நம் காலத்துக் கவிதை
விக்ரமாதித்யன்
எழுத்து என்பது மொழியின் ரகசியம். இந்நவீன உலகில் காலத்திற்கு ஏற்ப எவ்வளவோ மாற்றம் நிகழ்ந்ததைப் போல எழுத்திலும் நவீனத்துவம் என்பது இயல்பானது. "முட்டைக்கு ஓடு என்பது குறிப்பிட்ட காலம் வரை தேவைப்படுகிறது. ஆனால் அது காலம் முழுமைக்கும் இருக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே ஓடு உடைக்கப்படல் வேண்டும்" என்பதாக பழமையை உடைத்து நவீனம் பிறந்தது. தனிமனித பிரக்ஞையின் வாயிலாக யதார்த்தத்தைக் கைப்பற்ற முனையும் எண்ணங்களை, நம்பிக்கைகளை, கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் மைய விழுமியாக இருக்கிறது இன்றைய நவீனம். அப்படிப்பட்ட நவீனக் கவிதைகளை ஆய்வு செய்து தொகுக்கப்பட்டிருப்பதே "நம் காலத்துக் கவிதை" எனும் கட்டுரைத் தொகுப்பு.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்கள் ”ஆகாசம் நீல நிறம்”, “ஊரும் காலம்”, “உள்வாங்கும் உலகம்" உட்பட 16 கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் 7 கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை எழுதியுள்ளார். மேலும் 2008ம் ஆண்டின் விளக்கு இலக்கிய விருது மற்றும் 2014 ஆம் ஆண்டிற்கான சாரல் விருதும் பெற்றுள்ளார்.
எமது படைப்பு பதிப்பகத்தின் மூலமாகத் தனது தொகுப்பை வெளியிட முன்வந்த படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்களுக்கும், அட்டைப்பட வடிவமைப்பில் இத்தொகுப்பை அலங்கரித்த வடிவமைப்பாளர் ரவி பேலட் அவர்களுக்கும், மெய்ப்புத் திருத்தி உதவிய 'படைப்பு' ஆசிரியர் குழுவுக்கும் மற்றும் இந்நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
வளர்வோம்...! வளர்ப்போம்..!!
படைப்புக் குழுமம்.
எல்லா உயிர்களுக்கும் இந்த உலகமே ஒரு வீடு, வீடுகளே இல்லாத உயிர்களுக்கும்கூட. அதில் கருவறை தொடங்கி கல்லறை வரை பாதங்களால் நீக்கமற நிறைந்திருக்கும் வீடுகள் எத்தனை எத்தனையோ... அதில் எங்கெல்லாம் எப்படியெல்லாம் நம் பாதச் சுவடுகளைப் பதித்தோம் எனப் "பாதங்களால் நிறையும் வீடு" என்ற தலைப்பின் கீழ் போட்டிக்களம் அமைத்து எழுதக்கேட்டது படைப்புக்குழுமம். அதன் முத்தாய்ப்பான கவிதைகளின் தொகுப்பே இந்தக் கணத்தில் உங்களின் மனதில் நிறைந்துகொண்டிருக்கும் இந்த வீடு.
கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டியாக நம் குழுமத்தில் நடத்திய "பாதங்களால் நிறையும் வீடு" எனும் கவிதைப் போட்டியின் கவிதைகள் தொகுப்பே இந்நூல்.
இப்போட்டிக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான சிறந்த கவிதைகளினின்றும் மிகச்சிறந்த கவிதைகளைப் பரிசிலுக்காகத் தேர்வு செய்தும் சற்றும் சலிப்புறாது இத்தொகுப்பிற்கான வாழ்த்துரை வழங்கியும் எங்களைப் பெருமைப்படுத்திய கவிஞர். கலாப்ரியா அவர்களுக்கும் மற்றும் இப்போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த போட்டியாளர்களுக்கும் படைப்புக் குழுமம் தன் நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறது.
நம் மனித சமூகம் எவ்வளவோ மகத்தான மனிதர்களை இவ்வுலகிற்குக் கொடுத்திருந்தாலும் சாதாரண சாமானியன் முதல் சாதித்த மகான்கள் வரை அனைவருமே ஏதோ ஒரு தாயின் கருப்பையிலிருந்தே ஜனித்தவர்கள். அப்படிப்பட்ட தாயின் மகத்துவத்தைப் பற்றிச் சொல்ல தாய்மை, தாய்ப்பாசம், தாயின் நினைவுகள், அம்மாவின் அரவணைப்பு, தாயின் தியாகம் இப்படி எவ்வளவோ இருக்கிறது. அதை விவரித்து முழுக்க முழுக்க தாயின் நினைவுகளைச் சுமந்து வரும் வரிகளைக் கொண்டு "உயிர்த்திசை" என்ற தலைப்பின் கீழ்ப் போட்டிக்களம் அமைத்து எழுதக்கேட்டது படைப்புக்குழுமம். அதன் முத்தாய்ப்பான கவிதைகளின் தொகுப்பே இந்தக் கணத்தில் உங்களின் கைகளில் விரவிக் கொண்டிருக்கும் உயிர்த்திசை.
இதனை 'அம்மையார் ஹைநூன்பீவி' நினைவு பரிசுப்போட்டியென அறிவித்து அதற்கு மொத்தப் பரிசில் தொகையையும் வழங்கிய எம் படைப்புக் குழுமத்தின் மூத்த உறுப்பினரும், நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான திரு. சலீம் கான் (சகா) அவர்களுக்கும், செம்மையாய் நடுவர் பணியேற்று தன் அழகுத் தமிழில் வாழ்த்துரை தந்த 'பாட்டரசர்' பழநிபாரதி அவர்களுக்கும் மேலும் போட்டியில் பங்கெடுத்த படைப்பாளிகள் அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நெஞ்சார்ந்த நன்றியினை இச்சமயத்தில் உரித்தாக்கிக் கொள்கிறது.
மூன்று பக்கம் நீராலும் ஒரு பக்கம் நிலத்தாலும் அமையப்பெற்ற தீபகற்ப இந்திய நாட்டை, மூன்று பக்கம் வாழ்வியலாலும் ஒரு பக்கம் அழகியலாலும் சூழ்ந்து நிற்கும் தீபகற்ப இலக்கிய நாட்டைப் போல வரிகளால் வடிவமைத்துக்கொண்டார் படைப்பாளி குறிஞ்சி நாடன் அவர்கள். பின்பு அதன் (மா)நிலங்களைக் கவிதைகளாய் வரைந்தும் அதற்குள் மானுடச் சமூகத்தை வரையறுத்தும் பல ஓவியங்களாகத் தீட்டினார். கடைசியாக அந்த ஓவியங்களையெல்லாம் ஒன்றுதிரட்டி ஒட்டுமொத்த ஒரே கவிதை தேசமாக ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதே "சிண்ட்ரெல்லாவின் தூரிகை".
கவிதைக்கு ஓவியம் வரையலாம்.. ஆனால் கவிதையையே ஓவியமாகத் தீட்டி இருக்கும் இந்த தூரிகையைப் படைப்புக் குழுமம் பெருமையுடன் வெளியிடுகிறது.
படைப்பாளி "குறிஞ்சி நாடன்" அவர்கள் தன் பார்வைத் தூரிகை மூலம் இப்பிரபஞ்சத்தைத் தொடுகிறார். அதில் ஏற்படும் உணர்வலைகளை எல்லாம் ஒன்று திரட்டி ஓவியமாக்கி "எங்கே எடுக்கப்பட்டதோ அங்கேயே கொடுக்கப்படும்" என்பதைப் போல மீண்டும் இப்பிரபஞ்ச மானுடத்திற்கே திருப்பித் தருகிறார். ஆனால் உணர்ச்சிகளாக இருந்ததை எல்லாம் உருமாற்றி உணர்வுகளாகத் தருகிறார். சென்னையை வாழிடமாகவும் துபாயை வசிப்பிடமாகவும் கொண்ட முதுகலைப் பட்டதாரியான இவருக்கு இது முதல் தொகுப்பு.
இவர் சமூக வலைத்தளங்களிலும் வார இதழ்களிலும் தன் முத்திரைக் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்புக் குழுமத்தால் கவிச்சுடர் விருதும் பெற்றவர்.
நீண்டு கிடக்கும் இந்தத் தமிழ் இலக்கிய நிலப்பரப்பில் கவிதை பயிர் செய்வதென்பது பிரியங்களின் பிரயத்தனம். வடிவங்களாகச் சூழ்ந்து நிற்கும் இந்த வாழ்வை இலகுவான அர்த்தங்களையே ஆயுதமாகக் கொண்டு அறுவடை செய்யப்பட்டு இருப்பதே இந்த "அசோகவனம் செல்லும் கடைசி ரயில்". எல்லாக் காலகட்டத்திலும் பெண்மொழியை முன்மொழியும்போது அது எல்லோராலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது விமர்சனமாகவோ அல்லது விமரிசையாகவோ. படைப்பாளி என்று வரும்போது நாம் எந்தப் பேதமையும் பார்க்காமல் அவர்தம் படைப்பை மட்டுமே முன்னிறுத்திப் பார்க்கும் வகையில் படைப்புக் குழுமம் பெருமையுடன் வெளியிடுகிறது இத்தொகுப்பை.
படைப்பாளி "அகதா" அவர்கள் தன் ஆசிரிய(ர்)க் கண்களோடு ஓர் உலகத்தையும், ஆச்சரிய கண்களோடு மற்றோர் உலகத்தையும் பார்க்கிறார். அதனால்தான் ஓரிரவில் வரும் விண்மீன்களை ஓராயிரம் இரவானாலும் கண்களால் கணக்கிட இயலாது எனத் தெரிந்து வரிகளையே வானமாக்கி வாழ்வியலையே விண்மீன்களாக்கி கவிதையால் கணக்கிட்டு கடைசி ரயிலையும் முன்னால் கொண்டுவந்து முதல் நடைமேடையில் முன்னிறுத்தி இருக்கிறார். சாமானியர்களுக்கும் சட்டெனப் புரியும் எளிய மொழியில் இயல்பாக எடுத்துச் சொல்லும் மெல்லிய உணர்வலைகளே இவரது கவிதைகள். பெரம்பலூரை வசிப்பிடமாகக் கொண்ட தமிழ்த்துறை முனைவரான இவருக்கு இது முதல் தொகுப்பு. இவர் சமூக வலைத்தளங்களிலும் வார இதழ்களிலும் தன் முத்திரைக் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்புக் குழுமத்தால் கவிச்சுடர் விருதும் பெற்றவர்.
மானுட அறிவின் நீட்சி காலத்தின் கைகளில் கணினியை ஒப்படைத்தது போல இலக்கியத்தின் புரட்சி கவிஞர்களின் கருக்களில் புதுக்கவிதைகளைப் பிரசவித்தது. அதிலும் படைப்பாளி கோ. ஸ்ரீதரன் அவர்கள் வாழ்வியல் வரிகளைத் தனக்குள்ளிருந்தே தரவிறக்கம் செய்துகொள்ளும் புதுவகை கவிதைக்கணினியை உருவாக்கி அதை வாசிப்பவரின் கைகளில் ஆயுள் ரேகையாக அணைக்கட்டினார். பின்பு அதில் பொங்கிவரும் மென்பொருள் வெள்ளத்தைத் தன் தெரு வழியாகப் பயணிக்க பாதை அமைத்தார். வேடிக்கைப் பார்க்க வெஸ்ட் மினிஸ்டர் பாலம் கட்டினார். கடைசியாக அதற்கு "என் தெருவில் வெஸ்ட் மினிஸ்டர் பாலம்" என்று பெயர் வைத்தார். இப்போது பொதுமக்கள் பயணத்திற்காகப் படைப்புக் குழுமம் பெருமையோடு திறந்து வைக்கிறது இப்பாலத்தை.
ஒப்பீடு செய்ய இயலாதபடி கவிதையின் படிமங்களைக் காலக்கண்ணாடியின் வழியே காட்டுகிறார். அதில் பார்ப்பவரின் பிம்பங்களைப் பிரதிபலிக்க வைக்காமல் இந்தச் சமூகத்தைப் பிரதிபலிக்கச் செய்து மாயக்கண்ணாடி-யாக்குகிறார். எல்லோருக்கும் எளிதில் புரியும் எதார்த்தத்தை இயல்பாக எடுத்துச் சொல்வதே இவரது கவிதைகள். சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட பொறியாளரான இவருக்கு இது முதல் தொகுப்பு. இவர் சமூக வலைத்தளங்களிலும் வார இதழ்களிலும் தன் எதார்த்தக் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்புக் குழுமத்தால் கவிச்சுடர் விருதும் பெற்றவர்.
காதலென்பது உயிரூட்டப்பட்ட ஒரு பொருள். அதன் மொழியாத வார்த்தைகளையும் பகிராத அன்பையும் ஒளிப்பெயர்த்துக் கொண்டிருக்கும் நான்கு விழிகளின் ஆலாபனையே கவிதைகளாக உருமாற்றம் கொள்ளும். இதில் எந்த இரு விழிகள் வரிகள் வழியே சிறகுகளைத் தருகிறதோ மற்ற இரு விழிகள் அந்த சிறகைப்பற்றியே ஓருயிராக யுகம் தாண்டும். இப்படியாக யுகம் தாண்டும் பொழுதில் நிகழும் உணர்வுக் குவியல்களை ஒன்று திரட்டி ஒரு தொகுப்பாக வெளிவருவதே இந்த "வெட்கச் சலனம்". எந்த காலகட்டத்திலும் காதல் மொழிகளை ஏற்பதில் இந்த சமூகம் பல்வேறு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் எழுத்து வடிவில் எப்போதுமே அதை ரசித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் ஒரு பெண் அதை முன்மொழியும்போது அது இன்னும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது விமர்சனமாகவோ அல்லது விமரிசையாகவோ. படைப்பாளி என்று வரும்போது நாம் எந்த பேதமையும் பார்க்காமல் அவர்தம் படைப்பை மட்டுமே முன்னிறுத்திப் பார்க்கும் வகையில் படைப்புக் குழுமம் பெருமையுடன் வெளியிடுகிறது இத்தொகுப்பை.
படைப்பாளி "அகராதி" அவர்கள் தன் குடுவைக் கண்கள் மூலம் உருகி வழியும் இவ்வுலகைப் பார்க்கிறார். அதிலும் தான் பார்க்கும் அனைத்திலுமே காதல் இருப்பதாக நினைக்கிறார். அவ்வாறு நினைக்கும்போது வந்து விழும் வார்த்தைகளை சூடு குறையாமல் சேகரித்து கவிதைகளாய் வார்த்தெடுத்திருக்கிறார். இப்படியாக வார்த்தெடுக்கப்பட்டவைகளை ஒன்றுசேர்த்து வடிவம் கொடுத்து நூலாக செய்திருக்கிறோம். மனதின் உள்ளாழங்களை வெளியில் வெளிப்படையாக இயல்பாக சொல்லும் மெல்லிய உணர்வலைகளே இவரது கவிதைகள். திருச்சியை வசிப்பிடமாகக் கொண்ட இவர் சமூக வலைத்தளங்களிலும் வார இதழ்களிலும் தன் முத்திரைக் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர்.
இப்பிரபஞ்சம் தோன்றிய நாள் முதல் திணை வேறுபாடின்றித் தலைமுறைகள் தமக்குள்ளாகவோ அல்லது காரணிகளால் உந்தப்பட்டோ தம்மைக் காலத்திற்கேற்றவாறு நவீனப்படுத்திக்கொள்கிறது எனினும் காதல் மட்டும் அப்படியே அதன் ஈர்ப்பும் ஆழமும் குறையாது மரபுகளில் கடத்தி வரப்பட்டுக்-கொண்டே இருக்கிறது. காதல் உலகைத் தன் ஆளுமைக்குள் வைத்திருக்கும் ஆதி மந்திரம். அதனைத் தன் சிறு கவிதைகளால் இன்னும் மெருகேற்றி இருக்கிறது இக் “கடவுள் மறந்த கடவுச்சொல்’’. புதுக்கவிதை, நவீனம், பின்நவீனம், ஹைக்கூ போன்ற வகைமைகளின் வரிசையில் கஸல் கவிதைகளை உள்ளடக்கிய இப்புத்தகத்தினைத் தனது பெருமைக்குரிய வெளியீடாகத் தருகிறது படைப்புக் குழுமம். படைப்பாளி திரு. ஜின்னா அவர்களால் இக்கடவுச்சொல் வெளிப்படையாகவே சொல்லப்-பட்டிருப்பதால் வாசிப்பவர்கள் எழ எழக் காதலில் விழுவது திண்ணம்.
படைப்பாளி ஜின்னா அஸ்மி அவர்கள் கடலூரைத் தன் வாழ்விடமாகக் கொண்டவர். தற்போது பெங்களூரு மாநகரத்தில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கணினித் துறையில் பணி செய்பவர். அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் இரண்டாவது தொகுப்பாக இக்கடவுச்சொல்லைக் காணத் தருகிறார். இருபதாண்டு கால இடை-வெளியில் சற்றும் குன்றாமல் இன்னும் இளமையோடே வெள்ளைக் காகிதத்தில் வண்ணம் தெளித்துக்கொண்டே வந்திருக்கிறது இவரின் எழுத்துக்கள்.
ஆதிக்காலம் தொட்டே சுருங்கச் சொல்லிப் பெரிய பொருள் தரும்படி இலக்கியங்கள் படைப்பது தமிழின் சிறப்பாக இருந்துவருகிறது. இரு வரிகளில் எடுத்துச் சொன்ன திருக்குறளும் ஒரே வரியில் உரக்கச் சொன்ன ஆத்திச்சூடியும் வாழ்வியல் நெறிகளை இரத்தினச் சுருக்கமாகச் சொல்லி வளர்த்தெடுக்கப்பட்ட இலக்கியங்களுக்குச் சான்று. ஜப்பானிய ஹைக்கூ, லிமரைக்கூ போன்ற குறும்பாக்கள் வகைமைகள் பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு வந்திருந்தாலும் அவற்றை நம் தமிழ் மொழியின் தொடர்ச்சியாகவே படைப்பாளிகள் கருதியதால் மிக எளிதாக அவர்களை இன்று ஆக்கிரமித்துக்கொண்டன. இப்படிப்பட்ட ஆதிச்சரித்திரத்தின் நீட்சியாக வளர்ந்துவரும் குறும்பாக்களை உருவாக்குவதிலும் வெளிக்கொணர்வதிலும் படைப்புக் குழுமம் தன்முனைப்போடு இயங்கிவருகிறது.
அதன் உந்துதலே இக் “கை நழுவும் கண்ணாடிக் குடுவை’’ தொகுப்பு. இயற்கையையும் இன்றைய சூழலையும் வாழ்வியலும் அழகியலும் இணைத்துச் சொல்வது போலத் தன் குறும்பாக்களால் சிலாகிக்க வைத்திருக்கிறார் படைப்பாளி கவி விஜய். சேத்துப்பட்டை வசிப்பிடமாகக் கொண்டும், 'முதுநிலை வணிக நிர்வாகம்' பட்டதாரியுமான இவர் தனியார் நிறுவனமொன்றில் கிளை மேலாளராகப் பணிபுரிகிறார். இவர் காற்றில் வீசும் கவியைக் குறு விதைகளாகத் தூவிச் சென்றதை இக் கண்ணாடிக் குடுவை வழியே வாசிப்பவரும் காணமுடியும்.
Showing 241 - 259 of 259 ( for page 13 )