logo

கவிச்சுடர் விருது


ந்த மாதத்தின் நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை கவிஞர் வணவை தூரிகா அவர்களுக்கு வழங்குவதில் பெருமையடைகிறோம்.   .

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை சார்ந்த கவிஞரின் இயற்பெயர் மா.பெருமாள் .

பள்ளிப் பருவத்தில் ஓவியம் வரைவது கவிஞருக்கு மிகவும் பிடித்திருந்ததால் பெரிய ஓவியராகும் கனவு இருந்தது, பள்ளி இறுதி வகுப்பில் முதல் மாணவனாக  தேர்வாகியிருந்தாலும் அவரது தந்தையார் இறந்து விட்டதால் கல்வியை தொடர முடியாத சூழலால் படிப்பை  நிறுத்தி விட்டு வேலைக்கு போக வேண்டிய சூழல் வந்து விட்டது,தொடர முடியாத  கல்விக்கு மாற்றாக புத்தக  வாசிப்பை தனது  நேசிப்பாக  தேர்ந்தெடுததுக் கொண்ட கவிஞர்  நிறைவேறாத தனது  ஓவியராகும்  கனவுக்கும் தூரிகா என்ற பெயரை வைத்து ஆறுதல்படுத்திக் கொண்டார் . பின் நாளில் அதையே தனது ஊர் பெயரின் சுருக்கமான வணவையுடன் இணைத்து வணைவை தூரிகா என்றும்  தனதுப் பெயரை புனைப் பெயராக சூட்டிக் கொண்டார்.

முதல் கவிதை, விகடன் பவழ விழா போட்டியில் எழுத்தாளர் சுஜாதா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முத்திரை கவிதையாக பிரசுரமானது என்பது குறிப்பிடத்தக்கது, தொடர்ந்து தினமணி,கணையாழி காலச்சுவடு போன்ற பத்திரிகைகளிலும் வெவ்வேறு பல சிறு பத்திரிகைகளிலும் பிரசுரமாகி கவிஞரை அடையாளம் காட்டின….

சந்தன நகர் கவிஞர் மன்றம்,குடில் இலக்கிய வட்டம் போன்ற வேறு பல உள்ளூர் அமைப்புகள் நடத்திய  கவியரங்கங்களும் எழுதும் தூண்டுதலை தனக்குப் பின் நாட்களில்  உருவாக்கித்  தந்ததாகவும், முகநூலுக்கு வந்தப்பின்தான்  எழுத்தார்வம் இன்னும் அதிகமானதாகவும் , குறிப்பாக எழுதும் தூண்டுதலுக்கு படைப்பு குழுமம் போன்ற முக நூல்  குழுக்களின் செயல்பாடுகளும் அவை தூண்டி விட்ட ஆர்வமும் குறிப்பிடத்தக்கதுஎன்றும்  கவிஞர் குறிப்பிடுகிறார்.

ஒரு கன்னமும் மறு கன்னமும், கறி கடைக்காரனின் சைவ மெனு கார்டு என்ற இரண்டு கவிதை தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன.

 

இனி கவிஞரின் சில கவிதைகளை காண்போம்:

 

பட்டாம் பூச்சிகள் மென்மையான சிற்றினம். அதன்  சிறகுகளும் அதன்  உடலை சுமக்கும் அளவிற்கே மிகவும் மென்மையானது. அதன் முதுகில் சுமைகளையேற்றிவிடாது பறக்க சொன்னால் அதன் நிலை என்னவாகும்?  சிறகுகள் தானாக உதிர்ந்து விடும். ..நம் குழந்தைகளின்  பள்ளி வாழ்க்கையும் அப்படியான ஒன்றாக மாறிவிட்டதென்று வேதனையுடன் வடிக்கும் கவிதை காலப் பதிவு..

.

மதிப்பெண் பொருட்டு.

ஆளுக்கு கொஞ்சமென

பிய்த்துக் கொன்ட பின்...

சிறகுகள் தொலைந்து

பறத்தல் மறந்த பட்டாம்பூச்சிகள்

வண்ண சீருடையணிந்து

பள்ளி வாகனத்தில் பறக்கின்றன...

அம்மண

புழுக்களாய் மாறி...!

 

              💐

மிகவும் அற்புதமான கவிதை. குழந்தைகள் கனவில் சிரித்து விளையாடி, பின்னர் உதடு பிதுக்கி தேம்பியழும் காட்சிகளை நாம் கண்டிருப்போம். அந்த கனவினுள் நுழையும் கவிஞர், அக் குழந்தைகள் கடவுளுடன் விளையாடுவதாக வர்ணிப்பில் இலயித்த கவிஞர் அதே சமயங்களில் அக்குழந்தைகளில் சிலர் வண்புணர்வுக்கு ஆளாவதையும் வேதனையுடன் பகிர்கிறார்.

 

கைகளையும் கால்களையும்

அடிக்கடி

ஒழுங்கற்று

மாற்றி மாற்றி '

வைத்துக்கொண்டு உறங்கும் குழந்தைகள்

கனவில்

ஒழுங்கற்ற கிறுக்கல்களை

மாற்றி மாற்றி

அழித்தழித்து

ஓவியமாக வரைந்து

விளையாடிக் கொண்டிருந்தனர்...

 

இருட்டு மர நிழலில்

நின்று ரசித்த

சாதியறியா கடவுள்

ஆர்வம் கூடி

பொறுமையிழந்து

கைகுலுக்கி தானும்

விளையாட்டில்

கலந்து கொள்கிறார் ...

 

ஒவியங்கள்

அலுத்த பின்

கிச்சு கிச்சு விளையாட்டு

தொடங்குகிறது

சிரிப்பும் சந்தோசமும்

மெல்ல மெல்ல கூடி

அளவை கடக்கும்   தருணத்தில்...

 

தூக்கம் சிதறிய குழந்தை

சிணுங்க தொடங்க...

அசதியில் ஆழ் உறக்க

அம்மாவை

உலுக்கி விட்டு

திரும்பி படுக்கிறார் அப்பா..

 

பதறிய அம்மா

குழந்தையை

இழுத்தணைத்து

தட்டியபடியே

உறக்கம் தொடர ...

 

ஒளிந்து கொன்ட

கடவுள்

விட்ட இடத்திலிருந்து

மறுபடியும்

விளையாட்டை தொடரும்

மனநிலையை

இடம் மாற்றி

இடம்பெயர்கிறார்

அடுத்த

குழந்தையை தேடி ...

 

இரவின்

இன்னொரு திசையில்

அதே கனவில்

மனித முகமூடி கிழித்தெறிந்த

சீழ் உமிழும் மிருகங்கள்

வேட்டையாடிக் கொன்டிருந்தன

வன்புணர் வெறியில்

கடவுள்களை...!

                  💐

என்னதான் சண்டைகளும் சலசலப்புகள் இருந்தாலும்கடல் கடந்த வேலை நிமித்தமாகவோ, அல்லது நாள் கடக்கும் பயணப்  பிரிவின் நிமித்தமாகவோ  கையசைத்து விடை பெறும் போது காதலர்களிடம்    ஊடல்கள் மறைந்து நேசம் பூப்பதை அழகாக விவரிக்கிறார் கவிஞர்

 

உருண்டோட

தவித்து நிற்கும்

கண்ணீரிலிருந்து தொடங்குகின்றாய்

உன் கையசைப்பை

"போய் வா "என்ற படி

 

அனிச்சையாய்

கையசைக்கிறேன் நானும்

கண்ணீரை அடக்குவதில்

கவனம் செலுத்தியபடி.. |

 

இனிதே

முடிவுக்கு வந்து விட்டன

முந்தைய

சண்டைகளும்

ஊடல்களும்...!

             💐      

 

மேலும் கவிஞரின் சில கவிதைகள்:          

 

மாபெரும்

முழு இரவை

விழுங்கியது...

 

மிகச்சிறிய

முழு நிலவு ...!

              💐

 

ஓடும் ரெயிலின்

ஆளில்லா பகுதிகளில்

பயணம் செய்வோர்

தயவு செய்து

விழித்திருக்கவும்...

 

விற்பனை

பொருட்களுடன் வந்து

வாங்கும் படி

கெஞ்சி நிற்கும்

பார்வையிழந்த வியாபாரிகளிடம்

"ஆளில்லை "என்றேனும்

சொல்லியனுப்ப...!!

                💐        

மூத்திர நெடி

மூக்கை துளைத்தாலும்

போர்வையை எளிதில்

புறந்தள்ள முடியாது...

 

மலம்

ஜலம்

அருகிலிருந்தாலும்

உண்பதில் முகச்சுழிப்பு

இருக்கவே இருக்காது...

 

ஆயுதம் காட்டி

அடக்க முயலும் போதும்...

அழுது அகிம்சையில்

ஜெயித்து விட்டால்

ரசித்தே ஆக வேண்டும்

 

இயல்பு மாறி

வில்லனாகும் தருணங்களில்

விளையாட்டு காட்டி தான்

மறுபடியும்

கதாநாயகனாக மாற்ற

வேண்டி வரும்

 

சுத்தமாக புரியாது

உளறலாகக் தான்

இருக்கும்

இருந்தும்

செம்மொழிக்கும் மேலான

அந்தஸ்து கொடுத்தாக

வேண்டி வரும்

 

சுகமன்றி எதுவும்

சுமையல்ல நண்பர்களே-

 

ஆனால்

 

கொடுஞ்சிறை என

தெரிந்தும்

பணம் கொடுத்து

சீருடை விலங்கணிவித்து

கதற கதற

பள்ளியில் தள்ளி

தாய் மொழியை

மறக்கடித்த

அந்த

பைத்தியகாரதனத்தை தவிர...!

              💐

 

பெற்றாகிவிட்டது

கொல்ல மனமில்லை

ஊனக் கவிதைகள்...!

                💐

 

மெளன விசும்பல்களால்

நிரம்பி வழிகிறது

மயானம்...!

 

               💐

 

ஆட்டு இரத்தம்

விழுந்து துடித்தது

ஈ....!

          

                 💐

 

ஆச்சரியமாய் இருந்தது

எப்போது இவர்

இங்கு வந்தார் என

 

கசாப்பு கடையில்

தொங்க விட்டிருந்தார்கள்

 

பக்கத்து மேசையில்

ஒரு இதயம் மூளை

இரண்டு கிட்னி

குடத்தில் கொஞ்சம் ரத்தம்

 

அசைந்தார்

உயிர் இருந்தது

 

இன்னும்

எவ்வளவு பாக்கியிருக்கு...

என பேசவும் செய்தார்

 

இன்னும் ஆறு கிட்னி

மூனு இதயம் மூளை எல்லாம் வரனும்

ரத்தம் அளவு பாக்கனும்

அப்ப தான் வட்டியே

எவ்வளவு கழிஞ்சிருக்கன்னு

சொல்ல முடியும் என்றான்

மேசையருகில் இருந்தவன்

 

பக்கத்து அறையிலிருந்து

அத்தனையும் கொன்டு வந்து

பரப்பினான் வேலையாள்

எட்டிப் பார்த்தேன்

அவருடைய மனைவியும்

குழந்தைகளும்

தொங்கிக் கொண்டிருந்தனர்

 

பரிசோதித்தான்...

 

எல்லாம் நிறைய

அடி வாங்கி ரிப்பேராகி கெடக்கு

மதிப்பு கம்மி தான்

கால்வாசி வட்டிக்கு கூட தேறாது

என்ன செய்யலாம் என

அதிகார தோரனையோடு கேட்டான்

 

தொங்கிக்கொன்டிருந்தவரும்

அவர் குடும்பமும்

நீண்ண்ண்ட...நேரம்

கெஞ்சி வாய்தா கேட்டனர்

 

மறுப்பதாய் மறுத்து

பின்

இரக்கம் காட்டுவதாய் நடித்து

ஒரு வழியாய்

வெற்று தாளில்

கையெழுத்து வாங்கினான்

எல்லோரிடமும்

 

இன்னையிலேர்ந்து

இந்த இதயம் மூளை ரத்தமெல்லாம் என்னோடது

நான் உங்களுக்கு வாடகைக்கு

தந்திருக்கேன்

ஒழுங்கு மரியாதையா

உழைச்சி சம்பாதிச்சி

என் கடனை தீர்க்கும்

வழிய பாருங்க என கூறி

அனைத்தையும் எடுத்து

முகத்தில் எறிந்தான்...

 

மகிழ்வுடன் பொறுக்கியெடுத்து

அவரவருடையதை

பொருத்திக்கொன்டு

நீங்க நல்லாருக்கனும்  சாமி

என வாழ்த்தி

வெளியேறினர்

 

ஊதுவத்தி மணம் கமழ

பூமாலைக்கு நடுவே

ஆசீர்வதித்து கொன்டிருந்தனர்

எல்லா சாமிகளும்...!

                  💐

 

சிரித்துக்கொன்டே அழுகிறாள்

மாற்றுத்திறன் மழலையிடம்

விளையாடும் தாய்.

                    💐

 

கால் சதத்தை கடந்தும்

எண்ணித்தீராத

எண்ணிக்கையில் நிறைந்த

காணாமல் போன

விவசாய கிணறுகளின் நீரோடு தான் எங்களின் பால்ய குதூகலங்களும் நிரம்பியிருந்தன

 

ராசமூட்டு கிணறு

சோடாகாரன் கிணறு

குள்ள கிணறு...என

ஒவ்வொரு கிணறுக்கும்

வெவ்வேறு பெயர்களே

விலாசங்கள்

 

தாயின் கருவறைக்கு பின்

கிணற்றின் கருவறைகள் தான் எங்களின் அம்மணத்தை ஆராதித்து

இதய துடிப்பை மேம்படுத்தி

ஆரோக்யத்தை அப்டேட் செய்திருந்தது

 

ஒவ்வொரு நாள்

வெவ்வேறு கிணறு என

எங்களின் விருப்பத்திற்கேற்ற

கருவறைகளில் இடம் மாறி மாறி

குதித்து வளர்ந்த காலமது

 

விடுமுறையில்

கிணறுகளில் வகுப்பறைகள்

இடம் பெயர்ந்திருக்கும்

 

பள்ளிக்கூட மணியோசையோ

அப்பாவின் புளியஞ்சிமிறோ

கிணற்றுகாரரின் அதட்டலோ

நினைவிற்கு வராத வரை

பசியெடுத்து

உடல் வெளுத்து

கண்கள் சிவந்தாலும்

கிணறு எங்களுக்கு சலிக்காது

கிணறுக்கும் எங்களை சலிக்காது

 

கிராமம் நகரமானபோது...

 

வணிக வளாகத்தின்

கழிவு நீர் தொட்டியாக...

 

சினிமா தியேட்டரே

ஒரு

கிணற்றின் கல்லறையாக

 

ஊற்றுறங்காத இடங்கள்

மூத்திர சந்துகளாக...

இப்படி...

 

இது தவிர

 

வடிந்தறியாத ஒரு கிணறை

உடைந்த குட்டிச்சுவரையும்

குப்பைகளையும் கொட்டி

உயிரோடு கதற கதற

புதைத்தழித்த

கண்ணீர் கதை தனி...!

 

கடந்த காலத்தின் எச்சமாய்

சுடுகாட்டு  ஓரம் ஒதுங்கியிருந்ததால்

உயிர் பிழைத்திருக்கிறது

இவ்வொரு கிணறு

 

எவ்வளவு தான் அடித்தாலும்

உதைத்தாலும் ஆரத்தழுவும் தன் நீர்க்கரங்களோடு பழங்கதை பேசியபடி

கிணறும் நானும்

என் மகளுக்கு

நீச்சல் கற்று கொடுத்து கொண்டிருந்தோம்

 

இறுதியாக

 

பரஸ்பரம் இருவரும்

விடை பெற்று வீடு திரும்பிய போது...

 

பிரிய மனமின்றி

உலரா ஈரத்தோடு

உடன்  வந்து விட்டிருந்தது கிணறும்...!!

            💐

 

தமிழில் பேசியதற்காக

வகுப்பறையில்

ஐந்து ரூபாய்

அபராதம் கேட்டதாக

பயந்து தயங்கி

கேட்டாள் மகள்

 

பத்து ரூபாய் கொடுத்தேன்

தப்பில்லாம பேசனும்

என வாழ்த்தி...!

          💐

 

நிலைக்கண்ணாடியின்

பூ மீது

தலை சாய்த்து

அழகு பார்க்கிறாள்

விதவை...!

           💐

 

விளையாடிய அசதி

சவப்பெட்டிக்குள் உறங்குகிறது

தச்சனின் குழந்தை

.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • Perumal Manickam Avatar
    Perumal Manickam - 2 years ago
    எவ்வளவு தான் எழுதினாலும் அதை விட சிறப்பான ஒன்று இன்னும் எழுதப்படாமலேயே இருக்கிறதென்ற படைப்பாளியின் தீராத வேட்கை தான் அவனை இன்னுமின்னும் எழுதத் தூண்டிக் கொண்டே செல்கிறதென்பேன் இதோ நான் சிறந்த கவிதைகள் என நினைத்ததை அதிகம் எழுதிய படைப்பு குழுமத்தின் உயரிய விருதான கவிச்சுடர் விருதும் அதையே இப்போது அதையே செய்திருக்கிறது, எழுத இன்னும் நிறைய இருக்கிறது விருதுகளை பெருமைப்படுத்த நிச்சயம் எழுதுவேன், நன்றிகள் படைப்பு குழுமத்திற்கும் தொடர்ந்து அதற்காக உழைக்கும் அதன் நிர்வாகிகள் அத்தனை பேருக்கும்.

லக்ஷ்மி


0   339   0  
December 2023

ஷெண்பா


0   1565   0  
August 2021

வில்லியம்ஸ்


0   848   0  
April 2021

ஜெயதேவன்


0   163   0  
May 2024

சார்லஸ்.A


0   502   0  
January 2024