logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் ராம் பெரியசாமி  ஒரு அறிமுகம்
********************************************************
பெயர்: ராம் பெரியசாமி
ஊர்: நெய்வேலி, கடலூர் மாவட்டம்

படைப்பு எனும் இந்த முகநூல் குழுமம் தொடங்கிய நாட்களிருந்து ஒவ்வொரு படைப்பாளியும் தத்தம் பாணிகளில் எழுதி முத்திரை பதித்து வருவது கண்கூடு. அந்த வரிசையில் இந்த மாதம் கவிச்சுடர் பெறும்படைப்பாளி ராம் பெரியசாமி அவர்களைப் பற்றியும், படைப்பு குழுமத்தை ஆதரித்து வரும் படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்ய அவசியமில்லை என்றாலும் நாள்தோறும் இந்த குடும்பத்தில் இணைந்துவந்துகொண்டிருக்கின்ற புதிய படைப்பாளிகளின் கவனத்துக்காக ஒரு அறிமுகக்கட்டுரை அவசியமாகிறது.

இலக்கிய ஞானம் நிறைந்த ஒரு திரைப்பட இயக்குனர் இவர். பிரபல திரைப்பட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும் இணை இயக்குனராகவும் பணியாற்றி இன்று இயக்குனராக அறிமுகமாகும் தினங்களை எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு இலக்கிய இயக்குனரை இவர்.. திரைப்படத்துறையில் பணியாற்றிக் கொண்டே இலக்கியத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு எண்ணிலடங்கா நற்படைப்புகளை இந்த தமிழ் சமூகத்திற்கு தந்து எல்லோரையும் தன் எழுத்தாற்றலால் திரும்பி பார்க்க வைத்தவர்...

இக்குழுமத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறந்த படைப்பாளியாக தேர்வு செய்யப்பட இவர் இப்போது பல படிகளை தாண்டி வந்து இன்று கவிச்சுடர் விருதுபெறும் நிலைக்கு உயர்த்து இருக்கிறார்.

இவரின் ஒவ்வொரு கவிதைகளையும் படைப்பு குழுமம் மிக நுண்ணிய முறையில் ஆராய்ந்து இவருக்கு இவ்விருதை அளிப்பதில் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.

கவிச்சுடர் ராம் பெரியசாமி கவிதையும் அவர் பார்வையும் :
------------------------------------------------------------------------
//
அந்த கடைசிச் சொல்
-------------------------------
உலகத்தின் ஒட்டுமொத்த
பேரிரைச்சல்களுக்கு நடுவில்
எறும்பு பாஷை இவர்களுக்கு
மட்டும் எப்படி தெரிந்தது….

ஏன் சிரித்தார்கள்
எதற்காக கிண்டலடித்தார்கள்
ஏன் வெட்கம் கொண்டார்கள்
எதற்காக கைதட்டிக்கொண்டார்கள்…

கணநேரத்தில் ஆச்சர்யங்களை
மிதக்கவிட்டு
காற்றை வசமாக்கிக்கொண்டார்கள்..
ஒருவனின் அழுகை
மற்றவர்களின் கரங்களுக்குள் தெளிக்கப்பட்டதும்
இதயங்களால்
ஆறுதலளிக்கிறார்கள்….

அவ்வொருவனின் அழுகையோடு பிரிகையில்
வானத்தில் நிறப்பிரிகை
சிறுதுளிகளை சிந்தியது…
அழுகைக்கான அந்த
ஒருவனின் கடைசிச்சொல்
என்னவாக இருந்திருக்கும்
என்பதில் தொடங்கும்முன்…

ஊமைகளென்றும்
வாயில்லா பூச்சிகளென்றும்
பாவங்கள் என்றும்
உச் கொட்டி சிலர்
நெடுநேரமாக பேசிக் கொண்டேயிருந்தார்கள்...
அந்த கடைசிச் சொல்
காற்றிலே தன்னை மறைத்துக்கொண்டது
//

ஒரு கடைசிச்சொல் வாழ்வில் எப்படி இருக்குமென்று கவிஞருக்குத்தான் தெரியும் அல்லது அவரால்தான் அனுமானிக்க முடியும்... அதையும் கவிதையில் இப்படி கொண்டுவர இவரால்தான் முடியும்...

//
நெற்றி சுருக்கி
கண்கள் குறுக்கி
இடக்கைக் கொண்டு
ஔியை மறைத்து
கண்களை விரித்து
உற்று நோக்கி
கால்கடுக்க நின்று
வழிநெடுகிலும் வழிந்தோடும் வெறுமையை
சுமந்து ஏக்கமாய் நீ வருகையில்
உனைக்காணாது
உன் வீட்டு சிட்டுக்குருவி
தெருவரை தேடிக்கொண்டே சுற்றிக்கொண்டிருக்கிறது
//

தேடல் என்பது எவ்வளவு சுகமானது, யார் யாரோ யாரையோ தேடிக்கொண்டிருக்க இங்கே சிட்டிக்குருவிகளில் கூட ஒரு வாழ்க்கை இருப்பதாக தேடிக்கொண்டிருக்கிறார் .

//
வெள்ளைச்சட்டை
நீலநிற ஜீன்ஸ்
வகிடுல்லாமல்
குவித்து சீவிய
குதிரைக்கொண்டை
நுனிநாக்கில்
ஆங்கிலம்
கட்ஷீ
படபடவென பட்டாம்பூச்சிபோல்
காரிலிருந்து இறங்கியவள்
பனிக்கூழ் கடைக்குச்சென்று
வாங்கியவள் சுவைத்துக்கொண்டே
வெளிவருகையில்
அழுக்குநிற
குட்டிப்பெண்ணொருத்தி
ஐவ்விரல்களை நீட்டியபடி
யாசகம் செய்த நிமிடத்தில்
அவளுக்கும் பனிக்கூழை
ஒன்றினை வாங்கித்தருகையில்
குட்டிப்பெண் சுவைத்தபோது
மழை சற்று தடுமாறி அழகியலாய்
பனிக்கூழை நக்கிச்செல்கிறது
//

இப்படியான அழகியலையும் வாழ்வியலையும் தன் பாணியில் கவிதையாக மாற்றுவதில் மிக கெட்டிக்காரர் இவர்.

//
இந்த மயானத்தின்
சதுர அடிகள்
இறந்த உடல்களால்
பத்திரமாய்
பதிவு செய்யப்பட்டது....
வில்லங்கம் வைத்து
வாங்கியவரையும்
விற்றவரையும் கொண்டு
கிரையம்
செய்யப்பட்டது.....
கடவுள்
ஆத்மாக்களுக்கு
பட்டா
வழங்கிக்கொண்டிருந்தார்.
//

கடவுள் ஆத்மாக்களுக்கு பட்டா வழங்கிக்கொண்டிருந்தார்-இப்படியாக முடிக்க பட்ட இந்த கவிதை எல்லோரின் மனதையும் பிழிந்து கொண்டிருக்க வாய்ப்பு அதிகம்.குடிசை மாற்று வாரியத்தின் கீழாய் இடம் இல்லாதவர்கள் கூட கடவுளின் கையெழுத்தில் தனக்கான குழியை முன்பதிவு செய்துக்கொண்டிருப்பது பெரும் துயரத்திற்கு மனித சிந்தனைக்குமே நகர்த்தி செல்லும் கவிதையாய் பிறந்திருக்கிறது.

//
நாங்கள் மரங்களுக்கு
மத்தியில் வாழ்கிறோம்...
நீங்கள் நூலகங்களுக்கு
மத்தியில் வாழுகிறீர்கள்...

நாங்கள் பூக்களையும்
சருகுகள் என்கிறோம்...
நீங்கள் சருகுகளை
கவிதைகள் என்பீர்கள்...

நாங்கள் கிளைகளை
விறகுகள் என்கிறோம்..
நீங்கள் விறகுகளை
சிறுகதைகள் என்பீர்கள்..

நாங்கள் பூமியின் கைகளை வேர்கள் என்கிறோம்..
நீங்கள் வேர்களை
இலக்கியங்கள் என்பீர்கள்...

நாங்கள் பறவை கூட்டினை
உறவுகள் என்கிறோம்..
நீங்கள் உறவுகளை
நாவல்கள் என்பீீர்கள்...

நாங்கள் மரங்களை வெட்டுவோம்...
மரக்கன்றுகளை நடுவோம் என்கிறோம்.....
நீங்கள் நூலகங்களை
அமைத்து ......
புத்தகங்களை அடுக்குவோம் என்பீர்கள்....

வாசகனும் பறவைகளும்
தீர்ந்துக் கொண்டிருக்கையில்
ஒரு புத்தகம்
பல மரங்கள்
என எப்போது சொல்லப்போகிறீர்கள்.....
//

ஒரு எழுத்தாளனின் பார்வை மற்ற மனிதர்களின் பார்வையை விட மிகவும் வித்தியாசமானது என்பது இம்மாதிரியான எழுத்துக்களே எடுத்துக்காட்டிச் செல்கின்றன...

//
முத்துராமனாகிய நான்
பெரியசாமிக்கு
மகனாகி..
இருபத்தியாறாம் வயதில்
சித்தப்பாவாகி
முப்பதாம் வயதில்
அப்பாவாகி
முப்பத்தைந்தாம் வயதில்
பெரியப்பாவாகி...
ஐம்பதாம் வயதில்
சம்பந்தியாகி
மாமனராகி
ஐம்பத்திரண்டாம் வயதில்
தாத்தாவாகி
பின்னொரு மூணு வருடங்களில்
கிழவனாகி
அறுபத்தைந்தாம் வருடத்தில்
பிணமாகிப்போனவனுக்கு
எந்த வயதில்
மனிதனாக இருந்தோமென
ஞாபகங்களில்லை
//

ஞாபக நதியில் நீந்தும் வாழ்வை கரைசேர்த்து கண்ணீரில் நீராட்டி கலக்கத்தையும் வாழ்வையும் ஒப்பிவித்து செல்லும் இம்மாதிரியான வாழ்வியல் கவிதைகளே இவரை அடையாளம் காண உதவும்...

இவரின் கவித்துவத்திற்கு மகுடமாக இருக்கும் மற்ற சில படைப்புகளையும் பார்ப்போம்...

//
என் அப்பாவோ
அம்மாவோ மழையைப்பற்றி என்னிடம் பேசியதில்லை..
குடைப்பிடிக்கவே
நிறைய கற்றுத்தந்தார்கள்..

சிலநேரம் சேலையால்
அம்மாவும்
சிலநேரம் சிவப்புதுண்டால்
அப்பாவும்
எனை நனைக்காமல்
நனைந்து வருவார்கள்...

காலையில் பெய்கிற மழை
வேலையை கெடுப்பதாக
அப்பாவிடம் திட்டு வாங்கும்...
மாலையில் பெய்கிற மழை
பிள்ளை நடந்தே வருவானென
அம்மாவிடம் திட்டு வாங்கும்...

சாரல்மழைகளாய் பெய்யும்போதெல்லாம்
கோழிக்கு நேரும் சூட்டிற்காக
அப்பத்தாவிடம் திட்டு வாங்கும்...

மின்சாரத்துண்டிப்புக்கு
துணைப்போகும் இரவு மழையை
அப்பாவும் அம்மாவும்
அப்பத்தாவும் நாங்களும்
சேர்ந்தே திட்டிவிடுவோம்...

அதன் அழுகையொலி
எங்கள் வீட்டு பாத்திரத்தின்
மேல் ஒலியெழுப்பும்...

மழை எங்கள் வீட்டில்
தெரியாமல் தவறுகள் செய்யும்
குழந்தை் போலாகிவிட்டது...

இந்த தங்கமான மழையை
அது பெய்து தரும் நீரை
நாங்கள் ஒரு போதும்
வீணாக்கியதுமில்லை
புறக்கணித்ததுமில்லை...
//

//
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் உங்களின்
நாக்கை சற்று நீளமாக்கி தெருவரைக்கும் கூட்டிக்கொண்டே செல்லுங்கள்...
வழியில் வருகிற
பரவிக்கிடக்கின்ற
கதைகளை சுவைத்துக்கொண்டே செல்லுங்கள்...
அக்கதைகளை மெருகேற்றி
உங்களால் முடிந்தவரை
நீட்டிச்சென்று தொடர்கதையாய் ஆக்குங்கள்...
பின்னொருநாளில் நாக்கை சுருட்டி மடக்கி வைத்து
எதிர்ப்பார்ப்புடன் வீதிகளில்
வலம் வருவீர்கள்...
சில எச்சில்களின்
எச்சங்கள் உங்கள் மீது
தெறிக்கும்...
தானாகவே உணர்வீர்கள்
அதில் உங்களுடையதும் கலந்திருக்கும்...
//

//குருதிப்பிழை அவனுக்கு
உடலெங்கும் வியாபித்திருக்கும் சேற்றுக்கொடிகளை
அறுத்தெடுக்க மீளவே முடிவதில்லை...
படித்துறை பாசிகளை
சொற்களின் வீச்சில்
ருசியூட்டிய நாக்குகளின்
நீளங்களில் வசவுகளாய்
குடிபுகுந்து கயிற்றில்
தொங்கவிடப்பட்டிருக்கிறது.
உயிரின் வெப்பம்
உயிரின் குளிர்
இரண்டிலும் தொப்புள்கொடி
நீட்சியின் பிறப்பில்
வேசியின் மகனாகிறான்
பெயர் மரித்துக்கொண்டே
போகும் கணத்தில்
உயிர் இழுத்துக்கொண்டே
போகிறது அவனை
மிருகங்களில்லா
வனாந்திரத்தை நோக்கி
//

//

கட்டண கழிப்பறை
------------------------
இரும்புத்தகரத்தாலான
கிழிசல்களுடன்
கதவொன்றைப்பற்றிய
அறையின் மேல்பகுதியும்
கீழ்பகுதியும் வெற்றிடம்கொண்டு
வாடிக்கையாளனின் முகமட்டும் மறைத்தலானகழிவறையின் துருப்பிடித்த தாழ்பாள்
கடந்தகாலத்தில் துளைகளுக்குள் பொருந்தி
நிகழ்காலத்தில் புகமுடியாதன் வயது
பல வருடங்களாகியது…
பான்பராக் குட்கா ஹான்சின் எச்சில் கறைகளும்
புகையிலையின் நெடிய வாடைகளின் வீச்சமும்
மஞ்சள் பூஞ்சையழுக்கேறி
உள்வாய் குழாயினுள்ளே
புகமுடியா பலமலக்கழிவுகளின்
மிதத்தலின் அருவருப்பிலும்
சாயங்கள் போனச்சுவரின்
மேனிகளில் தீண்டப்பட்ட
பெண்ணுடலுக்கான
வர்ணனைகளும்
சம்பாஷனைகளோடு
சில பெயர்களும்
தெளிவு வரைப்படங்களும்
அலைபேசி எண்களுமாய்
மென்புறுவலோடு ரசித்தபடி
படித்துக்கொண்டே
சிகரெட்டை புகைத்துக்கொண்டிருக்கிறான் மானிடனொருவன்
கட்டணக்கழிப்பறையின்
நுழைவுக்கட்டணத்தின் ஐந்துரூபாயில் மனிதம்
மலங்களாகியது.
//

இப்படி பல்லாயிரக்கணக்கான நவீன கவிதைகளை எழுதி இந்த காலத்தில் இவருக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு நவீன இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு உலகத்தரம் வாய்ந்த எழுத்தாளர் இவர் என்பது இவரின் எழுத்துக்களே சொல்லும்...
இந்த இரசனையான எழுத்துக்களின் முன் பிரம்மித்து நிற்கும் படைப்புக் குழுமம் கவிச்சுடர் ராம் பெரியசாமி அவர்களை வாழ்த்தி, வருங்கால இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்று அவரது எழுத்துக்கள் உலகெங்கும் பவனி வரவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறது !!

வாழ்த்துக்கள் கவிச்சுடர் ராம் பெரியசாமி

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

ஹிதாயத்


0   154   0  
November 2023

குடந்தை அனிதா


1   656   1  
May 2022

அ.க இராஜாராமன்


0   967   0  
February 2019

சூர்யநிலா


0   665   0  
January 2021