logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் நிலாரவி  ஒரு அறிமுகம்
***************************************************
படைப்பாளி நிலாரவி அவர்களின் இயற்பெயர் ரவிச்சந்திரன். குடந்தையை பூர்வீகமாகக் கொண்ட கவிஞர் தன் பணி நிமித்தமாக தொழில் நகரம் கோவையில் வசித்து வருகிறார். மத்திய அரசுத் துறையில் பணியாற்றும் இவர் ஒரு சிறு கதை எழுத்தாளரும் கூட. இவரது படைப்புகள் சிற்றிதழ்களிலும் மின்னிதழ்களிலும் அடிக்கடி வெளிவந்துள்ளன மேலும் படைப்பு குழுமத்தின் மாதாந்திர சிறந்த படைப்பாளி விருதும் பெற்றவர்.

கவிச்சுடர் நிலாரவி அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
***********************************************************************************
இவரது கவிதைகள் எல்லா மக்களாலும் எளிதாக புரிந்து கொள்ளும்படி இருப்பது தனிச்சிறப்பு. காட்சியமைப்பை கவிதைக்குள் கொண்டுவந்து ஒரு படைப்பாக மாற்றும் வித்தையை அழகாக கையாளத் தெரிந்திருக்கிறார். இவருக்கு நமது படைப்பு குழுமம் கவிச்சுடர் விருது அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எவ்வளவு எளிமையாக எழுதும் வல்லமையை பெற்றுள்ள படைப்பாளி இவர் என்பது நீங்கள் வாசிக்கும் இவரது படைப்புகளிலிருந்தே தெரிந்து கொள்வீர்கள்.

தான் சொல்லவரும் கருத்துகளை படிப்பவரின் மனதுக்குள் சென்று ஆழ பதிய வைக்கும் வித்தையை இவரது படைப்புகள் மூலம் படிக்க தருவது இவரது தனிச் சிறப்பு.

ஆசைகள் வட்டமிடும் நீர்க்குமிழிகள் என்று சொல்வார்கள். கவிஞரோ அவை அவரவர்களே வரையும் வட்டங்களென்று சொல்கிறார். ஒவ்வொருவரும் அவரவர் வரைந்த வட்டங்களை தங்களின் அடையாளமாக்கிக் கொள்கிறார்கள். இந்த வட்டங்களில் சில நேரங்களில் அடுத்தவர்களும் வரைந்து அவை பெரிதாகிவிடுகின்றன, வட்டங்களைவிட்டு விலகி சென்றுவிட்டதாக சொல்லும் சிலரும் சில வட்டங்களை போட்டுக்கொள்வதாக கவிஞர் பொருமுகிறார். கடைசியில் மனிதம், வட்டத்தில் ஒரு புள்ளியாக ஒளிந்துக் கொள்ள வட்டங்களின் போராட்டம் பெரிதாகிவிடுகிறதாம். சொல்வனத்தில் வந்த இந்தக் கவிதை மிக சிறப்பானதும் கூட


வட்டங்கள்

முதலில்
உங்களுக்கான
வட்டத்தை
நீங்கள் வரைந்து கொண்டீர்கள்
வட்டத்தில் வசித்துப்பின்
அவையே உங்கள்
அடையாளமென
அறிவித்தீர்கள்

பிறிதோர் வட்டத்தை
பிறிதொருவர் வரைய
பிறந்தன பல வட்டங்கள்

பின்
வட்டத்தின்
எல்லைகளை விரிவாக்க
எத்தனிக்கிறீர்கள்
அவரவர் வட்டத்தை
வலைகளாக்கி
கடல் முழுதையும்
கைது செய்ய
கனவு காண்கிறீர்கள்

வட்டங்கள் பொய்யென்று
விலகிச் சென்றவர்கள்
விடுதலை பெற்றதாய்
அறிவித்தனர்
விலகியும் கடந்தும்
செல்வதாய் நினைத்து
வேறு ஒரு வட்டத்தை
வரைகிறார்கள் அவர்கள்
பின் அவர்களுக்கான
மதில்களால்
சூழப்படுகிறார்கள்

குறுவட்டமாய்
நீள் வட்டமாய்
விதவிதமாய்
விரிந்து விரிந்து
தொடரும் வட்டங்கள் தமக்குள்
ஒன்றை ஒன்று விழுங்க
முயல்கின்றன
விழுங்கியிருக்கும்
பெரு வட்டமொன்றில்
வயிற்றுக்குள்
அடங்கிவிடும்
அனைத்து வட்டங்களும்.

----
ஒரு கடவுளும் சில மீன்களும் என்ற இந்த படிமக்கவிதை இவரது படைப்பாற்றலின் தெளிவை காட்டுகிறது. தொட்டி மீன்கள் வளர்க்கும் ஒருவன் அந்த மீன்களுக்கு கடவுளாக இருப்பதை போன்ற அமைப்பைத் தரும் இந்தக் கவிதை சமூகத்தில் நிலவும் ஆதிக்க நிலைப்பாடுகளை நகைச்சுவையாக எள்ளி நகைக்கிறது. கால சூழலுக்கேற்ப தன்னை பொறுத்திக் கொள்ளும் கவிதையிது

ஒரு கடவுளும் சில மீன்களும்

கொஞ்சம் நீர்
ஒரு தொட்டி
சில மீன்கள்
ஒரு மீன்கடவுள்
மீனுலகை படைத்தார்

உணவிடுதலும்
நீர் மாற்றுவதுமாய்
காத்துவந்தார்

மீன் கடவுளுக்கு மீன்களைத் தெரிந்திருந்தது
மீன்களுக்கு மீன்கடவுள் பற்றி
தெரியாதிருக்கலாம்
தெரியாதிருப்பதுதானே கடவுள்
என்று கர்வம் கொண்டார்

ஒரு முறை மீன்கடவுள்
தொட்டியை அதிரவைக்க
கலங்கிய மீன்கள்
அவரை மீன் சாத்தானாக கருதியிருக்கலாம்

ஒரு விடுமுறை தினத்தின்
காலையில் மீனொன்று
அவரின் அனுமதியின்றி
செத்து மிதக்க
அது ஒரு தற்கொலையென்று அறிவித்தார்

எதற்காகவோ மீனிரண்டு
சன்டையிட மீன்கடவுளின்
நடுவுநிலை
தடுமாறியது

மீன் மொழி மீன் வலி மீன் காமம்
எதுவும் புரியாமல் போக
பராமரித்துச் சலித்துப்போனார்
மீன்கடவுள்
விரக்தியில்
மீனுலகை கைவிடுவதாக
அறிவித்தார்
மீனுலகின் இறுதிநாளையும் உறுதிசெய்தார்

விபத்தொன்றில் மீன் கடவுள்
மரித்துப்போக
இது குறித்த எந்தச் சலனமுமில்லாமல்
நீந்திக் கொண்டிருந்தன மீன்கள்

------

நிலாவைப் பற்றி எழுதாத கவிஞர்களில்லை என்பதுபோல் முகமூடிகளை பற்றியும் எழுதாதவர்கள் குறைவே. இவரும் முகமூடியை பற்றி சுவாரசியமாக விவரிக்கிறார், அதே சமயம் முகமூடி போட்டு போட்டு களைத்துப்போனவன் கடவுளின் முன் நிற்கும் போது முகமூடியை கழற்றி வைத்துவிட்டு நின்றாலும் போலியாகத் தெரிவதாக சொல்வதுதான் இந்தக் கவிதையின் உச்சம்.

முகமூடி

எத்தனை முகமூடிகள்
என் முகத்தின் மேல்
ஒப்பனை என்கிற
பெயரில்தான் வந்து
ஒட்டிக்கொண்டது
என் முதல் முகமூடி
பின் கற்பிக்கப்பட்டவைகளின்
சாயங்கள் அடுகடுக்காய் பூசிக்கொண்டன என்முகத்தை

கோபத்திலும்
உணர்ச்சிகளிலும்
கோரமாய் ஒட்டிக்கொண்டவைகளை
நிரந்தரமாக நீக்கிவிட
முயன்று தோற்கிறேன்

நண்பனிடம் பகைவனிடம்
காதலியிடம் அன்னியனிடம்
எஜமானிடம்
வேலைக்காரனிடம்
உறவுகளிடம்
என
ஒரு வித்தைக்காரன்
வண்ண வண்ண குல்லாக்களை
மாற்றி மாற்றி அணிவது மாதிரி
என் முகமூடிகள் மாறிக்கொண்டிருந்தன...

முகமூடிகளே
முகமாகிப்போன பின்னும்
நிறக்கண்ணாடிகளே
கண்களாகிவிட்ட பின்னும்
என் உலகின் நிறமும் மாறியிருந்தது

எந்த இடத்தில் நானிருக்கிறேன்
என
என்னை தேடி சலித்துவிட்டது...

இப்பொதெல்லாம்
கடவுளின் முன்
முகமூடிகளை களைத்துவிட்டு
நிற்பது தான்
பொய்மையாக படுகிறது.

---

அப்பாவின் வெள்ளெழுத்து கண்ணாடியை கைகளில் வைத்துக் கொண்டு கவிஞர் தன் தந்தையின் நினைவை மீட்டுவது அபாரமான சிந்தனை. தந்தையின் கண்களை இப்போதும் கையில் வைத்திருப்பதாக உணர்கிறார். தடித்த அக்கண்ணாடியில் காட்சிகள் கலங்கலாக தெரிவதாக சொல்லும் யதார்த்தத்தில் அவரது கண்ணீரும் சேர்ந்திருக்கிறது

அப்பாவின்மூக்குக்கண்ணாடி

பத்திரமாய் பாதுகாத்துவைத்தேன்
அப்பாவின்மூக்குக்கண்ணாடி
கண்மூடிய நாளில்
கழற்றியது நான்தான்...

கண்ணாடிதானே
இவனுக்கு அழகு,
எங்கே அது?
என்றும்
கண்மூடியபின்
கண்ணாடி எதற்கு?
என்றும்
சில முனுமுனுப்புகளுடன்
முடிந்துபோனது அவரது
இறுதி யாத்திரை...

கண்ணாடி வரைந்தாலே
காந்தியின் படமாகிற
தேசப்பிதாவின்
நினைவுச் சின்னம் மாதிரி
என் நேசப்பிதாவின் நினைவாய் போனது
மூக்குக்கண்ணாடி...

தோளுக்கு மேல் வளர்ந்தவனை
தோழன் என்று நடத்திய போதும்
கண்ணாடிக்குள் தெரிகிற
கண்களை பார்க்கையில்
மனதுக்குள் மரியாதை
மறைந்ததில்லை ஒருநாளும்...

அழுது கொண்டிருந்தாலும்
தொழுது கொண்டிருந்தாலும்
எதையாவது படித்துக்கொண்டிரு
அவர் வார்த்தைகளின் சாட்சியமாய்....
படித்து படித்து
தடித்து போயிருந்தது
அப்பாவின்மூக்குக்கண்ணாடி

கண்களை அடிக்கடி
தொலைத்துவிட்டுத்
தேடுவதாய்
அவர்
கவிதையாய்
சொல்கிற வேளைகளில்
கண்ணாடியை
தேடிக்கொடுத்து விடுகி்ற
என் கைகளில்
இன்றும் பத்திரமாய் இருக்கிறது...
அப்பாவைத் தொலைத்தபின்னும்

அணிந்து பார்க்கையில்
காட்சிகள் கலங்கி இருக்கும்
அந்நாளில்...
இப்போது
அணிந்துபார்த்தால் கலங்கிவிடுகிறது
கண்கள் இரண்டும்....
---

சம்பாதிக்கும்போதே
செலவாகிவிடுகிறது
காலம்.

- என்ற இந்த குறுங்கவிதையும் வாழ்க்கையின் மிகச்சிறந்த அலசல்தான்.

ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் கண்களின் துயரை கவிஞர் அவரது தொழிலோடு இணைத்து பின்னியிருக்கும் கீழுள்ள கவிதை சிறியதென்றாலும் கீர்த்தியில் மிகப் பெரியது

காலையிலிருந்தே
முதல் வாடிக்கையாளருக்காக
காத்திருந்தும்
யாரும் வராததால்
கடந்து செல்லும்
பாத சாரிகளின்
சின்னச் சின்ன
செருப்பு விரிசல்களை
கண்களால் தைத்துக் கொண்டிருந்தான்
அந்த
காலணிகள் சீர்செய்பவன்.

----

விருந்து என்ற தலைப்பிலுள்ள குறுங்கவிதையொன்று விரையம் செய்யப்பட்ட உணவுகளை குப்பைத்தொட்டியின் வயிற்று உணவாக சித்தரிப்பது.. அதை அவ்வாறு வீணாக்கியவர்களின் வயிற்றையும் குறிப்பிடுவதாகவே நினைத்துக் கொள்ளலாம்

குப்பைத்தொட்டிகளின்
வயிற்றை நிரப்பிவிடுகின்றன
எச்சில் இலைகளில்
மிச்சம் வைத்த உணவுகள்.
------

படைப்பாளி நிலாரவி அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

கமல் காளிதாஸ்


0   1404   0  
September 2018

துளசி வேந்தன்


0   895   0  
September 2021

வசந்தன்


0   1500   0  
June 2020