logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் சுரேஷ் பரதன்  ஒரு அறிமுகம்
********************************************************************************
பெயர் : சுரேஷ் பரதன்
பிறப்பிடம்: திருநெல்வேலி
வசிப்பிடம் : புது டெல்லி
வேலை: மத்திய அரசாங்கப்பணி

இதுவரை வாங்கிய விருதுகள் & பரிசுகள்:
ஈரோடு தமிழன்பன் விருது மற்றும் படைப்பு குழுமம் நடத்திய மகளதிகாரம் பரிசுப்போட்டியில் முதல் பரிசு மற்றும் கடந்த டிசம்பர் மாதம் 2016 ஆண்டு இவர் படைப்பில் மாதாந்திர சிறந்த படைப்பாளியாக தேர்வு.

பணிச்சுமையும் மனச்சுமையும் கூடிவிட்ட இன்றைய இயந்திர வாழ்தல் நடைமுறையில் தனி அருகே விழுந்தோ அடிபட்டோ குற்றுயிராகிக்கிடக்கும் சகமனிதனைத் தூக்கிவிடும் முன்பாக அவனை செல்போனில் படம்பிடித்து சமூகக் கடமையாற்றியதாய் திருப்திப்பட்டுக்கொள்ளும் இந்நவநாகரீகச் சமூகத்தில் ஒரு மனிதனை இலகுறச் செய்யவும் அவனுக்கு அவனுடைய சமூகப் பொறுப்பை உணர்த்தவும் கவிதைகளால் முடியும் என்றால் அக்கவிதைகளும் அம்மாதிரியான கவிதைகளைப் படைக்கும் ஒவ்வொருவரும் கொண்டாடப்பட வேண்டியவர்களே. அந்த வகையில் இம்முறை படைப்புக்குழுமம் தன் கொண்டாட்டத்திற்காக தெரிவு செய்திருக்கும் படைப்பாளி சுரேஷ் பரதன்.

புதுக்கவிதைகள், நவீனத்துவக் கவிதைகள், பின் நவீனத்துவ கவிதைகள் மற்றும் மரபு கவிதைகள் என்று நம் தமிழ் மொழி இலக்கியத்தின் புதுப்புது பரிமாணங்களில் படைப்புக்களை படைத்துக் கொண்டிருக்கும் நம் குழுமத்தின் படைப்பாளிகளின் நடுவே ஒரு மாபெரும் நவீனத்துவக் கவிஞராக உலா வரும் ஒரு படைப்பாளிதான் இந்த மாதம் நம் குழுமத்தால் கவிச்சுடர் விருது பெறுகிறார். படைப்பாளி சுரேஷ் பரதன் அவர்கள் பற்றி படைப்பு குழுமத்தை ஆதரித்து வரும் படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்ய அவசியமில்லை என்றாலும் நாள்தோறும் இந்த குடும்பத்தில் இணைந்து வந்துகொண்டிருக்கின்ற புதிய படைப்பாளிகளின் கவனத்துக்காக ஒரு அறிமுகக்கட்டுரை அவசியமாகிறது.

திருநெல்வேலியில் பிறந்த இவர் தற்போது தில்லி மாநகரில் மத்திய அரசாங்கப்பணியில் இருக்கிறார். தம் இளவயதிலேயே தமிழார்வம் மிளிர, இவர் வண்ணாரப்பேட்டை கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பாக இயங்கி வந்த “எரிதழல்” என்னும் பத்திரிக்கையை கையழுத்துப் பிரதியாக 1990 களிலேயே மாத இதழாக நடத்தியவர். அப்பத்திரிக்கைக்காக சிலசு, தமயந்தி போன்ற ஆளுமைகளிடம் நேர்காணல் நடத்தி இலக்கியப்பணி புரிந்தவர்.இந்நாட்களைப் போல கணினி வசதியற்ற அந்நாட்களில் ஒரு பத்திரிக்கையை கையெழுத்துப் பிரதியாக நடத்துவதென்பது எந்த ஒரு மிகைப்படுத்தலுக்கும் உட்படுத்தாது நெஞ்சார பாராட்டத்தக்கதே. அந்தக் கால கட்டங்களிலேயே ஐம்பதிற்கும் மேலான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை பத்திரிக்கையில் எழுதிச் சாதித்தவரான படைப்பாளி சுரேஷ் பரதன் அவர்களுக்கு இம்மாதத்திற்கான கவிச்சுடர் விருதை வழங்குவதில் பேருவகை அடைகிறது படைப்புக் குழுமம்.

குழந்தைப் பருவத்திற்கும் பதின்மதிற்கும் இடையிலான சில ஆண்டுகள் மட்டுமேயான நாம் நம்மைக் கண்டு உணராத ஒரு பருவம் அத்தனை ரம்மியமானது. அவசரங்களில் நாம் கவனியாது போன ஒரு மேகப்பொதிமத்தைப் போலானதொரு அப்பருவத்தில் தன் எதிர்ப்பால் தோழன்களை, சிநேகிதிகளை ஒவ்வொரு நாளும் புதியதாகப் பார்த்து வியந்து அவர்தம் இணையை எங்கப்பாவும் உங்கப்பாவும் ஒரே கலர் சட்டை என தமக்குள்ளான ஒத்த புரிதலை நிறங்களில் துவங்கி செறிவேற்றிக்கொள்ளும் காலம். அத்தகைய உறவின் எழிலை, பூரணத்தை, ஒரு குழந்தையின் கிறுக்கலைப் போன்றதொரு வாழ்வியலை பின்வரும் கவிதையில் நீங்கள் உணரலாம்.

//
எனக்கு பால்ய கால சிநேகிதி
ஒருத்தி இருந்தாள்.
அவளாலேயே எனக்கும் ஒரு
பால்ய காலம் என்றொன்றிருந்தது.
நானும் அவளும் விளையாடிய
கதைகளை நான் கூறுவேனாயின்
உங்களின் காதுகளில்
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
பாடலின் லாலாலா
கேட்கக்கூடும் அல்லது
அப்பாடலின் திரைவடிவம்
உங்கள் விழிகளில் தோன்றி
ஒரு நமுட்டுச் சிரிப்பைத் தரக்கூடும்
எனவே அவற்றைச் சொல்லாமலே
விடுகிறேன்.
என் பால்ய கால சிநேகிதியை
நீங்கள் நினைக்கிற மாதிரி
நான் காதலிக்கவேயில்லை.
ஆனாலும் என் பால்ய கால சிநேகிதி
என் நெஞ்சில் இன்றும் இருக்கிறாள்.
விளையாட்டுகளின் போது
கதவுகளுக்குப் பின்னால் ஒளிவது மாதிரி
என் மனக்கதவுகளுக்குப் பின்னால்
ஒளிந்திருக்கிறாள்.
என்னுடன் கண்ணாமூச்சி
ஆடத்தான் செய்கிறாள் அவ்வப்போது.
இப்பொழுதும் சிநேகிதிகள்
இருக்கிறார்களெனக்கு.
இவர்களில் ஒருவர் கூட
பால்ய கால சிநேகிதியின் இடத்தை
நிரப்பவில்லை என்பது கூடுதல் தகவல்.
//

கவிதைகளில் அரசியலைத் தவிர்ப்போம் என்றாலும் அரசியல் என்றால் என்ன அது எதிலிருந்து துவங்குகிறது என்ற கேள்வி நமக்குள்ளாக எழும்புவதையும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. நாம் வாழும் சூழல். நம்மைச் சுற்றிய பரப்பு. அதன் மீதான அடுத்தவரின் மேவுதல், அதன் தொடர்ச்சியாக நம் எதிர்வினை இவையெல்லாம்தான் அரசியல். நாம் மட்டுமின்றி நம்மைச்சூழ்ந்த பல்லுயிர்களையும் இணைத்து பெருவாழ்வைக் கடந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம்தான் எத்தனை உன்மத்தம் வாய்ந்தது. ஒரு வெள்ளந்திப் பெண்ணையும் வெள்ளைப் பசுவையும் பாடுபொருளாக்கி அவர்களின் உணர்வுகளுக்கு முன்னால் வெறும் ஏட்டில் எழுதப்பட்ட ஆதி.. அந்தம், வாகனம், தெய்வக் குற்றம் எல்லாம் வரிசைகட்டித் தோற்றுப்போய் விடுவதாகவே எடுத்துக்கொள்ளலாம் இக்கவிதையில்.

//
வீட்டில் இருக்கும்
பசுவோடு கூடவே வளர்ந்த
மேலத்தெரு கோதையக்கா
வெளிநாட்டில் வேலைசெய்யும்
கீழத்தெரு மணியழகனை
மணமுடித்து அவன் வாழும்
வெளிநாட்டில் குடித்தனம்
பண்ணப் போனவள்
பூ மாதிரி அவளை தாங்கும்
அவனிடம் அடம்பிடித்து
ஊருக்கே மொத்தமாய்த்
திரும்பி வந்தாள்
அவளின்றி மெலிந்துகிடக்கும்
பசுவைப் பேண
அதுவின்றி தான் மெலிந்த
சோகம் புரிந்து!
//

ரத்தமும் சதையுமான உறவுகள் சூழ உப்பும் உரைப்புமாக அவர்களோடு அமர்ந்து உண்டு.... உறங்கி..... சுகித்து... வெட்கி... மருகி... இப்படியான ஒரு வாழ்தல் சுகத்தை அடிப்படைத் தேவைக்காகவோ அல்லது நிர்பந்தத்தின் காரணமாகவோ விலகி பொருளீட்டப் புறம் சென்ற ஒருவரது மன ஓட்டத்தைப் புறாவின் மூலமாக நமக்குள் கடத்துகிறார் கவிஞர்.இக்கவிதையினைப் படித்து முடித்து நிமிரும் பொழுது ச்சை.... என்னடா வாழ்க்கை இது...என்று எல்லா இறுமாப்புகளையும் தூக்கிஎறிந்துவிட்டு ஓடோடி உறவுகளோடு கூடிக் கொண்டாடிவிடத் தோன்றுகிறது.

//
வெகுதூரம் பயணித்து
வந்த அயர்ச்சியோ அல்லது
மீண்டுமொரு நீண்ட
பறத்தலுக்கான ஆயத்தமோ
எதிர்வீட்டு ஜன்னல் கம்பியில்
அமர்ந்து தன் சிறகுகளை
அலகால் கோதிக் கொண்டிருக்கும்
சாம்பல் நிற புறாவொன்றுக்கு
தேவையென்ன இருக்கக்கூடும்
வயல்வெளிகளோ நீர்நிலைகளோ ஏதுமற்ற ,
பொருளீட்ட நான்
புலம்பெயர்ந்து வந்த
இந்த பெரு நகரத்தில்,
நானோ நீங்களோ வீசியெறியும்
ஒரு கைக்குத்தளவு சிறு தானியங்களை
கொத்தித் தின்னுவதைத் தவிர.
//

ஒரு அடையாளத்தை அகற்றிவிடுதல் என்பது அத்தனை எளிதான செயல் அல்ல. அது மனிதன் தொடங்கி நம் வீட்டுப் புழக்கடையில் நிற்கும் மரம் வரைக்கும் நம் வாழ்வியலோடு பிணைந்த எதுவாக இருப்பினும் சரி. உருவாக்கப்பட்ட எல்லாம் இழந்தோ... கழன்றோ.. தீர்ந்தோ.. பிரிந்தோ போகவேண்டும் என்ற நிர்பந்தகளைக் கடந்து அவைகள் பதியமிட்டுச் செல்லும் ஞாபகச் சுவடுகளை மட்டும் அத்தனை எளிதில் பிய்த்தெறிய முடிவதில்லை. இக்கவிதையில் வரும் அப்பாவின் மடிப்புக்கலையாத சட்டையைப் போலவும் அதனைச் சார்ந்த அம்மாவின் ஈர ஞாபகங்களைப் போலவும்...

//
அப்பாவின் வெள்ளைச் சட்டைகள்
இரண்டையும்
அகலக்கரை நாலு முழ வேட்டிகள்
இரண்டையும்
அலமாரியில் இன்னமும் பத்திரமாய்
வைத்திருக்கிறாள் அம்மா.
பண்டிகைப் பொழுதுகளில் அவற்றை
எனையழைத்து உடுத்தச் சொல்லி
அழகு பார்ப்பவளுக்கு என்னுருவில்
அப்பாவைப் பார்ப்பது போல்
இருக்கக் கூடும்.
அப்பாவின் வேட்டி சட்டையணிவதினால
நீயொன்றும் அப்பாவாய் ஆகிவிட ஒருநாளும் முடியாது என்றவள்
கண்கலங்கக் கூறுவது வழக்கம்
ஒவ்வொரு முறையும் தவறாமல்.
அது உண்மையும் கூட.
இறந்துபோன அப்பாவை
என் மூலம் அவளும்
கண்ணாடி முன் நானும்
இன்னுமொருமுறை
பாரத்துவிடவே துடிக்கிறோம்
பொய்யெனத் தெரிந்தும்.
//

கவிதைக்கு மெய்யும் அழகு..! மட்டுமல்லாமல் மெய்யே அழகு என்று சில கவிதைகள் சண்டித்தனம் செய்து மெய்சிலிர்க்கச் செய்பவை. எவ்வாறு ஒரு முதல் மழைத்துளி உங்களை சிலிர்க்கச் செய்கிறதோ, எவ்வாறு ஒரு மழைக்குப் பிறகான மண்வாசனை உங்களை கிளர்ந்தெழச் செய்கிறதோ, எவ்வாறு மழையினூடான ஒரு பயணம் உங்களை இலகுவாக்குகிறதோ.. எவ்வாறு மழையோடு கலந்த இசை பரவசப்படுத்துகிறதோ, அவ்வாறே இன்ன உணர்வுதான் என்று பிரித்துணர முடியாத ஒரு மோன நிலைக்குள் வாசிப்பவரை உட்படுத்தும் கவிதை இது. கவிதைகள் எழுதும்போது தான் உணர்வதை, அக்கவிதைகள் வாசிக்கப்படும் பொழுதும் உணர்ந்து கொள்ளப்பட்டால் அதுவே அக்கவிதைக்கான பூரண வெற்றி. அம்மட்டில் இக்கவிதையின் மூலமாக வெற்றியைத் திகட்டத் திளைக்கக் கொண்டாடலாம் கவிச்சுடர். சுரேஷ் பரதன் அவர்கள்.

//
தூறலாய்ச் சிதறும் மழையின் நடுவில்
நனைதலின் சுகத்தில் நடக்கையில்
மேல்விழும் சிறு சிறு துளிகள்
ஏற்படுத்தும் சிலிர்ப்புகளில்
பூப்பூவாய்ப் பூக்கின்றன ஞாபகத் துளிகள்.
ஒரு துளி உன் முதல் ஸ்பரிசத்தை
இன்னொன்று முதல் முத்தத்தை
அடுத்ததோ சேர்ந்தருந்திய மாலைநேரத் தேநீரை
இப்படியிப்படி ஒவ்வொரு துளியிலும்
ஒவ்வொரு ஞாபகங்கள்.
ஞாபகத்தின் அடுக்குகளைத்
தட்டிக் கலைத்தபடி செல்கிறது
சேறை வாரியிறைத்துக் கடக்கும்
மகிழுந்தொன்று.
கலைந்து கிடக்கும் ஞாபகங்களைச்
சீட்டுக்கட்டுக் கோபுரமாய் மீண்டும்
முதலிலிருந்து அடுக்கத்
துவங்குகிறேன்.
மீண்டும் கலைக்க வரும்
இன்னொரு மகிழுந்து
அல்லது
கன்னத்தில் வழியும் கண்ணீரோடு
இறுக அணைத்து நீ கொடுத்த
கடைசி முத்தத்தின்
சூடான நினைவின் சிறு கீற்று.
//

அவருக்கு படைப்பு குழுமத்தில் மாதாந்திர சிறந்த படைப்பாளியாக தேர்வுபெற செய்த கவிதை இதோ... (டிசம்பர் - 2016)

//
பிரிவுழிக் கலங்கல்
=================
தூரத்தில் கேட்கிறது
துயரத்தில் இசைக்கும்
ஓர் ஆலாபனை பாடகனின்
முகாரி ராகங்கள்.

நிலவைக் காட்டி ஊட்டிய
வட்டமுதை மறுதலித்து
முலைப்பாலுண்ட அயர்ச்சியில்
தொட்டிலில் தூங்குகிறது
நம் குழந்தை.

நீயில்லாத இந்த இரவுகளில்
நாம் கூடிக்களித்த கட்டிலின்
கேலிகளில் தூக்கமின்றி
விடிகின்றன பொழுதுகள்.

பொருள்வயின் பிரிவில்
உன் அருகாமை
அனுதினமும் வாய்க்காது
எனத்தெரிந்தும்
அதனையே ஆராதிக்கிறது
அபலையாய் இந்த மனது.
//

நம் படைப்புக்குழுமம் நடத்திய மகளதிகாரம் பரிசுப்போட்டியில் அவர் கவிதை எழுதி முதல் பரிசு 1500 ரூபாய் தட்டிச்சென்ற கவிதை இதோ...

//
மகளதிகாரம்
-------------------------
புத்தகங்களும் பொம்மைகளும்
கொண்ட உன் அலமாரிக்கருகில்
நீ நெருங்கும் ஒவ்வொருமுறையும்
எதையெடுப்பாயென
நகங்கடிக்கத் துவங்குகின்றன
பொம்மைகளும் புத்தகங்களும்.

வளர்ந்துவிட்டாயென எண்ணும்போது
குதூகலிக்கிறது உன் குறும்புகள்.
குழந்தையென கொண்டபோது
தகர்க்கிறது உன் தர்க்கங்கள்.

பிறந்தநாள் பரிசாய்
நம்தெருவோரம் நடுவற்கு மரக்கன்றொன்றை
வாங்கித்தரக் கேட்போது
தெரிகிறது நீ எவ்வளவு
வளர்ந்து விட்டாயென.

எங்கள் மகளென்பது போய்
உந்தன் தாய்தந்தையென்பதை
எங்களடையாளமாய் மாற்றிவருகிறாய்
நீ உன் ஒவ்வொரு செயலிலும்.
//

இன்னும் அவரின் சில படைப்புகள் உங்கள் பார்வைக்கு:

//
அம்மாவின் காதல்
================
சொத்துக்களுக்காக
முட்டிக்கொண்டிருந்த
மாமன்களிடம்
வலுவாய்ச் சண்டையிட்டு
அவள் பங்கிற்காய்
அம்மாச்சியை மட்டும்
கேட்டுப் பெற்று
வீட்டிற்கு அழைத்து வந்த
அப்பாவிற்கு
தினந்தோறும் ஆக்கிப்போடும்
வெஞ்சனங்களில்
நிறைந்திருக்கிறது
அம்மாவின் காதல் ருசி!
//

//
சன்னல் திரை விலக்கி
வெளிச்சத்தை பரவவிடுதல் போல
குவளைத் தேநீரில் படடந்திருக்கும்
பாலாடையை விலக்கிப் பருகுதல் போல
குளியலறை கண்ணாடியில்
படர்ந்திருக்கும் நீராவியைத் துடைத்து
பளிச்சென முகம்பார்த்தல் போல
மனத்திரை படரந்திருக்கும்
ஒட்டடைகளை கலைத்துவிடப்
பார்க்கிறேன்.
எண்திசையெங்கிலும் தன்
கால்களை பரப்பியபடி
நினைவெச்சில் திரவம் வடித்து
இடையறாது மாயவலை பின்னிக் கொண்டிருக்கிறது மனச்சிலந்தி.
அவ்வலையில் சிறு பூச்சியென
நானே சிக்கிக் கொள்ள
என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப்
பிய்த்துண்ணுகிறது.
மீதமின்றி இரையாகிறது
வாழவந்த பெருவாழ்வு.
//

//
கனவைச் சுமக்கும் குழந்தை
=========================
அலுங்காமல் குலுங்காமல்
ஒரு கனவை தன் கையிலேந்தி
தத்தித்தத்தி நடக்கிறதோர்
குழந்தை.
கனவைச் சுமப்பதால் அதன்
கைகள் வலிக்காதென
நினைத்துவிடக் கூடாது.
அக்கனவு அக்குழந்தையின்
பல நாட்களுக்கான
இரவு உறக்கங்களை சுமந்திருக்கிறது.
தன் தந்தைக்கு இக்கனவை
அக்குழந்தை சொன்ன
அந்த இரவில் அவனும்
தூக்கமிழந்தானே
அவனது மனக் கிலேசங்களும்
இக்கனவில் தான் நிறைந்திருக்கிறது.
தன் குழந்தையின் இக்கனவை
நிறைவேற்ற அவனெடுக்கும்
உச்சபட்ச முயற்சிகளின் எடையையும்
அக்கனவுடன் சேர்த்தே
இனி அக்குழந்தைதான் சுமக்கவேண்டியிருக்கும்.
கனவின் கனம் கூடக்கூட
அக்கனவை அக்குழந்தை
யாரிடமாவது இறக்கிவைக்கக் கூடும்.
அக்குழந்தையிடம் அதன்
தந்தை இறக்கி வைத்ததது போல.
அத்தந்தையிடம் அக்குழந்தையின்
பாட்டன் இறக்கி வைத்தது போல.
ஒரு பரம்பரை சுமந்த கனவு
கையிலேந்தினால் கனக்காமல்
என்ன செய்யும்.
//

//
பிரமிக்கவைக்கும் அந்த ஏரியின்
மொத்த நீரையும் விழுங்கிக்கொள்ளும்
தீராத் தாகத்தோடு இருக்கும்
நீங்கள் ஏரியை அடையுமுன்னர்
நானந்த ஏரியின்
மறுகரைக்கு விரையவேண்டும்.
அதற்காக அந்தக் குடிசையின்
சுவரோரத்தில் லாந்தர் ஒளிச்சுடரில்
படித்துக் கொண்டிருந்த
சிறுவனிடம் அவனுடைய
நோட்டுப் புத்தகத்தின்
எழுதாத பக்கத்தினை கிழித்து செய்த
காகித கப்பலில் ஏறி
சென்று கொண்டிருக்கிறேன்.
முன்பொரு நாளில்
எழுதிய பக்கத்தில் செய்த
கப்பலில் இருந்த
அவனுடைய கவிதை
என்னை விழுங்கிவிடாமலிருக்க
நான் பெரும் பிரயத்தனம்
பண்ணவேண்டியிருந்து.
நீங்கள் ஏரியை
அடைந்து நீரையள்ளக்
குனிந்த அந்தப் பொழுதில்
எதிர்க்கரையில் கப்பலை விட்டு நானிறங்கிய
அதிர்வில் எழுந்த அலையில்
நீர்பரப்பில் பிரதிபலித்த
உங்கள் பிம்பத்திற்கு
உங்களை விழுங்கும்
பெரும்பசி உண்டாகி
அது உங்களை
விழுங்கவும் துவங்கியிருந்தது.
//

//
முற்றிலுமாய்ச் சிதிலமடைந்திருக்கிறது
அவ்வீடு.
தலைமுறைகள் பல கண்டதாய்
இருந்திருக்கும் தான்.
நீண்டு காரை பெயர்ந்து போயிருக்கும்
அத்திண்ணையில்
பூவேலைப்பாடு நிறைந்த
அந்நான்கு தூண்களைச் சுற்றி
இன்னும் மெல்லமாய் கேட்கின்றன
அவ்வீட்டு அல்லது அக்கம்பக்கக்
குழந்தைகளின் விளையாட்டு பாட்டொலிகள்.
உள்ளேயும் நிறைந்திருக்கலாம்
அங்கே வாழ்ந்தவர்களின்
சிரிப்பொலிகள்
கோபக் கூப்பாடுகள்
காதல் சரசத்தில் சிணுங்கிய
கட்டிலின் க்ரீச்சொலிகள்.
எத்தனை ஜனனங்கள்
மற்றும் மரணங்கள்
பார்த்தந்த வீடு யார் சொல்லக்கூடும்.
அத்தனைக்குமான அழுகையொலிகள்
இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கலாம்
அதன் சுவர்களுக்குள்.
அத்தனையையும் தன்
சிதிலமடையா நினைவுகளில்
பொதிந்த படி
காத்திருக்கிறது அவ்வீடு
தன்னை நிராதரவாய்
விட்டுப் போனவர்களின்
வம்சாவளியில் யாரேனும்
தன் கதவைத் திறக்கக்கூடுமோர்
நந்நாளுக்கென.
//

இப்படியாகத் தன்னை உருவகப் பொருளாக்கிக் கொண்டு தன் முன்னாலிருக்கும் சமூகத்திற்கு மிகுந்த பொறுப்புணர்வோடும் அக்கறையோடும் தன் எழுத்துக்களின் மூலமாக வாழ்வியல் சங்கதிகளைப் பட்டியலிட்டுக் கடத்தும் படைப்பாளி சுரேஷ் பரதன் அவர்களை மனமாரப் பாராட்டி மகிழ்கிறது படைப்புக்குழுமம். அவர் மென்மேலும் சிறந்த படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகிற்குக் கொடுத்து இன்னும் உச்சங்களைத் தொடவேண்டும் என உளப்பூர்வமாக வாழ்த்திமகிழ்கிறது படைப்புக்குழுமம்.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

நயினார்


1   950   1  
March 2019

கீர்த்தி கிருஷ்


0   728   0  
September 2020

செந்தில்


0   228   0  
May 2023

திப்பு ரஹீம்


0   366   0  
February 2023