logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் ஆண்டன் பெனி  ஒரு அறிமுகம்
*************************************************************

படைப்பு எனும் இந்த முகநூல் குழுமம் தொடங்கிய நாட்களிருந்து ஒவ்வொரு படைப்பாளியும் தத்தம் பாணிகளில் எழுதி முத்திரை பதித்து வருவது கண்கூடு. அந்த வரிசையில் இந்த மாதம் கவிச்சுடர் பெறும் படைப்பாளி ஆண்டன் பெனி அவர்களைப் பற்றி படைப்பு குழுமத்தை ஆதரித்து வரும் படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்ய அவசியமில்லை என்றாலும் நாள்தோறும் இந்த குடும்பத்தில் இணைந்து வந்துகொண்டிருக்கின்ற புதிய படைப்பாளிகளின் கவனத்துக்காக ஒரு அறிமுகக்கட்டுரை அவசியமாகிறது.

கவிஞர் ஆண்டன் பெனி அவர்கள் தமிழ்நாடு அரசின் ஒரு உயர்பதவி வகிக்கும் ஒரு அதிகாரி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இவர் முக நூல் தவிர பற்பல வலைத்தள இலக்கிய ஏடுகளிலும் தமிழ் நாட்டின் பழம்பெரும் வார இதழ்களிலும் தொடர்ந்து கவிதைகள் படைத்து வருபவர். ஆண்டன் என்கிற மகனின் பெயரையும் பெனி என்கிற மகளின் பெயரையும் சேர்த்து ஆண்டன் பெனி என்கிற புனைப்பெயரில் தற்போது கவிதைகள் படைத்துவரும் இவரின் இயற்பெயர் திரு ரவிக்குமார். ஆண்டன் பெனி என்கிற புனைப்பெயர் தவிர இவர் முன்பு புதிய கோடங்கி என்றும் பட்டினத்தார் என்றும் புனைப்பெயர்களில் இவர் படைத்து வந்த பல கவிதைகள் இலக்கிய வலைத்தளங்களில் பிரபலமானவை.

படைப்பு குடும்பத்தில் மகளதிகாரம் என்கிற பரிசுப்போட்டி நடத்த காரணகர்த்தாவாக விளங்கியவர். இதுவே படைப்பு குழுமத்திகின் முதல் பரிசுப்போட்டியாகவும் இருந்தது. அந்த போட்டிக்கு பிறகு அவர் தொடர்ச்சியாக எழுதி வருகின்ற மகளதிகாரம் கவிதைத் தொடர் இன்று வலைத்தளங்களில் வைரலாகி வாட்சப் என்கிற அலைபேசி தொடர்பு குழுமங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெரிதாக பேசப் பட்டு வருகிறது என்பது எல்லோரும் அறிவர்.

படைப்பில் இவர் சமர்ப்பித்த கவிதைகளில் படைப்பாளி நண்பர்களுக்கு மிகவும் பரிச்சயமான மகளதிகாரக் கவிதைகள் பற்றி கூறும் முன்பு இவர் இயற்றிய மற்ற கவிதைகளைப் பற்றி முதலில் பார்ப்போம். பள்ளிப்பருவ நாட்களின் நினைவலைகளில் என்றென்றும் அசைபோட வைக்கும் முதல்காதல் பற்றி இவரின் ஒரு கவிதையை வாசிக்கும்போது படைப்பாளிகள் தங்களின் மலரும் நினைவுகளுக்கு சென்று வர செய்து விடும் இந்த கவிதையை பாருங்கள்:-

என் அறையெங்கும் இறைந்துகிடக்கிறாள்...
****************************************************************
ஊரிலிருந்து முத்துராசு
என் விலாசம் தேடி வந்திருந்தான்.
பள்ளியின் வேப்பங்கன்று
பெரிய மரமாக வளர்ந்துவிட்டதாம்.
பிரம்பெடுத்து ஓடஓட விரட்டிய
எட்டாம் வகுப்பு சார் போன வாரம்
சிறு விபத்தொன்றில்
படுத்த படுக்கையாகிவிட்டாராம்.
நன்கொடையில் புதிதாகக் கட்டப்பட்ட
மூன்றாம் வகுப்பு கட்டிடத்தின் கல்வெட்டில்
என் பெயரை முதல்ல போடவச்சதே இவன்தானாம்.
புதுப்புது சாரும் புதுப்புது டீச்சருமா
உள்ளூரிலேயே இருக்கும் அவனை
வேற்றாளாகப் பார்ப்பதாகவும்.
சிறுபிள்ளையின் குதூகலத்தில்
விடிய விடிய
அவனே கொண்டு வந்திருந்த
கருப்பட்டி மிட்டாய் தீரும்வரை பேசியவன்,
ஒரு நீளப் பெருமூச்சில் தன்னை
ஆசுவாசப்படுத்திக்கொண்டு...
அவனோட முத்துமாரி வாக்கப்பட்டுப்போன இடத்தில்
வாழப்பிடிக்காம வந்துவிட்டதாகச் சொன்னபோது
கண்கலங்கியிருந்தான்.
ஊருக்குத் திரும்பும் போது
சுற்றிலும் எச்சரிக்கையுடன் பார்த்துவிட்டு
சன்னமான குரலில்
ஒம் மல்லிகாதான் எங்கஇருக்கான்னு
இதுவரை தெரியலடா… எனச்சொல்லி
அழத்தெரியாத எனக்கு
என் நினைவெங்கும் மல்லிகாவை
இறைத்துவிட்டுப் போயிருந்தான்.

மானிடர் மத்தியில் நித்தம் செத்துக் கொண்டிருக்கும் மனிதம்...நான் எனது என்கிற சுயநலம் பொங்கி நிற்கும் இந்த காலத்துக்கேற்ற ஒரு கவிதையை ஒரு விபத்தில் இறக்கும் நாயின் அவல நிகழ்வாக சித்தரிக்கும் இவரின் கவிதை சுயநல மனிதர்கள் முகத்தில் வீசப்படும் ஒரு அமில வீச்சாய் வந்து தெறிக்கிறது:-

பூத்துக் குலுங்கும் யோசனை மரங்கள்
**************************************************************
வாகனம் ஒன்றில் அடிபட்டு
நாயொன்று துடிதுடித்தது.
அடையாளம் தெரிந்தும்
அடிபட்ட நாயால்
மோதிய வாகனத்தை
அடையாளம் காட்ட முடியவில்லை.
நாயின் வலிமிகுந்த
குரைத்தல் கேட்டு
நாய்களின் பெருங்கூட்டம் கூடிற்று.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக
குரைக்கத் துவங்கின.
முதலில் குரைத்த நாய்
மோதிய வாகனத்தின் எண் கேட்டது.
இன்னொன்று போக்குவரத்தைக் குறை கூறியது.
மற்றொன்று பார்த்து வந்திருக்கலாமே என்று யோசனை சொன்னது.
வேறொன்று முன்னம் நடந்த
இதுபோன்றதொரு விபத்தை விவரித்தது.
மீத நாய்களெல்லாம்
புதிதாக என்ன சொல்லலாம் என்று
யோசனையில் இருந்த நிலையில் தான்
அடிப்பட்ட நாயின் உயிர் பிரிந்தது.
அது தெரிந்ததும் உடன் கலையத் தொடங்கின
எதெற்காகவோ கூடின நாய்களெல்லாம்...
அவைகளுக்குத்தான் வேலையுமில்லை,
நிற்க நேரமுமில்லையே.

சமுதாய அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மனிதனை கதாநாயகனாக சித்தரிக்கும் இந்தியக் கலைகளின் வெளிப்பாடுகள் தமிழ் நாட்டுக்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் சூழல்களை நிர்ணயிப்பதே திரைப்பட மாயைகள்தாம் என்பது வரலாறு. அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதென்பது வெறும் இரண்டரை மணிநேர இருட்டில் காணும் கனவாகவே ஒரு சாதாரண குடிமகனுக்கு இன்றும் இருந்து வருகிறது என்பதை கீழே காணும் அருமையான கவிதை மூலம் சித்தரிக்கிறார்...

அநீதிக்கு எதிராக முத்துராசுடன் இப்படியாக நாமும்
************************************************************************
தவறவிட்ட பேருந்துக்கு
அடுத்த பேருந்து வரும் வரை
ஒரு குளிர்சாதன திரையரங்கில்
காத்திருப்பதென உத்தேசம் முத்துராசுவுக்கு.
விளக்கு அணைக்கப்பட்டதும் உள்ளுர் விளம்பரங்களின்
படையெடுப்பினைத் தொடர்ந்து
அகன்ற திரையொன்றில் சினிமா காட்டினார்கள்.
கதாநாயகனவன் இடைவேளை வரை
ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளையாக
உறவுகளோடும் கதாநாயகியோடும்
ஆடி ஓடிக்கழித்தான்.
ஒரு முக்கியத் திருப்பத்தில்
விளக்குகள் ஔிர்ந்ததும் இடைவேளை வந்தது.
கேண்டீனில்
காற்றுப் பொட்டலங்களில்
விதிக்கப்பட்டிருந்த விலைகளின்
அநீதியைத் தட்டிக்கேட்க முத்துராசு பொங்கியபோது
அப்போது யாரும் அவனுக்குத் துணை வரவில்லை.
கதாநாயகன் தன் வழக்கமாக,
இடைவேளைக்குப் பின்னரே
அநீதியைக் கண்டு பொங்கினான்.
கூடுதல் ஒலியமைப்பின் கதாநாயகனின்
அநீதிக்கெதிரான அதிரும் சத்தம் கேட்டதுமே
கேண்டீன் கதவுகள் மூடத்துவங்கின.
கதாநாயகன் துணையுடன்
கதவைத்திறந்து பார்த்த முத்துராசுவுக்கு
அந்தப் பயம் பிடித்திருந்தது.

அதே முத்துராசு என்கிற பெயரில் மற்றுமொரு சமூக அவலமான ஒதுக்கப்பட்ட சாதிகள் என்கிற பெயரில் ஆண்டாண்டுகாலமாக இழைக்கப்படும் அநீதிகளை ஒரு எளிய நிகழ்வுக் கவிதையாய் தருகிறார்...

மஞ்சளாற்றுத் துயரத்தில் முத்துராசு மகன்
*****************************************************************
காலஞ்சென்ற முத்துராசு மகன்
பள்ளியில் வாந்தியெடுத்துவிட்டதால்
வகுப்பாசிரியர் இரண்டு மாணவர்களின் துணையோடு
அவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.
என்னத்த தின்னு தொலைச்ச எடுபட்ட பயலே?
பாதியில் வீடுவந்த மகனை சின்னத்தாயி கடிந்தாள்.
‘ஸ்கூல் பாத்ரூம்ல ஒன்னுக்கு போனேம்மா
நாத்தம் கொடல பொறட்டிடுச்சி
நானென்ன செய்ய?’ என்ற மகனிடம் கேட்டாள்,
கழுவத்தான் வேண்டாம்,
பெஞ்ச மூத்துரத்துல
ஒரு போணி தண்ணி ஊத்துறதுக்கு,
உங்கப்பன் செத்தபின்னாடி
ஆளில்லையா அங்க?
---------------------------------------------------------
அறிஞர் அண்ணாவின் செவ்வாழை சிறுகதையை நினைவுபடுத்தும் உழைக்கும் வறியவன் உழைப்பால் விளையும் பலன்கள் அவன் குடும்பத்தை அடைவதில்லை என்கிற சமுதாய அவலத்தை வலிமிகு வரிகளால் விவரிக்கிறது கீழே காணும் பலூன்காரன் கவிதை:-

பலூன்காரனுக்கு மூன்று குழந்தைகள்
************************************************************
பலூன்கள் வலுவிழந்து
காற்று வெளியேறும் முன்னமே
வெடிக்க வைத்தும்,
நூலறுத்து பறக்கவிட்டும்,
தேய்த்து ஒலியெழுப்பியும்,
விளையாடிக் கொள்ளத்
தெரிந்திருக்கிறது குழந்தைகளுக்கு.
விற்பனையாகாது வீடு திரும்பும் பலூன்களுக்கு
உள்ளுக்குள் முட்டும் காற்றினை இறக்கிவிட்டு
சற்றே ஓய்ந்து கொள்ளத் தெரிவதில்லை.
பலூன் ஒன்றினைத் தொட்டுவிடத் தவிக்கும்
பலூன்காரன் குழந்தைகளின்
ஏக்கப் பெருமூச்சின் வெளி அழுத்தம் உணர்ந்ததுமே
ஒன்றிரண்டு பலூன்கள் இரவோடு இரவாக
வெடித்துச் சிதறி தாங்களாகவே
மாய்த்துக் கொள்கின்றன.
காலையில் உடைந்துகிடக்கும்
பலூன் சதையில் சிறுமுட்டை செய்து
தலைக்குப் பதில் நெற்றியில்
விதியென அடித்துக் கொள்கிறார்கள்
அவன் குழந்தைகள்.

--------------------------------------------------

புவியெங்கும் பெண்மையின் பெருமை எழுத்துக்களில் மட்டுமே பெரிதாக பேசப்படுகின்ற இந்தக் காலத்தில்தான் மிருக வெறி பிடித்த காமுகர்களின் வன்புணர்வுக் கொடுமைகளும் பொது இடங்களில் கூட கண்கூடாக நடக்கும் அவலங்களை ஒரு கவிதையாக கொடுத்திருக்கிறார் நமது கவிச்சுடர் :-

இருள்சூழ் வேட்டை
***************************
அவன் கொழுத்த செம்மறியாடு போலிருந்தான்
தன் ஆந்தைக் கண்களை வெளியெங்கும்
அகோரப் பசியின்பொருட்டு மேயவிட்டிருந்தான்
மேலாடையைத் திறந்துவிட்டு
காட்டெருமையின் திமிலையொத்த
தன் புஜங்களில் மூக்கணாங்கயிறாகத் தொங்கும்
தங்கச்செயினை வறண்டு கிடந்த அந்த இருளிலும்
வெளிச்சமிட்டிருந்தான்.
ஒரு முதிர்ந்த பூம்பூம் மாடாக அவன் தலை
நிலையில்லாது ஆடிக்கொண்டிருந்தது.
எச்சிலும் தீர்ந்தபின் குரல்வளையை
தண்ணீர்விட்டு நனைத்துக் கொண்டான்.
நீலகிரியின் மூடிய பனிமூட்டத்தை விலக்கி
வெளிப்படும் சருகுமான் போல்
இரயில் பெட்டிக்குள் ஒய்யாரமாக நுழைந்த அவள்
வேட்டைக்கு அவன் விரித்து வைத்திருந்த
முப்பின்னல் நரம்பு வலையை உணர்ந்ததும்
இரயில் பூச்சியாக தன்னைத் தானே சுற்றிக்கொண்டாள்.
கடவாயின் ஓரங்களில் வளர்ந்திருந்த
அவன் கோரைப்பற்கள்
வெகுநேரக் காத்திருப்புக்குப் பிறகே
உள்ளிழுத்துக் கொண்டன.

கவிச்சுடர் ஆண்டன் பெனி அவர்களின் மகளதிகாரக் கவிதைகள் பெருவாரியாகப் பாராட்டுக்களைக் குவித்துக் கொண்டிருக்கும் வேளையிலும் அவரது மகன் பற்றிய கவிதைகளும் வாசகர்களால் பாராட்டப்படுவது படைப்பு நண்பர்கள அறிந்ததே. அப்படி ஒரு மகன் கவிதையையும் கீழே தருகிறோம் :-

மகன் நிமித்தம்
***********************
மகன் என் தோள் மீதேறி
தன் இரு கைகளையும் தூக்கி நிற்கையில்..
வானத்தில் அவன் விரல் நுனித் தடம்..!
***
மகனுக்கு
தலை வாருவதைக் கூடத் தவிர்க்கிறேன்...
அவனுள் என்னைத் திணித்து விடாதிருக்க..!
***
என் தந்தையின் தவறுகள்
என நினைப்பதை
நான் மகனுக்குச் செய்யாமல் இருக்கிறேன்
ஒரு தந்தை மகனுக்காற்றும் உதவியாக.
***
மகனை நெஞ்சோடு
இருத்திப் பழகிய பின்
மருத்துவப் பரிசோதனை
தேவையற்றதாகிவிடுகிறது…
***
மழை நாட்களில்
குடும்பத்தையே
காகிதக் கப்பலில் ஏற்றி
வீட்டுக் கரையிலிருந்து
கை காட்டுகிறான் மகன்…

நாதியற்றுப் போன நம் நாட்டு நதிகளின் நிலைமையை பற்றி இவர் எழுதிய ஒரு கவிதையை அவர் முடித்து வைக்கும் வரிகள் வலி(மை)மிக்கவை:-

இப்படியாக வாழ்ந்தோடிய
என் ஞாபக நதியொன்றின்
நினைவுகளின் மீதும்
உருண்டு திரிகின்றன
வாகனங்களின் காற்றடித்த உருளைகள்
இப்போதும் மாதம் முப்போதும்.

மகளதிகாரக் கவிஞரின் மகளதிகாரத் தொடர் கவிதைகளின் சிலவரிகளை இங்கே மீண்டும் உங்களின் பார்வைக்காக சமர்ப்பிக்காவிட்டால் இந்த கட்டுரை முடிவுபெறாது:-

கண்ணாமூச்சி விளையாட்டில்
நான் அப்பா என்பதால்
தேடிக்கொண்டேயிருப்பேன்
அவள் மகள் என்பதால்
தானாகவே வந்து கண்படுவாள்.

ஒற்றைமணிக் கொலுசுதான்
மகள் விளையாட விளையாட
கோவில் பிரகாரமாகிவிடுகிறது
வீடு.

அப்பா எனக்கும்
தலைவாரிப் பூச்சூட்டிப்
பொட்டிட்டுப் போகிறாள்
அத் தருணத்திலிருந்து
நான் தாயுமானவன்.

என்ன பெயர் கொண்டு அழைத்தாலும்
திரும்பிப் பார்க்கிறாள்
அவளுக்கென்று வைத்தபெயரோ
அப்படியே இருக்கிறது.

கோபம் என்றால்
முட்டிக்குள் முகம் புதைத்து
மௌனமாகிறாள்
மகிழ்ச்சியென்றால்
கைகளுக்குள் முகம் புதைத்து
அமைதியாகிறாள்
இவ்வளவுதானே தியானம் என்பதும்.

ரயில் சாளரக் கம்பிகளில்
தொக்கி நிற்கும்
சாரல் மழைத்துளிகளை
மகள் சேகரிக்கத் துவங்குகியதும்
விரும்பிப் பெய்கிறது
ஒரு பெருமழை.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்… என்று துவங்கிய
இன்றைய கதையில் இருந்த ஒரு பொய்க்காக
குட்டி இளவரசி கோபத்தில் இருக்கிறாள்.
ஒரு நாட்டுல ஒரு ராஜா எனத்திருத்தம் செய்து
அவள் கோபம் குறையக் காத்திருக்கிறேன்.

அவள் காலடித் தடங்களைக்
கவர்ந்து செல்லவே
பெய்யத் துவங்குகிறது
மீண்டுமொரு சாரல் மழை.

வீட்டில் பகல் முழுதும் ஒரு கலவரக்காரியின் ஆரவார நடைபோடும் மகளின் செல்லக் கலவரங்களை அடக்க முடியாத காவல்காரனாக திகழ்கிறார் இக்கவிஞர். விரல்நுனியில் மருந்து தேய்த்து அமுதமேந்தி வரும் பூமியில் பிறப்பெடுக்கும் மகளை ஒரு தேவதையாகப் பார்க்கும் இக்கவிஞரின் ஆளுமையை அடக்க பிரம்பேந்திய ஆசிரியையாக அந்தச் செல்ல மகள் வேடமிடுவதாக குற்றமும் சாட்டுகின்றார் இந்த அப்பா கவிஞர். அவரது வாரத்தில் மகளோடு விளையாடக் கிடைக்கும் ஞாயிறை எட்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று எண்ணிக்கையை கூட்டுகின்றார். சிரிப்பின் ரகசியங்களை தன்னோடு பகிர்ந்து கொள்ளும் மகள் தனது தேம்பலுக்கான காரணத்தை மட்டும் தன தோழிமூலம் அறிவிப்பது ஏனென்று தெரியாமல் திகைத்து நிற்கின்றார் தந்தையான இக்கவிஞர். மகளின் பிஞ்சுகால்தடங்கள் விட்டுச்செல்லும் முத்தத்துளிகளை குனித்து அள்ளும்போது சுட்டபழத்தையும் சுடாத பழத்தையும் அள்ளுகின்ற அவ்வைபிராட்டியாக மாறும் இந்த கவிஞரின் மகளதிகார முத்துக்கள் விரைவில் ஒரு தொகுப்பாக வெளிவரக் காத்திருக்கிறது.

இவருடைய தனித்தன்மை வாய்ந்த கவிநடையும் சொற்களின் சேர்மானமும் பல பாடுபொருள்களில் பல கவிஞர்களை மிரள வைத்துள்ளன... இவரது பல படைப்புகள் ஆனந்த விகடன் போன்ற பல முன்னனணி பத்திரிக்கைகளிலும் வெளிவந்திருப்பது இவர் கவித்துவத்திற்கு சான்றுகளாகும். மேலும் பாவலர் அறிவுமதி அவர்கள் தமிழ் மிக சிறந்த ஐம்பது கவிஞர்களின் கவிதைகளை தேர்வு செய்து வெளியிட்ட கவிதை நூலில் இவர் கவிதை இடம்பெற்றது இவரின் சாதனைகளின் ஒரு மகுடமும் மைல்கல்லுமே ஆகும்.

இவரது கவித்துவத்திற்கும் பாடுபொருளின் பார்வைக்கும் ஒரு படைப்பை பார்ப்போம்...

தனிமையின் இரவுகள்
*******************************
வெளிக்காற்றினை முற்றிலும் தடைசெய்த
குளிரூட்டப்பட்ட அறைக்குள்
வௌவால்களையொத்த திரைச்சீலைகள்
தலைகீழாகப் படபடக்கிறது.
ஒற்றைக்கண் ஆந்தையின்
ஔியூட்டப்பட்ட விழி
மஞ்சள் நிறத்தில் இரவுவிளக்காக
என்னை உற்றுநோக்கியபடியே இருக்கிறது.
கண்ணாடிகள் பூத்த
மேல்சுற்று அலங்கார வளைவுகளில்
வெளிமரங்களின்
நிழல் பாவைக்கூத்தில்
இராவண வதைப்படலங்கள்
காட்சியாகின்றன.
வனாந்திரத்தின் கோரக் காட்சிகளிலிருந்து
என்னை விடுவிக்க
தலையணைக்குள் முகம் புதைத்தால்
உன் விரகதாபத்தின்
சிற்றிழைகளின் வழிப்பாயும்
உயரழுத்த மின்சாரம்
இன்னுமாய் வதைக்கிறது.
உன்னிலிருந்து என்னை வலிய விடுவித்து
வனாந்திரத்திற்கே மீண்டும் வந்து
இரவுக்கே என்னைத் திண்ணக் கொடுக்கிறேன்
--------------------------------------

வெட்கச்சாட்டு திருமணச்சாரி என்று இவர்தம் கவிதைகளில் வெளிப்படும் புதுமையான சொற்களால் விளையாடியும் வாரத்துக்கு எட்டுநாட்கள் என்று எண்ணிக்கை கற்பித்தும் குட் நைட் என்பது ஆண்பால் என்றும் புதுமையான சிந்தனைகளையால் கவி புனையும் இக்கவிஞரின் எழுத்துப்பணிகள் மென்மேலும் வளர்ந்து பூத்துக் குலுங்க கவிச்சுடர் விருதினை அளித்து பெருமைப் படுவதில் பெருமிதம் கொள்கிறது படைப்புக் குழுமம்.

இந்த கம்பீரமான எழுத்துக்களின் முன் பிரம்மித்து நிற்கும் படைப்புக் குழுமம் கவிச்சுடர் ஆண்டன் பெனி அவர்கள் வருங்கால இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்று அவரது எழுத்துக்கள் உலகெங்கும் பவனி வரவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறது !!

வாழ்த்துக்கள் கவிச்சுடர் ஆண்டன் பெனி

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

சிந்தா மதார்


0   1452   0  
November 2021

போஸ் பிரபு


0   996   0  
August 2020

கு ப சிவபாலன்


0   1712   0  
April 2019

ஆத்மாஜீவ்


0   312   0  
October 2023