logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் மதுசூதன் – ஒரு அறிமுகம்
*************************************************** 

இன்னும் முடிவாகவில்லை 
இறந்த ஜனநாயகத்தை 
புதைப்பதா எரிப்பதா என்று. 

நமது படைப்புக் குழுமத்தில் நீண்ட நாட்களாக எழுதி வரும் படைப்பாளி மதுசூதன் செதுக்கிய வார்த்தைகள்தான் இவை. 

வார்த்தைகளைச் சரியான இடத்தில் கையாளும்போதுதான் ஒரு தாக்கத்தை அவ் வார்த்தைகளால் எழுப்ப முடியும். கவிஞர் மதுசூதன் அவர்களின் தமிழ் ஆர்வத்தைப் பாராட்டும் வகையில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி  மாதத்திற்கான கவிச்சுடர் விருதை, நமது படைப்புக்குழுமம் வழங்குவதில் நாம் பெருமை கொள்கிறோம். 

பிறந்தது வளர்ந்தது மற்றும் பணி செய்தது எல்லாமே சேலத்தில் என்றாலும் தற்போது பெங்களூரில் தனியார் நிறுவனமொன்றில் மேலாளராகப் பணி புரிந்து வருகிறார் கவிஞர் அவர்கள். 

உயர் கல்வியின் போதுதான் கவிதைகளின் மீது நாட்டமேற்பட்டதாகச் சொல்லும் கவிஞர், தன்னை எழுதத் தூண்டியது பாரதி வரிகளின் மீது ஏற்பட்ட ஓர் ஈர்ப்பும்தான் காரணம் என்று சொல்கிறார். இவரை மானசீகமாக இலக்கியத்தின் பக்கம் நகர்த்தியவர்கள் ஜீவா, மேத்தா, சுரதா அப்துல் ரகுமான்,மீரா போன்றவர்கள்தான். இவரின் வாசிப்பின் நேசிப்புதான் தமிழை ஆராதிக்கக் காரணமாயிற்று. இவரது கவிதையின் மீதான ஆர்வத்தை மேலும் தட்டி நகர்த்துகிறது நமது படைப்புக் குழுமம். இதோ அவரது சில படைப்புகள்:

கவிச்சுடர் மதுசூதன் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
***********************************************************************************
குருவிகளுடன் குருவியாகக் கிராமத்தில் வாழ்ந்த வாழ்க்கையை அசைபோடும் கவிஞர், அதனைத் தொலைத்துவிட்டு நகர்ந்த வாழ்க்கையில் அவரோடு ஒன்றியிருப்பது ஒரு குருவியின் படம் மட்டும்தான். 

கடைசியாய் என் 
வீட்டுக் கிணற்றுக்குள் 
கூடி கட்டியிருந்தது குருவி. 
பெட்டையின் மீதான 
பெருங்காதலில் 
நான் எட்டிப்பார்ப்பதை 
கவனிக்காது. 
இருந்தாலும் 
கொஞ்சமாய் வெளியில் 
தெரியும் வைக்கோலும் 
ஒரு குச்சியின் 
அசைவும் குருவிகளின் 
தனிமையைச் சொல்லும் 
எனக்கு. 
அப்போது நான் எட்டிப் 
பார்க்கும் என் தலை 
விலகும். 
முட்டைகள் ஒன்றிரண்டு 
பொறிந்த பின் 
கேட்ட "கீச் கீச்" 
சப்தமும் 
தகப்பன் குருவி 
நொடிக்கொரு தரம் 
கிணற்றுக் கம்பியில் 
அமரும் பதட்டத்தில் 
நானும் கலவரமாயிருக்கிறேன். 
என் அம்மாவை நேசித்த 
அளவில் சற்றும் 
குறையாத நேசம் 
குருவிகளிடம் எனக்கு. 
ஒரு ஞாயிறு காலையில் 
பெரு நகரத்தில் 
வேறொரு வீட்டிற்கு 
குடி பெயர்ந்த பின்னர் 
இன்னும் காதில் கேட்டபடி 
இருக்கிறது கீச் கீச்செனும் 
சப்தமும் தகப்பன் குருவியின் 
படபடத்த இறக்கை சத்தமும். 
கூடில்லா வீட்டில் 
குடியிருப்பதென்பது 
குறையாயிருக்கிறது 
அதுவும் வரவேற்பறையில் 
குருவிகள் படம் மாட்டிய 
சுவரிருக்கும் வீட்டில்... 

கவிதைகளோடு வாழும் கவிஞரின் கவிதையும் நகரத்து வாழ்க்கைக்குப் பழகிவிட்டது என்பதைத் தனது இந்தக் கவிதை மூலம் அழகாகச் சொல்கிறார்... 

அன்றொரு நாளில்
மெட்ரோ ரயிலின் மூன்றாம்
பெட்டியில் பயணிக்கும் போது 
இயர் ஃபோனில் அர்த்தம்
புரியாத ஆங்கிலப் பாடலுக்கு
நடுவே என் கைபேசி அழைப்பை
நிராகரித்த போது என் 
சிறு நகரத்துக்கவிதை 
அப்படி மாறுமென
உணரவில்லை.
பின்பொரு நாளில்,
மாலொன்றில் ஃப்ரென்ச் 
ஃப்ரையும் கோக்கும் குடித்து,
ஹைஹீல்ஸ் செருப்புகளின்
அகங்கார நடையில்,
கலைந்த கேசத்தை கைவிரலில்
கோதி கழுத்து சாய்த்த பேரழகோடு
இளஞ்சிவப்பு லிப்ஸ்டிக் 
உதடொற்றி அழியாமலிருக்க 
கொஞ்சமாய் பேசி,
அகன்ற பழுப்பு நிற
கூலிங் கிளாஸை
இடக்கையில் நெற்றிக்கேற்றி
என்னைப் பார்த்து 
ஹாய் என கையசைக்கிறது
முழுதும் நகரமயமான
என் கவிதை.
நான் தான் மீச்சிறு புள்ளியாகி
அசைக்க என் கைகளைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.

படுக்கை விரிப்பில் யானைகளின் படம், தலையணையில் பறவைகளின் படம், போர்வையில் பூக்களை உதிர்க்கும் மரம் , தலைக்கு மேல் உள்ள ஓவியத்தில் சிறுத்தையின் படம் என்று ஒரு குட்டி வனமாகத் தனது படுக்கையறை மாறிவிட்டதைச் சுட்டிக்காட்டும் கவிஞர் அதில் ராஜக்குமரனாக வலம் வரும் போது சிறுத்தையின் படம் உறுமுகிறதாம்... அதனை நினைக்கும் போது அந்தச் சிறுத்தையை வாங்கிய கடனின் உருவகமாகச் சித்தரிக்கும் அற்புத கவிதை

அம்பாரி அலங்காரத்துடன்
ராஜகுமாரனைச் சுமந்த
யானைகள் வரிசையோடு
படுக்கை விரிப்பு.
பறக்க எத்தனிக்கும்
பறவைகளோடிருந்த
தலையணை உறை.
பூக்களை இறைத்து
மரங்களடர்ந்த போர்வை.
தலைக்கு மேல் ஓவியத்தில்
பெருமரத்தடியில்
பதுங்கிய சிறுத்தை.
நன்றாய்த் தானிருக்கிறது
என் குட்டி வனம்.
கவலைகளில் தூக்கத்தை
தொலைக்கும்போது
ராஜகுமாரனை இறக்கி
என்னை ஏற்றிக்கொள்கிறது
விரிப்பு யானைகள்.
காதலை நினைக்கையில்
கூடப்பறக்க
இறக்கைகள் தருகின்றன
தலையணைப் பறவைகள்.
பழையதை எண்ணி
கொஞ்சம் சிரிக்கையில்
பூக்களை உதிர்க்கிறது
போர்வை மரங்கள்.
திடுமென உறுமுகிறது
ஓவியச்சிறுத்தை.
அநேகமாய் நான் வாங்கிய
கடனின் உருவகம்
அதுவாகத்தானிருக்கும்.

இரவை படிமங்களுக்குள் அடைத்து வைத்து நகரும் இந்தக் கவிதையும் ஒரு விடியலின் எதிர்பார்ப்புதான்.

ஒரு குடுவையில்
அடைக்கப்பட்டிருந்தது இரவு.
முன்னதாகக் கருமையை
வடிகட்டி வைத்திருந்தார்கள்.
கடந்து போன சிலர்
அருகே போய்
மோப்பம் பிடித்தனர்.
அவரைப் பூவின்
வாசம் இருக்கிறது
எனப் பொய்யும்
பேசினார்கள்.
நேசமில்லாத
இரவுக்கு வாசம்
எப்படி இருக்கும்..?
எனக் குறுங்கவிதை
உளறப்பட்டது.
சிலர் தெருவோரம்
நின்று நியாயம்
கேட்டார்கள்.
எதிர் வீட்டுக் குழந்தை
வரைந்த நட்சத்திர
ஓவியம் குடுவைக்குள்
போடப்பட்டது.
இரவைத்
தேடி வந்த துண்டு
நிலாவுக்கு
வகுப்பெடுத்துக்
கொண்டிருந்தனர்
யாரோ இருவர்.
கடிகையில் சரிந்த
மணலாக நிமிடங்கள்
குடுவையின்
சார்பாக விரைந்தபடி
இருந்தது.
ரோந்து வந்த காவல்காரர்
சிகரெட் சாம்பல்
தட்ட குடுவை கேட்டார்.
சாம்பல் தட்டப்பட்ட
இரவாய் இருப்பதில்
யாருக்கும் விருப்பமில்லை.
இனிமேல் இரவு
விடுவிக்கப்படும் போது
அதுவும்
கருமையற்று தான்
வரும்‌ என்பதை
நீங்கள் ஏற்றே
ஆகவேண்டும்.

வசதிக்கும் ஏழ்மைக்குமான பேதங்களைப் பட்டியலிடும் கவிஞர், அதிலிருந்து சமத்துவம் பெறவும் வழியைச் சொல்கிறார், தனது மேலான்மையில்.. 

நான் நெய்யுக்கழுத போது 
அவன் பாலுக்கேங்கிக் 
கொண்டிருந்தான். 
நான் சோற்றுக்கழுத போது 
அவன் கஞ்சிக்கு அழுது கொண்டிருந்தான். 
நான் முழுக்கை சட்டையில் 
இருந்த போது 
அவன் கோவணத்தைக் கசக்கிக்கொண்டிருந்தான். 
நான் அவனாவதை விட, அவன் 
நானாவதில் இருக்கிறது 
என் சமத்துவம்.


கற்பனையென்பது கவிஞனின் வீடு. அங்குதான் அவனால் எல்லா வித்தைகளையும் செய்ய முடியும். இங்கும் கவிஞர் தனது கற்பனையை அழகாக பதிவேற்றுகிறார். நிலாவின் வெளிச்சத்தை தொலைத்துவிட்ட வானம் தேடி அலைகிறது. ஒவ்வொன்றும் யூகங்களை விரித்து அங்கிருக்கலாம் இங்கிருக்கலாம் எனச் சொல்ல கவிஞருக்கு மட்டுமே தெரிந்த உண்மையை கவிதைக்கு மட்டும் சொல்கிறார்... நீரில் இருந்த வெளிச்சத்தை அவரது காதலி கையில் எடுத்து சென்றுவிட்டாளாம்...

ஒரு கோடையில்
நிலா வெளிச்சத்தைத் 
தொலைத்து விட்டிருந்தது
வானம்.

சதுப்பு நிலக்காட்டில்
இருக்குமென துருவ நட்சத்திரம்
உளவு சொன்னது.

புல்வெளிகளில் வேருக்கடியில்
மறைந்திருக்கும் என
ஆலங்கட்டி அனுப்பி
வேவு பார்த்தது  வானம்.

கடலுக்கடியில் இருக்கலாம்
என மேகம் பெரும் 
மழைத்துளியை அனுப்பியது.

மூங்கில் மரக்கணுக்களில் 
ஒளிந்திருக்குமென
காற்று ரகசியமாய்ச்சொன்னது.

கார்காலத்துக்குள் 
நிலாவெளிச்சத்தைக்
கண்டு பிடிப்போம் என
சொல்லிப் போனது மின்னல் .

நானும் அவளும் சந்தித்த
முன்னிரவில் குளத்து 
நீரில் இருந்த வெளிச்சத்தை
கையில் எடுத்தவள்
திருப்பித் தராததை நான்
யாரிடமும் சொல்லப்போவதில்லை.


கவிஞரின்  மேலும் சில சிறந்த கவிதைகளையும் வாசியுங்கள்:

மாரியம்மன் கோவிலும்
மாதா கோவிலும்
மசூதியும் என்‌ நீண்ட
தெருவுக்குள்.....
ஜோசப்பின் கிறிஸ்துமஸ் கேக்கும்
பாய் வீட்டு பிரியாணியும்
என் வீட்டு மாவிளக்கு மாவும்
பரிமாறிக்கொள்ளப் படும்
சமத்துவ வீதியில்.
நேற்றைக்கு அடிபட்ட கந்தசாமிக்கு
ஆன்டனியின் ரத்தம்.
அகமதுவின் ஆபரேஷன்
சிலவுக்கு என் சாமி உண்டியல்
உடைக்கப்பட்டது.
மரியாவின் பிரசவத்தை
நூர்ஜஹான் பாட்டி தான்
பார்த்தாள்.
கன்னியம்மா பூப்படைந்த
சடங்கில் மாமா வகையில்
மொய்யெழுதினார் எட்வர்டு.
மோனிஷாவின் திருமண
நிகழ்ச்சியில் மகாதேவனின்
இன்னிசைக் கச்சேரி.
எங்கள் வீதி எல்லா
தெய்வங்களாலும்
ஆசீர்வதிக்கப்பட்டது!

@

நீரில் படர்ந்த மர நிழலாய்
நான் படர்கிறேன்.
யாருக்கும் தராத உன் முத்தங்களால்
என் உடம்பு கர்வப்பட்டிருக்கிறது.
பிரபஞ்சத்திலிருந்து  கூட ஒரு
துளியை இறுதியாகப் பருகுகிறேன்.
பனங்குலைகளாய் காய்த்துத்
தொங்கும் காமக்கனிகளில்
கொஞ்சம் மட்டும் தீண்டப்பட்டிருக்கிறது
நம் இருவராலும்.
சொர்க்கத்துக்கும் நரகத்துக்குமான
இடைவெளியில் பிரிய மனமில்லாமல்
விடை கொடுக்கிறோம்.
பூக்களுக்கு சிறகு முளைத்த
மாயவனத்தில் விட்டுச்செல்கிறேன்
என் நீண்ட பெருமுச்சை.
உன் முத்தங்கள் மிதந்த
நீரோடையில் ஒரு கை அள்ளிப்
பருகிவிட்டு நாளைக்கு மீதம்
வைக்கிறேன். 
அப்போது தான் கவனித்தேன்
பொறாமையில் சொட்டுச்சொட்டாய் 
வழிந்து தேய்ந்திருக்கிறது விடியலில் நிலா.

@

பட்டை சாராயத்தை
கள்ளத்தனமாய்க்
காய்ச்சி
சைக்கிள் ட்யூபுகளில்
ஏற்றி அமோகமாய்
வியாபாரம் செய்த
மீசை கோவிந்தன்
கரை வேட்டி கட்டி
கவுன்சிலர் ஆன பிறகு
காந்தி படத்திற்கு
மாலை போட்டு
மது விலக்கை அமல்
படுத்தச் சொன்ன ஒரு
அக்டோபர் இரண்டாம்
நாள் முதல்
என் வீட்டுப்படத்தில்
சிரிப்பை நிறுத்திவிட்டார்
தேசத்தந்தை.
@

ஒரு தாயம்,
இரு தாயம், ஈரஞ்சு, மூணு 
இப்படி உருட்டி 
விளையாடிய 
தாயமாட்டத்தில்
சித்தி சொன்னபடி 
உருளும் தாயக்கட்டைகள்.
என் காய்களை 
வெட்டித்தள்ளி
வெட்டாட்டம் ஆடி
மீண்டும் ஈரஞ்சு 
ஒரு ஆறு, 
இரண்டெனக் கட்டங்களைத்
தாண்டி போனாள் சித்தி
என் பால்யத்தின்
நாட்களில்......
ஆஸ்பத்திரியில் அபாயக்
கட்டத்தைத்  தாண்டாமல்
இழுத்துக் கிடந்த
முதுமை நாளில் 
ஈனஸ்வரமாய் முனகினாலும்
எனக்குக் காதில் 
விழுவதென்னவோ
ஒரு தாயம்
இரு தாயம் ஈரஞ்சு மூணு தான்.
@

தூறெடுக்காத  இந்தக் குளத்தில்
அப்போதெல்லாம் 
நான்கைந்து தேவதைகள் 
குளிப்பார்கள்.
பாசம் படர்ந்த படிக்கட்டுக்களில்
கழட்டப்பட்ட தேவதைகளின்
இறக்கைகளை பொன்வண்டுகள்
மொய்த்துக் கொண்டிருக்கும்.
கால் மட்டும்  
நனைக்கும் சில 
தேவதைகளை உள்ளூர்த்
தவளைகள் பரிகாசம் செய்தன
இறங்கிக் குளித்த தேவதைகளின்
பூனை மயிர்கோடாய் இறங்கும்
உந்திச்சுழிகளை உரசிப்
போனது கெண்டை மீன்கள்.
வலப்பக்க மார்பில் காசளவு
மச்சம் இருந்த தேவதைக்கு
கொஞ்சம் கூச்சம் தான்.
நரம்புகளை மீட்டும் சொர்க்கத்தின்
வாசனையை அவர்கள்
குளத்தில் மிதக்கவிட்போது
நான் லில்லிப் பூவாக
மிதந்து கொண்டே முகர்கிறேன்.
ஏழாம் படியில் யாரோ ஒருவனின்
கண்ணுக்குத் தெரியாமல்
நடக்கும் சூட்சுமக் குளியல்
முடித்த தேவதை தன் உலர்ந்த
கூந்தலை அள்ளிக் கட்டியபோது
வெளிச்சத்தை இரவல்
வாங்கிக் கொண்டிருந்தது குளம்.

@

சிலரின் அப்பாக்களுக்கு
சிரித்த முகம்
எப்போதோ கோபம் வந்து
போகும்.

சிலரின் அப்பாக்கள்
கையகலக் கண்ணாடியும்
கருப்பு நெற்றியும்
நரைத்த மீசையும்
நிறைய வருத்தமும்
வைத்திருப்பார்கள்.

சிலரின் அப்பாக்கள் 
ஒடிசல் தேகம்
வார்த்தைகளை அடக்கி
வாசிப்பார்கள்.

சிலரின் அப்பாக்கள்
பெருத்தவர்கள்
கம்பீரச்சிரிப்பும்
கட்டைக்குரலும்
பயமாயிருக்கும்.

சிலரின் அப்பாக்கள்
வழிக்கப்பட்ட மீசையோடும்
நரைத்த தலையோடும்
இருக்கும் முன்கோபிகள்.

சிலரின் அப்பாக்கள்
புரட்டிப்போட்ட வாழ்க்கையின்
மௌன பிம்பங்கள்
இவர்கள் சுமை தாங்கி
ஓய்ந்தவர்கள்.

சிலரின் அப்பாக்கள்
நடிக்கத் தெரியாதவர்கள்
நிறைய ஏமாளித்தனமும்
கொஞ்சம் வசதியும்
இருக்கும்.

அப்பாக்களுக்கு அடையாளம்
சொல்வது எளிதான
வார்த்தைகளில் அடக்க
இயலாது என்றாலும்
அவர்களின் புறத்தோற்றங்களில்
புலப்படாத இன்னொரு
பாத்திரம் உள் தோற்றத்தில்
வேறொரு அடையாளமாய்
இருக்கிறது.

கோர்வைகள் மாறிப்போகும்
ஆனாலும் எல்லா அப்பாக்களும்
மகனுக்கோ மகளுக்கோ
தன் அடையாளத்தை ஏதோ
ஒரு கட்டத்தில் முற்றிலும்
இழந்தவர்களாகவே 
இருக்கிறார்கள்.

@
ரின் மேல் கை நீட்டிய
இலையுதிர் காலத்து கிளை
நிலாவை எப்போது உதிர்த்தது
என யாராலும் சொல்ல முடியவில்லை.

ஊரடங்கும் வேளையில்
மின்மினிகள் வெளிச்சத்தைக் 
கடன் வாங்கிய குளத்துக் கரை
இன்னும் திருப்பித் தராததை
யாரும்  கேட்கவில்லை.

பூக்காம்பு தொடங்கி பூவை
முழுப்பகலில் புணர்ந்த
கறுப்பும் சிவந்த கலந்த
வண்ண்த்துப்பூச்சியின்
களைப்பை யாரும்
உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பனித்துளிகள் அடுக்கிய
சிவப்பு மலரின் சின்னக் கதறலோ
சின்ன சருகொன்று விழுந்த
வலியில் அழுத மரக்காளான்
அழுகையொலியோ
யாரும் பொருட்படுத்தவேயில்லை.

யாரோ கடக்கிறார்கள்
யாரோ பேசுகிறார்கள், யாரோ
சிரிக்கிறார்கள் இன்னும் சிலர்
அன்றைய நாளிதழ் வாசிக்கிறார்கள்.
யாரோ சண்டையிடுகிறார்கள்.

அந்த ஊரில் புறக்கணிக்கப்பட்ட
புராதனக் கோயிலைப் போல
ஒரு விசும்பலோடு நிறுத்திக்
கொள்கிறது குருவிகள்
கூடு தொங்கும் மரங்களோடிருந்த
குளக்கரை.

கவிச்சுடர் மதுசூதனன் மேலும் சிறந்த கவிதைகளை படைக்கவும் அவரின் தமிழ் பணி சிறக்கவும் உங்களோடு சேர்ந்து படைப்புக்குழுமம் வாழ்த்தி மகிழ்கிறது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.