logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் நயினார்
.
தன் குழந்தையிடம்
கேட்கும் தாயைப்போல..
தரையிறங்காத பறவைகளிடம்
தீனியை காட்டியே
முத்தம் பெறுகிறது..பூமி
---
என்றோ விழுந்த
மழைத்துளிகளைத் தான்
கயிறு கட்டி தூக்குகிறார்கள்.

கிணறு.

அழகியலை முத்தமிட்டு மிளிரும் இந்தக் கவிதைகளை எழுதியவர் கவிஞர் நயினார் அவர்கள்.

இந்த மாதத்திற்கான படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதை சொல்லழகர் கவிஞர் நயினார் பெறுகிறார் என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம்.

படைப்பு குழுமம் ஆரம்பித்த ஆண்டிலிருந்து உறுப்பினராக இருக்கும் இவரின் முழுப்பெயர் முகமது நயினார்.
இராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்ததிலிருந்து சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார்.
சிறுவயது முதல் கதை கவிதை ஓவியங்களில் நாட்டமுடைய இவர்..1989 முதல் 1991வரை சாவி,குமுதம்,பாக்யா,
தினகரன்,போன்ற பத்திரிக்கைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளை அன்புத்தம்பி நயினார் என்ற பெயரில் எழுதியிருக்கிறார்.
திரைப்பட இயக்குனராக பாடலாசிரியராக வரவேண்டும் என்ற ஆர்வத்தில் முயற்சித்துக் கொண்டிருந்த வேளையில் குடும்ப சூழ்நிலையால் 21 வயதில் வெளிநாடு சென்றிருக்கிறார்.
பதிமூன்று வருடங்கள் சவுதியில் வேலை பார்த்திருக்கிறார்.
2016 ல் "மூக்குத்தி அம்மன்" திரைப்பட இயக்குநர் N.J.சரவணனிடம் துணை இயக்குநராக "பட்ற" படத்தில் பணியாற்றியதோடு அந்த படத்தில் பாடலும் எழுதியிருக்கிறார்.
தொடர்ந்து இன்னும் வெளிவராத மற்றொரு படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறார்.
திரைப்படத்துறையில் இருந்து கொண்டே கால் டாக்சியும் ஓட்டி வருகிறார்.
தன் வாழ்நாளில் இதுவரை பனிரெண்டு லட்சம் கி.மீ வாகனம் ஓட்டியிருப்பதாக சொல்லும் இவர் குடும்ப சூழலால் மேல்நிலைப் பள்ளியோடு படிப்பை முடித்துக்கொண்டவர்.
இரண்டு வருடங்களுக்கு முன் படைப்பின் மாதாந்திர சிறப்பு பரிசு பெற்றிருக்கிறார்.
படைப்பாளிகளை ஊக்குவிக்கும் படைப்பு கல்வெட்டில் இவரது கவிதைகளும் அவ்வபோது இடம் பெறுகிறது.
சரளமாக ஐந்து மொழி பேசும் இவரின் கவிதை மொழி சாமானியருக்கும் புரியும் படியாக எளிய நடையில் இருக்கும் என்பது சிறப்பாகும்.

இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம்:

---
நீர்வீழ்ச்சியின்  அழகும், பயனுறும் இவரது சொல்லழகால் குளுமையாகிறது!
.*
மலையழகியின்..
விலகாத மாராப்பாய்
இந்த வெள்ளை துப்பட்டாவில்
தலை துவட்ட..
மக்களுக்குள் போட்டா போட்டி.

குற்றாலம்.
🎶🎶🎶🎶🎶🎶
மழையின் பயணத்தை வேறு யாரும் இவ்வளவு அழகான சொல்லாடலால் எழுதியிருப்பார்களா என்பது அய்யமே!
*
எல்லாவற்றையும்
கழுவி சுத்தம் செய்துவிட்டு
பாவம் அது..
சாக்கடையில் விழுந்துவிட்டது.

மழைத்துளி.
---
முரணழகில் இதம் சேர்ந்த குளிர், கவிஞரின் மொழியழகை செம்மை செய்கிறது....
*
தேநீரின் சூட்டை
மெல்ல மெல்ல பருகி
கொண்டிருக்கிறது..
பனி.
---
இப்படியான சிந்தனை ஒன்றிலொன்றாய் ஒன்றி அதன் வலியுணரும் போதே வெளிப்படும்...சிறந்த சிந்தனை....
*
கைகள் இல்லையே
என நாய்கள்..
கவலைப் படுவதெல்லாம்
மனிதன்..
கல்லை எடுக்கும்போதுதான்.
---
ஒரு கவிதையின் பயணம் சில குறியீட்டால் சிறப்புறும்... இந்த கவிதையும் அப்படித்தான்! நத்தையின் குறியீடு...ஒரு எளியவனின் குறியீடாகவே இங்கு காண முடிகிறது. காகம் என்ற குறியீடு பரிதாபத்தை பார்ப்பது மட்டும் இல்லை... அது அதனை உணவாக்கிக் கொள்ள காத்திருக்கும் தருணமாகவும் அமர்ந்திருக்க... நடைபாதைவாசி அப்படியே எப்போதும் போல் இப்போதும் இருக்கிறான்! அருமையான கவிதை!
*

முன்பணம்
வாடகை
மின்கட்டனம்
வரி
முகவரி
இடி
மின்னல்
காற்று
மழை
இப்படி எந்த
கவலையுமின்றி
செல்லும்..
நத்தையாரை
பொறாமையோடு
பார்த்தது..
மரத்தின் மேலிருந்த
காகம் மட்டுமல்ல..
மழைக்கு ஒதுங்கிய
நடைபாதை வாசிகளும்தான்.
---
மருதாணியின் வாழ்க்கை பறிக்கப் பட்டதிலிருந்து எத்தனை துயரம்! அவற்றையெல்லாம் துடைத்துவிடுகிறது  கைகளில் சிவந்து ஒரு அழகியலைப் பெறும் போது! வாழ்க்கையும் அப்படித்தானே!
*

செடியிலிருந்து
பறிக்கும்போது வாடியது
அரைத்து குழைத்தபோது
துடித்தது..
கிண்ணத்தில்
வைத்தபோது குழம்பியது..
கழுவியபோது
கண்ணீரோடு விடைபெற்றது.
உங்கள் பார்வைக்கு
வந்ததிலிருந்து
சோகமே பிரதானமாய்
பொழுதை கழித்திருந்தாலும்..

உங்கள் உள்ளங்கையில்
வைத்து அதை தாங்கிய..

அந்த சில மணி நேரத்தை மட்டும்
மகிழ்ந்து..
சிரிப்பாய்..சிவப்பாய்..
வாழ்ந்ததாக
பதிவு செய்து போயிருக்கிறது.

மருதாணி.

---
ஒரு ஞான வெளிப்பாடலாய் கவிஞர் மரத்தை படிமமாக்கி பாடும் கவிதை! எதைத் தின்றால் பித்தம் தீரும்? எதைத் திறந்தால் காற்று வரும்? உலக வாழ்க்கை உண்மையின் மீதுதான் உட்கார்ந்திருக்கிறதா? அப்படியென்றால் மரணம் ஏன்?
*
மண்ணுக்கடியில்
மூச்சுத் தினறிக் கொண்டிருந்தாலும்
சுத்தமான காற்றை
பிரசவித்துக் கொண்டே
இருக்கிறது மரம்.
இது வெட்டப்படும்போது
பிரிந்து விடுகிறது நிழல்.
பறந்து விடுகிறது பறவைகள்.
ஆக்ரமித்த ஆறறிவுமட்டும்
அதன் பிணத்தை
வைத்துக்கொண்டு..
கதவு திறந்தால்
காற்று வருமென்று
சொல்லி திரிகிறது.
---
நடைபாதை வாசிகளின் இருட்டை வெளிச்சமாக்கும் கவிதை நயினாரின் சொல்லழகில் சிந்திக்க வைக்கிறது!
*
நடைபாதை..
உறுதியில்லா பாதுகாப்பு
என்பதாலோ என்னவோ
இரவின் அமைதியில்
உழைப்பு..
உறங்கி கொண்டிருப்பதை
வெளிச்சம் மட்டும்..
அச்சத்தோடு
பார்த்துக் கொண்டிருக்கிறது.
---
அடையாளம்! உண்மையின் பிரதியா? அல்லது முகமூடியா? ஆட்சிக்கு வருகிறவன் தவறுகளே செய்தாலும் தேச பக்தனாகவே அவனை அடையாளம் செய்கிறது சமூகம்! சாட்டையான கவிதை!
*
மாறுவேட போட்டிக்கு..
திருடனைப் போல
வேடமிட்டு வந்தவனை
எல்லோரும் பாவமாக
பார்த்ததின் விளைவு..
திருடனின் அடையாளம்
மாறிவிட்டதோ என
யோசித்தவன்..
சட்டென வேடத்தை கலைத்து
தனக்கு கொடுக்கப்பட்ட
நேரத்தில்..
அழுத்தம் திருத்தமாக
தன் வாய்க்கு வந்த பொய்களை சத்தமாக சொல்லத் தொடங்கினான்.
வியப்பு என்னவென்றால்..
பலத்த கரகோசத்திற்கு இடையில்
தேசபக்தராக..
முதல் பரிசை பெற்றான்.
---
குழந்தைப் பேறு இல்லாதவளின் நிலையை இப்படித்தான் சொல்ல முடியும்....
*
குழந்தைகள்கூட
பொம்மைகளுக்கு
தாயாகிவிடுவதுண்டு.
குழந்தைகளுக்கு
பொம்மையாகவே
வாழ்ந்துவிடத் துடிக்கும்
அந்த தாயாகாத பெண்ணுக்குத்தான்
தனக்கென்று குழந்தையாக..
ஒரு பொம்மைகூட
கிடைப்பதில்லை.
---
உழவனுக்கான அங்கீகாரத்தை அவனை கவிஞனாக்கி அழகுப் பார்ப்பதைத் தவிர .... ஒரு கவிஞனால் வேறு  என்ன செய்ய முடியும்!
*

தனித்தனியாக விழுந்த மழைத்துளிகளை
கோர்த்து மாலையாக்கி..
மண்ணுக்கு சூட்டி
அழகு பார்த்து..
மகரந்த சேர்க்கைக்கு
மனு கொடுத்து..
கருத்தரித்த காதலை
உச்சி முகர்ந்து..
தாய்மையோடு தாலாட்டி
தந்தையாக சீராட்டி..
நாம் வயிறு நிறைய
இந்த புவியின் மீது..
கவிதை எழுதும்
உழவனைவிட..
மண்ணுக்கும்
விண்ணுக்குமான உறவை
வேறு யார் ரசிக்க முடியும்.
---
ஒரு கவிஞனின் பாடுபொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் கிடையாது! அவன் எதைக் கண்டாலும் பித்தாகி மோன நிலைக்கு சென்றுவிடுவான்.... நமது கவிச்சுடர் நயினார் அவர்களும் அபாடியாகத்தான் சொற்களை கையாள்கிறார்! கவிஞரின் மற்றும் சில கவிதைகளை நீங்களும் வாசித்து அனுபவியுங்கள் :
*

ஒரு கொலை மிரட்டலுக்கு
ஒத்திகை பார்க்கிறதோ

தன் ஆயுதத்தை
பரிசோதனை செய்கிறதோ

குத்தாட்டம் போட
கூத்து கட்டுகிறதோ

நீண்ட நேரமாக
சுவற்றில் அமர்ந்திருக்கிறது கொசு

ஒருவேளை..

குடிகாரனுக்கு முத்தம் கொடுத்த
போதையாக இருக்குமோ..
---
நீயும் நானும்..
அருகருகே தான் இருக்கிறோம்.
நம்மை திறக்கும்
சாவி மட்டும்..
கணவன் மனைவியென்று
யார் கையிலோ இருக்கிறது.
பூட்டிய மனதை..
இழுத்துப் பார்க்கும்
முயற்சியில்..
காதல் இன்னும்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
உடைத்து திறக்க
மனமில்லாத
கலாச்சார பண்பை போல..
---
தனியாக..
மேய்ந்துகொண்டிருந்தது நிலா.
பசிக்கும்போது..
ஒன்றிண்டு நட்சத்திரங்களை
பிடிங்கி தின்றது.
மேகத்தில் இறங்கி
அவ்வபோது
குளித்துவிட்டும் வந்தது.
கடலில் முகம் பார்த்து
ஒப்பனை செய்தது.
நதி மெலிந்து
சாலை பெருத்ததையும்
வனம் சுருங்கி
ஊர் விரிந்ததையும்
ஆக்ரமிப்பின்
அணிவகுப்பாய்..
ஆதம் கடித்த எச்சில் கனி
விதைகளாவதை
விந்தையாகவே நினைத்து..
பங்காளி பூமியைப் பார்த்து
எகத்தாளமாய் சிரித்தது.
வாரிசு இல்லா
தலைவன் தானென..
அதில் கர்வம் தெரிந்தது.
---
சடங்கான மகளுக்கு
தெரியாமல்..
அர்த்தசாமத்தில்
கணவனின் நெருக்கத்தில்
இருந்தவளை..
ரவிக்கை சரி செய்து
தள்ளிப் படுக்கச் சொல்லும்..
கட்டளையாக இருக்கலாம்.

அசைபோடும் தாய்ப்பசுவிடம்
பால் குடிக்கும் கன்றுக்கு
போதுமென்ற
குழந்தையின் பசி
வேண்டுகோளாக இருக்கலாம்.

கதவு திறந்து
கோலம் போட வரும்
கனகாவின் காதலனை
வரச் சொல்லும்
காதல்..
கீதமாக இருக்கலாம்

கலப்பயே ஆயுதமாக கொண்ட
கந்தசாமியை
கழனி அழைக்கிறதென்ற
பன்னாட்டு தரகரின்
எகத்தாளச்
சிரிப்பாக இருக்கலாம்.

காத்திருக்கும் குடங்களின்
காவலுக்கு செல்ல..
பெண்டுகளை எழுப்பும்
தமிழகத்து..
தாகமாக இருக்கலாம்.

வெட்டவெளியில்..
அவசரத்திற்கு வந்த
பெண்களை
அவசியத்திற்கு
எழுந்திருக்க சொல்லும்
தேசத்தின்..
ஓலமாகவும் இருக்கலாம்.

அதிகாலைப் பொழுதில்
எவருமற்ற இடத்திலும்
ஒலியெழுப்பியே..
விரையும்..அந்த இரயில்.
---
அங்கு இளைப்பாற வந்த
நடை வியாபாரிகள்
அதற்கு அஞ்சலி
செலுத்திவிட்டே போனார்கள்.

அதில் கூடு கட்டியிருந்த பறவைகள்..
கீழே விழுந்திருந்த தமது
குஞ்சுகளை கவ்விகொண்டு
வேறு இடத்திற்கு பறந்தது.

அணிலொன்று
தன் குட்டியை தேடி
சுற்றி சுற்றி வந்தது.

கீழே விழுந்திருந்த காய்களை
துடைத்து துடைத்து தன் குட்டிக்கு
கொடுத்துக் கொண்டிருந்தது
ஒரு குரங்கு.

குயிலிட்ட முட்டையென தெரிந்தும்
அதனை உருட்டி நகர்த்தி
பசியோடு அடைகாத்திருந்தது
ஒரு காகம்.

தலையாட்டி கதை கேட்ட
மரத்தை காணாமல்
காற்று..
வேறு திசை பயணமானது.

இது எதுவும் தெரியாமல்..
பக்கத்தில் முளைத்த சுவரை இடித்து..
முன்னேறிக் கொண்டிருந்தது
வெட்டப்பட்ட அந்த மரத்தின் வேர்.
---
ஒரு நிமிடத்தில் கடப்பதற்கு
நான்கு மணிநேரமாக..
நின்று கொண்டிருக்கிறாள்.
சூரியனுக்கு..
கதவடைத்திருக்கிறது மேகம்.
வியர்த்திருந்தாலாவது..
விரைத்திருந்திருப்பாள்.
சில்லென்ற காற்று
அவளின் நிதானத்தை..
அசைத்துக் கொண்டிருக்கிறது.
தளர்ந்து கொண்டிருக்கும்
பொறுமைக்கு..
கொக்கி போட்டுக் கொண்டிருந்தது
அவளின் இயலாமை.
சாலையில் அவசரமாக கடக்கும்
வாகனங்களின் சாயலில்
அவள் உணர்ச்சிகள்.
சட்டென மறித்து நிறுத்தும்
சிவப்பு விளக்காய்..
அவள் உணர்வுகள்.
அந்த மரத்தின் மறைவிலிருந்து
வந்த காவலரை பார்த்தாள்.
கடமை அவரை
கட்டுப்படுத்தவில்லை.
கண்ணியம் அவரை
விட்டுக் கொடுக்கவுமில்லை.
நினைத்த நேரத்திற்கு..
எந்த பாரத்தையும் இறக்கிவிடுவது
ஆண்களுக்கு இயல்பாகிவிடுகிறதே
என்ற ஆதங்கம்..
அவள் கோபத்தை
இறுக்கி பிடித்திருக்கிறது.
சாலையில் நெளிந்து
கொண்டிருப்பவள்..
காவல் உடையில்
மிடுக்காய் தெரிவதற்கு..
இன்னும் நாற்பது நிமிடங்களாகும்.
ஆமாம்..
முக்கிய பிரமுகரின் கான்வாய்
கடந்த பிறகு..
அழைத்துப்போகும் வண்டி வந்து
பணிமனை கழிவறை சென்றே..
அவள் சிறுநீர் கழிக்கவேண்டும்.
---

சூரியனை எழுப்பிவிட்டே
வயலுக்குச் செல்வான்.
வெயில் போர்த்திய மேனியில்
பூக்கும் வியர்வையை
பறித்து பறித்தே
சோர்ந்து போகும் காற்று.
கஞ்சி கலையத்தை
இவன் கையிலெடுக்கும்போது
அடம்பிடித்த பசி
அடங்கிப் போயிருக்கும்.
மாலையில் மாடோடு
நிலவையும் அழைத்துக்
கொண்டே வீட்டிற்கு செல்வான்.
நடை தளர்ந்ததில்லை
உணவு உற்பத்தி செய்யும்
இயற்கையின் காதலன்
என்ற கர்வம்
விழியோடு எப்போதும்
உருண்டு கொண்டிருக்கும்.
தன் வயல்வெளியின் விலாசத்தை
மேகத்துக்கு அனுப்புவான்.
நதிக்கு வழி காண்பித்தே
எங்கோ பெய்த மழையை
வாய்க்கால் அழைத்து வரும்.

மண் உரமாவதற்கு..
வாத்துகளும் ஆடுகளும்
அவன் வயலுக்கு வந்து
தவமிருக்கும்.
பயிரை பாதுகாக்க
கோழியும் குஞ்சுகளும்
பூச்சிகளை பலி கொடுக்கும்.
எள் எண்ணெய்யாக
மாடுகள் கிரிவலம் போகும்.
நெல் அரிசியாவதற்கு
யானைகள் ஆசீர்வதிக்கும்.

விதையை மண்ணில்
பூக்க வைத்தான்.
கொடியை விண்ணோடு
படரவிட்டான்.
பூவை காற்றோடு
சிரிக்கவிட்டான்.
காயை வெயிலோடு
கனியவிட்டான்.
அது ஒரு பொற்காலம்
என்பார் அப்பா.

விவசாயி
என்று சொல்லிக்கொள்ள
பெருமைபட்ட காலம் இப்போது..
விவசாயி என்று சொல்பவனை
அனுதாபப் பார்வை
பார்க்க வைத்துவிட்டது.
இன்னுமா செய்கிறாய்
என்று ஏளனமாய்
சமூகத்தின் பார்வை
எம் உழவனுக்கு
பிழைக்கத் தெரியாதவன்
என்ற முகமூடியை மாட்டிவிடுகிறது.

மண்ணை மலடாக்கி
உழவனை கிழவனாக்கிய
சமூகம்..
படித்த இளைஞனை
வேளாண்மைக்கு
ஊக்கப்படுத்தவில்லை.
டை கட்டி கை கட்டிய
அடிமை தொழிலுக்கு
ஆடம்பரத்தின் கதவை
திறந்துவிட்டே காத்திருக்கிறது.
பன்னாட்டு நரிகள்
பணத்தை கொடுத்து
அவன் நேரத்தை வாங்கி கொள்ள
வண்ணக் கனவுகளை காட்டி
அவன் உறக்கத்தை
களவாடுகிறது.
ஆசையை கொடுத்து
ஆரோக்கியத்தை அபகரிக்கிறது.
வேளாண்மைக்கு எதிரான
சிந்தனைகளை திணிக்க
உழவனின் மகனுக்கு
அரசே போதுமானதாக இருக்கிறது.

உரு மாற்ற செய்யப்பட்ட விதை
உருவமாற்றத்தை தருகிறது.
தாவரங்களுக்கு
பருவ மாற்றத்தை தருவதில்லை
விலை போன அதிகாரிகளிடம்
விதை வாங்க
நிர்பந்திக்கப்படுகிறான்
ரசாயான உரம் வாங்க
வரிசையில் நிற்க
வைக்கப்படுகிறான்.
கடன் காலைப் பிடிக்கிறது.
மகனின் பேண்ட் சட்டை கனவு
அவன் கையை பிடிக்கிறது.
சேற்றில் ஒரு காலை
வைத்துக்கொண்டே
ஆற்றில் ஒரு காலை வைக்கிறான்.
வறண்ட ஆறு சுட்டதும்
மகனோடு கல்லூரியில்
காலை வைக்கிறான்.

பசிக்கு பாத்தி கட்டியவன்
தன்னை பற்றிய பரிகாசத்திற்கு
வேலியை கட்டுகிறான்.
உழைப்பை தின்றுவிட்டு
ஊதியத்தை ஏப்பம் விடுவதாக
அவன் விளைய வைக்க
எவனோ விலையை வைக்கிறான்.

நிலமோடு வாழ்கிறான்
நலமோடுதான்
வாழமுடியவில்லை.
வயல்வெளியில்
தனக்கு தொட்டில் கட்டி
தாலாட்டியவனுக்கு..
மழை இப்போதெல்லாம்
கண்ணீர் அஞ்சலி
செலுத்தவே வருகிறது.

அழுத விழிகள்
உழுத மொழியில்
அரசை தொழுத வேளையில்
அசராத உழைப்பை
தானியமாக பெறுவதற்கு
தொடரும் அச்சத்தை
மானியமாகவே தருகிறார்கள்.

எதையாவது பயிரிட
வேண்டுமென்று
எப்படியாவது போராடிட
வேண்டுமென்று..
வேளாண்மைக்கு
வியர்வையை தருகிறான்.
வெள்ளாமைக்கு கண்ணீரை
பெறுகிறான்..ஆமாம்
வாங்கிய கடனுக்கு
விளைச்சலை மட்டுமல்ல
நிலத்தையும் தருகிறான்.
எல்லை கடந்த
தீவிரவாதமென்பது
நமக்கு எங்கோ நடக்கும் சம்பவம்.
உழவனை பொருத்தமட்டில்
அது குமட்டிக்கொண்டிருக்கும்
சஞ்சலம்.

பசியின்
நிர்வாணத்தை மறைக்க
மண்ணுக்கு ஆடை உடுத்தி
நம் வயிற்றை
சமாதானப்படுத்தும்
இந்த மாபெரும் கலைஞன்
புவியின் மீது
எழுதும் கவிதையெல்லாம்
வைரலாகத்தான் ஆகிறது.
எழுதிய வேளாண்கலைஞன் மட்டும்
தன் அடையாளங்களை
தேடிக் கொண்டிருக்கிறான்.
பாதகர்களே..
உங்கள் கட்சி கொடிகளுக்கு
அவன் கோவணம்தானா கிடைத்தது.
---
இயற்கையின் ரகசியங்களை
அம்பலப்படுத்தியது
யாரோ எவரோ
இந்த இலை காலம் முழுவதும்
வன்கொடுமைக்கு
ஆளாகி கொண்டிருக்கிறது.

மனிதனின் வியக்கத்தக்க
கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று.
ஒரு தாவரத்தின் தியாகத்தை
கடமையாக கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உறக்கத்தை விரட்ட
இதை தேடுவார்கள்.
ஆதியில் எதை தேடும்போது
இது கிடைத்ததோ.

அசதியை அவிழ்க்க
பத்து ரூபாய் போதும்.
சேவையின் தேவைக்கு
கற்பிழந்து போய்விடுகிறது
இந்த பச்சையம்.

பசியை பகைக்க
விருந்தாளியாக இது
கௌரவிக்கப்படும்.
விருந்தாளிகளுக்கெல்லாம்
முதல் பலி இதுதான்.

இரவோ பகலோ
வாகன ஓட்டிகளுக்கு
இதுவே துணை.
பனியையும் வெயிலையும்
ஒரு காலத்தில்..
இது விழுங்கியது காரணமோ.

ஆரியமும் திராவிடமும்
கூட்டணி அமைத்து
வெற்றி காண்பது இதில்தான்.
இதன் பின்னனியில்
இருக்கும் அரசியல்..
குருதி சிந்தும் அன்றாட நிகழ்வு.

பாதை எங்கும் கொதித்திருக்கும்
இந்த தேயிலை
பயணத்தை முடுக்கிவிட்டு
தன் வரலாற்றை முடித்துக் கொள்கிறது.

எல்லோரும் தேநீர் என்பார்கள்
என்னை பொருத்தமட்டில்
இது..
உற்சாகத்தை வம்புக்கு இழுக்கும்
மூன்று நிமிட முத்தம்.
---
அதிகாலையில்
சூரியனை..
உசுப்பிவிட்டே
புறப்படுவான்.

புன்னகையை
அணிந்துகொண்டு..
பொழுது விடிந்து விட்டதாக
கூவி கூவி அழைப்பான்.
வட்டிக்கு வாங்கியதை
கூப்பாடு போட்டே விற்பான்.

பேரம் பேசும்போது
பாரம் குறைவதற்கும்..
வராத வேளைக்கு
வரச்சொல்லி
கேட்பவர்களுக்கு
வந்த விலைக்கும்..
கொடுப்பான்.

மதிய வேளை
உணவு உண்ண
இவன் பார்ப்பது
நேரத்தை அல்ல
அடர்ந்த மரத்தைத் தான்.
இவன் இறக்கி வைப்பது
கூடையை மட்டுமல்ல
தலையில்..
தூக்கி சுமந்த
சூரியனையும் தான்.

தெருத் தெருவாய்
சுற்றும் தன்னைச்
சொல்வதாக கருதுவதாலோ
என்னவோ..
நாய்கள் ஜாக்கிரதை
பெயர் பலகைகளை
தாங்கி நிற்கும்
பெரிய வீடுகளின்
வீதிகளுக்கு
இவன் செல்வதில்லை

பத்து ரூபாய்க்கு
இவன் சில்லரையில்லை
நாளை தாங்கமா
என சொல்லும்போது
இரண்டு ரூபாய்
சில்லரை தர முடியாமல்
இரண்டு சாக்லெட்டைத்
திணிக்கும்
பல்பொருள் அங்காடியின்
கதை இவனுக்கு தெரிவதில்லை.

இவனிடம்..
வறுமை வசதியாக
இருந்தாலும்..
இவன்
தன்மானத்தை
வறுமைக்கு விற்றதில்லை

இரக்கப்பட்டு
இவனுக்கு
விடுப்பு கொடுக்க
மழை அவ்வபோது
தரையிறங்கும்..
இது தெரியாமல்
பிழைப்பில்
மண்ணள்ளி போடுவதாய்
இவன் அதை திட்டுவதுமுண்டு.

இலக்கில்லா பயணத்தால்
அசதியின்..
ஆக்ரமிப்பில்
துவளும்போது
இவனை கைத்தாங்கலாய்
வீட்டிற்கு..
அழைத்து செல்வது
வானத்து நிலவுதானாம்.

நடை வியாபாரி.
---

நிராகரிப்புகளையும்
ஏற்றுக்கொள்ளும் பக்குவம்
வெறிபிடித்த..
வறுமைக்கு மட்டுமே வரும்.
-
வறுமை கடக்கும் வாழ்க்கையில்
தூக்கம் சொந்தம்.
கருணை உறவு
பசி மட்டும் பகை.
-
வறுமையின் வசதிக்காக
கிடைப்பதைக் கொண்டு
திருப்தியடைவது
இல்லாமையின் நிர்பந்தம்தான்.
-
எதற்கும் பொருத்தம் பார்ப்பதில்லை
கூடினால் போதுமென்பது
வறுமையின் பெருந்தன்மை.
-
பசித்தவையெல்லாம் தோழர்.
கிடைப்பதெல்லாம் புதையல்.
கொடுப்பவரெல்லாம் கடவுள்.
வறுமை வகுத்த சட்டம்.
---
நீ...
இரண்டடியில்..
வசித்ததை
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு மேலாக..
வாசிக்கிறோம்.

ஏழு வார்த்தைகளை
எட்டாவது அதிசயமாய்
வியக்கப் பார்க்கிறோம்.

அறம் சொல்லி..
பொருள் தந்து
காமக்கலையூட்ட..
நீ தந்த முப்பாலில்
நாங்கள்...
தேனெடுக்கிறோம்
திணையெடுக்கிறோம்
தினவும் எடுக்கிறோம்.

உன் குரல்..
திருக்குறளாய்
விண்ணைத் தொட்டதும்
வனம் வசப்பட்டது
வானம் வசியப்பட்டது
நிலவோடு..
நட்சத்திரங்களை
வைத்துக்கொண்டு
பல்லாங்குழி ஆடுவது போல்
நீ...
எம் தமிழோடு
நெறிகளை வைத்துக்கொண்டு
நர்த்தனமாடியதை
உலக மொழிகளெல்லாம்
கண்டு களித்தது
உன் சமையலை
மையலோடு..
தன் மொழியில்
உண்டும் களித்தது.

நீ தந்த..
ஆயிரத்து முன்நூற்றிமுப்பது
முத்துக்களால்..
எங்கள் தன்மானத்தின்
எடை கூடியது
சன்மார்க்க நெறியென
உலகம்..
தமிழனின் நடையில்
விடை தேடியது.

இரண்டடுக்கில்..
மேலே நான்கு அறையும்
கீழே மூன்று அறையுமாய்
நீ கட்டிய வீடுகள்
பெருங்குடியிருப்பு மட்டுமல்ல
அவை..
ஏழைகளின் மெக்கா
எளியவர்களின் காசி
பாட்டாளிகளின் பெத்லகம்.

என்னதான் நான்
நவரசம் காட்டினாலும்
பரவசப்படுத்தும்
என் கவிதைகள்
முத்துக்குளிப்பது
கிழவா..
உன் மூன்றாம் பாலில்தான்.

ஆறறிவின் கர்வம்
செம்மொழியின் சர்வம்
விளங்க முடியா கதையை
விளக்க வந்த கவிதை நீ
வாசுகியின் காதலன்
வாசகர்களின் தந்தை
வாழ்ந்து வளரும் விந்தை நீ

பைந்தமிழ் புலவனை
பச்சைத் தமிழ் உழவனை
போற்றி புகழும்
நன்நாளில்
வள்ளுவனே..
செருக்கோடே கேட்கிறேன்
தமிழுக்கு பெயர்
அமுதென்று சொல்லவா
திமிரென்று சொல்லவா.
---
ஒரு தோல்வி
உன்னை..
சாகச் சொல்லுமென்றால்
தாராளமாக செத்துப் போ.
தோல்வியை..
போராட்டத்திற்கு
தந்த பழி வேண்டாம்.

ஒரு வெற்றியில் தான்
உன் வாழ்க்கை
இருக்கிறதென்று
நீ நினைத்தால்..
தாராளமாக செத்துப் போ.
தோல்வியை..
அவமானப்படுத்தும்
வழிமுறை..
வராமல் இருக்கட்டும்

வெற்றி தோல்வியில்தான்
வாழ்க்கையே அடங்குகிறது
என்கிறாயா..
தாராளமாக செத்துப் போ
அன்பை உதாசீனப்படுத்தி
நீ என்ன சாதிக்கப் போகிறாய்.

செத்தால்தான்
உன் பிரச்சனை தீருமென்றால்
சற்று பொறு..
ஆறாம் அறிவை
ஏளனப்படுத்திய குற்றத்திற்காக
உனக்கு தீர்ப்பு சொல்ல..
விலங்குகளை அனுப்புகிறேன்.
---
போடா..
என்று வா

என்னடா..
என்று பதிலாகு

ஏன்டா..
என்று காரணமாகு

எப்படி..
என்று கழுத்தில் தோரணமாகு

மாட்டேன்..
என்று அகப்படு

உன் கேள்விகளால்
எனக்கு விடையளி

உன் மௌனங்களால்
என்னை ..
சிறைபடுத்தியது போதும்

உன் சலனத்தால்
என் சஞ்சலத்தை விடுவி

சன்டை போடலாம் வா
ஆணவம் காட்டு

கோபமூட்டு
கலவரப்படுத்து

வன்முறை..
வழிமறிக்கட்டும்

அகிம்சையை..
வழிபறி செய்

மெல்லினம்..
மேலினமாகட்டும்

இடையினம்
வல்லினமாகட்டும்

ஆழ்கடலின் அமைதியை
ரசிக்கமுடியவில்லை
ஆர்ப்பரி..

அலைகள் ஓய்வதில்லையே
மூழ்கடி...

தேடி தொலைவோம்
கூடி ஒளிவோம்

இருட்டில்..
மிரட்டும் மின்னலாய்
வா..வெளிச்சம் தரலாம்
நம் இரவுகளுக்கு.

பசித்த கேள்விகள்
ரசித்த பதிலாய்
நீயும்..நானுமாய்
தெரிவோம் வா.

வானம் எல்லையா..
வேண்டாம்
செவ் வாய் திற..
முத்தங்கள் எரிபொருளாய்
திணித்துக்கொள்வோம்

வையகம் கடந்து
வான வில் அமைத்து
அம்பாய்..
பயணிப்போம் வா.

எய்திய..
ஆதம் ஹவ்வா..
கை அசைத்து
அழைக்கிறார்கள் பார்.
---
எங்கள் காதல்..
முதலிரவில் தொடங்கியது
அழகு தேவதையாய் வந்தாள்
உன் உலகு...நான் என
சொல்லாமல் சொன்னாள்
வரவேற்றேன்..
கரம் கோர்த்தேன்
ஒரு வாரம் பொறு..
என கைகளை கழுத்தில் தோரணமாக்கினாள்
ஒரு வரம் பெறு..
என்பது போல் இருந்தது
நிம்மதி தா..
என கண்களால் கேட்டாள்
சம்மதித்தேன்
.
உணர்ச்சிகளுக்குதான்
விடுமுறை இருந்தது
உணர்வுகளுக்கு
விதிமுறை இல்லை
பரிமாற்றங்கள் இனிக்க
பரிவட்டம் கட்டியது ..காதல்
.
எனக்கும் அவளுக்கும்
விருப்பு வெறுப்புகளில்
நிறைய வித்தியாசங்கள்
விசித்திரங்கள்..
வித்தியாசத்தில் ஒன்றுபடுமோ
எனக்கு அஜித் பிடிக்கும்
அவளுக்கு விஜய் பிடிக்கும்
எனக்காக அவளும்
அவளுக்காக நானும்
படம் பார்த்தோம்
அஜித்திற்கும் விஜய்க்கும்
இடம் கொடுத்தோம்
ஆம்..அவர்கள் எங்களுக்கு
மாமன் மச்சான் ஆனார்கள்
.
உள்ளத்து பரிவனைகள்
பரிபூரணமாய் பவனிவர
ஆறாவது நாளில்..
எங்களுக்குள் காமம்
பூப்பெய்தியது.
சங்கமித்தோம்..
தேவைகள்..
சேவைகளாயிற்று
வெட்கம் அவிழ்த்து
எங்கள் பெற்றோர்க்கு
பெற்றுக்கொடுத்தோம்
விட்டுக்கொடுக்க..
எங்கள் பிள்ளைகளுக்கு
கற்றுக்கொடுத்தோம்
மூத்த மகளுக்கு..
ஒரே பெயரை இருவருமே
நினைத்ததை நேற்றுவரை
சொல்லி பூரித்தோம்
.
இரண்டாவது பிரசவத்திற்கு
மீண்டும்..
பெண் குழந்தை ..என
சொல்ல தயங்கியவரை
இடைமறித்து..
மீண்டு வந்தது தேவதை
என என் மாமியார்
சொன்னபோது
என்முகம்
பிரகாசமானதை கண்டு
ஆச்சிரியத்துடன் பார்த்தாள் செவிலி
.
துன்பமும் துயரமும்
செருப்பானது எனக்கு
ஆம்..வாசலோடு
நின்றுவிடும் அவை..
என் தேவதை அவற்றை
கொன்றுவிடுவாள்
.
பிள்ளைகள் வளர
ஆரம்பித்தார்கள்
நாங்கள் மிளிர
ஆரம்பித்தோம்
எங்களுக்குள்..
பசி...தூக்கம்..கண்ணீர்
ஏன் ..சிறுநீர்கூட
எப்போது வருமென
ஒருவருக்கொருவர்
தெரிந்துவைத்திருந்தது
எல்லோருக்கும் ஆச்சர்யம்.
.
சென்ற வாரம் எனக்கு..
திடீரென மாரடைப்பு ஏற்பட்டது
தூங்கிகொண்டிருந்தவளை
எழுப்ப வேண்டாமே என
நினைத்த மாத்திரத்தில்..
கண் விழித்தாள்.
அவ்வளவுதான்
நேற்றுவரை அவள்
தூங்கவேயில்லை
நான் பார்க்காதபோதெல்லாம்
அழுதாள்
பார்க்கும்போதெல்லாம்
தொழுதாள்.
.
இப்போது அவளை
நான் பார்த்து..
பதினான்கு
மணிநேரம் ஆகிறது
என் தேவதையை
விட்டுபிரிந்ததாக ..
நான் நினைத்துவிட கூடாதே
என்பதற்காக..
இதோ குழி தோண்டும்
சத்தத்தைவிட
அவள் மேனியின் வாசம்
சற்று அதிகமாகவே வீசுகிறது
நான் அழுதுகொண்டே வந்தேன்
என்னோடு உறங்க..
அவள் சிரித்துக்கொண்டே
வந்திருப்பாள்
பதினான்கு மணிநேரத்தில்
நடந்த கதை ஆயிரம் சொல்வாள்
நான் போகிறேன்..அவளிடம்
எங்கள் கல்லறை தோட்டம்
காதல் மழையில்
நனையப்போகிறது.
---
என்னவளிடம்..
ஒரு முத்தம் கேட்டேன்
போதுமா..என்றாள்
இதழ்களை..
மோதவிடும்போது
சமாதானப்படுத்த
மெய் வராமலா போகும்
நினைத்துக்கொண்டே..
உயிர்கள் உறவாட
உணர்வுகள் உரையாட
உதட்டில் கொடு..
போதுமென்றேன்.
அவள் முகத்தில்..
ஒட்டிய வெட்கத்தை
ஓட்டிச் சென்றது..
என் நெருக்கம்
அகத்தில்..
கட்டிய ஆசையை
காட்டி வென்றது..
அவள் இறுக்கம்
பகலென்றாள்...
உன் கூந்தல் ..
இரவின் நகல்
விரி என்றேன்.
சரி ..என சரியவிட்டாள்
அருவி..
குன்றிலிருந்து விழும்
ஆனால்..
இந்த கருத்த அருவி
குன்றிலிலும் எழுந்தது.
நம் காதலை காண..
***


Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

ஜே.ஜே. அனிட்டா


3   1495   2  
July 2020

ரவிச்சந்திரன்


0   228   0  
September 2023

இரா. மதிராஜ்


0   197   0  
May 2023

தி.ரா. சதுர்த்தி


0   759   0  
December 2020