logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் அன்பில் பிரியன்  ஒரு அறிமுகம்
********************************************************************
அன்பில் பிரியன் இவர் - சர்ப்பத்தின் காதலன் அல்லது சர்ப்பம் இவரின் காதலி என்று கூட சொல்லலாம். இவரின் கவிதைகளில் அதிக பட்சம் சர்ப்த்தையும் ஆதாம்,ஏவாளின் காதலையும் கொண்டாடி கொண்டிருக்கும்.

காதல்கவிதை,பொதுகவிதை என்று இரண்டு விதத்திலும் மிக அற்புதமாக கவிதை படைக்கும் திறன் மிக்கவர். இவரின் கவிதைகள் ஒளிதன்னை மிக்கவை போலவே உணரலாம் எளிதில் எல்லோரையுமே ஊடுருவும் சக்திக்கொண்டவை.

ஒரு நவீன ஓவியத்தை வார்த்தையில் அழகாக வரைய கூடியவர். சில நாட்களுக்கு முன்பு இவர் எழுதிய விலா எலும்பு கவிதை அத்தனை சிறப்பாக அமைத்திருந்தது. ஒரு நாள் காதல்,ஒரு நாள் சமூகமென்று இவரின் கவிதை மாறி மாறி பன்முகத்தையே சாயலாக உடுத்திஇருக்கிறது. இவர் நவம்பர் 2016ல் சிறந்த படைப்பாளி என்ற விருதை படைப்பு குழுமத்தில் பெற்று இருப்பது குறிப்பிட தக்கது.

படைப்பாளி அன்பில் பிரியன் செப் 29.1985ல் பிறந்தவர். வயது வைத்து பார்க்கும்போது இளமையாக தெரிந்தாலும் அவரின் எழுத்துக்கள் ஒரு வளர்ந்த / கைதேர்ந்த ஒரு கவிஞரின் எழுத்தாகவே இருக்கிறது.
இவரின் கவிதைகள் சிலவற்றை உங்கள் பார்வைக்காக மீண்டும் சமர்ப்பிக்கிறோம்:-

தன்னை கடந்து போகும் அத்தனை நிகழ்வுகளையும் எதார்ததனமான பார்வையில் வார்த்தையின் கடைசி ஆழம் வரை சென்று வடிக்கட்டி அதையும் மிக எளிமையாய் தொடுத்து எழுத கூடும் திறன் பெற்றவர். அப்படிப்பட்ட வீரியம் கலந்த கவிதை தான் இந்த ஒருசயனைடு குப்பியின் படைப்பு.

//
நெடுஞ்சாலையில் படிமமான நாயின்மேல்
உன் வாகனத்தை ஏற்றாதே
லொள் லொள் என குரைத்துவிட்டு
மறுபடியும் துயில போகும்

பிளாட்பார்மில் மரித்தவனின் உதட்டில் மொய்க்கின்ற ஈக்கள் மாறி அமர்கையில்
மெல்லியதாய் புன்னகைக்கும்
அந்த முகத்தினை பாரேன்

ஞாயிறு கசாப்பு கடை ஆட்டின் கண்கள்
என் பூச்செடிஒயர்கூடையின்
பசுமையையே பார்க்கிறது
அது மேய்வதற்குள் கறிக்கடையிலிருந்து
திங்கட்கிழமைக்குள் நகர்ந்துவிட வேண்டும்

ஆதிக்கத்தால் குதறப்பட்ட யுவதியின்
கசியும் யோனியை ஒரு முனையால் மூடி
மறுமுனையால் மார்பை மறைக்க பார்க்கிறது
விசும்பும் துப்பட்டா

ஆன்மா ஓய்ந்த பின்னும்
ஏதோ ஒன்றினால் மெய்யில் இயக்கம்
நிகழ்கிறதா என்ன

சாம்பல் தடவுகையில் உம்மென இருந்து
கொதிக்கும்சட்டிக்குள் வந்தவுடன் துள்ளும்
விறால் மீன்
என் நாவினில் கரைவதை பார்க்கிறாய்

சில நொடிகளுக்கு முன்
இதில் கரைந்த சயனைடு குப்பியை
உனக்கு தெரியாதுதானே..
//

ஒரு விலா எலும்பைஉருவி ஒலிஅதிர படைக்கப்பட்ட அற்புத கவிதை. மொழியே நினைத்தாலும் இவரிடம் இருந்து கவிதை திறமையை பிரிக்க முடியாது என சவால் விடுவது போல் இருக்கிறது.

//
என் விலா எலும்புகளிலிருந்து
உனை உருவுகையில் எழும்பிய
சுருக்கென்ற
வலி
நீள்கிறது
நீளட்டும்
அவ்வலியை சுகிக்கதானே
நாம்
கருஈரம் சொட்டும்
பிறந்த கன்றுகுட்டிகளாக
காத்திருந்தோம்
பால்வீதியின் கருவறைக்குள்
மாம்ச ருசியே
உயிரின் இலைகளின் மேல்
நீ சொட்டுகையில்
உன் பச்சை கவிச்சி
நாசியில் தெறிக்கும்
வாசனை திரவியமாகி
நுரையீரல் கிளைக்களுக்குள்
கிறக்கமாய் சுழல்கிறது
என் நிணநீர் நிரப்பிய
உன் எலும்புமஜ்ஜை குழிகளை
முத்தங்களின் கோழை
பசையாகி மூடுகிறது
பௌர்ணமியின் வசியமிடும் மஞ்சள்
பளபள சாக்லெட் கவராக
ஒரே நேரத்தில்
நம் இதயங்களை சுற்றுகையில்
கெட்டிய தேன் தித்திப்பாய்
நமை நாமே சுவைத்துகொண்டோம்
நீ கண்மூடும் வேளையில்
கழுத்து நரம்புகளிலிருந்து
பெருகும் சூடான இரத்தமாய்
உன் கண்களில் மேல் விழுவேன்
மறுகணமே நீ உயிர்த்தெழுந்து
உன் நெஞ்சுஎலும்புக்குள்
தேவனால்கூட பிரிக்க முடியாதவாறு
எனை ஆணியாக்கி ஓங்கி அறைவாய்
பெருங்காதலின் ஒலி அதிர அதிர
//

மழை வந்ததும் கொட்டும் அருவியைப் போல
கை தட்டியதும் உடனே வரும் ஒரு ஓசையைப்போல
கேட்டவுடன் எழுதி தரும் இசைக்கு மெட்டுக்கு எழுதும் ஒரு பாட்டைப்போல
இவரின் கவிதையும் இப்போதைக்குரிய கால கட்டத்தில் சுடச்ச்சுட எழுதியிருக்கிறார் .

//
உள்ளே வைத்து தைக்கப்பட்ட
அறுவைச்சிகிச்சை கத்தரி
ஒவ்வொரு உறுப்பையும்
கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக்கொண்டு இருக்கலாம்
நதியை வன்புணர்ந்த
டெண்டரினுடைய குறியின் மேல்
நெளிவது என்ன
மணலலான புழுதானே?
மலையை விழுங்கும் கிரஷரினுடைய
கிட்னிகுழாயை அடைத்து கிழிக்கிறது
கூரிய ஜல்லிக்கல் ஒன்று
பிளாஸ்டிக் அரிசிகள்
தொண்டையில் நுழைகையில்
உருகி உருகி
தொண்டை தீயும் துர்வாடைக்கு
தட்டே தன் மூக்கை பொத்திக்கொள்கிறது
மலடான விளை நிலங்களில்
தோண்ட தோண்ட எழும்பும்
மண்டை ஒடுகளில்
குழந்தையின் மண்டை ஒடுகளுடைய
பற்களில் நிழலாடுவது எது
ஒரு வாய் சோற்றுக்கான தவிப்பா அல்லது
ஒரு குவளை நீருக்கான தாகமா?
வீசும் காற்றில்
முழுமையாய் விஷம் பரவி முடிவதற்குள்
முத்தங்களை மீதமாக்காதீர்கள்
நண்பர்களே
குறிப்பாக குழந்தைகளிடம்...
//

பறவையின் சிறகில் கவிதை பறப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல
அதுவும் நூறு பறவைகள் ஒரே நேரத்தில் கவிதைகளை சுமந்து பறக்கசெய்தால் மயிலிறகே ஆனாலும் எடை கூடினால்அச்சாணி முறிய தானே செய்யும் என்ற பழமொழிக்கு ஏற்ப இங்கு பறக்க விடுகிறார் ஒரு பறவையின் நினைவுக் கூட்டை

//
எல்லாவற்றின் மீதும்
அமர்ந்து அமர்ந்து சலித்த
நூறு பறவைகள்
ஒரே நேரத்தில்
என் மீது அமர்கின்றன
அமர்ந்திருந்த பறவைகள்
ஏதோ யோசனை வந்ததாய்
ஒரே நேரத்தில்
விர்ரென்று பறக்கையில்
கூடவே நானும் பறக்கிறேன்
அவற்றின் பாதநகங்களில்
என் சட்டையின்காலர் தொங்கியபடியே
இதை ஆச்சர்ய கண்களால்
பார்த்துகொண்டிருந்த உன் மீது
இப்போது
ஒரே நேரத்தில் அமர்கின்றன
வேறு நூறு பறவைகள்
அவசர அவசரமாய்
நீயும் சட்டையை கழற்ற பார்த்தாய்
தப்பிக்கலாமென்று நினைத்தாய்
ஐயோ பாவம்
ம் ம் உன் தலையை தாழ்த்து
மேகத்தின் மீது பட போகிறது...
//

//
ஒரு பறவையின் கனவில்
அப்படி என்னதான் இருக்கும்
சதா இதே யோசனைதான் எனக்கு
ஓடும்போதும்
தலைகீழான ஆசானத்தின்போதும்
கவிதை எழுதும்போதும்
கோல்ப் விளையாடும் போதும்
ஒரு ஜோக்கிற்கு சிரித்த உடனேயும்
போகத்தில் கிளர்ச்சியுறும்போதும்
ஏன்
ஒரு கனவுகாணும்போதும் கூட
சதா இதே யோசனைதான் எனக்கு
ஆழ் அமைதி ததும்பிய ஒரு இரவில்
துயிலில் ஆழ்ந்த
ஒரு பறவையினுடைய
கனவின் உள்ளே இறங்கி பின்னர்
மெதுவாகவே நடக்கிறேன்
பறவையின் உறக்கம் கலையாதபடி
பறவையின் கனவு
அவ்வளவு பெரிய வெளியாக
விரிந்து கொண்டே செல்கிறது
அது இதுவரை உதிர்த்த இறகுகளை
வழியேர பொறுக்கிக் கொண்டே
செல்கிறேன்
அது இதுவரை அமர்ந்த
கிளைகளின் நிழல்கள்
என் குறுக்கே வந்து
காற்றில் அசைந்தபடியே
நடனமாடுகின்றன
அது இதுவரை உண்டு எச்சமிட்டதில்
விருட்சமான மரங்களின் வேர்கள்
நான் நடக்க முடியாதவாறு
என் கால்களை பிரியமாய்
பின்னிக் கொள்கின்றன
அது இதுவரை கூடுகட்டி வசித்து பின்னர் வெட்டப்பட்ட
மரங்கள் தலைவிரிகோலமாய்
பறவையின் மடியில் படுத்தபடியே
அழுதுக் கொண்டிருக்கின்றன
அது இதுவரை ருசித்த வானம்தான்
கனவின் உள்ளேயும் வானமாய்
அது இதுவரை தொட்டு பார்க்க
ஆசைப்பட்ட முகில்கள் அதனோடு
காலாற நடந்தபடியே உலா போகின்றன
அது இதுவரை ருசித்த பழங்களின்
வாசனை என் நாசியை மூச்சடைய
வைக்கிறது
ஒரு பறவையின் கனவில்
அப்படி என்னதான் இல்லை
எல்லாமிருக்கும் பறவையின் கனவில் ஏதோ ஒன்று குறைகிறதென்று
உள்ளே கொண்டு சென்றேன்
ஒரு கூண்டை
பதற்றத்திலும் துயரத்திலும்
உடைந்து போன பறவை
வேகமாக தரையிறங்கியது
மின்சார கம்பிகளை நோக்கியபடி
அவ்வளவு வேகமாய்
தரையிறங்கிய பறவை
தலைகீழாக தொங்கி முடிகிறது.....
//

ஒரு சர்ப்பத்திடமிருந்து விஷம் இல்லாத கவிதையை எப்படி தேடுவது?
அல்லது நல்ல பாம்பு என பெயர் வைத்தாலும் விசமில்லாத சர்ப்பத்தை எங்கே தேடுவது?
என ஞான திருஷ்டிக்கள் பற்றி நாம் ஆராய்ந்து கொண்டிருந்தாலும் அந்த பாம்பையே(சர்ப்பத்தையே) காதலித்து கவிதை மூலமாக அன்பு செலுத்தும் படைப்பாளி அன்பில் பிரியனைக் கண்டு வியப்பின் உச்சத்திற்கே சென்று விட்டோம்.

//
சர்ப்ப கவிதை :
---------------------
கனவிற்குள் வந்த பிராய்டிடம்
நாற்கலியையும்
கோப்பை தேநீரையும் அளித்து
கனவையும் சர்ப்பத்தையும் பற்றிய
சுவாரசிய உரையாடலை தொடங்குகிறேன்
என் அறைக்குள் ரகசியமாய் புகுந்து
சதைபொந்தான என் காதிற்குள் நுழைகிறது
சினையுற்ற சர்ப்பமொன்று
சட்டென பிராய்டு ஏதோ அசம்பாவிதம்
நிகழ்வுற்றதை அறிந்து
நீ இக்கனவிலிருந்து வெளியேறு வெளியேறு
நனவிற்குள் போ என
என்னை அவசரப்படுத்துகிறார்
விழிகள் திறந்து நனவிற்குள்
நான் வருவதற்கும்
அச்சர்ப்பத்தின் வாலின் நுனி
என் காதினுள் முழுமையாய் மறைவதற்கும்
சரியாக இருந்தது
அவ்வளவுதான் அன்றிலிருந்து
அச்சர்ப்பம் எங்கேதான் இருக்கிறதென
எங்கேதான் போனதென
கண்டறியவே முடியவில்லை
எதேச்சையாக ஒரு நாள்
கண்ணாடியில் தலைசீவுகையில்
மூக்கினுள்ளேயிருந்து
ஒரு நாக்கு எட்டி பார்த்தபோதுதான் தெரிந்தது
சர்ப்பம் என் மூக்கிற்கு அருகிலிருந்தது
புணர்ச்சியின்போது என்னுள்ளிருந்து
உஸ் உஸ் சத்தம் கேட்கிறதென
என் காதலி நடுங்கும் குரலால் சொன்னதுபோனதுதான்
உள்ளிருக்கும் சர்ப்பம்
காமத்தால் நிரம்பியிருந்ததை அறிந்தேன்
ஓர் அடைமழைஇரவில்
முட்டைகள் உடையும் சத்தம் கேட்டு
பயத்தோடு கண்விழித்தேன்
ஆம் சினையுற்ற சர்ப்பத்திலிருந்து
சின்னஞ்சிறு பாம்புகுட்டிகள் வெளியேறி
குருதியில் தத்திதத்தி நெளிகின்றன
புழுக்கம் பிசுபிசுக்கும் ஒரு நிசியில்
தெருவில் யாரோ ஒரு நாடோடியின்
மகுடியொசை கேட்கிறது
என் காதின் வழியே பொத் பொத்தென
தரையில் விழுந்து வெளியேறும்
தாய்சர்ப்பத்தையும் அதன் குட்டிகளையும்
பின்தொடர்ந்து போகிறேன்
மகுடிஒசையின் பின்னாலே போகும்
அச்சர்ப்பத்தையும் குட்டிகளையும்
திருப்பி திருப்பி பார்க்கும்
நாடோடியின் முகத்தை
வெளிச்சத்தில் பார்க்கிறேன்
தலையை ஆட்டியபடியே
மகுடியை ஊதிக்கொண்டிருந்தார்
பிராய்டு நாடோடியாக
//

சர்ப்ப கவிதை பல எழுதி இருந்தாலும் ஒரு கவிதை மட்டுமே இப்போது உங்கள் பார்வைக்கு. மேலும் சர்ப்ப கவிதை பற்றி படிக்க விரும்பினால் சர்ப்ப கவிதை என படிப்பதில் தேடினால் அவர் எழுதிய அனைத்து சர்ப்ப கவிதைகளும் கிடைக்கும்.

//
கனவில் இருக்கிறேன்
நீ அழைக்கவே இல்லைதான்
ஆனாலும்
நீதான் அழைக்கிறாயென
இமைகள் திறக்கிறேன்
//

ஒரு கனவு மீன் தூண்டிலில் முனையில் மாட்டி தவிப்பதாய் அத்தனை தவிப்பு.
நீ தான் அழைக்கவேயில்லை ஆனாலும் தூண்டில் முள்ளில் சிக்கி உன் விரல் இடுக்கில் சாவது என்பது அத்தனை பெரும் வருமென்று நினைக்க சொல்லும் இக்கவிதை நீர் அற்ற குளத்தில் புதையல் இருப்பதாய் புரிந்துக் கொள்ள கூடும் .

காதலுக்கு மிக எளிமையான எடுத்துக் காட்டை கொடுத்து விட்ட்டார்.

//
கண்ணீருடன் முத்தமிட்டு கொள்ளும்
மீன்களின் மிருதுவம்
எனது காதல்
//

ஒரு விரிசலில் பூப்பூக்கும் நினைவு தளிர் ஆயிரம் காடுகளை பிரசவித்து விடக்கூடும்.தாக்கு பிடிக்க முடியாத நினைவுகள் விரிசலில் பரவுவது கவிதையின் அலாதி பிரியங்கள் .

உண்மையின் மௌனங்களை கவிதையில் வீசி கண்களை மூட விடாத எழுத்துக்கள் விரிசல்களின் நினைவு துளிர்கள் தான் .

//
எனது துயரம்
எல்லோரையும் இழந்துவிட்ட
ஒரு மரணவீட்டின் விரிசல்களில்
பூக்கும் பசுந்தளிர்கள்
//

இயற்கையில் தொடங்கி சமூகம் வரை தனக்கென ஒரு தனிப் பாணி வகுத்துக் கொண்டும், அதிலே மிகச்சிறப்பாக எழுதிக்கொண்டும் எழுத்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த அற்புதமான படைப்பாளிக்கு கவிச்சுடர் விருதளித்து பெருமை கொள்கிறது படைப்பு குழுமம்.

இந்த கம்பீரமான எழுத்துக்களின் முன் பிரம்மித்து நிற்கும் படைப்புக் குழுமம் கவிச்சுடர் அன்பில் பிரியன் அவர்கள் வருங்கால இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்று அவரது எழுத்துக்கள் உலகெங்கும் பவனி வரவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறது !!

வாழ்த்துக்கள் கவிச்சுடர் அன்பில் பிரியன்

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

வினிதா மோகன்


0   161   0  
July 2024

ஆத்மாஜீவ்


0   330   0  
October 2023

கா வெங்கடேஸ்வரன்


0   755   0  
February 2022

விமலன்


0   941   0  
December 2020

சஸ்னா லாபிர்


0   399   0  
September 2023