logo

இலக்கியச்சுடர் விருது


இலக்கியச்சுடர் விருது - வாருங்கள் வாழ்த்துவோம்
==================================
படைப்பாளி கோ லீலா அவர்கள் இதுவரை இந்த குழுமத்தில் எழுதிய படைப்புகளை ஆய்வு செய்து அவரின் இலக்கியத் திறனை போற்றும் வகையில் அவர்களுக்கு 2021க்கான "இலக்கியச்சுடர்" எனும் உயரிய விருதை அளித்து படைப்பு குழுமம் பெருமை கொள்கிறது.

அவர் இன்னும் பல விருதுகளும் பாராட்டுகளும் இலக்கிய உலகத்தில் பெறவும் மேலும் பல படைப்புகளை இந்த சமூகத்திற்கு தந்து தமிழ் வளர்க்கவும் வாழ்த்துகிறது படைப்பு குழுமம்...

இப்படி விருது பெறுவோர் அனைவரும் நாம் ஒவ்வொரு ஆண்டும் சந்திக்கும் விழாவில் மேடையில் வைத்து சிறப்பிக்கப் படுவதுடன் ஒரு ஆளுமைமிக்க படைப்பாளியின் கையிலிருந்து விருதும் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப் படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...

இனி இந்த விருதை வாங்கப் போகும் எழுத்தாளர் யார் யார் என்பதை உங்களின் படைப்புகளே தீர்மானிக்கும்..
ஆகவே இந்த குழுவில் பதியப்படும் படைப்புகள் யாவும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப் படுகிறது. அதை ஒரு குழு தனியாக இருந்து அலசி ஆராய்ந்து தேர்வு செய்கிறது என்பதை எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நல்ல படைப்புகளை படைப்போம்...
நம் சமூகத்தை நாமே தமிழால் இணைப்போம்...

வாழ்த்துக்கள் இலக்கியச்சுடர் கோ லீலா.

ஒரு மகிழ்ச்சியான செய்தி....
இனி இந்த இலக்கியச்சுடர் விருது பெரும் படைப்பாளிகளை பற்றிய குறிப்பும் நாம் ஆய்வு செய்த முறையையும் இணைத்து இதனுடன் ஒரு கட்டுரை வடிவில் இணைக்கப்படும்.

இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாகவும் மற்ற படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கும். ஒரு படைப்பாளி தனக்கான ஒரு அங்கீகாரம் பெறுவதற்கு எவ்வளவு தூரம் எப்படி எல்லாம் கடந்து வருகிறார் என்பதை மற்றவர்களும் தெரிந்து கொள்தல் அவசியமாகிறது. 

இலக்கியச்சுடர் கோ லீலா – ஒரு அறிமுகம்
***********************************
பெயர்: கோ லீலா 

வசிப்பிடம்: பொள்ளாச்சி

பணி: உதவி செயற்பொறியாளர், நீர்வள ஆதார‌ துறை, பொ.ப.து

படித்தது: B.E ( civil), M.B.A ( systems analysis and HR), PGDDCCS

படித்துக் கொண்டிருப்பது:
**********************
ஓஷோ, மிக்கேல் நைமி, கலீல் ஜிப்ரான், பெரியார், கலைஞர், பாரதி, உமர் கயாம், பாஷோ, பூஸன், ஆண்டன் செக்காவ், தாகூர், பால் சக்காரியா, தாஸ்தாவேஸ்கி, பாரதிதாசன், புவியரசு, கி.ரா, தி.ஜா, ஈரோடு தமிழன்பன், கவிக்கோ அப்துல் ரகுமான், தஞ்சை ப்ரகாஷ், மாட் விக்டோரியா பார்லோ, ஜான் பெல்லமி ஃபாஸ்டர், டேனியல் கோல்மென், அருந்ததி ராய், சலீம் அலி, ராமசந்திர குஹா, தொ.பரமசிவன், மார்க்ஸ், இறையன்பு, வைரமுத்து, தகழி சிவசங்கரன், எஸ்.ரா, Paulo Coelho, Napoleon hill, ஜெயமோகன்... நீளும் பட்டியலில் அடங்கும் மிக்ஸர் மடிச்சி கொடுக்கும் பேப்பரும். 

இலக்கு/முயற்சி/கனவு: 
**********************
தண்ணீர் மற்றும் இயற்கையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மற்றும் வேளாண் காடுகள் உருவாக்குதல்

இயல்பு: 
**********
நிகழ்காலத்தில் வாழ்தலே வாழ்தல் எனும் ஓஷோவின் சொற்களின் வழியே நொடிக்கு நொடி இயற்கையின் இறைத்தன்மையை சுகித்து மகிழ்தல் இயல்பு.

எழுதத் தொடங்கியது: பள்ளி நாட்களில்‌ இருந்து

பெருமிதம்: 
****************
மறைநீர் படித்த பின்பு பலரும் நீரை சிக்கனமாக செலவு செய்யவும், காடுகள் அமைக்க முற்பட்டிருப்பதும்...

#மறைநீர் நூல் கடந்த 20 (2000-2020) ஆண்டுகளில் புத்தியை துலக்கிய புத்தகமாக விகடன் அறிவித்தது... 

ஆயிரம் பிரதிகள் விற்பனையானது...

சர் விஸ்வேஸ்வரய்யா சீர்மிகு பொறியாளர் விருதினை பெற்றது.

தமிழ்நாட்டில் ஹைக்கூ பற்றி ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய பெண்களின் வரிசையில் நான்காவது இடத்தை வகித்து இருப்பது


அவரது படைப்புகள்:
******************
# மறைநீர் 
#ஹைக்கூ தூண்டிலில் ஜென்

கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் வெளி வந்த இதழ்கள் மற்றும் இணைய தளங்கள்:

கவிதைகள்:
***********
படைப்பு கல்வெட்டு
இனிய உதயம்
மின் தமிழ்மேடை - தமிழ் மரபு பன்னாட்டு அமைப்பு
கொலுசு
மக்கள் வெளிச்சம்
பொழில்வாய்ச்சி

கட்டுரைகள்
************
தகவு
இனிய உதயம்
தமிழ் நெஞ்சம்
கலகம் காலண்டிதழ்
திணை காலண்டிதழ்

நூல் விமர்சனம்
***************
தகவு
கணையாழி
தமிழ்நெஞ்சம்

இணைய தளங்கள்
**************************
வாசிப்போம் தமிழ் இலக்கியம் நேசிப்போம்
தி.ஜானகிராமன் இலக்கிய வட்டம்
வாசிப்பை நேசிப்போம்


படைப்பு குழுமத்தில் பங்களிப்பு:
**************************
படைப்பின் பசுமைத் திட்டத்தின் திட்டத் தலைவராக இயங்குதல்.

தினம் கவிதை, கட்டுரை, நூல் விமர்சனம் ஏதாவது ஒரு படைப்பை பதிவிடுதல்.

படைப்பு குழுமத்தின் எந்த முன்னெடுப்பிலும் பங்கேற்று, ஆலோசனையைப் பகிர்தல்.இலக்கியச்சுடர் கோ லீலா அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
****************************************************
இயற்கையை பெரும்பாலும் சுற்றுலாவாசிகளின் கண்ணோட்டத்தில் காணும் இன்றைய சூழலில் லீலா உணர்வு பூர்வமாக அணுகிறார். இயற்கை கேட்கும் கேள்விகளின் வழியே தன் வாழ்வியலை கட்டமைத்துக் கொண்டு முடிந்தளவு பதில்களை சேகரித்துக் கொண்டே நகர்கிறார். அதற்கு அவர் சார்ந்திருக்கும் பணி... முழு முற்றிலுமாக உதவுகிறது. நீரின் தேவை குறித்து அதன் கவனம் மனிதர்களிடம் குறைவது குறித்து அவரின் மனம் படும் பாடு தான் "மறைநீர்" நூல். அந்த ஒரு நூல் போதும்... இந்த  மானுடத்தின் மீது அவர் கொண்ட மனித நேயம் உணர்ந்து கொள்ள. 

எழுத்து சிறு வயது முதலே அவரைப் பற்றிக் கொண்டாலும்... காலத்தின் ஓட்டத்தில் அதனை அவரும் கெட்டியாக பற்றிக் கொண்டார். தொடர்ந்து இயங்குதலின் வழியே தான் இலட்சியங்கள் சாத்தியம். கனவுகளை விரட்டி பிடிக்க அவர் எடுத்துக் கொண்ட வழி எழுத்து. படைப்பூக்க மனநிலையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளல் எல்லாருக்கும் சாத்தியம் இல்லை. லீலாவுக்கு சாத்தியப் பட்டிருக்கிறது. இயற்கையை நேசிக்கும் தன்மை அவரை தொடர்ந்து படைப்பாளியாக மட்டுமல்லாமல் ஒரு மனித நேயமிக்க மானுட சுடராகவும் வைத்துக் கொண்டிருக்கிறது.  

தைரியத்தின் வழியே வெளிப்படையாக பேசும் சாந்தம் வாய்த்த எழுத்தாளர் என்றால் சாலப்பொருந்தும். தொடர் வாசிப்பின் வழியே தூரங்களை தொட்டுக் கொண்டே இருக்கும் ஆத்மார்த்தமான அன்புள்ளம் கொண்ட மனுஷி என்றால் அதுவும் அப்படியே.

நீரை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம்....இருக்கும் நீரை எப்படியெல்லாம் சுத்திகரிக்கலாம்..... உபயோகப் படுத்தலாம் என்று பல்வேறு வழிமுறைகளை மிக துல்லியமாக.....அக்கறையாக......அற்புதமாக எல்லாருக்கும் புரியும் வகையில் கொடுத்த படைப்பாளி லீலா அவர்களின் சமூக அக்கறைக்கு எப்போதுமே ஒரு ராயல் சல்யூட் நம்மிடம் உண்டு.   

அமுத பாரதி, அறிவுமதி, மு. முருகேஷ், மீனாசந்தர், உதயக்கண்ணன், புதுவைத் தமிழ்மணி போன்றோர் முதல் காலகட்டத்தில் இருந்து இன்னும் இயங்கி வருபவர்கள். இந்நிலையில் கோ.லீலா அவர்கள் குற்ற நற்ற ஆய்வுகளில் இறங்காமல் கவனத்தோடு ஒரு பாராட்டுமுறைத் திறனாய்வை
நிகழ்த்தியுள்ளார். இதன் பொருட்டு ஹைக்கூவையும் ஜென்னையும் நூலின் தேவைக்கேற்ற அளவு கற்றிருப்பதை வரவேற்றுப் பாராட்ட வேண்டும்...என்றும் லீலா தரும் நுட்பத் தெறிப்புகள் மிக அருமையானவை என்றும் லீலா எழுதிய "ஹைக்கூ தூண்டிலில் ஜென்" நூல் பற்றி மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் பாராட்டுகிறார். நாமும் பாராட்டுவோம். இந்த உலகமே பாராட்டட்டும். பாராட்டை விட பொற்கிழி வேறென்ன இருக்கிறது படைப்பாளிக்கு.

எந்த பொருள் பாடும் கவிதையிலும் மெல்ல இயற்கை எட்டிப் பார்க்கும் வேட்கை அவர்பால் அமைந்திட்ட அனுக்கிரகம் என்றே நம்பலாம். புள்ளி விபரங்களில் எப்போதும் தன்னை சமரசம் செய்து கொள்ளாதவர். மேம்போக்கு சிந்தனையில் தன்னை ஒருபோதும் சரிந்து விட அனுமதிக்காக... சுய சிந்தனையோடு ஆழ உழும் அற்புதத்தை தொடர்ந்து கைக்கொள்ள லீலா அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.

நீர் செல்லும் வழியெல்லாம் லீலாவின் எழுதுகோல் செல்வதாகத்தான் படுகிறது. எல்லாரும் மை ஊற்றி எழுத லீலா நீர் ஊற்றி எழுதுகிறார் போல. நீரின் தேவை... பாதுகாப்பு என்று நீர் பற்றிய சிந்தனை மனம் படைத்த கவிஞர்... 100 சதவீதமும் நீரால் ஆனவரோ என்று கூட நகைச்சுவை நர்த்தனம் வீசுகிறது நமக்குள். 

இன்னும் இன்னும் புது புது முயற்சிகளில் தொடர வேண்டும் படைப்பாளி கோ லீலா அவர்களின் படைப்பின் பயணம். 

இவரது இந்த இக்கிய பயணம் மேலும் தொடரவும்.. சிறப்பான படைப்புகளை தொடர்ந்து தமிழுக்கு அளிக்கவும்... படைப்பு குழுமம் அவரை மனதார வாழ்த்துகிறது. மேலும் "இலக்கியச்சுடர்" என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

இத்தகைய ஆக்கப்பூர்வமான ஒரு படைப்பாளி பெறும் படைப்பின் சுடர் விருதுகள் இங்கு எழுதும் அனைவரின் கரங்களையும் தழுவ வேண்டும் என்பதே படைப்பு குழுமத்தின் அவா. அதற்கேற்ப படைப்பாளிகள் தங்கள் சிந்தனை வளத்தையும் உருவாக்கல் திறனையும் மேம்படுத்திக் கொண்டு சமூகத்திற்கான படைப்புகளைப் படைத்து மனிதம் செழிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டு அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறது படைப்பு குழுமம்.


வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#சுடர்_விருது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

பி கே சாமி


1   582   2  
July 2021

இரா. பூபாலன்


1   174   1  
October 2020

ஆண்டன் பெனி


1   415   0  
March 2017

த.ரவீந்திரன்


0   164   0  
January 2021