இந்த மாதத்திற்கான நமது படைப்புக் குழுமத்தின் கவிச்சுடர் விருதினை பெறும் கவிஞர் ஐ.தர்மசிங் அவர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பு செய்கிறோம்.
கன்னியாகுமரி
மாவட்டத்தில் உள்ள ஒடுப்புரை எனும் கிராமத்தை சேர்ந்த கவிஞர் M.A., B.Ed., ( பொருளியல்) பட்டவியல் வரை படித்தவர். நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் (மின்விசிறிகள்விற்பனை
நிலையம்) விற்பனையாளராகப் பணி செய்து வருகிறார்.
நமது படைப்புக் குழுமம் ஆரம்பித்த ஆண்டு முதல் நமது குழுமத்தில் தொடர்ந்து தன் ஹைக்கூ கவிதைகளின் வழியாக பயணப் பட்டுக் கொண்டிருக்கும் கவிஞரின் முதல் நூல் " இலையளவு நிழல்" எனும் கவிதைத் தொகுப்பாகும். இவரது கவிதைகள் பல்வேறு சிற்றிதழ்களில் இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
படைப்புக்
குழுமத்தின் மாதாந்திர சிறந்த படைப்பாளி
சிறந்த வாசகர் விருது
கவிக்கோ அப்துல்
ரகுமான் நினைவு கவிதைப் போட்டியில்
ஆறுதல் பரிசு என்று மட்டும் இல்லாமல் வேறு சில கவிதைப் போட்டிகளிலும் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார் கவிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்லூரி நாட்களில்
கவிஞர் மு.மேத்தா அவர்களின் புதுக்கவிதை வரிகளால் ஈர்க்கப்பட்டு கவிதை எழுதத் துவங்கியதாக சொல்லும் கவிஞரின் கவிதைகள் . நவீனம் மற்றும் ஹைக்கூ கவிதைகள் என தொடர்ந்து பல புது முயற்சிகளுக்கும் நியாயம் செய்து வருகிறது…
இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம்:
ஹைக்கூ கவிதைகளின் தன்மை மாறாமல் கவிதைகள் எழுதும் கவிஞரின் இந்த கவிதை புதிய பரிணாமத்தை உண்டாக்குகிறது… இரைத்தேடும் பறவைகள் வெயில் மழை எதையும் துயரெனக் கடக்காது என்பதுதான் இயற்கை நமக்கு உணர்த்தும் வடிவமாகும். இரையை தந்த மரத்திற்கு பிரதி உபகாரமாக அதன் விதையை வேறொரு இடத்திற்கு கொண்டும் சென்று சேர்க்கிறது ஒரு பறவை… அதன் செயல் அதற்கு வேண்டும் என்றால் விளங்காமல் இருக்கலாம்… இயற்கை அறிந்திருக்கிறது… சிறு உதவி செய்தாலும் சொல்லிக் காட்டும் இந்த உலகில்தான் இந்த பறவையும் கூட வாழ்கிறது என்பது வியப்பு…
வெயிலில் பறவை
அலகில் இருக்கிறது
ஆலமர விதை.
ஒரு இலையின் உதிர்வை கடந்து போகும் காற்று சருகுக்கு சற்று நேரம் இதமாக இருக்கலாம். ஒரு வாழ்ந்து கெட்டவனின் நினைவுகள் கடந்து போன வசந்தத்தை விரித்துப் படுத்தாலும் நிகழ்காலம் நெருடலாகத்தான் இருக்கும். ஒரு பட்ட மரத்தின் அருகில் வளர் பிறை வந்து போவது காட்சிக்கு வேண்டுமென்றால் அழககாகும்… மிச்சமிருக்கும் பச்சையம் சுரக்க வேர்களுக்குக் கீழ் கொஞ்சமாவது ஈரம் இருக்க வேண்டும் இல்லையா…
பட்ட மரம்
அருகே வந்து போகிறது
வளர் பிறை.
எவ்வளவு பெரிய அரண்மனையில் வாழ்ந்தாலும் உறங்குவதற்கு ஒரு சிறு அறை மட்டும் போதும்… நவரத்தினங்கள் இழைத்த கட்டிலாக இருந்தாலும் கூட உறக்கம் அவசியம் வேண்டும். அறு சுவை உணவுகள் மேசை முழுவதும் நிறைந்திருந்தாலும் வயிறு கொள்ளும் மட்டும்தான் உண்ண முடியும். இதைவுணராமல்தான் மனிதனின் ஆசை பரந்து விரிந்து பட்டம் கட்டிப் பறக்கிறது… இங்கே கவிஞருக்குக் காட்சியானப் பறவை மிகப் பெரிய காட்டில் வசித்த போதும் அது தன் தங்கும் கூட்டைக் கட்டுவதற்கு சிறு குச்சிகள் போதுமென உணர்ந்திருக்கிறது.
பெரிய காடு
குச்சியுடன்
திரும்புகிறது
கூடிழந்த பறவை.
“நான் அவருக்கு மிக நெருக்கம், நானும் அவரும் அப்படி… எங்களின் நேசமொன்றும் நிழற்படம் கிடையாது … “ இவையெல்லாம் உண்மையான வார்த்தைகள்தானா?
நிச்சயம் கிடையாது. யதார்த்தம் என்பது இந்த கவிதை போன்றதுதான்.
அருகருகே வீடுகள்
சாவிகளில்
வெளிப்படுகிறது
சகமனிதனின் தொலைவு.
பஞ்சு மிட்டாய் விற்கும் ஒரு நடை பாதை வியாபாரி விற்காத மீதமிருந்த பஞ்சு மிட்டாயுடன் வீடு திரும்புகிறார் என்பதுதான் கவிஞர் கண்ட காட்சி… விற்காத பஞ்சு மிட்டாய் லேசானதுதான் என்றாலும் அதனால் ஒட்டிக் கொண்ட வருவாய் இழப்பு அவருக்கு கனமானதாக மாறிவிடுகிறது என்பதை நாசூக்காக உணர்த்துகிறது இந்த ஹைக்கூ…
வீடுதிரும்புகிறார்
வியாபாரி
கனமாகவே இருக்கிறது
மீதமிருக்கும் பஞ்சுமிட்டாய் .
இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம்:
கன மழை
உதறிவிட்டு பறக்கிறது
நனைந்த பறவை.
***
விற்ற வயல்
களையிழந்து
கிடக்கிறது
கல்யாண வீடு.
***
வளர்ப்பதற்கு
வீடில்லை
பூ பூத்திருக்கிறது
மகள் வரைந்த செடியில்
அவிழும் போதெல்லாம
பாசம் வெளிவருகிறது
பாட்டியின் சுருக்குப் பையில்.
மழலையின் கொலுசு
மௌனமாக இருக்கிறது
அடகுக் கடையில்.
***
கூவுகிறது சேவல்
இருண்டே கிடக்கிறது
'குடி ' புகுந்த
வீடு.
***
பசியில் மாடு
நிறைந்த வயிற்றோடு
நிற்கிறது
சோளக்காட்டு பொம்மை .
***
கூழாங்கல்லின்
அடியில்
படபடக்கிறது
சுதந்திர தின கவிதை.
***
வீடுதிரும்புகிறார்
வியாபாரி
கனமாகவே இருக்கிறது
மீதமிருக்கும்
பஞ்சுமிட்டாய் .
***
கால்களை தழுவிய அலை
அங்கேயே நிற்கிறது
குழந்தை மனம்.
***
கோஷ்டி சண்டை
யார் பறக்க விடுவது
சமாதானப் புறாவை.
***
பறந்த ஒற்றைக்கல்
ஓடுகிறவனை துரத்துகிறது
தேனீக்களின் ஒற்றுமை.
***
.புத்தகக் கடை
அமைதியாக இருக்கின்றன
புரட்சிகள்.
***
பௌர்ணமி ஒளி
நிறம் மாறிவிடுகிறது
நிலவை கடக்கும் கிளி.
அஞ்சும் மனிதன்
அமைதியாக வாழ்கிறது
பறவை
கூட்டு வாழ்க்கை.
பனைமரத்தின் நிழல்
நாயை நகர்த்துகிறது
இடம்பெயரும் சூரியன்.
____________
Showing 121 - 140 of 806 ( for page 7 )