கார்த்திகேயன் மாகா
கவிதைகளென்பது தெளிந்த நீரோடையை போன்றது.. அவை தம் ஓடு பாதைகளை உள் வாங்கி கொண்டு வண்ணங்களை மாற்றிக் கொள்கின்றன.. கவிதைகள்... காற்றோடு கலந்து நிறமிழந்தும் பேசும் மகா சுவாசம்.. வாழ்வியலையும் வாழ்ந்தவியலையும் வகைப்படுத்துகின்ற ஆவணம். இங்கு படிமக்கூறுகளை பாட்டாக்கி தெளிகின்றது கவிஞர் கார்த்திகேயேன் மாகா அவர்களின் கவிதைகள்.. புரியாதது போல் தோன்றினாலும் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணமாகத்தான் இருக்கின்றன அவரது கவிதைகளின் மொழி
நமது படைப்பு குழுமத்தில் தொடர்ந்து சிறப்பான கவிதைகளை எழுதிவரும் கவிஞருக்கு இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருதினை அளிப்பதில் பெருமை கொள்கிறது நமது படைப்பு குழுமம்..கவிஞர் கார்த்திகேயேன் மாகா.. கரூரில் தமிழாசிரியராக பணி புரிந்து வருகிறார்... 2014 ல் இவரது கவிதைகளின் தொகுப்பாக 'பெவிலினியனில் காத்திருக்கும் தலைகள்' என்ற நூலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துகள் கவிஞரே!
இனி அவரது கவிதைகளில் சில நமது பார்வைக்கு:
காலத்தையே பந்தாக்கி காட்சிகளை கண்களுக்குள் நிறுத்துகின்ற இந்தக் கவிதை மகா அழகு என்று மனம்விட்டு சொல்லலாம் :
*
ஒரு நீல வண்ணப் பந்தைத்
தவறித் தவறிப்பிடித்து விளையாண்டு கொண்டிருந்தார்கள் சிறுமிகள்
யாருக்கும் சிக்காமல் நழுவியோடிக் கொண்டிருந்தது இளம் வெயிலில்
முற்றிய வெயில் சிறுமிகளின் பாதம் படிந்த நிலத்தை எரித்துக் கொண்டிருந்தது
சிக்காத நீலப்பந்தையும் சேர்த்து
விடுபட்ட பிடியைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள் மீண்டும் பின்மாலையில் இல்லாத பந்தோடு
அந்தி ஊதி வைத்திருந்தது ஆவியான நீலப்பந்தைசற்று சிறியதாக
இடி இடித்தபோது உடைந்து
மின்னும் போது கிழிந்து இப்போது குட்டிக் குட்டித் துளிகளாய்த் திடலெங்கும் தெறித்துத் தெறித்து ஓடுகிறது பந்து
விடிந்ததும் வந்து விளையாடுகிற
சிறுமிகளுக்காக
நிலம் பிடித்து வைத்திருக்கிறது பந்தை
குளுமையின் நிறத்தில்
கார்த்திகேயன் மாகா
__________
அப்பாவி அரசியல்வாதியின் முகத்தில் ஒட்டியிருக்கிறது வாலை சிரிப்பு. அவன் எப்போதுமே கூழைக்கும்பிடுமட்டுமே போடுகிறான்.. அவன் விசுவாசத்திற்கான வால் காலரில் இருக்கிறதாம்..(குனிந்து சேவகம் செய்வதால்) பறவைகளை கூண்டில் அடைக்க ஆசைப்படுபவர்கள் நடை பயிற்சி செய்யும் முரண் இப்படியாக விரியும் இந்தக் கவிதை சமூகத்தின் மற்றுமொரு பக்கம் என்று சொல்லலாம்:
*
கூழைக்கும்பிடு போடும் முகங்களில் முளைத்திருக்கும் வாலை சிரிப்பு மறைக்கிறது
கழுத்தில் வால் காலரென முளைக்க அதை வாங்கிச் செல்கிறான்
பாவங்களை ஏவத் தெரியாத அரசியல்வாதி
இந்தப் பாதையில் தான் வளர்ப்பு நாய்கள் பயணிக்கின்றன
கூண்டில் பறவை வளர்க்க ஆசைப்படுபவர்கள் நடைப் பயிற்சி கொள்கிறார்கள்
இரண்டாவது சிட்டிங்கிற்கு ஆசைப்படுபவன் இங்கே தான் தள்ளாடாது தெளிந்து நிற்கிறான்
சொற்களைப் பிடித்து நடை பழகும் எழுத்தன் தன் மூத்த கவிகளின் வருகைக்கு நிக்கோடின் விரல்களாடு ஏந்தி நிற்கிறான்
தன் தொகுப்பை
புதிய துளிர்கள் யாவும் நீண்டு முளைத்திருக்கின்றன ஒரு வாலைப் போல
பழைய கால் தடங்கள் சிலைகளாய் முளைத்து நிமிர்ந்து நிற்கும் இவ்வழியில்
ஆரத் தழுவிப் படர்ந்திருக்கும் பச்சையங்களை மேய பின்புறம் மட்டுமே வாலுள்ள என் கழுதைகளைத் தவறியும் விடுவதில்லை நான்
கார்த்திகேயன் மாகா
______________________
காலம் நம்மை பின்னுக்கு தள்ளி அது முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாகரீகம் நம்மை நசுக்கிவிட்டு நம் மீதே ஏறி அமர்ந்து கொள்கின்றன. காட்சிப் படிமங்களின் வழியே கரை சேராத வாழ்க்கைக்கூறுகளை அலசுகிறது இந்தக்கவிதை...
*
தினை காத்தலெனும் விளையாட்டை விண்ணென்று பால் சுரந்து நிற்கும் கதிர்களில் கடித்துப் பறக்கும் மைனாக்களுடன் குருவி காகங்களுடன் கவணெறிந்து ஆடும் பாவாடைச் சிறுமிக்கு நரை கூடியது
கருதுகள் புடைத்து நிற்கும் வயல்களில் சில்லி ஸ்டால்கள் முளைத்து நிற்கிறது
ஜெராக்ஸ் மெஷின் நகலெடுக்கிறது
சோளம் விளைந்த கதையை
பக்கத்தில் பொக்லைன் தோண்டுகிறது தொலைந்த தினைப்புனத்தில் கிளி விரட்டும் போது பிறந்த காதலை
வானில் ஏறிப் பறந்த விதைகள் விழுந்து முளைத்தது பறவையின் எச்சமாய்
அதைக் களையென்று வெட்டி அகற்றுகையில் அறுந்து விழுகின்றது
பறவையின் மலக்குடல்
அந்த பானிபூரிக் காரன் நின்று கொண்டிருக்கிறான் ஆளுயரப் பச்சையத்தை
வழங்கிய பாசிப் பசுஞ்சுனையின் கீழ் அதன் மொழி புரியாமல்
லெக்கின்ஸ் சிறுமிகளின் பாதங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை அவ்வளவுதான்
கதிரறுத்துத் தூற்றிப் புடைத்துக்
காய்ப்பேறிய முதுசிறுமி தான் உங்களுக்கு மண் கலயத்தில் கம்மங்கூழ் கொடுக்கிறாள்
தன் கொதித்த வாழ்வின் எச்சத்தைக் குளிரக் குளிர சர்பத் என்று தருகிறாள்
முப்போகமும் கோடையை அனுபவிக்கும் அவளுக்கு ஒரு பத்து ரூபாய் கொடுத்து விட்டுச் செல்லுங்கள்
நினைவின் கூழாங்கற்களைத் தன் காலத்தில் மீது ஏவ ஒரு கவண் வாங்குவதற்காவது உதவட்டும்
_______________
இதுதான் கடைசி அழைப்பு என்று இருவருமே பேச தொடங்குகிறார்கள் அதுவும் எப்படி? முதலழைப்பின் சிறகு முளைத்த சொற்களோடாம்... அது முடியாமல் நீள்கிறது இக் குறுங்கவிதையில்:
*
இது தான் கடைசி அழைப்பு இப்படி நிர்பந்தத்தோடு பேசச் சொன்னதும்
முதல் அழைப்பின் சிறகு முளைத்த சொற்களை உடலெங்கும் தொங்க விடுகிறேன்
பேசப் பேச எனைத் தூக்கிப் பறக்கிறது சொற்கள்
மறுமுனையில் என் எஞ்சிய சிறகுகள் உன்னை வருட வருட
நீயும் மயிலாகிறாய் நீளும் சிறகுகளுடன்
நிர்பந்தத்தின் கழுத்தை நம் சிறகுகள் வெட்டிவிட பேசிக்கொண்டிருக்கும் சொற்கள் இரை தின்ற மலைப்பாம்பாகின்றன.
கார்த்திகேயன் மாகா
___________________
காட்சிப் படிமங்கள் அழகூட்டும் போது கவிதைகள் மிளிர்வதில் வியப்பில்லை. வெய்யில் தன் வாளிப்பில் முகம் பார்க்க... தலை துவட்டுகிறதாம் காமம், வாழ்வின் கணங்களென்பது ஆடறுத்த கத்தியில் ஒட்டிக் கிடக்கிறது, திருகு எந்திரத்தில் தப்பித்த வரகு மண்ணில் விழுந்து முளைவிடும் பசுமை ஆதியின் நிறமாகிறது,ஆடிடும் திரைச்சீலை இங்கு நாடகக்கணிகையாக... அவளின் உதட்டு சாயத்தால் நிலம் சிவக்கிறது... இரசியுங்கள் இந்தக் கவிதையை
*
வாளிப்புகளில் முகம் பார்த்துக்கொள்ளும் வெயிலில் தான் தலைதுவட்ட விரும்புகிறது காமம்
ஆட்டுக் குருதியில் கழுவப்பட்ட கத்தியின் மனதை விட்டத்தில் சொருகவைத்தது வாழ்வின் கணங்கள்
திருகுதனில் தப்பித்த வரகு
முளைவிட்ட துளிர்களில் மின்னுகிறது ஆதியின் பசுமை
திரைச்சீலை கீழ்த்தெரியும் கணுக்காலில் ஆடற்கலை ஒளிந்துகொள்ள நாடகக்கணிகை தன் உதட்டுச் சாயத்தால் நிலம் சிவக்க வைக்கிறாள்
அச்சிவப்பை உள்வாங்கி விடியல் வருகையில் தேநீரகத்தில் சுருட்டுப்புகைக்கு கண்ணைக் கசக்கிக் கொண்டு நடுத்தெருவில் அலைகிறது சூரியன்
கார்த்திகேயன் மாகா
__________________
தெருவொரக் கடைகளில் உணவு சாப்பிடுவதற்கான அவசியத்தை இந்தக் கவிதை எளிமையாக சொல்லிவிட்டு நகர்கிறது..:
*
இரண்டு வட்ட தோசை
பெப்பர் அதிகமாய்
ஒரு ஒன் சைடு ஆம்லேட்
வயிறு நிரம்பிய பின்
கூடுதலாய் ஒரு புரோட்டா ஆர்டர் செய்ய எது காரணமாய் இருக்கக் கூடும்
தகரம் வேய்ந்த அந்த கொட்டகையில்
வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டே
கல்லாவில் காசு வாங்கிப் போடும்
யூனிபார்ம் கழற்றாத
அச்சிறுமியைத் தவிர.
கார்த்திகேயன் மாகா
______________________
கவிஞரின் இன்னமும் சில அற்புதமான கவிதைகள் உங்களின் பார்வைக்கு:
*
வறண்ட காற்றின் நீள நாக்கு அத்தனை ஈரத்தினையும் சுவைத்தபின் வளைந்து வருகிறது
ஊறிய வாய்நீரின் சுவையை வாங்கத்தான் சுழற்றிச் சுழற்றி வீசுகிறது
இந்தக்குளிர் உறைகிறது போக்குவரத்துக்கென நியமிக்கப்பட்ட பாதையைத் தனதாக்கிக்கொண்டவனின் ஆடையற்ற தேகத்தில்
ஒரு வேண்டுகோளை சிலேடைப் போல தூக்கிக்கொண்டு ஓடி வருகிறான்
குழிக்குள் தவறி விழுந்த தனது சொற்களை நனையாமல் எடுக்க
அது நீரற்ற சேறு
மிதந்த சொல்லின் கலங்கிய எழுத்து
வீசாத மென்காற்றின் கைகளைப் பிடித்தும் கெஞ்சிப் பார்க்கிறான்
கேட்பதற்குச் செவிகளற்ற சொற்களைப் பேசுபவனின் உலகம்
அந்தச் சேற்றில் தான் புதைந்திருக்கிறது
உண்டாட்டுக் காலத்தில் இருக்கிற காற்றுக்குக் தெளிகிற வரைக்கும்
நாக்குப் பூச்சிக்கும் தீராத வறட்சி தான்!
கார்த்திகேயன் மாகா
__________
அம்மிக்கல்லை இரண்டாகப் பிளந்தவள் குழவிக்கல்லை தன் விரலிடுக்கில் நசுக்கி வன்முறையைக் கட்டவிழ்க்கிறாள்
சோற்றுப்பானை , தட்டு, குவளை , நாற்காலி யாவற்றையும் இல்லாத ஓசையொன்றை எழுப்பி உடைத்து அறையை நிரப்புகிறாள்
சிரிப்பின் மென்கோடுகள் படர
சிதைத்த கைகளில் ஈரம் மின்னுகிறது
முதன் முறையாக
ஒரு கோபமற்ற வன்முறையை
ஓசையற்ற உடைத்தலைப் பார்க்கும் கண்களில் பனிக்குடத்தின் சாயல்
அருகிருப்பவர்களின் மகிழ்ச்சியில்
ஒரு தலைப்பிரட்டை நெளிகிறது
நண்டு நுழைகிறது
மீன் துள்ளுகிறது
கொக்குகள் அமர்ந்து போகிறது
அல்லிகள் பூக்கிறது
மகள்களின் சகிப்புத்தன்மையைத் தாங்கிக் கொள்கிற
தொலைந்த குளங்களின் ஒரு துண்டு
களிமண்ணால் மட்டுமே சாத்தியம்
வீட்டைக் குளமாக்க
கார்த்திகேயன் மாகா
____________
நாக்கு சில சொற்களை ஊதித்தள்ளுகிற போது காற்று அதைக் கடத்திக்கொண்டு திசை தேடுகிறது
பசிக்கு ஏங்கியவனின் வறட்சி சொல்விளிம்பில் தென்பட அவை ஒரு தேன்கூட்டில் இளைப்பாறுகிறது
பருவத்தின் புடைத்த திமிர் ஒரு அலுமினியப் பாத்திரமாய் சகல பழக்கங்களின் சுவைகளை ஊரெங்கும் தூற்றிப் போகையில் அடுத்த யுகத் தொடக்கத்தின் வாய் கசப்பானது
பழங்களை ஊதி ஊதிப் பெரிதாக்கப் பார்த்தான் அணுக் கழிவில் ஆல்ஹகால் தயாரித்த விஞ்ஞானி ஒருவன்
அவர்கள் பனிப்பழத்தை கோடையிலும் சாப்பிடலாம் என ஏக உரிமம் கொண்டு மெழுகு தடவச் சொன்னான் ஆயுத வியாபாரி
இனி தனது கனிகளின் நிறத்தை தீர்மானிக்க இயலாக் கையறு நிலையில் தனக்குத் தானே தீ மூட்டி எரிந்த எச்சம் அமேசான் காட்டிற்கும் நீள்கிறது
எரியும் நெருப்பிற்கு தனித்தனிப் பழங்களின் நிறம்.
கார்த்திகேயன் மாகா
__________________
துருவேறிய கம்பியில் தரையைத் தோண்டிக் கொண்டிருந்தோம்
எதைத் தேடுகிறீர்கள் என்றான் வழிப்போக்கன்
துரு ஏறிய நூற்றாண்டை என்றான் உடனிருப்பவன்
கம்பியின் நூற்றாண்டை என்றான் இன்னொருவன்
துருவிற்கும் கம்பிக்கும் இடைப்பட்ட நூற்றாண்டை என்றேன் நான்
உனது நூற்றாண்டு மண்டையோடுகளாலும் எலும்புகளாலும் ஆனது
அப்படியே குழியை எட்டிப் பார் எனக்கடந்து சென்றான் வழிப்போக்கன் .
(அடுத்த நூற்றாண்டில் உயிரோடிருக்கும் தமிழனுக்கு)
_____________________
கழுதை அணில்கள் முயல்குட்டிகள் இவற்றோடு சில மனிதர்களையும் ஏற்றிக்கொண்டு மிகுந்த புழுக்கத்தில்
காற்றை விலகச்சொல்லி ஒலி எழுப்பிக்கொண்டே சென்ற பேருந்து
இவனது கையசைப்பிற்குச் செவி கொடுத்து நின்று ஏற்றிக்கொண்டு சென்றது.
காடு பற்றிய கவிதையில் லயித்தவனுக்கு அமர இடமற்றுப்போனதில் பெரிதாகக் கவலையொன்றுமில்லை.
ஆண்ட்ராய்டு அவ்வளவு பழக்கமில்லை என்பதால் தன் பந்துமுனை(பால்பாயிண்ட்)பேனாவில் எழுத நினைத்தவனுக்கு காகிதம் இல்லாமற்போகவே ஐனஸைப் போன்ற உருவம் கொண்டவனின் முண்டா பனியன் ஏதுவாக இருந்தது.
இவன் எழுத எழுத ஐனஸ் தூங்கிப்போக,
கடைசிவரி முடித்து அவனது முண்டாசு பனியனைக்கழற்ற முற்பட டயர் வெடித்து நின்ற பேருந்தின் சத்தத்தில் எழுந்தவன் தன் வயிற்றைத்தடவி நிம்மதி கொண்டவன் இறக்கிப்போகிறான்.
ஐனஸை ஊருக்கே பின் தொடர்ந்து.
குளியலறை கதவிடுக்கில் செருகப்பட்ட பனியனில் அந்தக்கவிதை இருந்தது கண்டு நிம்மதி அடைந்தவன் அதை எடுத்துப்படிக்க ஐனஸின் அட்டூழியங்கள் அதில் எழுதப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டி
எழுதியவனுக்கு சவுக்கடி
சாதிக்காரன் அங்காளி பங்காளிகளால் கிடைக்க
வலி தாழாதவன் விழித்தெழுந்ததும் காண்கிறான்
பால்பாயிண்ட் முனை பொங்கித் தரை வரை சிதறி இருந்ததை
கார்த்திகேயன் மாகா
_____________________
அடுக்கடுக்காய்
உன் நினைவின் பானைகள் இரவோர மூலையில்
வராத தூக்கம் துலாவச் சொல்கிறது பானையை
துலாவத் துலாவ விரல்களெங்கும் உன் சொற்களின் ஈரம்
எந்த யுகத்தின் சொற்களென்று எனக்கும்
எந்த யுகத்தின் விரல்களென்று உனக்கும் தோன்றவில்லை
துலாவும் போது ஈரமாகிற மாயம்
ஒன்றே போதும்
திசைகளின் எதிர் எல்லையின் நுனியில் இருந்தாலும் தோன்றும் போது புள்ளியாகிவிடுகிற நமக்கு.......
கார்த்திகேயன் மாகா
___________________
தீராத நீர்மையின் வடிவத்தை இட்டு நிரப்பிக் கொண்டு அவன் உடலொழுகப் பயணிக்கிறான்
கொஞ்சம் ஆசுவாசமாய் இருக்கிறது நீருள்ள மேடுகள்
தவிர அவன் மனமெங்கும் குற்றம் புழுங்கும் கணங்களில் ஆழத்துளைக்கும் இராட்சத எந்திரம் நோண்டி விட்டுப் போகிறது
இருந்தும்
பேரன்பின் துணை நாணயத்தைச் சுண்டித்தான் அன்பு தருகிறது
தலை விழுந்த போது கிட்டாத பூப் பக்கம் யாருக்கென்று தான் அடித்துக் கொள்கிறது நெஞ்சம்
கார்த்திகேயன் மாகா
________________
வசவுகளும் சாபங்களுமே கொண்ட நம் ஆதிக்குகையின் படுக்கையறையில் விழுந்த மீச்சிறு இடைவெளியை என் கெஞ்சலின் தையல் ஊசி இழுத்து இழுத்துத் தைத்துக் கொண்டிருக்கிறது
கொஞ்சம் புரண்டு படடி காதலி யுகங்களின் நீளக் கிழிசல் அது
கார்த்திகேயன் மாகா
-______________________
இறந்துபோன நண்பனை ஒருமுறை தற்கொலைக்குத் தடுத்தவன் வந்திருந்தான் எட்டோடு ஒன்பதாவது மதுப்புட்டியாக இரவையும் குடித்துவிட்டு தென்னைமரத்து மாத்திரைகளை துணிப்பையிலிருந்து அவிழ்க்கையில் தான் தான் அதைப்பிடுங்கி எறிந்து காப்பாற்றியதாகவும் பத்தாவதாக ஒரு மதுப்புட்டியை வாங்கி ஆளுக்குப்பாதியாய் அருந்தியதையும் பகிர்ந்துகொண்டிருந்தான்
நீ பதினொன்றாவது மதுப்புட்டியை வாங்கிக்கொடுத்திருந்தால் அவன் தற்கொலை செய்யாமல் இருந்திருப்பான் என்றேன்
பதினொன்றில் பாதியை தனித்து அருந்துகையில் தான் அழைப்பு வந்தது
குடித்துவிட்டு பார்க்கிறேன்
மீதிப்பாதியை துணைக்கு மாத்திரையோடு அருந்திச்செத்திருக்கிறான் நண்பன் என்றான்
இருவரும் அருந்தாத அப்புட்டியை நம் மூவரும் அருந்தலாமா என்கிறான்
இறந்தவன் குவளையோடு காத்திருக்கிறான் நாங்கள் இன்னும் நுழையாத அறைக்குள்.
கார்த்திகேயன் மாகா
___________________
ஒரு குருவியின் தலையில் அமர்ந்த பனம்பழம் என
நீ
அமர்ந்திருந்து எழுந்துபோன
சுமைச்சுவடு நீங்கவில்லை
கோடையின் நீர்த்தடம் உன்னில்
பயணிக்கும் கணம் ஓடிக்கலக்க
உடன்துடிக்குமென் வியர்வை
நெடும்பின்னல் வறட்சி முத்தப்பாய்ச்சல்களால்
கடையோடும் நீர் பாதவழி நிலமெங்கும்
கைகோர்த்த முன்னிரவு அம்பெனப் பறக்கும் பின்னிரவு நோக்கி
மெழுகின் துளியூண்டு அன்பு
உன்னில் வழுக்கி உருண்டோடும் சமுத்திரம் நோக்கி
சுரையின் காய்ந்த மேலோடு துளை விழாது கிடக்க
அது உன் நினைவின் நீரதிலே மிதந்து பயணிக்கிறது
நாம் சேர எண்ணிய ஆல்ப்ஸ்மலை உச்சிக்கு.
_____________
மாடியிலிருந்து கீழிருக்கும் அம்மாவைக் கூப்பிடுகிறது ஒரு குழந்தை
உடன் விளையாடிய குழந்தையும் கூப்பிட்டுப் பார்க்கிறது
வேலைக்குச் சென்ற அம்மாவை
தொடு திரைச் சேமிப்பில் பதிந்துள்ள மகளின் படம் பார்த்துக் கொண்டு கோப்புகளுக்குள் நுழைபவளுக்கு மாலையில் தான் சென்று சேர்கிறது அக்குரல் .
பிரிவின் வலியைப் பிள்ளையின் மொழியில் உடனிருந்து கேட்கும் தந்தைகள் தான்
எத்தனை துர்பாக்யசாலிகள்.
கார்த்திகேயன் மாகா
_______________