logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 621 - 640 of 806

Year
Award
   

மாதாந்திர பரிசு

  • லஷ்மி

0   1729   0  
  • September 2019

மாதாந்திர பரிசு

  • மு.ச.சதீஷ்குமார்

0   1060   0  
  • September 2019

மாதாந்திர பரிசு

  • வீரசோழன்.க.சோ.திருமாவளவன்

0   1313   0  
  • September 2019

கவிச்சுடர் விருது

  • ஏ. நஸ்புள்ளாஹ்

0   1713   0  
  • September 2019

மாதாந்திர பரிசு

  • சுஜய் ரகு

1   1343   0  
  • August 2019

மாதாந்திர பரிசு

  • ஜெயாபுதீன்

0   1088   0  
  • August 2019

மாதாந்திர பரிசு

  • சஜோ வில்லியம்ஸ்

0   1265   0  
  • August 2019

மாதாந்திர பரிசு

  • மு. சுகுமாரன்

0   1480   0  
  • August 2019

மாதாந்திர பரிசு

  • கார்த்திக் கல்யாணி

0   1196   0  
  • August 2019

கவிச்சுடர் விருது

  • காளிதாஸ்

0   1470   0  
  • August 2019

மாதாந்திர பரிசு

  • கருவை ந. ஸ்டாலின்

0   1397   0  
  • July 2019

மாதாந்திர பரிசு

  • பாண்டிய ராஜ்

0   1088   0  
  • July 2019

மாதாந்திர பரிசு

  • பூ. விவேக்

0   1084   0  
  • July 2019

மாதாந்திர பரிசு

  • மு. முபாரக்

0   1242   0  
  • July 2019

மாதாந்திர பரிசு

  • ஷீலா கடற்கரை

0   1343   0  
  • July 2019

கவிச்சுடர் விருது

  • தங்கேஸ்வரன்

0   1372   0  
  • July 2019

மாதாந்திர பரிசு

  • அ. முத்துவிஜயன்

0   1143   0  
  • June 2019

மாதாந்திர பரிசு

  • கீர்த்தி கிருஷ்

0   1478   0  
  • June 2019

மாதாந்திர பரிசு

  • மாறன் மணிமாறன்

0   1086   0  
  • June 2019

மாதாந்திர பரிசு

  • முனைவர் வே. புகழேந்தி

0   1190   0  
  • June 2019

மாதாந்திர பரிசு

மு.ச.சதீஷ்குமார்

View

மாதாந்திர பரிசு

வீரசோழன்.க.சோ.திருமாவளவன்

View

கவிச்சுடர் விருது

ஏ. நஸ்புள்ளாஹ்

கவிதையில் இருந்த பறவை
பறக்கத் துவங்கியதும்
சொற்கள் ஒவ்வொன்றாய்
மறையத் துவங்கியது.
மறையத் துவங்கிய சொற்களை
மனதுக்குள் சேகரிக்கத் துவங்கினேன்
கவிதையில் மீண்டும்
பறவை உட்கார்ந்து கொண்டது.

ஒரு கவிப்பாடியின் மனதை இதைவிடவும் அழகாக யாரும் சொல்லிவிடமுடியாது. அவன் தினமும் உறவுகளைவிடவும் சொற்களிடம்தான் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறான். கவிஞர்  ஏ. நஸ்புள்ளாஹ் அவர்களும் எப்போதும் சொற்களிடம் அதிகம் பேசிக் கொண்டிருப்பவர்... அவர் எழுத்துகளில் நவீனத்துவம் ஒட்டியிருக்கும் அதில் அதிகமாக சமூக அக்கறையே பயணம் செய்யும். 

ஏ. நஸ்புள்ளாஹ் கிழக்கிலங்கையில் கிண்ணியாவில் பிறந்தவர். உயர்தரம் வரை கல்வி கற்று தற்போது நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் மானி வாசிப்பாளராகவும் கடமையாற்றி வருகிறார். 

இதுவரை, துளியூண்டு புன்னகைத்து (கவிதை 2003), நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம் (கவிதை 2009),கனவுகளுக்கு மரணம் உண்டு (கவிதை 2011),காவி நரகம் (சிறுகதை 2013),ஆதாமின் ஆப்பிள் (கவிதை 2014),இங்கே சைத்தான் இல்லை (கவிதை 2015),ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர் (கவிதை 2016),மின்மினிகளின் நகரம் (கவிதை 2017),ஆகாய வீதி (கவிதை 2018),A.Nasbullah poems ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள் (மொழிபெயர்ப்புக் கவிதைகள் 2018) என 10 தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் கவிஞர் தனது 11வது தொகுப்பிற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

கவிஞர் ஏ. நஸ்புள்ளாஹ் கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது படைப்பு குழுமத்திலும் தனது கவிதைகளைப் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த கவியாளுமைக்கு இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருதினை அளிப்பதில் படைப்பு குழுமம் பெரு மகிழ்வு கொள்கிறது..

இனி கவிஞரின் கவிதைகள் சிலவற்றைக் காண்போம்:

  எனக்குள் ஒரு நதி சலசலக்கிறது என்று சொல்லும் கவிஞன் அந்த நதி எதுவாக இருக்கும் என்பதை வாசகனின் கணிப்பிற்கே விட்டு விடுகிறான்... இப்போது அந்த நதி வாசிப்பவர்களின் மனதிற்குள் இடம் மாறிவிடுகிறது... எதுவும் பேசினால்தான் தீரும் என்பதே வழக்கு... நதியோடு இன்று இரவு நிச்சயம் பேச்சு வார்த்தை நடக்கும்.. இரவுதான் அதற்கான உகந்த நேரம் என்பது கவிஞனின் தீர்க்கம். அமைதி அங்குதான் இருக்கும் .. அப்போதுதான் அந்த சலசலப்போடு பேசுவதற்கும் சரியாகவும் இருக்கும்... அப்போது ஏற்படும்  சலசலப்பைக் கேட்கும் தருணத்தில் அது கறுப்பு நிறத்தில் இரவாக மாறிவிடும். பின்னர் அவன் நிம்மதியாகத் தூங்குவதற்குச் சென்றுவிடலாம்... இதனால் ஒரு பிரளயம் தடைசெய்துவிட்ட திருப்தி கவிஞனுக்குள்ளும்  நிலவுகிறது...

எப்போதும் எனக்குள்
ஒரு நதி சலசலத்துக் கொண்டே இருக்கிறது
எனினும் நதியை நான் சந்தித்ததும் இல்லை
அதன் சலசலப்பை
மனசுக்குள் பூட்டி வைத்ததும் இல்லை
முதன் முறையாய்
இன்று இரவு நதியைச் சந்தித்துப் பேச இருக்கிறேன்
பேசும் தருணத்தில்
எனது வாசகனுக்காய்
நதியில் புதிதாய் ஒரு சலசலப்பை
தொடங்கி வைக்க இருக்கிறேன்
வாசகன் சலசலப்பை கேட்கும் தருணத்தில் அது கறுப்பு நிறத்தில் மாறிவிடும்
இனி வாசகன் தூங்கச் செல்லாம்.

@

இருப்பதற்கு ஓர் இடம் உண்டென்றாலும் போய் சேருமிடம் தாய் நிலம்தான் என்று சொல்கிறார் கவிஞர். ஆனாலும் அவாவுதல் என்பது இருக்குமிடத்தின் மீதே கவிழ்ந்து கிடக்கிறது என்பது கவிஞரின் சுய விமர்சனம்... ஆதாமின் பிறப்பிடமான வானகமே என் தாய் கூடு என்று சொல்லும் கவிஞர் அங்குச் செல்ல மனமில்லாமல் இறுதி நிலத்தின் தொன்மைகளை அள்ளி வாரிக்கொண்டு நிணம் தின்னும் பிசாசுகளுடன் வாழ்வது பிடித்துவிட்டதாகப் பகர்கிறார்...

எனது எல்லாவிதமான அவாவுதலும் 
முதல் நிலத்தின் மையப்புள்ளிக்குள் மாத்திரமே
மயக்கமுர்றுக் கிடக்கிறது.
எனக்கான நிலமொன்று 
வானக் கிளையில் அமர்ந்து
பறவை போல் காத்திருப்பதை
மறக்கவே எத்தனிக்கிறேன்...

எனக்கான பிரதியும்
அதன் நிசப்த வாசிப்பும்
அன் நிலத்தில் விளையும் ஆப்பிள் கனிகளும்
நான் விரும்பிய உயர்ந்த மதுக்குவளையும்
அங்குதான் இருக்கின்றன.

எனது முதல் நிலம் வெற்றுத்தாளில் பறக்கும்
வண்ணத்துப்பூச்சியை ஒத்ததும்
வண்ணமற்றதுமான நிறப்பிரிகை என்பதை
எனக்குள்ளிருக்கும் நான் அறிவதற்கு
மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்.

வீடு திரும்புதல் மிக அவசியமானது
ஆரம்பித்த இடத்தில் முடிப்பதே
பறவைகளின் கூடு திரும்புதலின் 
இன்னுமொரு யுக்தி
வனத்தில் வாழும் குரங்குகளும் அப்படித்தான்
எனினும் நான்
வீடு திரும்ப விரும்பாதவனாய் இருக்கவே விரும்புகிறேன்

எனது இறுதி நிலம் காத்துக் கிடக்கிறது
தொன்மங்களை அள்ளிக்கொண்டு
நான் முதல் நிலத்திலேயே தாவிக் கொண்டிருக்கிறேன்
நிணம் தின்னும் பிசாசுகளுடன் வாழ்வது
எனக்குப் பிடித்துப் போய்விட்டது

மன்னிக்க
நான் என்பது எழுத்துப் பிழை.

@

நிறங்களைப் படிமமாக்கி வாழ்தலை அற்புதமாகச் சொல்கிறார் கவிஞர். நிறமில்லாமல் வாழ்வதுதான் வாழ்க்கை.. நிறங்கள் நம்மை ஏமாற்றிவிடும் என்பதும் ஓர் எச்சரிக்கைதான்...

நிறங்களுக்கு நடுவே
வாழ நினைத்துக் கொண்டு இரண்டு
நிறங்களைத் தெரிவு செய்தேன்.
முன்பு மனசு 
இப்படி வேண்டியதில்லை
இப்போதெல்லாம்
குழந்தைகளைப் போல மனசு
எதையெதையோ தெரிவு செய்கிறது.

நிறங்கள் பச்சை மற்றும் நீல நிறங்களாக இருந்தன
சில நாட்கள் 
நிறங்களைப் பின் தொடர்ந்தேன்.
நிறங்களின் அணுகுமுறை சரியில்லை
எனவே 
நிறங்களுக்கு நடுவே வாழ்வதைத்
தவிர்த்துவிட்டேன்.

நிறங்கள் என்பது
தனிமையும் வெறுமையும் என
கற்பனை செய்து கொள்ளுங்கள்.

@

ஒரு சிறந்த கவிதையைப் படித்ததும் வாசகன் சிலாகிப்பான்.. கவிஞனின் மனமோ அப்படி இருப்பதில்லை.. அந்த கவிதையிலிருந்து புதுச் சொற்களை எடுத்துக் கொண்டு அது வேறொரு தளத்திற்குப் பறக்கத் தொடங்கிவிடும்.. இங்கும் அப்படித்தான் நிகழ்கிறது.. கவிஞர் ஏ.நஸ்புள்ளாஹ் கவிஞர் றியாஸ் குரானாவின் கவிதைகளின் தேர்ந்த ரசிகர் என்பது எல்லோருக்குமே தெரியும். அவரது கவிதையைப் படித்த தாக்கம் இந்தக் கவிதையில் வழிகிறது...

றியாஸ் குரானாவின் காடுகள்
காடுகளுக்குச் சிறகுகள் உண்டு. 
அசைத்துக்கொண்டே இருக்கின்றன. 
ஒரு நாள் பறந்துவிடும்.
என்கின்ற
றியாஸ் குரானாவின் பிரதியை
வாசித்துவிட்டு நித்திரைக்குச் சென்றேன்
காடுகள் சிறகுகள் உயர்த்திப் பறக்கத் தொடங்கின
பறக்கத் தொடங்கிய 
றியாஸின் காடுகள்
எனது பிரதியில் இருந்த 
பாலைவனத்தில் இறங்கின
பழைய கவிதை ஒன்றின்
மூன்றாம் வரியைப் போல
எனது பாலைவனம் சோலைவனமாய் மாறியது
நித்திரையிலிருந்து வெளியேறினேன்
றியாஸின் பிரதியில் தனிமையும்
எனது பிரதியில் நானும்
உட்கார்ந்து இருக்கிறோம்.

@

படிமங்களைச் சொல்லாட்சியாக்கி அதற்குள் கவிதையைக் கட்டமைப்பதுதான் சிறந்த கவிஞனின் மொழிதலாகிறது.. இந்தக் கவிதையில் பறவை ஒரு சஞ்சலத்தின் (அ) கவலையின் படிமமாக மாறிவிடுகிறது.. இருள் என்பது ஜென்னின் நிலையில் அமைதி என்றும் பொருளாகும்.. இனி இந்தக்கவிதையை நீங்களே படித்து ரசிக்கலாம்...

என்னைத் துரத்தும்
ஒரு பறவையை
இருள் வளைத்துப் பிடிப்பதை நான் காண்கிறேன்
பின் 
என்னை அழைத்த அவ்விருள்
விடிய விடிய
ஒரு நாவல் நீளத்தில் கதை சொன்னது.
எனக்குக் கதை பிடித்திருந்தது
அதனாலேயே 
கதை கேட்பதற்காய்
அதிக நேரத்தை ஒதுக்கியிருந்தேன்.
வெகுநாட்களாய் தேடித் திரிந்த கதையது
இப்போது
இருள் மெதுவாக என்னை விட்டு நகரத் தொடங்கியது
துரத்தி வந்த பறவை மீது 
கருப்பு நிற பூனை ஒன்று வாய்வதாய் 
அக்கதை முடிகிறது.

@

ஞாபகங்கள் சுயத்தன்மையுடன் இருக்கும்போதுதான் அது ஒழுங்கான சிந்தனைகளுடன் பேசித் திரிகிறது.... கற்பனையிலூறி மதுக்கோப்பையில் வழிந்த ஞாபகங்கள் கடலாக மாறினாலும் மலையாகத் தேர்ந்தாலும் தேடுவது கடிதாகிவிடுகிறது... நீயாக மட்டுமே பிரதிபலி எனக் கேட்டுக் கொள்கிறான் கவிஞன் தன் நினைவுகளை....

ஞாபகங்கள் உன்னைப் போல
பிரதிபலிக்க வேண்டும் என
முயற்ச்சி செய்கிறேன்
மதுகோப்பையில் நிறைந்த
ஞாபகங்கள் 
சில நேரம் கடலாகிறது
சில நேரம் மலையாகிறது
கடல் நடுவிலும்
உன்னை காணக் கிடைக்கவில்லை
மலை உச்சியிலும்
உன்னைக் காணக் கிடைக்கவில்லை
ஞாபகங்களின்
ஆயிரத்து நூறு பக்கம் திறக்கப்பட்டுவிட்டன
நீ இன்னொன்றைப் போல
பிரதிபலிக்க மாட்டாய் என்பதில்
உறுதியாய் இருக்கிறது எனது காதல்
ஞாபகங்களுள் ஒரேயொருமுறை
நீயாக மட்டும் பிரதிபலி
நம் சந்திப்பு 
இரண்டு பிரதிகளாக பிரிந்து செல்ல
தயாராக உள்ளது.

@

கவிஞனின் கவிதைகள் வாசகனோடு உரையாடும்போது மட்டுமே  முழுமையடைகிறது. கவிஞன் கடலை விரித்தால் வாசகன் அதில் மீன் பிடிக்கிறான்.. அதிலும் மிஞ்சிய சொற்கள் கவிஞனின் வனைவில் தேவதையாகிறது.. இப்போது வாசகனுக்குத் தேவதையும் தேவைப்படுகிறது...இனி அவனுக்கு என்ன தருவது எனக் கவிஞன் யோசனையில் ஆழ்கிறான்... கற்பனையையும் வாசகன் களவாடிவிட்டதாக...

கவிதைக்குள் கடலை விரித்து வைக்கின்றேன்
ஒரு வாசகன் வலை வீசுகிறான்
வலை முழுக்க சொற்கள்
துள்ளிக் குதிக்கின்றன
லாபகமாக விரும்பிய சொற்களை
தனக்கு எடுத்துக் கொள்ளும் வாசகன்
இன்னும் சில சொற்களை
அப்படியே விட்டுச் செல்ல முனைகிறான்
விட்டுச் செல்ல முனையும் சொற்ளை
ஒரு தேவதையாக மாற்றிக் கொண்டிருந்தேன்
கையோடு தேவதையையும்
எடுத்துச் செல்ல விரும்பிய வாசகன்
வழக்கத்தைமீறி
இப்போது  கற்பனையையும்
எடுத்துச் சென்றுவிட்டான் 
என ஒரு உரையாடலை தொடங்க வேண்டியிருக்கிறது.

@

தனிமை வெளிச்சத்தில் இரவு ஊர்கிறதாம் அதன் இரு மருகிலும் வயலின் இசை இழைகிறது...மதுக்குவளை வழிய, சிகரெட் புகையின் சுருள் டாவின்ஸி ஓவியத்தைப் பிரசவிக்க... தனிமை எல்லை மீறும்போது நான் தொலைந்து என்னை ஊற்றிக் குடிக்கிறேன்  என மிதமிஞ்சும் வரிகள் போதையாகிறது....

தனிமை நிரம்பிய வெளிச்சத்தில்
இரவு ஊர்ந்து கொண்டிருக்கிறது
அதன் வலப்புறமும் இடப்புறமும்
வயலின் கணத்திற்குக் கணம்
நடனமிடுகிறது.

பியர் வெகு அபூர்வமாக
குறைந்து கொண்டே செல்கிறது
இழுத்துத் தள்ளிய
சிகரெட் புகையின் நீள் வளையம்
சுவரில் டாவின்ஸின் ஓவியமாய்
கூடி பரவசிக்க.

முற்றிலும் இசையின் 
கண்ணாடித் துகள்கள்
சன்னல் வழியாக 
பின்னிரவை நிலவொளியில் இணைக்க
மின்மினி பூச்சிகளின் சங்கீதம் ஆரம்பித்திற்று.

எல்லை தாண்டும் தனிமை
விலங்கிடும் போதெல்லாம்
இயலாமையின பெயரால் இப்படிதான்
விலக்கப்பட்ட வாழ்க்கையுடன்
என்னை குவளையில் ஊற்றி குடித்துக் கொண்டிருக்கிறேன்

*****    ****     *****

View

மாதாந்திர பரிசு

ஜெயாபுதீன்

View

மாதாந்திர பரிசு

சஜோ வில்லியம்ஸ்

View

மாதாந்திர பரிசு

மு. சுகுமாரன்

View

மாதாந்திர பரிசு

கார்த்திக் கல்யாணி

View

கவிச்சுடர் விருது

காளிதாஸ்

'நெடுநேரமாய், ஒரு ராட்சஷப் பறவை
எதிர்க் கூரையில் அமர்ந்து கரைகிறது...
தப்பிக்கத் தவறிய இளஞ்சிறகு 
அதன் கூர்நகங்களில்.
காலம், 
தன் கடைசி பிம்பத்தை உடைக்கவும் 
கல்லெடுக்கக் குனிகிறது.'

- ........... மாதத்திற்கான கவிச்சுடர் விருதினைப் பெறும் நம் படைப்பு குழுமக் கவிஞர் காளிதாஸ் அவர்களை படைப்பு குழுமம் வாழ்த்தி மகிழ்கிறது...

கவிஞர் காளிதாஸ் அவர்கள் நீண்ட காலமாக நமது படைப்பு குழுமத்தில் அவரது கவிதைகளை பதிந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். அவரது சொற்பிரயோகங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

மதுரை மாவட்டம் பரவை அரசு மேல் நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணிபுரியும் கவிஞர், 1 சந்திப்பின் கடைசி நொடி 2.அட்சதை,3.பிம்பங்களின் மீது ஒருகல் மற்றும் 4. திருடனின் வீடு என்று நான்கு தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

இனி கவிஞரின் படைப்புகளைக் காண்போம் :

மனக் கசப்புகளின் மூலப்பொருளாக ஒரு வார்த்தை நிச்சயம் நிமிர்ந்திருக்கும்.. அதை துப்பிவிடாதவரை மனக்கிலேசங்கள் மாறுவதுக் கிடையாது. காதலியிடம் காதலன் வைக்கும் வேண்டுகோள் இதுவாகத்தான் இருக்கமுடியும்... அன்பு காத்திருக்கிறது... துப்பி விடு கண்ணே அந்த ஒவ்வாத ஒற்றை வார்த்தைதனை....

இம்மியளவு அன்பு தான் மிச்சமிருக்கிறது
துடைத்தெறிய தயாராக்கப்படுகிறது புன்னகை
வற்ற வற்ற அள்ளப்பட்டு விட்டது கண்ணீர்
தேடப்படுகிறது வலியறியா அணு
தவிர்க்கும் கோணத்திற்குத் தவிக்கிறது கண்
சுண்டச் சுண்ட உறிஞ்சப்பட்டு விட்டது இரக்கம்
மன விளக்கமாறால் அள்ளி மறுபிறவியில் கொட்ட வேண்டும் தாமதிக்காமல் துப்பி விடு
ஒவ்வாத அந்த ஒற்றை வார்த்தையையும்.

----

ஒரு படிமம் பல பொருட்களுக்குள் பதுங்கிக்கொள்ளும். ஆசையும் அப்படித்தான் இங்கொரு படிமத்தில் அமர்ந்து அமர்க்களம் செய்கிறது... அது கழுவி போட்ட மிச்சத்திற்கு கால நாய் வேறு காத்திருக்கிறதாம்...

கதவு இல்லை என்பதால்
தாழ்ப்பாள், பூட்டு, சாவிக்கு 
வேலையே இல்லை.
காற்றைப் போல உள்ளே நுழை
கலைத்துப் போடு
களவாடு
ஒளிந்து கொண்டு பூச்சாண்டி காட்டு
சமைத்திடு
பரிமாறு
எல்லாவற்றையும் கழுவிக் காய வை
மிதமிஞ்சியதை அதற்குரிய பாத்திரத்தில் இடு
நாக்கைத் தொங்கப் போட்டுக் காலனாய்க் காத்திருக்கிறது 
கால நாய்.

------
மீன்காரி
படிமத்திற்குள் படிமமாக அவளே நுழைகிறாள்...அவளின் கூடையில் உள்ள மீன்கள் சொற்களாக படிம இட மாற்றம் செய்து கொள்கின்றன... வாழ்க்கையின் சித்திரத்தை படிமங்களால் செதுக்குகிறான் கவிஞன்.. 

ஒரு மாறுதலுக்கு
சொற்களை ஏந்தி வந்த மீன்காரி
பேரம் படிந்ததும், வழக்கம் போல் செதில்களை உரசுகிறாள்.
பெருஞ்சொல்லின் குடலைக் கொத்திப் போக கூரையில் கரைகின்றன காலக் காகங்கள்.
கூடுதலாகப் போடப்பட்ட கொழகொழத்த சொல்லை
'குழம்பு'க்கென ஒதுக்குகிறாள்.
கண்டதுண்டமாக்கப்பட்ட நல்ல சொற்கள் வறுபடக் கூடும்.
மடித்து வீசப்படும் கழிவுச் சொற்களுக்காகச் சண்டையிடுகின்றன
பழக்கப்பட்ட நாய்கள்.
அவள் கைகளிலிருந்து நழுவும் கவுச்சி வாசத்தை சாராயநெடியோடு முகர்கிறது தெருமுக்கு.
சில்லரை கழித்து சரியான விலையை மார்புக் கச்சையில் செருகியபடி
சுமையை இடம் மாற்ற ஒரு கைபிடிக்கச் சொல்கிறாள்
ஒரு மாறுதலுக்கு
சொற்களை ஏந்தி வந்த மீன்காரி.

----------------

பேருந்து நிறுத்தங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு நிகழ்வுகளையும்.. பல் வேறு கதைகளையும் தினமும் வாசித்துக் கொண்டிருக்கிறது... நாமும் கவிஞரின் வாயிலாக அவற்றின் காட்சிகளை இந்தக் கவிதையில் காண்போம்...

வேரோடு பிடுங்கப்பட்ட காற்றோடும் மழையோடும் சேர்த்து சில நிறுத்தங்களின் பெயர்களும் காணாமல் போய்விட்டன.
சில்லரை சப்தங்களோடு நிறுத்தங்களின் பெயர் சொல்லி இறங்கச் சொன்ன நடத்துனர் பணி ஓய்வுக்குப் பின் தேங்கி நிற்கிறார்.
பழைய அடையாளத்தோடு வருவோர் அதே இடத்தில் புதிய அடையாளத்தோடு கையேந்தும் நிறுத்தத்தை பரதேசியைப் போல நிராகரிக்கிறார்.
துருப்பிடித்த நிறுத்தப் பலகையின் மீது யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி காலக் காக்கையின் எச்சம் கோடாக வழிந்து காய்ந்திருக்கிறது.
காம இச்சைக்குக் களவாடப்பட்டு இறக்கிவிடப்பட்ட இளம்பெண் மீது கழிவிரக்கம் கொண்டவாறே மணிக்கட்டைத் திருப்பி நேரம் பார்க்கிறது நிறுத்தம்.
கூடை நிறைய பொறுக்கிய நாவல் பழங்களைத் தூசு துடைத்து விற்ற கிழவியின் உழக்கு நெளிந்து கேட்பாரற்றுக் கிடக்கிறது விரிவாக்கப்பட்ட சாலையின் பாதி இடிந்த நிறுத்தச் சுவருக்கு அருகே.
யாரையோ காவு கொள்ள வந்து வழி தெரியாமல் 
மயங்கிக் கிடக்கும் எமனின் முகத்தில்
யாரோவொரு புண்ணியவான் தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்கிறார்.  ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கிறது பெயரழிந்தும் கம்பீரம் குறையாத பழைய நிறுத்தம்.

----
ஒவ்வொருவருக்குள் ஒரு பிம்பம் ஒளிந்திருக்கும். அது ரகசியமானதாகவும் இருக்கும். காதலின் தொடராக... காமத்தின் நிழலாக... இப்படி எத்தனையோ... இங்கும் ஒரு பிம்பம் ஒரு சவத்தின் அருகில் நின்று தன்னைக் காட்டிக் கொள்ளாமல் நிகழ்த்தும் செயல்... கவிதையாக! வாழ்வியலில் யாரும் பார்க்காத ஒரு கருப்பு பக்கமாக...

அதிர்ச்சியுடன் அரக்கப்பரக்க வந்து என் பிணத்திற்கு மாலையிடுகிறாய்
நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்க்கிறாய்
யாரும் கவனிக்காத போது 
எட்ட நின்றவாறே, என் உதடுகளில் முத்தமொன்றைச் சேர்க்கிறாய்
'எப்படி நிகழ்ந்தது?' என்ற கேள்வியை
வேறு பக்கம் திருப்புகிறாய்
ஏதோ நினைவு வந்து, கண்களுக்குள்
செல்ஃபி எடுத்துக் கொள்கிறாய்
நெற்றியில் இருக்கும் நாணயத்தை எடுத்து, அடுத்த விளையாட்டிற்குப்  'பூவா தலையா?' போட விழையும் அபத்த சிந்தனையைத் தலையிலடிக்கிறாய்
கட்டுகளை அவிழ்த்து விட்டு
ஒற்றை உதிர்த்துவிட மாட்டேனாவென
உற்றுநோக்குகிறாய்
அமைதியாய் இறைஞ்சும் 
உன் கைபேசிக்குக் காது கொடுத்து
துளிக்கண்ணீரால் என் உருவம் துடைத்தபடி காலைத் தூக்கிப் போடும் உன் நடுச்சாமக் கனவை ரசித்துக் காண்கிறது பாதி கரைந்த பசிய நிலா.

______

வீடு கூடாக மாறுகிறது... வாழ்க்கை பறத்தலின் விதிகளோடு நகர்கின்றன... அலைச்சலின் மிச்சம் வாழ்வில் தொங்கிக்கிடக்க நாளினை நகர்த்தும் வாழ்க்கை கவிதையாக....

என் கூட்டில் தான் இருக்கிறேன்
என் கூடு போலவே இல்லை
என் அலகு கொத்தி வந்த குச்சிகளில்
ஒன்றுகூட இல்லை
நனைதலுக்காக ஒடுங்குதல் இல்லை
உலர்தலுக்காக சிறகடித்தல் இல்லை
குளுமை இல்லை
வெக்கை இல்லை
இரைக்காகக் காத்திருத்தல் இல்லை
எதையோ பற்றிக் கொண்டு
எங்கோ தொங்குகிறது
வெளியேறுதலும் திரும்புதலும் ஒரு நாளினை நகர்த்தி வைக்கிறதன்றி வேறொன்றுமில்லை
இருப்பைச் சுருக்கி காற்றில் அலைகிற கூட்டின் மீது குவிந்திருக்கிறது யாருடையதோ அம்புக்குறி.


________

அரசியல் பேசாத கவிதைகள் அழகு சாதன பொருட்கள் மட்டுமே.. வாழ்க்கையின் ஓரம்சம் அரசியல்.. நாம் பல் துலக்கும் டூத் பேஸ்ட்டிலிருந்தே தொடங்கிவிடுகிறது அரசியல் வாழ்க்கை... நாம்தான் நம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்... இதோ கவிஞரின் இன்றைய அரசியல் மேசும் கவிதை...

நீர் நிறைந்த 
பொருளாதாரப் பானையைத் தோளில் தூக்கி
அரிவாள் நுனியால் பொத்தலிட்டு
முச்சந்தியில் போட்டுடைத்து 
அநேக ஆரவாரங்களுடன் 
சுடுகாடு நோக்கிப் போகிறாள்
பழம்பெரும் தாய்.

புத்தோவியம் வரையவென 
காந்தியிடம் திருடப்பட்ட
குட்டி பென்சிலால் தான்
அகிம்சைக்கான
எல்லைக்கோடுகள் வரையறுக்கப்படுகின்றன.

சட்டத்தின் முன் சாதாரணர்களை மட்டும் கொன்று
தடையில்லாச் சான்று பெற்று
வெளிநாடு தப்பியோடத்
தயாராய் இருக்கிறாள்
நீதி தேவதை.

'சில்லறை'களாகக் கொட்டுகிறது
தனியுடைமைத் தானியங்கி.
எங்கள் பிச்சைப் பாத்திரம் நிரம்பத்
தடையாய் இருக்கிறீர்கள்.

மேலும், வீரம் வெட்டப்பட்டு
முழுச்சம்'மதத்'துடன்
கோழையாக்கப்பட்ட எங்களுக்கு
தகர்த்தெறிவதைத் தவிர
வேறு மழுங்கடிப்பில்லை...
மன்னியுங்கள் லெனின்.

_______

இதுவும் கூட ஓர் அரசியல் கவிதைதான்.. தன் மானமில்லாத அரசியல்வாதிகள் பணம் மட்டுமே குறிக்கோளுடன் வாழ்பவர்கள்.. அவர்கள் அவமரியாதைகளை பொருட்செய்ய மாட்டார்கள்... எதையும் துடைத்தெறிந்துவிடுவார்கள்... ஆனால் பேனாவின் ஈரம் அப்படியில்லை...

நீங்கள் எல்லாவற்றையும் துடைத்துவிடுவீர்கள் 
அல்லது துடைத்துவிட்டதாய் 
மாயம் செய்வீர்கள்.

புட்டத்தில் ஒட்டிய தூசி
குதிகாலில் படிந்த சேறு
தலையில் விழுந்த எச்சம்
தரையில் சொட்டிய தேநீர் 
வழிந்தோடும் வியர்வை
உணர்வற்றுப் பிரியும் சிறுநீர்
கண்ணெதிரே கொட்டிய ரத்தம்
கழுவிக் காய வைத்த கண்ணீர் இன்னும் உலராத முத்தம்
உச்சியில் தோய்த்த எண்ணெய்...

எல்லாவற்றையும் 
அடையாளமே தெரியாதபடி
துடைத்துவிடுவீர்கள்
அல்லது துடைத்துவிட்டதாய்
மாய்மாலம் செய்வீர்கள்.

பேனா ஈரம்
அவ்வளவு சீக்கிரம் உலர்ந்துவிடாது.

_______

கவிஞரின் கவிதைகள் இன்னமும் சில...


நமக்கு இடையில் ஓடும் நதியில் ஒரு கை அள்ளி யாரோ முகம் கழுவுகிறார்கள்.
கரை மரம் உதிர்க்கும் இலை நரம்பை இறுகப் பற்றியவாறு மறுகரை நகர்கிறது காலச் சுள்ளான்.  குனிந்து தாகம் தணிக்கும்  குதிரையின் கடிவாளத்தில் இழுத்துப் பிடித்து உலர வைக்கப்பட்டிருக்கிறது நம்
அதீத இச்சையும் அதீத இயலாமையும்.
மற்றொரு பருவத்திற்கு கண்கட்டி அழைத்துச் செல்லும் பெருந்தலைவனிடம் ஒப்படைத்து 
கொஞ்ச காலம் கவனம் சிதறி இருப்போம், எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும்.
மூடிக் கிடக்கும் நம் உளுத்த கதவுகளைப் பெயர்த்து டிஜிட்டல்மயமாக்க வரும் ஒப்பந்தகாரன் கண்ணை உறுத்தும்முன் நம் பிணம் எரிக்க இப்போதே பதுக்கி வைப்போம் இதம் தரும் முற்றத்து வேம்பை.

_______

முத்தமெல்லாம் பிறகு தான்...
கைகளுக்குள் முகம் அள்ளி
நெஞ்சாரக் கழுவுவாய்.
ஆறடி ஆளுக்குள்
ஆயிரம் அடி இறங்கும்
'ஆள்'துளைக் காதல்.

______

எனக்குப் பசிக்கிறது தான்
பேய்ப்பசி தான்
ஆளையே தின்றுவிடும் அகோரப்பசிதான்
பசியில் கண்மண் தெரியவில்லை
நேரம், ருசி, வெந்தது, வேகாதது
பழையதா, புதியதா
சைவமா, அசைவமா
தொண்டையில் சிக்குமா
செரிக்குமா, உபாதை தருமா
பசி எல்லாவற்றையும் மறைக்கிறது
முடி கண்ணுக்குத் தெரியவில்லை
நஞ்சு நாக்கு அறியவில்லை. என்றாலும்...
கெட்டுப் போனதையும் மலத்தையும் 'திணித்தால்' தின்று கொழுத்துவிடாது 'வடக்கிருந்து' உயிர்விடும் என் பசி.

________

ஒரு புள்ளி வைக்கிறேன்
அதைத் தொட்டுப் பார்த்து ஆசுவாசம் கொள்கிறாய்.  புள்ளியிலிருந்து எழும் இசைக்கு ஸ்வரம் கூட்டுகிறாய்.
புள்ளியிலிருந்து ஒரு நீள்கோடு
குவியும் ஒளிக்கனவு
படரும் பச்சையம்
பறக்கும் சாம்பலை
ஒரே மூச்சில் உள்ளிழுக்கிறாய்.
ஒரு பெருமழைத்துளி 
மிகச் சரியாக அப்புள்ளியின் மீதே விழுகிறது.

_______

என் இடத்தை நானே நிரப்பிக் கொண்டிருப்பேன்.
மௌனம், வலி, வேதனை, கண்ணீரால் தானாகவே பூர்த்தியாகியிருக்கும் என் வெற்றிடம்.
போலித்தனங்களால் தோண்டிய புதைகுழியில் என்னைத் தலைகீழாகப் புதைக்க முயல்கிறாய்.
பச்சாதாபத்தோடு நீ தரும் பச்சைத்தண்ணீர் கூட சுத்திகரிக்கப்பட்ட என் சிறுநீரே.
வியர்வை வழிய என்னை மிதித்து
நீண்ட வரிசையில் நிற்கும் என்னிடமே
மலிவாக நீட்டுகிறாய் பஞ்சாமிர்தமாய்.
பல்லாண்டு பிரார்த்தனைகளின் முடிவில், சப்புக் கொட்டி என்னையே
நக்கத் தலைப்படுகிறேன் நானும்.
விறைத்துக் கிடக்கும் என்னை எரித்து
விபூதியாகப் பூசிக் கொள்.
இனி நீ, மொட்டை அடிக்கவோ அதற்கான டெண்டர் விடவோ அவசியமிருக்காது.

__________

இந்த முறை திருவிழாக் கூட்டத்தில் நிச்சயம் தொலைந்து போவேன்.
இத்தனை நாள் தவிப்பு அடங்க
தூக்கித் தொலைதூரம்
கொண்டு சென்று 
மொத்தமாய் முத்தக் கொலை செய்.
நீ வருவாயெனக் காத்திருந்து
திருவிழாக்களைத் தொலைக்க
இனியும் என்னால் இயலாது.

_______

எங்கு பார்த்தாலும் சொல் தான்...
சொல் மீது இடறி
சொல் மீதே விழ வேண்டியிருக்கிறது.

இக்கட்டான தருணத்தில்
சொல்லி வைத்தாற் போல
எல்லாச் சொற்களும் 
தனித்து நிற்கின்றன.

சொல் மீதேறி வந்து
சொல்லம்பு எய்தி
சொற்குருதி பருகிச் செல்கிறது
ஒரு வன்சொல்.

பொத்திப் பொத்திப் பாதுகாத்தாலும்
கையளவு சொற்களாவது
களவு போய்விடுகின்றன
அந்தந்தப் பருவத்தில்.

மின்னிக் கொண்டிருக்கும் போதே
உதிர்ந்து சாம்பலாகி
உருத் தெரியாமல் ஆகிறது
நட்சத்திரச் சொல்லொன்று.

நம் காலத்திலேயே புதைத்து
நம் கண்முன்னேயே அகழ்ந்தெடுத்து
நம் பாரம்பரியம் என
நம்மிடமே கையளிக்கப்படுகிறது
'தெய்வீக' அந்நியச் சொல்.

யாரோ எதையோ எதற்கோ நோண்டி
தடவி வைத்த சொல்லை ருசித்து
காலந்தோறும் நோய் பரப்பும்
ஈக்களின் மீது
கவனமாய்த் தெளிக்க வேண்டும்
வீரியம் மிகு பூச்சிச்'சொல்'லியை.

_______

ஒரு கதவு அடைத்திருக்கிறது...
காமக் களியாட்டத்தின் தொடக்கம்
தற்கொலை முயற்சி
ரகசிய பேரம்
விட்டு விலகுதலுக்கான 
கடைசி முத்தம்
வெளியே தூக்கி எறிவதற்கான
ஒரு சொல்
அவசரமாக அடங்கும் துளிக்கண்ணீர்
துண்டிக்கப்பட்ட பகல் கனவு
ஏதோவொன்று
திறந்திருக்கும் மற்றொரு கதவின் மீது
பழிபோடத் தயாராக இருக்கிறது
அல்லது ஒரேவொரு கதவாக உருமாறுவதற்கான சாத்தியங்கள் மீது
'நிலை' கொள்கிறது.

_________

உயர்த்தப்பட்ட 
இடது உள்ளங்கையில்
வலது விரல்களால்
நடுவர் காட்டுகிறார்
ஸ்ட்ரேட்டஜிக் டைம் அவுட்.
கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள்
அவசரம் அவசரமாகச்
சிறுநீர் கழித்துவிட்டு,
தன் செயல்களை
மீண்டும் தொடரப் பழகிக் கொண்டார்
புராதானக் கடவுள்.

-----------

தூக்குக் கயிறு
அரளி மசி
திணறும் புகை மூட்டம்
கொளுத்திக் கொள்ளத் தீ
மலையுச்சி
கட்டுக்கடங்கா வேகம் என
எவ்வளவோ இருந்தும்
பொசுக்கெனப் போகும்படி
ஒரேவொரு சொல்.

-----------

உன்னிடம் தான்
எல்லாவற்றையும் கற்றேன்.

எப்படிப் பார்ப்பது
எப்படிச் சிரிப்பது
எப்படித் தயங்குவது
எப்படி மயங்குவது
எப்படிச் சொல்வது
எப்படிச் சேர்வது
எப்படி விலகுவது
எப்படி அழுவது...

எல்லாவற்றையும் 
கற்றுக் கொடுத்த நீ,
எல்லாவற்றையும் மறைத்து
உள்ளுக்குள் 
எப்படிப் புழுங்குவது என்பதை மட்டும்
கற்றுத் தர மறுத்து
எதுவுமே தெரியாதது போல் கடந்து சென்று
கேலிச் சிரிப்பை உதிர்க்கிறாய்.

-----------

இன்னும் விலக்கி வைக்கப்படுகிறது கறுப்பு
சாதுர்யமாகவும் சடங்காகவும்.
துக்கம் தடவி வந்த கறுப்புக் கடிதங்கள்
கிழிபடாமல் பத்திரமாக இருக்கிறதா எவரிடமும்?
மேகத்தைப் போலவும்
இருளைப் போலவும், கறுப்பு
தன்னை வெளிப்படுத்தத் தவறாத போதும்
ரகசியங்களைப் போலவும்
மர்மங்களைப் போலவும்
மிகவும் கண்ணியமாகப் பாதுகாக்கப்படுகிறது.
காணாமல் போய்விடாது
தொலைக்கவும் முடியாது
குறிப்பாக எழுதப்படாத எழுத்துக்களைப் போல
வாழ்வு முழுதும்
வலம்வரக் கூடியது கறுப்பு.
விலக்கினாலும் விலகாமலும்
விளக்கினாலும் விளங்காதது போலவும்
கள்ளத்தனமாக யாருடைய பெட்டிக்குள்ளோ
பணத்தைப் போல
பதுங்கிக் கிடக்கிறது கறுப்பு.
விவரமறிந்த யுவனோ யுவதியோ
ஒவ்வொரு வட்டத்தையும்
அதீத நம்பிக்கையுடன் கறுப்பாக்குகிறார்கள்.
காரணம் இல்லாமலா
கறுப்பைப் போல உன்னத நிறம்
வேறெதுவும் இல்லையென
சங்கோஜத்துடன் ஒப்புக்கொள்கிறார்
நம்மைப் பிணமாகப் பார்க்க ரசிக்கும் 
தோழர் வெட்டியான்?

-----------

யாரோ தொலைத்த சாவியைக்
கையிலெடுத்திருக்கிறேன்.
அது இன்னும் துருப்பிடிக்கவில்லை.
தன் பழைய கதவுத் துவாரத்தை
தொங்கிய ஆணியை
ஒளித்து வைக்கப்பட்ட மறைவிடத்தை
மெழுகில் நகலெடுக்கப்பட்டதை
தன்னால் மட்டுமே திறக்க முடியுமென்கிற
அபார நம்பிக்கையை
தன்னை வார்த்தவனின் கைத்திறமையை
பூட்டின் இசைவை
எப்படியும் கண்டடையப்படுவோமென
மறதியாக வைக்கப்பட்ட இடத்தை
மறக்க முடியாமல் மருகும்
அதன் முனகலையும் கையிலெடுத்திருப்பதாக
தன்னை உணர்கிறது சாவி.

நெகிழும் ஒரு மகிழ்வை
எளிதாகத் திறந்ததாக,
அடக்க முடியாமல் ஒரு துக்கத்தை
அவ்வளவு வேகமாகப் பூட்டியதாக
அசைபோடும் சாவியை வைத்துக் கொண்டு
நடுத்தெருவில் நிற்கிறேன்...
இழுத்துப் பூட்டப்பட்ட கதவைப் போல.

View

மாதாந்திர பரிசு

கருவை ந. ஸ்டாலின்

View

மாதாந்திர பரிசு

பாண்டிய ராஜ்

View

மாதாந்திர பரிசு

மு. முபாரக்

View

மாதாந்திர பரிசு

ஷீலா கடற்கரை

View

கவிச்சுடர் விருது

தங்கேஸ்வரன்

'நீர்க்குமிழ்களின்முகங்களில் நெக்குருகிப்போய்
என்முகத்தைதேடிப்பார்க்கிறேன் இப்போது
அதுஏற்கனவே ஒருநீர்க்குமிழியின் முகமாகியிருந்தது
உடையாதநீர்க்குமிழியின்முகமாய்.....'

 கவிஞர் தங்கேஸ்வரன் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு சின்னமனூரை சேர்ந்தவர். தற்போது தேனி மாவட்டம் ஹைவேவிஸ் அரசு மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிகிறார்.

அது மட்டுமில்லாமல் தமிழார்வம் அவரது சுவாசம் என்பதால் நிறைய கவிதைகளையும் எழுதிவருகிறார். கல்கி, கணையாழி, செம்மலர், வண்ணக்கதிர், தகவு மற்றும் கொலுசு போன்ற சிற்றிதழ்களிலும் அவரது கவிதைகள் தொடர்ந்து பிரசுரம் கண்டுள்ளன. 

இவரது முதல் கவிதை தொகுப்பான 'தங்கேஸ் கவிதைகள்' சென்ற ஆண்டு கவிஞர் பிறைசூடன் அவர்களால் வெளியிடப்பட்டது. தற்போது கலில் ஜிப்ரனின் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு ' முறிந்த சிறகுகள்' என்ற பெயரில் அவரால் தொகுக்கப்பட்டு விரைவில் வெளிவர தயாராகவும் இருக்கிறது. 

இவரது கவிதைகளின் மேன்மையைப் பாராட்டி நமது படைப்புக் குழுமம் ஜூலை  மாதத்திற்கான கவிச்சுடர் விருதினை தங்கேஸ்வரன் அவர்களுக்கு அளித்து கௌரவம் செய்கிறது...

இனி கவிஞரின் படைப்புகளைக் காண்போம்

பழைய நினைவுகளென்பது வாசம் நிறைந்ததாகவும் இருக்கும். சில நேரம் துர் நாற்றம் நிறைந்ததாகவும் இருக்கும். நல்ல நினைவுகளை எப்போதும் அசைபோட்டு ருசிக்கலாம்...அனால் கசப்பான நினைவுகள் அப்படி இல்லை என்பதை இந்தக் கவிதையின் ஒரு படிமக்கூறு மூலமாக அழகாக சித்தரிக்கிறார்...

துருவேறிய நினைவுகளை
விரல் பருமன் தூசி படிந்து கிடந்த
பழைய டிரங்குப்பெட்டிக்குள்
மூச்சு வாசனை ஏறிய
பழைய காகிதங்களைக் 
கண்டன சில 
சுண்டெலிகள் ஒரு நாள் இரவு
அவற்றில் உடல்சூட்டின் ருசியறிந்து
கடித்து தின்றன முழு இரவும்
செரிக்கவும் இயலாமல்
துப்பவும் இயலாமல்
துருவேறிய நினைவுகளை தின்று
மதிமயங்கி கிடங்கின்றன
யுகம் யுகம் கடந்த பின்பும்

***
 
கவிதையின் வடிவம்தான் என்ன?, கவிதை இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரையறை இருக்கிறதா? மரபு மட்டுமே கவிதையா?, நவீனம் பின் நவீனம் சண்டைகள் ஏன்? இத்தனைக்கும் ஏன் இத்தனை பிதற்றல்? வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று யார்தான் தீர்மானிப்பது?

ஒரு கவிதை இவ்வளவு கடினமாக
இருக்க வேண்டுமா?
ஒரு கவிதை இவ்வளவு எளிமையாக
இருக்க வேண்டுமா?
எதுகை மோனை படிமம் குறியீடு
உருவம் உள்ளடக்கம் புதுமை கற்பனை
நவீனத்துவம் பின் நவீனத்துவம்
மற்றும்.... மற்றும்
வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை
உதைத்து பீறிட்டது
நான் எப்படி இருக்க வேண்டுமென்று
யாரடா தீர்மானிப்பது?

***

படிமங்களுக்குள் நுழைந்து கொண்டு விளையாட காதலர்களுக்கு ஆசை.... அதுவும் எப்போதுமே காதலென்றால் பட்டாம் பூச்சிகள் பறந்து வந்துவிடும். 

அவன் துரத்த அவள் பட்டாம் பூச்சி
அவள் துரத்த அவன் பட்டாம் பூச்சி
மீள் உரு கொள்வதற்கும்
வெகுதொலைவுக்கு அப்பால்
துரத்தப்பட்ட பட்டாப்பூச்சிகள் குழம்பின
இனி யார் துரத்தினால்
யார் யாரின் பட்டாம் பூச்சி
யார் யாராய் ஆவதென்று!

***

வீடு என்பது அச்சமற்றதாக இருக்கவேண்டும். வீடு பெண்களின் இரசனைக்கான கைவினைகள். அதுவும் கிராமத்து வீடுகளென்றால் சொல்லவே வேண்டாம். பசுஞ்சாணம் மெழுகி.. பஞ்சாரத்துக் கோழிகள் நிறைந்து... அரிசிக்கழுவும் தண்ணீருக்காகவும் அருகில் நின்று தலையுரசும் ஆடுகள் வரை ஒரு சப்தம் நிறைந்த வெளியாக இருக்கும்.. அப்படி இருந்த வீட்டிலிருந்து நகரத்திற்கு வாழ்க்கைப்பட்டு போன பேத்தி கதவின் அழைப்பு மணி அடித்தாலே அச்சத்துடன் குவியத்தில் வந்திருப்பது யாரென்று அறிந்த பின்பே கதவைத் திறக்கிறாள்... 

 பசுஞ்சாணத்தில் மெழுகிவிடுவாள் தெரு வாசலை
பசலைக்கீரை நிறத்தில் கருக்கலிலேயே 
தொழுவத்தில் கட்டியிருக்கும் பசுங்கன்றும் 
வெள்ளாட்டுக்குட்டியும் சங்குப்பூனையும் 
சிம்மி நாய்க்குட்டியும்
நீச்சத்தண்ணீ கேட்டு 
பக்கத்து வீட்டு குட்டிக்காடுகளும் குருமான்களும்
சட்டமாக வீட்டுக்குள் நுழைந்து விடுவார்கள் 
சாணம் பதிந்த கால்களோடு
கழுத்தைக்கட்டிக்கொண்டும் 
முகத்தை உரசிக்கொண்டும்
முழங்காலைக்கட்டிக்கொண்டும் காச்சு மூச்சென்று 
கத்திக்கொண்டிருக்கும்
ஒவ்வொன்றும் காலையிலேயே....
தீம்பட்டி குழல் வைத்து அடுப்பூதிக்கொண்டிருப்பவள்
ஒவ்வொன்றொன்றுடனும் 
வழமை பேசிக் கொண்டிருப்பாள் சளைக்காமல்
ஒரு கரண்டியில் கொதிக்கும் கருவாட்டுச்சாறெடுத்து 
தாத்தாவின் உள்ளங்கையில் வைத்து 
உப்பு பார்க்க சொல்வாள் மறக்காமல்
சுயம் தொலைத்து நிற்க நேரமில்லாத 
இப்பெரு நகரத்தில் பிழைப்பிற்காக
பல்லடுக்குமாடிஒன்றின் ஒருதளத்தில் 
அடைந்து கிடக்கும் கிராமத்தானுக்கு

இப்போது எந்தஅழைப்பு மணி ஒலித்தாலும்
ஒற்றறியும் லென்ஸ் மூலம் 
வெளி முகம் பார்த்து கதவு திறக்கும் வரை
அடிவயிற்றிலிருந்து பீறிட்டெழும் 
பயத்தையும் தாண்டி
பார்வதி பாட்டியின் சிரித்த முகம் 
எட்டிப்பார்ப்பதை மட்டும்
ஏனோ தவிர்க்கவே முடியவேயில்லை  

***

உரையாடல்கள் நிகழ்த்தாமல் எதுவுமே இங்கு நிகழ்வதில்லை. உரையாடல்கள் சில நேரம் நீண்டுகொண்டே செல்லும்.. சில நேரம் சட்டென்று முடிந்துவிடும்.. இவை பரவாயில்லை . சில உரையாடல்கள் வாய்தா வைத்துவிட்டு நகரும்... அதன் முடிவறியாமல் நாம் குழம்பி நிற்போம்.. இங்கும் சில உரையாடல்கள்...

முடிவற்ற நீண்ட உரையாடல்களை 
வளர்த்துக்கொண்டிருந்தோம்
நாங்கள் இருவரும்
இறுதியில் நாளை தொடரலாம் என்று 
விடைபெற்றதுமழை

ஒரு வார்த்தை உரைக்காமல் முகத்தோடு 
முகம நோக்கி கிடந்தோம்
நாளை நோக்கலாம் 
என்று விடைபெற்றது நிலவு

வந்ததிலிருந்து வார்த்தைக்கு வார்த்தை
வாயாடிக்கொண்டிருந்தவளிடம்
சரி சரி சண்டை வேண்டாம்...
நாளை பேசித்தீர்த்துக்கொள்ளலாம் என்றேன்
எதுவாக இருந்தாலும்
இப்பொழுதே பேசி தீர்த்து விடுவோம் என்று
சட்டென்று மார்பில் சாய்ந்தாள்!

***

இயற்கை காட்சிகள் மனதிற்கு இதம் தரக்கூடியவை. வனத்திற்குள் செல்பவன் விலங்குகளாகவே வாழ்கிறான் என்பது ஒரு ஜப்பானிய பழமொழி... கவிஞரும் இயற்கையின் காட்சிகளில் நுழைந்து காணும்போது அதன் வடிவங்கள் மாறி அழகூட்டுகின்றன...

பட்டாம் பூச்சியின் சிறகென விரிந்திருக்கும்
யாழினி பாப்பாவின் விரல்களின் வழியாக
சொட்டுகிறது இன்றைய
அதிகாலை துளித்துளியாக

தற்போதே திறந்திருக்கும் செம்பருத்தி மொட்டின்
பச்சையத்திலிருந்து பிறந்திருக்கும்
என நம்பக்கூடும்
ஒரு விரலளவு தேன் சிட்டு

மாராப்பின்றி திறந்திருக்கும்
மஞ்சள் அரளிப்பூவின் மார்பில்
கொஞ்சம் தாய்ப்பால் அருந்திவிட்டு
இடமும் வலமுமாய்
இலைகளில் துடைத்துக்கொண்டிருக்கிறது
குட்டியே குட்டியான அலகை

பனி தெளித்த வாசல்களில் உதிர்ந்து கிடக்கும்
மஞ்சள் சிவப்பு மற்றும் வெள்ளை வார்த்தைகளோடு
கொஞ்சம் கட்டிப்புரண்டுவிட்டு
பக்கத்து தென்னைக்கு தாவும்
அணிலொன்று
தலைகீழாய் நின்று விச் விச் விச்
கத்தும்போது
துடிக்கும் குறியென ஆடி அதிரும்
அதன் வாலுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும்
இணையின் இருப்பிடம்

இரவெல்லாம் பாதங்களை சுமந்து சுமந்து
இப்பொழுதுதான்
சற்று கண்ணயர்ந்திருக்கும்
இந்தத் தெருவை வன் புணர்ந்து எழுப்பிட மனமின்றி
மௌன வலம் வந்து என் வாசலில்
முடித்துக்கொள்கிறது
தன் திட்டமிடாப் பயணத்தை
இந்தக் கவிதை

***

ஆண்பாதி பெண்பாதியென வாழும் அர்த்த நாரீஸ்வர் நிலை காமத்தின் களவாடலில் நிகழ்கிறதை அழகாக விவரிக்கும் இந்தக் கவிதையில்தான் எத்தனை சுவை?

வலது மார்பில் இடது கன்னத்தை சாய்த்து
துயில் கொள்கிறாள்
ஒரு புன்முறுவல் தேங்கிய உதடுகளோடு

என் வலது கை அனிச்சையாய்
அவள் கழுத்தை மாலையிட்டுப் பிணைத்திருந்தது

நிழல் விழுந்தாலே சப்திக்கும்
அடர் மெளனம் கரைந்தோடுகிறது
இருளின் கருமையோடு
கால வெளிதனில்

விரல்களை விலக்கினாலும் சகியாத
துயரம் கொள்பவளாக துயிலாழ்ந்திருப்பவள்
சற்றைக்கெல்லாம் என்னை ஒரு கனவாக்கி
விழிகளுக்குள் இழுக்கிறாள்
தன் ஆகர்ஷனத்தின் வழியே

ஒரு வெண்புறா பக்கவாட்டில் சிறகு விரித்தது போல் என் மீது சரிந்திருக்கும்
இவளை வைத்த கண் விலக்காமல்
எத்தனை நேரம் பார்த்தேனோ

என் கர்வம் அழிந்து கொண்டிருக்கிறது
தடையின்றி
ஆண்டாண்டுகளாய் ஆண்டு வந்திருந்த

அத்துமீறும் ஆண் சாபம்
படுக்கையை சுற்றி உதிர்த்து கிடந்தது
சிறு சிறு இறகுகளாக
நான் அர்த்த நாரியாய் போக

மாதொரு பாகனாக இருப்பது எவ்வளவு மகத்தான அனுபவம்
இரண்டு இதயங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனவே
ஒரே மார்பில்

***
ஒரு கவிதைக்குள் நுழைந்து வெளிவருவதும் ஒரு போராட்டம்தான்.. ஆனால் அதற்குள் நுழையும் முன்பாகவே வியப்பாக நின்றால்  அந்தக் கவிதையும் விளங்காததுதான். இந்தக் கவிதையில் லூசிபர் லூசிபர் என்ற சொல்லாடலை தங்கேஸ் பயன் படுத்தியிருக்கிறார். யார் அந்த லூசிபர்... ஒரு பழைய ஏற்பாட்டின் மொழியாக்கம் லூசிபர் என்றால் சாத்தான் என்று வரையறுக்கிறது... லத்தீன் மொழியில் லூசிபர் என்றால் விடி வெள்ளியும் என்று பொருளுண்டு. இப்போது இந்த லூசிபரை பிடித்துக் கொண்டு இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள்... கவிதையில் தெளிவு பிறக்கும்...

ஒரு பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து
உன் கிரகத்திற்கு வருகிறேன்
எனக்கென்று வீடு வாசல் எதுவுமில்லை
சுழலும் உன் பூமியின் அச்சில் ஒரு துகளைப் போல ஒட்டிக் கொள்கிறேன்
புள்ளியாகவே இருந்தாலும் இருத்தலின் மன உளைச்சல்
என்னை பேரண்டமாக வெடித்து சிதறிப் போகும் படி செய்கிறது
பெயரிடப்படாத பால் வீதி எங்கும்
இலக்கற்று அலைகிறேன் ஊழிக்காலம் முதல்
நான் நீ சாதி மாதம் தேசியம் மனிதம் என
சமன்பாடுகளை
எழுதி எழுதி தீர்த்த பின்பும் 
தொக்கி நிற்கும் ஒரு கேள்வி சுருக்கு கயிறு போல
ஆதாமாக இருந்தாலும் இந்த தூக்கு கயிறை முத்தமிடாமல் செத்திருக்க மாட்டான்
லூசிபர் லூசிபர்
கடவுள் தன் அம்சத்தில் மனிதனை படைத்தாலும்
அவன் மனதுக்குள் உன்னைத் தானே
சிறு மீன் குஞ்சென. நீந்த விட்டிருக்கிறான்..

***

கவிஞரின் மேலும் சில சிறப்பான கவிதைகள் :

கன்னக் கதுப்பில் வெடிக்கும்
வெட்க குமிழ்களில் 
உடைபடுகிறது அவன் மனது
சிறு சிறு புள்ளிகளாக தோன்றிய சலனங்கள்
ஒரு பேரலையாக எழுந்து வருகிறது
உன் கடலில்
படகு கிடைக்காத பரிசல்காரன்
மிக ஆழத்தில் மூழ்கி 
விரும்பிச் சாகிறான் உன் விழியோரம்
முடிக்காத வார்த்தைகளில் தெறித்த
பிறைநிலாக்களை பொறுக்கி 
தலையணையாக்கி
இரவெல்லாம் தொடர்கிறான்
விட்ட இடத்திலிருந்து
கரும் உரையாடல்களை
உதடு கடித்த நளினத்தின் ஒரத்தில்
ஊறித் திளைத்த ரசத்தை
ஒருவருக்கும் தெரியாமல்
நீவிப்பார்க்கிறான் 
இரகசியமாக நள்ளிரவில்
என் ஆன்மாவை திறந்த இரகசியச் சாவி
தொலைந்து விட்டதென்று
ஏ உலகமே நீ இருளாகவே 
இருந்து விட மாட்டாயா?
என் கண்ணில் வலம் வரும்
அடங்காத கனவுகள்
சுதந்திரமாகவாவது வலம் வரட்டும்
இதே வீதிகளில்

***
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் நாம் தற்கொலை செய்து கொண்டோம்
பிரிவாற்றாத நம் ஆன்மாக்கள் ஒரு தேக்கு மரத்திலையில் போய் ஒட்டிக் கொண்டு
படபடத்தன
தீராத வலிகளைச் சுமந்தலையும் வார்த்தைகள்
இந்த பிரபஞ்சம் முழுவதும் 
அவர்களை கண்டீர்களாவென்று
நம்மை தேடியலைகின்றன
அவயங்களின் கூட்டுத் தொகுப்பு தான்
இந்த உடல் என்னும் மனிதர்கள்
முகம் சுளித்தபடி கடந்து செல்கிறார்கள்
நாம் நடந்த வீதிகளை
மது நெடி கசியும் வார்த்தையோடு
வந்தவன் சொல்கிறான்
உன் அன்பை இந்த தெரு நாய்க்கு பிச்சையிடு
தின்கிறதா பார்ப்போம்
அரூபமாக அலையும் ஆத்மாக்கள்
கிசு கிசுக்கின்றன
மனிதனின் நிழலை மட்டும் பெயர்த்தெடுக்க முடிந்தால்
எவ்வளவு நல்லது
தனிமையின் துயரமே அவனை சாகடித்து விடும்
இன்னொன்று கதைத்தது
இந்த நூற்றாண்டு மனிதர்களை
தனிமை சாகடிப்பதில்லை
வெளவால்களைப் போல எச்சமிடும் அவைகளில் கூடு கட்டி பழகியிருக்கிறார்கள்
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் மனப்பிறழ்வடையும் கடவுள்கள்
நேசிக்கும் இதயங்களை
யோசிக்காமல் கைவிட்டு விட்டு விடுகிறார்கள்

***

நிழல்கள்

மனிதர்கள் எல்லாம் உறங்கிய பிறகு
விழித்துப்பார்த்து கண்களை
உருட்டுகின்றன உறங்காத தெருக்கள்

மரித்ததாய் நாம் நினைத்திருந்த நினைவுகள்
பூப் போல உயிர்த்தெழுந்து நடைபயில்கின்றன
நடுநிசிக்கும் பின்பு
நாயின் கண்கள் அவைகளை அடையாளம் கண்டாலும்
அசட்டுக்குறைப்புகளுக்கெல்லாம் அஞ்சுவதில்லை அவைகள்

இருள் வடியும் சாலையும் சுற்றியலையும் சாபங்கள்
காலத்தின் முற்றிய வாசனைகளை தங்கள் மீது
கமழவிட்டபடி வீதியெங்கும் அலைகின்றன
இருள் நதிகளென

எத்தனை மூச்சுக்காற்றுக்கள் இங்கு முன்பு உலவினவோ
அதன் அத்தனை நிழல்களும் இன்னும்
உலவியவண்ணமே உள்ளன
மற்றும் நம் காலடிச்சுவடுகளில் முறிவதும்
அவைகளின் முதுகெலும்புகளோ என்னவோ 
யார் கண்டது?

இந்தக் கவிதையை நீ எழுதினாலும்
நான் எழுதினாலும்
எழுத வைத்த நிழல்களுக்கே சமர்பித்து விடு
என்று என் காதில் கிசு கிசுத்துவிட்டு
இருளில் இறங்கி மறைந்து போகிறது
இந்தக் கவிதைக்கான நிழல்

***

கன்னத்தில் பளாரென்று ஒரு அறை
கை வைத்து தடம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
வாய் மைதுனத்தைப் பற்றிய ஒரு கொச்சையான வசவு
தொண்டைக் குழிக்குள் கத்தியாய்இறங்குகிறது
எச்சிலூறி நிற்கும் ஒநாய்க்கு முன் குமட்டியபடி அவள் வாந்தி எடுக்க
ஆண்மை சுயமென்னும் கயமைத்தனம்
காட்டு யானை போல பிளிறுகிறது
பிறப்புறுப்புகளின் அடிப்படையில் பெண்களை வதைக்கும்
ஒரு கேடுகெட்ட சமூகத்தில்
ஆண்குறி திமிரின் உச்சமாக
எப்போதும்இறுமாப்பெய்திக் கொண்டிருக்கிறது

***


அழுது விடுவது என்று முடிவானவுடன்
இந்த கண்ணீரை உன்னையன்றி யாரிடம் சிந்துவேன்?
உன் அருகாமைக்கோ தொலைவிற்கோ
உன் கை என் மீது படரும் நினைவுக்கோ
அல்லது காரணமற்று அரும்பிய
முதல் துளி கண்ணீருக்கோ
அழுது விடுவது என்று முடிவானவுடன் . .

தூண்டிலில் அலகை தானே குத்திக் கொண்டு
இரத்தப் பிசுபிசுப்புடன் துடிக்கும் மீனுக்கு
தண்ணீரோ கரையோ
எல்லாம் ஒன்று தான்
துடித்து அடங்குவதற்கு
மற்றும் உன் நினைவுகளுக்கு புழுக்கள் ஆவதற்குத்தானே இதயத்தை வளர்ப்பது

***

என் இதயத்தின் சீரற்ற ஒசையை
பதிவு செய்யும் டப் லப் சப்தம்
உன் வருகையின் தாமதத்தில்
தொலைவில் வரும் வாகனத்தின் ஓசை
உன்னுடையதல்ல என்றாலும்
ஒரு முறை நிமிர்ந்து பார்ககாமல் ஆசுவாசம் கொள்ளாது மனது
பிடுங்கப்பட்ட நாற்றிலிருந்து வழியும்
மண் கலந்த நீரைப் போல வழிந்தோடும்
நினைவுகள் உன் வயல் தேடி
காணாத காற்றை கண்டவுடன்
கழுத்தை கட்டிக் கொண்டு கதறி அழும்
காட்டுக் கொடியின் ஜாதி நான் என்று
நீ அறிவாய் தானே ?

***
பட்டாம் பூச்சியாக படபடத்து உள்ளங்கையில் வந்து அமர்கிறது அது
மனது விடைபெறாமலே ஒரு காத தூரம் போய் விட்டது கழன்று 
நெகிழ்ச்சிக்கு ஒரு மழைத்துளி கூட தலை மீது விழவில்லை என்றாலும்
உச்சி முகர்ந்து ஆசீர்வதிக்கும்
ஒரே ஒரு செம்பருத்தி இலை போதும்
தரையில் இறக்கி விட மனதின்றி
உள்ளங்கையில் ஏந்தி நிற்கிறேன்
கோவில் தூணில் அசையாது நிற்கும் யாழியானேன் சற்று நேரத்தில்
சற்று நேரம் என்பதுயுகம் யுகங்களாகிறது
ஒரே ஒரு சருகுக்காக நின்று புறப்படும்
காலத்தைப் பார்க்கும் போது தான்
மிதக்கும் கடவுளிடம் கொஞ்சம் சிநேகம்
காட்டத் தோன்றுகிறது

***

காலுக்கு செருப்பற்றவர்கள் வெய்யிலோடு பூண்டிருப்பது வெறுக்கத்தக்க விரோதமல்ல
கொஞ்சம் கசப்பு கலந்த கட்டங் காப்பியின் துவர்ப்பு
ஒரு குடையின் கீழ் 
அறுந்த செருப்புகளை தைத்துக் கொண்டிருப்பவனுக்கு
ஒரு குடையின் கீழ் அரசாளும் கனவு
அவ்வப்போதுஇடைஞ்சல் தந்தாலும்
வாழ்க்கையோடு எந்தப் பிணக்குமில்லை
தெருமுக்கில் பெட்டிக்கடை வைத்திருக்கும் மணவாளனுக்கு
தினமும் பத்துப் பாடை பார்த்த பின்னும்
ஆழ்ந்ததூக்கத்தின் மீது அத்தனை விரக்தியுமில்லை
வார்த்தை கவசம் பூண்டு
சொற்போர் புரிந்து கொண்டிருக்கும்
ஒரு அலுவலக ஊழியனான எனக்கு
ஏனோ பார்ப்பவர் மீதெல்லாம்
இனம் புரியாத கோபம் 
 என் மகள் மீது கூட
ஒரு சின்னஞ் சிறிய சாக்லெட்டிற்கே
பெரும் அழுகையை நிறுத்தி அவள் சமாதானமாக விடும் போது கூட அல்ல
ஆனால் எதன் பொருட்டு அவள் அவ்வளவு சீக்கிரம்
சமாதானமானாள்
என்பதன் பொருட்டே

***

இந்த அற்புதமான அந்தி வானத்தை
தொலைக்காட்சிக்கு பலி கொடுத்தது
எத்தனை அபத்தம்?
ஓஷோவும் லாவோட்ஷும் நீந்திக் குளித்த இந்த மஞ்சள் நதியில் தானே
இந்த செம்பருத்தியும் 
ஈரம் படிந்ததலையுடன் குளித்து வந்திருக்கிறது
மனதை சுமந்தலையும் உனக்குத்தான்
ஒரு பில்லியன் டன் பாரம்
எனக்கு?
கடலை ஒரு மிடறில் உறிஞ்சிக் குடித்து விட நினைத்த 
 சித்தார்த்தன் தானே புத்தனான்
ஆனாலும் முதலில் மோட்சம் பெற்றது என்னவோ போதி மரம்தான்
சங்கரா சங்கரா சூத்திரர்கள் அவரின்
காலிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்றால்
உழைப்பின் சிறகுகளை மென்மையாக நீவி விடும்
இந்த இருள் காக்கை தரும் பேதமற்றநிழல் ஒன்றே போதும்
மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு 
விண்கலத்திற்கும் முன்பே
முதலில் உங்கள் சாதியை அனுப்பி விடாதீர்கள்

***

சாதி
இரட்டைக்குறிகள் முளைத்து விடுகின்றன
இடுப்பில் ஒன்றும் தலையில் ஒன்றுமாய் 
( சுட்டெலியின் விறைத்த காதளவு )
அந்தப் பெயரைக்கேட்ட புளகாங்கிதத்தில்
உள்ளே கொதிக்கும் இரத்தம் புகையாகி

அத்தனை துவாரங்களிலும் கசிகிறது
கருநீல நிறத்தில்

உடைவாளும் முறுக்கிய மீசையுமாய்
மூவேந்தர்களும் 
வலிமையான காட்டு விலங்கொன்றை
முன்விட்டு நடந்து வரும் தலைவர்களும்
முதன்மை திரை நட்சத்திரங்களும்
உடனடியாக வந்துவிடுகிறார்கள்
ஆண்ட பரம்பரையின் ஞாபகத்திற்கு என்றால்
நீ மட்டும் தப்புவதெப்படி ?

எண்ணிக்கையில் அதிகம்
வலிமையில் அதிகம்
அறிவில் அதிகம்
ஆற்றலில் அதிகம்
வாக்குகளில் அதிகம்
நீளும் பட்டியல் நீத்தார் பெருமையென

என்னையே கேள்

முகநூலில் ஜல்லிக்கட்டை ஆதரித்தவன்
காவிரி ஆணையம் வேண்டி குரல் கொடுத்தவன்
ஸ்டெர்லைட்டையும் நீட்டையும் இன்றும்
எதிர்ப்பவன்
(அனிதா நம் குடும்பத்தில் ஒரு பெண்தான் இன்றும் )
சமயங்களில் வண்ண வண்ண சட்டைகள் அணிந்து
கூட்டங்களுக்குப் போய் வந்தவன் தான்
ஆனாலும் சென்டை மேளத்திற்கும்
பாண்ட் வாத்தியத்திற்கும்
சிவகாசி பட்டாசுக்கும்
பலூன் போல் ஏன் உப்பிவிடுகிறது
அவயங்கள் ஒவ்வொன்றும் ?
என் நண்பனை கேட்டேன்
அவனுக்கும் இது போல் இது முளைத்திருக்க கூடும்
என்ற நம்பிக்கையில் தான்

சும்மாயிரு இது கடவுளின் தேசம்
கடவுளின் தேசத்தின் புளாங்கிதத்தின் உச்சத்தில்
இப்படி சமான்யர்களுக்கு முளைப்பது சகஜம் தான்
இல்லையென்றால் தான் ஆச்சர்யம்

உன் உடல் மீதும் ஆன்மாவின் மீதும்
முழுசுதந்திரமெடுத்து அது உரிமைகொள்ள
நீ ஆசிர்வதிக்கப்பட்டவன் போ என்றான்
அலட்டிக்கொள்ளாமல்

***

View

மாதாந்திர பரிசு

அ. முத்துவிஜயன்

View

மாதாந்திர பரிசு

கீர்த்தி கிருஷ்

View

மாதாந்திர பரிசு

மாறன் மணிமாறன்

View

மாதாந்திர பரிசு

முனைவர் வே. புகழேந்தி

View

Showing 621 - 640 of 806 ( for page 32 )