logo

கவிச்சுடர் விருது


'முதலில் எங்கள்
மலைகள் இல்லையென்றானது
காடுகளுக்கு வந்தோம்
அதுவும் இல்லையென்றார்கள்
வயல்களுக்கு வந்தோம்
அதுவும் இல்லையென்றார்கள்
கடல்களில் தஞ்சமானோம்
பிறகு அதுவும் இல்லையென்றார்கள்
பாலைக்கு வந்தோம்; இனி
எங்கு விரட்டுவார்களென தெரியவில்லை...'

- புன்னகை க.அம்சப்ரியா

காலத்தோடு கவிதைகளை நெசவு செய்யும் கவிஞர் புன்னகை க.அம்சப்ரியா அவர்கள்தான் இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் 'கவிச்சுடர்' விருதினை பெறுகிறார் என்று அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம்.

கவிஞரின் இயற்பெயர் - க.அம்சகோபால் முருகன்
M.A,MA.Bed,B.Lit, MPhil படித்துள்ள கவிஞர் இதுவரை தனது படைப்புகளாக 13 நூல்களை வெளியிட்டிருக்கிறார். 

இதில் கவிதை நூல்களாக: 1.சூரியப் பிரசவங்கள், 2.யாராவது வருகிறார்கள், 3.உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை, 4.இரவுக் காகங்களின் பகல், 5.வழிப்போக்கன் சொல்லாத குறிப்புகள், 6.அம்சப்ரியா கவிதைகள், 7.என் இரவு தேநீர்க் கோப்பையாகிறது, கட்டுரைகளாக: 8.பறத்தலை விரும்பும் பறவைகள், 9. சொற்களில் ஒளிந்திருக்கும் மௌனம்,10.கல்வி நூறு சிந்தனைகள், 11.வகுப்பறையே ஒரு வரம்தான். மற்றும் சிறு நூல்களின் வரிசையில்: 12.கவிதைக்குள் அலையும் மனச்சிறகு, 13.பூனையின் கடவுளும் கவிதைப் பறவையும்... உள்ளிட்டவையாகும்.

கவிஞரின் கவிதைகள்; பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரி, உடுமலை விசாலாட்சி கல்லூரி, சித்தூர் பாலக்காடு கேரளா பல்கலைக்கழகம் மற்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் தலைவராக செயல்படும் கவிஞர்.. பில்சின்னாம்பாளையம் - அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையத்தின் நிறுவனராகவும் மற்றும் புன்னகை இலக்கிய அமைப்பு , திருக்குறள் கொண்டாட்டம் அமைப்புகளின் நிறுவனராகவும் செயல்படுகிறார்.

12ம் வகுப்பு படிக்கும் போதே கவிதைகளை எழுதத் தொடங்கிய கவிஞரின் முதல் தொகுப்பு 1990ல் நீயூ செஞ்சுரி நிறுவனம் நடத்திய 'கையெழுத்துப் பிரதி'யில் தேர்வுப் பெற்று பொன்னீலன்,தனுஷ்கோடி இராமசாமி ஆகியோரின் முயற்சியால் 1994ல் சூரியப் பிரசவங்கள் என்ற கவிதை தொகுப்பு நூலாக வெளிவந்தது.

பாப்ரியா,மேமன் கவி கவிதைகள் தன்னை ஈர்த்ததாகச் சொல்லும் கவிஞர் , தனது வாசிப்பில்  பிரமிள், கல்யாண்ஜீ, கலாப்ரியா, விக்கிரமாதித்தியன் கவிதைகளில் தம்மை செம்மைப் படுத்திக்கொண்டவர்.

சிற்றிதழ் கொண்டுவரும் முயற்சியில் 'சூரியவீதி' என்ற இதழ் தொடங்கி பொருளாதார சிக்கலில் 3 இதழ்களுடன் நிறுத்திக் கொண்டவர்.. தொடர் முயற்சியாக புன்னகை ரமேஷ் குமாருடன் இணைந்து 'புன்னகை' இதழைத் துவங்கி 75 இதழ்கள் வரை சிறப்பாக நடத்திவந்தார்.. இப்போதும் புன்னகை ரமேஷ்குமார் அவர்களுடன் இணைந்து, ஆண்டு தோறும் சிறந்த சிற்றிதழ்களுக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கும் புன்னகை சிற்றிதழ் விருது மற்றும் புன்னகை கல்விச்சுடர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறார்கள்...

இத்தனை சிறப்புகளுடன் ஒருங்கிணைந்த கவிஞர் க.அம்சப்ரியா அவர்களின் கவிதைகளையும் கொஞ்சம் அலசி ஆராய்வோம் வாருங்கள்...  

*******
'அருவி பார்க்காதவரிடம்
சாரலைப் பேசியபடி இருந்தேன்
ஒரு தம்ளர் தண்ணீரோடு வந்தவர்
தாகத்தை தீர்த்துப் போகிறார்!'

அருவி என்பது பேரழகு.. பேரழகின் குளுமைதான் சாரல்... உணர்வுகளின் எச்சம் இனிமை! அதனைப் பகிர்வது பேரானந்தம்.. அதுவும் அருவியைப் பார்க்காதவரிடம் சொல்லும் போது அவரது விழிகள் விரியும்! அத்தனையையும் முடித்துவைக்கிறது இந்தக் கவிதை.. 'ஒரு தம்ளர் தண்ணீரோடு வந்தவர் தாகத்தை தீர்த்துப் போகிறார்' 
இப்போது எது இனிமை?

***

'தன் குழந்தையிடம்
இன்று சொன்ன கதையில்
தான் இருந்ததை
கடைசிவரை கூறாத
அம்மாவின் சாதுர்யத்தை
மெச்சிக் கொண்ட கதாப்பாத்திரங்கள்
குழந்தையின் கனவில்
ஒரு பாடலை
அம்மாவைப் போல பாடுகின்றன
கனவில் சிரிக்கும் குழந்தையை
உறங்கும் அம்மா கவனிக்கவே இல்லை'

அம்மா சொல்லும் கதைகளில் குழந்தைகள் 'ம்' கொட்டும் அழகு மிளிர்வானது. இங்கும் ஒரு அம்மா தன் குழந்தைக்கு கதை சொல்லுகிறாள்.. அந்தக் கதையின் பாத்திரங்களில் ஒருத்தியாக அவளும் இருந்ததை அவள் மறைத்துதான் சொல்லுகிறாள்... இதனை கதையின் மற்ற கதாபாத்திரங்கள் வியக்கின்றனவாம்... இப்போது குழந்தையின் கனவில் அவை பாடிக் கொண்டும் தாலாட்டிக் கொண்டுமிருக்கின்றன.. குழந்தை உறங்கினாலும் அவற்றோடுதான் விளையாடிக் கொண்டிருக்கிறது .. அதனால்,உறங்கும் குழந்தையிடம் உண்டாகும் புன்னகையை காணாத தாயவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள்.. இந்தக் கவிதை காட்சிபடிமம் மட்டுமல்ல வாழ்வியலின் ஓர் அங்கமும் கூட...

***

'அவன் இடைவிடாமல்
விதவிதமான மொழிகளின்
துணையோடு விசாரிக்கிறான்
தன் காதல் குறித்து
வெளிப்படையாக கூறியதை
ஆயிரத்தெட்டாவது முறையும்
பகிர்ந்து கொள்கிறான்
தொலைக்காட்சி தொடரொன்றின்
பாடலில்
பழையவளின் சாயல் இருப்பதாக
கூறிக்கொள்கிறான்

எப்போதும் போல
அவன் இல்லா சமயங்களில்
அவளுக்குப் பிடித்த
காதலின் தீபமொன்றை
ஏற்றினாலே என் நெஞ்சில்
திரும்பத் திரும்ப முணுமுணுத்தவள்
காதலில் ஏது பழைய காதலென
கூறிக்கொள்கிறாள் தனக்குத்தானே'

காதலை கடந்து வாழ்க்கையில் நுழைந்துவிட்ட பிறகும் நினைவுகள், தங்களின் சிறகுகளை அவ்வப்போது அசைக்காமல் இருப்பதில்லை. ஆனாலும் இதில் ஓர் இடைவெளி பாலினத்தின் வேறுபாட்டில் நெருடத்தான் செய்கிறது. அவன் தன் காதலின் விவரிப்பை தன் துணையிடம் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறான். சாயலை அடையாளம் காட்டுகிறான்... ஆனால் அவளோ, 'காதலில் எது பழையது, எது புதியது' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு, தன் நினைவில் மலரும் பாடலொன்றைப் பாடுவதிலும் மறைபொருள் நிலவாக காதல் சுவடுகள் மேகத்தில் மறைகின்றன.... 

***

' தொட்டி மீன்கள்
உங்களோடு விளையாட வருவதாகச் சொல்லும்

நீங்கள் தொட்டிக்குள்
திணித்துக் கொள்ள முயற்சிக்காதீர்கள்

தொட்டி மீன்கள்
காலங்காலமாக
உங்களைக் கவனித்தபடி உள்ளன

நீங்கள் சரியான நேரத்திற்கு
சாப்பிடுவதில்லை எனக் கவலைப்படும்

நீங்கள் உறங்காமல் இருப்பதற்கான
காரணங்களை விசாரித்து
தங்களுக்குள் முணுமுணுத்துக் கொள்ளும்

பிறகொரு நாள்
தங்களின் தொட்டி வாழ்வு
அலுத்து
உங்களை அழைக்கும்
எனினும் காலங்காலமாக
தொட்டி மீன்களின் அழைப்பில்
தொலைந்து போனவர்களை
அருகில் படமாக குறித்து வைத்துள்ளார்கள்..'

தொட்டி மீன்களை குறியிடாக்கி எழுதப்பட்டுள்ள கவிதை நம்மை வியக்க வைக்கிறது. தொட்டி மீன்கள் ஓர் அடிமையின் படிமமாக இருக்கலாம்.. அதே நேரம் அவை தனது தொட்டியை விட்டு வரமுடியாமல் (வளர்ப்பவன்) எஜமானனின் சுக துக்கங்களை நேசிக்கத் தொடங்கிவிடுகிறது.. 

***

'கிளை நிறைய பூக்களோடு
வரவேற்கும் உன்னிடம்
பேச எதுவுமே இல்லை
உதிர்த்த பூவொன்றை
சிறுமியிடம் நீட்டுகிறேன்
ஒன்றுமே பேசாமல்
கூந்தலில் செருகிக் கொள்கிறாள்
இன்றிரவு
உறக்கத்திற்கு ஏதொரு குறையுமில்லை'

பூக்களை மகிழ்ச்சியின் அளவீடாக கருதும் கவிஞன், கிளை நிறையப் பூக்களோடு வரவேற்றாலும் நிம்மதி இல்லாமல் இருக்கிறான்... உதிர்ந்த பூவொன்றை (புன்னகை) சிறுமியிடம் நீட்ட, அவளும் அதை சூடிக் கொள்கிறாள்.. இப்போது நிம்மதி அவனைத் தேடி வருகிறது...

***

'எதேச்சையாக கண்டெடுத்தான் ஒரு கதையை
அதனிடம் இருந்த கவலைப்பூக்களை
ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தினான்
வழிகள் மட்டும் வாழ்வென கொண்டவனின்
பாதையெங்கும் கொட்டிக் கிடந்த கதைகளில்
சற்றே தடுமாறுகிறான்
குழந்தையைப் பறிகொடுத்த கதையொன்றிற்கு
தன்னையொரு குழந்தையாக்கினான்
காதலை இழந்த கதையிடம்
தன் காதலின் காயங்களைக் காட்டி
எதிர்ச்சமாதானத்தை ஆறுதலாக்கினான்
பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களின்
கதையை ஜீரணிக்க வழியற்று
தன்னை மகனாகவோ மகளாகவோ
வனைந்து தர
இளகிய மண்ணாக மாறினான்
விளையாடி எறிந்த காலத்தை
வேடிக்கை பார்த்தபடி இருந்த
முதுமையின் கதையிடம்
கண்ணீரை இனிப்பாக்கும் கலையை
கவனமுடன் கற்றுக் கொடுத்தான்
களைத்து அமர்ந்த அவனின் கதையை
யாரிடமாவது கூறிவிட தவித்த கணம்
அத் தெரு செவிமூடியவர்களின்
ஊராக இருந்தது..'

மிகவும் நுட்பமான மொழியைப் பேசுகிறது இந்தக் கவிதை.. ஒட்டி வாழ்தல் என்ற வாழ்க்கை முறைமையில் நாம் சிலரின் இழப்புகளிலும், தவிப்புகளிலும் அதுவாகவே மாறி ஆறுதல் அளிப்போம்.. இங்கும் கவிஞன் அதற்கு படிமமாக கதைகளை தேர்ந்தெடுக்கிறான். கதைகளின் தவிப்புகளில் இணைந்து ஆறுதலாகிறான்.. கடைசியில் அவனிடமும் ஒரு கதை இருந்தது... அதை அவன் சொல்லும் போது அங்கிருப்பவர்கள் கேட்க யாரும் தயாராகயில்லை.. அதற்கு கவிஞன் சொல்லும் காரணம்,' அத் தெரு செவி மூடியவர்களின் ஊராக இருந்ததாம்'

***

மேலும் கவிஞரின் மற்றும் சில கவிதைகளைப் பார்ப்போம்:

இந்தக் கோடையில்
உங்கள் முற்றத்தில் மேயும்
வெய்யில்தான் எனதும்
ஆனாலும்
அது குளிர்ச்சியின் கதகதப்போடு விடிகிறது

உங்கள் முற்றத்தில்
தாராளமாக நுழையும்
அந்தப் பனிக்காலம்
என் வாசலில்
அவ்வளவு தயக்கமாக
ஏதோ ஒரு அனுமதிக்காக காத்திருக்கிறது
போதுமான அளவு வெட்டி எடுத்துக் கொள்ளுங்களேன் என
ஒரு துண்டு குளிர்ச்சியென
காத்திருக்கிறது

முகிழ்க்காத பருவகாலமெனினும்
என் தோட்டத்தில்
இத்தனை பூக்கள்
மலர அவசியமென்னவென்று
திகைத்திருக்கிறீர்கள்

இப்பாதையில்
எப்போதுமிருக்கிற
முள் செடிகளில்
அவ்வளவும் ஏன்
இலைகளென மாறிக் கொள்கின்றனவென்று
ஒரு மிடறு ஐயத்தை
உறுஞ்சுகின்றது
தெருவாசிகளின் விழிகள்

வேறென்ன
இன்று நீங்கள்
என் இல்லத்திற்கென
விருந்தாளியாக வரப்போகிறீர்கள்...

***

மேய்ச்சல் நிலத்தின்
கடைசி தீவனத்தால்
பசி தீர்த்துக் கொள்ளும்
பசித்த உயிரியென
அலைகிறது சிற்றுயிர்

வற்றிவிடும் காலத்தின்
இறுதித் துளியைப் பருகி
உயிர்த்துக்கொள்கிற
ஒரு பறவையென
அலைகிறது சிற்றுயிர்

தீர்ந்துவிடும் நிறைகாற்று வெளியின்
இறுதியை சுவாசித்து
உயிராகும் மனமென
அலைகிறது சிற்றுயிர்

தன் இறுதிக் கடமையென

ஒரு பட்டமரத்தில் அமர்ந்து
பசுஞ்சோலையாக்குகிறது
வற்றிய சுனையை
பெரும் ஊற்றாக்குகிறது

ஒர் இலை கொண்டு
வனமாக்குகிறது

வாழ்தலின் இறுதிச் சுற்றைச்
மெய்ப்பிக்கிறது
சிற்றுயிர்

***

ஆநிரைக் கள்வன்
தன் பூவொன்றினை
வழியில் தவறவிடுகிறான்
மீட்பனின் கையில்
அடிமைப் பட்ட பூவிற்கு
சொல்ல ஆயிரம் கதைகள்

***
இந்த இரவின் முடிவில் அவன்
இறந்தபடியிருந்த ஒரு விதைக்கு
உயிரூட்டும் படிக்கான நீரூற்றினான்

யாரையோ எதிர்பார்த்து காத்திருந்த
தெரு நாய்களிடம்
இனி யாரும் வர மாட்டார்களென
புரிய வைத்து
ஒரு ரொட்டித் துண்டினை
பசியாற்றும் அபூரவமாக்கினான்

யாரும் செவிமடுக்காத
மரத்தின் பாடலுக்கு
தனித்து நின்று தலையாட்டி
கௌரவரப்படுத்தினான்
வெகு நேரம்

பூக்களெனில் உதிர்வது இயல்பென்று
சாலையோர பூங்காவின்
புதிய வேலிகளிடம்
ஆறுதல் கூறினான்

இந்த இரவில்
உறங்காத மனதிடம்
பிடித்த பாடல் எதுவென்று
விசாரித்து
அவருக்கு ராகத்தைப் பரிசாக்கினான்

விடியத் துவங்கும் வேளையில்
இன்பத்தின் ஒளி சுடர சுடர
விடியலைக் கொண்டாடத் துவங்குகிறான்

***

தனியே வீற்றிருக்கிறது
ஒரு செடி
தனியே கடந்து போகிறான் பயணி
தனியே ஒரு குடம் நீரூற்றுகிறான்
தனித்த ஒருவன்
தனித்தே வளர்கிறது செடி
தனித்தே மலர்கிறது பூ
தனித்தே வேடிக்கை பார்க்கிறது வானம்

***

இந்த வசந்தகாலம்
என் சொற்களால் நிரம்பியிருக்கிறது
உனது தாகப்பொழுதில்
நீ கற்களைத் தேடி
அலையவேண்டியதில்லை

எதிரெதிர் திசையில்
அச்சிறுபாதையில்
யார் விலகுவதென்று
குழப்பங்களில்லை
என் மீதேறி தொடரட்டும் பயணம்

பூக்களை பிரசவிக்கும்
மந்திரம் அறிந்தவை
என் கல்வனத் தோட்டம்
நீ எப்போது வேண்டுமானாலும்
சூடிக்கொள்ளலாம்
அல்லது
உன் வழிபாட்டில் நிறைத்துக் கொள்ளலாம்

வழிப்போக்கர்களின்
கைகாட்டி மரங்களென
தன்னை மாற்றிக் கொண்டவை
இக்கரங்கள்
ஊர்களின் பாடல்களை
நிறைத்திருக்கும்
நகங்களிலிருந்து
தேடத்துவங்கலாம் உனது
மூதாதையரின்
சிதிலடைந்த ஒரு மண்டபத்தையேனும்

நீ செய்ய வேண்டியதெல்லாம்
நமக்கான
உலகத்தை
யாரோ ஒருவரிடம்
அடகு வைக்காமல் இருப்பதென்று
இடைவிடாமல் இறைஞ்சுகிறது
நம்மோடு வசித்த
வாழ்வின் நொடிகளில் ஒன்று

***

தனியே ஓடி வந்து
சன்னலோர இருக்கையில் அமர்கிறாள்
தனியே ஒரு பயண இடத்தை அடைகிறாள்
தனியே ஒரு அனுமதிச் சீட்டைப் பெறுகிறாள்
தனியே அந்தப் பூங்காவிற்குள் நுழைகிறாள்
தனியே யாவற்றையும்
ரசித்துக் கொண்டாடுகிறாள்
தனியாக நின்றிருக்கும் மரத்தில் சாய்ந்து
தன்னைத் தானே படம் பிடித்துக் கொள்கிறாள்
தனக்குத் தானே பேசிக்கொள்ளும் அவளுக்குப் பின்னால்
அவள் வளர்த்த தனிமை
வாலாட்டிக் கொண்டே போகிறது..

***

கண்களை மூடிக் கொண்டால்
உறக்கம் வருமென்கிறாய்
மனம் விழித்த பின்
மலையிலிருந்து உருளும்
தண்ணீரென
வந்து சேர்கிறேன் உன்னிடமே..

***

நீ வாசிக்காத கவிதையின் மீது
ஊர்கிறது எறும்பொன்று
திசையறியாத அதன் பாதையில்
யாரோ எறிந்த பூவிதழ்
நெடும் மலையாகிறது
எப்படியும் மலைகடக்குமென காத்திருக்கிறேன் இந்த பருவம் முழுவதும்..

***

சொல்ல மறந்த செய்தியொன்று
கண் காது முளைத்து கால்களோடு
உன்னைத் தேடும்
நீயோ வெகு தொலைவில்
உறக்கத்தில் இருப்பாய்

அச்செய்திக்கு கொஞ்சமும்
பொறுப்பில்லலை
எழுதும் கவிதைக்குள்
ஓடோடி வந்து அமர்ந்து கொள்ளும்

உனது கனவில்
எட்டி எட்டிப் பார்க்கிறது சொல்
நீ ஒரு முறையாவது
மூடிய விழிகளுக்குள்
அழைத்துவிடக் கூடுமென

யாரோ முத்தமிட்ட சொல்
யாரோ ரத்தக் குறி கண்ட சொல்
யாரோ வசை பாடிய சொல்
யாரோ இசைத்த சொல்
வாசலில் காத்திருக்கின்றன
உன் சொற்களிடம்
சரண்டைய..

மாசானியம்மண் குண்டத்தில்
தலை சுற்றி எறிந்த சொற்களை
நெடியுடன் சுவாசிக்கிறாய்

கோடையின் பாதையில்
நீர்மோரென காத்திருக்கின்றன
இன்றைக்கும் உனது சொற்கள்

வாட்சப்பில் காத்திருப்பாய்
முட்டுவேன் கொல் மோதுவேன் கொல்லென
அடையாளங் காட்டும்
எனது இரட்டை குறியீடுகள்..

***

கடைசிப் பேருந்தும்
கடந்துவிட்ட சாலையில்
பகலில் பார்த்த கானல் நீரை
நினைத்து உருகுகிறான்

தெருவில் கிடந்த
ஒரே ஒரு குண்டுமல்லிகையை
கையெலெடுத்து
என்னவோ பேசியபடி இருக்கிறான்

சற்றே தடுமாறி தெருவாசியொருவன்
உற்று நோக்குகிறான்
உச்சரிக்கும் சொற்களில்
சரளமாக வந்துவிழும் பெயர்ச்சொல்
தன் துணையின் பெயரென்பதில்

நினைவுகளை
கொட்டி வைத்திருக்கும்
சொற்தொட்டியிலிருந்து
வாரி வாரி கொட்டுகிறான்
பெருகிக் கொண்டிருக்கிறது
வினையாலனையும் பெயர்கள்

நீங்கள் கடந்து செல்வதற்கு
உரிய காரணங்களில் ஒன்றுதான்
என்னிடமும் இருந்தது

அப்பா அங்கிளுக்கு
பணம் கொடுங்கப்பாவென்று
தந்தையின் சட்டை பையிலிருந்து
எடுத்த பணத்தை
நீட்டுகிறாள் சிறுமி

ஒரு கணம்
தளும்பி வந்த நீரை
துடைத்தவன்
அடுத்த கணம்
அவன் அவனான்
சொற்களின் சுகவாசியொருவன்

***

நினைவுச் சாளரங்களின் வழியே
ஊர்ந்து வரும் பாம்புகளை
இப்போதைக்கு எதுவும் செய்வதற்கு இல்லை
ஒரு மரத்தின் கிளைகூட
தனக்கென இல்லையென்பதே
அதன் குற்றச்சாட்டுகளில்
முதன்மையானதாக இருக்கிறது
அதன் குட்டிகள்
யாரோ ஒரு ஆழ்மனத் துறவியால்
துரத்துப்படுகிறது என்பதே
துணைக் குற்றச்சாட்டுகளில் முன்னோடியாக இருக்கிறது
பழக்கதோசத்தில்
ஒரு தடியோடு ஓடோடிவரும்
அவர்களைப் பார்த்து
வானத்தில் பதுங்கும்
நினைவரவத்தை
மெதுவாக தலைதடவி தழுவுகிறேன்
ஒருவரை ஒருவர் விழுங்கத் துவங்கும்
பேரானந்த வேளையில்
கவிகிறது வெளிச்சம்
சர்ப்பங்களின் உலகின்
நானொரு தேவனாகிறேன்

***

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in