logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் பாத்திமா மின்ஹா  – ஒரு அறிமுகம்
****************************************************************
படைப்பு குழுமத்தால் இம்முறை கவிச்சுடர் விருது பெறும் படைப்பாளி பாத்திமா மின்ஹா அவர்கள் மின்மினி மற்றும் மின்ஹா என்ற பெயர்களில் பலநூறு கவிதைகள் பல தளங்களில் எழுதிக் கொண்டிருப்பவர். நம் குழுமத்தில் மின்ஹா மின்மினி என்ற பெயரில் பல கவிதைகளை எழுதி மாதாந்திர பரிசும் பெற்றவர். 

கிழக்கிலங்கையைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியை. வின்சென்ட் தேசிய பாடசாலையில் கல்வி கற்றவர். சிறிய வயது பெண்மணிதான் என்றாலும் வாசிப்பின் மீதும் கவிதைகளின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பல மின்னிதழ்களிலும் சஞ்சிகைகளிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. விரைவில் நூல் வெளியிடவும் தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறார்.

மின்மினி என்ற பெயரில் நம் படைப்பு குழுமத்தில் ஆரம்ப காலத்திலிருந்தே நம்முடன் இணைந்து பங்களிப்பு செய்திருந்தாலும் புனைப்பெயரில் இருப்பதால்  இடையில் ஏற்பட்ட முகநூல் ஐடி முடக்கத்தால் மீண்டும் உண்மையான பெயரிலேயே இப்போது முகநூல் கணக்கு தொடங்கி நம் குழுமத்தில் இணைந்திருக்கிறார். இதனால் அவரது பல படைப்புகள் குழுமத்தில் படிக்க இயலாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் இதுவரை வந்த கவிதை மின்னிதழ்களில் ஏறக்குறைய தொண்ணூறு சதவீதம் அவரது கவிதைகள் பிரசுரமாகி இருப்பதே அவரின் எழுத்துக்கு கிடைத்த சான்று. இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் நம் குழுமம் ஒரு படைப்பாளியை இனம் கண்டு அவரது படைப்புக்களை ஆராய்ந்து அவருக்கான அங்கீகாரம் கொடுக்க தவறுவதில்லை என்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் எவ்வாறெல்லாம் ஒரு படைப்பாளியை நம் குழுமம் உன்னிப்பாக கவனிக்கிறதென்பது. அதுமட்டுமல்லாமல் படைப்பில் அங்கீகாரம் பெற வயதோ நாடோ இடமோ ஆணோ பெண்ணோ  முக்கியமல்ல ஒரு  படைப்பாளியின் திறமை மட்டுமே என்பது தெளிவுபடுத்துகிறோம் இதன் வாயிலாக.

கவிச்சுடர் பாத்திமா மின்ஹா அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
**********************************************************************************************
இவரது கவிதைகள் பலத் தளங்களிலும் சென்று நடை போடுகிறது. இவருக்கு வார்த்தைகள் எளிதில் வந்து விழுந்துவிடுகின்றன. படிமங்களை அழகாக கையாளத் தெரிந்திருக்கிறார். இவருக்கு நமது படைப்பு குழுமம் கவிச்சுடர் விருது அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

நவீனத்தை கவிதைகளில் புகுத்தி தனக்கென ஒரு தனி பாணியை வைத்துக் கொண்டு எழுதும்  பெண் எழுத்தாளர்களில் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளி இவர் என்பது நீங்கள் வாசிக்கும் இவரது படைப்புகளிலிருந்தே தெரிந்து கொள்வீர்கள்.

தான் சொல்லவரும் கருத்துகளை படிப்பவரின் மனதுக்குள் சென்று ஆழ பதிய வைக்கும் வித்தையை இவரது படைப்புகள் மூலம் படிக்க தருவது இவரது தனிச் சிறப்பு.

நாம் மௌனத்தை பல வடிவங்களில் கையாண்டாலும் உள் மனமொன்று எப்போதும் நம்மிடம் பேசிக் கொண்டேயிருக்கும். அதை இவர் அசரீரி என்ற தேவ வார்த்தையொடு ஐக்கியம் செய்து விடுகிறார். 

//
வாய்மூடிய
எல்லாவற்றிற்குள்ளும்
ஒரு அசரீரி
வேகமாக
பேசிக்கொண்டே
இருக்கிறது
//

தனித்தலின் இரசனையை எவ்வளவு அழகாக சொல்கிறார் பாருங்கள்...

//
மழையின் தரிசுக்காடுகள்
காற்று நனைக்காத காகிதப்பட்டம்
இசை தரித்த புல்லாங்குழல்
பசுமையின் ஒரு பிடி பச்சையத்தில்
வரைந்த வனத்தின் வகிடு;
வெகுநேரமாய் அங்கேயே நின்றுகொண்டிருக்கிறேன்
பாதைகள் நகர்கின்றன!
//

அவரது வாசிப்பு அனுபவம் புத்தகங்களின் பக்கமே திரும்புகிறது, மனிதர்களைவிட்டு விலகி அந்த வாசிப்பிற்குள் நுழைந்துவிட ஆசை படுகிறார்...எவ்வளவு அழகான கவிதை!

//
புத்தகங்களால் அலங்கரிக்கப்பட்ட
அறையொன்றினுள்
பொழுதுகளைத்
தின்றுகொண்டிருக்கும்
கண்களாய் மட்டும் இருந்துவிடுதல்
கனவுக்குறிப்பில் கத்தரிக்கப்பட்டட
இரண்டாவது குறிப்பு

கீழே செல்லரித்துக்
கொண்டிருக்கும்
முதலாவது குறிப்பு;
மனிதர்களை விட்டும்
தொலைதல்

ஓ கறையான்களே
மனிதர்களை
விட்டு விடுங்கள்
அவர்கள்
அவர்களையே
தின்றுகொள்கிறார்கள்
//

காகிதங்களாய் மின்னும் பொக்கிசம் முகாரிக்கு இடைவெளி கொடுத்து காலவெளிக்கு கடத்திப் போவதை இந்தக் கவிதையில் அசத்துகிறார்:

//
அந்தக் காகிதங்களைச்
செல்லரித்திருக்கவில்லை

ஏதோவோர் ஆழ்ந்த தேடல்
களஞ்சிய அறைக்குள்ளிருந்த
பெட்டிக்குள் விழுந்து கிடக்கிறேன்

எதிர்பாரமல் என்னை
வந்தடைந்த குரலற்ற குரல்
அந்த காகிதத்தின் படபடப்பு

அத்தனையும் பசுமையான
பேரன்பின் பிதற்றல்கள்
பொதிந்த கையெழுத்து
அச்சுக்கள்

காலத்தின் நரைமுடிகளுக்கு
சாயமிடும் புன்னகைகள்
சுழியோடு சுழன்ற போது
குளிர்சாதனப் பெட்டியானது உள்ளம்

இரைமீட்டிய தொலைதல்
நேரங்களை விழுங்கிக்கொண்டபோது
முகாரிகளும் இடைவெளி
எடுத்துக் கொண்டன
//

நிலவிற்கு கூட வேள்வி செய்து இரசிக்கும் கவிதைமனம் அழகானது... இந்தக் கவிதை வியப்பானது. அதைவிட வியப்பு இந்த சிறிய வயதில் இப்படிப்பட்ட பார்வையும் கோணமும் இவரிடம் இருப்பது. இதோ அந்த கவிதை...

//
நிலவுக்கு ஒரு வேள்வி.
இன்னும் ஒளிர்கிறது பூமி

கேட்கும் விறகுகள் போதவில்லை
துரும்புகளைச் சேர்க்கிறது காற்று

தீர்த்தம் தின்ற தீக்கு
தீக்குச்சிமாலை
அரும்பிக் கொள்கிறது..

சுடர் விடுத்த சுவாலை கொய்தேன்
அழகிய பச்சிலைக் கொழுந்து
தேனீருக்கு ஒரு மிடர் தாகம்

நிஷ்டை பூத்த நிலா மீண்டும்
நீறுக்குள் ஒளிக்குளியல்

பனித்துளிகள் உவர்த்தன
பசுமை விடைபெற்றது
//

நிசப்தம் மோனத்தினொரு அங்கம்... காதலின் மொழி பெயர்ப்பு, அஃது எந்த படகிலும் பயணிக்கும் ,இசையாகி இரசிக்கும் இன்புற்று இன்புறுத்தும் அப்படியான கவிதை இதோ:  

//
அலைகளில்லா நிசப்தம்
கரை தடவிச்சென்றதும்
அந்தியின் பிந்திய பகுதியில்
இருள் கரைந்து கொண்டது

பௌர்ணமி விட்டுச்சென்ற
கனவுகளை காற்றின் மென்விசை
கலைக்க ஒரு வானம் செய்தது நதி

ஒலிக்க மறுத்த மோனம்
கலைந்து மென்குழல் துளை
வழியே இசையானது

ஒளிர்ந்த நதிப்படுக்கையும்
மிதந்த கனவுக்கூடுகளும்
பின்னிரவைக் கொண்டாடின

ஒருத்தியின் தீயில் சுடர்விடும்
கூண்டுகள் சாம்பலாகியிருக்கவில்லை
ஆனால் பௌர்ணமியில்
படிந்திருந்தன 
//

-----------
படைப்பாளி பாத்திமா மின்ஹா அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.
 
#கவிச்சுடர்_விருது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.