படைப்புகளை படைப்போம்...
நம் சமூகத்தை நாமே தமிழால் இணைப்போம்...

வாழ்த்துக்கள் இலக்கியச்சுடர் கவிஜி.

ஒரு மகிழ்ச்சியான செய்தி....
இனி இந்த இலக்கியச்சுடர் விருது பெரும் படைப்பாளிகளை பற்றிய குறிப்பும் நாம் ஆய்வு செய்த முறையையும் இணைத்து இதனுடன் ஒரு கட்டுரை வடிவில் இணைக்கப்படும்.

இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாகவும் மற்ற படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கும். ஒரு படைப்பாளி தனக்கான ஒரு அங்கீகாரம் பெறுவதற்கு எவ்வளவு தூரம் எப்படி எல்லாம் கடந்து வருகிறார் என்பதை மற்றவர்களும் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.

இலக்கியச்சுடர் கவிஜி  – ஒரு அறிமுகம்
***********************************
பெயர்: கவிஜி.

வசிப்பிடம்: கோவை

பணி: ஒரு தனியார் கம்பெனியில் மனிதவள மேலதிகாரி

படித்தது: B.com. MBA (finance), PGDip in ADvertising.

படித்துக் கொண்டிருப்பது:
பாரதி, அவன் தாசன், தாஸ்தாவெஸ்கி, காப்ரியேல், மார்க்ஸ், நகுலன், பிரமிள், கோணங்கி, புவியரசு, டால்ஸ்டாய், சார்த்தர், நீட்சே, சே, ஜி. நாகராஜன், தஞ்சை பிரகாஷ், காப்கா, தி ஜா. எம் வி வெங்கட்ராமன், ஓஷோ...என்று அது தொடரும்.

இலக்கு/முயற்சி/கனவு: திரைப்பட இயக்குனர்.

இயல்பு:
இலக்கல்ல வாழ்க்கை. இலக்கை நோக்கிய பயணமே வாழ்க்கை என்ற புத்தனின் தத்துவத்தில் சற்றே சித்தார்த்தனாகி சிதறுவது இயல்பின் திரிபு

எழுதத் தொடங்கியது: மூன்றாம் வகுப்பில் இருந்து.

பெருமிதம்:
தான் ஒரு எழுத்தாளனாக இருப்பதில் பெருமிதமாகவும், அதுவே கடமையாகவும் கருதுகிறார்.

அவரது படைப்புகள்:

4000 கவிதைகளுக்கு மேல்.
150 சிறுகதைகளுக்கு மேல்.
120 ஒரு பக்க கதைகளுக்கு மேல்.
300 கட்டுரைகளுக்கு மேல். (சினிமா கட்டுரைகள் உள்பட)
10 குறுநாவல்கள்.
400 குறுங்கதைகளுக்கு மேல்.
2 நாவல். (3 வது நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார்)
2 ஸ்க்ரிப்ட் (சினிமாவுக்கானது)
12 குறும்படங்கள் (எழுதி நடித்து இயக்கியது)


கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் வெளி வந்த இதழ்கள் மற்றும் இணைய தளங்கள்:

தாமரை, கணையாழி, ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், அச்சாரம், அத்திப்பூ, மாலைமதி, இனிய உதயம், காமதேனு, கொலுசு மின்னிதழ், கீற்று இணைய தளம், எழுத்து இணைய தளம், படைப்பு 'தகவு' திங்களிதழ், படைப்பு கல்வெட்டு மின்னிதழ், வல்லமை மின்னிதழ், குறிஞ்சி மின்னிதழ் இன்னும் பல.

நூல்கள் ஆன அவரது படைப்புகள்:

"நிழல் தேசத்துக்காரனின் சித்திரப் பறவைகள்" - முதல் கவிதை நூல் 2016 ம் ஆண்டு "புதுவை ஒரு துளி கவிதை( அகன் ஐயா )" அமைப்பு  மூலமாக வெளியானது.

"ஊதா நிறக் கொண்டை ஊசி கதைகள்" - முதல் சிறுகதை தொகுப்பு 2017 ம் ஆண்டு "சென்னை பூவரசி" வெளியீடாக வெளியானது. படைப்பு குழுமத்தின் 2018 க்கான சிறந்த சிறுகதை தொகுப்புக்கான விருது பெற்றது.

"பச்சை மஞ்சள் சிவப்பு" - முதல் நாவல் 2018 ம் ஆண்டு "கோவை சப்னா" வெளியீடாக வெளியானது. படைப்பு குழுமத்தின் 2019 க்கான சிறந்த நாவல் விருது பெற்றது. 2019 ம் ஆண்டுக்கான திருப்பூர் இலக்கிய விருதும் பெற்றிருக்கிறது.

"எறும்பு முட்டுது யானை சாயுது" குறுங்கவிதை நூல் "படைப்பு" வெளியீடாக 2019 ம் ஆண்டு வெளியானது.

படைப்பு குழுமத்தில் பங்களிப்பு:

கவிதைகள்......கட்டுரைகள்....சினிமா கட்டுரைகள்.....குறுங்கதைகள்....சிறுகதைகள்.....ஒரு பக்க கதைகள்......என்று தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். "தகவு" மின்னிதழில்... உலக சினிமா கட்டுரை தொடர் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  

இலக்கியச்சுடர் கவிஜி அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
****************************************************
இயற்கையை அதன் போக்கில் கண்டு ரசித்துவிட்டு கடந்து போகாமல், அதனுள் நுழைந்து பல கேள்விகளை முன் வைக்கிறார். வாழ்க்கையின் சோகங்களுக்குள் அடிக்கடி நுழைந்து அதனுள்ளும் ராகங்களாக்கிப்  போகிறார். இந்த பண்பே, அவர் பின் நாட்களில் ஒரு மிகச் சிறந்த படைப்பாளியாக விளங்கவும், தனிமையை நேசிக்கவும் அவருக்கு கற்று கொடுத்திருக்கிறது எனலாம்.

இப்போதும்கூட, அவரிடம் யார் கேட்டாலும் "எழுதுவதால் வாழ்கிறேன்...எழுதுவதற்கே வாழ்கிறேன்" என்று எழுதுவதைத்தான் தவமாகக் கருதுவதாக சொல்கிறார். அழகான வடிவங்களில் இவரது படைப்புகள் மிளிர்கின்றன. இவரது எழுத்தின் நடை யாரையும் பின் தொடர்ந்து செல்வதில்லை என்பதும்,  இவருக்கு மட்டுமே உரித்தான ஞான பயிற்சியாகும். இவரது படைப்புகளில், சிலவற்றை நாம் வாசிக்கும் போது, ஒரு வகையான பிரம்மைக்குள் நம்மை அறியாமலேயே, நாம் சென்றுவிடுவது நிச்சயம்.


**சிறுகதையில்... குறுநாவலில்.... ஒரு பக்க கதையில்...கிளைமாக்ஸை பெரும்பாலும் 90% கணிக்க முடியாதபடி பார்த்துக் கொள்கிறார்.

**ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விஷயம் தொடப்படுகிறது.

**எல்லா கதையிலும்... சமூகத்துக்கான ஒரு செய்தி உள்ளிருக்கும்.

**பொழுது போக்குக்கான எழுத்து இல்லை.

**தற்கால சிறுகதையின் வடிவத்தை....போக்கை மாற்றியமைக்கும் வடிவம் இவருடையது.

**சிறுகதைக்குள் ஒரு திரைக்கதை இருக்கும். நம்மால் காட்சியாக மனதுக்குள் பார்த்து விட முடியும்.

**காலத்தை கலைத்து போட்டு விளையாடுவது இவர் கதைகளில் மிக சாதாரணமாக நடக்கும்.

**வரலாற்று கதாபாத்திரங்களை நவீனப்படுத்தும் போக்கு மிக இயல்பாக இருக்கும்.

**தத்துவார்த்த ரீதியிலும் மனோதத்துவ பார்வையிலும் இவரின் கதாபாத்திரங்களின் அமைப்பு இருக்கும்.

**பல கதைகள் மாஜிக்கல் ரியலிசம் வகையறாக்கள்.

**கற்பனைகளின் உச்சத்தையும்... எதார்த்தத்தை அடித்தளத்தையும் சரி விகிதத்தில் கலந்து கட்டமைக்கப்பட்டவை.

**காதலில் முற்போக்குத்தனங்கள்... நிறைய இருக்கும்.

**கட்டுரைகள் அந்தந்த காலகட்டத்தை பிரதிபலிக்கும்.

**சமூக அவலங்களை தாங்கொணா சமயத்தில் அவைகள் கட்டுரைகளாகி விடும்.

**சமூகம் சார்ந்த சிந்தனையின் கூட்டாக கட்டுரைகள் இருக்கும்.

**எதிர் வினைகள் பெரும்பாலும் கட்டுரைகளில் கொதிநிலையில்தான் இருக்கும்.

**பார்த்த பாதித்த சமூகம் சார்ந்த சினிமாக்களை கட்டுரையாக்கி விடுவார்.

**காதல் சார்ந்த உன்னதமான சினிமாக்களை கட்டுரையாக்குவதில் அலாதி பிரியம்.

**தஸ்தாவெஸ்கி.... காஃப்கா... டால்ஸ்டாய்... காப்ரியல் போன்ற உலக இலக்கியவாதிகளின் படைப்புகளோடு பயணிப்பவர்.

**பச்சை மஞ்சள் சிவப்பு நாவல்...

இந்த நாவல் 2018 ஆம் ஆண்டுக்கான படைப்பு குழுமத்தின் இலக்கிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர்... ஒரு கன்னியாஸ்திரி.. ஒரு திருநங்கை...என்று மூன்று வெவ்வேறு மனிதர்களின் கதை. மூன்று பாதைகளும் ஒற்றைப்புள்ளியில் சந்திக்கும் கோணல் மாணலான அனுபவங்களின் வழியே கிடைக்கும் ஞான தரிசனத்தின் சிதறல்கள். தூரத்து புள்ளியில் எப்போதும் ஒரு வகை பேராசை கனன்று கொண்டே இருக்கும். அது இங்கும் இருக்கிறது. பறவையாய் இருப்பது ஜஸ்ட் எ க்யூரியாசிட்டி. பறவைக்கு அது தெரியுமா தெரியாதா என்பது நமக்குத் தெரியாது என்பதோடு சிறகு விரிக்கிறது இந்தக் கதை.

வழி நெடுக வானத்தை விட்டுக் கொண்டே செல்கிறது இந்தக் கதையின் சம்பவங்கள்.

படித்தோர் யாரும் தங்கள் துண்டு வானத்தை பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.

**இவரின் "2050" குறும்படம் இன்றைய நீரின் தேவை பற்றி..

போதிய நீர் தேவை பூர்த்தியாகாத போது மனிதனின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று ரத்தம் உறைய வைக்கும் நிஜங்களை போட்டு உடைத்த 10 நிமிட சினிமா.

இப்படியாக புதுபுது முயற்சிகளில் இன்னும் தொடர்ந்து பயணிக்க வேண்டும் படைப்பாளி கவிஜி அவர்களின் படைப்பின் பயணம்.

இவரது இந்த இலக்கிய பயணம் மேலும் தொடரவும்.. சிறப்பான படைப்புகளை தொடர்ந்து தமிழுக்கு அளிக்கவும்... படைப்பு குழுமம் அவரை மனதார வாழ்த்துகிறது. மேலும் இலக்கியச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

இத்தகைய ஆக்கப்பூரவமான ஒரு படைப்பாளி பெறும் படைப்பின் சுடர் விருதுகள் இங்கு எழுதும் அனைவரின் கரங்களையும் தழுவ வேண்டும் என்பதே படைப்பு குழுமத்தின் அவா. அதற்கேற்ப படைப்பாளிகள் தங்கள் சிந்தனை வளத்தையும் உருவாக்கல் திறனையும் மேம்படுத்திக் கொண்டு சமூகத்திற்கான படைப்புகளைப் படைத்து மனிதம் செழிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டு அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறது படைப்பு குழுமம்.


வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#சுடர்_விருது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

சு.கேசவன்


0   192   0  
June 2024

ஏ.கே.முஜாரத்


0   1023   0  
February 2021