'காற்றிற்கு வியர்க்கும்போதெல்லாம் பறவை தன் சிறகால் விசிறி விட்டுச் செல்கிறது....' - கவிஞர் தோழன் பிரபா இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருது பெறும் கவிஞர் தோழன் பிரபா அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்! தாராபுரம் அருகிலுள்ள கள்ளிவலசுவை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞரின் இயற்பெயர் ம.ஜெகதீஸ்பிரபு என்பதாகும். பிபிஏ படித்துள்ள கவிஞர் கூடுதல் தகுதியாக எம்.ஏ.ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேசன் படித்திருக்கிறார். அரசு ஊழியராக பணிபுரியும் கவிஞர் மறைந்த எழுத்தாளர் க.சீ.சிவக்குமார் அவர்களின் நட்பின் ஊக்கத்தால் கவிதைகளை எழுதத் தொடங்கியுள்ளார். விகடன்,குங்குமம் இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. இது மட்டுமில்லாமல் படைப்பு குழுமத்தின் மாதாந்திர சிறந்த படப்பாளி விருதையும், 2018ல் அம்மையார் ஹைனூன் பீவி நினைவு கவிதைப் போட்டி, 2017ல் கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி, 2018 கவிக்கோ பிறந்த நாள் பரிசுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி கவிஞரின் சில கவிதைகளையும் காண்போம்: வாழ்க்கையே பலவித குறியீடுகளால் நிரம்பியதுதான்! அதனளவை, 'தன் உயரத்தை நூறால் பெருகி எழுப்பப்பட்ட சுவர்' என்பது உச்சம்! சிலந்தி வலையில் சிக்கியும் சிலந்தி விட்டு வைத்திருப்பதாக கவலையை அல்லது குடும்பத்தை சொல்வதிலும், பாசிகளின் உள் பக்க குளிர்ச்சியை வார்த்தைப்படுத்துவதிலும் கவிதை மேன்மை அடைந்துவிடுகிறது! கவிதை: என் உயரத்தை நூறால் பெருக்கி எழப்பப்பட்ட சுவர் அந்த சுவற்றின் வெடிப்புகளின் வழியே என் வாழ்க்கை வழிந்து கொண்டிருந்தது...... சிலந்தி வலையில் வலிந்து சிக்கிய என்னை சிலந்தி இந்த நிமிடம் வரை விட்டு வைத்திருக்கிறது....... சுவற்றின்துளையில் தழைத்த பெயரறியா செடியின் வேர்கள் நாளைக்குள் என் தொப்புளுக்குள் நீளலாம்....... எண்ணி முடித்த மண் துகள்கள் என் பாத ஸ்பரிசத்தால் கலவி கண்டு பெருகின.. அவற்றுக்கு பெயரிட்டுக்கொண்டிருக்கிறேன்...... படிந்திருக்கும் பாசிகளின் உள் பக்க உலர்ந்த பகுதிகள் என் மூச்சுக்காற்றால் குளிர்கின்றன..... பூமியின் அடி ஆழத்திலிருக்கும் தூய்மையான நீரில் பிரதிபலிக்கும் என் அகம் மகிழ்கிறது இதற்காகத்தான் ஒரு முறையாவதுதப்பிக்க வேண்டும்.... என்னை தினம் பல முகமூடி பொருத்தி வேட்டையாடும் இந்த பூமியிலிருந்து ஒருமுறையாவது தப்பிக்க வேண்டும்... +++ தொலைந்த பணம் உருமாறும் வரலாறும் கவிதையாகும் அதிசயம்! கவிதை: யாரோ ஒருவர் தவற விட்ட பத்து ரூபாய் பசித்திருப்பவனின் கையில் தேநீரும் வடையுமாக மாறுகிறது.... குடிப்பவனுக்கு ஊறுகாயாகிறது.... மீனவனுக்கு ரெண்டு கொக்கிகள் கிடைக்கிறது.... பேருந்து நடத்துனரிடம் பயணச்சீட்டாக மாறுகிறது... ஆனால் தொலைத்தவனுக்கு பத்து ரூபாயாகவே இருக்கிறது. +++ பேருந்து காட்சிகள் கவிதையாவது சுவாரசியம்! பயணிகளே படிமங்களாவது அதைவிட சுவாரசியம்! இங்கும் இந்தக் கவிதை அப்படித்தான் மேலோங்குகிறது... கவிதை: பேருந்தின் சன்னலில் வழியும் மழை நீர் தெளித்து விளையாடுகிறாள் பார்வையற்ற யுவதி.... நிறுத்தமில்லா இடத்தில் வயோதிகனுக்காக திட்டியபடியே நிற்கிறது பேருந்து உடனே ஒரு புகைப்பானை பற்ற வைத்துக்கொள்கிறார் ஓட்டுநர்..... சாலையோரத்தில் புணர்ந்து கொண்டிருந்த நாய்களைக் கடக்கிறது பேருந்தின் கடைசி இருக்கை. அந்த கடைசி இருக்கையில் வீறிட்டு அழுகிற செவத்தகுழந்தைக்கு சம்பந்தமேயில்லாத கருத்த தாய் ஜெலுஸில் மாத்திரையை இரண்டாய் உடைத்து ஒரு பகுதியை குழந்தைக்கு ஊட்டுகிறாள்... மீதத்தை அவளுக்கும் உங்களுக்கும் எனக்கும் தருகிறாள்... ஜீரணமாவதற்குள் வந்து விடுகிறது அவரவர்க்கான நிறுத்தம். +++ சிக்னலில் கையேந்தி நிற்கும் குழந்தையொன்று சிகப்பு விளக்கையும் ரோஜா மலராகவே மாற்றிவிடுகிறாள்! கவிஞனின் இதயம் அவளிடம் பாசத்தில் வளைந்து போகிறது! நாளையும் அந்த சிக்னலுக்காக காத்திருக்கும் பூங்கொத்துதான் இந்தக் கவிதை! கவிதை: நேற்றைய நெடுஞ்சாலை சிக்னலில் கையேந்திய குழந்தையிடம் பூஜ்ய ஸ்தானத்தில் நின்று மெல்லிய சிரிப்பை கையில் திணித்த போது♪ குழந்தை பதிலுக்கு என்னை அதன் புன்னகையால் ஆசீர்வதித்த நொடியை♪ இன்னும் என் நேரக்காட்டியில் நிறுத்தி வைத்திருக்கிறேன்♪ நாளைய சிக்னலையும் சிக்னலுக்கான சிவப்பையும் சிவப்பிற்கான குழந்தையையும்.. குழந்தைக்கான சிரிப்பையும்.. இன்றே சேமித்துக்கொண்டிருக்கிறேன்♪ கடவுளுக்கு வேண்டுதல் நிறைவேற்ற காத்திருக்கும் பக்தனைப்போல.. கடவுளின் தரிசனங்களும் புன்னகையும் சில நேரம் சிவப்பு விளக்காலும் தீர்மானிக்கப்படுகிறது. +++ எல்லையில் பயணிக்கும் இராணுவ வீரனுக்கு, அவன் துப்பாக்கிதான் பேச்சு துணை! அதுவே அவன் உணர்வுகளின் வடிவமும் கூட! வலியை மறக்கும் அழகான கவிதை! கவிதை: கரையொதுங்கும் நுரைகளின் இசையை... பழுத்த இலையின் மேல் நகரும் காற்றின் ஸ்பரிசத்தை..... மொட்டு விரியா பூவின் மென்மையை.. நிற்கும் குளத்தின் மௌனத்தை... யாருமில்லா இரவின் ஆரவாரத்தை... நீர் பனிக்கட்டியாகும் குளுமையை... நதியோடும் தடத்தில் மின்னும் கூழாங்கற்களின் வழுவழுப்பை... மழை நீர் சொட்டும் செம்பருத்தியின் ருசியை.... தூக்கத்தில் சிரிக்கும் குழந்தையின் சிரிப்பை... மலையில் பட்டு எதிரொலிக்கும் மலையின்மௌனத்தை... அவள் தரும் என் உயிர் தாங்கிய முத்தத்தை...என அனைத்தையும் உணர்ந்து கொண்டேயிருக்கின்றேன் எல்லையில் என்னுடன் பயணிக்கும் என் துப்பாக்கியிடம். +++ கவிஞரின் சின்ன சின்னக் கவிதைகள் கூட ஆழம் நிறைந்ததாகவே இருக்கின்றன! முதியவனிடம் சொல்லும் வாழ்த்தில் கிடைக்கும் உணர்வு, பறவை பறத்தலை நிறுத்திய பின்பும் நினைவில் தொடரும் பறத்தல், வனத்தை கடைசியாக அசைத்து செல்லும் காற்று இப்படியென எண்ணற்ற சிந்தனைகளில் தன் தனித்துவத்தை நிலை நிறுத்துகிறார் கவிஞர்! இதோ கவிதைகள்: யாசகம் கேட்கும் குழந்தை.... இன்று பேருந்து ஜன்னலோர சாபமெனக்கு *** கூழாங்கற்களின் வடிவத்தையெல்லாம் ஓடும் நதி நீர்தான்தான் தீர்மானிக்கின்றன *** யானை பாதக்குழியில் தேங்கிய நீர் யாருக்கான நீர்த்தேக்கத்தொட்டி *** தினமும் கடந்து செல்லும் வழியில் தனிமையில் இருந்த அந்தச்செடியிடம் ஓரிரு வார்த்தை அவசரமாக பேசி விட்டுச்சென்றேன் மாலையில் திரும்பி வரும்போது எனக்காக அந்தச்செடியே பூத்திருந்தது. ஏதேனும் ஒரு பெயருக்குள்ளும் ஏதேனும் சில வண்ணங்களுக்குள்ளும் சிறைபடாமல். *** வாழ்வை தன் போக்கில் சுகித்து முடித்து படுக்கையில் கிடப்பவனின் கண்களைப் பார்த்து "வாழ்த்துகள் " என்றபோது கைகளை இறுகப்பற்றிக்கொண்டான். மொத்த உடலையும் ஆரத்தழுவியதுபோல் என் முதுகு பின் வாங்கியது. *** நிறுத்தமில்லா பறத்தலில் கடல் கடந்த பறவை பறப்பதை நிறுத்திய பின்னும் பறப்பது போல் நினைத்துக்கொள்ளுமாம்.... அது போல் கடக்கிறது.... நீ நீங்கிய ஒவ்வொரு பகலும். நான் கடல் நீ பறவை. *** அணைத்தவுடன் விளக்கினுள் ஔிந்து கொள்ளும் வெளிச்சத்தைப்போல் என்னில் ஔிந்து கொள்கிறாய்.... நான் ஔிர்கிறேன். *** சாலையில் கிடந்த கல்லில் காலை மோதி விட்டு "கல்லு மோதிருச்சு" என்று கல்லுக்கு உயிர் கொடுத்துச்செல்லும் பாமரனிடம் வரம் கேட்டுத்தான் நிற்கிறார் கல்லுக்குள் இருக்கும் கடவுள்... *** திருவிழா முடிந்து தனித்த தேர் போல நிற்கும் அவ்வனத்தின் நிழலை கடைசியாக அசைத்து விட்டுச்செல்கிறது காற்று...... விடைபெற்றுச்செல்லும் நிழல்களும் மாரிலடித்தழுவது போல் வேரிலடித்துக்கொண்டழும் ஒப்பாரிகளும் நிலத்தின் படிமங்களாகும் பொழுதில் இருட்டத் தொடங்கி விடும் நிரந்தரமாக.... அது வரை அடர்வனத்தை வெட்டி வாகனத்தில் அடைத்து செல்லும் போதும் மரங்கள் தந்த பாவமன்னிப்பு மட்டும் அலைந்து கொண்டேயிருக்கிறது மரமாக மழையாக மா வனமாக. *** முன்பொரு பெரு மழைக்கால பின்னிரவில் கோவில் வேப்ப மரத்தடியில் நின்றிருந்த அந்த உருவம் மெல்ல நகர்ந்து இருளில் மறைய.... சாமி தானென முடிவாகி ஊருக்குள் இன்னும் நடமாடிக்கொண்டிருக்கிறது.. அன்று மழைநீரில் கொதித்த உலையிலிருந்து கிளம்பிய மண் வாசனைக்கு கிறங்கித்தான் கிடந்தது வயிறு.. கோவில் வேப்ப மரத்தடியே கிடந்த தொரட்டியை வைத்து அம்மா மூட்டிய அடுப்பு கொஞ்சம் வைராக்கியமாகத்தான் எரிந்தது.. தண்ணீர் நிறத்திலொரு நாளை பெய்து விட்டுப்போயிருந்தது மழை.. *** ஆற்று மணலில் தூங்கிக்கொண்டிருந்த என்னை ஆற்றுக்குள் தூக்கி வீசிச்சென்ற கனவுக்குள் கண் விழித்தேன். கால்களை கடித்துக் கொண்டிருந்த மீன்களைப்பிடித்து செதில்களை பிய்த்தெரியத் தொடங்கிய எனக்கு மீன் வாசனையில் ஒரு வாசனைத்திரவக்குடுவையைக் கையில் திணித்து விட்டு ஓடி மறைந்தன மீன்கள்.. காலையில் கண் விழித்து பார்த்தபோது சொறி சொறியாய் இருந்த கால்களைச்சுற்றிலும் செதில் செதிலாக பிய்க்கப்பட்டு ரத்தம் வடிந்திருந்தது. தலைக்கு மேலே பறந்து கொண்டிருந்த மீன் கொத்தி வேறு திசை நோக்கி பறக்கத்தொடங்கியது.... *** பயணத்தின் இடையே பயணத்திற்காக குறுக்கிடுகிறது ஒரு யுவதியின் கைகள்.... வேகமாக கடந்து செல்லும் ஏதேனும் ஒரு வாகனத்தில் இருக்கிறது அந்தக்கைகளுக்கான பயணம்.... பயணங்களின் முடிவுகள் ரகசியமானவை... கொதி நீரின் உச்ச வெப்பத்தில் மேலெழும்பும் குமிழ்களின் இசையைப்போல அல்லது குமிழ்களின் கதறலைப்போல ஏதேனுமொன்றில் மறைந்திருக்கும். இந்தப்பயணத்தின் முடிவில் யுவதியின் வீடு கடந்து சென்றவர்களின் உருவமற்ற பாதங்களால் நிறைகிறது . அங்கே தவறவிட்ட பேருந்தில் காத்திருக்கிறது யுவதிக்கான பயணம். *** மேகங்களின் பெயரெல்லாம் தண்ணீரில் தான் எழுதப்படுகின்றன... ***
இலக்கியச்சுடர் விருது - வாருங்கள் வாழ்த்துவோம்
==============================
படைப்பாளி கவிஜி அவர்கள் இதுவரை இந்த குழுமத்தில் எழுதிய படைப்புகளை ஆய்வு செய்து அவரின் இலக்கியத் திறனை போற்றும் வகையில் அவர்களுக்கு இலக்கியச்சுடர் எனும் உயரிய விருதை அளித்து படைப்பு குழுமம் பெருமை கொள்கிறது.
அவர் இன்னும் பல விருதுகளும் பாராட்டுகளும் இலக்கிய உலகத்தில் பெறவும் மேலும் பல படைப்புகளை இந்த சமூகத்திற்கு தந்து தமிழ் வளர்க்கவும் வாழ்த்துகிறது படைப்பு குழுமம்...
இப்படி விருது பெறுவோர் அனைவரும் நாம் ஒவ்வொரு ஆண்டும் சந்திக்கும் விழாவில் மேடையில் வைத்து சிறப்பிக்கப் படுவதுடன் ஒரு ஆளுமைமிக்க படைப்பாளியின் கையிலிருந்து விருதும் நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...
இனி இந்த விருதை வாங்கப் போகும் எழுத்தாளர் யார் யார் என்பதை உங்களின் படைப்புகளே தீர்மானிக்கும்..ஆகவே இந்த குழுவில் பதியப்படும் படைப்புகள் யாவும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப் படுகிறது. அதை ஒரு குழு தனியாக இருந்து அலசி ஆராய்ந்து தேர்வு செய்கிறது என்பதை எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
நல்ல படைப்புகளை படைப்போம்...
நம் சமூகத்தை நாமே தமிழால் இணைப்போம்...
வாழ்த்துக்கள் இலக்கியச்சுடர் கவிஜி.
ஒரு மகிழ்ச்சியான செய்தி....
இனி இந்த இலக்கியச்சுடர் விருது பெரும் படைப்பாளிகளை பற்றிய குறிப்பும் நாம் ஆய்வு செய்த முறையையும் இணைத்து இதனுடன் ஒரு கட்டுரை வடிவில் இணைக்கப்படும்.
இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாகவும் மற்ற படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கும். ஒரு படைப்பாளி தனக்கான ஒரு அங்கீகாரம் பெறுவதற்கு எவ்வளவு தூரம் எப்படி எல்லாம் கடந்து வருகிறார் என்பதை மற்றவர்களும் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.
இலக்கியச்சுடர் கவிஜி – ஒரு அறிமுகம்
******************************
பெயர்: கவிஜி.
வசிப்பிடம்: கோவை
பணி: ஒரு தனியார் கம்பெனியில் மனிதவள மேலதிகாரி
படித்தது: B.com. MBA (finance), PGDip in ADvertising.
படித்துக் கொண்டிருப்பது:
பாரதி, அவன் தாசன், தாஸ்தாவெஸ்கி, காப்ரியேல், மார்க்ஸ், நகுலன், பிரமிள், கோணங்கி, புவியரசு, டால்ஸ்டாய், சார்த்தர், நீட்சே, சே, ஜி. நாகராஜன், தஞ்சை பிரகாஷ், காப்கா, தி ஜா. எம் வி வெங்கட்ராமன், ஓஷோ...என்று அது தொடரும்.
இலக்கு/முயற்சி/கனவு: திரைப்பட இயக்குனர்.
இயல்பு:
இலக்கல்ல வாழ்க்கை. இலக்கை நோக்கிய பயணமே வாழ்க்கை என்ற புத்தனின் தத்துவத்தில் சற்றே சித்தார்த்தனாகி சிதறுவது இயல்பின் திரிபு
எழுதத் தொடங்கியது: மூன்றாம் வகுப்பில் இருந்து.
பெருமிதம்:
தான் ஒரு எழுத்தாளனாக இருப்பதில் பெருமிதமாகவும், அதுவே கடமையாகவும் கருதுகிறார்.
அவரது படைப்புகள்:
4000 கவிதைகளுக்கு மேல்.
150 சிறுகதைகளுக்கு மேல்.
120 ஒரு பக்க கதைகளுக்கு மேல்.
300 கட்டுரைகளுக்கு மேல். (சினிமா கட்டுரைகள் உள்பட)
10 குறுநாவல்கள்.
400 குறுங்கதைகளுக்கு மேல்.
2 நாவல். (3 வது நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார்)
2 ஸ்க்ரிப்ட் (சினிமாவுக்கானது)
12 குறும்படங்கள் (எழுதி நடித்து இயக்கியது)
கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் வெளி வந்த இதழ்கள் மற்றும் இணைய தளங்கள்:
தாமரை, கணையாழி, ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், அச்சாரம், அத்திப்பூ, மாலைமதி, இனிய உதயம், காமதேனு, கொலுசு மின்னிதழ், கீற்று இணைய தளம், எழுத்து இணைய தளம், படைப்பு 'தகவு' திங்களிதழ், படைப்பு கல்வெட்டு மின்னிதழ், வல்லமை மின்னிதழ், குறிஞ்சி மின்னிதழ் இன்னும் பல.
நூல்கள் ஆன அவரது படைப்புகள்:
"நிழல் தேசத்துக்காரனின் சித்திரப் பறவைகள்" - முதல் கவிதை நூல் 2016 ம் ஆண்டு "புதுவை ஒரு துளி கவிதை( அகன் ஐயா )" அமைப்பு மூலமாக வெளியானது.
"ஊதா நிறக் கொண்டை ஊசி கதைகள்" - முதல் சிறுகதை தொகுப்பு 2017 ம் ஆண்டு "சென்னை பூவரசி" வெளியீடாக வெளியானது. படைப்பு குழுமத்தின் 2018 க்கான சிறந்த சிறுகதை தொகுப்புக்கான விருது பெற்றது.
"பச்சை மஞ்சள் சிவப்பு" - முதல் நாவல் 2018 ம் ஆண்டு "கோவை சப்னா" வெளியீடாக வெளியானது. படைப்பு குழுமத்தின் 2019 க்கான சிறந்த நாவல் விருது பெற்றது. 2019 ம் ஆண்டுக்கான திருப்பூர் இலக்கிய விருதும் பெற்றிருக்கிறது.
"எறும்பு முட்டுது யானை சாயுது" குறுங்கவிதை நூல் "படைப்பு" வெளியீடாக 2019 ம் ஆண்டு வெளியானது.
படைப்பு குழுமத்தில் பங்களிப்பு:
கவிதைகள்......கட்டுரைகள்....சி
இலக்கியச்சுடர் கவிஜி அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
******************************
இயற்கையை அதன் போக்கில் கண்டு ரசித்துவிட்டு கடந்து போகாமல், அதனுள் நுழைந்து பல கேள்விகளை முன் வைக்கிறார். வாழ்க்கையின் சோகங்களுக்குள் அடிக்கடி நுழைந்து அதனுள்ளும் ராகங்களாக்கிப் போகிறார். இந்த பண்பே, அவர் பின் நாட்களில் ஒரு மிகச் சிறந்த படைப்பாளியாக விளங்கவும், தனிமையை நேசிக்கவும் அவருக்கு கற்று கொடுத்திருக்கிறது எனலாம்.
இப்போதும்கூட, அவரிடம் யார் கேட்டாலும் "எழுதுவதால் வாழ்கிறேன்...எழுதுவதற்கே வாழ்கிறேன்" என்று எழுதுவதைத்தான் தவமாகக் கருதுவதாக சொல்கிறார். அழகான வடிவங்களில் இவரது படைப்புகள் மிளிர்கின்றன. இவரது எழுத்தின் நடை யாரையும் பின் தொடர்ந்து செல்வதில்லை என்பதும், இவருக்கு மட்டுமே உரித்தான ஞான பயிற்சியாகும். இவரது படைப்புகளில், சிலவற்றை நாம் வாசிக்கும் போது, ஒரு வகையான பிரம்மைக்குள் நம்மை அறியாமலேயே, நாம் சென்றுவிடுவது நிச்சயம்.
**சிறுகதையில்... குறுநாவலில்.... ஒரு பக்க கதையில்...கிளைமாக்ஸை பெரும்பாலும் 90% கணிக்க முடியாதபடி பார்த்துக் கொள்கிறார்.
**ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விஷயம் தொடப்படுகிறது.
**எல்லா கதையிலும்... சமூகத்துக்கான ஒரு செய்தி உள்ளிருக்கும்.
**பொழுது போக்குக்கான எழுத்து இல்லை.
**தற்கால சிறுகதையின் வடிவத்தை....போக்கை மாற்றியமைக்கும் வடிவம் இவருடையது.
**சிறுகதைக்குள் ஒரு திரைக்கதை இருக்கும். நம்மால் காட்சியாக மனதுக்குள் பார்த்து விட முடியும்.
**காலத்தை கலைத்து போட்டு விளையாடுவது இவர் கதைகளில் மிக சாதாரணமாக நடக்கும்.
**வரலாற்று கதாபாத்திரங்களை நவீனப்படுத்தும் போக்கு மிக இயல்பாக இருக்கும்.
**தத்துவார்த்த ரீதியிலும் மனோதத்துவ பார்வையிலும் இவரின் கதாபாத்திரங்களின் அமைப்பு இருக்கும்.
**பல கதைகள் மாஜிக்கல் ரியலிசம் வகையறாக்கள்.
**கற்பனைகளின் உச்சத்தையும்... எதார்த்தத்தை அடித்தளத்தையும் சரி விகிதத்தில் கலந்து கட்டமைக்கப்பட்டவை.
**காதலில் முற்போக்குத்தனங்கள்... நிறைய இருக்கும்.
**கட்டுரைகள் அந்தந்த காலகட்டத்தை பிரதிபலிக்கும்.
**சமூக அவலங்களை தாங்கொணா சமயத்தில் அவைகள் கட்டுரைகளாகி விடும்.
**சமூகம் சார்ந்த சிந்தனையின் கூட்டாக கட்டுரைகள் இருக்கும்.
**எதிர் வினைகள் பெரும்பாலும் கட்டுரைகளில் கொதிநிலையில்தான் இருக்கும்.
**பார்த்த பாதித்த சமூகம் சார்ந்த சினிமாக்களை கட்டுரையாக்கி விடுவார்.
**காதல் சார்ந்த உன்னதமான சினிமாக்களை கட்டுரையாக்குவதில் அலாதி பிரியம்.
**தஸ்தாவெஸ்கி.... காஃப்கா... டால்ஸ்டாய்... காப்ரியல் போன்ற உலக இலக்கியவாதிகளின் படைப்புகளோடு பயணிப்பவர்.
**பச்சை மஞ்சள் சிவப்பு நாவல்...
இந்த நாவல் 2018 ஆம் ஆண்டுக்கான படைப்பு குழுமத்தின் இலக்கிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர்... ஒரு கன்னியாஸ்திரி.. ஒரு திருநங்கை...என்று மூன்று வெவ்வேறு மனிதர்களின் கதை. மூன்று பாதைகளும் ஒற்றைப்புள்ளியில் சந்திக்கும் கோணல் மாணலான அனுபவங்களின் வழியே கிடைக்கும் ஞான தரிசனத்தின் சிதறல்கள். தூரத்து புள்ளியில் எப்போதும் ஒரு வகை பேராசை கனன்று கொண்டே இருக்கும். அது இங்கும் இருக்கிறது. பறவையாய் இருப்பது ஜஸ்ட் எ க்யூரியாசிட்டி. பறவைக்கு அது தெரியுமா தெரியாதா என்பது நமக்குத் தெரியாது என்பதோடு சிறகு விரிக்கிறது இந்தக் கதை.
வழி நெடுக வானத்தை விட்டுக் கொண்டே செல்கிறது இந்தக் கதையின் சம்பவங்கள்.
படித்தோர் யாரும் தங்கள் துண்டு வானத்தை பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.
**இவரின் "2050" குறும்படம் இன்றைய நீரின் தேவை பற்றி..
போதிய நீர் தேவை பூர்த்தியாகாத போது மனிதனின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று ரத்தம் உறைய வைக்கும் நிஜங்களை போட்டு உடைத்த 10 நிமிட சினிமா.
இப்படியாக புதுபுது முயற்சிகளில் இன்னும் தொடர்ந்து பயணிக்க வேண்டும் படைப்பாளி கவிஜி அவர்களின் படைப்பின் பயணம்.
இவரது இந்த இலக்கிய பயணம் மேலும் தொடரவும்.. சிறப்பான படைப்புகளை தொடர்ந்து தமிழுக்கு அளிக்கவும்... படைப்பு குழுமம் அவரை மனதார வாழ்த்துகிறது. மேலும் இலக்கியச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.
இத்தகைய ஆக்கப்பூரவமான ஒரு படைப்பாளி பெறும் படைப்பின் சுடர் விருதுகள் இங்கு எழுதும் அனைவரின் கரங்களையும் தழுவ வேண்டும் என்பதே படைப்பு குழுமத்தின் அவா. அதற்கேற்ப படைப்பாளிகள் தங்கள் சிந்தனை வளத்தையும் உருவாக்கல் திறனையும் மேம்படுத்திக் கொண்டு சமூகத்திற்கான படைப்புகளைப் படைத்து மனிதம் செழிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டு அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறது படைப்பு குழுமம்.
வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.
#சுடர்_விருது
வெயில் தின்னும் கூழாங்கற்கள் பேசிக்கொண்டு இருக்கின்றன நதியொன்றின் மரணத்தை ! கோயம்பத்தூரை வாழ்விடமாகக் கொண்ட கவிஞர் ஜெயாபுதீன் அவர்கள்தான் இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருதினைப் பெறும் சிறப்பிற்குரிய கவிஞராவார்... 90 களில் கவிதைகளை எழுதத்தொடங்கியக் கவிஞர் வாழ்வியலின் சூழல்களால் இடை நிறுத்திய போதும் அவரது, கவிதைகளின் மீதான தனியாத ஆர்வம் முக நூலுக்குள் நுழைந்தப் பிறகு வீரியம் அடைந்தது எனச் சொல்லலாம். உயர்கல்வி,அரசுவேலை போன்ற தற்காப்பு ஆயுதங்கள் ஏதுமற்ற கடின வாழ்வியலில் பயணம் செய்த இவரின் தந்தையார் ஒரு மில் தொழிலாளி என்பது குறிப்பிடத் தக்கது. நம்மோடு வாழ்ந்து மறைந்த எளிய மனிதர்களின் வாழ்வியலின் கூறுகளைப் பதிவு செய்வதில் பேரார்வம் கொண்டவராகவே இவரது கவிதைகளை வாசிக்கும் போது அறிய முடிகிறது. "இவரின் கவிதைகள், எளிய மனிதர்களின் பொழுதுவிடிவதற்கு கூவுகின்றன. இவை 'சுருக்'கெனக் குத்துபவை" என்று கவிஞர் கரிகாலன் அவர்களால் அடையாளப்படுத்தப் பட்டவை. இவரது முதல் தொகுப்பான 'பிள்ளைத்தானியம்' கவிதைத்தொகுப்பு கும்பகோணம் தாழ்வாரம் நவீன இலக்கியக் களத்தின் கவிஞர் கண்ணகன் நினைவு இலக்கிய விருதினை பெற்றிருக்கிறது... இவரது கவிதைகள் ஆனந்த விகடன், நிறை மாத இதழ்,மலைகள் இணையஇதழ், கோடுகள்மின்னிதழ் படைப்பு-கல்வெட்டு மின்னிதழ் மற்றும் படைப்புக்குழுமக் கூட்டுத்தொகுப்புகளில் வெளியாகியுள்ளன.நம் படைப்புக் குழுமத்தின்சிறந்த மாதாந்திரப் படைப்பாளி, ஹைநூன்பீவி நினைவு கவிதைப் போட்டியிலும்('பாதங்களால் நிறையும் வீடு') சிறப்புப் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது! எவ்வித இலக்கியப் பின்னணியும் இல்லாத,முறைமைக் கல்விகிட்டாத எளிய குடும்பத்தின் முதல் தலைமுறைப் படைப்பாளிதான் நம் கவிஞர்! "தமிழாசிரியர் 'சின்னப் புலவர்' ஐயா பா.இராமச் சந்திரன் அவர்களின் ஆசீர்வாதம் என் தமிழ்" என்று சொல்வதில் பெருமிதம் கொள்ளும் கவிஞர் ஜெயாபுதீன் அவர்களுக்கு நமது படைப்பு குழுமம் 'கவிச்சுடர்' விருது அளித்து பெருமைப் படுத்துகிறது! இவரது கவிதைகள் கடினத்தன்மைகள், மொழி விளையாட்டு இவைகளில் இருந்தெல்லாம் விலகி எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்படுவையாகும். அதனால் சாதாரண மக்களையும் எளிதில் சென்று அடைந்துவிடுகிறது! கவிஞரின் 'பிரதிகல்' என்ற கவிதை தாத்தா, பேரப்பிள்ளைகள் பாசத்தை நெகிழ்வுடன் விவரிக்கிறது.. ஒட்டு மொத்த கவிதைக்கும் உதாரணமாக இந்தக் கவிதையில் இரண்டு வரிகள் சிறப்பு செய்கின்றன! "தாத்தாக்களின் வயதுகளை (பேரர்கள்) பால்பற்களால் தின்றுவிடுகிறார்கள்." பிரதிகள் ********** விடுமுறையில் ஊருக்குவரும் பேரக்குழந்தைகள் தாத்தாக்களை இறந்த காலத்திற்குள் தூக்கிப்போய் விடுகிறார்கள் முதிர்ந்த விரல்களை பால்வாசனையடிக்கும் பால்யத்தின் விரல்களால் தொடுகிறார்கள். தாத்தாக்களின் பால்யத்தின் நடையை நடந்து காட்டுகிறார்கள். வெளுத்த மயிரடர்ந்த கிழம் தாடைகளை இளஞ்சிவப்பு உதடுகளால் ஆசீர்வதிக்கிறார்கள். நரைமீசையை முறுக்கி விளையாடுகிறார்கள். தமக்கு மீசை வளரவில்லையெனச் சலித்துக் கொள்கிறார்கள்.. தாத்தாக்களின் பெரிய சப்பாததுகளில் கால்களை நுழைத்து காலத்தை இழுத்துக்கொண்டு நடக்கிறார்கள்.. நடை வண்டியை மறுதலித்து காய்ப்பேறிய விரல்களைப் பிடிததுக்கொள்கிறார்கள். யானையாகமாற்றி முட்டிக் கால் வலிக்கும் வரை சவாரி செய்கிறார்கள். தாத்தாக்களின் வயதுகளை பால்பற்களால் தின்றுவிடுகிறார்கள். முடிவெட்டும்போது பக்ககத்திலேயே நிற்கச்சொல்லி அழுகிறார்கள்.. தாத்தாக்களின் நிறம் மங்கிய வெள்ளைச்சட்டைக்குள் ஈஷிக் கொள்கிறார்கள். இரவுகளில் கதைசொல்லப் பணித்து நச்சரிக்கிறார்கள். பழைய சைக்கிளில் முன்புறக் குட்டி சீட்டுகளில் பயணிக்கிறார்கள்.. ஊருக்குத் திரும்பும் நாட்கள் நெருங்க நெருங்க முகம் சோர்ந்து விடுகிறார்கள்.. நா போமாட்டேன் தாத்தா என்று கதறுகிறார்கள். கடைசியாய் பாக்கெட்டில் தாத்தா திணித்த ரூபாய்த்தாள்களுடன் தாத்தாக்களைக் கண்கலங்க வைத்தபடி நிறைந்த விழிகளுடன் கேவிக்கேவி அழுகிறார்கள். அடுத்த வருடம் வரையிலும் வாழ்வதற்கான ஆவலையும் நம்பிக்கையையும் தாத்தாக்களுக்குக் கொடுத்துவிட்டு ரயிலேறி விடுகிறார்கள் ***** கதை சொல்லி என்றொருக் கவிதை! கதை சொல்பவருக்கும் அதை உள்வாங்கி அமர்ந்திருக்கும் கதைக் கேட்பவர்களுக்கான நீட்சியைச் சில வரிகளால் அழகாக்கிவிடுகிறார் கவிஞர்! நீங்களும் இந்தக் கதையை கேளுங்கள்... 'கதை சொல்லி' அந்தக் கதை சொல்லியின் நா அசையத் தொடங்குகிறது. காத்திருப்பவர்களின் காதுமடல்கள் விறைக்கின்றன கண்ணிமைகள் மெல்ல மெல்ல உறைகின்றன. கதைசொல்லியின் வார்த்தைகள் உருவங்களாய் உலவுகின்றன. கதை மாந்தர்களின் வலி கண்ணீர் வருவிக்கிறது புன்னகை உவகையளிக்கிறது வெற்றி பெருமிதந்தருகிறது. கதை ஒரு புகைபோல மனசுக்குள் நுழைகிறது. நம் தலைமயிர் பற்றிக் கதைக்குள் இழுத்துப் போகிறான் கதைசொல்லி. லாகிரிக்கு ஆட்பட்ட கதை கேட்போன் ஒரு ஆட்டுக்குட்டியின் பாவனையில் பின் தொடர்கிறான். சொற்கள் மனிதனாகின்றன அரண்மனையாகின்றது. சொற்கள் பட்சிகளாகின்றன. இசைக்கின்றன. அகிற்புகைமீட்டுகின்றன. கண்ணீர்த் துளிகளாய் உருள்கின்றன எளியவர்க்கு இரங்குகின்றன. வார்த்தைகளுக்குள் ஒரு வாழ்பனுபவத்தைக்கொடுத்த கதைசொல்லி இடதுகைநீட்டி அந்த நெகிழிக்குப்பியிலிருக்கும் தண்ணீரை நீண்ட மிடறுகளாகப் பருகுகிறான். கதைக்குள்ளிருந்து தற்காலிகமாய் வெளிவந்து விழுந்த மனிதர்கள் கசகசவெனப் பேசிக்கொள்ளத் தொடங்குகிறார்கள். ***** வாழ்வியலின் தனிமை என்பது மனிதர்களுக்கு மட்டுமில்லை ரயிலடி நாய்களுக்கும் கூட உண்டு என்று பிரமாதப் படுத்தியிருக்கிறார் 'ரயிலடி நாய்கள்' என்றக் கவிதையில்! இந்தக் கவிதையை வாசிக்கும் போது அந்த நாயின் பதட்டங்கள் நம்முள் நுழைந்து கொள்வது நிச்சயம்! 'ரயிலடி நாய்கள்' ரயில் நிலையத்தின் அரவம் குறைந்த பிளாட்பாரமொன்றில் சந்தித்த தனித்த நாயொன்றின் கண்கள் சோர்ந்தலைகின்றன. கொஞ்சம் பதட்டமாயிருந்த முகம் கடந்து போகிற பயண அவசரங்களில் துழாவித் திரிகிறது தனக்கான பேரன்பை சற்றே பின்னகர்ந்து மூன்றடி கீழிருக்கும் தண்டவாளத்தினின்றும் பிளாட்பாரத்தின் மேலே தாவியேறிய மறுகணம் அதே தண்டவாளத்தில் கடந்துபோகிறது ரயில். ஒற்றை நாளிலேயே நாலைந்து தடவைகள் மரணத்தை வென்றுவிடுகின்றன ரயிலடி நாய்கள். தலைதடவ ஆளற்ற ரயிலடி நாய்கள் கூட்டத்திலும் தனித்திருக்கின்றன. அநாதையாய் உணர்தலென்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல. அன்பற்ற பாலையில் பொழிகிற மழையாய் நின்றிருக்கும் போகியிலிருந்து பிஞ்சு விரல்களால் விசிறப்படுகிற பிஸ்கெட்டுகள்தான் ரயிலடி நாய்களின் இருப்பில் அவ்வப்போது ஒளியேற்றிப் போகின்றன ****** காண்கின்ற காட்சிகள் கவிதையாகும் போது அதில் உயிரோட்டம் வந்து ஒட்டிக் கொள்கிறது! இந்தக் கவிதையும் அப்படித்தான். பாயம்மா முடக்கு வாதத்தில் முடங்கினாலும் சாவு மட்டும் வந்து எட்டியே பார்க்க மாட்டேன் என்கிறது! வசவு வாங்கி கிடைப்பிணமாக இருப்பதைவிட போய் சேர்ந்துவிட அவள் எடுக்கின்ற முயற்சிகள் தோல்வியடைவது நகைப்பாக இருந்தாலும் வாழ்வியலின் வலிதான் அது! 'பாயம்மா' பாயம்மாவுக்கு ஆயுசு கெட்டி. பக்கவாதத்தில் விழுந்து ஆறாண்டுகள் கழிந்தபின் மருமகள் கையில் இடிசோறு தின்னுங் காலத்திலொரு வாய்ச்சண்டை. மருமகளின் வசவு மானத்தைத் தீண்டிவிட முடிவெடுத்துவிட்டது அந்த மூதுயிர். தெருப்பக்க சன்னல்வழி கைநுழைத்து அழைத்த தெருவோரப் பிள்ளைகளிடத்து நாலணாவுக்கு முட்டாயி வாங்கிக்கோ. ஒரு பேக்கட் மூட்டைப்பூச்சி மருந்தும்... நாக்குழறச்சொல்லி எட்டணா கொடுத்தாள். அரைச்சொம்புத் தண்ணீல மருந்தக் கலக்கிஅப்படியே குடிச்சிட்டு ஒளிச்சு வச்சிட்டா சொம்பை சாவுக்குத்துணிஞ்சாப் போதுமா.? வரவேண்டாமா சாவு.? வந்ததென்னவோ வாந்தியும் பேதியும். சீரியஸாக் கெடந்த மனுஷியை சரஸ்வதில சேத்தாங்க. பன்னென்டுபாட்டில் குளுக்கோசும் நாலுநாளுப் பண்டிதமும். பாக்கவந்த அத்தனை சனமும் இதையேத்தான் சொல்லிச்சு. பாய்வூட்டம்மாக்கு ஆயுசு கெட்டி... நாலஞ்சு வருஷத்துக்குப் பொறவு அதேமருவளோட பேச்சுக்கு கெழவி சிம்னி வெளக்கு நிறைய சீமெண்ணையை குடிச்சுட்டா. அதே கததான் இப்பவும். பாயம்மாக்கு ஆயுசு கெட்டி. நாலஞ்சு கல்யாணம் ஏழெட்டுப் பேரக்குட்டிக ரெண்டு கொள்ளுக்குட்டீக. எல்லாம் பார்த்தாச்சு வருஷம் பதினெட்டாச்சு போறவழியக் காணோம். ஆறுமாசங்கழிச்சுக் கோமால வுளுந்திட்டா எல்லாரும் அழுதாங்க செலபேருக்கு சந்தோஷம். வூட்டுக்கு எடுத்துட்டுப்போய் சொந்தக்காரருக்கெல்லாஞ் சொல்லிரட்டுமா.? டாக்டரு சொன்னாரு...பாப்போம்... ஒரு வாரம் பாப்போம்.... கெழவி நாலாம் நாள் கண்ணத் தொறந்து பார்த்துட்டு மெல்லக் கேட்டது.... பசிக்குது..... பாப்பாத்தி ...வறக்காப்பீ... அதையேதான் சொன்னாங்க எல்லாருமெல்லாரும். நன்னிம்மாக்கு ஆயுசு கெட்டி. அப்புறமொருநாள் சக்கராத்தில் கெடக்குறப்ப ஊரே சொன்னது... பாயம்மாக்கு ஒண்ணும் ஆகாது. எல்லாரையும் ஏமாத்தீட்டு போயே போயிட்டா ஒருநாளு... பாயம்மா... (சக்கராத்து-மரணத்திற்கு முந்தைய இறுதி நாட்கள்.) ******** சொந்தமாய் ஒரு வீடு என்பது ஒவ்வொருவருடைய கனவும் கூட! அதற்கான மெனக்கெடல்கள் அவர்களின் ஆயுளையே தின்று விடுகின்றன என்பதுதானே உண்மை.. இந்த வீடும் அப்படித்தான்! 'வீடு' அப்பத்தா நகையெல்லாம் வித்து எழுநூறு ரூவாய்க்கு அஞ்சரை செண்டு நெலம் வாங்கிப்போட்டு அதாச்சு ரெண்டு வருஷம். எம்பது ரூவாய்க்கு பர்மாத்தேக்குல நெலக் கதவு ஒண்ணு நாப்பது ரூவாய்க்கு ரெண்டு சன்னலு பெரியவிட்டம் நாலு இருபதடி கோம்பைச் சட்டம் பனிரெண்டடி பனங்கையி பதினெட்டு பத்தடி கையி பதினெட்டு பாக்குத் தப்பை அஞ்சு கட்டு ஓடக்கல்லு நாலுவண்டி வெந்த சூளைக்கல்லு ஆறுவண்டி ஆத்துமணலு இருவத்தைஞ்சு கழுதை செங்காட்டுமண்ணு நாப்பது கழுதை முன் சுவத்துக்கும் நீளத்திண்ணைக்கும் காரைபூச மூணுமூடை சுண்ணாம்பு இருவதுகழுதை ஆத்து மணலு தரைக்கு பொடிக்கல்லு ரெண்டுவண்டி கேரளா டிசைன் ஓடு நானுத்தம்பது மொகட்டோடு முப்பது புகையோடு ரெண்டு கண்ணாடி ஓடு ரெண்டு ரெண்டிஞ்சு ஆணி ஒண்ணேகால் கிலோ மூணு இஞ்ச் ஆணி ஒருகிலோ. மண்ணள்ள மூங்கிக் கூடை நாலு மம்பட்டி ஒண்ணு கடப்பாறை ஒண்ணு தேய்ப்புக்கரண்டிமூணு மட்டக் கோலு ரெண்டு தண்ணியூத்திவைக்க சிமிண்டுத் தொட்டி ரெண்டு தூக்குக் குண்டு ஒண்ணு மூலை மட்டம் ஒண்ணு கொசவன் அடுப்பு ஒண்ணு எல்லாத்தையும் சேகரிக்க ஆயிப்போச்சு ரெண்டரை வருஷம். பட்டறையைப் பூட்டீட்டு வேலை முடிஞ்சி அந்தியில வருவாரு அப்பா. பத்தவெச்ச பெட்ரோமேக்ஸ் வெளிச்சத்தோட நிலத்து ஓரத்துல தற்காலிக கீத்துக் கொட்டாயில புள்ளேக ஆறுபேரையும் ராச்சோத்தைத் திங்கவெச்சு கோரப்பாயில் வரிசையாப் படுக்கவெச்சிட்டு வீடுகட்டப் போயிருவாங்க அப்பாவும் அப்பத்தாவும். கொத்தனாரு தோத்துப் போவான் கொலுத்து வேலையில எங்கப்பன்கிட்டே.. அம்மாதான் சித்தாளு. கதவு சன்னலு செஞ்சதும் ஓடுமேய்ஞ்சதும் மானான் ஆசாரி மலையாளத்தான் . ஆசாரிக் கூலிக்கு அம்மாவோட அட்டீலு செட்டியாரு கடைக்குப் படிக்கப் போயாச்சு. நாலஞ்சு மாசம் வம்பாடுபட்டு ஒருழியா வூட்டைக்கட்டி முடிச்சு குடிபோறப்போ அப்பனுக்கு வயசு அம்பதைத் தாண்டீருச்சு. ****** கவிதை மொழியின் ஆளுமையோடு யதார்த்த மொழிகளில் பேசுகின்றன கவிஞர் ஜெயாபுதீனின் கவிதைகள்! ஒவ்வொரு கவிதைகளுமே உறவுகளின் வாழ்வியல் நேசத்தை, சோகத்தை அருகிலமர்ந்து பகிர்ந்து கொள்கிறது! மற்றும் சிலக் கவிதைகள் கீழே தொடர்கின்றன படித்து ரசியுங்கள்: ^^^ இறந்த பிறகு கழட்டியெடுத்த எண்ணையிறங்கிய ஏழுகல் பூக்கம்மல் அம்மாவைப்போலவே ஒருக்களித்துப் படுத்துக்கிடக்கிறது சாமி மாடத்தில். ^^^ காகம் வீடற்றவனின் இரவொன்றில் நடைபாதை உறக்கத்தின் கனவுக்குள்ளிருக்கும் கூட்டில் காக்கைகள் உறங்குகின்றன. தீவிரமாய் யோசித்து மெல்ல அசைந்து வந்து படையல் சோறெடுக்கும் பருத்த காகத்திற்கு அப்படியே அப்பாவின் உடல்மொழி. மதில் சுவரின் மீதமர்ந்து மதுச்சாலையினின்றும் வெளிவருகிறவனை உறுத்துப்பார்க்கிற காக்கைக்கு அப்பாவின் கண்கள். மதுச்சாலை எதிர்த் திண்ணையில் சாக்னாக் கறியுடன் மட்டையாகிக் கிடக்கிற மனிதனின் பெருவிரலைக் கொத்தியெழுப்புகிறது காகம் எழுந்திரு நண்பா. நேற்றிரவென் கனவுக்குள் இறங்கிய குட்டி இருளொன்று விடிகிற வரையிலும் கரைந்து கொண்டிருந்துவிட்டு அதிகாலையில் வெளியேறிவிட்டது. படையலுக்குப் பக்கத்தில் நின்றுகாகங்கள் அழைப்பதை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார் அப்பா. மனிதர்களைப்போல் இரக்கமற்றுப் போவதில்லை காகங்கள். மனிதனின் கனவுக்குள் ஒருமுறை இறங்கிவிட்ட காக்கைககள் பின்னெப்போதும் தூங்குவதேயில்லை. ^^^ பாதங்கள் சொந்தமண்ணில் நடக்கின்ற பாதங்கள் கம்பீரமாய்ப் புன்னகைப்பதைப் பார்த்திருக்கிறாயா நண்பா. பார்.. கரிசல் மண் ஒட்டிக் கிடக்கும் பாதங்களுடன் வறண்ட பாளங்களாய் வெடித்த உதடுகளின் நிலம் பேசிக் கொண்டிருப்பதைப் பார். ^ கறுத்து வளைந்து காய்ப்பேறிக் கிடக்கும் நகமுள்ள விரல்களின் தாமிர மிஞ்சிகள் தேயும்வரை தகப்பனுக்கு நீராகாரம் சுமந்துநடந்த வரப்பில்தான் தான் பூத்துமலர்ந்ததாய்ச் சொல்லிச் சொல்லிச் சிவந்திருக்கிறாள் பாங்கெழவி. ^ தீபாவளி முதல்நாளில் சங்குசக்கரம் வெடித்துப் புண்ணாகிப்போன மகனின் பாதத்தை இரவெல்லாம் வருடிக்கொடுத்தபடி விழித்தேகிடந்த தகப்பனின் விரலெல்லாம் ராவணவாசம். ^ கால்கள் பறிபோன யாசகனைப் பார்க்கும்போதெல்லாம் எப்போதோ கோபத்தில் தாயை எட்டிஉதைத்தவனைத் தாக்கிப் போகுதொரு மனநடுக்கம். ^ தொண்ணூற்றாறு கடந்து தோல்சுருங்கி உடல்சிறுத்து மூன்றரை அடியாய் உயரம் குறுகிய உழுகுடிப் பெருங்கிழவியின் பாதங்கள் இரண்டும் வளைந்தமுதுகுள்ள மழைத்தவளைப் பிரதிகள். ^ பாதங்கள் தரைதொடாமல் தூக்கிட்டு மரித்துப்போன மருதநில வேளின் உவரோடிய பாழ்நிலத்தில் மேய்ந்துகிடந்த சோடியெருதுகளின் கொம்புகளும் தலையோடுகளும் நனையும்படிப் பெய்கிறது காலத்தால் உதவாத ஊதாரிப் பெருமழை. ^ தானியம் பொறுக்கவரும் சிட்டுக்குருவிகளின் பாதங்கள் குளிர ஈரம் பொசிகிறது நிலம். ^ முலையூட்டும் தாயின் நுனி விரல்களுடன் கதைக்கின்றன புத்தன்சிசுவின் இளஞ்சிவந்த பாதங்கள் ^ ஈருருளியின் முன்புற இடைவெளியில் பிஞ்சுப் பாதங்களால் நிரம்பாதவனின் வாழ்வு ஆசீர்வாதங்களற்றது. ^ எண்பது வரையிலும் வாழ்ந்து கழிந்த சபிக்கப்பட்ட மனிதனொருவன் இறுதிவரையிலும் செருப்பணிந்து கடந்ததேயில்லை தான் பிறந்தஊரின் இரண்டு தெருக்களை. ^^^ ழ மொழியின் வாசனையடிக்கும் மனிதனொருவனை சந்தித்தேன். தட்டையாய் உலர்ந்து போயிருந்தான். கெட்டி அட்டைபோட்ட புத்தகத்துக்குள்ளிருந்து ஊர்ந்து வந்தவனை கைப்பிடித்து எழுப்பினேன். சொற்கள் முறிகிற சப்தம் கேட்டது. மெல்லப் பிடித்த என்கைகளுக்குள் பழுத்த காகிதங்கள் நொறுங்கின. ஈராயிரமாண்டுப் புராதன மனிதனின் நா அசைந்தது பழைய குரல்நாண் மெல்லதிர வந்த ஒலி "ழ" என்றது. ^^^ இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறையும்போது மெல்ல நீலநிறமாகிக்கொண்டிருக்கும் ரோஜாநிறத்துச் சிசுவின் உள்ளங்கால்களைப் பார்த்ததுண்டா.? உயிர் போவதற்கு முன்பான கணங்களில் குழந்தையின் அசையாமல் நிலைகுத்தி விரிந்துகிடக்கும் விழிகளை எப்போதாவது பார்த்ததுண்டா.? சுவாசிக்கும் திறன் குறையக் குறைய ஆக்ஸிஜன் வேண்டிப் போராடும் நுரையீரலுடன் மீன் போலத் திறந்துமூடும் பொக்கைவாய்க் குழந்தையின் இறுதி நிமிடங்களைக் கண்ணுற்றதுண்டா நீ.? மாஸ்க்கை நீக்கும் போதே மரணத்தைத் தழுவிடுமென்று மருத்துவரால் கைவிடப்பட்ட குழந்தையின் கருவிழிகளைத் தரிசித்ததுண்டா நீ.? அடுத்தடுத்த படுக்கைக் குழந்தைகள் மரித்துப் போகும்போது பிராணவாயுவால் உயிர்த்திருக்கும் தன் குழந்தையை அணைத்தழ முடியாமல் தவித்தழும் தாயின் வேதனையறிவாயா நீ.? உன் வல்லரசுக் கனவெல்லாம் நாசமாய்ப் போகட்டும். உன் பொருளாதாரக் கனவைக் கொண்டுபோய்த் தீயிலிடு. எந்தமாநிலம் என்றால்தான் என்ன.? தேம்பியழுகிறது மனசு. குழந்தைகளே... குழந்தைகளே... குழந்தைகளே... ^^^ அம்மாவும் போயாச்சு அப்பாவும் போய்ச் சேர்ந்தாச்சு அப்பத்தாபோயி வெகுகாலம் ஓடியாச்சு. முப்பது வருஷத்துக்கப்புறம் நிலமதிப்புப் போட்டு வீட்டையும் நிலத்தையும் நாப்பது லட்சத்துக்கு வாங்கின வடக்கத்திக்காரன் காங்கிரீட் வீடுகட்ட பழையவீட்டை இடிக்கும்போது நிச்சயமா அப்பாம்மாவின் அழுகைச்சத்தம் கேட்டிருக்கும் ^^^ தங்கை அண்ணன்களின் உலகத்துக்குள் உலவுகிற தங்கைகளுக்கு ஒருபோதும் வயதாவதேயில்லை. குளிர்காலத்தில் அண்ணன்கள் உடுத்திக் கழித்த முழுக்கைச் சட்டைகளுக்குள் பதுங்கிக் கொள்கிறார்கள். அண்ணனுக்கான சோற்றுத்தட்டில் தன் பங்குக் கறியையும் அள்ளிவைக்கிறார்கள்.. துவைக்கப்போடும் சட்டையிலிருக்கும் கோல்டு பில்டர்களை எடுத்துவைத்துக்கொண்டு அப்பாவிடம் சொல்லிக்கொடுப்பதாய் மிரட்டுகிறார்கள். அண்ணனை சாடைமாடையாய்ப் பார்க்கிற தன் தோழியை அண்ணியென்றழைத்துக் கூச வைக்கிறார்கள். திட்டிக்கொண்டிருக்கும் அம்மாவிடம் அண்ணனுக்காக வக்காலத்துவாங்கி அடிபடுகிறார்கள். கோயிலுக்குப் போய்த் திரும்பிவரும் அண்ணனின் பைக்குள் தனக்கான வளையல்களை பாசிமணிமாலைகளைக் கண்டதும் சிலிர்த்துப் போகிறார்கள்.. சைக்கிள் ரிப்பேர் செய்துகொள்ள சேர்த்துவைத்த சிறுவாட்டுக்காசை அங்கலாய்ப்பின்றிக் கொடுத்துவிடுகிறார்கள்.. கூச்சமாய் மறுக்கிற அண்ணன்களை ஏமாற்றிவிட்டு அவர்களின் டவுசர்களை உள்ளாடைகளை சுத்தமாய்த் துவைத்துக்கொடுக்கிறார்கள். அண்ணனின் டிவிஎஸ் மொபெட்டுகளை நடுங்கியபடியே ஓட்டிப் பழகுகிறார்கள்.. அண்ணனுக்குப் பார்த்துவந்த மணப்பெண்ணின் இடுப்புயரக் கூந்தலைப்பற்றி சிலாகிக்கிறார்கள். அம்மாவின் இறப்புக்கு அழுதழுது ஓய்ந்த தங்கைகள் அண்ணனின் பாசத்தை அம்மாவின்கருப்பையாய் உருவகித்துக்கொள்கிறார்கள்.. பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு கண்கள்கசிய அண்ணனை அணைத்தபடி அழுதுகொண்டே புருஷனுடன் ரயிலேறிப்போன இரவொன்றில்தான் அந்த அண்ணன்- பத்தாண்டுகளுக்குமுன் தாய்இறந்த துக்கம்தாளாமல் அழுதுதீர்க்கிறான். ^^^ பிள்ளைத் தானியம் இடித்துக் கட்டுவதற்குத் தீர்மானித்துவிட்ட தாத்தாவின் சிதிலமடைந்துவிட்ட பூர்வீகவீட்டிலிருந்த பரணிலிருந்த புளிக் கொட்டி உப்புத் தாளி கொத்துக் கரண்டி பாதாள ஜல்லி பழைய நாதாங்கி மீன்வேட்டை வாள் கிஷ்ணாயில் லாந்தரு எடால் ஈட்டி ஒலக்கை பல்லாங்குழி கிணத்துருளை இரும்புப்பொட்டி மாட்டுலாடம் இங்கிலீஷ் ராலேவின் பிரேம் டைனமோ ஹப் மாட்டுக் கழுத்து மணி ஆட்டுச் சலங்கைக் கொத்து கோழிச் சண்டக்கத்தி மலேசிய தேக்கிழைத்த கொழந்தைத் தொட்டில் காரமடைத் தேருக்குச் சுற்றிய நெய்ப்பந்தம் மான்கொம்பு சந்தனக்கட்டை சுருள்கத்தி கர்லாக் கட்டை கோணூசி சாட்டைவாரு குதிரைச்சேணம் ரெட்டை மாட்டுவண்டியின் பழைய நுகத்தடி ஒடஞ்ச கலப்பை ஓட்டை ஈயப்பானை பனங்கை நாலஞ்சு மொகட்டோடு பதினஞ்சு எல்லாம் எடுத்தபின்னே... தென்மேற்குக் குபேரமூலையறையின் குதிருக்குள் கிடந்த புராதன தானியத்தின் ஒற்றை மணி~ பறவைகள் தின்றதுபோக~ எலிகள் தின்றது போக~ பூச்சிகள் தின்றது போக~ மனிதன் தின்றதுபோக~ காலம் தின்றது போக~ எஞ்சிய தானியத்தின் ஒன்றைமணி. தாத்தன் தின்ற தானியத்தின் தகப்பன் தானியம் ~ பூட்டன் விளைவித்த தானியத்தின் பிள்ளைத் தானியம்~ குதிருக்குள் எஞ்சிய ஒருதுளிக் காலம்~ விவசாயம் தொலைத்த எம் உழுகுடியின் கடைசிவிதை~ எம் நிலத்தின் ரத்தத் துளி. ^^^ கேள்வி மனித மூளைகளுக்குள் இறங்கும் மத போதகர்களின மொழி மெஸ்மரிசத்தின் அலைவரிசையிலிருக்கிறது. போதையூறித் திளைக்க அழைக்கிறது. சொர்க்கத்தின் மதுபானங்களைக் கோப்பையிலூற்றித் தருகிறது. தேவதைகளைச் சுகிக்கத் தருகிறது. இந்திரியத்திலேயே நிறம்பிரித்து மறுப்பாளர்களை அடையாளம் காட்டுகிறது. அவனுக்கு அது நேர்ந்தது இவனுக்கு இது நேர்ந்தது என்கிற கதைகளைக் காதுகளுக்குள் இறக்குகிறது. கேள்விகள் கேட்பதைப் பாவத்தின் தலைமையாக்கி விடுகிறது. வானம் இடிந்து விழுவதை பூமியைக் கடல் கொள்வதை இடி மின்னலால் எரிக்கப்படுவதையெல்லாம் காட்சிகளாய்த் திணிக்கின்றன இத்தனைதலைகள் இத்தனை கைகள் இத்தனை ஆயுதங்கள் என்றெல்லாம் பயமுறுத்துகின்றன. தம்மை எதிர்ப்பவரையெல்லாம் வதம் செய்கின்றன கழுவிலேற்றுகின்றன சிலுவை சுமப்பிக்கின்றன. மரணித்தபின்னரும் மனிதர்களின் மீது கருணை கொள்வதில்லை இக் கடவுளர்கள். எண்ணைக் கொப்பரையிலிட்டுப் பொரிக்கின்றன உயிர்ப்பித்து உயிர்ப்பித்துத் தோலுரிக்கின்றன நரக நெருப்பில் பொசுக்குகின்றன. எல்லாம் சரி... எல்லாம் சரி.. எனக்கிருப்பது ஒற்றைக் கேள்வி மட்டும்தான். உங்களின் கடவுள் ஏன் இத்தனை குரூரமாயிருக்கிறார்.? ^^^ கத்தாழையைத் தோல்சீவி மகளோட பால்காம்பு ரெண்டுலயும் பசையாட்டமாத் தடவிவிட்டா அம்மா. ரெண்டு வயசான பொறவும் தாய்ப்பால் கேட்டு அடம்பிடிக்கிற பேரனை பால்குடி மறக்கடிக்கிற பண்டுவம். ^ வாய வச்சதும் அட்டக் கசப்புல ஓங்கலிக்குற பச்சப்புள்ளையை அலறத் தொடங்குற பேரனை வாய் கொள்ளாச் சிரிப்போட அழுகையாத்துறா அம்மா. ^ ஙொப்பனைமாதிரி சுத்துப்பட்டியில எந்தப்புள்ளையும் வளந்திருக்காது... தொடங்கீட்டா அப்பத்தா. ஏழுவயசுல தாய்ப்பாலு கொடுக்கலைன்னு என்னைக் கடிச்சு ரெத்தம் பாத்தவன் ஒங்கப்பன் , பள்ளிக்கூடம் போயிட்டு வந்ததும் தம்பி தங்கச்சிகளுக்கு ஒருசொட்டில்லாம உறிஞ்சீட்டுப் போயிருவான் ஒங்கப்பன். அப்பத்தா பழமைக்கு சத்தமில்லாம சிரிச்சுக்கிற என் அம்மா மூஞ்சீல வெட்க நிறம். அவளுக்கு வாய்ச்சது அப்படி. ^ வேப்பெண்ணை தடவிய மார்பின் கசப்பில் அழுதழுது உறங்கிவிட்ட சிறுமகன் விடிஞ்சதும் பால்புட்டியைக் கொண்டுபோய் விறகடுப்பின் தீயிலிட்ட கதைசொல்லிச் சிரிப்பாள் என் அத்தை. ^ சிம்னி விளக்கொளியில் நள்ளிரவில் பால்தேடி தொட்டிலிறங்கி வந்து இருட்டில் அடையாளம் தெரியாமல் அலறியழுத பிள்ளையின் தாயொருத்தி சலித்தபடிப் பசியாற்றுகிறாள் ^ பிள்ளைக்குப் புகட்டுவதை நிறுத்திவிட்ட தாயின் பால் கட்டிக்கிடக்கும் வலி குறைக்க மல்லிகைப் பூக்களை மார்பில் உள்ளாடைக்குள் பொதிந்துவைவைக்கச் சொல்லுகிறாளொரு மூத்த தாய். ^ பக்கத்துத் தூளியில் பசித்தழும் குழந்தைக்குத்தன் இரண்டாம் மார்பில் தன்னியல்பாய்ப் பாலூட்டும் வயல்வேலை வெள்ளந்தி அக்காவின் சொந்தப் பிள்ளைக்கு மட்டுமானதல்ல அவளின் தாய்ப்பால் ^ பால் மறக்கடிக்கப்பட்டு தொட்டிலில் உறங்கும் பிள்ளை பெருவிரலைச் சூப்பியபடி தேம்பியழுகிறது. இயற்கையின் கருணையில் அமுதுசுரக்கத் தொடங்குகிறது பிள்ளையின் தள்ளைவிரல். ^ அந்தக் குழந்தையை முத்தமிட்டுக் கொண்டிருக்கின்றன குழந்தையில்லாத பெண்ணின் கண்கள். கண்ணோரம் வழிகிறது உப்பேறிய முலைப்பாலின் நதி. ^^^ பருக்கைகள் 01 இருளுக்குள் அமர்ந்துகொண்டு வெளிச்சத்தைப் பரிமாறுகிற அம்மாவை நினைவிருக்கிறதா கண்கள் ஒளிரப் பாத்திரங்களுக்குள் ஒட்டிக்கிடக்கும் பருக்கைகளைத் தட்டியெழுப்புகிறாள் அகாலத்தில். 02 வறுமையுற்ற காலத்தின் மக்காச்சோள மணிகளாய் மஞ்சளில் சுடர்கிறது காலம் மரவள்ளிக் கிழங்குத் துண்டுகள் அவிக்கையில் வரும் வாசனை தசாப்தங்களுக்கு முந்தைய பட்டினியிரவுகளின் மீது கனத்த போர்வைபோல் கவிந்திருந்தது. 03 பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் பொன்னிறத்திலொளிரும் சோளமணிகளை அவித்த சோற்றை நினைவிருக்கிறதா உப்புக்கண்டமிட்ட துண்டுகள் மிதக்கும் காரக்குழம்பில் கரண்டியால் இளக்கும்போது எச்சிலூறிவழியும் ஆறு நாக்குகளின் சங்கீதமவள். 04 ஞாயிறுகளின் கறிக்கடைப் பலகையின்மீது கண்திறந்து வெறித்தபடியிருக்கும் ஆட்டுத்தலைகளை மடிந்த காதுகளை வெட்டப்பட்ட கால்களை ருசிமொட்டுகள் மலரப் பார்த்துக் கடந்த பிள்ளைகளைத்தேற்ற ஆற்றுமீன்பிடிக்க அழைத்துப்போகிறார் அப்பா. 05 மணி அரிசியில்லா வீட்டின் முற்றத்தில் மேய்கிற கோழிகளை புளியவிளாரெடுத்து விரட்டுவாள் அம்மா . முட்டையிடும் கோழிக்குள் விரல்நுழைத்துப் பிதுக்கி முட்டையெடுத்துக் குடிக்கிற தம்பி உள்ளங்கைத் தவிட்டுடன் அழைத்துக் கொண்டிருக்கிறான். 06 கோடையில் குளமெல்லாம் காய்த்துக்கிடந்த பொன்னிறத்துக் குண்டு வெள்ளரிப்பழங்கள் வெடிக்கிற காலத்தில் கரும்புச் சர்க்கரையும் வெடித்த பழங்களும் உச்சிச் சோறாகிறது. 07 சேலையின் மடி நிறைய காட்டுக்கீரை கொண்டுவந்த கிழவியின் முநதானையில் படியரிசி அளக்கிற பெணணின் பிள்ளைக்கு நாலணா வாங்காமல் குடல்தட்டிக் கொடுக்கிறாள் கிழவி. 08 ரெட்டை வாழைப்பழம் தின்கின்ற புதுமாப்பிள்ளைளையை நடுக்கத்துடன் பார்த்தபடி குடிசைக்குள் ஓடுகிறாள் புள்ளைத்தாச்சி மனைவி.. ரெட்டை மாங்காய்க்கு ஒறறைக் கல்லெறியும் ஆசையொளிர்கிற தகப்ப முகம் அவனுக்கு. 09 முதல் அடசலை நாய்களுககுப போடும் இட்டிலிக் கடைத் தனிக்கட்டைக் கிழவிக்கு ஆறு பிள்ளைகளென்பது கருணையற்ற ரகசியமாய் கண்ணோரமாய் ஒழுகுகிறது.
Showing 541 - 560 of 806 ( for page 28 )