இலக்கியச்சுடர் விருது - வாருங்கள்
வாழ்த்துவோம்
==================================
படைப்பாளி பிருந்தா சாரதி அவர்கள் இதுவரை எழுதிய படைப்புகளை
ஆய்வு செய்து அவரின் இலக்கியத் திறனை போற்றும் வகையில் அவர்களுக்கு 2022க்கான "இலக்கியச்சுடர்" எனும் உயரிய விருதை அளித்து
படைப்பு குழுமம்
பெருமை கொள்கிறது.
அவர் இன்னும் பல விருதுகளும்
பாராட்டுகளும் இலக்கிய உலகத்தில் பெறவும் மேலும் பல படைப்புகளை இந்த சமூகத்திற்கு
தந்து தமிழ் வளர்க்கவும் வாழ்த்துகிறது படைப்பு குழுமம்...
இப்படி விருது பெறுவோர் அனைவரும்
நாம் ஒவ்வொரு ஆண்டும் சந்திக்கும் விழாவில் மேடையில் வைத்து சிறப்பிக்கப்படுவதுடன்
ஒரு ஆளுமைமிக்க படைப்பாளியின் கையிலிருந்து விருதும் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப் படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறோம்...
இனி இந்த விருதை வாங்கப் போகும்
எழுத்தாளர் யார் யார் என்பதை உங்களின் படைப்புகளே தீர்மானிக்கும்…
ஆகவே இந்த குழுவில் பதியப்படும்
படைப்புகளையும், மற்றும் பயணிக்கும் படைப்பாளிகளையும் மிகவும்
உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அதை ஒரு குழு தனியாக இருந்து அலசி ஆராய்ந்து தேர்வு
செய்கிறது என்பதை எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
நல்ல படைப்புகளை படைப்போம்...
நம் சமூகத்தை நாமே தமிழால்
இணைப்போம்...
வாழ்த்துக்கள் இலக்கியச்சுடர் பிருந்தா சாரதி.
ஒரு மகிழ்ச்சியான செய்தி....
இனி இந்த இலக்கியச்சுடர் விருது பெரும் படைப்பாளிகளை பற்றிய
குறிப்பும் நாம் ஆய்வு செய்த முறையையும் இணைத்து இதனுடன் ஒரு கட்டுரை வடிவில்
இணைக்கப்படும்.
கவிதைகளில் சிறந்து விளங்குவோருக்கு
மாதம்தோறும் கவிச்சுடர் விருது வழங்கும் படைப்பு குழுமம்…
கவிதைகளோடு, மற்ற இலக்கிய வகைமைகளிலும் தொடர்ந்து சிறந்த முறையில் பங்களிக்கும்
படைப்பாளிக்கு வருடத்திற்கு ஒரு முறை ஒருவருக்கு மட்டுமே வழங்கும் உயரிய விருது “இலக்கியச் சுடர்” என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாகவும் மற்ற படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கும். ஒரு
படைப்பாளி தனக்கான
ஒரு அங்கீகாரம் பெறுவதற்கு எவ்வளவு தூரம் எப்படி எல்லாம்
கடந்து வருகிறார் என்பதை
மற்றவர்களும் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.
இலக்கியச்சுடர் கவிஞர் பிருந்தா சாரதி– ஒரு அறிமுகம்
பெயர் |
: |
பிருந்தா சாரதி
|
இயற்பெயர் |
: |
நா.சுப்பிரமணியன்
|
வசிப்பிடம்
: |
: |
சென்னை
|
பிறப்பிடம் |
: |
கும்பகோணம்
|
பூர்வீகம் |
: |
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள
சண்முகநாதபுரம் கிராமம்
|
பணி |
: |
எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், வசனகர்த்தா,பாடலாசிரியர், கவிஞர்,
பட்டிமன்ற பேச்சாளர், திரைப்படங்க்களில் வசனம்
எழுதுதல் குறித்து பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்.
|
படித்தது |
: |
BSc.,(Physics) M.A.,(Tamizh)
|
படித்துக் கொண்டிருப்பது |
: |
ஜென்,ஓஷோ, மிக்கேல் நைமி, கலீல்
ஜிப்ரான், பெரியார், கலைஞர், பாரதி, உமர் கயாம், பாஷோ,
பூஸன், ஆண்டன் செக்காவ், தாகூர், பால் சக்காரியா, தாஸ்தாவேஸ்கி,
பாரதிதாசன், புவியரசு, கி.ரா, தி.ஜா, ஈரோடு
தமிழன்பன், கவிக்கோ அப்துல் ரகுமான், தஞ்சை ப்ரகாஷ், அருந்ததி ராய், தொ.பரமசிவன், மார்க்ஸ், இறையன்பு,
வைரமுத்து, தகழி சிவசங்கரன், எஸ்.ரா….
|
இலக்கு/முயற்சி/கனவு
|
: |
சமூகத்திற்கு பயன்தரும் படைப்புகளை தொடர்ந்து
படைத்தல், சிறந்த திரைப்படம் மூலம்
இயற்கை சார்ந்த சிந்தனைகளை மக்களிடம் சேர்ப்பது.
|
இயல்பு |
: |
அமைதி, நிதானம்,பணிவு, நிகழ்வில் வாழ்வது என்ற தன் ஜென் இயல்புகள் மிளிரும் கவிதைகள் படைப்பது
|
எழுதத் தொடங்கியது |
: |
இருபதாவது வயதில்
|
பெருமிதம் –இலக்கியத்தில் மற்றும் திரைத்துறையில். |
: |
‘கல்கி’ பொன்விழா கவிதை போட்டியிலும் கம்பன் கழகம் நடத்திய அனைத்து கல்லூரி
கவிதைப் போட்டியிலும் தமிழ்நாடு அளவில் பரிசு பெற்றவர். 1992-ஆம் ஆண்டு இவரது முதல் கவிதை நூலான ‘நடைவண்டி’
வெளியானது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2007-ஆம் ஆண்டு வெளியிட்ட ‘TAMIL
POETRY TODAY’ எனும் புதுக்கவிதைத் தொகை நூலில் இவரது ‘ஊமை’ என்ற கவிதை ஆங்கிலத்தில் மொழி
பெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது.
இவரது ‘ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம்’ கவிதைத் தொகுதி 2016ஆம் ஆண்டுக்கான ஜெயந்தன்
படைப்பிலக்கிய விருது பெற்றது. ‘மீன்கள் உறங்கும் குளம்’
என்ற ஹைக்கூ கவிதை தொகுதி 2017-ஆம்
ஆண்டுக்கான அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த ஹைக்கூ கவிதை
நூலுக்கான முதல் பரிசையும் பெற்றது.
'இருளும் ஒளியும்' கவிதை நூலுக்கான சௌமா இலக்கிய விருது 2020 பெற்றது.
எண்களைத் தலைப்பாகக் கொண்டு எண்களின்
பின் மறைந்திருக்கும் தத்துவத்தையும், புதிர்களையும், தர்க்கத்தையும், அன்றாட வாழ்வையும் கவிதைகளாக இவர் எழுதிய ‘எண்ணும்
எழுத்தும்’ நூல் படைப்பு குழும விருது (2017) பெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான் கவிஞர் விக்ரமாதித்யன் எழுத்தாளர் எஸ்
ராமகிருஷ்ணன் ஆகியோரின் பாராட்டுகளைப் பெற்ற நூல் இது
கொரோனா ஊரடங்கு நாட்களில் இவர் எழுதிய
கவிதை டாக்டர் கே. எஸ். சுப்ரமணியம் அவர்களின் Lock down Poems நூலில் ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. நாள்தோறும் இவர் முகநூலில் எழுதும்
கவிதைகள் தொடர்ந்து ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு
வருகிறது.
கல்லூரிப் பாட நூல்களிலும் இவரது
கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
நடிகர் நாசர் இயக்கிய ‘அவதாரம்’, ‘தேவதை’ இயக்குநர் என்.லிங்குசாமி இயக்கிய ‘ஆனந்தம்’ மற்றும் கவிஞர் வைரமுத்து இயக்கிய ‘கவிதை பாருங்கள்’ என்ற கவிதைகளைக்
காட்சிப்படுத்தும் தொலைக்காட்சித் தொடர் ஆகியவற்றில் உதவி மற்றும் இணை இயக்குநராகப்
பணியாற்றியவர்..
2003-ஆம் ஆண்டு ‘தித்திக்குதே’ என்ற திரைப்படத்தை இயக்கிய இவர்,
இயக்குநர் என். லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ‘ஆனந்தம்’, ‘பையா’, ‘வேட்டை’,
‘அஞ்சான்’, சண்டக்கோழி -2 ஆகிய திரைப்படங்களுக்கு உரையாடல் எழுதியுள்ளார்.
தற்சமயம் “The Warrior” திரைப்பட உருவாக்கத்தில் வசனக் கர்த்தாவாக
பணியாற்றி வருகிறார்.
|
படைப்புகள்:
|
: |
நடைவண்டி, ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம், பறவையின் நிழல், மீன்கள் உறங்கும் குளம், எண்ணும் எழுத்தும், இருளும் ஒளியும், பச்சையம் என்பது பச்சை ரத்தம், பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர், முக்கோண மனிதன்.
|
இவரது படைப்பின்
மீதான ஆய்வுக் கட்டுரை நூல்கள் |
: |
எளிமை போர்த்திய கவித்துவம்- தொகுப்பு மு.வேடியப்பன்
பிருந்தா சாரதி கவிதைகள் ஆய்வுக்கோவை தொகுப்பு
முனைவர் நம்.சீனிவாசன்.
ஹைக்கூ தூண்டிலில் ஜென் (இயக்குநர்,கவிஞர் பிருந்தா சாரதியின் கவிதைகளை முன் வைத்து)- கோ.லீலா.
|
கவிதைகள் & கட்டுரைகள் வெளியான
இதழ்கள் |
: |
2000-2020 சிறந்த படைப்பாக்கங்கள்,
குமுதம், கணையாழி, ஆன்ந்தவிகடன்,
தை, கவிதை உறவு, தகவு,
கல்வெட்டு, இனிய உதயம், ரௌத்திரம், பேசும் புதியசக்தி, அருவி, கல்வெட்டு பேசுகிறது, மகாகவி, சொல்நதி, அயல் சினிமா,
Behind woods, சங்கமம், மக்கள் வெளிச்சம்,
பூவையர் மலர், ராணி, கவிமாலை,
ஏனைய வாராந்திர இதழ்கள்
|
இவரின் நூல்கள் பற்றிய விமர்சனங்கள் வெளிவந்த
இதழ்கள் |
: |
கணையாழி, தமிழ் நெஞ்சம், அரிமா நோக்கு,
தகவு,இனிய உதயம், பேசும்
புதிய சக்தி,காற்றுவெளி, தமிழ்வெளி |
படைப்பு குழுமத்தில் பங்களிப்பு:
|
: |
|
கவிதைகள்
உணர்வுகளை மட்டுமே சொல்லும் என்ற பொது கட்டமைபிலிருந்து விலகி, அறிவியல், புவியியல், வாழ்வியல்,தத்துவம்,ஜென் தன்மை, மனோவியல் என பல்வேறு கூறுகளையும்
உள்ளடக்கிய கவிதைகளை சுருக்கமான சொற்களில் சுருக்கென தரும் வல்லமை
பெற்றவர்.இயற்கையின் அழகை ஆராதிப்பது யாவருக்கும் பிடித்தமான ஒன்று என்றாலும்,
கவிஞர் பிருந்தா சாரதி அவர்களின் கவிதைகள் இயற்கையை பாதுகாக்கவும்,
அவற்றின் சீரழிவால் இந்த மனிதகுலத்திற்கு ஏற்பட்டிருக்கும், ஏற்படவிருக்கும் ஆபத்துகளை பாடக்கூடியவை.
ஒரு கவிதை
என்ன செய்யவேண்டும், வாசிப்பவனை தொந்தரவு செய்ய வேண்டும், சமூகத்தில் ஒரு
மாற்றத்தை கொண்டு வரவேண்டும்... அத்தனையையும் செய்யும் சூட்சமம் அறிந்தவைகள் இவரது
கவிதைகள். சொற்சிக்கனம் இருந்தாலும், பொருண்மை சிக்கனமின்றி
வானளவு விரியும்.
இவரது
கவிதையின் தனிச்சிறப்புகளில் மேலுமொரு மணிமகுடம் புத்திசாலித்தனம் தெறிக்கும்
சொற்களும், பொருண்மையும்
ஆகும். இவரது காதல் கவிதைகள் கூட இயற்கையோடு இயைந்தவை... பெண்ணின் மூடிய இமையை
சிப்பியாக காணும் கலாரசிகர்.
எண்ணலாங்கார
கவிதைகளை பாடி எண்ணும் எழுத்தும் என்ற கவிதை மூலம், கவிதையுலகில் புதுமையை
பரீசார்த்த முறையில் அறிமுகம் செய்து வெற்றியும்கண்டவர்
இயல்பிலேயே
இவரது கவிதைகள் ஜென் தன்மை மிளிரும். ஒரு வேளை கவிதையே தன்னை படைப்பதற்காக, இவரை படைத்துக்
கொண்டுவிட்டதா? என்று தோன்றுமளவிற்கு ரசனை ததும்பும்
கவிதைகளில் சங்கத்தமிழும் நவீனத்துவமும் கைகுலுக்கி கொள்ளும் பேரழகை தரிசிக்க
வாசகர்களுக்கென திறந்த வைக்கப்பட்டிருக்கும் கலைகோயில் இவரது கவிதைகள் என்றால்
மிகையல்ல...
ஹைக்கூ
கவிதைகளில் பாஷோ மற்றும் பூஸனின் தரங்களை ஒப்புமளவிற்கு தமிழில் ஹைக்கூ படைக்கும்
ஜென் தன்மை மிக்க ஒரு கவிஞராக இவரை பார்க்கின்ற அதே வேளையில்...
இவரது
நீள் கட்டுரைகள் பிரமிப்பு ஊட்டக்கூடியவை, ஈரம் நிறைந்த உணர்வுகள் தளும்ப, பல இலக்கிய ஒப்பீடுகள் கொண்ட அழகியல் நிறைந்த எழுத்து நடை மீண்டும்
மீண்டும் வாசிக்க தூண்டுபவை...
சொற்களை
உண்டு சொற்களை செரித்து வாழ்கிறாரோ எனுமளவிற்கு சொல்வளமும், பொருள்வளமும், நவரசம் நிறைந்த எழுத்துக்கள் வாசிப்பவரை தொந்தரவு செய்யக்கூடியவை.
பேரமைதியும், நிதானமும், பணிவும், கூர்மையான அறிவும் கொண்ட இப்பூமியின் மீது
பேரன்பு கொண்ட மனிதராகவும் சுடரும் மாணிக்கமாக திகழும் இவரது எழுதுகோலை எடுத்து
எழுதினால், நமக்கும்கூட அப்படி எழுத வருமா? எனுமளவிற்கு வாசிப்போரை கொள்ளை கொள்வதோடு, ஒரு
கொள்கையையும் கொடுத்து செல்லும் இவரது எழுத்துக்கள் பூமிக்கான ஒரு பச்சை
பொன்னாடையை, மானுடத்திற்கான அன்பாடையை நெய்யக்கூடியவை.
இவரது, மீன்கள் உறங்கும் குளம்,
இருளும் ஒளியும்,பச்சையம் என்பது பச்சை ரத்தம்,
பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர் பரவலாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த
நூலாகளாகும்.
வானில்
பறந்தப்படியே
நீரிலும்
நீந்தும்
பறவையின்
தன்மையை இவரது எழுத்துக்களில் கண்டு களிக்கலாம்.
இன்னும்
இன்னும் புது புது முயற்சிகளில் தொடர வேண்டும்
படைப்பாளி பிருந்தா
சாரதி அவர்களின் படைப்பின் பயணம்.
இவரது
இந்த இலக்கிய பயணம் மேலும் தொடரவும்.. சிறப்பான படைப்புகளை தொடர்ந்து தமிழுக்கு
அளிக்கவும்... படைப்பு குழுமம் அவரை மனதார வாழ்த்துகிறது. மேலும்
"இலக்கியச்சுடர்" என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப்
பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.
இத்தகைய ஆக்கப்பூர்வமான, அபூர்வமான, அறிவியலை ரசனைமிகு சொற்களில் தரும் ஒரு படைப்பாளி பெறும் படைப்பின் சுடர்
விருதுகள் இங்கு எழுதும் அனைவரின் கரங்களையும் தழுவ வேண்டும் என்பதே படைப்பு
குழுமத்தின் அவா. அதற்கேற்ப படைப்பாளிகள் தங்கள் சிந்தனை வளத்தையும் உருவாக்கல்
திறனையும் மேம்படுத்திக் கொண்டு சமூகத்திற்கான படைப்புகளைப் படைத்து மனிதம்
செழிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டு
அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறது படைப்பு குழுமம்.
வளர்வோம்
வளர்ப்போம்,
படைப்பு
குழுமம்.
#சுடர்_விருது
இந்த மாதத்தின் நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினைப் பெறுகிறார் கவிஞர் தி.கலையரசி அவர்கள். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரைச் சேர்ந்த கவிஞர் பல் மருத்துவம் பயின்று சென்னையில் பணி புரிகிறவர்.
அவரது கவி ஆர்வம் பற்றி அவரே சொல்லக் கேட்போம், " என்னைப் பொறுத்தவரை இலக்கியம் என்பது வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஓர் ஆரோக்கியமான அற்புத போதை. நான் படித்த பள்ளிக்கூட வகுப்புத் தோழர்களுடன் பகிரி குழுமத்தில் இணைய நேர்ந்தது.அதில் என்னுடன் படித்த கவிஞர்.பிரபு சங்கர் அவர்களின் கவிதைகளை அன்றாடம் படிப்பது என் வழக்கமாக இருந்தது.சிறுவயதில் இருந்தே தமிழ் மீதிருந்த என் வேட்கையில் சில கிறுக்கல்களை எழுதி அவருக்கு அனுப்பி வைப்பேன். நண்பர் பிரபு சங்கர் என்னைத் தொடர்ந்து எழுதப் பழகச் சொல்லி ஊக்கப்படுத்தி ,படைப்பு எனும் இந்த உயரிய இலக்கிய தளத்தை அறிமுகப்படுத்தினார்.என் இலக்கிய அறிவையும் சிந்தனைத் திறனையும் வளர்த்துக் கொள்ள தக்க மேடையை அமைத்துக் கொடுத்தது படைப்புக் குழுமம். அதுமட்டுமின்றி பல இலக்கிய ஆளுமைகளின் அறிமுகமும் இந்த தளத்தின் மூலம் எனக்கு கிடைத்ததை ஒரு வரமாக நான் நினைக்கிறேன்.
சென்ற வருடம் மாதாந்திர 'சிறந்த படைப்பாளி' என்ற உயரிய அங்கீகாரம் எனக்கு அளிக்கப்பட்டதை பெரும் ஊக்கம் தரும் விஷயமாகக் கருத்தில் கொண்டு தொடர்ந்து எழுதியும் வருகிறேன். என் கவிதைகள் ஆனந்த விகடன், இனிய உதயம், கணையாழி என இன்னும் பல்வேறு பத்திரிகைகளில் வெளி வருவதை மகிழ்வோடு இத்தருணத்தில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் இருமுறை ' மகிழ்ச்சி எஃப். எம் இல் ' கவிதைகள் சொல்லவா என்ற சிறப்பு நிகழ்ச்சியிலும் என் கவிதைகள் சில இடம் பெற்றன.
சென்ற வருடம் என் முதல் கவிதைத் தொகுப்பான " நான் உன்னுடைய துறவி " என்ற நூலை படைப்பு குழுமம் மிக அருமையான விதத்தில் வெளியீடு செய்து சிறப்பித்தது. தற்போது " கவிச்சுடர் " என்ற சிறந்த விருதையும் படைப்பு குழுமம் அளித்துச் சிறப்பிப்பதை, மென்மேலும் இலக்கியச் சிகரம் தொடுவதற்கு அமைத்துத் தரும் வெற்றிப் படியாக எண்ணுகிறேன்.
என் எழுத்துகளை கவிதைகளாக அங்கீகரித்து விருதளித்து என் இலக்கிய வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் படைப்பு குழுமத்தலைவரும் கவிஞருமான திரு.ஜின்னா அஸ்மி அவர்களுக்கும் குழுமத்தாருக்கும் என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
இனிய நல் வாழ்த்துகள் கவிச்சுடர் தி.கலையரசி அவர்களே! உங்களின் கவிதைப் பயணம் சிகரம் தொடட்டும்.
இனி கவிஞரின் கவிதைகளைக் காண்போம்:
தீட்டுப் பார்த்தல் என்பது இன்னமும் தொடரும் அழுக்காகவே இருக்கிறது. அதுவும் சாமி சிலையை கழுவிய வேலைக்காரி தாழ்த்தப்பட்டவள் என்பதால் அதையே தீட்டுக் கழித்து பூசைக்கு வைக்கிறாள் எஜமானி! கடவுள் யாருக்கு பொதுவானவர்? என்ற கேள்வியை விழுங்கி நிற்கிறது இந்தக் கவிதை!
கறுத்துப் போன சாமியின்
பித்தளைச் சிலையை
பூஜைக்காக கை வலிக்க
விளக்கித் தந்துவிட்டுப் போகிறாள்
வீட்டு வேலைக்காரி.
மீண்டும் ஒருமுறை அதை
நீரில் அலசிவிட்டு தீட்டினைக்
கழிக்கிறாள் எஜமானியம்மாள்.
நகநகவென சிரித்திருந்த
கடவுளின் முகம்
இருண்டுபோயிருக்கிறது
இப்போது.
@@@
மழையில் நனைந்து , சேற்றில் குளித்துவிட்டு வரும் குழந்தைகள் வீட்டையும் அழுக்காக்கினால் நிச்சயம் கோபம்தான் வரும்.. இந்த அன்னையோ அந்தக் குழந்தையின் பாதச்சுவடு அழுக்குகளை வானவில்லாக காண்கிறாள்! இந்த கவிதையும் அதை இரசிக்கிறது?
மழையில்
நனைந்துவிட்டு
ஈரத்தோடு பதியும்
குழந்தையின்
பாதச்சுவடுகளில்
திட்டு திட்டாய்
வானவில்.
@@@
இந்த கவிதை சற்று வில்லங்கமாகத்தான் யோசிக்கிறது! அதே சமயம் அதில் நியாயம் இல்லாமலில்லை! எங்கள் கிராம குலச்சாமிகள் கூறையில்லாமல், காற்று, மழை, வெயில் இவற்றில் எல்லாம் நனைந்து கொண்டு, வெட்டரிவாள், வேல் கம்பு என்று இவைகளோடு காட்சி அளித்தாலும்.. அவைகளுக்கு வன்முறை தூண்டத் தெரிவதில்லை.. ஆனால் அதே சமயம் உயர்ந்த கோபுரத்திற்குள்.. தங்க ஆபரணங்களோடு, சாந்த புன்னகை வீசும் உயர் குலத்தோரின் தெய்வங்கள் கலவரத்திற்கு அடிகோள்கிறதே ஏன்? சிறந்த கவிதை இதோ
நாக்கை நீட்டி
விழிகள் பிதுங்கி
மீசை முறுக்கி
வீச்சரிவாள் ஏந்தி
கோவிலற்று கூரையற்று
ஊர் எல்லையில் நின்று
வன்முறை நடத்தத் தெரியாத
எங்கள் குலசாமிகளுக்கும்
தங்கக்கூரை வேய்ந்த
கோபுரக் கோவிலுக்குள்
ஆடை ஆபரணத்தோடு
சாந்தப் புன்னகை தரித்து
கலவரத்திற்கு அடிக்கல் போடும்
உங்கள்
பணக்கார கடவுள்களுக்கும்
உள்ள முரண்களை
என்று உணரப்போகிறீர்கள்
பக்த கோடிகளே.
@@@
பகடியென்பதும் கவிதைகளின் ஓர் அழகியல் மொழி. குண்டும் குழியுமான சாலைகளில், அதுவும் வேலைக்குப் போகும் பெண் படும் துயரங்கள் சொல்லமுடியாதது... இந்த மக்களுக்காக இல்லாத ஜனநாயகத்தை கேள்விக்கேட்கிறது இந்தக் கவிதை... வள்ளுவன் வழியில் இடுக்கன் வருங்கால் நகுக!
ஒரே ஓர் இரவு சிறுமழைக்குத்
தோன்றிடும்
அந்த
அதிசய சாலை குளங்களைத் தாண்டிட
தூக்கிச் செருகிய சேலையோடு
நீளத்தாண்டுதலையும்
உயரத்தாண்டுதலையும் பயின்று
எளிதாகக் கடந்து விடுகிறேன்
குண்டும் குழியுமாய் இருக்கும்
ஜனநாயகத்தை.
@@@
இதுவும் ஒரு பெண்ணின் இடத்திலிருந்து எழுதப்பட்ட கவிதைதான். ஒரு பெண்ணின் விருப்பங்களை இங்கு நிர்ணயிக்கிறவன் ஆணாக மட்டுமே இருக்கிறான். அவள் புரிதல்களைத் தவறாகப் புரிந்து கொண்டு இங்கு வினையாற்றுதல்தான் வழமையாக நடைபெற்று வருகின்றன! இதோ அந்த வலி....
நான் கருப்பு
பிடிக்குமென்கிறேன்
வெள்ளை பிடிக்காதென
நீங்களே முடிவெடுக்கிறீர்கள்.
எனக்கு மழையின்மீது
காதல் என்கிறபோது
வெயிலை வெறுப்பதாக
நினைத்துக் கொள்கிறீர்கள்.
நான் இரைச்சலை தவிர்க்க
கதவடைக்கிறேன்
பறவைகளின் கிறிச்சிடுதலை
ஒதுக்குவதாக கதை காட்டுகிறீர்கள்.
என் விருப்பினை
வெறுப்பை வைத்து எடை போடுகிறீர்கள்
வெறுப்பினை கவனித்து
விருப்பத்தை யூகிக்கிறீர்கள்.
கிளைகளை மட்டும் நோட்டமிட்டு
வேர்களின் திசைகளை
தவறாக அனுமானித்து
என்ன செய்யப் போகிறீர்கள் நீங்கள் ?
@@@
பெண் கவிஞர்கள் என்றால் காதல் மொழிகளுக்குள் மட்டுமே உங்களை நீங்கள் சுருக்கிக் கொள்ளுங்கள் என்பதும் ஒருவித பெண் விடுதலைக்கு எதிரான கட்டமைப்புதான். அதனை உடைக்கிறார் கவிஞர் தி.கலையரசி. இவரது கவிதைகள் மிகமிக முக்கியமானவைகள் .. மற்ற கவிதைகளையும் வாசித்துப் பாருங்கள்...
என் சிறுவயதில்
நானும் என் அம்மாவும்
பேருந்தில் பயணித்தபோது
அருகே ஓர் ஆண் அமர நேர்ந்தால்
என்னை
நடுவில் அமர வைத்திருந்தாள் அம்மா.
இப்போதெல்லாம்
அப்படியொரு சூழலில் என் மகளை
தள்ளி உட்காரவைத்துவிட்டு
ஆணின் அருகே
நான் அமர்ந்து கொள்கிறேன்.
@@@
சுத்தமான குடிநீர் பற்றி
படிக்கிறாள் மகள்
ப்ளீச்சிங் கலந்த குழாய் நீரைக்
குடத்தில் பிடிக்கிறாள் அம்மா.
இயற்கை உரத்தின் பயனை
மனனம் செய்கிறாள்
காய்ந்த சருகுகளைக் குப்பையில்
கொட்டச் சொல்கிறார் அப்பா.
நெகிழி பயன்பாட்டை
குறை எனக் கற்கிறாள்
கடைக்குப் போக ப்ளாஸ்டிக்
பையை தருகிறாள் அக்கா.
பூமி வெப்பமயமாதலை
அறிகிறாள்
ஒவ்வொரு அறையிலும்
தனித்தனியாக ஓடுகிறது
ஏ.சி.
ஆரோக்கிய உணவைப் பயில்கிறாள்
ஆன்லைன் மூலம் வீடு
வந்து சேர்கிறது பீட்சா.
வருடத்தின் முடிவில்
ஏட்டுச் சுரைக்காய் எடைக்குப்
போகிறது
அதில் வந்த சில்லறைகூட
மருந்துக் கடைக்குப் போகிறது.
@@@
மகளின் வேற்றுசாதி காதலனை
விரட்டி விட்டு
சாதி முக்கியமென முழங்கியதும்...
வீட்டு வேலைக்காரியின் கைகள்
அரிசி பருப்பு டப்பாவை
தொடக்கூடாதென்று
மனைவிக்கு கட்டளையிட்டதும்...
நெருங்கிய நண்பர்களை
தன் சாதியிலேயே
தேர்ந்தெடுத்துக் கொண்டதுமாய் இருந்த...
தாத்தாவின் சாதி ஊறிய இரத்தம்
முற்றிலுமாய்
சுத்திகரிக்கப் பட்டிருந்தது
யாரென்றே தெரியாத ஒருவரின்
சீறுநீரகத்தைத்
தானமாகப் பெற்றப்பொழுது.
@@@
அடுக்ககத்தின் பூங்காவில்
முரட்டுத்தனமாய்
பந்தெறிந்து விளையாடும்
சிறார்களுக்குப் பயந்து
பால்கனித் தொட்டியில்
நடப்பட்டிருக்கிறது
சின்னஞ்சிறு நந்தியாவட்டை பூச்செடி.
ஒளிக்கற்றைகளை
சன்னல் தாண்டி
எட்டிப் பிடிக்கும் கிளையின் பார்வை
இப்போதெல்லாம்
மைதானத்தில் உருளும்
விளையாட்டுப் பந்தின்மீதே படர்கிறது.
எத்தனை இடர்களையும்
தாக்குப் பிடிக்க வளர்ந்து விட்டிருக்கும்
வேரின் முகப்பாவனையை
எப்போது கவனிக்கப்போகின்றன
இந்த
போன்சாய் குடித்தனங்கள் ?
@@@
அந்த கோவில் சுவரில்
பரீட்சை எண்ணை எழுதி வைத்தவரை எல்லாம்
சாமி பாஸாக்கி விடுவாரென
ஒரு நம்பிக்கை.
தோல்வியடைந்தவரின் எண்கள்
பிறகு என்னவானது
என்று எனக்கு தெரியாது.
மூலவருக்கு அர்ச்சனையின்போது
கிரீடத்தில் இருந்து விழுந்த பூ
யாரின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்தலோ!
தரை விழாத மலர்களைப் பற்றி
எதுவும் கேட்காதீர்கள்.
நோயாளிக்காக வேண்டிய போது
ஓர் அழுகல் தேங்காய் பதறச்செய்தது.
உடைத்த தேங்காயில்
பூவினைப் பார்த்த பரவசம் நிலையானதா?
யார் கண்டார்கள்?
வெளியூர் கிளம்பும் முன்
எதிரே வந்த விதவை அச்சமூட்டுகிறாள்.
ஒரு வேளை
நாமே கூட அவளுக்குத் தீய சகுனமாக
இருக்கலாம்.
நம் பிரார்த்தனைகளும்
அச்சங்களும்
எதையெதையோ சம்பந்தப்படுத்திக்
கொள்கின்றன.
இப்படியே
அக்கினிப்பரீட்சையை
வைத்துக் கொண்டே போனால்
முடிவில்
நாத்திக மடத்தில் தஞ்சமடைய
வேண்டியதுதான் கடவுள்.
@@@
திருமணச்சீராகப் போட்ட
நகைகளை வைக்க
ப்ரத்யேக வங்கி லாக்கர்
பட்டுப்புடவைகளையும்
கோட் சூட்டுகளையும் பத்திரப்படுத்த
உயர்தர இரும்பு பீரோ
சமையலறை பாத்திரம் முதல்
காலணி வரை
எதை எங்கு ஒழுங்காக வைக்க வேண்டுமென
கணவன் வீட்டில்
தெளிவாக அறிவுறுத்தப்படுகிறது
சொன்னபடியே அனைத்தையும்
திரும்பத் திரும்ப
ஒழுங்கு படுத்தி விட்டு ஓய்ந்து போகிறேன்
நாங்கள் எங்கு போய்த் தொலைய
வேண்டுமென
வெறுப்போடு என்னைப்
பார்த்துக் கொண்டிருக்கின்றன
என் கல்லூரிப்
புத்தகங்களும் படிப்புச் சான்றிதழ்களும்.
@@@
நீங்கள் மருந்தாக இருக்க
விரும்புகிறீர்கள்...
எங்களை நோய்களாக மாற்றிக் கொள்கிறோம்.
நீங்கள் விடையாக வேண்டும்
என்றீர்கள்...
எங்களை விடுகதையாக்கி கொள்கிறோம்.
உங்களை வெளிச்சம் என்று
சொல்லிக்கொள்கிறீர்கள்...
நாங்கள் இருளில் அமர்ந்தபடி காத்திருக்கிறோம்.
புழுக்கத்தை வெறுக்கிறீர்கள்...
எங்கள் வியர்வைகளைச் சிந்தி
குளிர வைக்கிறோம்.
அறுந்த வீணையை வாசிக்கிறீர்கள்...
அபஸ்வரத்தில் அழுத கீதத்தை
ரசிக்கிறோம்.
நீங்கள் எப்போதும் தெளிவாகவே
இருக்கிறீர்கள்...
நாங்கள் தான்
எங்களை குழப்பிக்கொண்டே
இருக்கிறோம்
தெளிய விரும்பாத விசுவாசிகளாய்.
@@@
நீ காதல் கற்றுக்கொடுக்கிறாய்.
காணிக்கையாக
கவிதைகள் தருகிறேன் நான்.
எனக்கு நாத்திகம் பிடிப்பதில்லை.
நான் காதலை வணங்கிக் கொண்டிருக்கிறேன்.
உனக்கும் எனக்கும்
எத்தனையோ முரண்கள்.
அனைத்தையும் இணைத்து
கஸல் செய்கிறது காலம்.
வெட்கத்திடம்
காதலை மறைக்கச் சொல்கிறேன்.
ஆனால்
அது காட்டிக் கொடுக்கிறது.
நீ பிரிவினைவாதி.
என்னை என்னிடமிருந்து
பிரித்து விடுகிறாய்.
என் ஓட்டைக்கூரை வழியே
விழும்
வெயில் நிலவு நீ.
உன்னை அள்ளிக் கொள்ள
முடிவதில்லை.
கவிதைகள் எழுதுவதென்பது
உன்னை தரிசிப்பதற்கான
என் புனிதப் பயணம்.
உன் ஞாபகங்களில் நெளியும்
கூட்டுப்புழு நான்.
எப்போது சிறகுகள் தருவாய் எனக்கு ?
@@@
பசும்பாலின்
கருப்பட்டி காபியோடு விடிந்த
காலைப் பொழுதில்
விவாதத்தின் பொருளாக
பறந்து கொண்டிருந்த குருவிகளின் வகைகள்
அன்றைய தலைப்பாகிறது.
வரப்புகள் மீது தட்டுத்தடுமாறி நடந்தவர்கள்
ஆலமர விழுதுகளைப் பிடித்துத் தொங்குவதை
'த்ரில்லிங் மொமண்ட்ஸ்' என ஸ்டேட்டஸ்
வைத்துக் கொள்கிறார்கள்.
பம்பு செட்டில் விழும் சிற்றருவிக்கு
மீன்களைப் போல் துள்ளி
சுயமி எடுத்துக் கொள்கிறார்கள் சிறுவர்கள்.
பாசி படியாத
புதிய கல் மண்டபத்தருகே
சிம்மக்குளத்தில் நீச்சலிடித்தபடி
வாட்டர் கேம்ஸ் விளையாடுகிறார்கள்
தம்பதியர்கள்.
ஒரு குயவனிடம்
மண்குவளை செய்யக் கற்கிறார்கள்
கண்டாங்கிச் சேலையில் இருந்த
நவயுக யுவதிகள்.
இரவில்
கயிற்றுக்கட்டில் மீதமர்ந்து
நிலாச்சோற்றை ருசித்தபோது
எல்லா நட்சத்திரங்களுக்கும்
சிறகு முளைத்திருந்தன.
மறுநாளில்
ஆயிரங்கள் கொடுத்து
செக் அவுட் செய்யும்
முந்தைய நிலக்கிழாரின் வாரிசுகளை
சிரித்துக்கொண்டே
வழியனுப்பி வைக்கிறது
ஒரு மருத நிலத்து ஹாலிடே ரிசார்ட்.
@@@
எனக்குத் தெரிந்த
ஒரு பெண்ணைப் பற்றி
நீண்ட நாட்கள் கழித்து
சுற்றத்தாரிடம் சொல்லிப்
பெருமை பட்டுக்கொள்கிறேன்.
அவளின் அடையாளங்களாக
பெயரைச் சொல்கிறேன்
பிறந்த இடத்தைக் கூறுகிறேன்
தம்மைச் சந்தித்த பழைய
நினைவுகளை ஞாபகப்படுத்துகிறேன்
படிப்பிலும் தொழிலிலும்
சாதித்த வரலாற்றை நினைவூட்டுகிறேன்
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு
முடிவாக
' அந்த விவாகரத்தான பெண்ணா? '
என்ற கேள்வியில்
அவளின் அடையாளத்தை
ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறார்கள்
எம் மக்கள்.
Showing 361 - 380 of 849 ( for page 19 )