இந்த மாதத்தின் நமது படைப்புக் குழும கவிச்சுடர் விருதினை கவிஞர் கரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பெறுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்
திருப்பூர்
மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகிலுள்ள சிறு கிராமம் ஒன்றை சேர்ந்த கவிஞர் , உயர்நிலைப்
பள்ளி வரையில் தன் படிப்பை நிறைவு செய்தவர். தற்போது திருப்பூர்
பனியன் நிறுவனம் ஒன்றில் ஆடை
வடிவமைப்பாளராக பணி செய்து வருகிறார்.
இலக்கியங்களின் மீது தீராதப் பற்று கொண்ட கவிஞர் சுமார் 35
ஆண்டுகளுக்கு முன்பாகவே நண்பர்களுடன் சேர்ந்து "வானவில் கலை சபா" என்று
ஒரு இலக்கிய அமைப்பை உருவாக்கி அதன் வழியாக இரண்டு மேடை நாடகங்களை இயக்கிய அனுபவமும் பெற்றவர்.
ஹைக்கூ கவிதைகளின் மீது அளவற்ற ஆர்வம் கொண்ட கவிஞர் இரண்டு முறை
காணொளி வாயிலாக ஹைக்கூ கவியரங்கம் தலைமை ஏற்று நடத்தியும். பல்வேறு முகநூல்
குழுமங்களின் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட ஹைக்கூ போட்டிகளை நடுவராக இருந்து
நடத்தியும் இருக்கிறார்.
சமீபத்தில்
பூவரச பீப்பீயும் இரயில் சிறுவர்களும் என்ற ஹைக்கூ நூல் வெளியிட்டிருக்கும் கவிஞரின் ஹைக்கு கவிதைகள் பல்வேறு சிற்றிதழ்களிலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அவரது இலக்கியப் பணிக்காக பல்வேறு விருதுகளையும் பரிசையும் பெற்றுள்ள கவிஞர் நமது படைப்புக்
குழுமத்தின் மாதாந்திர பரிசம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம்….
ஹைக்கூ கவிதைகளின் முக்கிய அம்சமாகக் கருதப் படும் இயற்கையின் சூழலை அப்படியே கொடுத்து அதன் வழியாகப் பல்வேறு பரிமாணச் சிந்தனைகளை உருவாக்கும் கலை கவிஞருக்கு நன்றாகவே வந்திருக்கிறது… தேன் சீட்டு எனும் பறவை பூவைக் காட்டிலும் எடை மெண்மையானது.. அதன் அமர்வு பூவிற்கோ அதனைத் தாங்கும் காம்பு கொண்ட கிளைக்கோ வலிக்காது என்பதுதான் உண்மை… அதன் எடையால் சாய்ந்த கிளை அச்சிட்டு பறந்ததும் மீண்டும் தன் நிலைக்கே திரும்பி விடுகிறதாம்…. கவலைகளையும் சுமையாக நினைக்க வில்லையென்றால் அப்படித்தான் இல்லையா….
தேன்
சிட்டு பறந்ததும்
தன்
நிலைக்கு திரும்பும்
சாய்ந்த
கிளை
பாஷோவின் பழையகுளம் என்ற கவிதையை நினைவுப் படுத்தும் ஒரு ஹைக்கூ இது…. இல்லை அதனை வாசித்த தாக்கம் கவிஞருக்குள் இவ்வரிகளை பிரசவித்திருக்கலாம்… தவளையொன்று குளத்தில் குதித்ததும் மீன் குஞ்சுகள் கலைந்து போகின்றன…. சில ஆரவாரங்கள் பெரும் இடரால் கலைவது போல் என்றும் கொள்ளலாம்… அல்லது ஒரு இடர் வரும் போது முதலில் ஜாக்கிரதை உணர்வு அவசியம் என்பதை உணர்த்துவதாகவும் இருக்கலாம்….
தவளை
குதித்ததும்/
கூட்டத்தைக்கலைக்கும்/
மீன்
குஞ்சுகள்/
கரும் மேகங்களின் இடையில் முகம் காட்டும் குளுமையான சூரியன் பார்ப்பதற்கே அழகாகத் தோன்றும்… கவிஞரின் மன நிலையும் அப்படித்தான்… பிரச்சனைகள் கலைந்தால் வாழ்வின் வெளிச்சம் சூரியனைப் போல் பிரகாசிக்கத்தானே செய்யும்….
கலையும்
மேகங்கள்/
ஒளிந்து
விளையாடும்/
சூரியன்/
உழைப்பை அலட்சியம் செய்வதில் மனிதனை விட மகா கெட்டவன் யாரும் இருக்க முடியாது. இங்கு எறும்புகள் சிந்திக் கிடக்கும் பருக்கைகளை சேகரித்து; தன் உணவு கிடங்கிற்கு எடுத்துச் செல்கின்றன… இதன் வழியாக விவசாயின் உழைப்பிற்கு கிரீடம் வந்து சேர்ந்து கொள்கிறது… இந்த ஹைக்கூ வழியாக…
விவசாயிகளின்
உழைப்பு/
பெரிதும்
மதிக்கப்படுகின்றன/
பருக்கைகளுடன் எறும்புகள் /
கவிஞரின் மற்றும் சில ஹைக்கூ கவிதைகள்:
வெள்ளையடித்த
சுவர்/
பளிச்செனத்
தெரியும்/
பறவையின்
எச்சம்/
****
வேலை
ஏதுமில்லை/
விவசாயம்
செய்கிறார்/
சுடுகாட்டில்
வெட்டியான்/
**”
தாழ்வாரத்து
சிட்டுக்குருவிகள்/
தினந்தோறும்
பசியை தீர்க்கின்றன/
நியாயம்
விலை கடை அரிசி/
***
சமைக்கும் அம்மா/
பசியோடு
காத்திருக்கும்/
நாய்க்குட்டி/
***
தொடரும்
சாரல் மழை/
பூமியை
நோக்கி திரும்பும்/
மரக்கிளைகள்/
***
சாலை
விரிவாக்கம்/
இன்னும்
கொஞ்சம் நிலுவையில்/
வெட்டப்படும்
மரங்கள்/
***
இரவு
நேரப்பயணம்/
நேர்
எதிர்த் திசையில் வரும்/
முழு
நிலா/
***
இன்றைய
பொழுது/
சில்லா
சில்லறைகளுடன் முடிவடைகிறது/
யாசகனின்
நகர்வலம்/
***
குறைந்து
வரும் ஆயுள்/
மனம்
தளராமல் நிமிர்ந்து நிற்க்கும்/
கவிஞனின்
எழுதுகோல்/
***
அசையாத
கடவுள்/
எல்லா
திசைகளில் இருந்தும்/
பேராசைகளுடன்
வேண்டுதல்கள்/
****
உயரமான
மலை/
மெதுவாக
நகர்கிறது/
நிழல்/
இந்த மாதத்திற்கான நமது படைப்புக்
குழுமத்தின் கவிச்சுடர் விருதை பெறுகிறவர் கவிஞர் சக்திஅருளானந்தம் அவர்கள் என்பதை
மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
அருள்மொழி என்ற இயற் பெயர் கொண்ட
கவிஞர் சேலம் மாவட்டம்
செவ்வாய்ப்பேட்டையில் பிறந்தவர்.
குறிஞ்சியிலிருந்து மருதத்திற்கு
இடம்பெயர்ந்த குழந்தைப்பருவம் அவருடையது.
தஞ்சையில் கொஞ்ச காலமிருந்துவிட்டு மீண்டும் சேலத்திற்கு திரும்பி இப்போது
நிரந்தரமாக சேலத்திலேயே அப்பா,அம்மா,அக்கா,தங்கை,தம்பிகள் என பெரும் குடும்பத்துடன்
வசித்து வருகிறார். அவரது அப்பா தீவிரமான வாசிப்பாளி என்பதால் வீட்டில் ஒரு நூலகமே
இருந்தது என சொல்லலாம்... அவரது அம்மா படிக்காதவர் என்றாலும் புத்தகங்களின்
காதலியாகவே வாழ்ந்தவர் என்றுதான் சொல்ல வேண்டும். கவிஞர் சிறுமியாக இருந்தபோது தன் அம்மா சொல்லும் புத்தகங்களை
வாசித்துக் காட்டும் பழக்கத்தின்
காரணமாகவே தானும்
வாசிப்பிற்குள் வந்து விட்டதாக சொல்கிறார்.
கவிஞர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது
அவரது அம்மா இறந்துவிடவே அத்துடன் அவரது பள்ளிப்படிப்பும் முடிந்துபோனது. தாயின்
பிரிவு தன்னை மிகப்பெரும் தனிமையில் தள்ளிவிட்டதாக சொல்லும் கவிஞர் தனது அம்மாவின்
வெற்றிடத்தை வாசிப்புதான் தீர்த்ததாகவும் சொல்கிறார்.
தொடர் வாசிப்பு அவரை எழுதவும் தூண்டியது என்பதில் வியப்பில்லை.
இதுவரை அவரது படைப்புகளாக ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அதே சமயம் ஓவியங்கள் மீதும் கவிஞர் தீராப் பிரியம் கொண்டிருந்ததால் இதுவரை
கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரைந்திருக்கிறார். அவை
சிற்றிதழ்களில் வெளிவந்துள்ளன.
படைப்பு குழுமத்தின் கல்வெட்டு
பேசுகிறது மின்னிதழில் மகளிர் சிறப்பிதழாக மலர்ந்த ஈராண்டுகளிலும் முழுக்க முழுக்க கவிஞரின் ஓவியங்களையே இடம்பெற
செய்தோம் என்பதையும் தெரிவிக்கிறோம்.
எழுத்திற்காக திருப்பூர் அரிமா சக்தி
விருது,தஞ்சை பிரகாஷ் வி்ருது,சேலம் மாவட்ட வாசகர் பேரவை
விருது,கே.ஆர்.ஜி.என்.அறக்கட்டளை விருது,பாவலர் எழுஞாயிறு அறக்கட்டளை விருது என
பல்வேறு விருதுகள் பெற்றுள்ள கவிஞர் நமது படைப்பு குழுமத்தின் மாதாந்திர
படைப்பாளியாகவும் 2018ல் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்
தக்கது.
"குடும்ப அமைப்பின் இறுக்கம்
என்னை திருமணத்தை நோக்கி நகரவிடவில்லை. தனித்திருக்கும் வாழ்க்கையை விரும்பி தேர்ந்தெடுத்ததன் காரணமாக பொருளாதார தற்சார்புக்காக
வீட்டுமின்சாதனங்கள் பழுது நீக்கும் பணிபுரிகிறேன்" என்று சொல்லும் கவிஞர் மிக
சிறந்த படைப்பாளி என்பதில் எந்த மாற்றமுமில்லை.
கவிஞருக்கு இந்த விருதினை வழங்குவதில்
படைப்பு குழுமம் பெருமை கொள்கிறது…
கவிஞருக்கு இனிய வாழ்த்துகள்.
இனி கவிஞரின் சில கவிதைகள் பார்ப்போம்:
இயற்கை வரையும் ஓவியம் அழகானது.
கவிஞரும் ஓர் ஓவியர் என்பதால் அவர் காணும் காட்சியும்
ஓவியமாக ஓர் உக்கிரமான கோடையின் நண்பகலில் ஒற்றைக் குருவியாக வந்து உட்கார்ந்து
விடுகிறதோ! அதன் பரவசத்தை பாழாக்கி விடுவோமா என்ற அச்சமும் கூடவே….
பரவசக்குமிழ்கள்
@@@@@@@@@
உக்கிரமான கோடையின் நண்பகல்
ஒற்றைக்குருவி உட்கார்ந்திருந்த்து
முள்வேலியில்
நீர் வண்ணத்தில் தீட்டப்பட்ட
ஒவியம் போல
அதீத பளபளப்பற்ற வெண்மையில்
தலையிலும் கழுத்திலும்
விடாமலசைத்துக் கொண்டிருந்த வாலிலும்
உடலுடன் ஒட்டியிருந்ந சிறகிலும்
கருமைத்திட்டு திட்டாக படிந்திருந்த்து
சிட்டுக்குருவியைப் போலுமில்லாது
மைனாவைப்போலுமில்லாது
பெயர் தெரியாத அந்தக்குருவி
அது அதுவாக இருந்தது
அதைப்பார்த்த அந்த நொடி
உள்ளுக்குள் இருக்க கட்டிய கம்பியை
சுண்டுகையில. எழும் ஒற்றைச்சொட்டாய்
இசையதிர்ந்து
பரவசக்குமிழ்களை வெடிக்க வைத்தது
பரவசத்தை பரிசளித்த அதற்கு
என்னால் பயத்தைத்தவிர
வேறு எதையும் தரமுடியாது
என்று நினைக்கையில்
எழுந்த துக்கம்
வயலினின் உருக்கமான
நீளிசையாய்
நெஞ்சையடைத்தது.
தன் அப்பாவை பற்றி கவிஞர் எழுதிய கவிதைதான் இது. முதலில் அப்பாதான் எல்லோருக்குமான பிம்பமாக காட்சியளிப்பார். வளர வளர முரண்கள் மெல்ல எட்டிப் பார்க்கும்.. அப்போது அவர் ஏதும் அறியாதவராக
மாறிவிடுவார். ஆனாலும் அவர் நிழல் நம்மிடம் ஒட்டியே இருக்கும்…
அவரது மறைவுக்கு பின்பும்… அதை எப்போதும் மாற்றவே முடியாது…
அப்பாவும் நானும்
************************
அப்பா...
ஆறரை அடி உயரமானவர்
அவருடன் பேசுபவர்கள்
அண்ணாந்து தான் பேச வேண்டும்.
பலங்களும் பலவீனங்களும்
நிறைந்தவர் தான்
எல்லா அப்பாக்களைப் போலவே
அவர் இருந்தபோது
அவர் பலவீனங்களே
என் கண்ணில் பட்டன
எல்லாப் பிள்ளைகள் போலவே
அய்ந்தாறு வயது வரை
அப்பாவின் ஆளுமைக்கு ரசிகை நான்
அவருடனான முரண்கள் எல்லாம்
அப்புறம் தான்
நீண்டகால்களால்
நீள நீளமாய் எட்டு வைத்து
நடக்கும்போது
அழுத்தமாய்...வெகு அழுத்தமாய்
பதியும் பாதங்கள் மண்ணில்
அவரை ஒரு செல்ல நாய்க்குட்டி போல
பின் தொடரும் நான்
பாண்டியாடுவது போல
தாண்டித் தாண்டித் தொடர்வேன்
என் சின்னக் கால்களால்
அவர் பாதச்சுவடுகளை
அவர் ரசிகர்..அவர் கலைஞர்
புத்தக வாசிப்பில் என் புத்தி ஊன்றியது
அவர் ரத்தம் என்பதால் தான்
அவர் கை பட்டால் பட்டமரம் தளிர்க்கும்
அவர் நினைவில் கண்ணீர் துளிர்க்கும்
நிறை வாழ்வு வாழ்ந்தவர்
எனக்குத் தான் குறையாக இருக்கிறது
அவர் காலடிகளை பின் தொடர முடியாது
போனது.
அமுதம் என்று அமிலத்தை அருந்துகிறவன் கதைதான் இந்த கவிதை. மதுவின் போதைக்கு அடிமையானவன்
ஒரு மாய மோகினியின்
வலையில் சிக்கிக் கொள்கிறான். அவள் அவனை சீரழிக்காமல்
விடுவதேயில்லை.. முதலில் அழகாக ஆபரணங்களுடந்தான் அவள் அவனுடன் குடும்பம் நடத்துவாள்.. பின்பு நிர்வாணமாக்கி உதிரத்தை உறிஞ்சும் பேயாக மாறி விடுவாள்.
‘ மது கோப்பையில் கழன்று விழுகிறது நீ கட்டிய தாலி' என்ற ஒரு வரி போதும்..
இந்த கவிதையின் உக்கிரத்திற்கு….
விஷம் நுரைக்கும் கோப்பைகள்
****************************
மது மோகினி!
அவள் வசீகர அழைப்பில் மதிமயங்கி
அவள் பின்னே ஓடுகிறாய்
அவள் பிடியில் சிக்கிய பிறகோ
விட்டு(ம்)பிடித்து(ம்)விளையாடுகிறாள்
விளையாட்டின் தொடக்கத்தில்
அவளை வசப்படுத்த துரத்துகிறாய்
உன் பிடியில் சிக்கியதாக மகிழ்கிறாய். அவள்
வசம் உன்னை இழந்ததை உணராமல்
அவள் பிடியில் நீ சிக்கியதை அறியாமல்
போதையில் அனைத்தும்
தலைகீழாகத்தானே தெரியும்!
மது
உனக்குள் செல்லும்போது
வெளியேறுகிறது
உன் மானம் மரியாதை மதிப்பு
உன் மனைவியின் நிம்மதி மகிழ்ச்சி
உன் பிள்ளைகளின் வளமான எதிர்காலம்
அவர்களின் பசிக்கான பிடிசோறு
அப்போதும் அது நிறைவடைவதில்லை
நீ குடித்த..குடிக்கின்ற ஒவ்வொரு
துளிக்கும்
ஈடாக எடுத்துக் கொள்கிறது
உன் குருதித் துளிகளை
மதுக் கோப்பையில் கழன்று விழுகிறது
நீ கட்டிய தாலி
உனக்கான மயானப் பாதையில்
பயணிக்க வைத்து ஓய்கிறது
மது..நுரைத்துப் பொங்கும்
அமுதம்..அல்ல..அல்ல..
அமிலம்.
கவிஞர் ஒரு முழம் மல்லிக்கைப்
பூவை மட்டும்தான் இங்கு வாங்கினார்… அதன் வாசனை மல்லிகையின்
வாசனையை மட்டும் அல்லாமல் நுணாப்பூவின்
வாசத்தையும் கூடவே அழைத்து வருகிறது.
நுணாப்பூ அவர் வீட்டில் வாழ்ந்த நுணாமரத்தின்
ஞாபகத்தைக் கிளற அவை எங்கெங்கோ பயணப்பட்டு
கடைசியில் அவர் அம்மாவின் நினைவை மிச்சமாக்கி
வைக்கிறது. அற்புதமான கவிதை… நம் வாழ்க்கையிலும் இப்படியான அனுபவங்கள் தொடரத்தான்
செய்கின்றன…..
வாசனை
**********
ஒரு மல்லிகைப்பூவின் நறுமணம்/
அதன் மணமாய் மட்டும் இருப்பதில்லை/
தவிர்க்கவியலாமல்
நுணாப்பூவின் மணத்தையும்
நினைவூட்டுகிறது
நட்சத்திரங்களை பூக்களென உதிர்க்கும்
நுணா மரமோ/
ஊரையும் அங்கிருந்த வீட்டையும்/
அதன் கொல்லைப்புறத்தில்/
உழவோட்டிய வயலுக்கு உரமாக/
தழைகளும் சிறு கிளைகளும்
கழிக்கப்பட்டு/
மொட்டையாக நிற்கும்
வேலிக்கிளுவையையும் கிளேரியாவையும்
சவண்டல் மரங்களையும்/
மக்கிப்போன எருக்குழிகளில் எழும்
மணத்தையும்/
எருவடிக்கும் மொட்டை மாட்டுவண்டிகளில்
செய்த சவாரியையும்/
உரத்திற்காக போடப்பட்ட
மாட்டுக்கிடை ஆட்டுக்கிடையையும்/
அபூர்வமாய்/
ஒருமுறை போட்ட வாத்துக்கிடை
நீந்தித் திளைத்த குளத்தில்
துளாவியபோது/
கையிலகப்பட்ட நான்கு
வாத்துமுட்டைகளையும்/
அவற்றை
அம்மா அவயம் வைத்த கோழிமுட்டைகளுடன்
கலந்துவைக்க/
பொரித்த வாத்துக் குஞ்சுகளையும்/
அவை நீந்தி வளர்ந்த
பொன்னு கொண்டானாற்றையும்/
அதன் கரையில்
எரியூட்டப்பட்ட அம்மாவையும்/
ஞாபகப்படுத்திவிடுகிறது.
இருள் இருளாகவே விழித்திருக்கிறது. அது தன் கோரமுகத்தை
மறைத்து வைக்கவே எப்போதும் விரும்புகிறது. அதன் கண்கள் அத்துணை சுத்தமானதும்
அல்ல. கொடூரங்களுக்கு துணைப் போகும் இருளை இந்த சின்ன கவிதை உரித்துக் காட்டுகிறது…..
இருள்
எண்ணிலடங்கா கண்களால்
கண்காணித்தபடி இருக்கிறது/
காமிராக்கண்களுக்கு சிக்காத
கோணங்களிலெல்லாம் பதிவு
செய்துகொள்கிறது/
அதற்கு முன்பின் பக்கவாட்டு பேதமில்லை/
ஆந்தையைப்போல திரும்புவதில்லை/
காவலுக்கு கிளம்பும் எல்லைச்சாமி/
கற்பழித்த சிறுமியை கடாசிவிட்டுச்
செல்லும்
யாரோ ஓர் ஆசாமி/
குரைக்கும் நாய்களுக்கு
வாய்க்கட்டுப்போடும் குடுகுடுப்பைக்காரன்/
இருளே சுவராக பாவித்து புணர்ச்சியில்
ஈடுபடும் வீடற்றவன்.../
காதல்..களவு.. காமம்.. கருணைக்கும்/
கவசமாக
கவிந்திருக்கும் இரவின் இருள்.
இனி கவிஞரின் மற்ற கவிதைகள்:
எம் பாவாய்
**********************
மரப் பாவைக்கு என்ன குறை
மங்காமலிருக்க
அவ்வப்போது வண்ணம் புதுப்பிக்கப்பட்டு
அழகிய ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டு
பளபளக்கும்
அதற்கு என்ன குறை இருக்கக் கூடும்
கட்டப்பட்ட நூல்களினூடே
கையாளும் விரல்களின்
அசைவுகளுக்கேற்ப
நேர்த்தியாக
ஆடி மகிழ்விக்கிறது
மரப்பாவை
உடல்மொழி
***************
அம்மாவின் அழுத்தமான தொடை கிள்ளலில்/
அவளுக்குள் விழுந்த ஆழ்மனப்பதிவு/
உறங்குகையிலும்/
உடல்குறித்த உணர்வு விழித்திருக்கும்
எதிர்ப்படும் எதிர் பால்/
இயல்பாக பார்த்தாலும்/
இச்சையுடன் பார்த்தாலும்/
அனிச்சையாய் அவள் விரல்கள்/
மேலாடையை சரிசெய்யும்
உடலே அவளாக/
அவளே உடலாக இருந்தவள்/
அந்த நினைப்பொழிந்தாள்
கடல்நண்டின்/
கூரியக் கொடுக்குகள்/
குத்திக் கிழிப்பதாய் நோகும்/
சதைக்கோளங்களில்/
குடைந்து பரவும் வலி/
உள்ளுக்குள் பூத்த ரணம்/
உடைந்த கணம்.
கல் உள்..கடவுள்
~•~•~•~•~•~•~•~•
ஒரு கல் கிடந்தது
அதிலொருவன் இடித்துக்கொண்டு
கல் இடித்துவிட்டதென பழி
சொல்லியபடி சென்றான்
ஒருவன் படியாக பாவித்து
ஏறிச்சென்றான்
ஒருவன் தடையென்று
தாண்டினான்
தொலைத்தது எதையோ
தேடும் பாவனையில்
துழாவியபடி வந்தவனின்
விழிகளில் விழுந்தது கல்
கல்லின் கருத்தரிப்பு அவன்
கண்களுக்கு புலப்பட்டது
விரல்களால் தட்டினான்
விண்ணென்றதிர்ந்த அதன்
இதய ஒலியை அவன்
செவிகள் கேட்டன
விழிகள் கண்ட உருவை தன்
விரல்பிடித்து அழைத்துவர
கல் அவனைக் கடவுள் என்றது
காண்பவர்களோ
கல்லைக் கடவுள்
என்றனர்.
ஒற்றை செருப்பொன்று...
***************************
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்
சாலையின் நடுவே
ஒற்றை செருப்பொன்று...
அதன் அளவு குழந்தையினுடையது என்பதையும்
வடிவமைப்பு பெண் குழந்தையினுடையதென்பதையும்
அது இன்னமும் சேதமுறாமலிருப்பது
சற்று முன் தான் விழுந்திருக்க
வேண்டுமென்பதையும்...
ஒரு செருப்பு
எதையெல்லாம் சொல்கிறது!
)நீர்க்குமிழி
************
நிலையாமைக்கு நாம்
சொல்லும்
நீர்க்குமிழி
உடைவதற்குள்
நித்யவாழ்வொன்றை
வாழ்ந்து முடித்துவிட்டே மறைகிறது
எவ்வளவு நாள் வாழ்ந்தோம்
என்பதைவிட
வாழ்வை எப்படி வாழ்கிறோம்
என்பதிலேயே
அர்த்தம்
பெறுகிறது.
)நீர்ச்சித்திரம்
********************
எறும்பூர கல் குழியும்
நீர் புரள கல் பொலியும்
காற்று கடித்து துப்பிய
மலைப்பிஞ்சு
மடியேந்துகிறது நதி
தாய் தள்ளி வைக்க
தடவிக் கொடுக்கிறது நதியின் கரம்
பாசத்தின் சித்திரங்கள்
பளிச்சிடுகின்றன மேனியெங்கும்
பார்ப்பவர்கள் சொல்கிறார்கள்
நீர் வரைந்த முப்பரிமாண ஒவியமென.
உள்ளங்கையில் உருள்கிறது
கூழாங்கல்.
)நிலம் கொத்திப் பறவை
**************************
பயணிக்கும் பாதையெல்லாம் பாலையாக்கும்
பயங்கரப் பறவை அது
நெடிய தன்னிரு சிறகுகளை விரிக்கையில்
உடன் விரிகின்றன கணக்கற்ற சிறுசிறு
சிறகுகள்
ஒன்றாக விரிகையில் எழும் சப்தம்
பேரோலமாக கேட்கிறது
படரும் அதன் நிழலின் கருமையில்
பெரும் வனங்களின் பச்சையம் உதிர்கிறது
அனலடிக்கும் பெருமூச்சுக் காற்றில்
மலைகள் பொடிப் பொடியாகின்றன
மண்ணோ எரிந்து மலடாகிறது
அதன் இடுங்கிய வஞ்சம் ததும்பும் சிறு
கண்கள்..
அதில் சிக்குவதெல்லாம் இரைகளே
கோழிக்குஞ்சொன்றை கவ்விச் செல்லும்
பருந்தின் இலாவகத்துடன்
அதன் கூரிய வலுகொண்ட அலகால்
பெரும் நிலப்பரப்பை
கொத்திச் செல்லத் துடிக்கிறது
அது முடியாத போது எழும் பெருமூச்சின்
வெப்பத்தில்
நதிகள் வற்றுகின்றன
அந்தப் பெயரற்ற பெரும் பறவைக்கு
பேராசையென பெயர்
சூட்டினார்கள்.
மைதாஸ்(கள்) சூழ் உலகு.
****************************
மைதாசின் தொடுகையில்
மலைகள் மாயமாகின
காடுகள் காணாமல் போயின
நதிகள் காய்ந்து போயின
பிணங்களைக்கூட பணமாக மாற்றும் வல்லமை
மைதாசுக்கு உண்டு
அலங்கரிக்கப்பட்ட உணவுமேசையில்
அவனுக்கான கஞ்சியும் நீரும்
அளந்து
வைக்கப்பட்டிருந்தது!
வேர்த்திரள்
************
எமக்கொரு காடு இருந்தது
அது பகலிலும் இருள்
பூசிக்கொண்டிருக்கும்
மைக்கருப்பாய் மயக்கும் நிசியில்
நெடிதுயர்ந்த மரக்கிளைகளில்
மின்மினிகள் ஒளிர
ஒய்யாரமாய் ஊசலாடும் தாரகைகள்
புதரென மண்டிக்கிடக்கும்
காட்டுமல்லிகையின்
வெள்ளைமலர்கள் பளீரிடும்
அவைகளுக்கு போட்டியாக
வேட்டைக்கு காத்திருக்கும்
மிருகங்களின் கண்கள்
நெருப்புத்துண்டங்களாய் சுடர்விடும்
காடு உறங்குவதேயில்லை இரவும் பகலும்
காட்டு உயிரினங்களின் கூட்டிசையின்
மெல்லிய அதிர்வில்
துள்ளியாடுவாள் வனப்பேச்சி
வனப்பேச்சியின் முலைப்பாலருந்தி
வளர்ந்த மேனிகளும் வசமிழந்து
அவளுடனாடும்
அவள் அங்கங்களை துணிக்க துணிந்தது ஒரு
கும்பல்
உயர்கிறது கோடரி உடன்வருகிறது பொக்லைன்
முலையறுத்து குருதி குடிக்கும் கும்பல்
வன்புணர்வு செய்யப்பட்ட வஞ்சியாய்
வேர்த்திரள் வெட்டப்பட்ட வனப்பேச்சி
வந்தவரை வருத்துபவரை வாழவைப்பவளால்
இருந்தவரை காடிழந்தவரை காத்திட
ஏலவில்லை
காடுகளிலிருந்து விரட்டப்பட்டோம்
விரட்ட முடியவில்லை நினைவில்
விதைக்கப்பட்ட காட்டை
நீர்தேடி நிலம்தேடி ஊர்தேடி ஒடிய
எம்நினைவில் காடிருக்கிறது
தின்ற மூங்கில் துளிரின் சுவை
மறந்திடாதபோது
மறக்குமோ காடு.
*சின்னத்தம்பி
யானைக்கு.
)பிழைப்பு
***************
முகத்திற்கு முகபடாம்
முத்துமாலை..கழுத்திற்கு
மாலை மரியாதைக்கு குறைவில்லை
மறக்கவில்லை
சங்கிலியில் பிணைக்க
ச்சீ..கோயில்யானை
பிழைப்பு.
கவிதை
*************
முற்றுப்புள்ளி வைத்து
நிறைவு செய்த கவிதை
ஆரம்பிக்கிறது தன் பயணத்தை
வாசிப்பவர்
மனங்களில்
தாகம்
***********
கடல் குடித்தும் தீரவில்லை தாகம்
தகிக்கும் தாபம்
தாகத்தை தணிக்காது கடலென்பதை அறிந்தும்
மீண்டும் தேடுகிறது
பிறிதொரு கடல்.
கை கழுவும் காலம்
***************************
முதலில் ஒன்று பிறகு இரண்டு மூன்றென
குகைகளிலும் பெருமரங்களிலும்
பிரகாரங்களின் இருட்டு
மூலைகளிலிருந்தும்
வெளிக்கிளம்பி விசும்பெங்கும்
வியாபிக்கின்றன
ஒருசேர எழும் அவற்றின் இறக்கைகளின்
ஓசையில் இரண்டு
சன்னிதிகளின் பெருங்கதவுகள்
தாழிட்டுக்கொள்கின்றன
பகலின் வண்ணத்தைக் கருப்பாக்கியபடி
பரவும்
அவற்றைக்கண்டு
உயிரச்சம் கொண்டவர்கள் ஒளிந்து
கொள்கிறார்கள்
அவர்களின் கண்கள் அனைத்தையும்
சந்தேகத்துடன் வெறிக்கின்றன
அச்சத்தில் உறைந்திருக்கும் அவர்கள்
தாங்கள் அனுமானித்த
வாமனனின் பேருருவம் கண்டு
பீதிகொள்கிறார்கள்
இயற்கை மூன்றடியில் அல்ல
ஒரே அடியில்
நிலைகுலைய செய்துவிட
சிறுக சிறுக விதைத்ததை மொத்தமாக
அறுவடை செய்ய முடியாது
திணறவைக்கிறது அசுரவிளைச்சல்
சாலையில் நடந்துசெல்கிறார் இயேசு
எம் தந்தையே ஏன் கைவிட்டீர் எம்மையென
அரற்றியபடி
ஓடுவதுபோன்ற பாவனையில்
நின்ற இடத்திலேயே உறைந்துவிட்ட
பிரமையைத் தருகிறது
ட்ரெட்மில்லில்
பயணிக்கும் காலம்.
அரளிவனம்
******************
அனைவராலும் கைவிடப்பட்டவள்
மஞ்சள்நிறப்பூக்கள்
பொன்னென ஒளிர
அடர்பச்சை இலைகளுடன்
காற்றிலசையும்
மென்பச்சைக் காய்கள்
வாவென்றழைப்பதாய் தோன்றிய கணம்
உள்நுழைகிறாள்
அரளிவனத்துள்.
)அணங்கு
***************
ஆதிகுகையில்
அடர்த்தியாய் படிந்திருக்கும்
காலத்தின் இருள்
நுள்ளிப்பார்க்கும் ஒளிக்காற்று
மெல்ல ஊத வெளிப்படுகிறாள்
இறந்தகாலத்தின்
உறைந்த விழிகளோடிருப்பவள்
உயிர்பெறுகிறாள்
உடைகிறது கால இடைவெளி
இமையுரசி
பற்றும் சுடரில்
ஒளிர்கிறது குகை
ஆயுதத்தின் கூர்மையை பரிசோதிக்கிறாள்
கூர்மை குறையாத அதன் நுனியில்
துளிர்க்கிறது குருதிப் பொட்டு
அதன் வெம்மையும் செம்மையும்
அவள் விழிகளில்
சிவப்பாய்.
Showing 141 - 160 of 806 ( for page 8 )