logo

கவிச்சுடர் விருது




இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின்  சிறந்த படைப்பாளிக்கு வழங்கப்படும்  கவிச்சுடர் விருதினை கவிஞர் பி.கே.சாமி அவர்கள் பெறுகிறார் என்பதை மகிழ்வுடன் அறிவிப்பு செய்கிறோம்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் கவிஞர் பி கே சாமி அவர்கள் கல்லூரியில்  இளம் கணிதம் படித்தவர். பாண்டிச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தற்போது பணிசெய்து வருகிறார்.

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர்களில் தனது கவிதையை அச்சில் பார்த்த ஞாபகம் இன்னமும் அழியாமல் இருப்பதாக சொல்லும் கவிஞர் இளம் வயதிலிருந்தே கவிதைகளின் மீதான காதலால், கவிஞர்களையும் கவிதை நூல்களையும்  தேடி படிக்கும் ஆர்வம் கொண்டவராக அலைந்ததை பெருமிதத்துடன் நினைவு கூறுகிறார். கவிஞரின் தீராத வாசிப்பு அனுபவம்தான் இவரது கவிதைகளை மேலும் ஒரு சிறந்தவிடத்தில் வசிக்க செய்துள்ளது என்பதும் உண்மை.

நமது படைப்பு குழுமத்தில் இருந்து வெளிவரும் தகவு, கல்வெட்டு மின்னிதழ்களிலும் பாக்யா, ஆனந்த விகடன் போன்ற ஜனரஞ்சக இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்து இவரை சிறப்பித்திருக்கின்றன!

நமது படைப்பு குழுமத்தில் இவர் பெற்ற அங்கிகாரங்கள்:
------------------------------
அக்டோபர் 2017ல்
படைப்பு குழுமத்தில் மாதந்திர சிறந்த படைப்பு
தேர்வு.

நவம்பர் 2017ல்
கவிக்கோ பிறந்தநாள் கவிதை போட்டி "பாதங்களால் நிறையும் வீடு" இரண்டாம் இடம்
தேர்வு கலாப்ரியா அவர்கள்.

மார்ச்சு2018 அம்மையார்
ஹைநூன்பீவி நினைவு பரிசுப் போட்டி "உயிர் திசை" மூன்றாமிடம் தேர்வு பழனிபாரதி அவர்கள்.

நவம்பர் 2020 கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த நாள் பரிசு போட்டி "கை கழுவிய காலம்" சிறப்பு பரிசு தேர்வு யவனிகா ஸ்ரீராம் அவர்கள்.

ஜனவரி 2020 தமிழக காவல்துறையும் படைப்பு குழுமமும் இணைந்து நடத்திய மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப் போட்டியில் "விஷம் நுரைக்கும் கோப்பைகள்" சிறப்பு பரிசு தேர்வு மு.மேத்தா

கவிஞரின் படைப்புகளே கவிஞருக்கான கவிச்சுடர் விருதினையும் அளித்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சியடைந்து கவிஞரை வாழ்த்துகிறது நமது படைப்பு குழுமம்.

இனி கவிஞரின் சில படைப்புகளைக் காண்போம்..

அகமும் புறமும் வெவ்வேறு படி  நிலைகள். அகம் புத்தனைப் போல் மென்று விழுங்கும் துயரத்தை புறம் நடிப்பால் தன்னை மெருகேற்றிக் கொள்ளும்... இரண்டுக்கும் இடைபட்டு தவிக்கும் கவிஞனின் குரலில் வெளிவரும் சில உண்மைகள்... கவிதையாக...
.
அகமும் புறமும்
----------------------

அடர்ந்த இருளை காய்ச்சி வடித்த
பசித்த ஏக்கமாக ஒலிக்கிறது
என் குரல்.

ஊழ்துடுப்பாய்  உள்நுழைந்து
சூழ்ச்சிசுழல் வாய்க்க துழாவுகிறது
வெப்பமிகுந்த பொய்.

வரிசையாக அடுக்கப்பட்ட நினைவுகளை 
ஒரே ஒரு அசைவு 
சாய்த்துக்கொண்டு போகிறது
இயல் எண்களால் ஆன இருப்பை

மறுபடி மறுபடியும் 
தூறிக்கொண்டே இருக்கும் தோல்விகளில் 
நனைந்து விடாமல் தப்பிக்க
கண்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை.

கொஞ்சம் மௌனத்தை 
இரும்புக் கம்பிகளாக நீட்டி என்னைக் 
கைதியாக வடித்திருக்கிறாய் துருபிடிக்க.

என் எதிரிக்கான அத்தனை வாசனையும்
உன் வார்த்தைகள் பூசியிருக்கிறது.

நிராயுதபாணியாக
நிற்பதை தவிர
வேறுவழியில்லை உண்மைக்கு.

---------------------------------------
மாடு சிறு நீர் கழிப்பதும் சாணிப் போடுவதும் சாதாரண ஒன்றுதான்! ஆனால் அது கவிஞரின் பார்வையில் ஒரு படிமமாக தெரிகிறது! இதுதான் அந்தக் கவிதை....

துயரத்தின் குறியீடு
-------------------------

மனிதர்களால்
அறியப்படாத மொழிகளில்
ஆற்று மணல் ஏற்றிய
வண்டி மாடுகள்
குறிவழியாக
சாலையில் வரைந்துப் போகும்
சிறுநீர்ச் சித்திரங்கள்
அழுதபடிச் சொல்லும்
ஆறு தன் வரலாறு.

---------------------------
 விற்பனை பொருட்கள் சிலவற்றுக்கு சிலர் விலங்குகளின் பெயர்களும், சிலர் பறவைகளின் பெயர்களையும் வைப்பதுண்டு. அதைப் பட்டியலிடும் கவிஞர் முடித்திருக்கும் விதம் சிந்தனைக்குரியது!

மாற்றம்
----------

மான் குடையானது
புலி சிகைக்காய்தூள் ஆனது
சிங்கம் பேரிட்சைப் பழமானது
பொன்வண்டு சோப்பானது
அணில் சேமியா ஆனது
கிளி தீப்பெட்டி ஆனது
சிட்டுக்குருவி லேகியமானது
புழு கூட புடவையானது
........
........
........
மனிதன் மட்டுமே
மிருகமாகிப் போனான்.
....
முரண் என்பதும் பிரியாத ஒன்றுதான்... புத்தன் சிலையை அதிக விலைக்கு விற்பவன் எப்படி ஆசையைத் துறந்தவன் ஆவான்? அழகுணர்ச்சிக்காக வாங்குவன் எப்படி புத்த பித்தன் ஆவான்? கவிஞர் காட்டும் வகைமை நியதியாகிப் போகிறது!

முரண்
---------
விலை அதிகம்
ஆசை துற
அழகான புத்தர் சிலை.
போதிமரத்தின்
கிளையில் செய்யலாம்
துப்பாக்கி கட்டை.
கூட்டில் குஞ்சுகள்
பசியில் ஏறும் பாம்பு
பாவம் போதிமரம்.
தியானத்தில் புத்தன்
திருடப்பட்டது ஞானம்
இந்து மதம்.
போதி மரத்தடியில்
சித்தார்த்தனை
கொன்றான் புத்தன்.
போதிமரத்தில் பழுத்த
ஒரே கனி
சாக்கிய முனி.
----------------------------
மழை மேகத்தை கறுத்த ராட்ஷச பறவை என்று புணையும் கவிஞர் ஒரு போர் வீரர்கள் போன்று இறங்குவதான கற்பனை அபர்மிதமானது! அவர்கள் துவம்சம் செய்வது எங்கு என்றால் ஒழுகும் வீடுகளையும் , ஏழைகளின் வசிப்பிடங்களையும்தான் என்று நகர்ந்து செல்லும் கவிதை ஒரு கசப்பான உண்மையும் கூட... 

.
மழைக்கு ஒதுங்கிய வானம்
------------------------------------

ஆலங்கட்டி முட்டைகளை இட்டு வீசுகின்றன
கறுத்த ராட்ஷச பறவைகள்.

ஊசி ஊசியாய் இறங்கி
ஒன்று கூடுகிறார்கள்
ஊர் நடுவே.

நகரும் பாதையில்
கூடாரங்கள் இட்டு உடைக்கிறார்கள்.

கலவரம் அப்பி
கவலை வழிய வரும்
அப்பா சொன்ன கதையில்
மலைப்பாம்பாக ஓடியது மழை.

வீட்டுப்பாடம் எழுதவில்லையென்று
தலையில் கொட்டும்
உத்திரத்தில் உள்ள ஓட்டை.

அலுமினிய தட்டில்
அரசாங்கத்தின் மழைநீர் சேமிப்பு திட்டம்
அம்மாவுடையது.

மழையைப்போல நானும்
வெளியேற்றப்படுவேன்
வகுப்பறை விட்டு
மாஸ்டர் கைடு எங்கப்பா?

கால்களைக் கட்டிக்கொண்ட
என் கேள்விக்கு
குடையென சுருங்குகிறது
அப்பா முகம்.

எனக்கு
சொல்லவேண்டிய சமாதான சொற்கள்
சொத சொதவென வழியெங்கும்.

எவ்வளவு திட்டியும்
சேற்றில் விளையாடுகிறோம்
நானும் மழையும்....

நாளை என்பது
சொரிய சொரிய
சேற்றுப் புண்ணாக ஊறுகிறது உள்ளே.

விடுமுறை விடுவார்களா?

-------------------------------
உயிர்த்திசை என்றக் கவிதையில் உயிர்த்தசையான அம்மாவை உயிர்த்தெழ வைக்கிறார் கவிஞர். அவள் மீன் தலையையும் முள்ளையும் மட்டுமே ருசி என்று சாப்பிடுவதும் கூட பிள்ளைகள் சதைப் பற்றை சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தான்! அவள் மௌனங்கள் அறையப்பட்ட சிலுவைக் கணக்குகள் என்பதை அவளின் அத்திமச் சடங்கில் கொள்ளி வைத்து புலம்பும் கவிதை உருக்கம்!
.
உயிர்த்திசை
----------------

இருள் மொழுகிய
சமையல் அறையில்
ஏவாளின் குறியீடுகளாக
எழுதப்பட்டிருக்கும்
அம்மாவின் காலக் கணக்குகள்.

பசியால் அறையப்பட்ட
பாவ உடம்புக்கு
மூன்று நாள் வரை
காத்திருக்க மாட்டாது
எந்த நேரத்திலும்
உயிர்த்தெழுவாள் உணவிட...

கவலை மீனோ காணாங்கத்தையோ
தலையும் முள்ளையும் மட்டுமே  தின்பாள்
தனி ருசி என்ற தகவலோடு.

அப்பா ஊன் பசியின்
காரம் குறைந்த ஒர் இரவில்
சாராய நெடி நகக் கீறல்களை
எரவானக் கழி
ஏற்றுக்கொள்ளும் பழியை.

உணர்வுகளை உள்ளடக்கிய
நத்தையின் கூட்டை ஒத்த
வீட்டில்
அவள் வாசத்தோடு
கண்ணீர் வழித் தடங்கள்.

கொள்ளிச் சட்டியில்
கொண்டு போகிறேன்
அவள் அடுப்பில் இட்ட அனலை
நாங்கள் உண்ட மீதியை
தீயின் நாக்குக்கு
தின்னக் கொடுக்க.

நாளை பால்ஊற்றுவேன்
பால் ஊட்டியவளுக்கு....

------------------------------
.இருவேறு நண்பர்கள் ... பால்யத்தின் சுவை கிராமப் பக்கங்களில் நிறைய, ஒருவன் நகரத்தின் வாசனையோடு திரும்பியப் பின் நட்பும் புளித்துப் போகிறது.. இதோ கவிதை!

பழம் புளி
-------------
.
பல்லாங்குழியில் 
பாண்டி வேண்டி
ஒவ்வொரு முறையும்
புளியங் கொட்டையோடு
போட்டுக்கொண்டே வருவான்
ஒருக் கண்ணை என் மீதும்
ஒருக் கண்ணைக் குழி மீதும்....

ஒத்தையா? ரெட்டையா? பிடிக்க
கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில்
ஒரு புளியங்கொட்டையை
ஒளித்து வைத்து
என்னை ஏமாற்றுவான்.

முந்திரிப் பருப்போ
பிஸ்தாப் பருப்போ காணாத கிராமத்தில்
வறுத்து ஊரவைத்த
புளியம் பருப்பை பிடி அள்ளி
யாருக்கும் தெரியாமல்
எடுத்துவந்து தருவேன்...

அடிவயிறு தெரிய
எக்கி எக்கி பறித்த அழகை
ரசித்தபடி புளியங் காயை
உப்பு மிளகாய் வைத்து சுவைப்பான்.

புளியம் மரத்தைச் சுற்றி
ஓடிபிடித்து விளையாடும்
போதெல்லாம் அகப்பட மாட்டான்.
நான் வேர் தடுக்கி விழ சிரிப்பான்.

ஒரு காலத்தில்
பூ விடும் போது போனவன்
வேறு காலத்தில்
சொக்கட்டான் பழமான போது வந்தான்.

பட்டணம் போய் படித்துவிட்டு வந்து
பட்டிக்காடான  என் நேசத்தை
சுவைத்து விட்டு
புளிப்பதாக சொல்லி துப்பிவிட்டு போனான்.

அதே புளிப்பு மீது
ஆசை அதிகம் ஆனதால்
ஊர் தின்னும் முன்பாக....

அதே மரத்தில்
தூக்கிட்டுக் கொண்டு பேயாகிப் போனேன் நான்.

--------------------------------
பிஞ்சுப் பாதங்களால் நிறையும் வீடு அழகானது! தன் மகளின் முன் தோற்பதும் சாவதும் கூட தகப்பனின் ஆசையாகிறது! நிறையும் கவிதை சற்றை துயரும் கூடி! 


பாதங்களால் நிறையும் வீடு
""""""""""""""""""""""""""""""
திருடனாக ஒளிந்து கொண்ட என் பால்யத்தை
போலீசாக கண்டுபிடித்து சுட
கைதியாக சாவேன் துடிதுடித்து.

ஏ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பாலை
பி ஃபார் பந்து என சொல்லி
பிரம்பு நீட்டி அவள் அடிக்கும் அழகை காண யாசகனாய் கை நீட்டுவேன்.
கண்டது கையளவு
காணாதது உலகளவு.

பூனையாக மெல்ல மெல்ல வந்து
கவிதை தேடும் கண்களை மூடுவாள்
பூனைக் கண்மூடினால் என் பூலோகமே இருண்டுதான் விடுகிறது.

தாகமே இல்லாத போதும்
தண்ணீர் கேட்பேன் நதியிடம்
ஓடிப்போய் கொலுசின் ஒலி சிந்த கொண்டுவந்தால்
புரையேற குடிப்பேன் தலை தட்டி நெஞ்சு தடவுவாள்.

ஒவ்வொரு நாளும் கோகுலாஷ்டமி தான்
அழகு சொட்ட சொட்ட அவள் குளித்து வரும் கால் தடங்கள்
ஞாபகத்தில் நீர் வைக்கும்.

வீடெல்லாம் படிந்துகிடக்கும்
பிஞ்சு பாதசுவடுகளில்
படுத்துகிடக்கிறது என் பாசம்
காய்ச்சல் என மருத்துவமனை சேர்த்த மகளுக்காக...
--------------------------------
வாழ்வியலோடும் வளமான கற்பனைகளோடும் வலம் வரும் கவிதைகள் என்றும் பழுதாவதில்லை... இன்னமும் சில கவிதைகள் கவிஞரின் எழுத்துகளாக!
.
வேர்த்திரள்
""""""""""""""""""""
நகரும் இரவின்
வலசைக் குறுக்கீடுகளாய்
நட்சத்திர விடுதிகள்.

களிற்றின் காலில் இடறும்
லட்சுமண ரோடுகளில்
கார்பன் மோனாக்ஸைடின் கவிச்சை அடிக்கிறது.

சாம்பல் பூத்த நெருப்பு கூட்டத்திடமிருந்து
கும்கி மனிதர்களால்
வலுக்கட்டாயமாக பிடுங்கப்படுகிறது
அதன் வனம்.

மலைக் காட்டை கற்பழித்து கொன்ற குற்றவாளிகள்
தேநீர் கோப்பைகளில் கண்ணீர் குடித்தக்கதை
பறவைகளின் பாடல்களில் பிசுபிசுக்கிறது.

ஒரு மரத்தை சாய்த்து
ஒரு மழையை சாகடித்த பாவிகள்
கனி ருசியில்.

அன்றொரு நாளில் நிழல் விரித்து
மரத்தின் மடிசாய்ந்து
ஆக்சிஜன் அருந்தியவர்களை
ஓசோன் ஓட்டைகள்வழிப் பார்க்கிறது வானம்.

சூரியன் நுழையத் தயங்கும் காடுகளில்
மனிதக் காலடிச்சுவடுகளில்
குருதிவாடை.

உயிர் வனத்தின்
குறுக்கு வெட்டு தோற்றம்
படம் வரைந்து நம் பாலித்தீன் பாவங்களைக் குறிக்கிறது.

மண்ணை இறுக்கப்பற்றி
மனிதம் வளர்த்த வேர்த்திரள்கள்
கஷாயத்திற்கும் கருமுடிக்கும்
காய்ச்சப்படுகிறது.

காட்டுத்தீ என்பது
வனத்தின்--
ஜத்ரு யாகமாக இருக்கலாம்.

------------------------------------

பிரிவுமானவள்
-------------------

உன்மீதான என்பிரியங்களுக்கு பிரிவு ஒன்றும் புதிதில்லை.
கண்ணீரை ஆவியாக்கும் ஜன்னலுடன்
புழுதிப் பறக்கப் போகும் பேருந்துகளில் சுழல்கிறது
கறுத்த கால உருளைகள்.
இருவேறு புள்ளிகளிலிருந்து இழுத்து விடுகிறது
கயிறும் மிட்டாயும்.
இறுதியாக இருக்கும்
கனவின் மிச்சங்களை
நம் தோளில் சுமக்கலாம் என்ற
வார்த்தைகளுக்கு
நிறைய சுருக்கமும்
சில பற்களும் இல்லை தானே.
-------------------------------------

மழையின் மறுபக்கம்
---------------------------

வெட்வெளியில் மழை
பெய்து கொண்டிருந்தது.

யாருமற்ற அதன்
கூக்குரலாக ஒலிக்கிறது
சோ.... என்ற ஓசை.

துளியின் அதிர்வில் பறக்கும்   மண்ணின் வாசம் கிளைகளைத் தேடுகிறது அமர.

தவளைகளுக்கு தகவல் போகாததால்
கவலைகள் குழப்பி
கத்திக் கொண்டிருக்கிறது தனிமை.

அழையாத வீட்டிற்கு
நுழைந்த விருந்தாளிபோல
நிர்கதியாக
நின்று பெய்கிறது நினைவுகள்.

ஈரம் தைத்த ஆடையோடு இறுக்கி அணைத்த குளிரோடு
பார்க்க பரிதாபமாக
சேறு குழப்பி விளையாடும்
குழந்தை மனசை
வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போகமுடியாது.

துவைத்த துணியை காயவைத்திருக்கிறாள் மனைவி...
சின்ன வெங்காயம் விலைக்குறைவாக
கிடைத்தென வடகம் காயும்
அக்கா வீடு....
ஆர்கானிக் எண்ணை வித்து
காயும் சித்தியும் சீந்த மாட்டாள்...
கல் சூலை வியாபாரம் செய்யும்
நண்பனும் விரும்பவில்லை.

மழைக்கு கூட ஒதுங்கியதில்லை என்று
என்னை யாரும் சொல்ல முடியாது.

கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறேன் எனது குறையை...

-----------------------------
.
ஈரமற்ற இரவுகள்
----------------------

உறக்கத்தை இமைகளுக்கு கீழேகொட்டி கவிழ்த்து வைத்துவிட்டு
மரத்துப்போன மனக்கதவை சாத்தியபடி வெளியே வந்தேன்.

நீர்மமாக சொட்டிக்கொண்டிருக்கும்
இரவு
வாசல் படிவழியாக
வழிந்தோடுகிறது.

தூரத்து தவளைகளின்
ஒலிப்பின்னலில்
துணைகளின் தொலைந்த முகவரித் தேடல்.

எங்கிருந்தோ ஓடிவந்து உள் நுழைந்த நாயொன்று
உடல் சிலுப்பி உதிர்க்கிறது ஒட்டிய மழை தூசியை.

செவ்வாய் தோஷத்தில்
நமுத்துப்போன கனவுகளில் பூஞ்சை வாசம்.

பாசரச துளிகளாய்
கனக்கிறது கைஏந்திய மழை.

வெளிச்சம் பூசி விடிந்த பகல்வெளியில்
சிறு சிறு குட்டைகளாக
தேங்கிக்கிடக்கிறது
வடிந்து போன உணர்வுகளின்
மிச்சம்.

------------------------------------
மக(ள்)மாயி
----------------------------
அம்மு குட்டி அள்ளித் தின்ற
பால்சோற்று பருக்கைகள்
இறைந்து கிடக்கின்றன
எனது பகல்களாக...

சுடுநீரில் எனை கொதிக்க விட்டு
நீராட்டி தூக்கிவந்து
பவுடர் அடித்து
திருஷ்டிக்கு வைக்கும் பொட்டளவே இருக்கும் எனது இரவு.

வாயில் வைத்த எச்சில் கை எடுத்து
வீசும் போது ஈரமாகிவிடுகிறது
மழைக்காக மலையேறி
குளிர வேண்டிய காற்று.

என் எதிர்கால கனவு
கண்ணுறங்கும் பொழுது
நரி மிரட்டினாலும்
இதழ்களில் பூப்பது
புத்தனின் புன்னகை.

ஓடிவந்து காலைக் கட்டிக் கொண்டு
நம்மை நகராதபடி செய்துவிடுகிற அந்த நதியிடம்
நடுவில் பாறையாக நின்றாலும் பரவாயில்லை.

அணைத்துக் கொண்டு
கொஞ்சும் போது
மீசை குத்தி
ஆவென கத்தவிட்டதற்கு ஆண்மகனாய் பிறந்ததற்கு வெட்கப்பட நேர்கிறது.

------------------------------
.
காதல் கருவிகள்
----------------------

ஆயுதம் என்பது
உலோகமாகத்தான்
இருக்கவேண்டும் என்ற உத்தரவாதம் இல்லை
உன் உதடுகளாகவும் இருக்கலாம்.

வெட்டுவது
கத்தியாகத்தான் இருக்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை
உன் கண்களாகவும் இருக்கலாம்.

இரும்பு கம்பியில் செய்ததுதான்
சிறையாக இருக்கவேண்டும் என்ற சட்டமில்லை
உன் இதயமாகவும் இருக்கலாம்.

அணுவைப் பிளக்கும்
கதிர்வீச்சு
ஹைட்ரஜன் குண்டாகத்தான்
இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை
உன் அமைதியாகவும் இருக்கலாம்.

கனிம ஆயுதங்களாய் கொல்லும்
உன் அழகுக்கும் கொண்டாடலாம்
ஆயுத பூஜை!
-----------------------------------------------

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • க.மு.குமார் Avatar
    க.மு.குமார் - 2 years ago
    கவிதை அனைத்தும் ஆழமான வலிமிகு வரிகள் அனுபவித்து எழுதியுள்ளார் மிக்க சிறப்பு,வாழ்த்துக்கள்

  • பி.கே.சாமி Avatar
    பி.கே.சாமி - 2 years ago
    படைப்புக் குழுமத்திற்கு எனது நன்றிகள்.