logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் ரோஷான் ஏ.ஜிப்ரி  ஒரு அறிமுகம்
********************************************************
பெயர்: ரோஷான் ஏ.ஜிப்ரி
ஊர்: வாங்காமம், இறக்காமம் - இலங்கை.

கிழக்கிலங்கையின் மருதமுனையை பிறப்பிடமாகவும் இறக்காமத்தை வாழ்விடமாகவும் தற்போது தொழில் நிமித்தம் மத்தியகிழக்கு நாடான கட்டாரில் வசிக்கிறார்.

1989,இல் வீரகேசரி வார வெளியீடு பத்திரிக்கை ஊடாக ஆரம்பமானது இவரது கவிதை அடி எடுப்பு. முதல் கவிதை முன் அறிக்கை ! இதுவரை 1000 க்கு மேற்பட்ட கவிதைகள் எழுதி இருக்கிறார். இவரது கவிதைகளுக்கு களம் தந்த வாரப் பத்திரிகைகளின் எண்ணிக்கை சுமார் 25 க்கு மேல் இருக்கிறது. கவிதைகள் மட்டுமல்லாது சிறுகதைகள் மற்றும் நாடகங்கள் எழுதுவதிலும் கைதேர்ந்தவர்... இதுவரை இவர் எழுதிய ஐந்து சிறு கதைகள் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. மூன்று வானொலி நாடகங்கள் எழுதப்பட்டு இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கின்றன. பல தளத்திலும் முகநூலிலும் தொடர்ச்சியாக எழுதி வரும் இவர்
2014இல் எழுதிய அலகுகளால் செதுக்கிய கூடு என்ற கவிதை உலகப்புகழ் பெற்றது... மேலும் அதே தலைப்பில் ஒரு நூலும் திரு.அமிர்த கணேசன்(அகன்) அவர்களால் வெளியிடப்பட்டு அக்கவிதைக்கு பெருமை சேர்க்கப்பட்டது...

சர்வேதச மட்டத்தில் பல விருதுகளும் பரிசுகளும் பெற்று இருக்கிறார்... அதில் முக்கியமாக
மென்பா மணி, சொல்லாக்க செம்மல் , ஈரோடு தமிழன்பன் விருது போன்ற விருதுகள் அதனுள் அடங்கும்... மேலும் நமது படைப்பு குழுமம் 2016இல் சிறந்த படைப்பாளிக்கான சான்றிதழும் தந்து சிறப்பித்தது. அது மட்டுமல்லாமல் இப்போது நமது குழுமத்தால் தரப்படும் உயரிய விருதான கவிச்சுடர் விருதையும் பெற்று இருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான படைப்புகளை நம் கவிச்சுடர் எழுதி இருந்தாலும் படைப்பில் அவர் எழுதிய சில படைப்புகளை உங்கள் பார்வைக்கு மீண்டும் படையல் வைக்கிறோம்...

கவிச்சுடர் ரோஷான் ஏ.ஜிப்ரி கவிதையும் அவர் பார்வையும் :
------------------------------------------------------------------------
வாழ்வியலை அதன் செழுமை... துயரம்... இன்பம்...இவை எதுவும் மாறாமல் அப்படியே அச்சு அசலாகப் பந்திவைப்பதில் இக்கவிஞருக்கு நிகர் இவரே.... இவரின் கீழ்க்கோடிட்ட கவிதை இவரது சுயம் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் கவிதையில்

எனது சுயம்
-----------------

உங்களுக்கு தெரிந்திருக்கும்
என்பதெல்லாம்
எனக்கு தெரியாது
எனது முகம்
கனவுகளால் பூசப்பட்டது

அது எனக்கானது மட்டுமே
நான்
பார்த்து பார்த்து
பவுடர் பூசுவேன்
தேவையற்ற முடிகளை
சிரைத்தும் வீசுவேன்
ஒட்ட தெரிந்த எனக்கு
கத்தரிக்க தெரியாதா?

உங்களுடைய கவலை
உங்களிடம் இருக்கட்டும்
என்னுடய கனவு
என்னுடனயே கிடக்கட்டும்
ஆலோசனையென்று யாரும் அத்துமீற வேண்டாம்
அனுதாபம் என்று
ஒத்து ஊதவும் வேண்டாம்
கண்ணாடியாய் இருக்கும்
எதுவும்
கண்ணாடி இல்லை
அதற்கு பின்னாடி இருப்பதை
முன்னாடி காட்டத்தெரியாது
எனக்கு அது தேவையுமில்லை

ஆயாசம் கொள்ளாத
சங்கற்பத்தில்
என் இருப்பு திடமானது
பிடியிறுக என்கை பற்றியவன்
என்னுடன் இருக்கிறான்
காலுன்றிக் கொள்ள சதுப்புகளை சமீபிக்க விரும்பவில்லை
மலைகளை அண்மித்துக் கொண்டிருக்கிறேன்
பூரிப்பில் ஆழ்த்திடும் காலங்களை
தேடிக்கொண்டிருக்கும்
கணப்பொழுது நான்

யாருமற்ற தனித்தலில்
வாழ்வை தேடியலைந்து
இடி,முழக்கங்களோடு
பரஸ்பரமானவன்

தோற்பதாயின்
மரணக் கரங்கள் முன் மட்டுமே
உங்களிடமல்ல....,
என்ற இடத்தில்தான்
இறையாசி பெற்றவனாய்
நான்
எப்போழுதும் நிற்பேன்!

தன் சுயநலத்திற்காக ஒருவரது ஏழ்மையையோ... இயலாமையையோ குத்திப்பார்த்து ரத்தம் சுவைக்கும் மனிதர்களுக்காக இப்படி எழுதியிருப்பார் என நினைக்கத் தோன்றுகிறது. அன்பு செய்யுங்கள்... அன்பை மட்டுமே எவ்வித எதிர்பார்ப்புகளின்றிச் செய்யுங்கள் எனச் சுயம்புவாகவும் கொஞ்சம் சூடாகவும் சொல்லும் இக்கவிதை.

எப்படிப் பரப்பினாயோ
வேர்களை
உன்னை எண்ணிப் பார்த்தாலே
எனக்குள் பூக்காலம்
தொடங்கி விடுகிறது
உன் இதழ் உதிர்த்த
ஈர புன்னகைகளின் முன்
கடல்கள் தாண்டிய தூரம்
கடக்கும் தூரமாகி விட
மனம் ஒரு தும்பியாக
மடி தாவுகிறேன்.....

கடலென்ன தூரம்... காற்றுக்கென்ன வேலி... எத்தனை தடைகளையும் மீறி எண்ண அலைகளுக்கு எங்குள்ளது தடைகள்... ? பூக்காலம் எத்தனை ரம்மியமாயிருக்கிறது இக்கவிதையில்... படிப்பவரும் இக்கவிதையினை முடித்தப் பிறகு ஒரு தும்பியாக உணர்ந்தால் வியப்பேதும் இல்லை....

கதவினை திறக்கும்போது
ஒரு மூலை பூனையாய் ஒளிந்து கொள்வதுபோல்
கதவினை சாத்தும்போது
ஒரு தனிமை பூதமாய் வெளியே வருகிறது
பூட்டை முன்னால் விட்டு
சாவியை பின்னால் வைக்கிறது
பீதியில் உறைய வைக்கும் இரவுகள்

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உழலும் கொடிந்த வாழ்க்கையைச் சொல்லும் இக்கவிதை ஒரு விருதுக்காக எடுக்கப்பட்ட சினிமாவைப் போலத் தோன்றினாலும் அதன் உள்ளர்த்தங்கள் வெகு ஆழமானவை. வெகு சிலரே இக்கவிதையின் ஆழம் உணர்ந்துகொள்ள முடியும். நேர்த்தியான வாசிப்பாளன் ஒருவனாலேயே இக்கவிதையை உணர முடியும்... படித்து முடித்தவுடன் மரணம் நம்மீதும் கவிழ்ந்து கொள்வதைப் போல ஒரு உணர்வு...!!

பிச்சைக்காரன் மட்டுமல்ல,
பஸ்ஸை தவறவிட்ட பயணியும்
படுத்துறங்கி பசியாறும் மடமாகி
தரிப்பிடத்தில் தனித்து நிற்கும்
நிழல் வாகை நிழலில்
சிற்றெறும்பின் யோசனையேனும்
தோன்றாத ஒரு
சீர் யோகி
சிறுநீர் கழித்திருக்கிறான்
சுத்தப் படுத்துவதாயின்
எங்கிருந்து தொடங்குவது
என்ற கேள்வியுடன்
முற்றுப் பெறுகிறது தெரு....

சமகால நிகழ்வுகளைச் சொல்லும் ஒரு கவிதை. எப்படியெல்லாம் நம்மைச் சுத்தம் செய்து கொண்டு நம் சுற்றுப்புறங்களை ஒழித்து அழிக்கிறோம் என்ற அவலங்களைப் பாடியிருக்கிறார். எல்லோரும் விளையாட... தானியங்களை உலர்த்த... நின்று வியாபாரம் செய்ய... பொழுது போக்க என அழகாயிருந்த தெருக்களின் அவலக்கோலத்தை அப்படியே பதிவு செய்திருக்கிறார்...

நிலை
--------
எண்ணங்களால் உயர
என்னதான்
கிளைபரப்பினாலும்
வெட்டி விட்டுப் போகும் இடத்தில்
வேர்கள் எப்போதையும்போல்
வேறுபட்டுத்தான் போகின்றன...

--- என்ற துளிக்கவிதையில் உலகத்தையே அதன் வேருக்குள் அடைத்து விட்டார் தனது வரிகளில்..

அவன் மதுவை
தினமும் குடித்து நடந்தான்
ஆடிப் போனது குடும்பம்!

வன்முறை.
********
மிகச் சாமர்த்தியமாய்
அல்லாமல்....,
மிக சாதாரணமாய்
நடந்து விடுகிறன
கொலைகளும் கூட..

சாட்சிகளற்ற
சந்தடிகளில்
அவர்கள்
ஆக்கி வைத்திருக்கும்
யாழ் அறுந்த
பாழ் நிலத்தில்
பழையபடி!

-- இப்படி சில கவிதைகளில் சமூக சிந்தனைகளையும் ஆங்காங்கே தூவி செல்வது ஒரு எழுத்தாளருக்கு உள்ள பொறுப்பை நமக்கு உணர்த்தியவராக காட்டுகிறார்...

இவரின் கவித்திறமைக்கு சான்றாக இருக்கும் சில கவிதைகளின் தொகுப்பு இதோ:

//
கனவுகளின் வழிப்போக்கன்
-----------------------------------------
ஓய்வுக்கு சிறு ஒதுக்குப்புறம்
கூடவே
ஆயாசம் மிகு
ஆழ்ந்த உறக்கம்
வழமை போலவே அது
வாய்த்து விடுகிறது எனக்கு

கனவுகளை அழைத்தபடி
இரவுகளை நான்
கடந்துகொண்டிருக்கிறேன்
அதுவே பிடித்தும் போனது

சொப்பனங்களில் லயித்தல்
மிக அலாதியான அனுபவம்
வேற்று கிரகமாய்
கிரகித்து வைத்திருக்கும்
விசித்திர உலகது

எவரின் அச்சுறுத்தலுக்கும்
அடி பணியவோ
ஏமாற்றங்களில்
அழுது குனியவோ
தேவையற்ற தேசம் அது

காயங்களை மறந்தும்
கண்டங்களை கடந்தும்
பின்பு வெவ்வேறு பாகங்களுக்கு என
பறந்தும் விடுகிறேன்

ஆச்சரியமாய் இருந்தது
நேற்றிரவு நான் போய் வந்த புலம்
அங்கு
மனிதர்கள் வாழ்ந்தார்கள்
குளிர வைத்து கொட்டும் மழை போல்

மெல்லிய காற்றுடன்
மழையும் முளைத்தது
குடை கொண்டு போகாததால் தெப்பமாய்
நனைந்தும் விட்டேன்
இங்கிருக்கு எந்த முகங்களும் இல்லாத ஊராய் இருந்தது அவ்விடம்

திரும்புகையில்
ஊரில் உள்ளோரை
அழைத்துச் செல்லும்
ஆவலுடன்
விளக்க தேடினேன்
வியர்வையில் குளித்தபடி
அவர்கள் அனைவரும் ஊரில்
செத்துக் கிடந்த குளங்களை அடக்கம் செய்து கொண்டிருந்தார்கள்!
//

//
மெழுகின் கரைதல்!
-----------------------------
உன் குருத்து மணல் சிரிப்புகளுக்காய்
புதைகின்றன என் பொழுதுகளின் காலடிகள்
தனிமை வெளிகடந்த வெம்மைக்குள்
கால மெழுகு கரைகிறது என்னுடன்...,
நினைவுகளின் ஈறுகளுக்குள் அசைபோடப்படுகிறது
பாலியத்தின் பசி
விரதப் பொழுதுகளில்..,
நுரைத்து,நுரைத்து வழிகிறது இளமையின்
மதுக்கோப்பை
சட்டங்களுக்குள் மௌனித்த ஓவியங்களில் ஒன்றாய் என் ஆசைகளையும் ஒருமுகப்படுத்தி புன்னகைக்கும் பாவனையுடன்
காலத்தின் முகச்சுவரில் தொங்கவிட்டிருக்கிறேன்
நிலவைப் போலவே
நினைத்து
என்னையும்
ரசித்து மகிழ்கிறாய்
கிரகித்து நீ
உணரும் கணம் இருண்டு கிடக்கலாம் என் வானம்
அப்போது.......,
பௌர்ணமியாய் என்னுடன் பயணிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை
ஒரு விடிவெள்ளியாய் மின்னியேனும்
கை தாங்கலாய்
அழைத்துச் செல்
அந்திமத் தெருவரை!
//

//

எத்தனைமுறை பெருக்கினாலும்
அறைக்குள் படிந்திருக்கும்
தனிமையை
கூட்டித்தள்ள முடியவில்லை!

//

முகங்களால் அலங்கரிப்பவன்.
*******************
நாற்பதை தாண்டியும்
நரை விழும்வரை உழைத்து
நகலும்,அசலுமாய்
நான் சொந்தமாய்
முகங்களை அலங்கரித்து
கடை வைத்திருக்கிறேன்
**
குழந்தைகளின்
முகங்களோடு இருக்கும்
உறக்கம் தவிர்த்து
ஏனைய எல்லா நேரங்களிலும்
ஏலவிற்பனை கூடமாய்
திறந்தே இருக்கிறது
உங்கள் தேவைக்காய்
**
காதலோடு
காமத்தோடு
கர்வத்தோடு
பாசிச வெறியோடு
பயபக்தி அற்ற ஜதியோடு
மதம் பிடித்தபடி
மண் திருடியபடி
களவாடியபடி
கைக்கூலி கேட்டபடி
விசுவாசம் துறந்தபடி
வேட்டையாட அலைந்தபடி
ஏமாற்றியபடி
எதிலியாய் தொலைந்தபடி என..
**
இவற்றில்
உனக்கு எந்த முகத்தை
தந்துதவலாம் சொல்லு?
ஆனால்
இதில் எது
மனிதனின் முகம் என்று மட்டும்
கேட்டுவிடாதே!
**
அதை இறந்துபோன
மனிதர் ஒருவர்
ஏற்கெனவே வாங்கி சென்று விட்டார்!
//

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்படி பல்லாயிரக்கணக்கான நவீன கவிதைகளை எழுதி இந்த காலத்தில் இவருக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு நவீன இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு உலகத்தரம் வாய்ந்த எழுத்தாளர் இவர் என்பது இவரின் எழுத்துக்களே சொல்லும்...

இந்த இரசனையான எழுத்துக்களின் முன் பிரம்மித்து நிற்கும் படைப்புக் குழுமம் கவிச்சுடர் ரோஷான் ஏ.ஜிப்ரி அவர்களை வாழ்த்தி, வருங்கால இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்று அவரது எழுத்துக்கள் உலகெங்கும் பவனி வரவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறது !!

வாழ்த்துக்கள் கவிச்சுடர் ரோஷான் ஏ.ஜிப்ரி

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

கோ.லீலா


0   959   0  
December 2020

ஷிபா


0   412   0  
October 2023

நீ சு பெருமாள்


0   1358   0  
June 2020