கவிச்சுடர் நிலாகண்ணன் ஒரு அறிமுகம்
*********************************************************
பெயர் : நிலாகண்ணன்
இயற் பெயர்: கண்ணதாசன்
பிறப்பிடம்: காரைக்குடி
வசிப்பிடம் : சென்னை
வேலை: சுயதொழில்
இதுவரை வாங்கிய விருதுகள் & பரிசுகள்: ஈரோடு தமிழன்பன் விருது
மற்றும் படைப்பு குழுமம் நடத்திய கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டியில் முதல் பரிசு (பாவலர் அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்பட்டது.) மற்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் 2016 ஆண்டு இவர் படைப்பில் மாதாந்திர சிறந்த படைப்பாளியாக தேர்வு.
பணிச்சுமையும் மனச்சுமையும் கூடிவிட்ட இன்றைய இயந்திர வாழ்தல் நடைமுறையில் தனி அருகே விழுந்தோ அடிபட்டோ குற்றுயிராகிக்கிடக்கும் சகமனிதனைத் தூக்கிவிடும் முன்பாக அவனை செல்போனில் படம்பிடித்து சமூகக் கடமையாற்றியதாய் திருப்திப்பட்டுக்கொள்ளும் இந்நவநாகரீகச் சமூகத்தில் ஒரு மனிதனை இலகுறச் செய்யவும் அவனுக்கு அவனுடைய சமூகப் பொறுப்பை உணர்த்தவும் கவிதைகளால் முடியும் என்றால் அக்கவிதைகளும் அம்மாதிரியான கவிதைகளைப் படைக்கும் ஒவ்வொருவரும் கொண்டாடப்பட வேண்டியவர்களே. அந்த வகையில் இம்முறை படைப்புக்குழுமம் தன் கொண்டாட்டத்திற்காக தெரிவு செய்திருக்கும் படைப்பாளி நிலாகண்ணன்.
புதுக்கவிதைகள், நவீனத்துவக் கவிதைகள், பின் நவீனத்துவ கவிதைகள் மற்றும் மரபு கவிதைகள் என்று நம் தமிழ் மொழி இலக்கியத்தின் புதுப்புது பரிமாணங்களில் படைப்புக்களை படைத்துக் கொண்டிருக்கும் நம் குழுமத்தின் படைப்பாளிகளின் நடுவே ஒரு மாபெரும் நவீனத்துவக் கவிஞராக உலா வரும் ஒரு படைப்பாளிதான் இந்த மாதம் நம் குழுமத்தால் கவிச்சுடர் விருது பெறுகிறார். படைப்பாளி நிலாகண்ணன் அவர்கள் பற்றி படைப்பு குழுமத்தை ஆதரித்து வரும் படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்ய அவசியமில்லை என்றாலும் நாள்தோறும் இந்த குடும்பத்தில் இணைந்து வந்துகொண்டிருக்கின்ற புதிய படைப்பாளிகளின் கவனத்துக்காக ஒரு அறிமுகக்கட்டுரை அவசியமாகிறது.
காரைக்குடியைத் தன் பிறப்பிடமாகவும் சென்னையைத் தன் வசிப்பிடமாகவும் கொண்டு மகிழ்வுந்து ஒட்டுனராக சுயதொழில் செய்துவரும் இப்பின்நவீனத்துவப் படைப்பாளி சமீபகாலமாக பிரபல வாரப்பத்திரிக்கைகளைத் தன் மென்சோகம் இழையும், நுண்ணியமனிதம் அலர்ந்து கமழும் கவிதைகளால் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். படைப்புக்குழுமம் நடத்திய நதிக்கரை ஞாபகங்கள் கவிதைப் போட்டியில் கவிஞர்.அறிவுமதி அவர்களால் முதற்பரிசிற்குத் தெரிவு செய்யப்பட்ட இவரது கவிதை இவரின் படைப்பாற்றலுக்கு மற்றொரு சான்று. படைப்புக் குழுமம் வெளியிடும் மாதாந்திர மின்னிதழ்களில் இவரது கவிதை தவிர்க்க முடியாத ஒன்று.
இவர் எழுதத் தொடங்கிய காலத்தில் வழமையான பாணியில் மூன்றுவரி ஆச்சரியக் குறிகளோடு எழுதப்பட்டிருப்பினும் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குப் பிறகு இவரது படைப்புகளின் விசுவரூபம் பலரையும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஆழ்ந்த வாசிப்பின் மீதுள்ள ஈடுபாடும் தன்னைச் சுயமாக மதிப்பீட்டுக் கொண்டு தன்முனைப்போடு எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ளும் திறனுமே இவரை இந்த நிலைக்கு உயர்த்தியது என்று கருதிக்கொள்ளவே தோன்றுகிறது.
விளிம்பு நிலை மனிதர்களுக்கான இவரது படைப்புகளில் அவர்களின் உழைப்பின் மணத்தை, இயலாமையின் வெளிப்பாடை அழகாக வெளிக்கொணர்ந்திருப்பார். சமூகத்தின் இவர்களது மீதான அலட்சியத்தை, பொறுப்பின்மையை எளிய மொழியாலும் செறிந்த கருத்தாலும் உருவாக்கப்பட்ட கவிதைகள் கொண்டு எடுத்துரைக்கும் விதம் அழகு. அதற்குச் சான்றாகவே கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் கவிதை.
//
சில்லறை மீன் வியாபாரி விபத்துக்குள்ளாகிக் கிடக்கின்றான்
கூடையிலிருந்து சிதறிய மீன்கள்
அவன் குருதியில் நீந்திக்களிக்கின்றது.
பாவம் வியாபாரிதான்
காற்றுகுடித்து மூர்ச்சையானான்..
தவிர
வண்ணமீன்கள் சுற்றும் தட்டைப்பேழைக்குள்
நான் என் சைக்கிள் பெல்லை அடித்தபடி கவனமாய் நீந்திவந்தேன் என் வீட்டிற்கு,,,
//
ஒரு விபத்தின் கோரமுகத்தை மனிதர்கள் எவ்வளவு அலட்சியமாக கடந்துபோகிறார்கள் என்பதை முகத்திரையைக் கிழிப்பதைப் போன்று அப்பட்டமாகச் சொன்ன கவிதை அது.
பதின்வயதுகளில் மனிதனாகப் பிறந்த எவரும் கடந்துவரும் காதல். வெறுமனே எதிர்பாலின ஈர்ப்பு என்று சுயமாகச் சமாதானப்படுத்திக் கொண்டாலும் பின்வரும் நாட்களில் அந்தப் பெண்ணைக்காணும் போது இனம்புரியாத எதுவோ ஒன்று நமக்குள் சுழலும். ஒரு மெல்லிசைப் பின்னணியில் தேவதைகள் சூழ கனவுலகிற்குள் சஞ்சரிக்கத் துவங்க நிகழ்காலப் பெருவாகனமொன்று கடந்துபோக நம்முள் அனைத்தும் கடந்துபோய்விடும். இத்தகைய அழகான வாழ்வியல் நிகழ்வை கவிஞர் எத்தனை நயமாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
//
வாழ்தல் குறித்த துயரங்களை
முகக்குறிப்பி்லுணர்த்தி
கண்ணீருக்கான மதகுகளை
மெல்லத் திறந்துவிட்டபடி நிற்கிறாள்
பழைய காதலி
பழைய கண்ணீர்தான்
புதிய காயங்களை திறந்துவைக்கிறது.
மனிதப்பாதங்களற்ற தீவில்
அவளை உறங்கவைத்து
புல்லாங்குழல் நிறைந்த ஒரு இசைத்தட்டை
அவள் வாதையின் மீது
சுழலவிடத் தோன்றுகிறது.
அல்லது
யாரும் அறியாமல்
அவளையொரு புறாவாக மாற்றி
வானில் வீசி பறக்கவிட
வேண்டுமெனத் தோன்றுகிறது..
அதுவும் தரையிறங்காத புறாவாக.
ஓரிடத்தில் காலூன்றி
வேறுவேறு திசையில் கரையும்
இரட்டை ஊதுபத்திகளைப்போல
தன்னிலை இழந்து
காலத்தின் முன் கரைந்துநிற்கிறோம்.
இருத்தலின் கதவை அழுது திறக்கிறது
அவள் இடுப்பிலிருக்கும் குழந்தை.
.
.
புறா சிறகுகளுடைந்து
இசைத்தட்டின் மீது விழுகிறது
//
வாசிக்கும் ஒவ்வொருவரும் இது எனக்கான கவிதை என்று அடித்துக்கொள்ளும் கவிதை இது.
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் கணவன் மனைவியிடையே நிகழும் ஊடல் என்பதற்கான மாதிரிகளைப் பட்டியலிடுகிறார் கவிஞர். அவர்மீதான பிணக்கை எத்தகைய வலிமிகுத் துயர வரிகளால் வரிசைப்படுத்தி அதனைச் சமாதானப்படுத்தத் தன் குழந்தையின் மூலமாக ஒற்றை முத்தம் ஒன்றை அனுப்பி தீர்த்துக் கொள்கிறார். பேசுவதால் வரும் பிணக்கை பேசாமலேயே முடிவுக்குக் கொண்டுவரும் அழகியலை இக்கவிதையில் நம்மால் சிலாகிக்க முடிகிறது. இவரது வழமையான வாசகர்கள் மத்தியில் மீண்டும் சிம்மாசனமிட்டு அமர்ந்த கவிதை இது.
//
மனைவியுடனான ஊடலுக்குப்பின்
வருகின்ற இரவென்பது ஒரு மாதிரி
அது சதையோடு சேர்த்து வெட்டிக்கொண்ட
நகத்துண்டு மாதிரி
சரிகை பிரிக்கப்படாத
எதிரியின் பரிசுப்பொருள் மாதிரி
எழவு வாசலில்
பறையின் இடைப்பட்ட அமைதி மாதிரி
இரட்டை ஆயுள் கைதியின்
கையில் கிடைத்த கரித்துண்டு மாதிரி
உதவிக்காக நண்பனை அழைக்கும்போது
தொலைபேசி அணைக்கப்பட்டதைச்
சொல்லும் பெண்குரல் மாதிரி
காக்கையின் கால்களுக்கும்
அலகுக்கும் நடுவில்சிக்கிய
சதைத்துண்டு மாதிரி
இல்லறத்தில்
குழந்தைகள்தான் மீட்பின் பாடல்
விடுதலையின் தாழ் திறக்குமோசை
குழந்தைகள்தான்
சமாதானத்தின் சொற்கள்.
என்இரண்டு சொற்களையும்
அப்பெரும் மௌனத்திடம்
அனுப்பிவைத்தேன்
திரும்பிவந்த சொற்களிடம் இருந்தது
அவள் கொடுத்தனுப்பிய முன்மாதிரி அற்ற
புதுமாதிரியான ஒற்றைமுத்தம்
அன்பின் நிமித்தமாய்..
//
அவருக்கு படைப்பு குழுமத்தில் மாதாந்திர சிறந்த படைப்பாளியாக தேர்வுபெற செய்த கவிதை இதோ... (ஆகஸ்ட் - 2016)
//
அம்மா
விறகு வெட்டச்சென்ற
அந்தப்பால்யத்தின்
பகல்பொழுது துயரமானது.
நீண்ட நேரமாகியும்
வீடுவராதவளை
நீலம் பாய்ந்த உடலோடு
தூக்கிவந்தார்கள்.
அந்தப்பாதை முழுவதும்
சுடுமணலில் உதிர்ந்துகிடந்தது
எனக்காக அவள்
மடியில் கட்டியிருந்த நாவற்பழங்கள்
//
நம் படைப்புக்குழுமம் நடத்திய கவிக்கோ பிறந்த பரிசுப்போட்டியில் நதிக்கரை ஞாபகங்கள்
என்ற தலைப்புக்கு அவர் கவிதை எழுதி பாவலர்/பாடலாசிரியர் அறிவுமதி அவர்களால் முதல் பரிசு 5000 ரூபாய் தட்டிச்சென்ற கவிதை இதோ...
//
நதிக்கரை ஞாபகங்கள்
------------------------------------------
வண்ணாத்தியின் விரல் பிடித்தபடிதான்
ஊருக்குள்வந்தது ஒரு வெயில் நதி
சலவைக்காரனின் கைகளுக்குள்
ஒரு ரேகையைப்போல் ஓடிக்கொண்டிருந்த அந்த நதியை
அவர்களிடமிருந்து நாம்தான் பிரித்தோம்.
ஒவ்வொருவரின் வீட்டுக்கும் துணியெடுக்க
நம் வாசலுக்கே வந்து நின்றது நதி.
நம் பாட்டனின் இறுதிச்சடங்கில் உடைக்கவோ ஊற்றவோ
பானைக்குத் தேவையாய் இருந்தது நதி.
இலை எடுத்து நகர்ந்தது நதி
நம் பாவங்களைச்சுமந்த படி
நதியை முன்னேறவிடாது வழிமறித்து நின்றோம்.
நதியை தூமத்துணி துவைக்கப்பணித்தோம்.
நதியை அதன் போக்கில் விட்டதேயில்லை நாம்.
எதிர்படும்போதெல்லாம்
அடிமை நதியாய் அது
தலைகுனிந்தே நகர்ந்தது பிடித்திருந்தது நமக்கு
நாம் தள்ளிவைத்த நதி
இன்று நம்மைத்தள்ளிவைக்க
ஊர்க்கோடியில் அவர்கள் விட்டுப்போன கழுதைகளுக்கு
மணம் முடித்து மழைக்காக ஏங்கிநிற்கிறோம்
சட்டையில் இருக்கும் சலவைக்குறியீடாய் மட்டுமே
எஞ்சிவிட்டது இறுதியில் நதி
//
இன்னும் அவரின் சில படைப்புகள் உங்கள் பார்வைக்கு:
//
பதிமூன்று வேகத்தடைகளுக்கப்பால்
வட்டநாதங்கிசுழற்றி
ரகசிய அறை திறக்கும் பழைய வில்லனைப்போல
மார்புக்கு நேரிடை வழிவளை (ஸ்டேரிங்)
சுழற்றி வாழ்வைத்திறக்கின்றோம் அனுதினம்.
சிவப்பு எம்மை வறுமையின் கோட்டில் நிறுத்திவைக்கையில்
ஓடிவந்து யாசிப்பவர்களுக்கு
கொய்து தரவியலாது சிக்னல் கம்பத்தில்
கனிகி்றதொரு ஆரஞ்சு.
உந்து விசைதரும் எம் குழந்தைகளின்
கையிலோடும் பச்சை நரம்புகள் என
கலைந்த நூற்கண்டாக
குலைந்து கிடக்கும் நகரத்துச்சாலையில்
முடிவின்றி அலைந்து திரிகின்றோம்
இந்த நள்ளிரவு முதல் டீசலுக்காக
நீங்கள் குறைத்த ஆறு காசுகளில்
அரை டஜன் ஆப்பிளும் நான்கு ரொட்டியும்
வாங்க முடியுமெனில்...
பதிமூன்று வேகத்தடைகளுக்கப்பால் பட்டினிச்சித்திரங்களாய் படுத்துறங்கும்
என் குழந்தைகளின் காத்திருந்த வயிற்றில்
முத்தமிட்டு எழுப்பிடுவேன் நான்.
//
//
நான்கு இட்லிகளை
பார்சல் கட்டி வாங்கிக்கொண்ட
வடக்கத்தி பெண்ணின்
சிவந்துமெலிந்த இடதுதோள் மீது
வடைகேட்டு அழும்
ஒரு சிறுமி சாய்ந்திருக்கிறாள்
பனியைப்போன்று
கண்ணீர் ததும்பியிருந்த அதன்
மல்லிகை மொட்டுக்
கண்களைப்பிடுங்கி
அவள் அம்மாவின் கூந்தலில் சூடி
எனதறைக்கு
அழைத்துப்போகிறேன் நான்.
கண்களற்ற அக்குழந்தை
உங்களிடம் கைக்குட்டை
விற்று வரும் போது
அழுக்குத்தெரியாத நிறம் தேடுவதுபோல்
அவள் கைகளைத்தொட்டுத்தடவி
ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள்
கைக்குட்டை நல்லது சமயத்தில்
முகத்தை மறைத்துக்கொள்ளவும்
//
//
பச்சை நுங்குகளென
பருவம்துருத்த ஒட்ட மடை வயலுக்கு எருக்கொட்டப்போகிறாய்...
மாடுகளை ஓட்டிக்கொண்டு
நானும் பின்தொடர்கிறேன்...
ஊரறியாமல் நாம் காதல் வளர்க்கவே
நம் கால்நடைகள் சாணமிடுகிறது.
//
//
என் மனைவியின் கண்ணீர்
மல்லிகைவாசம் கொண்டது
மரணத்தின் கரங்களிலிருந்து
நானவளை மீட்பேன் என நம்பியிருந்தாள்
நான் அவளின்
சாகசக்காரனாயிருந்தேன்.
அவள் நோய் தீர்வதற்கான பூ
எந்த மலையிலும் பூத்திருக்கவில்லை
பின்னிரவுகளில் வரும்
மல்லிகைவாசத்திற்கு கண்ணீரே
காரணமாக
வாதை எங்கள் கூடாரமானது
ரத்தம் சுண்டிய அந்த
உள்ளங்கை குளிர்மையை
அதிகநேரம் பற்றிக்கொண்டிருந்தேன்
நோய் பீடித்த அவளின்
வெளிரிய கருவிழியிரண்டும்
ஒவ்வாத
மாத்திரைகளைப்போலிருந்தன
மணற்கடிகாரமென
கவிழ்த்துவைக்கப்பட்ட
குளுக்கோஸ் பாட்டிலில்
அவள் காலம் சொட்டியது
வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள் மருத்துவமனை
ஜன்னலின் வழியாக
ஒரு பறவையாகி பறந்துபோனாள்
எனக்காக
வெந்நீர் வைத்து
விரல்சுட்டுக்கொண்டவளை
இப்போது தகனமேடையில்
வைத்துவிட்டு தனியாக நிற்கிறேன்
என் முன்னால் நெருப்பு
நான் அவளுடைய சாகசக்காரன்
//
இப்படியாகத் தன்னை உருவகப் பொருளாக்கிக் கொண்டு தன் முன்னாலிருக்கும் சமூகத்திற்கு மிகுந்த பொறுப்புணர்வோடும் அக்கறையோடும் தன் எழுத்துக்களின் மூலமாக வாழ்வியல் சங்கதிகளைப் பட்டியலிட்டுக் கடத்தும் படைப்பாளி நிலாகண்ணன் அவர்களை மனமாரப் பாராட்டி மகிழ்கிறது படைப்புக்குழுமம். அவர் மென்மேலும் சிறந்த படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகிற்குக் கொடுத்து இன்னும் உச்சங்களைத் தொடவேண்டும் என உளப்பூர்வமாக வாழ்த்திமகிழ்கிறது படைப்புக்குழுமம்.
வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.
#கவிச்சுடர்_விருது