logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் ஜானு இந்து  ஒரு அறிமுகம்
***************************************************
செப்பனிடப்படாத பாதையொன்றின்
மேடு பள்ளங்களென
நீட்டியோ குறுக்கியோ
வலுக்கின்ற வார்த்தைகளின்
வன்மங்களால் நெஞ்சின் ஆழம்வரை
இறங்கிப்பரவுகிறது கசப்பின் துளிகள்...

கவிதையென்பது ஆர்வத்தால் துளிர்த்தாலும் ஆழம் இருக்கவேண்டும். எதையோ சொல்லிவிட்டு போவதெல்லாம் கவிதையாகாது. சொல்லவேண்டியதை இதயத்தினருகில் சொல்லவேண்டும். கவிதாயினி ஜானு இந்துவின் கவிதைகள் இதில் சளைத்ததல்ல.

நமது படைப்பு குழுமத்தின், 2018 அக்டோபர் மாதத்திற்கான கவிச்சுடர் விருதினைப் பெறும் ஜானு இந்து அவர்களின் இயற்பெயர் ஜான் இந்திரா மேரி என்பதாகும். முதுநிலை சைக்காலஜி படித்திருக்கும் கவிதாயினி, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கான கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டிற்கான பணியினை செய்து வருகிறார்.

கடந்த 15 வருடங்களாகச் சமூக மேம்பாட்டு ஆய்வுப்பணிகளோடு பயிற்றுநராகவும் பணி புரிகிறார். இவரது சொந்த ஊர் மதுரை.

பள்ளி நாட்களில் இருந்தே கவிதைகள் எழுதுவது தனது ஆர்வம் என்று சொல்லும் கவிதாயினி, கடந்த மூன்று ஆண்டுகளாக கொஞ்சம் தீவிரமாகவே எழுதி வருவதாகப் பெருமையுடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

அவரது படைப்புகள் இன்னமும் புத்தக வடிவம் பெறவில்லையென்றாலும் நமது படைப்பு குழுமத்தின் வழியாக நிறைய வாசகர்களை அவர் பெற்றிருக்கிறார்.

அவரது படைப்புகள் விரைவில் நூல்வடிவம் பெற படைப்பு குழுமம், அவரை வாழ்த்துகிறது.

கவிச்சுடர் ஜானு இந்து அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
***********************************************************************************
இவரது கவிதைகள் எல்லா மக்களாலும் எளிதாக புரிந்து கொள்ளும்படி இருப்பது தனிச்சிறப்பு. காட்சியமைப்பை கவிதைக்குள் கொண்டுவந்து ஒரு படைப்பாக மாற்றும் வித்தையை அழகாக கையாளத் தெரிந்திருக்கிறார். இவருக்கு நமது படைப்பு குழுமம் கவிச்சுடர் விருது அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எவ்வளவு எளிமையாக எழுதும் வல்லமையை பெற்றுள்ள படைப்பாளி இவர் என்பது நீங்கள் வாசிக்கும் இவரது படைப்புகளிலிருந்தே தெரிந்து கொள்வீர்கள்.

தான் சொல்லவரும் கருத்துகளை படிப்பவரின் மனதுக்குள் சென்று ஆழ பதிய வைக்கும் வித்தையை இவரது படைப்புகள் மூலம் படிக்க தருவது இவரது தனிச் சிறப்பு.

நினைவுகளின் அடுக்குகளில் ஆறாத இரணங்களாய் அமர்ந்திருக்கும் சில நிகழ்வுகளோடு கவிதையின் கரம்பற்றி ஆறுதல் தேடுகிறார் கவிதாயினி. மேகத்துளிகளின் சப்தங்களில் உள்ளன்பின் இசையைக் கேட்கிறார். கண்களின் மொழியறிந்தவர் ஆறுதல் தேடவும் வழி சொல்கிறார்.

கூரிய அலகினால் இடைவிடாது
மரம் கொத்தும் மரங்கொத்தியைப்போல்
மனதைக் கொத்தி அரிக்கிறது நினைவுகள் ஆற்றாமையால்
.....
குருதி கசியவில்லை எனினும்
அவை ஆறாத ரணங்கள்
.....
நீர்த்தொழுகும் மேகத்துளிகளின் சப்தங்களிலிருந்து
சேகரிக்கிறேன்
உள்ளன்பினை உணர்த்துவதற்கானதொரு இசையினை
.....
உறுத்து நோக்கும் அந்தக் கண்களிலிருந்து
தெறிக்கும் உணர்ச்சிகளை
விவரிக்க வார்த்தைகளில்லை
.....
வெறுமை தாங்கிய அந்தக் கண்களில்
நான் கண்டிருக்கிறேன்
அவ்வளவு கருணை
அவ்வளவு உயிர்ப்பு
அத்தனை நேசம்
அவ்வளவு மனிதம்
அவ்வளவையும் தொலைக்க நேர்ந்த
அந்தத் தருணத்தை எப்படிக் கடந்திருப்பாய் ???
.....
கடந்த தடங்களின் எச்சம் வடுக்களின் படிமம்
.....
வலியறியா மனதொன்று எங்குமில்லை
வலிபுரியா நேசம் நிஜமுமில்லை
.....
நிறைந்திருக்கிறது என்னுள்
வெறுமை துடைத்தெறியும் நேசம்
பகிரலாம் வா
இன்னும் இருக்கிறது வாழ்வு
விரிக்கப்படாத சிறகுகளோடு..

@@@
ஆறுதல் மொழிக்கு இனிமையைத் தேடுபவர்களின் மத்தியில் முரண்களின் வாசலில் கவிதையைத் தொடங்கி அவலங்களின் மொழியில் ஆறுதல் தேடுவதும் புதுமைதான்...

*

காலுக்குக் கீழே நழுவும் வானம்
தலைக்கு மேலே விரிந்த பூமி
இன்னும் கண்களுக்கு
பழக்கப்பட்டிராததொரு இருட்டு

கீழ்த்திசையில் தவறிப்படர்ந்த
சேகரிக்கவியலா ஒளிப்புள்ளிகள்
பலத்த காற்றில் உதிர்ந்த
சிறகொன்றின் அலைக்கழிப்பில்
வாழ்வின் தள்ளாட்டம்

தனித்து விடப்பட்ட குயிலொன்றின்
மெலிந்த கூவலில்
இசைதப்பியதொரு கேவல்

சாலையின் வளைவொன்றில்
கூட்டமாய் புணரப்பட்ட நாயொன்றின்
நீண்டு தொடரும் வலி நிறைந்த அழுகுரல்

தூக்கம் தொலைந்த நடுநிசியில்
கண்களை கனமாய் அழுத்தும்
கனவின் கசப்புகள்

மரம் சப்தமின்றி தனது
இலைகளை உதிர்த்துக் கொண்டிருக்கும்
நிசப்த இரவொன்றில்
அடிவயிற்றிலிருந்து பீறிட்டெழும் அழுகை
போதுமானதாய் இருந்துவிடுகிறது
இத்தனிமைத் துயரினை சமன் செய்ய...

@@@

ஆறுதலின் சாய்வு கூடச் சுருங்க செய்யும் சூத்திரம் எனச் சொல்லும் கவிஞர் எல்லா வாசங்களையும் கடக்க கற்றபின் மரணத்தின் வாசம் பெரும் போதை என்றும் சொல்கிறார்...

*

தோள் சாய்த்துக் கொள்தலென்பது
எவருமறியாமல் வெளிதனை
சுருங்கச் செய்யும் சூத்திரம்

அரவணைத்த கரங்களின்
விரல்வழி நீளும் சவுக்கின் நுனியில்
இறுக்கி முடியப்பட்ட சிறகுகள்

சரணடைதலின் பாவனைகளால்
செதுக்கப்படும் சிலுவைமரம்

உறுத்தாத பார்வைக்குப் பின்
இரைதேடும் கழுகொன்றின் எத்தனிப்பு

அத்தனை கடினமில்லை
தீர்ந்து கொண்டிருத்தலின் வாசமறிதல்

எல்லா வாசங்களையும் கடக்க கற்றபின்
மரணத்தின் வாசம் பெரும்போதை...

@@@

சாத்தப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் ஓர் உலகம் இருப்பதாகச் சொல்லும் கவிஞர் அதனை வகைப்படுத்தவும் தவறவில்லை. அலங்காரமென்பது வெறும் மேற்பூச்சுதான்..அதன் புழுக்கங்களை இந்தக் கவிதையில் வாசிக்கமுடிகிறது...

*

சாத்தப்பட்ட கதவுகளுக்குப் பின்னால்
மௌனித்துக் கிடக்கிறது
முரண்களால் செதுக்கப்பட்ட ஓர் உலகு...

புழுக்கம் நிறைந்த இரவுகளின்
கண்ணீர்த்துளிகளால் எழுதப்பட்டிருக்கலாம்
இதுவரை வாசிக்கக்கிடைக்காத
எத்தனையெத்தனையோ கதைகள்...

புன்னகைகளின் சாயல் படிந்திருக்கும் தூண்களில்
பதிந்திருக்கலாம் காதலின் கை ரேகைகள்...

ஆதுரம் நிரம்பிய வார்த்தைகள் பொதிந்திருக்கலாம்
சுவர்களின் சிறு விரிசலொன்றில்...

நிறைந்த நேசமோ பகிர்ந்த காமமோ
கோபம் உதிர்த்த வார்த்தைகளோ
வார்த்தைகளைக் கடந்த கண்ணீரோ
சிதறிக்கிடக்கலாம் தரையெங்கிலும்...

ஒரு உறவோ ஒரு பிரிவோ
ஒரு பிறப்போ அல்லது ஒரு இறப்போ
நிகழ்ந்திருக்கலாம் அல்லது நிகழ்த்தப்பட்டிருக்கலாம்...

இரவின் வாசம்
களிப்பின் சுகந்தம்
கண்ணீரின் கரிப்பு
முத்தத்தின் ஈரம்
முனகலின் வேதனை
இயலாமையின் வெறுமை
என எதனையேனும் உள்வாங்கியிருக்கலாம்...

வாசல்களில் தெளிக்கப்பட்ட அலங்கரிப்பின்
வண்ணங்கள் போலற்றது
சாத்தப்பட்ட கதவுகளின் பின்னாலான உலகு...

அது ஒரு மௌனியைப்போல்
பலவற்றின் சாட்சிகளை தன்னுள் புதைத்து வைத்துள்ளது...

வெளி வாசல்களின் அலங்காரங்களால்
தீர்மானிக்கவியலாதவை
சாத்தப்பட்ட கதவுகளின் பின்னாலுள்ள உலகு...

@@@

விலங்குகளுக்கு எதிர்பார்ப்புகள் என்று ஒன்றும் இருப்பதில்லையென்று சொல்லும் கவிஞர் இரையே கிடைக்காதபோது இரை தருபவனையே அவை தன் இரையாகத்தான் பார்க்கின்றன... மனிதன் மட்டும்தான் விசுவாசத்தைத் தேடுகிறான் என்று சொல்லும் இந்தக் கவிதை சிந்தனையின் மகுடம் என்று சொல்லலாம்...

*

உயிர்களைத் தின்று செரித்துக் களித்திருக்கும்
விலங்கின் பார்வையில் இரைக்கும்
இரையிடுபவருக்கும் வித்தியாசம் ஒன்றுமிருப்பதில்லை

பெரும்பசிப் பொழுதுகளில்
உண்மையில் அது இரையிடுபவரையே
உறுத்து நோக்குகிறது

உணவிட்ட கைகள் அதன் பார்வையில்
சதையுள்ள ஒரு எலும்புத் துண்டு என்பதைத் தவிர
வேறொன்றும்
அறிந்திருக்க நியாயமில்லைதான்

ஒரு சிறு கொடுத்தலுக்குப் பின்
விசுவசிக்க வேண்டும் என்பதான
நமது அறியாமை அதனிடத்தில்
எப்போதும் இல்லை

அதனது அதனதன் இயல்புகளோடு
இயங்கிக் கொண்டிருக்கும் போது
நாம் மட்டும்தான்
நமது எதிர்பார்ப்புகளை
நம் விருப்பங்களுக்கேற்க
கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம் நன்றியறிதலின் பெயரால்...

@@@

மேலும் கவிஞரின் அற்புதமான கவிதைகள் தொடர்கின்றன உங்கள் பார்வைக்காக...

*


விருப்பங்களுக்கும்
விலகியிருத்தலுக்குமான இடைவெளியினை
எவ்வார்த்தைகளால் விளிப்பது

பிம்பங்களின் சாயல் கொண்டு தீர்மானித்தலில்
எத்தனை நியாயம் இருந்துவிடக்கூடும்

இருள் படர்ந்த கானகம்
திசை தவறிய பாதைகள்
ரகசியமாய் சேமித்த வார்த்தைகள்
மறைத்து வைக்கப்பட்ட அன்பு
மறுதலிக்கப்பட்ட. நேசம்
உறுத்தியபடிக் கிடக்கும் பொய்கள்
வலிபொருந்திய நிராகரிப்பு

நீளும் பட்டியல்களுக்கிடையே
இக்கணம் உள்ளோடும் நடுக்கம்
ஆண்டாண்டு காலமாய் சேர்த்து வைத்த
விலக இயலாத ஒரு பிரியம்

அலைவதும் தொலைவதுமான
அலைக்கழிப்பினிடையே
சுயதீர்மானங்களில் ஏதுமில்லை
ஒளியின் திசைக்கேற்ப உருமாறும்
பிம்பங்கள் வெறும் பிம்பங்கள்தான்
அவை பிரதிகளல்ல

நிஜங்கள் வேறாகவும் இருக்கக்கூடும்...
----

இனி எதுவுமில்லை என்ற சொல்
கவனமாய் தீட்டப்பட்ட கத்தியின் கூர்முனை

யாரோபோல் வேடிக்கை பார்த்து நகரும்
நேசம் தண்டித்தலின் ருசியறிந்த ஞானம்

நினைவின் வெளியெங்கும் தூவப்பட்டுக் கிடக்கும்
கவனமாய் தவிர்க்கப்பட்ட சொற்களுக்குள்
மனசு வலிக்கும்படியான
ஒரு பேரழுகையின் தனிமை துயர்

சிரத்தையுடன் பின்னப்படும்
வலைகளுக்கு சிதைபடும் சிறகுகள்
குறித்த கவலையேதுமில்லை

புறக்கணிக்கப்படும் நேசம் மரணத்தைக்காட்டிலும்
வலி பொருந்தியதாய் இருக்கலாம்
ஆனால் அது உள்ளோடித்திரியும் உதிரம்
அதற்கு மரணமென்பதில்லை...
--------

சுடு மணலில் அலையும் வெற்றுப்பாதங்களின்
பெரும் அவஸ்தையென உள்ளிறங்கி
அலைகழிக்கிறது துயருற்ற பொழுதின் தனிமை...

மேலும் கீழுமாய் ஏறி இறங்கி
சுவாசத்தை இடம் பெயர்த்தும் வறண்ட
நெஞ்சக்கூட்டிலிருந்து வடிந்து விட்டிருந்தது நீர்மை...

என்ன பேச என்கிற கேள்விக்கு
எதையாவது பேசேன் என்பதான பதிலில்
கவனமிழக்கிறது பகிரவென சேமித்த அத்தனையும்...

பிரியமானவரென வரையறுக்கப் பட்டவரது
இருத்தலின் மேல் நிராகரிக்கப்பட்ட அக்கறை
இருவரின் இருப்பையும்
கேள்விக்குறிக்குள் இட்டு அடைத்து விடுகிறது...

முழுதாக எதையும் நேசிக்க முடியாத போது
முழுதாக வாழவும் முடியாமல்தான் போய்விடுகின்றது...

தனிமையை இழுத்தணைத்தபடி தவித்துக் கடந்த தாகப்பொழுதுகளை,
நிறைந்து வழிந்த ப்ரியத்தை,
சேர்த்து வைத்த முத்தங்களை,
அடர்இரவின் கரித்த கணங்களை, கண்ணீர்த்துளிகளை,
கொன்று புதைத்த ஞாபகங்களை
இப்படி எத்தனை எத்தனையோக்களை
முழுங்கி முழுங்கிச் செரித்து
காத்திருப்பின் கணங்களைக் கரைத்து முடித்த நிமிடம்...

நீ திரும்ப வருகிறாய்...

இப்போது என்னிடம் தீர்ந்து விட்டிருக்கிறது காதல்...

---

இருளுக்குள் ஒளியும் ஒளிக்குள் இருளுமாய்
எனது தனிமையினை ஊதிப்பெருக்கிய
நட்சத்திர இரவொன்றில்
கீழ்வானின் அடர்கருமைக்குள்
பிசாசென அலைகிறது மனம்...

உனக்கானதொரு வாழ்தல் கணத்தை
உன்னுடனானதொரு வாழ்வியல் பொழுதை
உருவாக்கும் பொருட்டு மிக நேர்த்தியாய்
நேசமுடன் கட்டமைக்கத் தொடங்குகிறேன்...

நீயறியாத கனவுகளும் என்னுள் உண்டு...

சமூக மதிப்பீடுகளால்
இறுக்கிக்கட்டப்பட்ட பெண் வாழ்விலிருந்து
அவளின் ப்ரத்யேகக் கனவுகளைக்
கண்டறியும் அகப்பார்வை அநேகருக்கும் போலவே
உனக்கும் வாய்க்கவில்லை...

தடவுதல்களாலும் ஒருசில முத்தங்களாலும்
காதலை நிறைத்துவிட முயற்சிக்கிறாய்...

முற்றுப்பெறாமல் பெண்ணொருத்தியுள்
எரியும் தாகத்திலும் முற்றுப்படுத்தாத ஆணிண்
அலட்சியத்திலும்
நிறைக்கவியலாததொரு தவிப்பென இன்மைகளுக்குள்
ஆட்பட்டுவிடுகிறது காதல்...

நட்சத்திரங்கள் தொலைத்த இரவுகளில் அல்லாது
வெண்ணிலவு நாளொன்றின் மென்கமழ் வாசத்தில்
ஒரே ஒரு முறை புன்னகைத்துப் பார்...

ஒரு வேளை புரிபடலாம் காதலும்
காதலியேந்திக் கொண்டிருக்கும் கனவுகளும்...

-----------

கடைசிவரை கழுவேற்றவியலாத
பாவச்சுமையொன்று உறுத்தியபடியே
அழுந்திக் கிடக்கிறது உள்ளறுத்தபடி...

பாவத்தின் ஈடாய் காணிக்கையென
ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள்
வெப்பமேறி உருகிவழிந்து உறைநிலைத்த பிறகும்
தணிவதாய் இல்லை உள்ளோடும் எரிநிலை...

எதிலிருந்து தொடங்க???
இல்லை எங்கு முடிவுற???
தொடங்கும் போதே முடிந்து போவதும்
முடிவிலிருந்து தொடக்கம் பெறுவதுமான
இன்மைக்குள்
குழம்பிக்கிடக்கிறது ஆற்றுப்படுத்தவியலா
பாவமிழைத்த இதயமொன்று...

அந்திமகால நெருக்கங்கள்
கடந்து போகும் அவசரங்களில்
விரைந்து நகர்கின்றன...

இளைப்பாறுதல் கிடைக்கலாம்
கிடைக்காமலும் போகலாம்
பாதைமுழுக்க உறுத்தும் முட்களுக்கிடையே
எங்கேனும் தென்படலாம்
கருணை நிறைந்த சிறு புன்னகையொன்றும்...

துரோகங்களினால் தொலைந்த வாழ்வில்
இன்னும் உயிர்ப்புடனிருக்கிறது
நேசத்தால் தொலைத்த ஒரு பெருங்கனவு...

ஆயிரம் பிரார்த்தனைகளோடு
கையளிக்கப் படுகின்ற பாவமன்னிப்புகளால்
கடந்தேறாத பாவச்சுமைகள் எப்போதும்
அழுந்தியே கிடக்கின்றன உள்ளறுத்தபடி...

---------

படைப்பாளி ஜானு இந்துவி அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.