கவிச்சுடர் கார்த்திக் திலகன் ஒரு அறிமுகம்
***************************************************
//
இரண்டிரண்டாக
வாக்கியங்களை நறுக்கி
மாயப்புனைவின் மிளகுத்தூளை
அங்குமிங்குமாக தூவி
கைபேசி தொடுதிரையின்
மின்னணு வெப்பத்தில்
நீ விரும்பி சுவைப்பாயே என்று
உனக்காக
சூடான கவிதைகளை
சமைத்துக் கொண்டிருக்கிறேன்
அதற்குள் என்ன அவசரம்
இருந்து சாப்பிட்டுவிட்டுப் போ
நண்பா
நாமெல்லாம் தட்டு நிறைய
பசியை கொடுத்தாலே
அள்ளி அள்ளி புசிக்கிற ஜாதி...
//
படைப்புக் குழுமத்தால் கவிச்சுடர் விருது பெறும் கவிஞர் கார்த்திக் திலகன் எழுதிய ஒரு கவிதையின் சில வரிகளை மேலே வாசித்தீர்கள். எழுதாமல் இருப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று எழுதி கேட்கும் அளவுக்கு எழுத்தின் தாகத்தால் உந்தப் பட்டு தற்போது நவீனக்கவிதைகளை படைத்துக் கொண்டிருக்கின்ற இந்த 44 வயது கடலூர் கவிஞர் துணை வட்டாட்சியர் என்கிற பொறுப்பான ஒரு அரசு அதிகாரியும் ஆவார். கார்த்திகேயன் என்கிற இயற்பெயரை கார்த்திக் எனச்சுருக்கி மனைவியின் மீது வைத்திருக்கும் பேரன்பு காரணமாக திலகம் என்கிற மனைவியின் பெயரை திலகன் என்று மாற்றி கார்த்திக் திலகன் என்ற புனைபெயரில் எழுதுகிறார்.
பல பிரபலமான நாளிதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் எழுதி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கும் கார்த்திக் திலகன் முக நூலிலும் நமது படைப்புக் குழுமத்திலும் பெரும் வாசகர் வட்டத்தை வைத்திருப்பவர். பள்ளிப் பருவத்திலிருந்தே கவிதைகள் மீது ஆர்வம் கொண்ட இவர் புலன் உதிர் காலம் என்கிற தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். கவிஞனின் தலையாயப் பணி மொழிக்கு வெளியே அலைந்து கொண்டிருக்கும் கவிதையை மொழிக்கு உள்ளே கூட்டிவந்து உட்கார வைப்பதுதான் என்கிறார் இவர்.
சொற்களை இவர் ஆட்டிப் படைக்கிறாரா இல்லை சொற்களால் இவர் ஆட்டுவிக்கப் படுகிறாரா என வாசிப்பவர்களை அசத்த வைக்கும் சொற்களின் சிலம்பாட்டக்காரர். பொன்னிறமாக வறுத்தெடுத்த முத்தங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?
//
என் எதிரில் இருந்த
கோப்பையில்
கவிதையின் மது...
ஐநூறு ஆண்டு
பழமையான சொற்களை
மனதுக்கடியில்
புளிக்க வைத்து
தயாரித்தது....
ஒரு வெள்ளித் தட்டில்
பொன்னிறமாக வறுத்த
இரண்டு முத்தங்கள்...
ஒரு வாய் மதுவுக்கு
ஒருகடி முத்தம்...
சமையலறையில் இருந்து
உன் குரல் கேட்கிறது
முத்தம் போதுமா
இன்னும் இரண்டு
பொறிக்கட்டுமா என்று
எப்படிச் சொல்வது
இன்னும்
இருநூறு ஆண்டு
கழித்துக் கேட்டாலும்
இரண்டுமே எனக்கு
சலிக்காது என்று..
//
மொழி சிலசமயங்களில் மொழியாமல் இருக்கும் போதோ சிறு துளியாக விழும்போதோ அதன் ஊடுருவல் மிகச்சக்தி வாய்ந்தது. உம் எனும் சிறு சொல் பல்வேறு நிகழ்வுகளில் பல்வேறு அர்த்தங்களை அணிந்து கொண்டு வாழ்வின் கணங்களை எப்படி நகர்த்துகிறது பாருங்கள். அவரது கவிதை ஆயுதங்களில் ஒரு ஈட்டியாகப் பாயும் ஒரு கவிதை;-
//
கதை சொல்லிகளை விட
உம் கொட்டிகள்தான்
நம்மை அதிகம் கவர்ந்துவிடுகிறார்கள்
சிறுபொழுதின் காம்புகளில் கூட
சில்வண்டுகளைப் போல்
அமர்ந்துவிடுகின்றன
இந்த உம் கள்
நெகு நெகுவென்று
பிரிந்து செல்லும்
கதைகளின் கிளைமீது...
கேசம் கலைய கிடக்கும்
காரிகையின் இதழ் மீது...
அதிகாரத்தின் பாதுகைகள்
நசுக்குகிற சிறுநீரக நுண்குழல்களின் மீது....
வாழ்வை அரவை செய்யும்
இயந்திரங்களின் ஒலி மீது...
அவைகள் பசியோடு அமர்கின்றன
கதைகளுக்கு உம்கொட்டியபடி
உறக்கமென்னும்
நாவாயின் சுக்கானை
காற்றுவீசும் திசையில்
லாவகமாக திருப்புகின்றனர்
குழந்தைகள்
படுக்கையில்
கொட்டப்படும் உம்கள்
சொர்க்கத்தின் படப்பைக்குள்
செம்மீன்களாய் சேகரமாகின்றன
அதிகாரத்தின்
உம்களுக்கு எதிராக
அடக்கமுடியாமல்
அழுதுவிடுகின்றன
எளியவனின்
சிறுநீரக நுண்குழல்கள்
இயந்திரங்கள் கொட்டுகிற
உம் களில் அரைபடுகின்றன
உழைப்பாளியின்
அந்தியும் பகலும்...
இப்படிதான் இன்று
என்னருகில் செல்பேசிக்கொண்டிருந்த
உம்கொட்டியின் கன்னம்
சட்டென்று வியர்த்துவிட்டது
அவன் கனவின் லங்கோட்டை
யார் பிடித்து இழுத்ததோ
மறு முனையில்......
//
நலிவடைந்து வரும் கிராமியக் கலைகளும் கலைஞர்களும் கவிஞரின் பார்வையில் ஒரு வாழ்வியல் கவிதையாக பரிணமிக்கிறது . விளிம்பு நிலை மனிதர்களின் அவல நிலைகளை பாடாத கவிஞர்களும் உண்டோ ? இந்த உருக்கமான கவிதை கவிஞரின் மனித நேயத்துக்கு எடுத்துக் காட்டு :-
//
தெரு மேடையில்
ஆடுவதற்கு முன் திரைக்குள்
அவன் ஒத்திகை பழகும் போதே
குரல் கேட்டு ஆர்ப்பரிக்கும் கூட்டம்
கையிலேந்திய மரக்கத்தியை
சுழற்றி சுழற்றி சிவன் வேடத்தில்
அவன் அடவு கட்டினால்
காற்றில் மிதக்கும் படகா
காணத்தில் மிதக்கும் உடலா
அந்த சிவனே கெட்டான்டா
என்பார்கள் பெருசுகள்
ஆறுகால பூஜையோடு
சிவன் நன்றாகத்தான் இருக்கிறான்
எங்கள் ஊரில்
இவன்தான் கெட்டுப்போனான்
நலிவடைந்த கலைஞனுக்கான
நானூறு ரூபாய் பென்சனில்
பொலிவிழந்து போனது
அவன் பிழைப்பு..
திருமணமே செய்துகொள்ளாத
அவன் சொல்வான்
தான் கலியாணஞ் செய்து கொண்ட காதலி கலைதான் என்று
நீரில் மிதக்கும் நீண்ட ஜடாமுடியை
அலைகள் தாலாட்ட ஒருநாள்
குளத்தில் மிதந்த
தெருக்கூத்து மகாராஜாவை
ஊரே சுற்றி நின்று
வேடிக்கை பார்த்தது
மின்னலை போல ஆடியபாதத்திலிருந்து
மின்சாரத்தை பருகிக் கொண்டன
மீன்குஞ்சுகள்
நிரம்பிய கூட்டத்தை கண்டதும்
நீர்த்திரைக்கு பின்னாலிருந்து
மானசீகமாக ஒலிக்கிறது
அவன் குரல்
தந்தானே தந்தானே என்று...
அவனுக்கு எதையுமே தராத சிவனே
அவன் ஆன்மாவுக்காவது
அமைதியை தா...
//
சில உணர்வுகளுக்கு மாற்றீடு கிடையாது. ஒரு கவிஞன் என்றாலே தனிமைஎன்னும் உணர்வை எப்போதும் தன காதலைப் போல் தன் மனதுக்குள் பொத்தி வைத்திருப்பவன். கவிஞனின் தனிமையை அவனால் விட்டுபிரிய நேரும் என்கிற போது அதற்கு மாற்றாக அவனால் எதை அங்கு வைத்துவிட்டு வரமுடியும் ? ஒரு அழகான கவிதை..தனிமையின் இனிமையோடு..
//
இரண்டு சூரியன்கள்
பிரகாசிக்கும் அளவுக்கு
என் வானம் ஒன்றும்
அவ்வளவு பெரியதல்ல
அப்படியும் இரண்டாவது சூரியன்
வந்துவிட்டால்
முதலாவது சூரியன் தானே
காற்றில் கரைந்துவிடுகிறது
எதையும் மாற்றீடு செய்துவிட்டு
பதிலிகளை வைத்துவிட முடிகிறது
துக்கம் இருந்த இடத்தில் அன்பை
மகிழ்ச்சி இருந்த இடத்தில்
அற உணர்வை
காதல் இருந்த இடத்தில் ரகசியங்களை
பிரிவு இருந்த இடத்தில் இசையை
எல்லாம் எளிதாக இருக்கிறது
ஆனால்
நான் தனிமையை
காலி செய்துவிட்ட பிறகு
தனிமை இருந்த இடம் மட்டும்
காலியாகவே இருக்கிறது
ஏனென்று தெரியவில்லை
//
மானுடனுக்கு அன்பைப் பகிர்வதற்காகவே இயற்கை படைக்கப் பட்டிருக்கிறது. கவிஞன் தன்னையே கைவிட்டு நிராதரவான நிலைமையில் அன்பின் பசியாற காதலிபோல் இயற்கையை அழைக்கும் குரலுக்கு நம்பிக்கை உணவாகக் கிடைக்க கவிஞரின் எழுதுகோல் வடித்த கவிதையொன்றை பாருங்கள் ;-
//
என்னை நானே கைவிடுவது
எத்தனை துயரார்ந்தது.
கடவுள் என்னை
கைவிடுவதை விட
அது கொடுமையானது.
அப்படியொரு நிராதரவான கணத்தில்தான் எனது தேடல் துவங்கியது.
தாங்கமுடியாத அன்பின்பசி எனக்கு.
நீலமலையின் குறுக்கே
அடிவானமெங்கும்
கிளைகள் பிரிந்து
பரபரவென ஓடும் மின்னலைப்போல,
நான் தேடத்துவங்கினேன்.
அதோ அந்த மலைமேலே,
மேகத்தை ஒரு பாத்திரத்திலெடுத்து
கூழ்பிசைந்து கொண்டிருந்தவளை கண்டேன்.
அவள் தலை எங்கும் ஆயிரம் கண்கள்.
அவள் பார்வையின் விள்ளல்களை வாரிவாரி விழுங்கியும்
அடங்கவே இல்லை என்
அன்பின் பசி.
அம்மா... என்று வானம் அதிர
அழைக்கிறேன்.
மாயத் தொப்புள் கொடியை
பிடித்துக்கொண்டு அவள் குரல்
மலைஇறங்கி வந்தது என்னிடம்.
அவள் குரலை பிடித்துக்கொண்டு
அழத் தொடங்கினேன்.
பசுவின் பின்கால்களுக்கிடையில்
பிறந்து விழுந்த இளங்கன்றைப்போல,
தட்டுத்தடுமாறி
எனக்குள் எழுகிறது
ஒரு புதிய நம்பிக்கை....
//
தாயன்புக்கு நிகர் உண்டோ? மண்ணையும் மொழியையும் தாயாக ஏற்றுக் கொண்ட கவிஞன் என்றுமே தாய்க்கு முன்னால் ஒரு சிறு மழலையாக இருக்க ஆசைப்படுகிறான். வளர்ந்த பருவத்தில் தாயன்பை தூர நின்று பார்த்து ஏங்கும் ஒரு குழந்தையாய் மனதுக்குள் மாறிவிடும் கவிஞனின் உணர்வின் வெளிப்பாட்டை திரு கார்திக் திலகன் அவர்களது இந்தக் கவிதை மூலம் நம்மையும் ஈனக வைக்கிறார் ;;-
//
என் குளிர் கண்ணாடியை
எடுத்து அணிந்து கொண்டாள்
என் குட்டி மகள்
என் பெரிய சப்பாத்துகளில்
கால்களை நுழைத்துக் கொண்டு
இடுப்பில் கைவைத்து
என்னைப் போலவே
நடந்துகாட்டுகிறாள் அவள்
பேத்தியை அள்ளி
மடியிலிட்டு கொஞ்சுகிறாள்
என் அம்மா
என் மகளின் வயதில்
அம்மா எனக்கு வாங்கித்தந்த
சப்பாத்துக்கள்
குட்டி குட்டி நிலாக்களைப்போல
இருக்கும்
என்ன ஆச்சரியம்
அந்த குட்டி நிலாக்களுக்குள்
என் கால்கள் இப்போது
எளிதாக நுழைந்துகொண்டன
அடிவானில் பதுங்கும்
சிவந்த முட்டை உடைந்து
உன்
பழைய கொஞ்சல்கள் எல்லாம்
என்னை நோக்கி
பறந்து வருவது போல்
ஏக்கமாக இருக்கிறது
அம்மா என்னையும்
ஒருமுறை கொஞ்சேன்......
//
அதிகாலை என்பது மனிதனுக்கு தன் பிறப்பை நினைவூட்டும் நேரமோ ? வாழ்க்கை உயிர்களுக்கு ஊட்டும் தாய்ப்பாலின் சுவையோ ? மனித நேயம் ஒவ்வொரு மனதுக்குள்ளும் மலரத் துவங்கும் நேரமோ ? கார்திக் திலகனின் அனுபவம் ஒரு கவிதையாய்..
//
காலை பனியில் மங்கலாக கண்விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தன
கனரக வாகனங்களின் முகப்பு விளக்குகள்
பனிக்குல்லாய் அணிந்து கொண்டு நடைப்பயிற்சி போகிற முதியவர்கள்
பனிக்குள்ளிருந்து
வெளியே வருகிறார்கள்
பின்பு பனிக்குள்ளேயே போய்விடுகிறார்கள்
அவர்களின் இதயக்கடிகாரத்திலிருந்து
இயந்திரக்குருவி
காலக்கிரமமாக வெளியே வந்து
கூவி விட்டு உள்ளே போகிறது
வங்கியில் வேலை பார்க்கும் பெண்
தன் செல்ல நாயை அழைத்து வந்திருக்கிறாள்
என்னை கண்டதும் முகம் மலர்த்தி
குசலம் விசாரிக்கிறாள்
என் முகத்தை பார்த்து
வினோத ஒலி எழுப்பிய நாய்
என் கால்களை நக்கிவிட்டது
அந்த எச்சிலின் ஈரம்
எனக்கு புரியவைத்துவிட்டது
எச்சில் என்பது ஒரு மொழி என்பதையும்
ஈரம் என்பது ஒரு வார்த்தை
என்பதையும்
கிழக்கிலிருந்து
பனிக்குல்லாய் அணிந்து வந்த முதியவரின் பெயரைக் கேட்டேன்
சூரியன் என்றார் அவர்
இன்று பனிகொஞ்சம் அதிகம்
என்று முணுமுணுத்தது
அவரின் செம்பழுப்பு நிற உதடுகள்..
//
கணவன் மனைவி அன்பின் கொடுக்கல் வாங்கல் அனைத்தும் மனதுக்குள் அவர்கள் அமைத்திருக்கும் ஒரு ரசசிய சுரங்கப்பாதை வழியாகவே நடைபெறுவதுதான்.. அந்த ரகசிய சுரங்கப் பாதை பகிரங்கமாக திறக்கப் படும் கணம் என்பது அவளின் நோயுற்ற நிலையில்தான். ஆறுதல் தேறுதல் என்பதெல்லாம் இருவருக்குமிடையே வெளிப்படும் இருவழி பரிமாற்றம். இல்லத்தரசியின் நோயுற்ற நிலைகண்டு இயலாது நிற்கும் ஒரு கணவனின் நிலையை வலிகளின் வரிகளில் பதிவு செய்கிறார் கவிஞர் ;;-
//
நோயுற்ற மனைவியின் கை
குழந்தையின் கைபோல இருக்கிறது.
எடுத்து நெஞ்சில் வைத்துக்கொள்ள ஏதுவாக...
எத்தனை கோபத்தில் அவள்
இருக மூடி வைத்திருந்தாலும்
என்னைக் கண்டதும் அவள்
மனதின் தாழ் சட்டென தெறித்துவிடும்.
எனக்கான வீடு அவள் மனம்தான்
என்று நம்புகிறேன்.
இரண்டு மனங்களுக்கிடையே
ரகசிய சுரங்கவழி ஒன்றிருக்கிறது.
யாருமே சொல்ல முடியாத
ஆறுதல்களை
அதன் வழியேதான் நாங்கள்
எடுத்துச் செல்வோம்.
இன்று அவள் நோயுற்றிருக்கிறாள்.
ரகசிய பாதையின் கதவுகளை
பகிரங்கமாக திறக்கிறேன் நான்
அழுகையால்...
கடவுள் நம் கூடவே இருக்கிறார்
கவலையை விடு என்று,
கண்களை துடைக்கிறாள் அவள்.
யாருக்கு யார் ஆறுதல் சொல்வது?
இந்த தலைகீழ் விகிதங்களை
என்னதான் செய்வது என்று
கைகளை பிசைகிறது விதி.....
//
மானுடம் பிறந்த போதே காதலும் பிறந்து விட்டது. காலப்போக்கில் ஜாதி மத இனமென்று மனிதன் பின்னிய மாயவலைகளில் அவனே வீழ்ந்து விடுகிற கொடுமையை நாம் காண்கிறோம். வாழ்நாட்களில் சாகடிக்கப்பட்ட காதல் இறந்தபின் உயிர்பெறுகிறது . சாதிக் கொடுமையாலோ சமூக ஏற்றத்தாழ்வின் அவலத்தாலோ கொலைசெய்யப் பட்ட ஒரு காதலை இரு பிணங்களாய் சுமந்து செல்லும் அமரர் ஊர்தியின் ஓட்டுனரின் பார்வையாக ஒரு கவிதை கண்ணீரை அணிந்து கொண்டு வடிக்கப்ப்பட்டுள்ளது;-
//
அமரர் ஊர்தியில்
ஓட்டுனன் வேலை அவனுக்கு.
என்றாலும் குடிப்பழக்கமில்லை.
ஆனால், சவபயணங்களின் போது
சாராயத்தில் ஊறவைத்தது போல
விரைப்பாக இருக்கும்
அவன் மனம்.
ஒவ்வொரு உடலுக்கும்
ஒரு மணம் இருப்பதைப் போல,
ஒவ்வொரு சவத்திற்கும்
ஒரு மணம் இருக்கிறது
என்பான் அவன்.
அன்று அவனுக்கு வாய்த்தது
கட்டிக்கொண்டே தீக்குளித்து இறந்து போன
காதலர்களின் இரட்டைச் சவம்.
எரிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டதாம்.
இறுதிவரை பிரிக்கவேமுடியவில்லை
சவங்களை.
நண்பர்கள் மட்டுமே கூட இருந்தனர்.
அவர்களின் கண்களில் வரிசைகட்டிய நீர்முல்லைகளின்
மணம் என்னவோ செய்தது.
கண்ணீர் என்பது வெறும் திரவம் மட்டுமே அல்ல என்று அவனுக்கு
அப்போது தோன்றியது.
தார்ச்சாலை என்கிற
இரவின் படிமத்தின்மீது
ஊர்ந்து கொண்டிருந்தது வாகனம்.
தழுவியஉடல்களில்
சிக்கிக்கொண்ட
மரணத்தின் எலும்புகள்
முறியும் ஓசை
கேட்டுக்கொண்டே இருந்தது
வாகனம் குலுங்கும் போது....
முத்தங்களின் கருகல் வாசனை
அவன் மூக்கைத் துளைத்தது.
கடைசிவரை அவன்
திரும்பிப் பார்க்கவே இல்லை.
ஆன்மாக்களின் புணர்ச்சியை பார்ப்பது
அத்தனை நாகரிகமில்லை என்று
நினைத்தான் போலும்.
மறுநாள் காலை மனைவியை
அழைத்து -
அம்மு நான் இனி அந்த
வேலைக்கு போகலடா
என்றான் விட்டத்தை வெறித்தபடி....
//
உலகையும் உயிர்களையும் மனிதர்களையும் படைத்த இறைவனுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கும் நையாண்டி வேடமிட்டு வரும் நெத்தியடிக் கவிதை ஒன்று:-
//
இந்த பூமியை வானமென்னும் கிண்ணத்தை கொண்டு
மூடிவைத்து விட்டுப் போன இறைவன்
திரும்பி வந்து பார்ப்பதற்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டது இங்கே.
காளான்களைப் போல குப் என முளைத்து விட்டன கட்டிடங்கள்.
அதில் ஒரு சிப்பிக்குள் அமர்ந்தபடி குட்டி கடவுளுக்கு
முலையூட்டுகிறாள் தாயொருத்தி
கடவுளை வளர்த்து வளர்த்து மனிதனாக்கும்
துர்தேவதைகள்தான் இந்த தாய்தந்தையர்கள்.
கடவுளே வானத்து கிண்ணத்தை
திறந்து திறந்து
பார்த்துக் கொண்டு
அந்தரத்திலேயே தொங்கியபடி
அருள்பாலித்துக் கொண்டிரு!
பூமிக்குள் இறங்கி வந்து விடாதே!
உன்னை பலவந்தமாக கொன்றுவிட்டு
உன் உடலுக்குள் கூடு பாய இங்கே மனிதர்கள் காத்திருக்கிறார்கள்.
ஏதோ உன் அந்தரங்க தோழன் என்பதால் நானிதை சொல்லும்படி ஆயிற்று.
சூதானமாக பிழைத்துக்கொள்.
நீ நினைப்பதைப் போல புனிதர்களாக இருப்பதற்கு
அவர்கள் கடவுளர்களல்ல மனிதர்கள் மா...மனிதர்கள்.
//
கவிச்சுடர் கார்த்திக் திலகனின் கவிதைளை எல்லாம் இங்கு எடுத்தியம்புவது என்பது கடினம் என்பதால் படைப்பின் படைப்பாளிகளுக்காக சொற்களால் சிலம்பமாடும் அவரின் சில கவிதைகளிலிருந்து சில வைர வரிகளை மட்டும் தருகிறோம்.;-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உதிரத்துளிகளை ஒன்றாக்கி
ஒரு பெண்ணை செய்வது எளிது...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சற்றுமுன்பு
அவ்வழியேதான்
ஒரு கவிதைப்பாகன்
வார்த்தைகளை
ஓட்டிச்சென்றிருக்கிறான்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரவுக்குள் இருந்து ஒரு பகலை வெளியில்
எடுத்து கைதட்டல் வாங்கும் வித்தைக்காரன்தானே
இந்த சூரியன்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் கவிதையுற்றிருக்கிறேன்.
அவள் கருவுற்றிருக்கிறாள்.
எனக்கு இப்போது முடிந்து விடும்.
அவளுக்கு பத்து மாதம் ஆகும்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படைப்பாளி கார்த்திக் திலகன் அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.
வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.